பிராமணியம், பிற சாதிகள்: தொடரும் பின்னோக்கு அரசியல் – பிரேம்
பிராமணியம் என்ற சமூக அரசியல் மரபு இந்தியாவில் உருவாகி, வளர்ந்து, ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே பிராமணிய எதிர்ப்பு, பிராமணிய வெறுப்பு என்னும் சமூக உளவியலும் தொடங்கி விட்டது எனலாம். பிராமணியத்தின் விரிவான வரலாற்றை ஒரு வகையில் பிராமணிய எதிர்ப்பு இலக்கியங்கள் மற்றும் இயக்கங்களின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. வேதங்கள், உபநிஷத்துகள், சுருதிகள், சாஸ்திரங்கள், புராண-இதிகாசத் தொகுப்புகள் அனைத்திலும் தன்னை மேல் நிலையில் நிறுத்திக்கொள்ளும் பிராமணிய-பார்ப்பனிய மரபின் மொத்த இருப்பையும் இயக்கத்தையும் புரிந்து கொள்ள பிராமணிய-வைதிகம் மறுத்த மரபுகளின் நூல்களும் ஆவணங்களும் அடிப்படையாக உள்ளன.
ஆனால் பிராமணிய-வைதிக ஆதிக்கம் பற்றியும் அதன் வன்கொடுமைகள் பற்றியும் பிராமணிய நூல்களும், கதைகளும் எந்த மறைப்பும் தயக்கமும் இன்றிப் பதிவு செய்துள்ளன. புராண, இதிகாசக் கதைகளின் வழி பிறப்பின் அடிப்படையிலான வர்ண- சாதியை நியாயப்படுத்தும் பிராமண மரபு சாஸ்திரங்கள், ஸ்ருதிகள் வழியாக நேரடியாகவே சட்டங்களை இயற்றித் தமது வன்கொடுமைகளை, தீண்டாமையை நியாயப்படுத்தியும் புகழ்ந்தும் எழுதி வைத்துள்ளன. தன்னுடைய ஆதிக்கத்தை, உயர் அதிகாரத்தை தெய்வீகச் சட்டமாக மாற்றியதன் வழியாகக் குற்றவுணர்வின்றி மக்களின் மீது வன்முறைகளை நிகழ்த்த, மக்களைச் சுரண்ட பிராமணியம் பழகியிருந்தது. தன்னுடைய வன்முறையை மறைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லாத நிலையில் பிராமணச் சொல்லாடல் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் வலிமையுடையதாக மாற்றிக் கொள்கிறது. அந்த குற்றவுணர்வற்ற வன்முறையை அது பிற வர்ண-சாதியினருக்குள்ளும் பதிய வைக்கிறது.
பிராமண, ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற வர்ணப் பிரிவுகளுடன் தஸ்யூக்கள், தாஸர்கள், சண்டாளர்கள், மிலேச்சர்கள் என வர்ணப் பிரிவில் அடங்காத மக்களையும் தன்னுடைய அரசியல் கட்டமைப்பிற்குள் அடக்கிப் பெரும் அதிகார வலைப்பின்னலை பிராமண-வைதிக மரபு பின்னியிருக்கிறது. இந்த அதிகார-ஆதிக்க வலைப்பின்னலில் அதிக வளம் பெற்ற பிரிவினராக ஷத்திரிய-பிராமணர்கள் தொடர்ந்து இருந்து வந்தனர். பிராமணிய-வைதிக விதிகளைத் தண்டனை மற்றும் அடக்குமுறையுடன் இணைத்து ஆயுத வலிமையுடையதாக மாற்றிய ஷத்திரிய அரசுகள் இந்தியச் சமூகத்தின் மைய அதிகாரம் பெற்றிருந்த போதும் தமக்கான புனித அதிகாரத்தை பிராமணியம் வழியாகவே தொடர்ந்து உறுதி செய்து கொண்டன. இந்த இரு பிரிவினருக்குமிடையில் நடந்த அதிகாரப் போராட்டங்கள் பற்றியும் அழித்தொழிப்புகள் பற்றியும் அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகள் மிகவிரிவாக விளக்கியுள்ளன. பரசுராமன் என்ற தொன்மத்தின் வழியாக ஷத்திரியர்களின் மீதான பிராமணர்களின் பழிதீர்ப்பை விளக்கியெழுதும் அம்பேத்கர் அவ்விரு வருண-சாதிகளுக்கிடையிலான நெடிய போராட்டத்திற்குப் பிறகான ஒப்பந்தத்தையும் இடப்படுத்திக் காட்டுகிறார். பிராமணர்களின் சமய-சடங்கு அதிகாரமும் ஷத்திரியர்களின் அரசு அதிகாரமும் ஒன்றிணையும் கட்டம்தான் இன்றுள்ள பிராமணியத்தின் தொடக்கம் என்பதையும் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
