நவயான பௌத்தமும் நவீன அரசியலும்-பிரேம்

அயோத்திதாசரின் அறப்புரட்சி : 4

பிரேம்

நவயான பௌத்தமும் நவீன அரசியலும்

சோம்பேறிகளும் நாணமற்றவர்களும் வஞ்சகர்களும் பொய்யர்களும் ஒன்றுகூடிக்கொண்டு தேகவுழைப்பும் சுருசுருப்பும் நாணமும் மெய்மொழியும் நிறைந்த ஆறு கோடி மேன்மக்களை பறையரென்றும் தீயரென்றும் சண்டாளரென்றும் இழிவு கூறிவருவதை யானைகள் உறங்குவது போலும், புலிகள் பதுங்குவது போலும், வில்லுகள் வளைவது போலும், ஆட்டுக்கடாக்கள் பிந்துவதுபோலும் கேட்டுக்கொண்டு அடங்கி நிற்பது அவ்வளவும் பாச்சலுக்கென்று தெரிந்து நிதானித்து வார்த்தையாடாது வீணே தூற்றித் திரிகின்றார்கள்.” அயோத்திதாசர் (தமிழன் :நவம்பர் 9,1910)

விடுதலைக்கான போராட்டங்களில் மதங்களின் பங்கு எவ்வாறு அமையும் என்பதைக் குறித்து மிகநெடிய விவாதங்கள் உலக அளவில் கடந்த இரு நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. மதங்கள்தான் மக்களை ஒடுக்கி வருகின்றன மதங்களில் இருந்து மக்கள் முதலில் விடுதலை அடைய வேண்டும் என்ற ஒரு கருத்தும்; மதங்கள் மக்களுக்கானவை அவற்றை மக்கள் தம் கையில் எடுத்துக்கொண்டு தமக்கான விடுதலைக்காகப் போராடவேண்டும் என்ற ஒரு கருத்தும்; மதங்கள் மக்கள் நலனுக்கானவை அவை இல்லாமல் மக்களால் வாழமுடியாது என்ற ஒரு கருத்தும்; மதங்களைக் கடைப்பிடித்து மதங்களின் வழியில் வாழ்வதுதான் விடுதலை அதற்கு மாறான விடுதலை என எதுவும் இல்லை என வேறு ஒரு கருத்தும் இன்றுவரை முரண்பட்ட தம் வாதங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

தமக்குள் முரண்படும் இந்த நான்கு வகையான நிலைப்பாடுகளும் ஒருவகையில் மக்கள்என்ற கருத்தாக்கத்தையும் விடுதலைஎன்ற கோட் பாட்டையும் மையமாக ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும். மக்கள் மற்றும் விடுதலை என்ற கோட்பாடுகள் வரலாற்றில் மையம் பெறத்தொடங்கிய நிலை எனில் அது நவீன அரசியலின் காலகட்டம் சார்ந்தது, அதாவது மக்கள் புரட்சிகள் தொடங்கிய காலகட்டத்திற்குப் பிறகு உருவான கருத்து என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். நவீன அறிவு, நவீன அரசியல், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளுக்குப் பின் மதங்களின் இடம் கேள்விக்குள்ளான போது அவை தம்மை மாற்றியமைக்க வேண்டிய தேவை உருவானது. அந்த மாற்றம்தான் மக்கள் நலன், மக்கள் விடுதலைஎன்ற கருத்தியலுடன் மதங்கள் தம்மை உறவுபடுத்தி விளக்க வேண்டிய தேவையை கடந்த இரு நூற்றாண்டுகளில் உருவாக்கியது.

