இளையராஜாவிடம் கேட்க என்ன இருக்கிறது?-பிரேம்

இளையராஜாவிடம் கேட்க என்ன இருக்கிறது?

இளையராஜாவுடன் நான் முதன் முதலாகப் பேசியது தொலைபேசியில். அன்புக்குரிய கி.ரா. அய்யா ராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தவர், திடுமென என்னிடம் தந்து பேசனும்ணு சொல்றார் என்றார். 1998-99 கால கட்டம் அது. சந்திக்க ஒரு நாளை தங்கர் வழி ஏற்பாடு செய்யலாம் நிதானமாகப் பேசவோம் என்ற தகவல். கதைசொல்லியில் ஒரு கட்டுரை எழுத இருந்த என்னை ராஜாவிடம் மாட்டிவிட்டவர் அய்யாதான். பின் தங்கர் என்னைப் பற்றி, நான் ராஜா பற்றிச் பேசியவை பற்றியெல்லாம் ராஜாவிடம் தனக்கேயுரிய நாடக மொழியில் சொல்லியிருக்கிறார். சந்திப்பு அவ்வாறுதான் நடந்தது. 1977-1984 காலகட்டத்தில் நான் இளையராஜாவைச் சந்தித்திருந்தால் “ஹௌ டு நேம் இட்“ என்று அமைதியாக இருந்துவிட்டு வந்திருப்பேன். ஆனால் அது 1999, இளையராஜா போல நானும் மொழிவழி அதிசயம் நிகழ்த்தும் ஒரு கலைஞன். அதனால் சிறிய புன்னகையுடன், சிரிக்க வைக்கும் நிகழ்வுகளுடன் அந்த முதல் சந்திப்பு தொடங்கியது.
என் நண்பர்கள் (ஒடுக்கப்பட்ட தமிழராம் தலித் சமூகத்தில் பிறந்தவர்கள்) அனைவரும் ராஜா பக்தர்கள், அவர்கள் இசைக்குழுக்களை நடத்தி இல்லாத ஒரு உலகை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பு இறுதி ஊர்வலங்களில் பேண்ட வாசித்து அவமானப்பட்டவர்கள் “புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே“ எனப் பாடிய இரவுகள் எங்கள் அனைவருக்கும் அதிசய இரவுகள். அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம், நெல்லித்தோப்பு, புதுவை நகரம் என புதிய புதிய இசைக்குழுக்கள், புதிய ஒரு வாழ்க்கை. முழு பேரைச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள் ராஜா -அவ்வளவே.
பிறகு ராகதேவன், ராஜா- தேவன் இவைதான் அவருக்கு உகந்தவை என என் மக்கள் நினைத்தார்கள். என் நண்பர்கள் பெயரில் ராஜா சேர்ந்துவிடும். ரவி ராஜா, செந்தில் ராஜா, ஜேம்ஸ் ராஜா, குணராஜா என ராஜபார்வையும் ராஜ பாட்டையுமாக அவர்களின் உலகம். நான் 1981-88 வரை இளையராஜா கேசட்கள் விற்கும் கடைகளில் பகுதி நேர-இரவு நேர-பதிவு நேர வேலைகள் செய்தே சீவனம் நடத்தியிருக்கிறேன். நண்பர் பொதினிவளவன் (இளம் சிறுத்தை) எனக்கான இசைக்கடைகளை அமர்த்தித் தருவார். அக்கினி நட்சத்திரம் படத்தின் பாடல்களை ஒரு வாரத்தில் பல நூறு பதிவுகள் செய்ய வேண்டிய கடினமான ’காலம் பத்தாத’ வேலையில் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. பின்னாளில் ஞானி என்று மட்டும் என் நண்பர்கள் குறிப்பிடும் போது செல்லமாய்க் கடிந்து கொள்வேன். இசைஞானி என்றால் இசை, வெறும் ஞானி என்றால் அமைதி, அவர் அமைதியாக இருந்தால் நாம் என்ன ஆவது. இப்படிப் பேசியே அவர் தலையை மொட்டையாக்கிவிடாதீர்கள் என்பேன். அப்படி எதுவும் ஆயிடுமோ? என்பார்கள். ஆனால் “ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல“ என்று பாடிக்கொண்டு வந்து அவர் அவர்களின் பயத்தைக் கலைப்பார்.
