எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல் -பிரேம்

 

உரையாடல்: 4:

எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல்

 

கேள்வி:

மேற்குலகில் தத்துவவாதிகள் (philosophers), அறிவுஜீவிகள் (public intellectuals), படைப்பாளிகள் (writers), இலக்கியவிமர்சகர்கள் (literary critics), திரைப்பட விமர்சகர்கள்  (film critics) என்போர் தனித்தனி வகைமைக்குள் இயங்குபவர்களாகவும் அவர்களுக்கென ஒருமரபும் இருந்துவரும் நிலையில், நமது சூழலில் எழுத்தைக் கைக்கொள்பவர்கள்,  அனைத்திலும் செயற்பட விழைபவர்களாக உள்ளது ஏன்? அது சரியானது தானா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

இதுபோன்ற கருத்து-அறிவு சார்ந்த வேலைப் பிரிவினைகளை அடிப்படையில் நாம் மறுக்க வேண்டும். மேற்கின் உயர்தகுதி தேர்ந்தெடுப்புமுறை, தனிச்சிறப்பு அடையாளம் என்பவை ஒதுக்குதல் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளவை. அனைவருக்குமான அறிவு, அனைத்தைப் பற்றியுமான அறிவு என்பது பொதுமைப்பட்ட நிலையில்  இந்த வகை அறிவுஆதிக்கம், அறிவு அதிகாரம் இயங்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு உயர் தொழில்நுட்பத்  துறையாக மாறியுள்ளது.  இது முதலீட்டு குவித்தல் போலச் சுரண்டலை அடிப்டையாகக் கொண்டது. சமச்சீரற்ற அறிவுப்பரவல் வழி அதிகாரம், அடக்குமுறை, அடிமைத் தன்னடையாள உருவாக்கம் என்பவை வலுவடைகின்றன.  அப்படியென்றால் அனைவரும் அனைத்துத் துறைபற்றியும் பேசவும், எழுதவும் பழகித்தான் ஆகவேண்டும். நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு என்ன இருக்க முடியும். தத்துவம், இலக்கியம், திரைப்படம், கலை, அழகியல், உளவியல், அரசியல் என அனைத்தைப்பற்றியும்,  அனைத்தையும் கலந்து  அனைவரும் எழுதுவதன் மூலம்தான் அறிவுத்துறையின் வன்முறையை, அதன் அரசியல் வன்முறையை நாம் நீக்க முடியும்.

தன்  சமூகத்தின் தேவைக்காக ஒருவரே  பலதுறைகள் பற்றி எழுதுவதற்கும், சந்தையின் தேவைக்காக,  பண்பாட்டு முதலீட்டியத்தின் முகவர்களாக எல்லாவற்றைப்  பற்றியும் ஒரு சிலரே எழுதிக் குவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றித்தான் நீங்கள்  கேட்பதாக நினைக்கிறேன்.

எழுத்து, வாசிப்பு என்பது மற்ற அறிவுத்துறைகள் போலவே பயிற்சியும், உழைப்பும் தேவைப்படும் செயல்பாடு. அதனால் எழுதப் பயிற்சி பெறும் ஒருவர் அரசியல் சார்ந்தவராக இருந்தால் தன் உழைப்பை பயிற்சியைப் பயன்படுத்தி பலதுறைகளைப் பற்றி எழுத வேண்டிய தேவை ஏற்படும். அரசியல் நீக்கம் கொண்ட ஒருவர் அதே பயிற்சியைக் கொண்டு பலதுறைகள் பற்றியும் சந்தைக்கான எழுத்துக்களை உருவாக்குவார். ஒரளவு அறிவும் பயிற்சியும் உள்ளவர்கள் இவர்களின் எழுத்தின் உள்ளீடற்ற தன்மையை உடனே புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய வாசிப்புப் பள்ளியில் பழகிய, பயின்ற அனுபவத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். மார்க்சியக் கல்வி தொடங்கும் இடம் அரசியலாக இருக்கும் பின் பொருளாதாரம், வரலாறு, தத்துவம், அழகியல், இலக்கியம், கவிதையியல் என ஒன்றுதொட்டு ஒன்றாக விரிந்து நாடகம்,  திரைப்படம், களஆய்வுகள், தற்கால வரலாறு என உங்களை பல தளங்களில் இயங்க நிர்ப்பந்திக்கும். அம்பேத்கரை வாசித்துக் கற்பதும் புரிவதும் மானுடவியல், சமய வரலாறு, இந்தியச் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் என பல அறிவுத்துறைகள் சார்ந்த பயிற்சியாக இருப்பதை நாம் அறிவோம்.

