அயோத்திதாசரின் அறப்புரட்சி:1 -பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி

(வரலாற்றிலிருந்து விடுவித்தவர் வரலாற்றையும் விடுவித்தவர்)  

பிரேம்

தமிழக வரலாற்றில் புரட்சியை ஏற்றுக்கொண்ட சிந்தனையாளர்கள்,  புரட்சிக்கான  சிந்தனையாளர், புரட்சியைப் பரப்பிய சிந்தனையாளர்கள் சிலர் உள்ளனர்.  ஆனால் ஒரு சிந்தனையாளர் மட்டுமே தன் சிந்தனையால், தன் செயல் திட்டத்தால் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார். அவர் புரட்சி உருவாகுமெனக் காத்திருக்கவில்லை, புரட்சிக்குப்பின் விடுதலை வரும் என்று பார்த்திருக்கவுமில்லை. அவருடைய தொடக்கமே புரட்சியாக அமைந்தது, அவரது ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும், கருத்தும், அறிவுருவாக்க முறையும் ஆய்வுமுறையும் புரட்சியாக இருந்தது. தன் காலத்திய சிந்தனைகள் அனைத்தையும் கடந்து, தம் காலத்திய ஆதிக்க, அதிகார, மரபுகள் அனைத்தையும் எதிர்த்துச் செயல்பட்டவர் அவர். தான் வாழ்ந்த காலத்தில் வலிமை பெற்றிருந்த வரலாற்றுப் புனைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக இருந்தார், அவற்றை ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைத்தார், அவற்றை உருவாக்கிப் பரப்பி வருபவர்களை ‘சுயப்பிரயோசன சோம்பேரிகள்’ என்று தயங்காமல் தாக்குதல் தொடுத்தார்.

அவரது மொழி, சிந்தனைமுறை, வரலாற்றுப் புரிதல், இலக்கியம் பற்றி பார்வை, அறக்கருத்துகள், அரசியல் திட்டங்கள், வாழ்வியல் நெறிகள் அனைத்தும் புதிதாக இருந்தன. அவரது சிந்தனையில் இருந்த வலிமையும், அவற்றை எடுத்துரைப்பதில் அவருக்கிருந்த பொறுமையும் புதிய சிந்தனைப் பள்ளிகளை உருவாக்க முனையும் பேரறிஞர்கள் பலருக்கு வாய்க்காத பெருங்குணம்.  தான் கொண்டிருந்த கருத்தியல் மீது அவருக்கிருந்த பெருமிதமும், தனது அறத்தின் மீது அவர் வைத்திருந்த பெரும் பற்றும் தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த, ஆதிக்கம் செலுத்திவந்த, பெரும்பான்மையினரின் கருத்தியல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, பொய்யெனத் தூரவிலக்கி செயல்படுவதற்குரிய ஆற்றலையும் துணிச்சலையும் அவருக்கு அளித்திருந்தன. அந்தத் துணிவும் ஆற்றலும் நம் அயோத்திதாசரை அவர் காலத்திய சிந்தனைகள் பலவற்றைக் கடந்து, வரலாற்றின் கீழ் நசுங்கிய  ஒரு சமூகத்தின் மனிதர் என்ற நிலையிலிருந்து வரலாற்றைத் திருத்தியெழுதும் ஒரு பேரறிஞராக  உருவாக்கியிருந்தன.

அன்றைய அரசியல், சமூகவியல், வரலாறு, சமய நம்பிக்கைகள் அனைத்திலிருந்தும் மாறுபட்டுச் சிந்திக்கவும் அதனைச் செயல்படுத்தவும் அவரால் முடிந்தது.  அவர் தம் மக்களின் மீதும், விடுதலை மீதும் கொண்டிருந்த பற்றும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம், கருணை, ஒற்றுமெய் என்ற சுத்த சீலங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே அதற்குக் காரணமாக அமைந்தன. அந்த நம்பிக்கையின் வலிமையோடு  சாதிபேதமற்ற திராவிடர்களை ஒன்றிணைத்து அவர்களை விடுதலையை நோக்கி, நீண்ட சாந்தமும் நீடிய சமாதானமும் கொண்ட உண்மையான சுதேசியத்தை நோக்கி அழைத்துச் செல்வதைத் தம் வாழ்வாகக் கொண்டார்.

