உரையாடல்:1 படைப்பாளி என்ற முரண் அடையாளம்
கேள்வி
தமிழ்ச் சூழலில் மார்க்ஸிய, பெண்ணிய, தலித்திய, நோக்கில் செயல்படும் அறிவுலவாதிகள் வெகு சிலரில் குறிப்பிடத் தக்கவராகவும், நவீன / பின்நவீன, இலக்கியப் படைப்பாளியாகவும் இயங்கி வரும் நீங்கள் உங்களை எவ்வாறு முதன்மையாக அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள்?
எழுத்துலகிற்கு வந்த தொடக்க காலத்திலிருந்து உங்கள் அடையாள நோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கூறுங்கள்.
[ ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்
பிரேம்
படைப்பாளி என்ற முரண் அடையாளம்:
நவீன, பின்நவீன இலக்கியப் படைப்பாளி எனக் குறிப்பிடுவதற்கு அரைமனதுடன் தான் நான் நன்றி சொல்ல முடியும். ஏனென்றால் அப்படிக் குறிப்பிடுவதன் மூலமே படைப்பாளி எனக் குறிப்பிட்டு அடையாளப் படுத்திக்கொண்டு ஒரு பண்பாட்டு முதன்மைப் பாத்திரத்தை எடுத்துக்கொள்வதிலிருந்து என்னைத் தடுத்து விடுகிறீர்கள். நல்லது, ஒரு முன் நவீன- எதிர் நவீன படைப்பாளியாக நான் இருந்திருந்தால் கதைப்பேரரசு, காவியப் பாவலன், கருத்துக் காவலன் என்று ஏதாவது ஒரு மொழிமுடி சூட்டிக் கொண்டு உங்கள் முன் நான் பேசமுடியும். எழுதுதல், அதற்காகச் சிந்தித்தல், முன்புள்ள பல்வேறு எழுத்துக்களில் இருந்து அடுத்து ஒரு எழுத்தை உருவாக்க முனைதல், முன்புள்ள எழுத்துக்களுக்குள் அது முழுமையாக மறைந்து போகாமல் இருக்க அதன் வடிவத்தைத் திருகுதல் என்பது ஒரு தொழில் நுட்ப பாத்திரம்தான் என்பதை நம்பும் ஒரு எழுத்துக்காரன் என்ற வகையில் அச்சியந்திரம் உருவாக்கிய ஒரு படலம் போல நான் உணர்கிறேன். நவீன-பின்நவீன படைப்பாளியாக இருக்கிறேன் என்பதை விட நவீன-பின்நவீன நிலையில் படைப்பாளியாக இருப்பது என்ற முரண் அடையாளத்தைத் தமிழில் நான் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
இலக்கியவாதி, படைப்பாளி, இலக்கியக் கர்த்தா, கவிஞன் என்னும் அடையாளங்கள் தொன்மையான அறிதல் முறையால் உருவானவை. அவற்றின் பொருள் இன்று நவீன-பின்நவீன நிலையில் முற்றிலும் வேறு என்று அறிந்து கொண்ட பின் எழுதுதல் என்பதை வாழ்வு, இருப்பு இரண்டுக்குமான செயலடையாளமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட நான் தமிழில் எழுதும் எழுத்துக்கலைஞனாகவே ஒவ்வொருநிலையிலும் செயல்பட இயலும்.