ஒரு குலமரபுச் சமூகத்தில் உழைப்பு, கலை, தற்காப்புப் போர் என அனைத்தும் ஒவ்வொருவருக்கும் பழகியிருப்பது போல நம் காலத்திய அறிவுத்துறைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பொழுது நாம் அனைவரும் அவற்றைப் பற்றிச் சிலவற்றை எழுதவும், பேசவும் வேண்டும். நான் ஒரு படைப்பிலக்கியவாதி என்றால் பிறருடைய அறியாமையை என் மூலதனமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை, ஒரு தத்துவவாதி என்றால் புனைவெழுத்தை சிறுமை கொண்டதாகப் பார்க்கத் தேவையில்லை.

தமிழ்ச்சூழலில் எழுத வரும் மிகச் சிலர் இலக்கிய விமர்சனம், திரைப்பட விமர்சனம் என்ற இரு தளங்களில் கூடுதலாக இயங்க முயற்சி செய்வதை நாம் கவனிக்க முடியும். தனக்குப் பிடித்த இலக்கிய வகையை பெருமைப்படுத்தவும், தனக்குப் பிடித்த சில  திரைப்படங்களை புகழவும் இது தேவைப்படுகிறது. தனக்குப் பிடிக்காதவைகளை ஒதுக்கி தான் விரும்பும் ஒரு சிந்தனைப்பள்ளியை நிறுவ இந்த எழுத்துக்கள் அவர்களுக்கு உதவுகின்றன.

திரைப்படங்கள் குறித்து நான் கட்டுரை எழுதிய போது திரைத்துறைக்கு போகும் முயற்சியா எனச் சில  நண்பர்கள் கேட்டார்கள். அமெரிக்க வல்லாதிக்கம் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் அமெரிக்காவுக்குப் போகும் முயற்சிகள் என்றால் இவை திரைத்துறைக்கு போவதற்கான முயற்சிகள்தான் என்றேன். கவிதை, நாடகம், தத்துவம், புனைவுகள், கோட்பாடுகள் எனப் பல கதையாடல் வடிவங்களில் இயங்கும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும்… ஒன்றின் பயிற்சி மற்றதற்கான தொடக்கமாக இருக்கிறது. ஒன்றை தொடங்கும் போது அதற்கான கூடுதல் உழைப்பும் திறனும் தேவைப்படுகிறது. இந்தக் கூடுதல் உழைப்பைத் தருவதற்கான பொறுப்பற்றவர்கள் தமக்குக் கிடைத்த ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு அனைத்தைப் பற்றியும் எழுதுவது நம் காலத்திற்கான அறிவுருவாக்கத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பவர்கள். இதற்கான தளங்களை ஊடகங்கள் சில உருவாக்கித் தருகின்றன.

நம் காலத்திய அறிவு பல தளங்களில் இயங்குவது தவிர்க்க இயலாத நிகழ்வாக மாறிவிட்டபின், அறிவுத்துறைகளை நாம் தனித்தனியாகப் பயில வேண்டியது அவசியம். இந்தத் தனிப்பயிற்சி தரவுகளைத் தேடித் தரவும், அவற்றைப் பகுக்கவும் தொகுக்கவும் உதவக்கூடியது. ஆனால் இவற்றை அரசியல் தளத்தில் பொருத்திக் காட்ட,  சமூக அறிவுருவாக்கத்தில் ஒருங்கிணைக்க, செயல்படும் அழகியலாக உருவாக்க அனைத்தையும் இணைக்கும் பன்மை அறிவு தேவைப்படுகிறது. இதில் நமக்குப் பெரும் சிக்கல் உள்ளது.