அந்த வாழ்வு நெடிய ஒரு போராட்டமாக அமைந்திருந்தது. ஏனெனில் அரசியல் வலிமைகொண்ட, சமய அதிகாரம் கொண்ட, வரலாற்று ஆதிக்கம் பெற்றிருந்த  பிராமண-வைதிக மரபை மட்டுமின்றி அவர்களுடன் இணைந்து சாதிவேற்றுமையை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் சாதி இந்துக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு அறிவுப்புரட்சியை, அறப்புரட்சியை அறிஞர் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.

தேசவிடுதலைஎன்று பொத்தம் பொதுவான கூக்குரலுடன் இந்தியாவின் சமூக, சமய வன்முறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சாதிவேற்றுமை, தீண்டாமைக் கொடுமை, பெண்ணொடுக்குமுறை பற்றிய குற்றவுணர்வோ வெட்கமோ இல்லாத, மூடநம்பிக்கைவெறி கொண்ட பிற்போக்காளர்கள் தங்களுக்குத் தேசபக்தர்கள் என்று பெயர்ச்சூட்டிக் கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில் அயோத்திதாசர் “சாதிபேதங்  கொண்ட பொறாமெய் உள்ளோரிடம் சீவகருண்ய சிந்தையே கிடையாது என்பதை அநுபவத்தில் காணலாம்.” என்று அறிவித்து ஒரு கருத்துப் புரட்சியை தொடங்கியிருந்தார். அதனால்தான் அவரை அன்று விதவாப் பிரசங்க வேதாந்திகள், சில்லரைப் பிரசங்க சித்தாந்திகள், பாட்டுப் பிரசங்க பாரதியார்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். சாதிகர்வம் (சாதித்திமிர்), மதகர்வம் (சமயத்திமிர்), வித்தியாகர்வம் (கல்வித் திமிர்), தனகர்வம் (பணத்திமிர்) கொண்ட கூட்டத்தினர் பொதுச்சீர்த்திருத்தம்செய்யப்போவதாக புறப்பட்டு அயோத்திதாசரை அவமதித்து வந்தனர். அவற்றைக் கண்டு சற்றும் கலங்காத பேரறிஞர் தாம் “எழுதிவரும் சுதேச சீர்திருத்தத்தை சிலர் சுதேச சீர்திருத்தமாகக் கொள்ளாது சுதேச மறுப்பென்றெண்ணி மயங்குவதாக” விளக்கித் தன் உண்மையான அரசியல் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்: “நாம் சுதேசிகளைத் தாழ்த்தி பரதேசிகளை உயர்த்துவதற்கும், பரதேசிகளைத் தாழ்த்தி சுதேசிகளை உயர்த்துவதற்கும் பத்திரிகை வெளியிட்டோமில்லை. சுதேசிகளை சொந்தமாகவும் பரதேசிகளை பந்தவாகவும் எண்ணி பலர்ப் பிரயோசனங் கருதி (அனைவருக்குமான நன்மை அல்லது பொதுநீதி) வெளியிட்டிருக்கிறோம்.” (தமிழன் 2-10-1907) இந்தப் பொதுநீதிக்கான, சமத்துவ விடுதலைக்கான போராட்டமே அயோத்திதாசரை மற்ற சிந்தனையாளர்களிடம் இருந்து வேறுபட்டவராக ஆக்கியது, அவரது ஒவ்வொரு சொல்லையும் அறப்புரட்சியின் வெளிப்பாடாக மாற்றியது.