இதற்கு முன்னான காலகட்டத்தில் மக்கள், சமூக வாழ்வியல், அரசியல் பற்றி மத நிறுவனங்கள் அளித்து வந்த விளக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மக்கள் என்ற கருத்தாக்கம் விளிம்புநிலையில் வைக்கப்பட்டு அரசு, இறையியல் விதிகள், அதிகாரத்திற்கு அடிபணிதல் என்பன மையமாக வைக்கப்பட்டிருந்தன. ஆதிக்கம், அடக்குமுறை என்ற இரு செயல்பாடுகளும் அரசு, மதநிறுவனம் இரண்டின் அதிகாரத்தையும் உறுதி செய்யும் புனித விதிகளாகஏற்கப்பட்டிருந்தன. இந்தப் புனித விதிகள்அவ்வப்போது தகர்க்கப் படுவதற்கு சமூகப் புரட்சிகளும், கோட்பாட்டுப் புரட்சிகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. மக்களின் துயரத்தைக் கணக்கில் கொள்ளாத மதங்களுக்கு எதிராக நிகழ்ந்த புரட்சிகள் பல மதங்களைத் தகர்த்துள்ளன, சில மதங்களை மாற்றியமைத்துள்ளன. இந்தப் புரட்சிகளுக்கு ஏற்ப மதங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் நிலையையே பாபாசாகேப் அம்பேத்கர் மதங்களில் நிகழும் புரட்சிஎன்று அடையாளம் காட்டுகிறார். அரசியல் புரட்சிகள் நிகழ்வதற்கு முன்பாக சமூகப் புரட்சியும் சமயப் புரட்சியும் நிகழ்வது வரலாற்றுத் தேவை என அம்பேத்கர் சான்றுகளுடன் விளக்குகிறார். ஆனால் அனைத்து மதங்களும் தமக்குள் புரட்சிகள் நிகழ்வதை அனுமதிப்பதில்லை என்பதால் மதங்களுக்கு எதிரான புரட்சியின் தேவை பற்றியும் அம்பேத்கர் விளக்குகிறார்.