அந்த நிலையில் அவர் இசை மட்டுமல்ல: எங்கள் ராஜா என்ற பெருமிதம், காற்றை நிறைத்த காலங்களின் கனவு. அவருக்குப் பிடிக்காத ஒரு அடையாளம் எனக்கூட சிலர் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் ராஜா-ராகதேவன்-இசைஞானி என அந்த ராசய்யாவை மக்கள் கொண்டாடியதற்கு வரலாற்றுக் காரணங்கள் மட்டுமல்ல அரசியல் உளவியல் காரணங்கள் மட்டுமல்ல மாறுதலுற்ற அழகியல் காரணங்களும் உள்ளன. உலக அளவில் (தற்கால உலகத் தரம், நுட்பம் என்றும் கூறலாம்) இன்று தமிழகத்திலிருந்து ஒன்றை நாம் தர முடியும் என்றால் அது இசை மட்டும்தான் (விருதுகள் பெறுதல் அல்ல இது). பிற துறைகளில் நிகழாதது. நாம் பெறுகிற அளவுக்குத் தருவதில்லை. ஆனால் இசையில் பெற்றதை விட கொடுத்து வருவது அதிகம். அதனைச் செய்துள்ளவர்தான் ராஜா. இதைச் சாதனை என்று கொண்டாட தமிழகம் முழுதும் முன்நிற்கும் எனில் அந்தச் சாதனையைச் செய்தவர் யார் தெரியுமா? உங்களால் எரிக்கப்பட்ட நந்தர்களின் வழி வந்த எங்கள் ராஜா. இதை நான் எங்கள் மக்களின் குரலில் முணகலில் கேட்டிருக்கிறேன். இன்னும் கேட்பேன். அவருக்குப் பிடிக்காத ஒரு அடையாளம் எனச் சிலர் இதைக் குறிப்பிடுவது பற்றி சொல்லியிருந்தேன். அப்படியிருக்குமோ என நானும் ஐயுற்றதுண்டு. ஆனால் அதனை ஊசி தொட்ட பெருநுரை போல ஒரு நொடியில் கலைத்தார் அந்தப் கற்பனை விரிவு கொண்ட கலைஞர் எங்கள் முதல் சந்திப்பில்.
புதுவையில் பிறந்து வளர்ந்தவர் நீங்கள் நான் புதுவையில் பிறக்காமல் வளர்ந்தவன் என்றார். வீடு எங்கே என்றார், நான் சொன்னது ஊர்ப்பெயர் மட்டும் அவர் தெருவைக் கேட்டார் நான் சொன்னேன் வைத்திக்குப்பம் பகுதி. அவர் முடக்குகள் மரங்கள் பற்றிச் சொன்னார். நான் கடற்கரைப் பகுதியென்றேன். அவர் குருச்சிக்குப்பம் என்றார். விட்டால் நான் இருந்த குறுக்குச் சந்தையும் சொல்லிவிடுவார் என்று பயப்பட்டேன். அதனையும் சொல்லிவிட்டு “நாங்கள் பாடாத தெரு பாண்டியில் இல்லை. பாடிவிட்டு தலைவர் சுப்பய்யா வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்குவோம்.“ சுதந்திரம் அச்சகம், சரசுவதி சுப்பய்யா, மாலைநேர கட்சிக் கூட்டங்கள், பாவலர் பாடல்களை தோழர் சுப்பய்யா உருகிக்கேட்டது, இட்டிலிக் கடைகள், பெரிய அங்காடி, மரவள்ளிக் கிழங்கு என அவர் பேச்சு விரிந்தது. இவை 1960-களின் பிற்பகுதிதான். 2001 காலத்தில் அவருடன் காரில் நானும் கி.ரா அய்யாவும் போன போது ஓட்டுனரை சில முடக்குகள் வழி ஓட்டச் சொல்லி தாங்கள் பாடிய இடங்களைக் காட்டினார். அவரது நினைவாற்றல் அசர வைப்பது. மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு மட்டுமே அமையும் நினைவாற்றல் அது. தலைவர் திருமாவிடம் நான் அந்த நினைவாற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன். அந்தச் சந்திப்பின் வழி நான் அறிந்தவை பல, அவற்றில் சிலவற்றை மட்டும் எனது “இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்” நூலில் பதிவுசெய்திருக்கிறேன்.
அப்போது சில புரட்சியாளர்கள் நான் திரைப்படப்பாடல் எழுத அல்லது திரைப்படத்திற்கு கதைவசனம் எழுதிச் சம்பாதிக்க அந்த தந்திர உத்தியைக் கையாண்டிருப்பதாக பிரம்ம வாக்கியங்களை உருவாக்கி பரப்பி விட்டார்கள். அதற்கு இதுவா வழி? அறிவுச்சுழியங்கள் அப்படித்தான் பேசும். அதே காலகட்டத்தில் பெரும் படை ஒன்று கிளம்பி என் நூலை இல்லாமலாக்குவதாக நினைத்துக் கொண்டு இளையராஜா ஒரு சனாதனி, புரட்சி செய்யாத சிகாமணி என்றெல்லாம் புலம்ப ஆரப்பித்தார்கள். அ.மார்க்ஸ், அந்தக் கால முனியாண்டி எனச் சில பேரறிஞர்கள் நான் உருவாக்கிய மூடநம்பிக்கையை உடைத்து புரட்சிப் படை கட்ட புறப்பட்டு வந்தார்கள். நண்பர்கள் எனச் சொல்லிய பலர் என்னிடம் ரஹ்மான பற்றி இப்படி எழுதியிருந்தால் உங்கள் இடம் இப்போது என்ன தெரியுமா என்றார்கள். பழைய பாடல்களைக் கேட்காமல் காலைக் கடன்களையும் மலை நடைகளையும் செய்யாத பல இலக்கிய-கவி மகா சனங்கள் இளையராஜா எல்லாம் காப்பி என்றார்கள். இந்திப் பாடல் கேட்டு இன்புற்றிருந்த அறிஞர்கள் இந்த நூல் இளையராஜாவுக்கு புரிந்ததா என கேட்டு இறும்பூதெய்தினார்கள். எனக்கு இவையெல்லாம் களப்பணியின் சில பதிவுகள்தான்.
