அயோத்திதாசரின் அறப்புரட்சி-2: வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா-பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி-2 (இணைப்பில் காண்க)

 

வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா

பிரேம்

அயோத்திதாசரின் புரட்சி அவர்தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த தெய்வபக்தி-தேசபக்தி என்னும் இரு பெரும் மரபுகளுக்கு எதிராக; இருபெரும் வரலாற்றுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைந்திருந்தது.  தெய்வபக்தி-தேசபக்தி  இரண்டும் இணைந்து புதிய ஒரு சக்தியாக உருவாகி இந்திய நவீன அரசியலைத் தன்வயப்படுத்த முனைந்திருந்த காலகட்டம் அது. இந்தியத் தாய், பாரதமாதா எனப் பக்தியும் தேசிய அரசியலும் இணைக்கப்பட்டு சுதேசியம், சுதந்திரம், சுயராச்சியம் என்ற கருத்தியல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.  யாகத்திலே தவ வேகத்திலே தனியோகத்திலே பல போகத்திலே ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம் அருளினிலே உயர் நாடு-பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரத நாடு’ என்பன போன்ற பாரதியின் பாடல்களில் பதிவாகியுள்ள அன்றைய தெய்வீகத் தேசியம்  இந்தியாவின் புதிய அரசியலை  வைதீகமையம் கொண்டதாக மாற்றப் போராடிக்கொண்டிருந்த அரசியல் சக்திகளின் கருத்தியல் உள்ளடக்கத்தைத் தெளிவாகக் காட்டக்கூடியது. ‘சுயராச்சியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என்ற முழக்கத்தின் உள்ளடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இடம் தந்திரமாக மறைக்கப் பட்டிருந்தாலும் பிராமணமையம் மிக வெளிப்படையானதாகவே இருந்தது.  இந்த முழக்கத்தை அயோத்திதாசர் தன் சொற்களில் தன் மக்களுக்காகச் சொல்லத் தொடங்கிபோதுஅதில் உள்ள வரலாற்று முரண் புலப்பட்டது, ‘இந்தியாவிலுள்ள எந்த சாதியோருக்கு சுயராட்சியம்? சாதியேற்பாட்டில் எந்த சாதியோர்கள் இந்தியர் ? என அதனை கட்டடுடைத்து  முன்வைத்த விதம் வரலாற்றை மாற்றி யெழுதுவதாக அமைந்தது.

இந்தியாவின் புராதன, சனாதன மரபு தன்னை உருமறைத்துக் கொண்டு புதிய ஒரு அரசியல் சக்தியாக  நவீன தேசம் என்ற ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட புதிய பேரமைப்பையும் தன் கைவசப்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. பிராமண அதிகாரம், பிராமணரல்லாதார் அதிகாரம் என்ற இரு வடிவங்களில் தேசிய அரசியல் அடையாளப்படுத்தப்பட்ட போதும் இரண்டிற்கும் வெளியே வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்டோர் அரசியல் முற்றிலும் மறைக்கப்பட்டதாக, கவனம் கொள்ளப்படாததாகவே இருந்தது. ஐரோப்பிய அரசியல் முறையின் பக்க விளைவுகளால்  ஓரளவு உருவம் பெற்றுவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-அரசியல்- பொருளாதார-வரலாற்று இருப்பு சுதந்திரம், சுயாட்சி, சுதேசியம், சுயராச்சியம் என்பதான இந்தியக் கருத்துகோள்களின் பெருக்கத்தால் மீண்டும் உருவமற்றதாக மாறும் நிலை ஏற்பட்டிருந்தது.

