அயோத்திதாசரின் அறப்புரட்சி : 5
பிரேம்
விடுதலை அறிவும் விடுதலை அரசியலும்
அறப்பேரறிஞர் அயோத்திதாசரும் அண்ணல் அம்பேத்கரும் கடந்த காலத்தை மீட்க முயன்ற சிந்தனையாளர்களோ, தேய்ந்து குறையுற்ற ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற மரபுப் பற்றாளர்களோ அல்லர். அவர்கள் இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சமூக, அரசியல், சமய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை செய்யவும் ஒடுக்கும் மக்களைத் தம் வன்கொடுமை உளவியலில் இருந்து மீட்டு மனிதத்தன்மை கொண்டவர்களாக மாற்றி நவீன சமத்துவச் சமூகத்திற்குரிய மனிதர்களாக வளர்த்தெடுக்கும் வழிகளைக் காட்டவும் தம் வாழ்வை அளித்த நவீன விடுதலைக் கருத்தியலாளர்கள். இந்திய வரலாற்றில் இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இதற்கு முன்பு இந்த இருமுனைப்பட்ட பணியை மேற்கொள்ள முன்வந்ததில்லை. இவ்விரு பேரறிஞர்களின் வழியைக் கற்று ஏற்று நடக்க முன்வராத யாரும் இதற்குப் பின்பும் இந்தக் கடினமான பணிக்குத் தம்மை ஒப்படைத்ததில்லை. தலித் அரசியல் என இன்று அடையாளப்படுத்தப்படும் ‘இந்திய ஒடுக்கப் பட்டோர் விடுதலை‘ அரசியலின் மீது சுமத்தப்பட்டுவிட்ட இந்த வரலாற்றுச் சுமை உண்மையில் உலகின் வேறு எந்த அரசியலின் மீதும் சுமத்தப்பட்டதும் இல்லை, அதற்கான தேவைகள் இருந்த இடங்களில் கூட ஒடுக்குவோரை நிலைமாற்றி சமூக வயப்படுத்தும் சுமையை விடுதலை அரசியல் ஏற்றுக்கொண்டதில்லை.
விடுதலை கோரும் மக்களுக்கான அரசியல் தீண்டாமையையும் சாதியமைப்பையும் அழித்துச் சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதன் வழியாக உண்மையான தேசிய அரசியலையும் தேச அமைப்பையும் உருவாக்கித் தருகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான அறிவற்ற அரசியல் சிந்தனையாளர்களும் சாதிப்பற்றுக் கொண்ட தலைவர்களும் இன்று தலித் அரசியலையும் தலித் கட்சிகளையும் ‘சாதிய அரசியல்‘ ‘சாதிக் கட்சிகள்‘ என்று புலம்பித் திரிவதைக் காண்கிறோம். இனம், மொழி, அடையாள அரசியலிலும் இந்த வரலாற்றுப் புரிதலற்ற நிலை அச்சுறுத்தும் அளவுக்குப் படிந்து கிடப்பதைக் காணலாம். ஒடுக்கப்பட்டோர் அரசி யலைத் தலைமையேற்று களம் நிற்கும் தலைவர் களைச் சாதித் தலைவர்கள் என்று புறம்தள்ளியும் சாதி ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் தலைவர்களை இனத்தலைவர்கள், தமிழ்த்தேசியப் போராளிகள் என்று புகழ்பாடியும் நிலைக்கேடு அடைந்து நிற்கும் நிலை உண்மையில் விடுதலை அரசியலுக்கு எதிரானது மட்டுமின்றி இனவெறி மற்றும் சாதிவெறி அரசியலுக்கு இணக்கமானது . உலக அளவில் நடந்த பல்வேறு புரட்சிகர அரசியல் நிலைமாற்றங்கள் உருவாகிய இன்றையச் சூழலிலேயே ஒடுக்கப் பட்டோர் விடுதலை அரசியல் (தலித் அரசியல்) இவ்வளவு கடினமான துயர்நிறைந்த நிலையை எதிர்கொள்ள நேர்கிறதெனில் நம் தலைவர்களான அயோத்திதாசரும் அம்பேத்கரும் தம் அரசியல் பெரும் பணிகளை மேற்கொண்ட