வால்மிகி ராமாயணம் தசரதன் தன் நாட்டை நான்கு புரோகித பிராமணர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்ததாகவும் அதனை அவர்கள் அவனிடம் திரும்ப வழங்கி பாதுகாக்கும் பணியைச் செய்யக் கேட்டுக்கொண்டது பற்றியும் ஒரு கதையை உருவாக்கி பிராமணர்கள் அளித்ததுதான் ஷத்திரியர்களின் அரசியல் அதிகாரம் என்று நிறுவ முயல்கிறது. ராமன் சீதை இருவரும் எண்ணற்ற வேள்விகளைச் செய்து, பல்லாயிரம் பசுக்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கி, தன் செல்வங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, அந்த அந்த வர்ணத்தினர் அவரவர்க்கு உரிய கடமைகளைச் செய்யும்படி பதினோரு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து வைகுந்தம் சேர்ந்ததாக சொல்வதன் வழி ஷத்திரியர்களின் செல்வங்கள் அனைத்தும் பிராமணர்களுக்கானது என்றும் ஷத்திரியர்களின் கடமை வர்ண விதிமுறைகளைப் பாதுகாப்பதுதான் என்றும் விவரிக்கிறது. மகாபாரத்தின் கதைகள் ஒவ்வொன்றிலும் வேள்வி, தவம், பிராமண மையமான தர்ம சாஸ்திரங்கள் எனத் தொடர்ந்து விளக்கப்படுகின்றன. இந்தியப் பொது நினைவில் ஊறிக்கிடக்கும் இந்து மதக் கதைகள் ஷத்திரிய-பிராமண இணைப்பில் உள்ள வர்ண-சாதி ஒப்பந்தத்தின் குறியீடுகளாகவே உள்ளன.
வருணப் பாகுபாட்டை தெய்வீக, புனித சட்ட விதியாகவும் பிறப்படிப்படையிலான மாறாத வகைப்பாடாகவும் மாற்றியமைத்தின் வழி பிராமணியத்தின் வல்லாதிக்கம் நிறுவனமயப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வழியாக, அதிகாரக் கட்டமைப்பின் வழியாக வளம் பெற்றவர்கள், வலிமை பெற்றவர்கள், வாழ்வாதாரம் பெற்றவர்கள், இன்புறும் உரிமை பெற்றவர்கள் பிராமணிய-வைதிக சமூகப் பகுப்பு முறையை ஏற்றுக் கொண்டு அதனைக் காக்கவும் மேலும் அதனைப் பலப்படுத்தவும் கடமைப்பட்டவர்களானார்கள். அவர்களில் அடிமைநிலையில் வைக்கப்பட்ட சூத்திரர்கள் உழைப்பு, தொண்டு என்பதைத் தன் வாழ்வுக்கான புனிதக் கடமையாக ஏற்றுக்கொள்ளத் தயங்கிய நிலையில்தான் இந்தியச் சமூகங்களின் உள்முரண்பாடுகள் தொடக்கம் பெறுகின்றன. நாலாம் வர்ணப் பிரிவினரின் அடிமை நிலைக்கும் கீழாகத் தீண்டாமைக்குட்பட்ட, அவர்ண, பஞ்சம மக்கள் பிரிவினர் வைக்கப்பட்டதன் வழியாக சூத்திரர்கள் தங்களுக்கும் கீழான ஒரு அடிமைச் சமூகத்தை, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தை அடக்கி வைத்திருப்பதான உரிமை பெற்றவர்களாக மாறினர். இந்த அடிமைகளுக்குக் கீழான அடிமைமுறையின் கொடுமைதான் இந்திய சமூக உளவியலை பெரும் தீமையும் வன்முறையும் கொண்டதாக மாற்றியுள்ளது.