அதனால் உருவாகப்போகும் கொடிய விளைவுகளை முன்னுணர்ந்த அயோத்திதாசர் பிராமண-ஆதிக்கச் சாதிகள் உருவாக்கிய சுதேசியக் கருதாக்கத்தின்   அடிப்படையைத் திட்டவட்டமான கேள்விக்குட்படுத்தினார், “இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்த வேண்டுமென்று கேட்கின்றீர். அவ்வகை சமரசம் கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும், பறையனென்றும் வகுத்துள்ள பொய்ச்சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. இவ்விருவரும் ஒருதேசக் குடிகளாக இருந்துகொண்டு ஒருவர் சுகமடைவதுபோல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகல விஷயங்களிலும் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும் வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ?” (தமிழன்: நவம்பர் 24,1909)

இந்தக் கேள்வியின் உள்ளீடாக உள்ள சமரசம், சுதந்திரம் இரண்டும் மிகுந்த கவனத்திற்குரியவை. ஐரோப்பியர்களின் ஆட்சியில் சமரச சுதந்திரம் இல்லாத நிலையை ஒப்புக்கொண்டும் சமரசம்-சுதந்திரம் (இக்வாலிடி-லிபர்டி) இரண்டும் மனிதவாழ்வின் அடிப்படைகள் என்பதை உணர்ந்தும்தான் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. இம்மண்ணில் சமஉரிமை கொண்ட உழைக்கும் மக்களுக்குச் சமரசமும் சுதந்திரமும் அளிக்க மறுக்கும் வன்கொடுமைக்காரர்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசவும் அதனைக் கோரவும் என்ன உரிமை உள்ளது என்ற அறம்சார் அரசியல் கேள்வியே இதில் மையமானது. “இந்தியாவிலிருந்து செளத்தாபிரிக்காவுக்கு குடியேறியுள்ளவர்களுக்கு சமரசவாட்சி கேட்பவர்கள் இந்தியக்குடிகளாகிய திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அடியோடு தாழ்த்தி அலக்கழிக்கலாமோ. அன்னிய தேசத்திற் சென்றிருக்கும் குடிகளுக்காக அதிகப் பிரயாசைப்படுகிறவர்கள் சுதேசத்தில் கஷ்டப்படும் பெருந்தொகைக் குடிகளுக்கு சமரச சுகம், சமரசவாட்சி, சமரச சேர்க்கை ஏன் கொடுக்கலாகாது. அன்னிய தேசவாசிகளான செளத்தாபிரிக்கரிடம் இந்தியாவிலிருந்து குடியேறியுள்ள வர்களுக்குச் சமரச சுகங்கேட்கும் நீதிமான்கள் இந்தியாவிலுள்ள ஏழைக்குடிகளுக்கும் சமரச சுகத்தை அளிக்கவேண்டுமென்னும் முயற்சியை ஏனெடுக்கக்கூடாது? ” (தமிழன்: அக்டோபர் 27,1909)  இவை வெறும் நீதி உணர்ச்சி பற்றிய கேள்விகளல்ல; நவீன இந்திய அரசியலில் எமது இடம் என்ன?  நீங்கள் முன்வைக்கும் சுதேசியம், சுதந்திரம், சமஉரிமைகள், சுயாட்சி, அரசியல் அதிகாரம், சுயராச்சியம் என்பவை யாருக்கானவை?  ஐரோப்பிய ஆட்சியை நீக்கிவிட்டு யார் இம்மண்ணின் ஆட்சியைக் கைக்கொள்ளப் போகிறீர்கள்? உமது ஆட்சியல் நாங்கள் அடிமைகளா அல்லது சமஉரிமை கொண்ட பங்காளிகளா?  இந்த நாட்டின் அரசியலை எமது மக்கள் ஏன் முடிவு செய்யக்கூடாது? என்ற அடிப்படையான பல அரசியல் கேள்விகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றிற்குப் பதிலளிக்க இயலாத, முயலாத, விரும்பாத சக்திகள்தான் அன்றைய சுதேசிய- சுதந்திர- சுயராச்சிய அரசியலைத் தம் வசப்படுத்தியிருந்தனர். தேசபக்தி, தெய்வபக்தி இரண்டும் இணைந்த ஒரு  புனித அரசியல்தான் அன்று உருவாகியிருந்தது.  இவை இரண்டையும் ஒருசேர எதிர்க்கவும் இவற்றிற்கு மாறான புதிய விடுதலைக் கருத்தியலை முன்வைக்கவும் தேவையான அறத்துணிவும் பெரும் அறிவாற்றலும் அயோத்திதாசரிடம் இருந்தன.