ஒரு இசைக்கலைஞனாவது பற்றிய கனவு எனது பிள்ளைப் பருவம் முதல் இருந்துவரும் ஒன்று, ஆனால் அது ஒரு கனவு மட்டுமே. இன்றும் கூட எனது கனவுகளில் விதவிதமான, வினோதமான இசைக்கருவிகளை வாசிப்பவனாக, பெரும் இசைக்கோலங்களைப் புனைந்து எழுதுபவனாக நான் உருவம் பெருவதுண்டு. எனது கனவுகள் ஒவ்வொன்றும் இசையுடன் அமைந்த திரைப்படம்போல இருந்து பல நேரங்களில் என்னைக் கூச்சமடைய வைப்பதுண்டு. கனவில் கூட நான் ஒரு போதும் பாடுகிறவானாக உருவமடைந்ததில்லை. இதனைச் சொல்வதற்கான காரணம் எனது அடையாளம் ஒருவகைப்பட்டதில்லை என்பதை விளக்குவதற்காகத்தான். இசையை இழந்து எழுத்துக்கு வந்தவன்தான் நீ என்று பலநேரங்களில் என் காதோரம் ஒருகுரல் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனது இயல்பு, எனது பயிற்சி, எனது திறனென அனைத்தும் எழுத்து வடிவாக அமைந்து விட்டபின் நான் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன், அதற்குக் காரணம் மரபான கூட்டு நினைவிலியும் நினைவும்தான்.
மொழி, எழுத்து, பேச்சு என்பன கவிதைவழியாகச் சமயத் தன்மை கொண்ட போதையூட்டும் தன்மையை அடைகின்றன. கவிதை என்பது குடிமரபு, குலமரபுச் சமூகங்களில் மந்திரம், சடங்கு, வழிபாடு என்பவற்றுடன் உறவுடைய பூசகத்தன்மை வாய்ந்த ஒரு நிகழ்வு. கூட்டுச் சமூகங்கள், நவீனச் சமூகங்களிலும்கூட கவிதைகள் சமய, மத, சடங்குத் தன்மையுடன் இயங்கும். கவிதையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தனிமனிதர் சடங்குத் தன்மையின், கூட்டுப் போதைத்தன்மையின் கவர்ச்சியினூடாக இழுத்துச் செல்லப்படுகிறார். ஒரு குலமரபின் பூசகர், குறிகாரர், மயக்கமூட்டும் நிகழ்த்துக் கலைஞர் போன்ற ஒரு தன்னடையாளத்தை எடுத்துக் கொள்கிறார்.
நவீன அமைப்பின் எந்திரவியல் ஊடுருவிய, கலப்புத் தமிழ் மரபு கொண்ட சமூகம் ஒன்றில் பிறக்க நேர்ந்து, எதிர்காலம் பற்றிய பாதுகாப்பின்மையின் அச்சத்துடன் வளர நேர்ந்த ஒரு சிறுவனாக இருந்த எனக்கும் அந்த நிலைமாற்றத் தன்னடையாளம் விருப்பமுடையதாக இருந்தது. எளிய, ஒதுக்கப்பட்ட ஒரு அடையாளத்திலிருந்து வெளியேறும் முயற்சியில் கவிதை என் முதல் தன்னுருவாக்கச் செயல்பாடாக இருந்தது.
“மறையா அழகே, மறையின் பொருளே குறையா ஒளியே குறைதீர்த்தீர்த்தருளே” என்பது போன்ற உருக்கமான பக்திப் பாடல்களை எழுதுவதில் தொடங்கி “நீ ஒரு காவியம் உன் விழிகளோ பாவிகம்” என்பது போன்ற நாடகப்பாடல்கள் வழி நான் உருமாற்றமடைந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே.