இந்த நீண்டகால கொடுங்கோன்மை அமைப்பில் ஆகக் கீழாக வைக்கப்பட்ட, அனைத்து மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் பிராமணியமும் பிற வருணசாதிகளும் அரசுகளும் நிகழ்த்திய பெரும் அநீதிகளை வன்கொடுமைகளை அம்பேத்கர் இந்து மதத்தின் வன்கொடுமை என்ற கூட்டிணைப்பால் சுட்டிக்காட்டுகிறார்.
இந்துக்களின் சாதிய உளவியலைத் தகர்க்க பிராமணியத்தின் பெருமைகள், புனிதப் பொய்கள் தகர்க்கப்படவேண்டும். இந்தத் தகர்ப்பின் தொடக்கத்தை நாம் அயோத்திதாசரிடம் காண்கிறோம். இந்து மதமும் பிராமணியமும் வேறு வேறானவை அல்ல என்பது அவர் கருத்து. “இந்துமதமென்பது யாவருடையதென்னில், தற்காலம் பிராமணரென்று சொல்லிக் கொள்ளுவோர் போதனைகளுக்குட்பட்டதும், அவர்களது மதத்திற்கு அடங்கியதும், அவர்கள் வரத்துப் போக்குக்கு இடமாயதும், அவர்களது ஆலயத்துக்குட் பிரவேசிக்க சுதந்திரமுடையதும், பிராமணர்களென்போர்களுக்கு தானங்கொடுக்கக் கூடியவர்களுக்கும், பிராமண ரென்போர்களையே தெய்வமாகவும் குருவாகவும் சிந்திக்கும் கூட்டத்தோர்கள் யாரோ அவர்களே இந்துக்களென்று அழைக்கப்படுவார்கள்.” (தமிழன்: பிப்ரவரி 22, 1911) அயோத்திதாசரின் இந்த அறிவிப்பில் தொடங்கும் பிராமண எதிர்ப்பு சாதிச் சமத்துவத்திற்கான வழியைச் சொல்வதுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்துக்கள் என்ற அடையாளம் எதிரானது என்றும் சொல்கிறது.
சாதிகளை உருவாக்கியது பிராமணியம் அல்ல, ஆனால் அதற்குச் சமயம் சார்ந்த, புனிதம் சார்ந்த அடித்தளத்தை உருவாக்கித் தருவது பிராமணியம், அதன் தொடர்ச்சியாக அமைவதுதான் பிராமணியத்தின் அதிகாரமும் அதன் சிறப்புச் சலுகைகளும். இந்து மதம், அரசு அதிகாரம், பிராமணியம் என்ற மூன்றின் கூட்டமைப்பைத் தகர்த்தால்தான் தீண்டாமைக்குட்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும், சாதியழிப்பும் சாத்தியமாகும் என்ற விடுதலை அரசியல் சமன்பாட்டை அம்பேத்கர் உருவாக்கித் தருவதற்கும் இதுவே பின்புலமாக அமைந்தது.
“இந்துக்களின் சமயச் சடங்குகளைச் செய்யும் சாதியினருக்கென சட்டங்களோ, ஒழுக்கவியல் முறைகளோ இல்லை என்பதால் இச்சமயத்தின் மொத்த நிலைமையும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. அந்தச் சாதி தனக்கென சமூகக் கடமைகள் எதையும் வைத்திருக்கவில்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் உரிமைகள், சிறப்புச் சலுகைகள் மட்டும்தான். கடவுள் சக்தி ஏவிய கொள்ளை நோய் போன்ற இந்தச் சாதி மக்களைத் தாக்கி அவர்களை உளவியல் வகையில் சிதைத்து ஒழுக்க நியதிகளை அழித்து வருகிறது. நான் குறிப்பிட்டுள்ள முறையில் இந்தச் சாதிகள் சட்டத்தின் கீழான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும். அதன் வழியாவே இந்தச் சாதியினர் தீமைகள் புரிவதையும் மக்களிடம் குழப்பங்கள் உருவாக்குவதையும் தடைசெய்ய முடியும். அனைத்துச் சாதியினரும் வழிபாட்டுச் சடங்கைச் செய்யும் உரிமை பெருவதற்கான வழியை இச்சட்டத்தின் வழி உருவாக்க வேண்டும். இதன் வழியாக பிராமணியம் அழிக்கப்படும், பிராமணியம் அழிந்தால்தான் சாதி ஒழியும், சாதியென்பது பிராமணியத்தின் இன்னொரு வடிவமே தவிர வேறில்லை. பிராமணியம் இந்து மதத்தை நாசம் செய்த நஞ்சு.” (அம்பேத்கர், சாதியழிப்பு, 1936)