இந்தியச் சமூகத்தில் பக்தி மரபு மிகப்பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்பக்தி மரபு தெய்வ பக்தி, ராஜபக்தி இரண்டையும் உள்ளடக்கியது. இறை என்பது தெய்வம், அரசன் என்ற இரண்டையும் குறிக்கும் சொல் மட்டுமல்ல கோட்பாடுமாகும்.  வைதிக, பார்ப்பனிய மேலாதிக்கம் தம்மை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாட்சியின் அளவற்ற அதிகாரத்தைப் புனிதப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அரச அதிகாரத்தைப் புனிதமானதாக நிறுவப் புராணங்களின் வழி கட்டப்பட்ட பக்தியும் முக்தியும் வலிமையான  உத்திகளாக அமைந்தன. தெய்வபக்தியும் ராஜபக்தியும் இணையும்போது அவற்றின் கீழ் அடிமைப்பட்டவர்கள் தம் அடிமைத்தனம் மறந்து மோட்ச நிலையில் மூழ்கிய, தெய்விக அருள் பெற்றதான உளப்பாங்கு பெறுகின்றனர்.

சத்திரியர்களும் வைசியர்களும் தமக்கான அரசியல், பொருளாதார, சமூக அதிகாரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள பிராமணியத்தின்  பொய்ப் புனிதங்களைத் தமக்கானதாக ஏற்றுக்கொண்டதுடன்;  அவற்றைச் சூத்திரச் சாதிகளின் மீதும் அவர்களுக்கும் கீழாக வைக்கப்பட்ட பஞ்சமர்கள்  மீதும் சுமத்திவந்தனர். மனு தர்மசாஸ்திரம், கெளடில்ய அர்த்த சாஸ்திரம், வாத்ஸ்யாயன காமசாஸ்திரம் போன்றவை தர்ம, அர்த்த, காம நியதிகளின்படி மோட்சத்தை அடைவதற்கான வழிகளைக் கூறுவன எனத் தம்மை நிறுவிக்கொண்டாலும் அவை உண்மையில் தண்டனைகள் மற்றும் வெகுமதிகள் பற்றிய விதிகளையே விளக்குகின்றன. அந்த விதிகளிலும்கூட சூத்திர-பஞ்சம மக்களுக்கு என வகுக்கப்பட்ட  இன்பங்களும் துன்பங்களும் மிகவெளிப்படையான தண்டனைகளாகவே உள்ளன. அவர்களுக்கான வெகுமதிகள் இவ்வுலகில், இப்பிறப்பில் கிடைப்பன அல்ல என்பதைச் சாத்திரங்கள் எந்த மறைப்பும் இன்றி விரிவாகக் கூறுகின்றன.

“ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமையைப் பின்பற்றி வாழ்ந்தால் சுவர்க்க கதியை அடைந்து முடிவற்ற இன்பம் பெறலாம். சாதிகள் தம் கடமைகளை மீறும்போது குழப்பங்கள் உருவாகி உலகம் நாசமாகும். அதனால் அரசனானவன் மக்கள் ஒருபோதும் தம் கடமைகளில் இருந்து நழுவாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.  ஆரியர் (பிராமணர்) வகுத்த சாதிக் கட்டுகளையும் சமய ஆச்சாரங்களையும் பின்பற்றித் தம் கடமைகளில் இருந்து ஒருபோதும் வழுவாமல் வாழ்பவர் இப்பிறவியில் மட்டுமின்றி இனிவரும் பிறவிகளிலும் இன்பம் அடைவர்.” என்று அடிமை நிலையை வரையறை செய்கிறது கெளடில்ய அர்த்த சாஸ்திரம். அடிமைப்பட்டவர்கள் தாம் எவ்வாறு முழுமையான அடிமை வாழ்வை வாழ்வது என்பதைத் தம்மை அடக்கி வைத்துள்ளவர்களிடமே கற்கவேண்டும் என்கிறது மனுஸ்மிருதி, “உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பிராமணரிடம் தமக்கான (சாதி) ஒழுங்கு விதிகளைக் கற்றறிந்து கொள்ள வேண்டு்ம்.” இந்த ஒழுங்குவிதிகளை யார் உறுதி செய்வது, யார் காப்பாற்றுவது என்பதையும் மனுச்சட்டம் விளக்குகிறது, “வைசியர்களும் சூத்திரர்களும் தமக்கு விதிக்கப்பட்ட ஊழியக் கடமைகளைச் சரிவரச் செய்யும்படி அரசன்தான் கட்டுப்படுத்தி வரவேண்டும்; இந்த இரண்டு சாதிகளும் தம் கடமைகளில் இருந்து நழுவினால் இந்த லோகம் நாசமடையும்.”