கவிதை எல்லாம் கலந்த ஒரு அடையாளச் செயல்பாடு என்ற வகையில் மிகச் சிறுவயதில் அது என்னை அரசியல் செயல்பாட்டை நோக்கி இழுத்துச் சென்றது. சாதி, குடும்பம், மரபு என்பவற்றின் வன்முறைகளை, கட்சி அரசியலின் வன்மங்களை நினைவு தெரிந்த நாளிலிருந்து அச்சத்துடன் கவனித்து வந்த எனக்கு மாற்று அரசியல் மிக இயல்பாகப் பொருந்தியது. இரண்டு வயதிலிருந்து எழுத்துக்கூட்டி வாசிக்கப் பழக்கப்படுத்தப்பட்டவன் நான், வாசித்துக் காட்டுவதை வித்தைபோலச் செய்து காட்டவைத்து “இந்தக் குட்டிச்சாத்தன் இந்த வயசுல என்னமா படிக்குது பாருங்க” என்று புளகிப்பார் என் தாத்தா. தினத்தந்தியை அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் மத்தியில் உட்கார்ந்து வாசித்துச் சொல்வது, அக்கா, சித்தி, அத்தைமார்களுக்கு சினிமா பாட்டுப் புத்தகம் கதைவசனம் வாசித்துச் சொல்லி செல்லம் பெறுவது, பாலர் பள்ளியில் அக்கா சொல்லித்தரும் வசனங்களைத் தவறின்றி மேடையில் பேசிநடித்து குழந்தைக் கலைஞனாக் ககைதட்டலும் பரிசும் பெற்றதென நினைவாற்றலும் மொழியும் சார்ந்த ஒரு பழகுமுறை எனக்குள் படிந்து போனது. ஊரில் பெரியவர்களுக்காகப் படித்துக்காட்டிய செய்தித்தாள்கள் வழி தெரிந்து கொள்ள வேண்டியவை, தெரிந்து கொள்ளக் கூடாதவை எனப் பலவற்றை வயதை மீறி நினைவுகள் பதிவு செய்து கொண்டிருந்தன. அண்ணாதுரை மறைவு, பாகிஸ்தானுடன்போர், வியட்நாம் யுத்தம், தந்தை பெரியாரின் நெருப்பு மிதிக்கும் பிரச்சாரம் என ஏதேதோ என் மூளைக்குள் பதிவாகிப் பயமுறுத்திய போதும் வாசிப்புப் பழக்கம் எனக்கு மயக்கமும் லயமும் தருவாதாக மாறியிருந்தது.
தாத்தாவின் மளிகைக்கடையில் ஒவ்வொரு முறை வந்து சேரும் பழைய புத்தகக் கட்டுகளைப் பிரித்து அடுக்கி பிடித்த புத்தகங்களைப் பதுக்கி வைப்பதும், அடுத்த கட்டு வந்து சேரும் வெள்ளிக்கிழமைகளுக்காக பெரும் கிளர்ச்சியுடன் காத்திருப்பதும், பின் நானே கடையில் வேலை செய்த அண்ணன்மாருடன் சென்று புத்தகங்களை வாங்கி வருவதும் இன்பம்சார் உளவியலில் விளக்கமுடியாத பகுதிகள். அணில் அண்ணா, அம்புலிமாமாவில் தொடங்கிய படிப்புநோய் கலைக்களைஞ்சியம், சோவியத் நாடு, யுனஸ்கோ கூரியர் என வண்ணமும் எழுத்தும் கலந்த உலகைத் தேடியலைந்தது. கல்கி, அகிலன், ந.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், மர்க்சிம் கார்க்கி என தாவிச் சென்று மாஸ்கோ முன்னேற்றப்பதிப்பகத்தின் வாசலை அடைந்த பொழுது எனக்கு 11-12 வயதுதான். உலக அரசியல் பற்றிப் பேசுவதில் தொடங்கி வாசிப்பு என்னை எழுத்து, விவாதம் என இழுத்துச் சென்றது.
