உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல் -பிரேம்

உரையாடல்: 5   உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல்
கேள்வி:
உலகளாவிய முதலாளித்துவம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவலானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாறியுள்ள இன்றையச் சூழலில் உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் குறித்த உங்கள் பார்வை என்ன?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்
பிரேம்
முதலாளித்துவம், உலக முதலாளித்துவம் என்று நாம் அடையாளப்படுத்திக் காட்டுவது மாற்றுச் சிந்தனைத் தளத்தில் நிகழ்கிறது. முதலாளித்துவம், முதலீட்டு அதிகாரம், மூலதனம் காக்கும் அரசுகள், ஆதிக்கம் காக்கும் ராணுவங்கள், மனித உரிமை மறுக்கும் அமைப்புகள் என்ற தொடர் வன்முறைகள் இன்று வலுவடைந்துள்ளன என்பதை இப்படி அணுகிப்பார்க்கலாம். முதலீட்டியம், மூலதன ஆதிக்கம் எப்பொழுதாவது முழுமையாக வலுவிழந்திருந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. மக்கள்சார் அரசுகள், மக்கள் அரசியல், மக்கள் நல ஆட்சிமுறைகள் என்பவை நவீன காலகட்டத்தில தனிமனித சுதந்திரம் என்ற கோட்பாட்டு அடிப்படையில் உருவாகி உலக அளவில் மாற்று அமைப்பு பற்றிய கனவுகளை உருவாக்கின.
கொடுங்கோன்மை ஆட்சிகள், வன்கொடுமை அரசுகள், இனப்படுகொலை நிகழ்த்தும் ஆட்சியாளர்களால் நிறைந்திருந்ததுதானே மனித குலங்களின்- இனங்களின் வரலாறு. பேரரசுகளின் தலைநகரங்களில் இருந்து எவ்வளவு விலகியிருக்கிறதோ அந்த அளவுக்கு கொடுமையின்றி வாழலாம் என்ற நிலையில்தான் கிராம-குடிமரபுச் சமூகங்கள் இருந்தன. நவீன அமைப்புகள் நமக்கு வழங்கிய குடிமை உரிமைகள் சார்ந்து சுதந்திரம், சமநீதி, சமத்துவம், சமஉரிமை என்பவை பற்றி நமக்குக் கனவுகள் உருவாயின. சோஷலிசம், பொது உடைமைச் சமூகம் என்பதெல்லாம் அதற்கு அடுத்த கட்ட மனித முயற்சிகள். இன்று உலகச் சமூகங்கள் ஒவ்வொன்றும் ஒரளவு மனித உரிமை சார்ந்த மதிப்பீடுகளுடன் வாழ்வது அந்த வகை முயற்சிகள், அதற்கான போராட்டங்கள், தம் மக்களுக்காக போராளிகள் செய்த ஈகங்கள் உருவாக்கிய அமைப்பில்தான். உலக முதலாளியம் இன்று வலுவானதாக, உயிரியல் பெரும்போர் இயந்திரமாக மாறியிருந்தாலும் இது ஒரு இடைக்கால நிலை என்றே எனக்குத் தோன்றுகிறது.
இப்படிச் சொல்வதன் மூலம் மீண்டும் செம்படை புறப்பட்டு இந்த மனிதக்குலத்தை மீட்டெடுக்கும் என்று அறிக்கையிட அல்ல. அப்படி நடக்க வேண்டிய தேவையும் இல்லை. மொழி, இனம், சாதி, வாழ்வாதாரம், பண்பாடு, அரசியல், உயிர்வாழ்தல், பாலினம், மண்ணுரிமை என ஏதாவது ஒரு தளத்தில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலை பற்றி, நல்வாழ்வு பற்றி, தன்னுரிமை, தன்மதிப்பு பற்றிய கனவைக் காணாமல் இருப்பதில்லை. தம்மீது கவிந்த வறுமை, ஏழ்மை, அடிமைத்தனம் எதனையும் பாசத்துடன் பற்றிக் கொண்டிருப்பது மனித இயல்பல்ல. அப்படியெனில் இன்றைய தேசிய-பன்னாட்டு முதலீட்டு ஆதிக்கங்கள் எப்படி உலக மக்களை சமூகங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது? நீங்கள் பட்டினியில் கிடந்து சாகத்தான் வேண்டும் என்று சொல்லியா? இல்லையே, நாங்கள்தான் உங்களுக்கான நல்வாழ்வை வழங்குவோம், எங்களுக்காக உழையுங்கள், மூலதனத்தை, தேசிய ராணுவத்தை பலப்படுத்துங்கள், நாட்டுக்காக ரத்தம் சிந்தத் தயாராக இருங்கள், நீங்களும் உங்கள் தலைமுறையும் நலமாக வாழலாம் என்று கூறித்தான் தம்மை நியாயப்படுத்திக் கொண்டும் நிலைப்படுத்திக் கொண்டும் உள்ளன.