ஒடுக்கபட்ட, அடக்கப்பட்ட மக்கள் தமது அடிமை வாழ்வை ஏற்க மறுத்து மனித விழுமியத்துடன் வாழவேண்டும் என உணரும் நிலையைத்தான் இந்தியச் சமய வரலாறு அழிவு, நாசம், குழப்பம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. “ஒரு சூத்திரன் அவன் விலைகொடுத்து வாங்கப்பட்டவனாகவோ அல்லது வாங்கப்படாதவனாகவோ இருக்கலாம்  அவனை வசக்கி வேலைவாங்க வேண்டியது அவசியம், ஏனென்றால் ஒரு பிராமணனுக்கு அடிமையாக இருக்கவே சுயம்புதேவன் சூத்திரர்களைப் படைத்திருக்கிறான்.” என்று வலியுறுத்தும் மனுஸ்மிருதி அடிமைகள் ஒருக்காலும் விடுதலை அடைய முடியாது என்று உறுதிப்படச்  சொல்கிறது, “ஒரு சூத்திரனை அவனுடைய எஜமானன் விடுதலை செய்தால்கூட அவனை அடிமைத்தனத்திலிருந்து யாரும் விடுவிக்க முடியாது, ஏனென்றால் அது அவனது பிறவிவிதி,  யாரால் அவனை அதிலிருந்து விடுவிக்க முடியும்?”

இந்த விடுதலை அடையமுடியாத நிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை, வன்முறை, தண்டனை, சித்திரவதை வழியாகத் திணிப்பது ராஜநீதி என்றும் ஒழுக்கம், தர்மம், பக்தி என்பவற்றின் பெயரால் திணிப்பதும் உளவியல் வழியான வன்கொடுமையை அவர்கள் மீது நிகழ்த்துவதும் தெய்வநீதி என்றும் இந்திய மரபில் கொண்டாடப்படுகின்றன. சாதிய விதிகள் பற்றிய திட்டவட்டமான வரையறைகளை நிலைப்படுத்தல் சாதிகளுக்கிடையில் கலப்பு நிகழாத வண்ணம் தடுத்தல்  இவை இரண்டும் இந்திய அரசியல் வரலாற்றையும் சமய வரலாற்றையும் இணைக்கின்ற செயல்திட்டங்களாக இருந்து வருகின்றன.

இந்த இரண்டு உத்திகளும் இணையும் இடத்தை பகவத்கீதை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. “குலம் நாசமடையும்போது தொன்று தொட்டுவந்த குலதருமங்கள் நாசமடையும்; தருமம் அழிந்தால் குலம் முழுதும் அதருமம் பரவி நிற்கும். அதருமம் பரவுவதால் குலப்பெண்கள் கற்பை இழந்து கெட்டுப் போவார்கள்; பெண்கள் கெட்டால் ஜாதிக் கலப்பு (வர்ண ஸங்கரம்) ஏற்படும்.” இதுதான் பகவத்கீதையைத் தொடங்கிவைக்கும் அடிப்படையான கேள்வியும் அது  விளக்கமுனையும் மையச் சிக்கலும். இதற்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல் ஸாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஸந்நியாஸ யோகம், தியான யோகம், விஜ்ஞான யோகம் எனப் பலவாறாக விரித்து மோக்ஷம் அடையும் வழி சொல்லப்படுகிறது, “பிராமணர்க்கும் க்ஷத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவரவர் இயற்கைக்குரிய குணங்களால் கருமங்கள் வகுக்கப்பட்டுள்ளன.” இதனை மீறாமல் இருப்பதுடன் “குற்றமுடையதாயினும் உடன்பிறந்த கருமத்தை ஒருவன் கைவிடக்ககூடாது” என்று உறுதியாகச் சொல்கிறது பகவத்கீதை.