சக்தி (வாலை) வழிபாடு கைவந்த ஒரு சித்த மருத்துவனாக என்னை உருவாக்கி விடவேண்டும் என்று விரும்பிய என் தாய்வழிப் பாட்டனார் பழக்கிய வாசிப்பும், மனப்பாடமும் தேவாரம், திருவாசகம், அருணகிரிநாதர், வள்ளலார், சித்தர் பாடல்கள், பாரதக்கதைகளைத் தாண்டியபோது அரசியல் உரையாடல்களுக்குள் என்னை மிக இலகுவாக இயங்க வைத்தது. பன்னிரண்டு வயதில் (1977 வாக்கில்) சில மூத்த தமிழ் இனப் பற்றாளர்களுடன் இணைந்து சுவர் எழுத்து எழுதியதற்காக காவல்துறையைச் சேர்ந்த இருவர் என்னைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில் வைத்து எச்சரித்து மிரட்டிப் “போராளியாக” மாற்றிய நிகழ்வை நண்பர்கள் நடத்திய ஒரு நாடகத்தில் இடைச்செருகலாகச் சேர்த்திருக்கிறேன்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் எராளமான பரிசுகளைக் குவித்திருக்கிறேன். நெற்றியில் திருநீறும் சந்தனப்பொட்டும் பளிச்சிட மேடையில் மழலைப் பேச்சாளனாக “கடவுள் என்பது பொய் கல்வி அறிவே மெய்” என்ற தலைப்பில் பேசி முடிவில் “எனது நெற்றியில் உள்ள திருநீறு பெரியவர்கள் கட்டாயத்தால் அணிந்திருப்பது, அதுவும் இன்னும் சில நாட்களுக்கு” என்ற உருக்கமான பின்குறிப்பால் சிலரைக் கண் கலங்க வைத்திருக்கிறேன். சில ஆண்டுகள் மேடைகளில் புரட்சிக் கவிதைகளின் புயலாய் வீசியிருக்கிறேன், இன்றைய இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை அமைப்பாளர் நண்பர் பொதினிவளவன் என்னைத் தன் பாசத்திற்குரிய நண்பனாக பார்க்கத் தொடங்கியது அந்தக் கவிதைகளின் காலத்தில்தான், அவரும் என்னைப் போல அன்று தினம் ஒரு கவிதை எழுதும் பழக்கமுடையவர். என் கவிதைகள் கையெழுத்துப் படியாகவே பலரின் வியப்புணர்வாக படிந்திருந்தது. இவை எல்லாம் எனது பிள்ளை விளையாட்டுகள் மட்டும் அல்ல அரசியல் உருவாக்கத்திற்கான போராட்டங்கள்.
எனது ஒவ்வொரு நகர்விலும் மாற்றத்திலும் எதிர்ப்பை, ஒதுக்குதலை, வெறுப்பைச் சந்தித்து வெளியேறிக் கொண்டே இருந்திருக்கிறேன். கடவுள், சாதி, வர்க்க ஒடுக்குதல், ஆணதிகாரம் என்பவற்றை மறுப்பதும் எதிர்ப்பதும் தின வாழ்வில் தொடர் தண்டனையை பெற்றுத் தரும் என்பது மாற்று அரசியல், விடுதலை அரசியல் பழகிய அனைவருக்கும் தெரிந்த நடப்பியல் உண்மை. இதனைச் சொல்லும் இன்று இந்த தண்டனைகளை ஏற்று அதுதான் எனது மாற்று இருப்பு என வாழ்வதுதான் எனது அடையாளம்.
இந்த இடத்தில்… நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன். எழுத்தை, சிந்தனையை வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம்.
தமிழின் “எழுத்துலகம்” அல்லது இலக்கியக் களம் என்பதற்குள் வருவது என்றால்… எனது எழுத்துக்கள் பதிப்பிக்கப்படுவது, அவை சிலரால் படிக்கப்படுவது, சிலரால் அவை விவாதிக்கப்படுவது, பலரால் தாக்குதலுக்கு உள்ளாவது, ஒரு எழுத்தாளனாக நான் அறியப்படுவது என்ற சில படிநிலைகள் இதில் உண்டு. எனது எழுத்துக்கள் அச்சானது ஒரு திட்டமிடப்பட்ட விபத்து, வேறு சிலரின் திட்டமிடுதலால் நான் எதிர்கொண்ட விபத்து. நானாக எனது எழுத்துக்களை வெளியிடுவதாக இருந்திருந்தால் சில ஆண்டுகள் கழித்து வேறு ஒரு நெடும் படைப்பு வழி வெளிவந்திருப்பேன். சிலவற்றை எழுதுவது சில மாதங்கள் வைத்திருந்து அவற்றை எரித்து விடுவது என்ற ஒரு பழக்கம் எனக்கு இருந்து வந்தது. இதற்கிடையில் சிலர் அவற்றைப் படிப்பதும் உண்டு.