காலத்தில் அவர்கள் அடைந்தத் துயர்கள், தொல்லைகள், உள்ளக் காயங் கள் பற்றி எண்ணும் பொழுது மிகுந்த வலியில் தளர்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து அவர்கள் உருவாக்கிய புரட்சிகர இயக்கம், அவர்கள் கண்டறிந்துத் தொகுத்தளித்த விடுதலைச் சிந்தனைகள் பற்றி எண்ணும் போது வியப்பில் எழுகிறோம். இந்த வலிமையை, இந்த வகை எதிர்ப்புச் சக்தியை, உள்ளார்ந்த அறிவுச் செருக்கை, அறம் சார்ந்த முன்னோக்குப் பார்வையை அவர்களுக்கு அளித்தது எது என அவர்களின் எழுத்துகள் (வாழ்வும் சிந்தனையும் ஒன்றிணைந்த பகுதி) வழி அறிந்துகொள்ள முயற்சிக்கும் போது நமக்கு இரு மையப்புள்ளிகள் கிடைக்கின்றன. முதலாவது: அவர்கள் தம் மக்கள் மீது கொண்டிருந்த அன்பு, இரண்டாவது: அவர்கள் இருவருக்கும் பொதுவான பௌத்தம். ஆம், இவை இரண்டும்தான் அவர்களின் அறிவு, அறம், அரசியல் அனைத்தையும் வழிநடத்தியுள்ளன. இதில் பௌத்தம் அவர்களுக்கான அறம் சார்ந்த அரசியலை மட்டுமின்றி எதிர்ப்புகள், தோல்விகள், புறக்கணிப்புகள், வலிகள் அனைத்தையும் கடந்து வலிமையுடன் முன்செல்லும் ஆற்றலை அளித்திருக்கிறது. அவர்களின் அறிவுத் தேடலுக்கும் பகுத்தறிவு அரசியலுக்கும் பௌத்தம் மிகப்பெரும் அடித்தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இப்படிக் கூறும்போது பௌத்தம் வழிதான் அவர்கள் விடுதலைச் சிந்தனையாளர்களாக மாறினர் என்று புரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. மாறாக அவர்களின் விடுதலைக்கானத் தேடுதலுக்கும் அறிவு சார்ந்த அறக்கோட்பாடுகளுக்கும் பௌத்தம் பொருந்தி வந்ததால் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு புத்துருவம் அளித்தனர்.
ஆதிகுருவாம் புத்தரை இருவருமே தம் தத்துவ ஆசானாக, அரசியல் வழிகாட்டியாகக் குறிப்பிடும் பாங்கு மிகச்செறிவான வரலாற்று பொருள் பொதிந்தது. யாரையும் புனிதராகவோ வணங்கிப் பணியத் தக்கவராகவோ ஏற்காத அறிஞர்களான இருவரும் புத்தரை அறிவின் வடிவாக, அறத்தின் உருவாக, ஒரு புரட்சியாளராக, தமக்கு நெருங்கமான ஒரு துணைவராக அடையாளம் காண்கின்றனர். இந்த அடையாளம் அவர்களுக்கு ஒரு தொன்மை யான உரிமையை, மேன்மையுற்ற உணர்வை வழங்குகிறது. என்னிலும் மிக்க ஒரு அறிஞன் தற்போது இந்தியாவில் யார் உள்ளார் என்று கேட்பதற்குரிய உண்மையான ஆற்றல், உழைப்பினால் உருவான தகுதி அம்பேத்கருக்கு மட்டுமல்ல அயோத்திதாசருக்கும் இருந்தது. இது மிகைப்படுத்தப்படாத ஒரு முன்மொழிதல். இதற்கு அடித்தளமாக அமைந்தது பௌத்தம் உருவாக்கித் தந்த அறிவையும் அறத்தையும் மையமாகக் கொண்ட மரபு. “புத்தருக்குப் பிறகு யார் குருவாக இருக்க முடியும்?” என்ற கேள்வி எழுந்தபோது “தம்மமே குருவாக இருக்க முடியும்” என்ற பதிலை அம்பேத்கர் பதிவு செய்து “ஒரு அறக் கோட்பாடு தன் வலிமையால் வாழவேண்டுமே தவிர தனிமனிதர் ஒருவரின் ஆளுமையால் அது நிலைநிறுத்தக் கூடாது. தனிமனிதர் ஒருவரின் ஆளுமையால் நிலைப்படுத்தப் படுகிறதெனில் அது அறக்கோட்பாடாக இருக்க இயலாது ” என்று விளக்கமும் தருவார்.
