உரையாடல்: 8
மறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்
கேள்வி:
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தன்னிச்சையாக நடைபெறுவதாகத் தோன்றும் அரசியல் நிகழ்வுகள், தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், ஊடகங்களில் முன்னிலைப் படுத்தப் படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்குப் பின்னிருக்கும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் ஆகியவற்றின் மறைமுகமான தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்:
பிரேம்
எல்லோரும் அமெரிக்கரே, பிணங்களைப் புசிக்கும் பேரரசுகள் போன்ற எனது கட்டுரைகளை நினைவு படுத்தியபடி இவை குறித்தான எனது கவனிப்புகளையும் குழப்பங்களையும் பதிவு செய்கிறேன்.
வளரும் நாடுகள், வளர்ந்துவிட்ட நாடுகள் என்ற தொடர்களைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு காலனியச் சுரண்டலால் தம்மை வளர்த்துக் கொண்ட நாடுகள், தம் வாழ்வாதாரங்களுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாடுகள், மற்ற நாடுகளின் இயற்கை, கனிம வளங்களைக் கொள்ளையிடும் நாடுகள், தம் நாட்டின் வளங்களை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியாமல் துயருறும் நாடுகள், உலக அரசியல் பொருளாதாரத்தைத் தம் சுரண்டலுக் கேற்ப திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் அரசுகள், தம் நாட்டின் அரசியல்-பொருளாதாரத்தைத் தம் மக்களின் தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள உரிமையற்ற நாடுகள் எனப் பல தளங்களில் இன்றைய உலக வல்லாதிக்க வலைப்பின்னல் அமைந்துள்ளது.
கடந்த ஐநூறு ஆண்டுகளில் மண்ணைக் கொள்ளையிடும் இந்த அரசியல், இனம், நிலம் என்ற பல தளங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போர்களுக்கு முன் உலகம் முழுதும் தனித்தனியாக நடந்து வந்த போர்கள் வளங்களைக் கைப்பற்றுதல், நிலங்களை அடிமை கொள்ளுதல், அரசுகளை விரிவுபடுத்தல் என்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டன. காலனிகாலப் போர்கள் உலகின் நிலப்பரப்புகளை நிரந்தரமாகத் தன்வயப்படுத்தும் திட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மொத்த உலகையும் யார் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்ற கொலைகார அரசியலின் விளைவுகளாக அமைந்தன. உலகப் போர்களுக்குப் பின் வல்லாதிக்க அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் போரின் தன்மையை மாற்றி யமைத்தன. மண்ணின் மக்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் என உலகின் மக்கள் தொகுதிகளின் மீதான உருமறைத்த, உள்பதுங்கிய போர்கள் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய கூட்டமைப்பின் உலகச் சுரண்டல் காலனிய காலத்தில்கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகுதிகளையும், நிலப்பகுதிகளையும் கொள்ளை யிட்டுள்ளன. அந்த அந்த நாடுகளில் ஒப்பந்த அரசுகளை உருவாக்கித் தம் அதிகாரத்தை தொடர்ந்து உறுதிப் படுத்திக் கொள்வது இன்றைய உலக வல்லாதிக்க அமைப்பின் உத்தியாக உள்ளது. சுதந்திரப் போராட்டம், தேசிய இயக்கங்கள் என்ற வடிவத்தில் எதிர்க்க முடியாத அடக்குமுறை உத்திகள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில் நடந்த ஜனநாயக மாற்றங்களைக் கூட சிவப்புப் பேராபத்து என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பியப் படைகள் அழித்தொழித்த வரலாறு நீண்ட துன்பியலாகப் படிந்துள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்கச் சதித்திட்டம், ரஷ்யச் சதிதிட்டம், சீனாவின் சதித்திட்டம் என்றெல்லாம் மற்ற நாடுகளில் நிகழும் குழப்பங்கள், மோதல்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதும் அதற்கான சான்றுகளைப் பலகாலம் தேடி வெளிப்படுத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று சதித்திட்டங்கள் என்பவை வளர்ச்சித் திட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள் என்ற நற்பெயருடன் வெளிப் படையாக நிறை வேற்றப்படுகின்றன.