தென்னமெரிக்க மக்களின் தண்ணீரையும் செந்நீரையும் உறிஞ்சும் ஐக்கிய அமெரிக்க அரசு தன் மக்களுக்கு சொல்வது என்ன? “உலகின் வளம் எல்லாம் உமக்குத்தான் உயிர்களைக் கொல்வது பற்றிக் கவலை வேண்டாம்” என உறுதி அளிக்கிறது. “ஆப்கான் மக்களைக் கொல்லாமல் அமெரிக்கத் தெருக்களில் நம் மக்கள் அமைதியாக நடமாடவோ ஆடல் பாடல்களில் ஈடுபடவோ முடியாது” என்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்க மண்ணைக் கொள்ளையிட்டு தன் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்திற்கு அளிப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றன. உலக முதலாளியம், உள்ளூர் முதலாளியம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தன் மக்களுக்கான நல்வாழ்வு, நீடித்த இன்பம் பற்றிய கனவை உருவாக்கித்தருகின்றன.
பாகிஸ்தானுடன் ஆண்டுக்கு இருமுறை போர் நடத்தினால்தான் இந்தியா வல்லரசாகும் என்றும் இந்தியா வல்லரசானால் அரசின் நியாயவிலைக்கடைகள் வீட்டு வாசலுக்கு வந்து உணவுப் பொருள் வழங்கும் என்பது  போன்ற நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒவ்வொன்றாகத் தகரும் பொழுது மக்கள் மாற்று என்ன என்பதை நோக்கித் திரும்பத்தான் செய்வார்கள். மாற்று அரசியலை, மாற்றுப் பொருளாதாரத்தை, மாற்று வாழ்வியலை இயற்கையும் சூழலியல் நசிவும்கூட நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
உலக அளவிலான முதலாளித்துவ, சந்தைப் பொருளாதார அமைப்பு தனக்கான அடிப்படையை மீண்டும் உறுதி செய்துகொள்ளக் காரணமாக அமைந்தது இயந்திரமையம் கொண்ட மனிதக் கட்டமைப்பு. இயந்திரத் துப்பாக்கிகள் தொடங்கி, எண்மின்னியல் நினைவுக் களஞ்சியங்கள் வரை அனைத்தும் மனித உடல்நீக்கம் கொண்ட தொழில் நுட்பங்கள். பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் கலந்து மார்க்சியத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மாற்று அரசியல்-பொருளாதார அமைப்புகள் முன்னேற்றம்-வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் இயந்திரமைய அமைப்புகளையே பெருமளவில் உற்பத்தி செய்தன. இயந்திர மயமாக்கம்- அரசுமைய அதிகாரம்- முதலீட்டு ஆதிக்கம் அனைத்தும் ஒன்றாகக் கலக்கும் இடம் இது. இந்தக் கலப்பு முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இரண்டிற்கும் மிகவசதியான ஒரு உலகை உருவாக்கித் தந்தது. பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் நீக்கிவிட்டால் எந்த ஒரு தேசிய சோஷலிச அரசும் உலக முதலாளியத்தின் ராணுவத் தளங்களில் ஒன்றாக மாறிவிடும். இதுதான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. மார்க்சியம், கம்யூனிசம் எல்லாம் அழிந்து மக்கள் மாபெரும் பேரானந்தப் பெருவாழ்வு பெறப்போகும் காலம் இது என வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டதுதான் இந்தச் சுதந்திர மயமாக்கல், தனியார் வசமாக்கல், உலகமயமாக்கல் என்ற விழாக்காலத் தள்ளுபடி அரசியல். இந்த விழாக்காலக் கொண்டாட்டங்கள் உலகின் 10-முதல் 20-சதவிகித மக்கள் தொகுதிகளை மட்டும் மனிதர்களாக மதிப்பவை. இவர்களுடைய களிப்பும் களிப்புக்கான முன் தயாரிப்பும்தான் உலக வாழ்க்கை என்ற உளவியல் கட்டமைப்பு அனைவருக்குமானதாக எப்படி இருக்க முடியும்?