உலக அளவில் புரட்சி பற்றிய முன்னோடிக் கருத்தியலை வழங்கிய மார்க்சியம் மதங்களை அறிவியல் சிந்தனைகள், அறிவு சார்ந்த மதிப்பீடுகளுக்கு எதிரானவை என்று விளக்கியிருக்கிறது. இதுவரையிலான மனித வரலாறு ஆதிக்க வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களைச் சுரண்டி வருவதன் வரலாறாக உள்ளது, வர்க்கப் பகை மையின் பல்வேறு வடிவங்கள்தான் கடந்த காலச் சமூக அமைப்பை வழிநடத்தியுள்ளன. ஆதிக்கக் கருத்தியல்கள் அனைத்தும் ஆதிக்கத்தில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல்கள் தான், மதங்களும் அவ்வகையில் ஆதிக்கக் கருத்தியலைக் கொண்டுள்ளன. அதனால் கம்யூனிச சமூகம் மதங்களைக் கைவிட்ட சமூகமாக அமையும் என்று குறிப்பு வழங்கியுள்ளது. பழமையிலிருந்து விடுபட்ட ஒரு புரட்சிகர சமூகம் மதங்கள் அற்றதாக அமையும் என்பது மார்க்சியத்தின் நிலைப்பாடு. ஆனால் மார்க்சிய சமூகவியல் மற்றும் மார்க்ஸின் வரலாற்றுப் பார்வை மதம் மற்றும் சமய நிறுவனங்களை ஒரு காலகட்டத்தின் தேவை என்றும் விளக்கியிருக்கிறது. மனித உளவியல் மற்றும் சமூக உளவியலில் குழப்பங்களும் அச்சங்களும் பாதுகாப்பின்மைகளும் நிலவும் வரை மதங்களும் சமயங்களும் மனிதவாழ்வின் பகுதியாக அமைவது தவிர்க்கமுடியாத நிகழ்வு என அடையாளம் காட்டுகிறது. மார்க்ஸ் மதங்களின் அனைத்து வடிவங்களையும் செயல்பாடுகளையும் மிக ஆழமாகவே விளக்கியிருக்கிறார். மதங்கள் அற்ற சமூகத்தை உருவாக்க செய்ய வேண்டியவை குறித்தும் மிக விரிவாகச் சிந்தித்திருக்கிறார். மதங்கள் பற்றிய அவரது கருத்துகளில் சில இவ்வாறு அமைகின்றன: “மதம் மனிதர்கள் தம்மைத் தாமே கண்டடைவதற்கான ஒரு முயற்சி. மனிதர்களின் அரசுகளும் சமூகங்களும் உருவாக்கியவைதான் இந்த மதங்கள். இது மனித உலகம் பற்றிய தலைகீழான ஒரு பிரக்ஞை. அவை உலகம் பற்றிய மனிதர்களின் பொதுக்கோட்பாடுகளின் தொகுப்புகள். மனித சாராம்சம் என உறுதியாக ஏதும் இல்லாததால் கற்பனையால் கட்டப்பட்ட மனித சாராம்சமாக மதம் அமைகிறது. மதங்கள் கற்பிக்கும் துயரங்கள் உண்மையான துயரங்களின் ஒரு வகை வெளிப்பாடுதான், அதே சமயம் உண்மையான துயரத்திற்கு எதிரான செயல்பாடாகவும் அமைகிறது. மதம் ஒடுக்கப்பட்ட மனித உயிர்களின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மாவற்ற வாழ்நிலையின் ஆன்மா. அது மக்களுக்கான அபினி. மாய இன்பமான மதங்களைக் கைவிடுவது என்பது மனிதர்களுக்கான உண்மையான மகிழ்ச்சியை உருவாக்கும் போது சாத்தியமாகும். மாய இன்பங்கள் தேவைப்படாத சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம்தான் மதங்களை நாம் கைவிட முடியும். கண்ணீரின் பிறப்பிடத்தை கண்டறிந்து நீக்கும்போது இந்த மதங்களும் இல்லாமலாகும். உலகு கடந்த உண்மைகள் மறைய வேண்டுமெனில் இந்த உலகின் உண்மையை நிறுவிக்காட்ட வேண்டியது வரலாற்றின் கடமையாகிறது.” மார்க்ஸைப் பொறுத்தவரை மனிதர்களே அனைத்திற்கும் மையமாக அமைகின்றனர். இவ்வுலகின் சமயம் சார்ந்த, இறைமை சார்ந்த அனைத்தும் கற்பனைகள் என்பதில் மார்க்சியத்திற்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் மதங்கள் அரசியலோடும் சமூக நடப்பியலோடும் உறவுடையன என்பதையும் அது மறுப்பதில்லை.