எதுவும் மறைக்கப்படுவதோ, மாறுவேடத்தில் வருவதோ இல்லை. 1990 களில் தொடங்கிய பன்னாட்டு நிதியம் மற்றும் வணிக அமைப்புகளுடனான இந்திய ஒப்பந்தங்களில் மறைவாகச் சொல்ல எதுவும் இல்லை. கட்டுப்பாடற்ற சந்தை, உலகமயமாதல், தனியார் மயமாதல் என்ற சதித் திட்டம் வளர்ச்சித் திட்டம் என்ன பெயரில் முன் வைக்கப்பட்டது. இனி தேசிய மயமான தொழில்கள் தொடங்கப்படக்கூடாது என்பதுடன் தற்போதுள்ள பொதுத் துறைகளும் பங்கு நிறுவனங்களாக மாற்றப் படவேண்டும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிடப் படவேண்டும் என்பதானப் பெருங்கேடு கொண்ட கொள்கைத் திட்டங்கள் இந்திய மக்களின் கண் முன்னால்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கான கல்வி, மருத்துவ வசதி என்பவை அரசின் கடமைகள் இல்லை என அறிவித்த பெரும் சதித்திட்டங்கள் ரகசியமாக நடக்கவில்லை, இவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய தேவை இன்றைய ஏகாதிபத்திய வலை யமைப்புக்கு இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நேரடி ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்க்க முனையும் மக்கள் இன்று தேசத்துரோக்க் குற்றம் புரிந்தவர்களாக தண்டிக்கப்படுவார்கள்.
இராக் அழிப்பு, ஆப்கானிஸ்தான் தகர்ப்பு என எதுவும் சதித்திட்டமாக அடையாளம் காணப்படவில்லை, உலக அமைதிக்கான அரசியல் நடவடிக்கைகள் என்று தான் விளக்கப்பட்டன. இன்றைய ஊடகங்கள், வலை தளங்கள் வழி அனைத்துச் சதித்திட்டங்களும் இன்றைய வானிலை போல உடனுக்குடன் வெளியாகிக் கொண்டுள்ளன. விக்கிலீக் குழு, ஜீலியன் ஆசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடன் நிகழ்வுகள் கூட புதிதாக எதையும் கண்டு சொல்ல வில்லை, உலகக் கண் காணிப்பு, சதித் திட்ட வலைப் பின்னல்கள் என முன்பு சொல்லப் பட்டவைகளுக்குச் சான்றுகளை, அடிக் குறிப்புகளைத் தந்தன அவ்வளவே.
இந்திய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சில பெருநிறுவனங்களும், சில பன்னாட்டு குழுமங்களும் எழுதும் நாடகக் கதையை தேசிய மேடையில் நடத்திக் காட்டும் கலைக் குழுக்களாக உள்ளன என்பதை ஒரு கட்சி மற்ற கட்சிகள் பற்றித் தரும் புள்ளி விபரங்கள் வழி தொடர்ந்து தெளிவாகிக் கொண்டே இருக்கிறது. கர்நாடக மாநில அரசை உருவாக்கியது, பின்பு கலைத்தது எல்லாம் சுரங்க முதலாளிகள் குடும்பம் ஒன்று நடத்திய தேநீர் விருந்து என்பதை ஊடகங்கள் சொல்லிக்காட்டின. இப்பொழுது எதுவும் மறை முகமாக திட்டமிடப் படுவதோ, நிகழ்த்தப் படுவதோ இல்லை. ஆனால் உலக மக்கள், தேசமக்கள், மண்ணின் மக்கள், இயற்கைச் சமநிலை என எல்லாவற்றின் மீதும் கவிழந்துள்ள சதித்திட்டங்கள் இவை. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் தமிழீழம் என்ற பேராபத்தை எங்களால் அழித்தொழிக்க முடிந்தது என்று சிங்கள அரசின் தலைவர் நன்றி தெரிவித்த பின்னும் தமிழர்கள் அழிக்கப்பட்டதில் இந்திய அரசின் சதி உள்ளதா எனத் துப்பறிய என்ன இருக்கிறது.