இன்று உள்ள மக்கள் தொகுதிகள் நுகர்தலுக்கான கட்டற்ற உரிமை கொண்டவர்கள் – நுகர்வுக்குத் தம்மை நிபந்தனையற்று ஒப்படைப்பவர்கள் என்ற இரு பெரும் பிரிவாக பிரிந்துள்ளனர். உழைக்கும் வர்க்கம், உடமை வர்க்கம் என்பவை இன்று இடைநிலை இயந்திரங்களாக மாறி இயற்கை வளங்களை முதலீடாக மாற்றிக் கொண்டுள்ளன. மண்ணின் மக்களை வீடற்றவர்களாக்கி சுரங்கங்களைத் தோண்டி கனிமங்களைக் கொள்ளையிடுவது முதல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம், வணிக வளாகங்களுக்கு ஒளிவெள்ளம் என்ற பெயரில் பலநூற்றாண்டு மனித அவலத்திற்குக் காரணமாக அமையவுள்ள அணுவுலைகளை நியாயப்படுத்துவது வரை உலக முதலாளியமும் – உழைக்கும் வர்க்கத்தின் உளவியல் இருண்மையும் ஒன்றிணைந்துள்ளன. இந்த இணைப்பு அதிக காலம் நீடிக்கக்கூடியதல்ல.
நுகர்வு பெருகிய சமூகம், வாழ்வாதரம் அற்ற சமூகம் என இரண்டு பகுதியாக உலகம் பிரிந்து குடை சாயும் நிலையில் உலக முதலாளியம் தன் கணிணிகளையும் ஏவுகணைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒரு மூட்டை கோதுமையும் நெல்லும் சோளமும் ஒரு விண்களத்தைவிட மதிப்பு வாய்ந்தது என்பதையும், ஒரு கை தூயநீர் ஒரு மூட்டை அச்சடித்த பணத்தைவிட அரிதானது என்பதையும் உலக விஞ்ஞானிகள் உணர வேண்டிய காலம் உருவாகும். மாற்றுச் சிந்தனைகளின் “எதிர்காலம்” குறித்து நான் கவலைப்படவில்லை… மனிதர்கள் மாற்றுச் சிந்தனைகளின் வழியாவே தம்மை மதிப்பு மிக்கவர்களாக வைத்துக் கொள்ளமுடியும்…
இன்றைய ஒப்பீட்டு அளவிலான மனித நீதியும், அறம்சார் நெறிகளும் மாற்றுச் சிந்தனைகள், மாற்றுச்செயல்திட்டங்கள் வழிதான் காப்பாற்றப்படுகின்றன… தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு கூட “ஆமாம் நாங்கள் படுகொலை செய்தோம், இத்தனை லட்சம்…” என்று சொல்லித் தம் இறையாண்மையைத் தொடரவில்லை. “நாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை போராளிகள்தான் தமிழ் மக்களைக் கொன்றார்கள் நாங்கள் மீதமிருந்த மக்களைக் காப்பாற்றினோம்.” என்றுதான் சொல்கிறார்கள். மண்ணின் மக்களைக் கொன்றொழிக்கும் வல்லாதிக்கப் படைகளுக்கு “அமைதி காக்கும் படை” என்று தான் பெயர். நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புவது மாற்றுச் சிந்தனைகள், விடுதலைக் கருத்தியல்கள்தான் இன்றைய மக்கள் உரிமைகளை, மனித அறங்களைக் குறைந்த அளவில் காத்து வருகின்றன, அவை எங்கும் நிறைந்துள்ள உள்ளார்ந்த போராட்டங்கள், மனித விழுமியத்தின் உள்ளாற்றல் இந்த வகையான மனிதவுரிமைப் போராட்ட உணர்வு.
மனிதர்கள் வன்முறை மட்டும் கொண்டவர்கள் என்றால் சமூக அமைப்புகள் உருவாகியிருக்காது. ஒவ்வொரு அமைப்பும் ஒரு அமைதி ஒப்பந்தம், சமூகம் என்பது தனிமனிதர்களுக்கிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை. இன்று மதங்கள்கூட நவீனத்துவத்தின் மக்கள் மைய நிலைப்பாட்டைக் கைக்கொண்டு தம் சொல்லாடலை, செயல்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணமாக இருப்பது மாற்றுச் சிந்தனைகள், மனித உரிமைக் கருத்தியல்கள் தான்.