தமிழ் இலக்கியத்தைக் காலவரிசைப்படி கற்றுள்ள பலரை நாம் தமிழறிஞர்கள் என்கிறோம், இவர்களுக்குத் தற்கால அரசியல், அழகியல், சமூகவியலில் பயிற்சியோ பழக்கமோ இல்லாததால் பிற்போக்குச் சிந்தனையின் முகவர்களாக செயல்படுவதைத் தன் வாழ்க்கைக் கடனாகக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சியம் அறிந்து பயின்றவர்கள் பலர் கலை-இலக்கியம் பற்றி, சூழலரசியல் பற்றி காலப்பொருத்தமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். திரைப்பட வரலாறு தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் பலர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையோ, தமிழின் குல-குடி மரபுகள் பற்றியோ அடிப்படைகளைக்கூடத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இலக்கியம் பயின்று, எழுதவும் பழகிய சிலர் தமிழில் அரசியல், தத்துவம், நுண்கலைகள், திரைப்படம், ஓவியம், இசை  எனப் பலதுறைகளில் இயங்கும் ஆர்வம் கொள்வது, செயல்படுவது அறுபதுகள் எழுபதுகளில் ஒரு அடையாள உளவியலாக உருவாகியிருந்தது. எழுத்தைப் பழகிய பலர் திரைப்படம் வழியாகத் தம்மை மேலும் வெளிப்படுத்த முடியும் என்றும் அதில் சாதனைகளைச் செய்யமுடியும் என்றும்  நம்பினர். இந்தியத் திரைக்கலைஞர்கள் சிலர் இலக்கியப் பயிற்சி கொண்டிருந்ததும் ரித்விக் கட்டக், சத்யஜித் ரே போன்ற சிலர் தங்கள் மொழியில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய படைப்பாளிகளாகவும் இயங்கி வந்ததும் தமிழில் பல எழுத்தாளர்களுக்கு  முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன்  எழுபதுகளில் சென்னையில் வாழத்தொடங்கிய போது திரைப்படத் துணை இயக்குநராக இருந்தது பற்றியும் அப்போது உலக அளவில் சாதனைகள் புரிய திரைப்படம்  ஒன்றே சிறந்த வழி என்று நம்பியிருந்தது பற்றியும் தனக்கே உரிய தற்கேலியுடன் சொல்லுவார், முடிவில் படம் பிடிக்கக் கற்றுக் கொள்ளாமல் புகைபிடிப்பதைக் கற்றுக் கொண்டது பற்றிச் சொல்லியபடி ஒரு சிகரெட்டைப் பத்தவைப்பார். பாரதிதாசன் படம் பிடிக்கச் சென்ற கதையை பிரபஞ்சன் சொல்லிக் கேட்க வேண்டும்,  படம் படுத்திய பாடு தமிழின் தனி வரலாறாக நீளும். நான் அரும்பு மாணவர் இதழில்  துணையாசிரியராக இருந்தபோது, அப்போது வெளிவந்திருந்த மகாநதி திரைப்படம் தமிழில் தேவையான ஒரு திரைமொழியை கொண்டுள்ளது பற்றி ஒரு கட்டுரை எழுதி பக்கம் கருதி குறைத்து வெளியிட்டேன்.  அதில் நீக்கப்பட்ட பக்கங்களைப் பார்த்த என் எழுத்தாள நண்பர் என்ன இது வேண்டாமா இப்படிக் கொடுங்க நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கேட்டு வாங்கி சில வாக்கியங்களை இணைத்து கணையாழி இதழில் தன் பெயரில் வெளியிட்டார். சில நாட்களில்  வந்த ஒரு அழைப்பினை என்னிடம் கூறி வாழ்க்கையே மாற இனி வாய்ப்பு உண்டு நீங்க வரிங்களா இல்லையா என்று பொறுப்புடன் கடிந்து கொண்டார். நான் எழுதியது அந்த திரைப்படக் கலைஞருக்கு பிடித்திருந்தால் அவர் என்னை வந்துப் பார்த்துப் பேசட்டும், நான் ஏன் அவரைப் போய் பார்க்க வேண்டும் என வேடிக்கையாகவும் வினையாகவும் சொல்லி வைத்தேன்.   “பாருங்க ராஜன் இந்த மனுசன் தானும் பொழைக்க மாட்டாரு கூட இருக்கிறவங்களையும் பொழைக்கவிட மாட்டாரு” என்று வருத்தப்பட்டார் எழுத்தாள நண்பர்.  ‘நீங்க போய் வாங்க உங்க பொழைப்ப நான் கெடுக்க மாட்டேன்’ என்று அவரை அனுப்பி வைத்தேன். இப்படித்தான் இந்த எழுத்து நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.

