வரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை – பிரேம்

வரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை

1. மறதியின் அரசியலும் நினைவுக் குழப்பங்களும்

ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் இழப்புகளைச் சந்தித்திருப்போம். பெற்றோரை, உடன் பிறந்தோரை, உற்றார் உறவினர், நண்பர்கள், அறிந்தோர், தெரிந்தோர், அக்கம்பக்கத்தில் உள்ளோர், ஊரார் எனப் பலவகையில் நம்முடன் தொடர்புடையோரை ஒவ்வொரு கட்டத்திலும் இழந்து கொண்டே இருப்போம். இந்த இழப்புகள்  அனைத்தும் ஒரே போன்ற அதிர்ச்சியை, துயரத்தை, வலியை, திகைப்பை, ஆதரவற்ற நிலையை நமக்கு வழங்கி விடுவதில்லை. தன் வாழ்வின் முழு ஆதாரமுமாகக் கொள்ளப்பட்ட ஒருவரை இழந்து நிற்கும் தனிமனிதர்  ஒருவருடைய ஈடுசெய்ய முடியாத இழப்பை அவரைத் தவிர சமூகத்தில் யாரும் அதே வகையில் உணர்ந்துவிட முடியாது. அது தேவையும் இல்லை என்பது தான் நடப்பியல் உண்மை. ஆனால் எந்த ஒருவடைய இழப்பையும், மறைவையும் வேறு ஒருவரால் பதிலீடு செய்து விடவோ பகுதியாக நிறைந்துவிடவோ முடியாது என்பதும் தனிமனித நிலையில் மிகவும்  பொருளுடைய ஒன்று.

சமூகத்தைப் பொறுத்தவரை  யாருடைய மறைவும் மேலும் ஒரு உறுப்பினருடைய மறைவே. வாழும் போது அவர் வகித்த பங்கு, அவர் பெற்றிருந்த சமூக இடம், அவருக்கு வழங்கப்பட்டிருந்த சமூக அரசியல் அடையாளம், அவர் தனது வாழ்வின்போது செய்த செயல்கள் என்பவற்றைப் பொறுத்து அவரது மறைவு வரலாற்றிலும் சமூகக் கூட்டு மனநிலையிலும் ஒரு குறியீட்டு இடத்தைப் பெற முடியும்.  ஆனால் மறைவு என்ற வகையில்யில்கூட அது இருப்பு குறித்து பேசும் ஒரு செயலாகவே உள்ளது. கருத்துருவ, குறியீட்டு இருப்பாக ஒருவரை மாற்றுதல் என்பது சமூகவயமாக்கம் மற்றும் சடங்காக்கம் என்ற நிகழ்வின்  ஒரு பகுதியே. அது  இருப்பைப் பற்றியே பேசுகிறது,  இனியானதுடன் இருந்த ஒன்றை அது உறவு படுத்துகிறது.

சமூக, சடங்கு, சமய, அரசியல், கலையிலக்கிய இயங்கு தளங்களில் மரணம் என்பதை மடைமாற்றம், உருமாற்றம், தளமாற்றம், குறிப்பீட்டு மாற்றம் செய்யமுடிந்த அளவுக்கு தனிமனிதத்தளத்தில் செய்ய முடிவதில்லை. ஏனெனில்  மரணம்  என்பதுடன் ஒருவர்  குறித்த மொழி முற்றுப்  பெற்றுவிடுகிறது.   நிகழ்காலம், எதிர்காலம்  என்ற    காலக்குறிப்போ, கீழ்மேல், இடவலம் என்ற இடக்குறிப்போ இன்றி எப்படி மொழி இயங்க முடியும்.  பெயர்ச்சொல் மட்டுமே கொண்டு ஒருகதையை, பேச்சை எப்படித் தொடர முடியும்.  கடந்த காலம் என்பது வெறுமையே,  மொழி முடிந்த இடத்தில் ஒருவருடைய இருப்பும் முடிந்து விடுகிறது. அப்போது உலகில் நமக்கு எல்லாமுமாக இருந்த ஒருவடைய இருப்பே நமக்கு எதிராக, மொழி முடிந்த இடத்தில் நம்மை நிறுத்தி விடுகிறது. மிக மிக நேசித்த ஒருவருடைய மறைவு மிகமிக வெறுக்கத்தக்கதாகும் பொழுது மறைந்தவர் அவரை நேசித்தவருக்கு பகை மொழிப்புலத்தில் இடம் பெற்றவராகி  இயலாவெறுப்பு, மறதியற்ற மறதி, நினைவுகூறத் தகாத  காலம் என்பவற்றின்  குறியீடாக  மீந்து  நிற்கிறார்.