இந்திய வரலாறு என ஒற்றைத்தன்மையில் ஏதும் இல்லை யென்றபோதும் இந்தியாவின் பல வரலாறுகளுக்கிடையில் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அந்தப் பொதுத்தன்மைகளில் சாதி வேற்றுமை, தீண்டாமை வழக்கம் என்ற தீமைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியச் சமூக உளவியலில் ஆதிக்க சாதிக்குணம், இடைநிலை சாதிக்குணம் இரண்டும் தமக்குக்கீழ் உள்ள மக்கள் என்ற கற்பிதத்தை இறுகப் பற்றியுள்ளன. அதாவது சிலரைத் தீண்டாத நிலையில் வைத்திருப்பதில் பெருமை கொள்ளும் வன்முறை குணத்தை தமது உரிமை என நம்புகின்றன. இது ஒருவகையில் தனக்குக் கீழ் சில அடிமைகள் உள்ளனர் என்ற கற்பித உணர்வை அளித்து  அதிகாரத் திமிரை அளிக்கிறது. அத்துடன் தனக்குக் கீழ் அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களின் கடின உழைப்பை ஊதியமளிக்காமல் சுரண்டிக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறது.  அம்மக்களின் உடல், உள்ளம், மொழி அனைத்தின் மீதும் தன் அதிகாரத்தை அடக்குமுறையை செலுத்தும் உரிமை தனக்கு உள்ளதாகசாதிக்குணம்நம்புகிறது. இதனை நியாயப்படுத்துவதற்கு உகந்த அரசு, மதம், புராணம், வரலாறு, ஒழுக்கவிதிகள் என்பனவற்றை உருவாக்கிப் பாதுகாத்து வருகிறது.

இந்த அடக்குமுறைக்குள் சிக்கிய மக்களின் உளவியல் முற்றிலும் வேறுபட்டது. தம் வாழ்வுக்கென தனித்த பொருளின்றி தன்னை அடக்கியும் ஒடுக்கியும் வைத்துள்ள சாதிகளின் நலனுக்கு பொருந்தக்கூடிய, அவர்களின் ஒடுக்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கான நிர்ப்பந்திக்கப்பட்ட உளவியல் அது. தனக்கென உரிமையுள்ள வாழிடமின்றி, வாழ்வாதாரங்களில் பங்கின்றி, அரசியலில் தனக்கான இடமின்றி மற்ற சாதிகளுக்கென உழைத்து, வாழ்ந்துமுடியும் வெறுமை கொண்ட உளவியல் அது.  தம்மை ஒடுக்கும் மதத்தை ஏற்று, தம்மை இழிபடுத்தும் புராணங்களை நம்பி, தம்மை ஒடுக்கிய வரலாற்றிற்குள் அடைபட்டு நிற்கும் கொடிய நிலைதான் அது. இந்த வன்கொடுமை வாழ்வுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, அடக்குமுறைக்கெதிராகப் போராடி வெளியேற அம்மக்கள் தம்மை ஒடுக்கும் கற்பிதங்களை உடைத்து நொறுக்குவது முன் தொடக்கம். உடைத்து நொறுக்குவதுடன் தமக்கான புதிய வாழ்வியலை, வரலாற்றை, அரசியலை, சமூக நெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அதன் தொடர்ச்சி.   இந்த உடைத்து நொறுக்கும் உளவியலும், உருவாக்கும் உளவியலும் இணைந்ததுதான் விடுதலைக்கான உளவியல். அவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை உளவியலை முற்றிலும் புதிய முறையில், நவீன வாழ்வியலுடன் இணைத்து உருவாக்கியவர்தான் அயோத்திதாசர். அவ்வகையில் மற்ற பல இந்திய விடுதலை இயக்கங்களில், புதிய வாழ்வுக்கான போராட்டங்களில் இல்லாத ஒரு தனித்தன்மையை அயோத்திதாசரிடம் நாம் காண்கிறோம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கச் சாதி மற்றும் ஆதிக்க இன வரலாறுகளை ஏற்று, தமது வாழ்வு கீழ்மை கொண்டதாக உள்ளதென ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுதலை பெறப் போராடுதல் என்பது ஒரு வகை. இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உளவியல் நியாயம் கேட்டு நிற்கும் நிலையில் வைக்கப்படுகிறது. இதில் உள்ள தன்னடையாளம் பற்றிய குற்றவுணர்வும் குறைவுணர்வும் புரட்சிக்கான ஆற்றலைத் தடைசெய்கிறது. தம் வரலாறு பற்றிய  தன்னிரக்கமும், பலியாக்கப்பட்டதன் வலியும், துயருற்ற மனமும் அவர்களின் போராட்ட வலிமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கையைக் குறைக்கின்றன. தம் மீதுள்ள கொடுமைகள் ஓரளவு குறைந்து துயரம் நீங்கிய ஒரு வாழ்க்கை அமைந்தாலே போதுமானது என ஏற்றுக் கொள்ளும் ஒருவித அரசியல் கசப்பு அவர்களுக்குள் நிரம்பிவிடுகிறது. அந்நிலையில்  அவர்களிடம் அடக்குமுறையாளர்களிடமே நீதி கேட்டு நிற்கும் “அரசியல் கீழ்நிலையாக்கம்“ உருவாகிறது. அரசியல் அதிகாரமின்றி, சில சமூக உரிமைகளைப் பெற, மனித உரிமைக்களைக் கோர இந்த அரசியல் பயன்படலாம். ஆனால் முழுமையான விடுதலைக்கு இவ்வகையான நீதி கேட்கும் அரசியல் பயன்பாடாது.