அதன் வழியாக பௌத்தத்தைக் கிறித்துவ, இஸ்லாமிய மரபிலிருந்து வேறுபட்டது என்று நிறுவுகிறார் அம்பேத்கர். புத்தர் ஒரு குருவே தவிர இறைமைந்தனோ, இறைத்தூதரோ அல்லர் அதனால் அறிவார்ந்த புரட்சிக்குரிய சமய நெறியாகப் பௌத்தம் அமைந்துள்ளது என்பது அயோத்திதாசர், அம்பேத்கர் இருவரும் கண்டறிந்த உண்மை. இந்த அறிவு மரபில் தம்மை இணைத்துக் கொண்டதன் வழியாக விடுதலையுற்ற அறிஞர்களாக விடுதலைக்கு வழிகாட்டும் புரட்சியாளர்களாக இருவரும் தம்மை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. வேறு நிறுவனமான தலைமை அதிகாரம் கொண்ட சமயங்கள் அளிக்க இயலாத இந்த அறிவார்ந்த விடுதலையைப் பௌத்தத்தின் வழி தம் வாழ்வில் உணர்ந்ததால்தான் அவர்கள் தம் மக்களுக்கும் விடுதலைக்கான மார்க்கமாக அதனை முன்மொழிந்தனர்.
அயோத்திதாசர் இந்த விடுதலையைத் தம் வாழ்வில் 16 ஆண்டுகளுக்கு (1898-1914) மேல் நடைமுறை மெய்யாக்கினார். அக்காலகட்டத்தில் அவருடைய எழுத்து, பேச்சு, இயக்கம் அனைத்திலும் விடுதலையுற்ற ஆற்றலும் அச்சமற்ற தெளிவும் அநீதிகளை முகத்திற்கு நேராகத் தாக்கும் வலிமையும் வெளிப்பட்டன. அவர் வரலாற்றையும் மரபுகளையும் பொய்மைகளில் இருந்து விடுவித்துப் புதிதாகக் கட்டியெழுப்பினார். அம்பேத்கர் தம் வாழ்வின் தொடக்கக் கட்டத்திலிருந்து பகுத்தறிவாளராக இருந்தவர், தம் 44 ஆம் வயதில் மதமாற்றம் பற்றியும் இந்து மதத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது பற்றியும் அறிவிப்பை வெளியிடுகிறார். அதற்குப்பிறகு 1956-இல் தம் மறைவுக்குச் சில வாரங்களுக்கு முன் பௌத்த தம்மத்தைச் சடங்கு முறைகளுடன் ஏற்றுத் தம் மக்களுக்கான எதிர்காலச் செய்தியாக அதனை அறிவிக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அனைத்துச் சமயங்களையும் அவற்றின் அரசியல் சமூக வரலாறுகளையும் ஆய்வு செய்வதாக அவர் அறிவித்த போதும் பௌத்தத்தின் மீதான பற்று உள்ளீடாக அவருக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அதனை விடுதலைக்கான அரசியலுடன் இணைப்பதில் அவருக்கு பல விளக்கங்கள் தேவைப்பட்டன. 1930- களில் மதமாற்றம் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்குத் தொடக்கம் என்றும் இந்து மதத்திலிருந்து உடனே வெளியேறுங்கள் என்றும் மக்களுக்கு அறிவுறுத்திய அண்ணல் எந்த சமயத்தைச் சார்வது என்பதை அறிவிக்கவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவம் , பௌத்தம் , சீக்கியம் பற்றிப் பொதுவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பின்னாட் களில் தீண்டாமைக்குட்பட்ட மக்கள் தொல்புத்தர்களே, பிராமண சமயத்தின் தாக்குதலால் வீழ்ச்சியுற்ற மக்கள்தான் இன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வரலாற்று கருதுகோளை முன்வைக்கிறார். இந்த