தாத்தா சொன்ன கதையும் தாத்தாவைப் பற்றி கதையும்-பிரேம்

தாத்தா சொன்ன கதையும் தாத்தாவைப் பற்றி கதையும்

ஏவல் பூதம் என்று பில்லி சூனிய மரபில் ஒரு பாத்திரம் ஒன்று உண்டு. ஒவ்வொரு மந்திரவாதியும் தன் வாளை வசியத்தால் ஒரு பேயை (பூதம்) அடிமையாக்கி வைத்திருக்க வேண்டும். மலையாள தேசம் போய் யச்சிணி, குட்டிச்சாத்தான் என ஏதாவது ஒரு பேயை வசியம் செய்து கட்டி இழத்து வந்து தன் மந்திரக் குடிலில் வேலையாளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஒரே சிக்கல் அதற்கு தினம் வேலை தரவேண்டும் இல்லையென்றால் மந்திரவாதியை மண்டையில் அடித்துவிடும். அதனால் வேலை தரமுடியாத காலத்தில் மந்திரவாதி மற்ற ஏதாவது ஒரு மந்திரவாதியின் ஏவல் பேயின் பெயரைக் குறிப்பிட்டு அதன் உச்சாந்தலை முடி ஒன்றை பிடுங்கி வா என்று வேலையைத் தருவானாம்.

பிறகு என்ன பேயின் தலையில் இன்னொரு பேய் கைவைக்க முடியுமா? பேய் தூங்காது அல்லவா? பாவம் கொடுத்த வேலையை முடிக்க இயலாமல் பேய் சுற்றிச் சுற்றி வரும். மந்திரவாதிக்கு ஏதாவது பில்லி சூனிய வேலை வந்ததும் ‘வாலை வசியம் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்’ என்று அழைப்பு அனுப்புவான். பாவம் ஏவல் பூதம் வெட்கத்தில் குறுகிப்போய் வந்து நிற்கும். என்ன முடி கிடைத்தா என்பான் மந்திரவாதி. ஜகஜால எசமானரே நானும் ஒரு நொடியையும் வீணாக்காமல் முயற்சித்துக் கொண்டுதான் இருந்தேன், இன்னும் முடியவில்லை என்று தலைகுனிந்து சொல்லும்.  மந்திரவாதி “ஒரு மயிரை உன்னால பிடிங்க முடியல ஆனா மந்திரவாதியின் உயிரைப் பிடுங்கறதா ஒப்பந்தம் வேற. சரி சரி இப்ப இந்த வேலையை முடி பிறகு போய் அந்த வேலையை முடி” என்று பேயைக் கர்வபங்கம் செய்வான். பாவம் பேய் இருடா உன்ன வச்சிக்கிறேன் என்று கறுவியபடி கொடுத்த வேலையை செய்து விட்டு அடுத்த வேலை என்ன என்று கேட்டும் “அதுதான் மயிர் பிடுங்கற வேலை மிச்சமிருக்குள்ள போய்வா” என்பானாம் மந்திரவாதி.

இதனைச் சொல்லிவிட்டு என் தாத்தா ஒவ்வொரு முறையும் சொல்லுவார் “வாளை வசியக்காரன் அத்தனை பேரும் வாயால ரத்தம் கக்கித்தான் சாவான்.” ஏன் தாத்தா “பின்ன இன்னொரு மந்திரவாதியும் இதுபோல தன் பேயிக்கும் வேலை கொடுத்திருப்பான் இல்ல, எப்பவாவது இரண்டு பேயும் பொருந்திப் போனா இரண்டும் உன் முடி எனக்கு என் முடி உனக்குன்னு மாத்திக்கும். அப்புற மென்ன முடியைக் கொண்டு வந்து கொடுத்துட்டு “போதுண்டா இந்த மயிர் பிடுங்கிற பிழப்பு போய்வரேன்னு” சொல்லிட்டு உச்சந்தலையில ஓங்கி அடிக்கும், மந்திரவாதிக்கு வாயில் ரத்தம்.”