மதங்கள் தமக்குள் முரண்பட்டு ஒன்றை ஒன்று மறுத்தும், ஒன்றை மற்றது இழித்தும், ஒன்றுடன் ஒன்று மோதியும் மாபெரும் அழிவுகளை வரலாற்றில் நிகழ்த்தி வந்துள்ளன. மதங்களும் அரசுகளும் இணைந்து தனிமனிதர்களையும் சமூக மனிதர்களையும் தொடர்ந்து கட்டுப்படுத்தியும், தம் கட்டளைகளுக்கு உட்படுத்தியும், அடக்கி அடிமைப் படுத்தியும் வந்துள்ளன. என்றாலும் மக்கள் குழுக்கள் ஒட்டு மொத்தமாக மதங்களை மறுத்து வேறு வகை நம்பிக்கை மற்றும் நெறிகளை நோக்கிச் செல்லாமல் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறியும் ஒரு மதத்தை மறுத்து புதிய ஒரு மதத்தை உருவாக்கியும் மத அமைப்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர். வர்க்க முரண், இன முரண், மொழி முரண்களின் அடிப்படையில் அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் உருவான பொழுதும் தம் மீது வன்முறைகள் ஏவப்பட்ட போதும்கூட மக்கள் மதங்களின் அடையாளங்களை மறுக்காமல் அவற்றிற்குள் இருந்தபடி நீதி கேட்டும் நிவாரணம் தேடியும் குரல் எழுப்பியும் கோரிக்கை வைத்தும் துயருற்ற வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர். பல சமூகங்களில் மதங்களின் சட்டங்களும் அவை உருவாக்கிய வாழ்க்கை விதிகளும் அனைவருக்குமான சமத்துவம், சமஉரிமை, சமமான வாழ்வாதாரங்கள் என்பதை மறுத்து படிநிலை ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், வாழ்வாதாரம் அற்ற வறுமை என்பனவற்றை நியாயப்படுத்துவனவாகவும் மக்களின் துயரங்கள் அனைத்தும் இறைமை விதிகளால் உருவாக்கப்பட்டவை அவை புனித ஒழுங்குகளால் வழி நடத்தப்படுகின்றன என்று போதிப்பனவாகவும் இருந்துள்ளன. தம் வாழ்க் கையை மாற்றும் உரிமையோ மாற்றுவ தற்கான வலிமையோ எளியோருக்கும் அடிமைப்பட் டோருக்கும் இல்லை எனத் தொடர்ந்து மதங்கள் வலியுறுத்தியும் வந்துள்ளன. மதங்களில் இருந்து விடுதலையடையாத மக்கள் தமக்கான எந்த விடுதலைக்காகவும் போராடச் சக்தியற்றவர் களாகின்றனர். மதங்களைக் கைவிட மனமற்ற மக்கள் தம் மீதான அனைத்து அநீதிகளையும் தாங்கிக் கொண்டு அடங்கிக் கிடப்பவர்களாக மாறிவிடு கின்றனர். இந்நிலையில் மதங்களுக்கும் மக்கள் விடுதலைக்கும் இடையிலான உறவுகள் சிக்கலடைகின்றன.

இந்தச் சிக்கலானதும் குழப்பங்கள் நிறைந்ததுமான தளத்தில் இருந்துதான் அயோத்திதாசர் தம் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் பற்றியும்; அறமற்ற, நீதியற்ற இந்தியச் சமூகத்தை மாற்றுவதற்கான புரட்சி பற்றியும் சிந்திக்கிறார். அயோத்திதாசர் சிந்தித்துக் கண்டடைந்த விடுதலைக்கான வாழ்வியலை, ஒடுக்குதலுக்கெதிரான அறப்போராட்டத்தை பின்னாளில் ஆழமான, விரிவான ஆய்வுகளுக்குப்பின் அம்பேத்கர் உறுதி செய்து நம் மக்களுக்கு வழங்கியிருக்கிறார். அதுதான் அயோத்திதாசர் வழிமொழிந்த புத்த தர்மமான சுயமரியாதை‘. இதனை அவர் விளக்கும் முறை முற்றிலும் புதிதானது, மரபான சடங்குத் தன்மை கொண்ட பௌத்தத்திலிருந்து முற்றிலும் விலகியது. “பவுத்தம் உலக சீர்திருத்த தர்மமாகும். அதற்கு ஜாதி, மதம், வேதம், ஆசாரம் முதலியன கிடையாதுஎன்ற அயோத்திதாசரின் அறிவிப்பு பௌத்தத்தைத் துணையாகக் கொண்ட ஒரு புரட்சியையும் அதே சமயம் பௌத்தத்திற்குள் ஒரு புரட்சியையும் தொடங்கி வைக்கிறது. அயோத்திதாசரின் பௌத்தம் அதற்கு முன் இல்லாத ஒரு புரட்சிகர பௌத்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புத்தர் “மனுமகனாகவே பிறந்து, மனுமகனாகவே வளர்ந்து, மனமாசகன்று, அறிவு முதிர்ந்து, அவரது நற்செயலால் தேவனென்னும் பெயரும், புத்தரென்னும் பெயரும், திருமாலென்னும் பெயரும், பரமென்னும் பெயரும், ஈசனென்னும் பெயரும் பெற்றாரன்றி அவர் பிறந்தபோதே புத்தரென்றும், தேவரென்றும் கொண்டாடியப் பெயர்கள் கிடையாது.” (தமிழன் : சனவரி,1911) என நவீன பகுத்தறிவு மரபின் தளத்தில் பௌத்தத்தை நிறுவி தற்காலம் சார்ந்த ஒரு புரட்சிகர மரபைத் தொடங்கி வைக்கிறார்.

