கேள்வி:
ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தக் கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் என்கிறீர்கள். கலை இலக்கியங்கள் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பு ஏதும் செய்வதில்லையா? இலக்கியங்களை வாசிப்பதும் அவைகளின் வாயிலாக ஒரு சமூகத்தின் உளவியல்புகளை அறிந்து கொள்வதும் அவற்றின் உள்ளார்ந்த அரசியலைப் புரிந்து வெளிப்படுத்துவதும், அறிவுருவாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதிதானே?
பதில்:
கலை-இலக்கிய வடிவங்கள், செயல்பாடுகள் என்பவை அறிவுருவாக்கத்தின் ஒரு பகுதிதான், அவையே அறிவாகவும் செயல்படக்கூடியவை. அறிவு-அதிகார உறவில் இந்நிலை இருவகையான விளைவுகளை உருவாக்க இயலும், விடுதலைக்கான அறிவு, அடக்குதலுக்கான அறிவு. ஒருவரின் அறிவு மற்றவர் மீதான அடக்கு முறையாக அமைய இயலும். கலை-இலக்கியச் செயல்பாடுகள் அறிவை மட்டுமல்ல உளவியல்பை, நடத்தையியல்பை வடிவமைக்கவும், உருமாற்றவும் கூடியவை. அதனால் அவை வலிமையான அரசியல் கருவிகளாகவும் செயல்படுகின்றன. அறிவை உருவாக்க கலை-இலக்கியங்களைப் பயன்படுத்த முடியும் என்பதின் மற்றொரு வடிவம்தான் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அறிவு பெறும் உரிமையை மறுக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன என்பது. அறிவு என்ற செயல்பாடு சமநிலையும், பொது அறமும் கொண்டதாக இருப்பதில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் கலை-இலக்கியங்களும் பொது அறம், சமநிலை கொண்டதாக இயங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள இயலும். அதிகாரக் கட்டமைப்புகளை, அடக்குமுறை நிறுவனங்களை, அழகியல் வன்முறைகளை விளக்கிக் காட்ட, அவற்றின் உள்நோக்கங்களை வெளிப்படுத்த கலை-இலக்கியம் பயன்படும் என்பது நமக்குத் தெரியும். கலை-இலக்கியச் செயல்பாடுகள், அவை பற்றிய வாசிப்புக் கோட்பாடுகள் ஆற்றல் வாய்ந்த போராட்ட வடிவங்கள், சமநிலை குலைக்கும் இடையீடுகளின் வழி இவை புதிய மொழிக் களங்களை கண்டறிந்து தருகின்றன. இந்த வகை அறிவுருவாக்க, அடையாள உருவாக்க இலக்கியங்களில் இருந்து, வாசிப்புகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டியவையாக உள்ளவை சமநிலை கொண்ட, பேருண்மை பேசும், பொது அழகியல் பேசும் கலை-இலக்கியங்கள். அதனால் இக்கேள்வியில் உள்ள கலை-இலக்கியம் என்ற தொடரில் உள்ள முரண் இணைவை உடைத்து, பொது அடையாளத்தை நீக்கிப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவுருவாக்க, அரசியல் உருவாக்க கலை-இலக்கியங்கள், அவற்றிற்கு எதிரான பேருண்மையின் வன்முறையைச் செயல்படுத்தும் கலை-இலக்கியங்கள். உருவாக்கித்தரப்பட்ட அறிவின், அரசியலின் வன்முறைகளைப் புலப்படுத்தும் கலை-இலக்கியங்கள் அவற்றைக் கொண்டாடிப் புளகிக்கும் கலை-இலக்கியங்கள்.