திரைப்படக்காரர்களிடம் தனக்குத் தெரியாதது உலகில் எதுவும் இல்லை என்று வியப்பை உருவாக்கவே சில எழுத்தாளர்கள் தற்போது  ஆன்மிகம் தொடங்கி அமெரிக்க அரசியல் வரை, தாஸ்தெயெவஸ்கி தொடங்கி தாஜ்மகாலின் அறியப்படாத வரலாறு வரை பலவற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய புத்தகத்தின் பெயர் ஒரு நடிகரின் வாய்ச்சொல்லாக அமைந்து விட்டால் தான் எழுதியதின் பயனை மட்டுமின்றி பிறந்ததின் பயனையும் அடைந்து விட்டதாகப் பெருமையில் நுரைத்துப் பறக்கும் தமிழ் எழுத்தாளர்கள்- படைப்பாளிகள் தற்போது தத்துவ வாதிகளாக,  அறிவு ஜீவிகளாக, இலக்கிய விமர்சகர்களாக,  திரைப்பட விமர்சகர்களாக எல்லா வடிவிலும் இயங்க நினைப்பது எதற்கானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

திரைப்படம் பற்றி இன்று சிலர் எழுதுவதையும் பேசுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அப்படம் பற்றிய சிலரின் எழுத்து தீர்த்துவிடுகிறது. ஆரண்ய காண்டம் (தியாகராஜன் குமாரராஜா,2011) படம் பற்றி உலக சினிமாவில் துறைபோகிய ஒரு எழுத்தாளர் (லத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்குநர்களைத் தன் வாசகராகக் கொண்டிருப்பதாகக்கூட சில பேச்சுகள் உண்டு) தன் வாசக வட்டத்திடம் விரிவாகப் பேசுகிறார். கேட்பவர்களுக்கு உலக சினிமா தெரியவா போகிறது என அவர் நம்புவதற்கு இடம் உண்டு.  இன்று மின்எண்ணியல் வடிவில் அனைத்துப் படங்களும் கிடைக்கும் என்றாலும் அனைவருக்கும் இணையம் ஒத்துழைக்காது இல்லையா.  அவர் சொல்லகிறார் “ஆரண்ய காண்டம் படம் உலக சினிமாவில் எதனைப் போலவும் இல்லை,  இந்தப் படம் வேறு எந்தப் படத்தையும் எனக்கு நினைவுபடுத்தவில்லை என்பதே இதன் சிறப்பு”. உலக சினிமா பற்றி இவருக்கு ஒவ்வொரு இழையும் தெரியும் என்பதை நம்பும் ஒரு பார்வையாளர் இதனைத் தன் கல்வியாக எடுத்துக் கொள்வார் என்பதை நாம் மறுக்க முடியாது. அப்படத்தின் இயக்குநருக்கு நிச்சயம் சிரிப்பு வந்திருக்கும். சிட்டி ஆஃப் காட், அமரோஸ் பெரோஸ், பல்ப் பிக்ஷ்சன் என வரிசையாக சில  படங்களைச் சம அளவில் எடுத்து துண்டு துண்டாக நறுக்கி,  வேகவைத்து, நொதிக்கவைத்து, வடிகட்டி, சென்னைத் தமிழ் மணம்  ஊட்டி தயாரிக்கப்பட்ட பானம் அது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகின் துணைஇயக்குநர்கள், இணைஇயக்குநர்கள், எதிர்கால இயக்குநர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அப்படத்திற்கு ஒளி அமைப்பு செய்த தொழில்நுட்ப உதவியாளர்களிடம் கேட்டால்கூட “படத்தில் மறைந்துள்ள படங்களின்“ பெயர்களைச் சொல்வார்கள். அப்படிப் படம் பார்த்து கதை சொல்வதும் படம் செய்வதும் திரைத்துறையில் விரும்பத் தகாத வினோத நடத்தையும் அல்ல. நான் சொல்ல வருவது உலக சினிமாவை ஓயாமல் சுவாசிக்கும் ஒரு பேரறிஞர் தன் “கலகக் கண்மணி” களுக்கு அடிப்படையிலேயே தவறான தகவல் ஒன்றைத் தருகிறார். இதனை அவருடைய “வலையில்” சிக்கிய ஒவ்வொரு கலையன்பரும் ஒரு நூறு பேருக்குக் கொண்டுசேர்ப்பார்… இப்படித்தான் நம் காலத்திய தமிழ் அறிவு நலிவடைய நேர்கிறது. மாறுபட்ட பார்வைகளைத் தருவது  ஒருவருடைய உரிமை, ஆனால் பார்ப்பதையே மாற்றிக் கூறுவது திட்டமிட்ட மடைமை…   எழுத்தை, அறிவை நேசிக்கும் ஒருவர், தன் சமூகத்தை மதிக்கும் ஒருவர் செய்ய முடியாத செயல் இது.

உரையாடல்: 4 : 1