அப்புறம் ஏன் தாத்தா நீ மந்திரம் பண்ணற? என்று நான் கேட்பேன் தாத்தா சொல்லுவார், “அப்பா பிரம்மானந்தம் நான் செய்யறது பேய்வாளை இல்ல மருந்துவ வாளை. எனக்கு சாமுண்டியே ஏவல் தேவதையா வந்திருக்கா. இவ மட்டும் இல்லண்ணா இந்த சுத்துப்பட்டுல எத்தனை பிள்ளங்க இல்லாம போயிருப்பாங்க தெரியுமா? ஆமாம் அவர் ‘செய்வினை’ ‘சித்திரவதை ஏவல்’ பில்லி சூனியம் எதையும் செய்ய மாட்டார் வைத்தியம் மட்டும்தான். வைத்தியவாளை என்று அதனைச் சொல்லுவார்.

அவருடைய அண்ணன் அதாவது எனக்குப் பெரிய தாத்தா நல்ல உயரம் பெரிய தாடி வைத்திருப்பார். அவர்தான் இச்சா பூதம் இசக்கி வசியம் எனச் சொல்லி பெரிய பெரிய மந்திரம் செய்வார். மை போட்டுப் பார்ப்பது செய்வினை வைப்பது-எடுப்பது எல்லாம் செய்வார். வைத்தியத்தைக்கூட மந்திரமாகத்தான் செய்வார். வசதியானர்கள் மட்டும்தான் அவரை அணுக முடியும்.

துஷ்ட  மந்திரம் துக்க ஜீவிதம் என்று சொல்லுவார் எங்கள் தாத்தா. தன் அண்ணன் கையால் எதையும் வாங்கவோ சாப்பிடவோ மாட்டார். அவன் இவன் என்று மரியாதை இல்லாமல்தான் பேசுவார். வயதாக ஆக அவருக்குப் பல நோய்கள் நான் அவரிடம் “ஏன் தாத்தா எத்தனை பேருக்கு நீ வைத்தியம் பாத்து சரி பண்ணியிருக்கிங்க ஏன் அந்த மந்திர வைத்தியத்தை நீங்க செஞ்சுக்கூடாது?” என்று கேட்பேன். அவர் சொல்லுவார் “பல்லு போனா சொல்லு போகும். சொல்லு போனா சூத்திரம் போகும். சூத்திரம் போனா சூட்சுமம் போகும். சூட்சுமம்தானே மந்திரமும் மருத்துவமும். இப்ப நான் மருந்து விக்கிறவன்தான் மருத்துவன் இல்லையடா.”

நான் கேட்பேன் “அதுதான் தாத்தா அப்ப மருத்துவம் பாத்து குணப்படுத்திக்கலாம் இல்லையா?”

“பிரம்மானந்தம் இந்த கரண்டு கம்பிய ஊர்மேல போட்டப்ப தேவதையெல்லாம் காட்டுக்கு போய் மறைஞ்சிதுங்க, மந்திரம் போச்சு. இப்ப பூச்சி மருந்தும் உரமும் மூலிகையெல்லாம் முறிஞ்சி போச்சி மருத்துவமும் போச்சி. இந்த உரம் போட்ட உணவு வெள்ளக்காரன் தந்தது, மருந்தும் அவன்தான் தரணும்”

அதற்குப் பிறகு அவர் அலோபதி மருந்துதான் உட்கொண்டார். பார்வை முழுமையாக மறைந்தபோது “சாமுண்டி சதிகாரி என்ன ஏன்டியம்மா கைவிட்ட?” என்று அழுவார். என் கையைப் பிடித்துக்கொண்டு சாக பயமில்ல, இந்த இருட்டு பிடிக்கலடா என்பார்.