சாதியழிப்பு என்பதை எங்கிருந்து தொடங்குவது என்பதில் நவீன சமூக விடுதலைப் போராளிகளான அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் மூவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர். பிராமணிய எதிர்ப்பு, இந்து மத மறுப்பு, சாதியழிப்பு என்ற இயக்கப் போக்கை இவர்கள் மூவரும் ஒன்றிணைத்தனர். இந்தியச் சமூகப் புரட்சிக்கான தொடக்கமாக அவர்கள் பிராமணிய எதிர்ப்பை முன்வைத்தனர். அதுவரை ஷத்திரிய அரச-அதிகாரத்தின் சேவகர்களாக இருந்து சமூக அதிகாரம் பெற்ற பிராமணர்கள் பிரிடிஷ் அரசியல் வழியாக நேரடியான அரசியல் பொருளாதார அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டர். இந்திய தேசியம் என்பது அவர்களின் மேலாதிக்கத்தில் அமைந்த புதிய அரசியல் வடிவமாக மாற முடியும் என்பதை உணர்ந்த பிராமணர்கள் தம் சாதி வரையறைகளை மீறி அனைத்துத் துறைகளிலும் இடம் பெற்றனர். ஆனால் பிற சாதிகளை சாதியக் கட்டுக்குள் வைப்பதற்கான புதிய உத்திகளை கையாளத் தொடங்கியிருந்தனர்.
“தங்களது சாதித் தொழிலை தின வாழ்வில் விட்டுவிட்ட பிராமணர்களில் எத்தனைபேர் சாதியமைப்புக்கும் சாஸ்திரங்களுக்கும் எதிராகக் கருத்தைப் பரப்பி வருகிறார்கள்? சாதி முறைகளை சாஸ்திர விதிகளைக் கைவிட்ட நூற்றுக் கணக்கான பிராமணர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள்தான் சாதியமைப்பையும் சாஸ்திரங்களின் புனிதத்தன்மையைம் கட்டிக் காப்பதில் வெறித்தனமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஏன் இந்த வஞ்சக மனம்? ஏனெனில் மக்கள் சாதிமுறையின் கட்டிலிருந்து விடுதலையடைவதென்பது பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரத்தையும் சமூகச் செல்வாக்கையும் இல்லாமலாக்கிவிடும் என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.” (அம்பேத்கர், சாதியழிப்பு, 1936)
பிராமணர்கள்-பிராமணியம் என்ற அடையாள அமைப்பு நவீன அரசியலுக்கும், விடுதலை நெறிகளுக்கும் எதிரானதாக உள்ளதை அம்பேத்கர் கூறுவது போலவே பெரியாரும் விளக்குகிறார், அந்த நவீன அரசியலுக்கு தேசிய இயக்கம் துணை செய்யாது என்பதை உணர்ந்தே தான் மிகவும் மதித்த காந்தியின் தலைமையை மறுத்து புதிய இயக்கம் உருவாக்கினார். காந்தி முன் வைத்த பிற சமூக நலத்திட்டங்களும் விடுதலைக்கான செயல்பாடுகளும் அவரது சனாதன-வர்ண ஆதரவு நிலைப்பாட்டினால் அடிப்படைத் தகர்ந்து பிற்போக்குத் தன்மை பெறுவதை பெரியார் விளக்கிய போது தனது அரசியலின் மையமான கருத்தியலை அடையாளம் காட்டுகிறார், “அதாவது மகாத்மா காந்தி நமது பார்ப்பனர்கள் சொல்லுவது போலவே நமது சமூக வாழ்வில் வருணாசிரம தர்மம் உண்டு என்றும் அது பிறவியிலேயே ஏற்பட்டது என்றும் அடிக்கடி சொல்லி வருகிறார். சமீபத்தில் மைசூரில் ஒரு கூட்டத்தில் தீண்டாமையைப் பற்றி பேசும் போதும் இந்து சமூகத்தில் வருணாச்சிரம தர்மம் உண்டு என்றும், அது நமது சமூகத்திற்கு அவசியம் என்றும், ஒவ்வொரு வர்ணத்தாருக்கு ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிற தென்றும், அந்தந்த வர்ணத்தார் அந்தந்த