கேள்வி:
ஆரம்ப காலத்தில் உங்களோடு சேர்ந்து செயற்பட்டவர்கள் உங்கள் எழுத்துக்களால் உந்தப்பட்டவர்கள், பிற்காலத்தில் உங்கள் பெயர் மறைப் பிலும் உருத்திரிப்பிலும் ஈடு பட்டதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் நேர்மை யின்றி நடந்து கொண்டதால் ஏற்பட்ட கசப்புணர்வினால் இதனைக் குறிப்பிடு கிறீர்களா? அல்லது உங்கள் தீவிர அரசியல் சிந்தனைகளிலிருந்து விலகிச் சமரசங்களுடன் கூடிய அரசியல் போக்குகளில் அவர்கள் ஈடுபடுவதை விமர்சிக்கிறீர்களா?
பதில்:
எனது எழுத்து மற்றும் கருத்தியல் செயல்பாடுகளை நம் காலத்திய தமிழ் அறிவுருவாக்கக் களத்தின் சிக்கல்கள், கோட்பாட்டு உருவாக்கக் கேள்விகளின் ஒரு விளிம்புநிலை அடையாளமாக வைத்து விளக்கும்பொழுது நான் குறிப்பிடநேர்ந்த நிகழ்வுதான் எனது பெயர் மறைப்பும் உருத்திரிப்பும். இதனைத் தனி மனிதனாகவோ, வெறும் கதைசொல்லியாகவோ இருந்து நான் சொல்ல முயற்சிக்கும் பொழுது பொருளற்ற, தொடர்பற்ற தன்னிரக்க வாசகமாகத்தான் இருக்கும். இன்னொரு வகையில் நான் பெயர் மறைப்பு, உருத்திரிபுகளுக்கு பலியாகித் தொலைந்து போனவனும் இல்லை. தொடர்ந்து எழுதியும் பேசியும் அழுத்தமான பதிவுகளை, தாக்கங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறேன், புதிய வடிவங்களில் புதிய களங்களில் எனது புனைவுகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறேன்.
அதனைவிட முக்கியமானது, நான் பழகிப் பின் விலகிவந்த பழைய நண்பர்கள் இன்று நேர்மையற்றவர்களாக, கருத்தியல் திரிப்பில் ஈடுபடுபவர்களாக மாறிவிட்டதாக நான் கூறவரவில்லை, அவர்கள் அப்படி ஆகவும் இல்லை. நான் பலவாறாக மாறியும் திரிந்தும், கடின வாசிப்பின் வழி உருவாகி வந்தது போல அவர்களும் அவர்கள் வகையில் மாறியும் தெளிந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உள்ள அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் உரிமை எனக்கு இல்லை. என் வகையில் அவர்கள் நேர்மையின்றி நடந்து கொண்டார்கள் என்பதை நான் பதிவு செய்வதற்கான உரிமையும் எனக்கு இல்லாமலில்லை.
நான் தெளிவாக இருப்பதாகவோ, தீவிர அரசியல் இதுதான் என்று அறிந்து கொண்டதாகவோ நம்பவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்பவர்களின் நரம்பியல் சிக்கல் எனக்குத் தெரியும் என்பதுதான் தற்போதுள்ள சிக்கல். நான் குறிப்பிட விரும்புவது: நான் முன்வைத்த கேள்விகள், விரிவான இடையீடுகள் உருவாக்கிய களங்களில் செயல்பட்ட போதும் சிலர் எனது பங்களிப்பைத் திட்டமிட்டு மறைத்தது பற்றிய அரசியல், எனது கருத்தியல் சமன்பாடுகளைத் திரித்து விளக்கியது பற்றிய முறையீடு.
மீண்டும் நான் நிகழ்வுகளின் வழிதான் இதனை விளக்க முடியும் நிறப்பிரிகை இதழுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்று அதில் பெயர் பதிவு செய்திருந்த இருவர் மாறி மாறி எழுதியும் பேசியும் வந்த பொழுது எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நிறப்பிரிகை தன்னுடைய கண்டுபிடிப்புதான் என மோதிக் கொண்டது அதைவிட வேடிக்கையாக இருந்தது. நிறப்பிரிகை பற்றிய முதல் திட்டமிடல் கூட்டத்திலிருந்து கடைசி கலந்துரையாடல் வரை அனைத்தையும் உடனிருந்து பார்த்து ரசிப்பது தோழர். பொதிய வெற்பனுக்கு வாடிக்கையாக இருந்தது. இவை வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் புதுவைப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேரக் கல்விப்பணிக்கு நான் முயற்சித்த போது தொடர்ந்து அதற்கு இடைஞ்சல் செய்ததும், அதனையும் மீறி நான் அங்கு சில ஆண்டுகள் கற்பித்தபின் அங்கிருந்து என்னை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து 2002-இல் அதில் வெற்றி பெற்றதும் அவை நடந்த காலத்தில் நிச்சயம் வேடிக்கையானது இல்லை. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்கள் என்னை எழுதவும் பேசவும் இயலாத நிலைக்குத் தள்ள முயற்சித்தார்கள் என்பதைதான். இன்று அவர்கள் என்னவாக இருந்தாலும் சரி நான் அதனைப் பற்றி கவலைப்படவில்லை, எனக்கு அவர்கள் தொடர்ந்து செய்த இடையூறு மாற்றுச் சிந்தனைகளை அழிப்பதற்கான அறமற்ற, அநீதியான வன்முறை. மாற்று அரசியல், எதிர்க்கலாச்சாரம், கலகச் செயல்பாடுகள் என்று பேசித் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் அவற்றை வாழ்வின் பகுதியாக ஏற்ற என்னைத் தனிமைப் படுத்தவும் தண்டனைக் குள்ளாக்கவும் அச்சுறுத்தவும் அந்த அடையாளங் களையே கருவியாக்கியதுதான் இங்கு கவனத்திற்குரியாகிறது. இன்று இரண்டு முன்று நாவல்களுக்கான நிகழ்வுகளாகப் பதிந்து கிடக்கின்றன அக்கால நாடகங்கள். எழுத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு எழுத்தால்தான் பதில் சொல்ல வேண்டும். இனி கசப்புணர்வு என்ன வேண்டியிருக்கிறது, எழுத்துக் கலைஞனுக்கு எல்லாமே கதைதான்… வெறுப்பைச் சுமந்து கொண்டு நாம் விடுதலையைப் பேச முடியாது, விடுதலையை நேசிப்பவர்களை வெறுப்பால் அழித்து விடவும் முடியாது.