அப்படி ஒரு முறை எனது சில நெடுங்கவிதைகளைப் (எதிர்க்கவிதை) படித்த எனது அன்றைய நண்பர் முனியாண்டி தன் வாழ்வின் புனிதப் பணியாகக் கொண்டு அவற்றை அச்சாக்கும் முயற்சியை மேற்கொண்டார். அவர் அப்போது சிறுபத்திரிகைகள், இலக்கிய பத்திரிகைகள் என்று அறியப்பட்ட வட்டத்தில் தன் வசைக் கடிதங்கள் மூலம் வெறுக்கப்பட்ட ஒருவராக, சிலரால் ஒதுக்கப்பட்ட ஒருவராக இருந்தார். புதுச்சேரியில் பணியிட மாற்றம், நீண்டகால விடுப்பு, அச்சகம் தொடங்கும் முயற்சி இவற்றிற்கிடையில் தமிழ் இலக்கிய உலகின் பழமைவாதத்தை, பிற்போக்குத்தனத்தை எதிர்க்கவும் பிற்போக்கு-முற்போக்கு இரண்டின் மரபுத்திமிரை ஒடுக்கவும் ஒரு பத்திரிகை வேண்டும், தன்னை ஒதுக்கிய அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் எழுத்துக்களை அதில் வெளியிட வேண்டும் என்றெல்லாம் இரவு பகலாக என்னுடன் இணைந்து திட்டமிட்ட அவர் எனது எழுத்தில் இடம்பெறும் “கிரணம்” என்ற பத்திரிகை ஒன்றின் பெயரையே வைத்து பத்திரிகையைத் தொடங்கினார். அது பத்திரிகை அல்ல பத்திரிகை வடிவில் வந்த எனது நெடுங்கவிதைகள். நான்கு வெளியீடுகள் வந்தன. 1983 முதல் 1986 வரை எழுதப்பட்ட நெடுங்கவிதைகள். 18 வயது முதல் 21 வயது வரை எழுதப்பட்ட எனது நெடுங்கவிதைகளில் நான் எரித்தவை போக மிஞ்சியவற்றில் சில படைப்புகள் அதில் வெளிவந்தன. முன்னாள் நண்பர் முனியாண்டி தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று என்று அதனைக் குறிப்பிடுவதாகப் பின் நண்பர் ஆபிதீன் வழி அறிந்தேன். அவர் தவறு செய்வதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பழக்கம் உடையவர். நான் செய்த பெரிய தவறுகளில் ஒன்று எனது எழுத்துக்களை அவரிடம் தந்தது என்று நானும் கூறலாம், தவறுகள் வழிதானே கற்கிறோம். ஆனால் அப்போது நான் அவருக்கு ஒரு கருத்தியல் போராளி. அவரிடம் வாதம், விவாதம் என யார் வந்தாலும் “வாங்கய்யா பிரேம் கிட்ட பேசி நீங்க செயிச்சா நான் உங்களுக்கு அடிமையா இருக்கேன்” எனச் சவால் விட்டுப் பல களங்களைக் கண்டவர் அவர். அதற்காக அவருடைய நூலகத்தை எனக்குத் திறந்து விட்டவர், ஒரு அச்சகம் தொடங்கி தமிழின் எழுத்து மரபையே மாற்றிவிடலாம் என்ற கனவுடன் என் சைக்கிளில் பின்னால் அமர்ந்து ஒரு ஆண்டு முழுக்க அலைந்தவர் அவர், பசிக்கும் பொழுது மாட்டுக்கறியும் இட்லியும் வாங்கித்தந்து இரவு பகல் பாராது