இரண்டு கருத்துகளும் அயோத்திதாசரால் சான்றுகளுடன் முன்பே நிறுவப்பட்டவை. “பூர்வத் தமிழர்களே, திராவிட பெளத்தர்களென்னும் பெயர்பெற்று சாதிபேத மென்னுங் களங்கமற்று சகலரும் ஒற்றுமெயுற்று வாழ்ந்ததுபோல் நாளதுவரையில் சாதிபேதமற்று வாழ்ந்து வருகின்றார்கள்.” (தமிழன் : ஆகஸ்டு 18,1909). இதற்காக அம்பேத்கர் வைக்கும் சமூகவியல் தரவும்கூட அயோத்திதாசர் முன்பே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் பூர்வ பௌத்தர்களே பிராமண–இந்து வன்முறையால் தம் பெளத்த அடையாளம் மறைத்து வாழ நேர்ந்தது வரலாற்றுச் சதி என்ற அறிவிப்பு ஒருவகையில் பௌத்தநெறியை ஏற்பது மதமாற்றம் இல்லை ‘எங்கள் மதமீட்பு‘ என்ற செய்தியை முன் வைக்கிறது. அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புதிய வாழ்வை, அரசியலை, அடையாளத்தை வழங்கு வதாகவும் அமைந்துவிடுகிறது. அயோத்திதாசர் ‘சாதிபேதமற்று வாழ்ந்து வந்த பூர்வத் தமிழ்க்குடிகள், திராவிட பெளத்தர்கள்‘ என்று இனம், மொழி உள்ளடக்கிய மீட்பைக் கட்டியெழுப்புகிறார். அத்துடன் உலகம் முழுமைக்குமான தன்மம் என்று அதனை அறிவிக்கவும் செய்கிறார். அம்பேத்கர் அதனை நவீன சமத்துவ அரசியலுடன் இணைத்து எதிர்கால உலகிற்கான விடுதலையாகவும் விரிவு படுத்துகிறார்.
இந்த முன்னெடுப்பு இருவரிடமும் நிகழ்வதன் பின்னணியை இங்கு நாம் குறித்துக்கொள்ள வேண்டும். அயோத்திதாசர் தம் காலத்தில் முன்வைத்த போராட்டத்திற்குப் பிரிட்டிஷ் அரசைப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு அமைப்பாக முன்வைத்து செயல்படுகிறார். பிராமணியம், இந்து மதம், சாதியம், தேசியம், நிலவுடைமை அமைப்பு என அனைத்தையும் அவர் அச்சமற்று எதிர்க்க வேற்று நாட்டு அரசின் சட்டங்களின் பாதுகாப்பினை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் பிராமணரல்லாதார் அரசியல், தேசபக்தி அரசியல், இந்துத்துவ அரசியல் என வலிமைகொண்ட அரசியலுடன் மோதி நின்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அவருக்கு நேராத அந்த கடினமான மோதலும் தாக்குதலும் அம்பேத்கருக்கு வாழ்நாள் முழுக்க வந்து சேர்ந்தது. இவற்றை அண்ணல் எதிர்த்து நிற்கத் தளம் அமைத்துக் கொடுத்ததும் அந்நிய ஆட்சி என்ற மூன்றாவது அமைப்புதான். அந்த காலகட்டத்தில் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பின்னாளில் அதாவது 1947-க்குப் பிறகான இந்து–பிராமண ஆட்சியில் இல்லாமலாக்கப்பட்டது. அண்ணலின் எழுத்திலும் பேச்சிலும் துயரமும் வலியும் கூடிய காலகட்டம் இது. 