இந்தக் கையறவு நிலை பித்துநிலை கொண்டது,  “உன்னை இழந்து நிற்கும் இந்தத் துயரத்தை உன்னிடமின்றி யாருடன் பேச முடியும்”  என்பது போன்ற ஒருமுரண்நிலை.  இந்த நிலையைச் சடங்குகள், சமய நம்பிக்கைகள், மறுபிறப்பு, அரூப உடல், எங்கும் நிறைந்த நிலை, பதிலீட்டுக் குறிப்பொருள்கள் எனக் கற்பனைகள் மூலம் கையாள்வதைத் தவிர தனிமனிதர்களுக்கு வேறு வழியில்லை. எல்லாச் சமயங்களும் மரணம் பற்றிய மர்மத்தையே  தமது அடிப்படை வலிமையாகக் கொண்டுள்ளன.  பிறப்பை விட இறப்பைக் கையாள்வதன் உத்திகளே  மதங்களை எப்போதும்  செயலாற்றல்  உடையனவாக வைத்திருக்கின்றன.

இதே மரணத்தை அரசியலும் வரலாறும் கையாளும் வழிமுறைகள் வேறுபட்டாலும் மனிதர்கள் மீது அவற்றிற்குள்ள முழுக் கட்டுப்பாடும் மரணத்தை முன் நிபந்தனையாகக் கொண்டே இயங்குகிறது. இதனை உடல் மீதான கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உடல் – உயிர் உறவைக் கையாளும் உத்தி மீதான கட்டுப்பாடு என்று குறிப்பது சரியாக  இருக்கும். உயிர் நீக்கும் உரிமையைக் கையாளும் உத்திகளே அரசியலின் அடிப்படை என்பது மிக நுண்மையான தளத்தில்  நமக்குப் புரியவரும்.  உடல் – உயிர்,  உயிர்ச்செயல்-குறியீட்டுச்செயல் என்பவற்றைக்  கட்டுப்படுத்தும் வடிவமைக்கும் தீர்மானிக்கும் செயல்  இயந்திரமாக அரசியல், அரசு, அமைப்புகள், அறிவுக்கட்டுமானங்கள் என்பவை  நம்முன்  நிற்கின்றன.

இவற்றின் அளவீட்டுத் தரப்படுத்தல், வரிசைப்படுத்தல், வகைப்படுத்தல், பயன்மதிப்பு அடையாளம் என்பவற்றைக் கொண்டு தனிமனிதர்களான  நமக்கு இருப்பும் அதற்கான அர்த்தமும் வழங்கப்படுகிறது.  நமது இருப்பும்,  அதன் அர்த்தமும், உயிர்வாழ்வும், உயிர்நீப்பும் எதனால், எங்கு, எப்படி, எவர்மூலம், எந்தயெந்த காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றதோ அங்கே நமக்கான உரிமை கோரலை முன்வைக்கும்போது நாம் நமது அரசியலைத் தீர்மானிக்கிறோம், தேர்ந்தெடுக்கிறோம், திட்டமிடுகிறோம்.