அதிலும் சமத்துவம், சமநீதி, விடுதலை என்பனவற்றை ஏற்காத இந்தியச் சாதியச் சமூகத்தில் நீதி கேட்கும் அரசியல் முற்றிலும் பயனற்றதாகவே இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையில் “மேல்நிலை பெற்ற அரசியல்” போராட்டங்களே  அதாவது தம் உரிமைகளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும், தம்மை ஒடுக்குபவர்களின் அரசியல் அடிப்படையைத் தகர்த்தெரியும் போராட்டங்களே மாறுதல்களைக் கொண்டுவர முடியும். இந்த மேல்நிலை பெற்ற அரசியல் போராட்டத்தை இந்தியாவின் தீண்டாமைக்குட்பட்ட மக்கள் கையில் எடுக்க உகந்த காலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் அமைந்திருந்தன. இதற்கான தலைமையும், கருத்தியல் வழிகாட்டிகளும் உருவாக சர்வதேச அரசியலும், நவீன அரசியல் சிந்தனைகளும் பின்புலமாக இருந்தன. ஆனால் பிரிட்டானிய பேரரசின் அரசியல் நீதிமன்றம், குடிமை நிர்வாகம், சட்டம், கல்வி, பொதுப்பணிகள், இயந்திர உற்பத்தி என்பன போன்ற நவீன சமூக நிறுவனங்களை அறிமுகப்படுத்தியதன் வழி ஒடுக்கப்பட்டோரின் சமூக அரசியல் நிலைகளில் சில மாற்றங்களை உருவாக்கியது. பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொள்கையளவில் உறுதி செய்யப்பட்டன.

இதனை “இத்தகைய கொரூரகாலத்தில் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி சத்துருக்களின் கொரூரம் ஒடுங்கி இக்குலத்தோர் கிஞ்சித்து சீர்பெறவும் தங்கள் தங்கள் கையிருப்பின் சாஸ்திரங்கள் வெளிவரவும்” உகந்த நிலை என அயோத்திதாசர் அடையாளப்படுத்தினார்.  இந்தியச் சமூக வரலாற்றில் இதற்குமுன் இருந்தவந்த நிலையை “வேஷபிராமணர்களால் இக்குலத்தோர் நிலைகுலைந்து பலவகை துன்பங்களை அநுபவித்து” வந்த நிலை என விளக்கினார். அந்த நிலை தொடர்ந்திருக்கும் எனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார், “அத்தகையக் கொரூரத் துன்பங்களை வேஷபிராமணர்கள் இதுவரையில் செய்துக் கொண்டும், பறையர்களெனும் பூர்வ பௌத்தர்கள் அவற்றை இதுவரையில் அநுபவித்தும் வந்திருப்பார்களாயின் இவர்கள் தேகங்கிடந்த இடங்களில் எலும்பும் காணாமற்போயிருக்கும் என்பது சத்தியமாம்.” வரலாற்றில் தனது மக்கள் மீது இழைக்கப்பட்ட பெருங்கொடுமைகள் குறைந்த நிலையை “இக்குலத்தோர் கிஞ்சித்து சீர் பெற்ற” நிலை என வரையறை செய்தார்.  இந்தக் குறைந்த பட்ச அரசியல் உரிமையைச் சமூக உரிமைகளாக, வரலாற்று மெய்மையாக மாற்றவும் தம் மக்கள் முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதற்குமான வழிமுறையைக் கண்டறிந்து கூறியவர்தான் அயோத்திதாசர்.