தன் இறுதிக்காலத்தில் என்னிடம் இத்தனை படிச்சிருக்கியே நீயே சொல்லு, உண்மையா சொல்லு கடவுள் தெய்வம் எல்லாம் மனுஷங்க கற்பனையா? என்று கேட்பார். நான் பெரியாரியத்தை ஏற்று கடவுள் மறுப்பை அறிவித்தபோது “இந்த வீடு தெய்வங்க இருக்கற வீடு இதில சாமியில்லன்னு சொல்றவன் நுழையக் கூடாது” என்ற தாத்தா இப்படி கேட்டால் என்ன சொல்வது?

“எனக்குத் தெரிஞ்சு கடவுள் மட்டும் இல்ல தாத்தா மனிதர்கள்கூட கற்பனைதான் வாழ்க்கையும் கூட கற்பனைதான் இதில் தேவைப்பட்ட கற்பனையை எடுத்துக்க வேண்டியதுதான்”

“நீ சித்தனடா என் செல்லம், நீ சொன்னா சரியா இருக்கும். உன் மாமன்மாருங்கள பாரு தெய்வம் பூசைன்னு நாள் முழக்க நடிக்கிறாங்க அப்பன் எப்படியிருக்கிறான்னு வாரம் ஒருநாள் வந்து பார்க்க நேரமில்ல. சாமி பொய்யின்னு சொல்லற நீதானடா என்ன மருந்து வைத்தியம்னு கூட்டிக்கிட்டு அலையற, போதும்பா வாழ்ந்தது. வலியில்லாம சாக ஒரு மருந்த இருந்தா தா கண்ணு.” என்ன சொல்வது தெரியவில்லை.

மருந்து, குழந்தை மருத்துவம் என்று வாழ்ந்தவர். மருத்துவத்தை விட்ட பிறகும் யாராவது வந்து நாடி பார்த்து உடல் நிலை கேட்பார்கள். கையைப் பிடித்தபடி கண்களை மூடி இது இப்படி இருக்கா என்றால் ஒருவர்கூட இல்லையென்று சொல்லி நான் கேட்டதில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு உன் நோய் என்னன்னுதான் என்னால சொல்ல முடியும், இப்ப மருந்தெல்லாம் வெள்ளகாரன்தான் தரனும் போய் டாக்டரபாரு” என்பார்.

நான் அவரை எந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றாலும் தன் உடலில் உள்ள குறை இது இதற்கு மருந்து தாருங்கள் என்பார். புதுவையில் இருந்த ஒரு புகழ் பெற்ற டாக்டரிடம் கண் தெரியாத போது  அவர் குரலை வைத்து தாத்தா சொன்னார் “அய்யா உங்க குடல்வால் கெட்டுக்கிட்டு இருக்கு மருந்து சாப்பிடுங்க பிராந்தியை ஒரு வருஷம் சாப்பிடாதீங்க”. டாக்டர் ஒரு நொடி திகைத்துப் போனார். அய்யா எப்படி கண்டு பிடிச்சிங்க என்று கேட்டார்.
“குரல்நாடின்னு ஒரு முறை, குழந்தை அழுவதை வைத்து வலி எங்கன்னு கண்டுபிடிக்கிறது, அந்த முறையிலதான் கண்டு பிடிச்சேன் நான் சொன்னது சரியா?”
“அப்படியே சொன்னிங்க, பிராந்தி பத்தி வேற சொன்னிங்களே!”

“எட்டு வயசுல மூலிகை பரிச்சி வர வேலை, பத்து வயசுல இருந்து நாடி மருந்து, மரம் ஏறி வாழ்ந்தவன்தான் மருத்துவத்த விடல. உங்க நோய்க்குகூட ஒரு மருந்து சொல்லறேன் சாப்பிட்டு பாருங்க சரியாகும். ஆனா பத்தியம் முக்கியம், மருந்து கால் வாசி மனசு முக்கால்வாசி.”