உண்மைகள், தகவல்கள், ஆதாரங்கள், ஆவணங்கள், ஊடகத் தொடர்புகள் எல்லாம் பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மக்கள் அரசியல்தான் செயலற்ற நிலையில் உள்ளது. இந்தத் தகவல் பெருவெள்ளம் ஒருவகையில் மக்கள் அரசியல் உளவியலைச் சிதைக்கக்கூடியது. பொது அச்ச உணர்வைத் திணிக்கக் கூடியது. முகமற்ற சதித்திட்டம் பற்றிய அச்சம் அரசியல் செயலின்மையை மக்களிடம் தேக்குகிறது. இந்தச் செயலின்மை மக்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையிலான வன்முறை யை, இரக்கமின்மையைப் பெருக்குகிறது. இந்தியாவின் காவி அதிகாரம் இந்த அச்ச அரசியலின் தற்கால உதாரணம். இதற்கான தீர்வு ஒரு முனையில் தொடங்கி மறுமுனையில் முடிவதல்ல… மாற்றுச் சிந்தனைகள், மக்கள் அரசியல் சிக்கலான செயல் திட்டங்களைக் கொண்டவை.
இன்றைய கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், பண்பாட்டு அமைப்புகள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்திற்குள்ளும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் கருத்தியல் மற்றும் கண்காணிப்பு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள்தான் பொருத்தப் பட்டுள்ளன. உலக மயமாதலும், பன்னாட்டு முதலீடுகளும், உயிர்க்கொல்லி தொழிற்சாலைகளும், நகர்மயமாதலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கானவை என்றும் இதனை எதிர்க்கும் மக்கள் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றும் பெருஞ்சொல்லாடலை இவை உருவாக்கி, உறுதிப்படுத்தி, பரப்பும் பணியைச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் அரசியல் இவற்றைக் கடந்து தன் எதிர்ப்புகளைச் செயல்படுத்தும் போது அதன் விளைவுகள் சற்றுக் கடுமையாகவே இருக்கும். அந்தக் கடுமையை ஆக்கப்பூர்வமாக மாற்றத் தற்பொழுது உள்ள அரசியல் இயக்கங்கள் ஆற்றலற்றவையாக, பயிற்சியற்றவையாக இருப்பது நடப்பியல் உண்மை.
நாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் மாற்று அரசியல், மக்கள் உரிமைப் போராட்டங்கள், சூழலியல் அரசியல், பெண்ணிய, தலித் அரசியல், அடையாள அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் பன்னாட்டு அரசியல் சக்திகளின் சதி என உள்நாட்டு அதிகார-அரசு நிறுவனங்கள் சொல்லி வருவதையும் கேட்டு வருகிறோம். அதிகாரம் அடக்கு முறைகளுக்கு மட்டுமல்ல மக்கள் போராட்டங்களுக்கும், மாற்று அரசியலுக்கும்கூட பன்னாட்டு வலைப்பின்னல் உண்டு. இதில் மறைக்க, மறுக்க ஒன்றும் இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு பிரிடிஷ் முடியரசைத் தம் நாட்டிலிருந்து தூக்கி எறிய பிரெஞ்சு அரசும், பிரெஞ்சு அறிவு ஜீவிகளும் ஆயுதம் வழங்கி ஆதரவு தந்தனர். பிரஞ்சு முடியரசை எரிக்க பிரிடிஷ் அரசு வெடிமருந்து வழங்கி ஆசிர்வதித்தது. உலக வரைபடத்தை இந்த இரண்டு அரசுகளும் வெட்டித் தமக்குள் பங்கிட்டுக்கொள்ள போரும் ஒப்பந்தமுமாக வரலாற்றை அலைக்கழித்துள்ளனர். ரஷ்யா அரசு தம் நாட்டில் பயன்படாத அணு உலைகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்ட இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்வது நல்லெண்ண ஒத்துழைப்பு, (இனி அமெரிக்க நிறுவனங்களும் தம் நாட்டில் பயன்படுத்த முடியாத அணுஉலை இயந்திரங்களை இந்தியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு பணத்தை வாரியெடுத்தச் செல்ல ஒப்பந்தம் உருவாகியுள்ளது.) ஆனால் ரஷ்ய செர்னோபில் பேரழிவால் (1986) பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் இயக்கம் அமைத்து இந்தியாவின் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கங்களுக்கு சிறிய உதவிகளைச் செய்தால் அது சதித்திட்டம்… அப்படியெனில் பன்னாட்டு “மக்கள் சதித் திட்டங்கள்” தேவையான அளவுக்குப் பெருகவில்லை என்பதுதான் கவலைக்குரியது…