முதலில் அவர் தான் அடிமையில்லை, தன் மக்கள் கீழானவர்கள் இல்லை என  உறுதியுடன் அறிவித்துக் கொண்டார். “நமது தேசத்தின் தற்கால பழக்கம் பிச்சை ஏற்பவன் பெரிய சாதி, பூமியை உழுபவன் சின்னசாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய சாதி சோம்பேறிகள் பெரிய சாதிகள் என்று சொல்லித்திரிவது…” என்று இந்தியச் சமூக அநீதியின் அடிப்படையைத் தகர்த்து விட்டு தனக்கான புதிய அடிப்படையை உருவாக்குகிறார்.

“நாளது வரையில் தமிழ் பாஷைக்கு மூலாதாரமாக விளங்கும் கருவிகளாகிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன். மூதுரை, குறள், நீதி வெண்பா, விவேகசிந்தாமணி, மற்றுமுள்ள கலை நூற்கள் யாவும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பூர்வபௌத்தர்களே இயற்றியுள்ளரென்பது அநுபவக்காட்சியேயாம்.

இத்தகைய வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் கீர்த்தி மிகுந்திருந்த பௌத்தர்களை பறையர்கள், பறையர்களென்றும், தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென்றும் சீர் கெடுத்த காலத்தையும் மிலேச்சர்களாகிய ஆரியர்கய் பிராமணர், பிராமணரென்று வேஷமிட்டுக் கொண்டு உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று சீர் பெற்ற காலத்தையும் ஆராய்வோமாக.”  எனத் தமிழக, இந்திய வரலாற்றில் ஆதிக்க சாதிகளின் பொய்யுரிமைகளை, போலித்தகுதிகளை இல்லாமலாக்கி, பார்ப்பன, வைதிக  வரலாற்றுப் பொய்மைகளைத் தகர்த்துஇந்தியப் பூர்வகுடிகளின்’ வரலாற்றை மறுஉருவாக்கம் செய்கிறார். இவ்வாறாக ஒடுக்கும் வரலாற்றைத் தகர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை உருவாக்குவதற்கும் அயோத்திதாசர் கையாண்ட பெருங்கருவிதான்  பௌத்த தன்மம்.

தம் மக்களின் விடுதலைக்கு பௌத்த தம்மமே வழிகாட்டி என்பதை அறிவித்த அயோத்திதாசர் அதனை ஒரு பழமையான நம்பிக்கையாகவோ ஒரு வழிபாட்டு முறையாகவோ நமக்கு வழங்கிச் செல்லவில்லை.  “பௌத்ததன்மம் உன்பூட்டன் எழுதி வைத்திருப்பினும் உன் பாட்டன் எழுதி வைத்திருப்பினும் அவற்றை யுன் விசாரனையிலும் அனுபவத்திலும் உசாவிப்பார். அவை மெய்யாயதென்று தெளிந்து உமக்கும் உமது சந்ததியோருக்கும் உன் கிராமவாசிகளுக்கும் உன் தேசத்தாருக்கும் சுகமளிக்கக்கூடியதாயின் அவற்றை நம்பு. உன் விசாரணைக்கும் உன் அநுபவத்திற்கும் பயனற்றதாயின் விட்டுவிடுமென்று கூறுவதாகும். அது கண்டே அவற்றிற்கு புத்ததன்மமென்றும் மெய்யறமென்றும் வகுத்துள்ளார்கள். மற்றைய மதத்தோர் அவர்களுக்குள் எழுதி வைத்திருப்பதையும் சொல்வதையும் நம்பி நடப்பதே இயல்பும், மதப்பிடிவாதமே செயலுமாக நிற்பர். (தமிழன், 12-11-1913)