“என்னங்க அய்யா இத்தனை அனுபவம், இவ்வளவுகால மருத்துவம், உங்க உடம்புக்கு சித்த மருத்துவத்தில நீங்க ஏதும் செய்துக்கலாமே?”

தாத்தா சொன்னார் “இல்லங்க டாக்டர் காத்து மாறிடிச்சு, தண்ணி மாறிடிச்சு, மண்ணு மாறிடிச்சு. என்னோட மருந்து ஒண்ண ரெண்ட தவிர மத்தது வேலை செய்யாது. போதும் டாக்டர் இனிமே என்ன. வலியில்லாம, இழுத்துக்கிட்டு கிடக்காம சட்டுண்ணு மூச்சு நிக்கணும் அவ்வளவுதான்.”

அவர் அப்படித்தான் உயிர் விட்டார். மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு வீட்டில் விட்டுவிட்டு நூலகம் சென்று ‘ஆந்தாலஜி ஆஃப் பிரஞ்சு பொயட்ரி’ என்ற நூலையும் தாகூரின் கோரா என்ற நாவலையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பியபோது தாத்தா உயிர் பிரிந்திருந்தது.

மார்பில் காதை வைத்துப் பார்த்துவிட்டு நம்பமுடியாமல் டாக்டரை சைக்கிளில் போய் அழைத்து வந்தேன். கையை தூக்கி நாடியைப் பார்த்தவர் கையை விட்டார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தினம் நாடி பார்த்த அந்தக் கை பொத்தென விழுந்தது. வழக்கமாக நான் சைக்கிளை எடுத்தால் எதுவும் சொல்லாதவர் அன்று கேட்டார் “அய்யா இதுக்கு மேல எங்க போற? கொஞ்சம் உட்காரு பேசணும் போல இருக்கு.” தாத்தா இருங்க ஒரு மணி நேரத்தில வந்திடறேன் என்றேன். அதற்குள்தான் அவர் மூச்சு நின்றது.

அன்று இரவு விழுந்தடித்து ஓடிவந்த பெரியதாத்தா கதறினார் “முனிசாமி போயிட்டயா பத்து வயசு பெரியவன் நான் இருக்கேன். நீ போயிட்டயடா சாமி. உனக்கு பிடிமண் போடவா நான் உயிரோட இருந்தேன். பாவிடா நான் பாவி! அம்மா சாகும் போது சின்னவன பாத்துக்கோடான்னு கையைப்பிடிச்சு கொடுத்தாங்க துஷ்ட வைத்தியன்னு என் கையை அப்போ உதறன. இப்போ என்ன தனியா விட்டுப் போயிட்டயேடா, சாமி என் முனிசாமி!”

அந்த மனிதர் அப்படி அழக்கூடிவர் என்பதை என் பதினேழு வயதில் நம்ப முடியவில்லை. எனக்கு அழுகை வரவில்லை, அழுவது பயனற்றது.

அவர் விருப்படி நான் கட்டி விளையாடிய கோயில் இருந்த மண்ணின் தென்மேற்கு மூலையில் அவரை அடக்கம் செய்ய வேண்டும். அதற்கு நானும் அவரும் சென்று வாங்கி வைத்த அனுமதிச் சீட்டை காவல் துறையிடம் காட்ட வேண்டும். என் 11 வயதில் நானும் தாத்தாவும் சேர்ந்து செய்த சிமெண்டு லிங்கத்தை அவர் புதைகுழியின் மீது நடவேண்டும். இரண்டு மனைவிகள் ஏராளமான பிள்ளைகள் என வாழ்ந்த அவருடைய மகன்கள் என்னிடம் கோபமாகக் கேட்டார்கள், “இதையெல்லாம் அப்பா எங்களிடம் சொல்லவில்லையே ஊர் வழக்கம் இல்லியே இது. அந்த மண்ணுல பொதைச்சிட்டா அங்க யாரும் வாழ முடியாது, விக்க வாங்க முடியாது, என்னடா சொல்லற!”