பேசச் சொல்லிக் கேட்டவர். அவரிடம் எப்போதும் ஒரு குறிப்பேடு இருக்கும், சுருக்கெழுத்து அறிந்த அவரால் வேகமாகக் குறிப்பெடுக்கவும் முடியும். என் முன்னுரை இல்லாமல் தன் முதல் கதை நூல் வெளிவராது எனச் சொல்லிக் காத்திருந்தவர் இப்படி எத்தனையோ நிகழ்வுகள்… அரசியல் செயல்தேக்கமும் தோழர்களின் மறைவுகளும் என்னைக் குழப்பி அலைக்கழித்த நிலையில்தான் நான் அன்று “பிரேதா” என்ற பெயரில் அறியப்பட்டிருந்தேன். நான் அன்று மார்க்சியப் பற்றுள்ள (பற்று என்பது அனைத்துப் பொருளிலும்) ஒரு சர்ரியலிச எதிர்க்கவிதையாளன், எதிர்க்கலாச்சாரம், பெண்ணியம் என்பவை எனது உளவியல்புகளாகப் படிந்து போயிருந்தன.
இந்தத் தளத்தில்தான் நான் நுண்ணரசியல், உடல்சார் அரசியல் பற்றிய இடையீடுகளுடன் எனது எழுத்துக்களை, விவாதங்களை முன்வைக்கத் தொடங்கினேன். “கிரணம்” பகுக்கப்பட்டு அது முன்வைத்த அரசியல்-அழகியல் இனி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் “நிறப்பிரிகை” என்ற பெயரை ஒரு பத்திரிகைக்கு அளித்து குழுவாக இணைந்து செயல்படத் தொடங்கினேன். மாற்று அரசியல், விடுதலைக் கருத்தியல்கள் என நான் அடையாளப்படுத்தும் சிந்தனைத் தொகுப்புக்கான முயற்சிகளாகவே அவை இருந்தன. மாற்று அரசியலுக்கான குழுக்களுடன் தொடர்ந்த உரையாடலும், இயக்கம் கட்டுவதற்கான முயற்சிகளும் அவ்வப்பொழுது முடிவதும், தொடருவதுமாக இருந்து வருவது எனது எழுத்துக்களை அறிந்த யாருக்கும் தெரிந்த ஒன்று.
பெண்ணிய, தலித்திய, சூழலியல் அரசியல் என்பவற்றின் கூறுகளைப் புரிந்து ஏற்ற மாற்று அரசியல் தளத்தில் இயங்கக்கூடிய மார்க்சிய அறிவுக்களத்தை பன்மை நவீனத்துவம் என நான் இன்று அடையாளப்படுத்துகிறேன். இதில் விளிம்பு நிலை அரசியல், இனவிடுதலை அரசியல், அடையாள அரசியல், மனித உரிமை அரசியல், என்பவை செயல் வடிவில் இணைந்துள்ளன. எழுத்து ஒரு நுண்ணரசியல் செயல்பாடாக மட்டுமின்றி அது அறிவுருவாக்க அரசியலாக, அரசியல் மையங்களையும், மையஅறிவுகளைகளையும் உடைக்கும் செயலாக உள்ளது என்ற பின்நவீனத்துவப் புரிதல் உள்ளதால் எனது எழுத்துக்களும், ஆய்வுகளும் அரசியல் செயல்பாட்டின் பகுதிகள் என நம்புகிறேன்.
இதற்குப் பிறகும் நீங்கள் ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “அரசியல் செறிந்த புனைகதையாளன்” என்ற அடையாளம்தான் எனக்குள் மிக இயல்பாகவும், இலகுவாகவும் பதிவாகியுள்ளது.