நான் மீண்டும் இளையராஜா பற்றி எழுத நேர்ந்தது யான் பெற்ற இன்பத்தின் பகுதி மட்டுமல்ல துன்பத்தின் பகுதி கூட. அந்த நூலை எழுதியதால் நான் புதுவைப் பல்கலைக் கழக நாடகத்துறை பேராசிரியப் பணியில் இருந்து அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டேன். என் ஓராண்டு ஊதியம் முடக்கப்பட்டது, சட்ட வழி அறிக்கை அனுப்பி பின் அதனைப் பெற்றேன். அதன் காரணமாக நான் என் தாய் மண் விட்டு மைசூரிலும் பிறகு டெல்லியிலும் பணி செய்து பிணியுற நேர்ந்தது. ஆம்! நம்ப முடியாத திருப்பங்கள். ஆனால் நான் இன்றும் கூட எழுதுவேன் இளையராஜா பற்றி. இன்று எழுத நேர்ந்ததுள்ளதற்கு காரணமாக அமைந்தது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான இந்திய திரையுலக ஆளுமை விருது. அதனைப் பாராட்ட என்ன உள்ளது. அவர் ஆளுமைதான் உலக அளுமைகளில் ஒருவார்தான். அதில் நான் வந்து சொல்ல என்ன உள்ளது.
தமிழில் சிலர் பரப்ப முனையும் கருத்துகள் எனக்கு வியப்பை அளிக்கின்றன. யவனிகா சிரிராம் அதிக நண்பர் வட்டம் கொண்டவர் அவர் சொல்கிறார் இளையராஜா புரட்சி எதுவும் செய்யவில்லை என. பிரசன்னா ராமசாமி உலக நிதிகள் பெற்று நாடகம் செய்கிறவர் அவர் சொல்கிறார் இளையராஜா ஆன்மீகத்தை இழிவு செய்தார் அவருக்கு ஆன்மிகம் இல்லை என. சிலர் சொல்கிறார்கள் அவர் சனாதனி, தலித் அரசியலுக்கு எதிரானவர், இன்ன பிற!
எனக்குப் புரியவில்லை ராஜாவுக்கு அளிக்கப்பட்ட விருது இசைக் கலைஞர் என்பதற்காகவா அல்லது புரட்சியாளர், ஆன்மீகஞானி என்று அங்கீகாரம் வழங்கியா?
இந்தியாவின் எந்த இசைக்கலைஞரிடமும் கேட்கப்படாத கேள்வியை அறிவுஜீவன்கள் இளையராஜாவிடம் கேட்பது ஏன் என்று எனக்குப் புரியவே இல்லை. “நீ ஏன் புரட்சி செய்யவில்லை? நீ ஏன் உண்மையான ஆன்மிகத்தைப் பரப்பவில்லை?”
இளையராஜாவிடம் இவர்கள் கேட்க இசையைத் தவிர எத்தனை வைத்திருக்கிறார்கள்.
நானும் இளையராஜாவிடம் கேட்டிருக்கிறேன், “புதிய இசையை உருவாக்க அடங்காத மனம் வேண்டும், மீறிச்செல்லும் குணம் வேண்டும், அத்துடன் கடின உழைப்பு வேண்டும். ஆன்மிகம் அதற்கு எதிரானது நீங்கள் இவற்றை எப்படி இணைக்கிறீர்கள்?” அவர் சொன்ன பதில் இவ்வாறாக இருந்தது, “இசைக்கு ஆன்மிகம் தேவையில்லை, ஆனால், இசைக் கலைஞனுக்கு ஆன்மிகம் தேவைப்படலாம், உங்களுக்காக இசையை உருவாக்கிக் கொண்டே இருந்தால் நான் என்ன ஆவது? இசையின்றி நானும் இருக்க வேண்டும் இல்லையா? அதுதான் எனக்கான ஆன்மிகம். அதன் உள்ளர்த்தம் உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?”
இத்தனைச் சுருக்கமாக அவர் சொல்லவில்லை, ஆனால் இதற்கு மேல் சுருக்கமாக என்னால் சொல்ல முடியவில்லை.
இளையராஜாவிடம் கேட்க இவர்கள் இசையைத் தவிர எத்தனையோ வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் சொல்ல எதுவும் இல்லை!