காகிதங்கள் அவர் கைப்பட எழுதிய கடிதம் எல்லாவற்றையும் காட்டினேன். அசையாமல் உட்கார்ந்து கண்ணீரைப் பெருக்கிய பாட்டி சொன்னார், “அப்பா அதுதான் சொன்னார். புஷ்பராஜு சொல்லறத செய்யுங்க. என்னயும் அங்கதான் புதைக்கணும். எல்லை தாண்டி போகக்கடாது எங்க உடம்பு.” ஆம் இடுகாடு இருப்பது தமிழ்நாட்டில் எங்கள் தாத்தாவைப் புதைத்த இடம் புதுச்சேரி மண்.  அதன் பக்கத்தில் பிரஞ்சுக்காரர்கள் நட்ட எல்லைக்கல் இன்னும் உள்ளது. பிரஞ்சு டெரிடரி, பிரிடிஷ் டெரிடரி என ஒரே கல்லின் இருபக்கம் சுருக்க எழுத்துக்களில் (FT-BT) எழுதப்பட்டிருக்கும். அது கத்தி கோடாரி தீட்டியே தேய்ந்து போன கல். அதன் மீது உட்கார்ந்துதான் தாத்தா ஒருநாள் சொன்னார் “இதுவரை நம்ம மண், என்னை இங்கதான் புதைக்கணும்.”

எப்படித் தாத்தா அதற்கு அனுமதி இல்லையே. அதெல்லாம் இருக்கு என்னை நான் சொல்லற இடத்துக்கு அழைச்சிக்கிட்டு போடா கண்ணு. அவர் சந்தித்தது புதுவையின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுப்பையா. அவர் உதவியுடன் ஒரு வருடம் நடந்து அவரையும் பாட்டிகள் இருவரையும் சொந்த மண்ணில் அடக்கம் செய்ய அனுமதி உத்தரவு வாங்கினார்.

என்ன தாத்தா இது என்றேன் உனக்கு புரியும் சும்மா கேட்காத. இடுகாடு பிரிடிஷ்காரன் நாட்டுல இருக்கு. என் உடம்பு எல்லை தாண்டி போகக்கூடாது. இதை வச்சிக்க எல்லாம் உன் பொறுப்பு. தாத்தா இதை மாமாங்க கிட்ட கொடுத்து, சொல்லி வச்சிடுங்க என்றேன்.

தாத்தா சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார் “இல்ல சாமி நான் அவங்கள நம்பல. செத்த பிறகு பாக்கவா போறாண்ணு டொக்குமாந்த்-த தொலைச்சிட்டு ஊர்காரங்க சொல்லறாங்க, சாதி சனம் சொல்லறாங்கன்னு அதோ அந்தச் சுடுகாட்டுல கொண்டு போய் புதைச்சிடுவாங்க. உன்னால அப்ப எதுவும் செய்ய முடியாது.

அவர் சொன்னது போல அது பெரிய சிக்கலும் சண்டையுமாகத்தான் இருந்தது. ஆனாலும் வாக்கு கொடுத்தபடி நான் நம்பாத லிங்கத்தை வைத்து அவரை அடக்கம் செய்தேன். எங்கள் அம்மா தனக்கு வரும் என்று நம்பி இருந்த மண்ணை இந்த மண் எங்கள் பங்கில் போகட்டும் என கோபமாகச் சொல்லி பாதி மண்ணை விட்டுக் கொடுத்தேன்.

பின்னாளில் என் மாமா ஒருவர் பங்கு பிரிக்கும் போது புஷ்பராஜ் அன்னிக்கு கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டான் அதற்கு ஈடாக வேறு மண் கொடுக்கவேண்டும் என்றார். மற்றவர்கள் ஒப்பவில்லை, நானும் அதனை விரும்பவில்லை.