அடிமைப்பட்ட சூத்திரர்களுக்கும்  அடிமையாக வாழநேர்ந்த பஞ்சமர்களுக்கும் தவிர வேறு யாருக்கும் தமக்குரிய கருமம் (கடமை) குற்றமுடையதாக துயரமுடையதாக இருக்கப்போவதில்லை. இவர்களைத் தவிர அதிகாரமும் உரிமைகளும் வாழ்வின்பங்களும் கொண்ட பிற குல-வர்ண-சாதியினருக்குத்  தருமத்தை மீற வேண்டிய தேவையும் ஏற்படப்போவதில்லை. தம் அடிமைநிலைக்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடையும் நிலையையே  ‘அதருமம் எழச்சியடையும் நிலை’ என்றும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரமும் அடக்குமுறையும் குறையும் நிலையை  ‘தருமம் குறைபடும் நிலை‘ என்றும் இந்தியச் சனாதன ராஜநீதி பலநூற்றாண்டுகளாகப் போதித்து வருகிறது. “பாரதா! எப்பொழுதெல்லாம் தருமத்திற்குக் குறைவும் அதருமத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அவ்வப்போது என்னைப் படைத்துக்கொள்கிறேன். ஸாதுக்களைக் காத்தற்கும் துஷ்டர்களை அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுற்கும் யுகம் தோறும் வந்து உதிப்பேன்!”  [யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் ப்பவதி பாரத! அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்! பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே! (பகவத்கீதை 4:7;  4:8) ]

பகவத் கீதை முன்வைக்கும் இந்த அரசியல்தான்  இந்திய மரபில் இரு பிரிவுகளாக வளர்ந்து தெய்வபக்தி- தேசபக்தி என்ற ஆதிக்க மரபுகளாக இன்றுவரை நிலைபெற்றுள்ளன. அடக்கியாளும் வன்முறையாளர்களை சாதுக்கள் என்றும்;  அடங்க மறுத்து வாழ்வுரிமை கேட்கும் மக்களை துஷ்டர்கள் என்றும் வரையறை செய்யும் இந்த மரபுக்கெதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்ததுதான் அயோத்திதாசரின் சுதேசிய-சுயராச்சிய மறுப்பு.  ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எழுச்சியை அன்றைய ஆதிக்கசாதி அரசியல் அதர்மத்தின் எழுச்சியாவே கண்டது. அந்த அடையாள எழுச்சிக்குக் காரணமாக இருந்த  இங்கிலாந்தின் அரசியலை இந்தியப் புனிதங்களை அழிக்க வந்த தீய சக்தியாகக் கண்டது.   இந்தியப் புனிதங்களின் அடிப்படையென இந்து-சனாதன சக்திகள் நம்புவது சாதி ஒதுக்குதலும் படிநிலை அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக அறிந்திருந்ததால்தான்  அயோத்திதாசர் அன்றைய சுதேசிய அரசியலை அறச்சீற்றத்துடன் எதிர்த்து வந்தார். இந்தியாவின் அரசியல் விடுதலைக்குமுன் மண்ணின் மக்களுக்கு சமஉரிமைகளும் சமூக நீதியும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த அயோத்திதாசருக்கு எந்த தயக்கமும் இல்லை.