பௌத்த, சமண, கிறித்தவ சமயங்கள் தம் காலத்தின் மக்கள் அரசியலை முன் வைத்து தம்மை வடிவமைத்துக் கொண்டன. பிறகு அவை ஆட்சியாளர்களின், அரசுகளின் கருவியாக மாற்றம் பெற்றன. இன்று மீண்டும் அவை தம்மை மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த, அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறுவிளக்கம் செய்து கொள்கின்றன. இதற்கான காரணம் மக்கள் அரசியலும், மார்க்சிய இயக்கங்களும்தான்.
கிறித்தவத்தின் இருபெரும் பிரிவுகளான கத்தோலிக்க (போப்பரசுத் திருச்சபை), புரட்டஸ்டன்ட் (மக்கள் திருச்சபை) சமய நிறுவனங்களும் உழைக்கும் மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இறையமைப்புகளாக மீண்டும் மீண்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சியத்தைக் கற்காமலேயே ஒரு கிறித்தவர் எளியோரின் நல்வாழ்வு, ஏழைகளின் முன்னேற்றம், சுரண்டல்களில் இருந்து மக்களை விடுவித்தல் என்பவற்றிற்காகத் தன் வாழ்வைத் தரமுடியும் எனச் சொல்லும் விடுதலை இறையியலும், இயேசுவும் மார்க்சும் மக்களுக்கான இரு விடுதலைத் தூதர்கள் என்று சொல்லும் புரட்சிகரத் திருச்சபையும்  இன்று உலக அரசியலின் ஒரு பகுதியாக விரிவுபட்டுள்ளன. இஸ்லாத்தின் அறவியல் சிந்தனையாளர்கள் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்பவை சமய வழியில் உறுதி செய்யப்பட்ட கருத்துக்கள் அதனால் இஸ்லாம் எதிர்கால மக்கள் அரசியலாக மறுஉருவாக்கம் பெறும் என்று அறிவிக்கிறார்கள்.
தற்கால வாழ்வியல் சார்ந்து பன்முகப்பட்ட விடுதலைக் கருத்தியல்கள் தற்போது உருவாகிவருகின்றன. இவை ஒன்றே போல ஒற்றைத் தன்மை கொண்டவைகளாக ஒருங்கிணைந்தவைகளாக இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் போது சற்றே சிக்கலாகத் தோன்றும் நிலைக்களம் இதுதான். இந்த தளத்தில்தான் இலக்கியம், கலைகள், கருத்தியல் ஆய்வுகள், அறிவுத்துறைகள் பெரும் பங்காற்ற இயலும், மாற்றுச் சிந்தனைகள், மாற்று அறங்கள், மாற்று அரசியல் களங்களுக்கிடையில் உரையாடலை, பரிமாற்றங்களை, புரிந்துணர்வுகளை வளர்ப்பதற்கான சொல்லாடல்களை, கதையாடல்களை உருவாக்கித்தர அவற்றால் முடியும்.
மாற்றுச் சிந்தனைகளை அன்றன்று புதுப்பித்துக் கொண்டே இருப்பதும், ஒவ்வொரு தளத்திலும் எடுத்துரைத்துக் கொண்டே இருப்பதும் ஒரு போராட்ட வாழ்முறை. தன் மக்களைக் காக்க உயிரைத் தந்த இனக்குழு போராளிகளுக்கு இருந்த தன்னீகத்தில் ஒரு சிறுபகுதி மாற்றுச் சிந்தனைகள், மாற்று அரசியலை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இருந்துதான் ஆகவேண்டும்… நான் புரட்சிகர போரைப் பற்றிச் சொல்லவில்லை, தன்மதிப்பும், தன் பிள்ளைகள்மீதான பாசமும், அவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளும் கொண்ட ஒரு தாய்க்கும், தந்தைக்கும் இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய போர்க்குணம் பற்றிச் சொல்கிறேன்.
மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை...அதுதான் இன்றைக்கான அழகியல், கவிதையியல் … அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த்தெடுப்பதும்தான் அறிவுத்தளத்தினர், சிந்தனையாளர்கள், மக்களுக்கான இலக்கியவாதிகள் என்பவர்களின் பணி, வாழ்வு எல்லாம்…