தர்மத்தைச் செய்யும் போது அவரவர்கள் அம்மட்டிலுயர்ந்தவர்கள் என்றும், பிராமணன் அவன் தர்மத்தைச் செய்யும் போது உயர்ந்தவனாகிறது போலவே மற்ற வர்ணத்தானும் அவனவன் தர்மத்தைச் செய்யும்போது தான் உயர்ந்தவனாகிறான் என்பதாகவும் பேசியிருக்கிறார். இதைத்தான் பார்ப்பனர்களும் தாங்கள் பிறவியிலேயே உயர்ந்தவர்கள் என்பதற்குக் காரணங்களாகச் சொல்லி வருகிறார்கள். வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமுலில் இருந்து வருகிறதே ஒழிய வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வருணாச்சிரம தர்மம் என்கிற ஒரு உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.” (பெரியார் ஈ.வெ.ரா, குடி அரசு: 07.08.1927)
பிராமணிய எதிர்ப்பு, பிரமாணரல்லாதார் அரசியல் என்பது தீண்டாமை ஒழிப்பு என்ற வகையில் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அரசியலுடன் இணைவதற்கான தொடக்கத்தை பெரியார் செய்த போதும் அது தமிழகத்தில் ஏன் விரிவடையாமல் தேங்கியது என்பதுதான் நம் கவனத்திற்குரியது. பிராமண-பிராமணிய எதிர்ப்பு என்ற இயக்கப் போக்கு பிற இடைநிலைச் சாதிகள், பிராமணரல்லாத நிலவுடைமைச் சாதிகளின் கருவியாக மாறியதுடன் அரசியல், பொருளாதார பலம் கொண்ட புதிய சாதியமாகப் பெருகியது. பெரியாரின் பல்வேறு கருத்தியல்களை மறுத்துப் பிராமண எதிர்ப்பு மற்றும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற இரண்டை மட்டும் தம் அரசியல் திட்டமாக, அரசியல் சொல்லாடலாக மாற்றிக் கொண்ட இயக்கங்கள் தீண்டாமையை உள்ளடக்கிய சாதியச் சக்திகளாக மாறியுள்ளன. இடைநிலைச் சாதிகள் தீண்டாமையை நியாயப்படுத்தக் கூடிய, வன்கொடுமைகளை செயல்படுத்தும் சக்திகளாக மாற்றம் பெற்றுள்ளதை பிராமணிய சக்திகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊக்குவித்து வருகின்றன. பிராமணியம் தம்மை ஒதுக்கி வருவதாகச் சொல்லி அரசியல் அணியாக மாறிய சூத்திர அரசியலின் தற்போதைய நிலைப்பாடு ஒடுக்கப்பட்டோர் அரசியலின் எதிர்க்களமாக மாறியிருப்பது இந்திய அரசியலின் பின்னோக்கிய நகர்வாக மாறி உள்ளது. இந்நிலையில் பிராமணியம் தன்னை இந்தியாவின் கருத்தியல் தலைமையாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கான பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதியமைப்பில் தான் வெளியே இருப்பதாக ஒரு தோற்றத்தை அது உருவாக்க முயல்கிறது. அத்துடன் தமிழகத்தில் அது பாதிக்கப்பட்ட இனக்குழு என்ற அடையாளத்தை உருவாக்க முயல்கிறது. பிராமணியத்தை மறுத்த பிராமணர்கள் என்ற நிலை பற்றிய பேச்சுகள் கருத்தியல் குழப்பத்தை உருவாக்கும் திட்டம் கொண்டவை. பெரியாரை தலித் அரசியலுக்கு எதிராக நிறுவிக்காட்டி சாதியழிப்புக்கான பொதுக்களத்தை அதாவது அம்பேத்கர்-பெரியார் என்ற இணைப்பு அரசியலை இல்லாமலாக்கிவிடுவதற்கான சொல்லாடல்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்குப் பின்புலமாக அமைவது திராவிட என்ற பெயரடையாளம் கொண்ட கட்சிகள், சமூக குழுக்களின் சாதிய உளவியல் மற்றும் சாதி காக்கும் அரசியல் செயல்பாடுகள். ஆனால் பெரியாரியக் களம் இது போன்ற சாதி காக்கும் அரசியலுக்கும் எதிரான இயக்கத்தைக் கொண்டது.