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் டி ஆஷ்  1911-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் நாள் வாஞ்சிநாதன் என்றழைக்கப்பட்ட செங்கோட்டை சங்கர ஐயர் என்ற இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஞ்சி அய்யரும் தன்னைச் சுட்டுக்கொண்டு மாய்ந்தார். இந்த நிகழ்வு தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றின் வீரநினைவாகப் பதிவாகியுள்ளது. இந்தியத் தேசியம், இந்தியச்  சுதந்திரப் போராட்டம் என்பனவற்றை ஒற்றைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த முனையும் புனித அரசியல் சக்திகளுக்கு  இதுபோன்று இன்னும் பல கொலைகளும் தற்கொலைகளும் விடுதலை வேள்வியாகத் தோன்றக்கூடும்.  ஆனால் இந்தியாவின் நான்கில் ஒரு பங்கு மக்களாக வாழ்ந்து துயருற்ற  ஒடுக்கப்பட்டோரின் வரலாறு இதுவல்ல என்பதைத்தான் அயோத்திதாசர் தயக்கமின்றி எடுத்துரைத்தார். ஆதிக்கக்காரர்களின் வரலாறும் அடிமைப்படுத்தப்பட்டோர் வரலாறும் ஒரே மண்ணில் ஒரே காலத்தில் நிகழலாம் ஆனால் ஒன்றே போல் ஒரே அர்த்தத்தில் நிகழ்வதில்லை என்பதைத் தலைகீழாக்க அரசியல் வழியாகப் பண்டிதர் நிறுவிக்காட்டினார். “நமது திருனெல்வேலி கலைக்ட்டரவர்கள் சீர்மையின்று இந்தியாவில் வந்து தனது பிரிட்டிஷ் ஆட்சியின் கலைக்ட்டர் உத்தியோகத்தைக் கைக்கொண்டு இவ்விடமுள்ள பூமிகளின் விஷயங்களையும் அந்தந்த பூமிகளின் நீர்ப்பாய்ச்சல் விஷயங்களையும் அங்கங்கு வாழும் குடிகளின் விஷயம், சாதிசமய விஷயங்களையும் நன்காராய்ந்தும், நாளாகத் தனது அநுபோகத்திற் கண்டறிந்தவரும் தேசசீர்திருத்தங்களை செய்ய வல்லவருமாகவிருந்த ஓர் துரைமகனை ஓர் படுபாவியாகிய துஷ்டன் கொன்றுவிட்டானென்றவுடன் சகல விவேகமிகுந்த மேதாவிகளும் துக்கத்தில் ஆழ்ந்தினார்களென்பதற்கு ஆட்சேபமில்லை.”  (தமிழன்: சூன் 28,1911) அயோத்திதாசரின் அறம்சார் அரசியல் தேசசீர்திருத்தம் மற்றும் குடிகளின் சுகங்கள் இரண்டையும் மையப்படுத்தியே தன் துயரைப் பதிவு செய்கிறது.

திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஆஷ் தீண்டாமைக்குட்பட்ட மக்களிடம் இரக்கம் கொண்டவர் என்றும்;  தீண்டாமைக்குட்ட பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்தில் துயருற்ற போது தன் வண்டியில் ஏற்றி பார்ப்பனச்சேரி வழியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிகழ்ச்சியால் கடுங்கோபங்கொண்டு அக்கிரகாரத்தைத் தீட்டுப்படுத்திய ஆஷை கொன்றவன் வாஞ்சி அய்யர் என்ற பார்ப்பன இளைஞன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுப் பதிவுகள் உள்ளன. இதற்குச் சான்றுகள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் ஆஷ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அலுவலர் என்ற பண்டிதரின் பதிவு தரவுகள் கொண்ட மக்கள் வரலாறாகவே இருக்கும்.