தாத்தா இறந்த போது அழுகை வரவில்லை. பலகாலம் அவர் மறைவு என் மண்டையில் உறைக்கவில்லை. பாட்டிகள் ஒவ்வொருவராக எங்கள் குடிசை வீட்டில உயிர் விட்டனர். அம்மாவின் கவனிப்பு, அன்புக்காக உறவுக்கார பாட்டிகள் பலர் அந்த வீட்டில் கடைசிக் காலத்தில் வந்து உயிர் விட்டனர்.

என்ன இந்த வீடு சாவுவீடா மாறிடிச்சே என்று பேசும் அளவுக்கு குடும்பத்தை, பிள்ளைகளை விட்டு வந்தவர்கள் சில ஆண்டுகள் சில மாதங்கள் இருந்து அந்த வீட்டில் தன் மூச்சை விட்டனர். எனக்கு அப்பொதெல்லாம் அழுகை வந்ததில்லை. பணம் புரட்டுவது பச்சை ஓலை வெட்டுவது என துக்கம் மரத்த வேலைகள்.
என் அப்பா அங்கு உயிர்விட வில்லை. வேறு ஒரு வாடகை வீட்டில் உயிர் விட்டார். ஆனால் அந்த வீட்டில் வைத்துதான் அடக்கம் செய்தோம். அப்போதும் கூட என்னால் அழமுடியவில்லை.

என் தம்பிக்கு ஒரு தொழில் வேண்டும்,  அந்த மண்ணும் வீடும்தான் ஒரே வழி என்று  விற்று விட்டு ஊரை விட்டுக் கிளம்பி விட்டோம். அந்த ஊருடன் இப்போது எந்த உறவும் இல்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு என் மகள் நான் வாழ்ந்த மண்ணையும் வீட்டையும் பார்க்க விரும்பினார். அழைத்துச் சென்றேன், என் கையால் நண்பர்களை துணையாக வைத்துக் கட்டிய அந்த வீடு அப்படியே இருந்தது, நான் வைத்த மரங்கள் அடையாளம் தெரியாமல் ஓங்கியிருந்தன.

அதற்கு அப்பால் மதில் கொண்ட அந்த கோயிலுடன் தாத்தா பாட்டிகள், அந்த லிங்கம், நந்தி, நிறைய மரங்கள், தாத்தாவும் நானும் செய்த கழுத்து மாரியம்மன் சிலை. சில நிமிடங்கள் அந்த சமாதியருகில் உட்கார்ந்தேன். என் மகள் செம்பருத்திப் பூக்களைச் சேமித்துக் கொண்டிருந்தாா். தாத்தா இறந்துதான் போனாரோ, பாட்டிகளுமா, அப்பா கூடவா? என்ன இது மண்டையில் உறைக்கவில்லையே.

திரும்பி வந்த என் மகள் கேட்டார், ஏன் பப்பி அழற? நானா என்னம்மா சொல்லற? ஆமாம் நீ அழற, கண்ணுல தண்ணி வருது முகம் வீங்கியிருக்கு, நீ அழறப்பா. என்ன ஆச்சி? ஒன்னும் இல்லம்மா, வா போகலாம்.
பாவம் பிள்ளை ஊர் பாக்க வந்தது என் அழுகையைப் பார்க்கவா. நான் பேச்சை மாற்றினேன்.

அழுது என்ன ஆகப்போகிறது? ஆனால் அன்று இரவு அழுதேன். அதுவரை நான் அழாதவர்களுக்காக எல்லாம் அழுதேன். தாத்தா சொன்னது காதில் ஒலித்தது. அதற்கு எந்த அர்த்தமும் இன்று இல்லை. என் உடம்பு எல்லை தாண்டிப் போகக்கூடாது. அர்த்தமற்ற வாசகம், அழுகையை வரவைக்கும் ஞாபகம்.