பெரியாரின் பிராமணிய எதிர்ப்பு தீண்டாமைக்கெதிரான சமூக இயக்கத்தை முன்வைத்து உருவானது, பெரியாரின் தெளிவான விளக்கம் இது, “பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும் பிச்சைச் சாமான்களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும், சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், “பிராமணன்” என்கிற பார்ப்பன வருணாசிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடுகின்றதுகள். பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல. உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் ‘சுவாமி’ என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம் தான் முதலில் கும்பிட வேண்டும் என்கிற மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவனாயிருக்கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்? அல்லாமலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மையில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக்காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்ஞானத்தை, மூடநம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்சகத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங்கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.” (பெரியார் ஈ.வெ.ரா, குடி அரசு: 19.09.1926)
அயோத்திதாசரின் இயக்கப் போக்கினைத் அதே மொழியில், அதே இயங்கியல் வழியில், எதிர்ப்பியக்க மரபில் தொடர்ந்த பெரியார் அயோத்திதாசரின் அறிவியக்கத்தை இணைத்துக் கொண்டு முன் செல்லாததன் தீய விளைவு பின்னாளில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையரசியலின் இடத்தை மறதிக்குள்ளாக்கும் நிலையையே உருவாக்கியது. அது இன்றும் சாதிய அடையாளத்துடன் திராவிட அடையாளமாகத் தேங்கிப் பின்னகர்ந்து செல்கிறது.
தமிழ் அடையாளம் பற்றிய பழமை மீட்புவாதங்கள் பிராமணியத்திற்கெதிரான தோற்றம் கொண்ட போதும் ஆதிக்கச் சாதிகளின் அடையாள மீட்பாக மாறுவதன் மூலம் பிராமணிய கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
இன்றுள்ள இந்திய மரபில் எந்த ஒன்றையும் அப்படியே தன்வயப்படுத்திக் கொள்வதன் வழி தலித் அரசியல் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதை அண்ணலின் வழியில் மீண்டும் நாம் மறுஉறுதி செய்துகொள்ள வேண்டியுள்ளது. அவரது சிந்தனை முறை இந்திய மரபில் முற்றிலும் புதியது, அயோத்திதாசரோ மாறுதலுக்கான அறத்தை மாற்று மரபின் வழி உருவாக்கிய நவீன சிந்தனையாளர், பெரியார் பகுத்தறிவு, சுயமரியாதை, சுதந்திரம் என்பவற்றுடன் ஒயாத தன்விமர்சனம் கொண்ட நவீன அறிவுமரபை உருவாக்கித் தந்தவர். இவர்களின் இணைப்பு வேறெந்த அரசியல் இயக்கப் போக்கிலும் இவ்வளவு ஆற்றலுடன் பொருந்த இயலாது. ஆம், தலித் அரசியல் என்பதான ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியலில் தவிர வேறு எந்தக் களத்திலும் இத்தனை ஆற்றலுடன் இந்த மூன்று பேரறிவாளர்களின் மாற்றுச் சிந்தனைப் போக்குகளும் பொருந்தி இயங்குவதில்லை. பெரியார் பிராமணியத்தை மறுத்து, எதிர்த்து இயங்க முன்வைத்த அத்தனை காரணங்களும் இன்றும் உள்ளன, அத்துடன் பிராமணியத்தை உள்வாங்கிய பிறசாதிகளின் பின்னோக்கு அரசியலும் கூடுதலாக இணைந்து கொண்டுள்ளது. இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் என்பது பிராமணிய மையத்தன்மை பெற்று வருவதை இடைநிலைச்சாதிகள் கொண்டாடுவதற்கான காரணம் இப்போது தெளிவாகப் புரிய வரலாம்: “பிராமணியம் அழிந்தால் சாதி ஒழியும், சாதியென்பது பிராமணியத்தின் இன்னொரு வடிவமே தவிர வேறில்லை” (அண்ணல்). “வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமுலில் இருந்து வருகிறதே ஒழிய வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக் கொள்கை பரவ மார்க்கமே கிடையாது.” (ஈ.வெ.ரா).
(நமது தமிழ்மண், ஜனவரி 2016)