1951-க்குப் பின்னான நாட்கள் அவரிடம் தளர்ச்சியும் சோர்வும் சீற்றமும் கூடிய காலகட்டம். தேர்தலில், கட்சியில் ஏற்பட்ட தோல்விகளும் அவரது திட்டங்களில் ஏற்பட்டப் பின்னடைவுகளும் அவரிடம் உள்ளார்ந்த பல கேள்விகளை எழுப்பின. தம் மக்களின் எதிர்காலம் பற்றிய பதற்றம், இந்திய அரசியலில் பிற்போக்குச் சக்திகளின் வளர்ச்சி பற்றி அருவருப்பு, இந்து–பிராமண அதிகார எழுச்சி பற்றிய சீற்றம் என்பன அவரிடம் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் ‘புத்தரும் அவர் தம்மமும்‘ நூலை அண்ணல் எழுதத் தொடங்குகிறார். அவரது அறிவும் உணர்வும் ஒன்றித்து வெளிப்படும் இந்நூலின் வரிகளூடாக நாம் அவரது பயணத்தை அறிந்துகொள்கிறோம். வாழ்நாள் முழக்க போராடுவதற்கான வலிமை அவருக்கு வந்ததற்கான வேர்கள் அதில் படிந்துள்ளன. தோல்விகளைக் கடந்து வரலாற்றின் விடுதலைக் குறியீடாக அவர் மாறுவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த உணர்வு அதன் பக்கங்களூடாக விரிகிறது. தன் மனக் கலக்கங்களைக் கடந்து முன்னோக்கிப் பார்க்கும் அண்ணலுக்கு தன் உள்ளார்ந்த அடையாளத்தை உலகுக்கு அறிவிக்க, தம் மக்களுக்கு வழங்க இனியும் காலங்கடத்தக் கூடாது என்பது புலப்படுகிறது. தீக்ஷா பூமியில் 1956 அக்டோபரில் ஒலித்த அவரது தளர்ந்த குரலில் இரண்டாயிரமாண்டுச் புரட்சிகரச் சிந்தனையின் தெளிவு வெளிப்படுகிறது.
“என்னிடம் ஒரு கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது: எப்படி இவ்வளவு உயர்ந்த அளவு கல்வியை நான் பெற முடிந்தது. இன்னொரு கேள்வியும் கேட்கப்படுகிறது: ஏன் எனக்கு பௌத்தத்தில் பற்று உருவானது. இந்தியாவில் தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தில் பிறக்க நேர்ந்த காரணத்தால் என் முன் இந்தக் கேள்விகள் வைக்கப்படுகின்றன. முதல் கேள் விக்கு விடையளிக்க இந்த முன்னுரை உகந்த இடமல்ல. ஆனால் இரண்டாவது கேள்விக்கு விடையளிக்க இந்த முன்னுரை உகந்த இடம்.
இக்கேள்விக்கு நேரடியான விடை புத்த தம்மமே மிகச்சிறந்த தர்மம் என நான் மதிக்கிறேன். வேறு எந்த சமய தர்மத்தையும் அதனுடன் ஒப்பிட இயலாது. அறிவியல் சிந்தனை கொண்ட நவீன மனிதர் ஒருவர் சமய நெறி ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினால் அதற்குத் தகுந்த ஒரே சமயநெறி புத்த நெறி மட்டுமே. முப்பத்தைந்து ஆண்டுகாலம் அனைத்துச் சமய மார்க்கங்களையும் நுட்பமாக ஆய்ந்து அறிந்தபின் இந்த நம்பிக்கை என்னுள் உறுதிப்பட்டுள்ளது.” (முன்னுரை–புத்தரும் அவர் தம்மமும்)
முதல் கேள்விக்கு அம்பேத்கர் இந்த நூலில் நேரடியாகப் பதில் சொல்லவில்லை, ஆனால் இந்த நூல் முழுமையுமே முதல் கேள்விக்கான பதிலாக அமைந்துள்ளது என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை. அயோத்திதாசரின் ஒவ்வொரு எழுத்திலும் இதற்கான விடை பதிந்துள்ளது. அவர்களின் விடுதலை தொடங்கிய இடம் அது, அதனால்தான் தம் மக்களின் விடுதலைக்கான வழியாக அதனை முன்மொழிந்தனர்.
(தொடரும்)
(நமது தமிழ்மண்:அக்டோபர் 2015)