அதனால்தான் அம்பேத்கர் தன் பௌத்தத்தை நவயான பௌத்தம் என்று அடையாளப்படுத்தினார். இதற்கான தொடக்கமாக அமைந்தவர் அயோத்திதாசர். புத்தரை ஒரு குருவாக, மனித அறங்களின் உருவாக விளக்குவதன் வழியாக நவீன அரசியலும் மார்க்சிய இயங்கியலும் முன்வைத்த மதம் பற்றிய மறுப்பை எளிதாக உள்வாங்கி அதற்கான மாற்று ஒன்றையும் கண்டடைந்துவிடுகிறார். அதனை அவர் மனித மையம் கொண்ட சுய சமதர்மம்என்றும் புத்த தர்மமான சுயமரியாதைஎன்றும் விளக்குவதன் வழியாக நவீன புரட்சிகர அரசியல், விடுதலைக்கான அறவியல் இரண்டையும் இணைத்துவிடுகிறார். இந்த இணைப்புதான் பின்னாளில் அம்பேத்கர் வழியாக புத்தரா கார்ல் மார்க்ஸாஎன்ற மிகச்செறிவான ஒப்பீட்டுக்கு வழியமைக்கிறது. அது புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் புதிய ஒரு அற அரசியலாக வடிவம் பெறுகிறது. இந்த மாபெரும் இணைப்பு அறம்சார் அரசியல் என்ற அயோத்திதாசர்அம்பேத்கரிய உருவாக்கமாக இன்று நமக்குக் கிடைத்துள்ளது. இந்த அறம்சார் அரசியலின் அடிப்படையில் உள்ள வலிமையை அயோத்திதாசர் இவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகிறார், “உறங்கிய வேழம் விழிப்பது போலும் பதுங்கிய புலி பாய்வதுபோலும் வளைந்த வில் தைப்பது போலும் பிந்திய கடா மோதுவது போலும் அடங்கியுள்ள (பூர்வ பௌத்தர்களாகும்) மேன்மக்கள் அவர்களது அடக்கத்தைவிட்டு வெளியேற நேரிடும் அக்கால் அவர்களை அடக்க முயல்வது சமுத்திர எழுச்சிக்கு வைக்கோல் அணைகட்டுவது போலாகும்.” (தமிழன்: நவம்பர் 9, 1910) ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம், விடுதலைக்கான எழுச்சி அறம் சார்ந்ததாக அமைந்திருந்தாலும் அதன் அடிப்படையில் மாபெரும் வலிமை, எதிர்ப்பு சக்தி உள்ளீடாக அமைய வேண்டும் என்பதை அயோத்திதாசர் தெளிவாக அறிந்திருந்தார். புரட்சிகளின் அடிப்படையாக அமையக்கூடிய அந்த வலிமையும் சக்தியும் அறிவின் வழி ஒன்றிணைய வேண்டும் என்பதையே பகுத்தறிவு சார்ந்த பௌத்த தர்மம் என்ற நவீன செயல்திட்டமாக அவர் வடிவமைத்தார்.

அம்பேத்கரும் அயோத்திதாசரும் பௌத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்; இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற மரபுப் பற்றாளர்களும் அல்லர்; எதிர்கால விடுதலைக்கான வழிகளைச் சிந்தித்த நவீன விடுதலைக் கருத்தியலாளர்கள் என்பதை இனி விரிவாகக் காண இருக்கிறோம்.

(தொடரும்)

(நமது தமிழ்மண்: ஆகஸ்டு 2015)