“அந்தக் கலைக்ட்டரின் குணாதிசயங்களை அறிந்த விவேகமிகுந்த மேன்மக்கள் யாவரும் அவரை மிக்க நல்லவரென்றும் நீதிமானென்றும் சகலசாதி மனுக்களையும் சமமாகப் பாவிப்பவரென்றும் கொண்டாடுகின்றனர்.” அப்படியிருக்க இப்பிராமணரென்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தோருக்கு மட்டிலும் உண்டாய துவேஷமென்னை?” என்ற அடிப்படையான கேள்வியை முன்வைக்கிறார் பண்டிதர். இதில் ஆழ்ந்த ஆய்வுகள் செய்ய ஒன்றும் இல்லை;  நாமும்கூட பண்டிதரின் பார்வையைப்  புரிந்துகொண்டால், அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளை அறிந்து கொண்டால் “அவரைக் கொலைபுரிந்த காரணம் தங்கள் கூட்டத்தோர் சுகத்தைக் கருதிய ஏதுவாயிருக்குமேயன்றி வேறில்லை”  என்ற உள்மெய்யை ஏற்றுக் கொள்வோம்.

இந்த உண்மையை வாஞ்சிநாதன் தன் வாக்கால் பதிவு செய்திருப்பதைக் காணலாம், “ஆங்கில மிலேச்சர்கள் நமது பாரதத் திருநாட்டைப் பிடுங்கிக்கொண்டு, இந்நாட்டின் சனாதன தர்மத்தை அவர்களது கால்களால் மிதித்து அழித்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியச் சகோதரனும் ஏகாதிபத்திய வெள்ளையனை நாட்டை விட்டுத் துரத்தி தர்மத்தையும், ஸ்வராஜ்யத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, குரு கோவிந்த சிங், அர்ஜுனன் முதலானோர் இருந்து தர்மம் தலைதூக்க அரசாட்சி செய்து வந்த நமது தேசத்தில், பசுவின் மாமிசத்தை தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சியை எடுத்து வருகிறார்கள்.  3000 சென்னை ராஜதானியர்கள் அம்மிலேச்சர்களைக் கொல்லும்பொருட்டு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இச்சகோதரர்களது எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களின் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைச் செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமையாகும். இப்படிக்கு R.வாஞ்சி அய்யர் (17-06-1911)”

இந்தக் கடிதம் பின்னாட்களில் வெளிப்பட்ட ஒன்று; கொலை செய்தவர் பெயரும் அப்போது அறியப்படாமல் இருந்தது. இச்சான்றுகள் இன்றியே இக்கொலை சனாதன தர்மத்தைக் காக்க நிகழ்தப்பட்டதுதான் என்பதைப் புலப்படுத்த அயோத்திதாசருக்கு எவ்வாறு இயன்றது? அவர் ஆதிக்கத்தின் அடிமை அல்லர்;  அவரது பார்வை விடுதலை அறம் சார்ந்தது. காலனிய ஆட்சியின் அடக்குமுறை, ஆதிக்கம் என்பன பற்றி யாரைவிடவும் அயோத்திதாசருக்கு புரியும், அதே சமயம் இந்த மண்ணைச் சேர்ந்த பிற சாதிகளால் மனித விழுமியங்கள் மறுக்கப்பட்டு வாழ்ந்த தம் மக்களின் வரலாற்றுத் துயரும் தெரியும். தம் மக்களின் சார்பாகப் பேச முனைந்த ஒருவருக்கு ‘பகவத்கீதையின் தர்மப்படி’ என்ன நடக்கும் என்பதையும் அவரால் கூற இயலும். அதனால்தான் ஆதிக்கச் சாதியினர் வரலாறு எனச்சொல்லிவைத்த கதைகளை அவரால் தலைகீழாக்கம் செய்ய முடிந்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்யவும் முடிந்தது.

நவீன இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட அடிமைப்பட்ட மக்களை செயலற்றவர்களாக்கி வைக்கும் தேசபக்தி, தெய்வபக்தி இரண்டுக்கும் எதிரான புரட்சியை அயோத்திதாச பண்டிதர், அண்ணல் அம்பேத்கர் இருவருமே உறுதியாக முன்னெடுத்ததற்கான காரணங்களைப் புரிந்துகொணடால் இந்தியச் சமூகங்களுக்கான விடுதலை அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.                                                            (தொடரும்…)

[நமது தமிழ்மண் : சூன்,2015]