இந்த வரலாற்று மறு உருவாக்கம் விடுதலைக் கருத்தியலின் ஆற்றல் வாய்ந்த அடிப்படையாக  அவரிடம் அமைந்திருந்தது. இந்திய வரலாற்றை மாற்ற இந்தியாவின் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தையே மீளுருவாக்கம் செய்த அயோத்திதாசரின் பெருங்கண்டுபிடிப்பை அண்ணல் அம்பேத்கர் முழுமையாக ஆய்வு செய்து பின்னாளில் உறுதிப்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அயோத்திதாசர் நிகழ்த்தியது ஒரு அறப்புரட்சி.

இந்தப் புரட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலை மாற்றி தன்னுரிமை கொண்ட, தன்மதிப்பு கொண்ட போராளிகளாக மாற்றக்கூடிய ஆற்றலுடையது. ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தை உதறியெறிந்துவிட்டு புதிய அடையாளத்தை பெறுவதன் வழியாக நிகழும் விடுதலையே முதல் கட்ட விடுதலை, இந்த அடையாளத்தை தன் அறிவின் வழி உருவாக்கியவர்தான் பேரறிஞர் அயோத்திதாச கவிராஜ பண்டிதர்.

அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் கூறிச் சென்ற புரட்சிகரமான கருத்துக்களை, வரலாற்றுக் கண்டுபிடிப்புகளை இன்றுதான் உலக அறிஞர்கள் மெல்ல மெல்ல ஆய்ந்தும் ஆவணங்கள் தேடியும் நிருபித்து வருகின்றர். அவரது கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கான செயல்திட்டங்கள் மட்டுமில்லை, இன்றைய பிராமண மைய, இந்துத்துவ திரிபுவாத அரசியலுக்கு எதிரான வலிமையான போராட்ட முறையாகவும் அமைந்துள்ளவை. இவற்றைப் பற்றித் தொடர்ந்து நாம் உரையாட இருக்கிறோம்.

அயோத்திதாசர் தொடங்கி வைத்த புரட்சியின் பெருமதியைப்  புரிந்து கொள்ள கருப்பின மக்களின் விடுதலைப் போராளியும்  இன்றைய பின்காலனியச் சிந்தனைகளின் முன்னோடியுமான பிரான்ஸ் பானோன் (1925-1961) அடிமைப் படுத்தப்பட்டோரின் உளவியலில் நிகழவேண்டிய மாற்றம் பற்றிக்கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் (1952) என்ற நூலில் கூறும் ஒரு கருத்தை இங்கு நினைவு கொள்ளலாம்:

“உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேடுதல் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். நான் வரலாற்றில் அடைபட்ட கைதி அல்லன். வரலாற்றின் சிறைச்சாலையில் நான் எனது வாழ்வின் விதி பற்றிய அர்த்தத்தைத் தேடக்கூடாது. எனது வாழ்க்கையில் புதியவற்றைக் கண்டறிந்து அறிமுகப்படுத்திக் கொள்வதில்தான் உண்மையான எனது முன்னோக்கிய பாய்ச்சல் இருக்கிறது என்பதை எனக்கு நானே ஓயாமல் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் கடந்து செல்லும் நிலப்பகுதிகளினூடாக முடிவற்று என்னை நானே புதிது புதிதாக உருவாக்கிக் கொள்கிறேன். நான் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறேன் அதனைக் கடந்தும் செல்கிறேன். என் முன்னோர்களை மனித விழுமியமற்றவர்களாக ஆக்கிவைத்திருந்த அடிமைச் சமூகத்தின் அடிமையல்லன் நான்.”

                                                (அயோத்திதாசரின் அறப்புரட்சி தொடரும்)

நமது தமிழ்மண் ப-8 நமது தமிழ்மண் ப-9 நமது தமிழ்மண் ப-10 நமது தமிழ்மண் ப-11