இந்தத் திட்டமிடலும் தேர்ந்தெடுப்பும்தான் நமது அரசியல் செயல்பாடு. நமது இருப்பு பற்றியும்   பிறரின் இருப்பு பற்றியுமான  எல்லாச் சிக்கல்களும் இங்குதான் குவிந்து கிடக்கிறது.   இந்தச் சிக்கல்களைக் கையாளும்பொழுது நாம் தவிர்க்க முடியாமல்  உயிர்நீக்கம்,  உடல் அழிப்பு என்ற மைய விசையைக் கையாள்பவர்களாக  மாறிவிடுகிறோம். இந்த மையவிசை புராதனத் தொன்மைநிலை உத்திமுறைகளுடன் உறவுடையது. இந்த உத்தி முறையை நாம் இன்னும் கடந்து விடவில்லை.

அந்த உத்திமுறையைப் மிகப்பல வடிவங்களில் பெருக்கி, விரித்து, வலிமையாக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.  ‘போர்’ என்ற அந்த புராதன உத்திமுறை மிக ஆற்றல் வாய்ந்த அழகியல் உருவங்களால் பெருக்கப்படுவது நிகழ்ந்து கொண்டே  இருக்கிறது.  இந்த அழகியல்’ தனி மனித இழப்புகளைப் பொருளற்றதாக்கி  விடுகிறது.      தன் பிள்ளையை குண்டு வீச்சில் பறிகொடுத்தத்தாயின் கதறல் அரசியல் பின்புலத்தில், போர் அழகியல் பார்வையில் வெறும் விலங்குத் தன்மை உடைய, அரசியல் நீக்கம்  செய்யப்பட்ட, பித்துநிலை கொண்டதாகப்  பொருள்படுத்தப்படுகிறது.

இந்தக் காட்சி இன்று மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் தின நிகழ்வாக மாறியிருக்கிறது. அதே சமயம் அமெரிக்காவிலோ, வேறு ஒரு அய்ரோப்பிய நாட்டிலோ ஒரு கட்டிடம் தகர்க்கப்படுதல் என்பதும், ஒரு எதிர்ப்பு ஊர்வலம் என்பதும்  பூகோளம் சார்ந்த அழிவிற்கான குறியீடாகி விடுகிறது. ‘மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதம்’ என்பது வெள்ளை இனத்திற்கு புறத்தே உள்ள ஒவ்வொரு அடையாளப்படுத்தலுடனும் தொடர்புபடுத்தப் படுகிறது.  இன்று அரசுகளின் முதல் கடமை பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காப்பது என்ற தளத்திற்கு  ‘உலக அரசியல்’ நகர்த்தப்பட்டுள்ளது.

ஆனால்  ‘பயங்கரவாதம்’ என்ற இந்த உருவமற்ற தாக்குதலின் தொடக்கம், அடிப்படை இன்றைய நவீனஅரசுகள் மற்றும் போர் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதும் நவீன அறிவியல் என்ற அறிவுக் கட்டுமானத்தின் விளைபொருள் என்பதும் உலகமேலாதிக்க ஒருமைப்படுத்தலின் பின்விளைவு என்பதும் விளிம்பு நிலை அரசியல் சொல்லாடமாக மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

இன்று எல்லாவித மறுப்பு, எதிர்ப்பு, மாற்று அடையாள அரசியல் சொல்லாடல்களும் ‘பயங்கரவாதம்’ என்ற முனைப்படுத்தப்பட்ட எதிர்ச் சொல்லாடலுடன் உறவுபடுத்தப்பட்டு அழித்தொழிப்பிற்கு உரியவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

அப்படியெனில் இனியான மக்கள்சார், மாற்று அரசியல் சொல்லாடல்கள்  மற்றும் செயல்முறைகள் எவ்வகையாக இந்தப் போர் அரசியலைக் கையாளப்போகின்றன? வன்முறை, எதிர்ப்பு, தற்காப்பு,  எழுச்சி, விடுதலைப் போராட்டம், மக்கள்போர், அடையாள அரசியல், வர்க்கப் போராட்டம், விடுதலை அரசியல் என்பவை  ‘உலக அரசு- ராணுவ பங்கரவாதச் சூழலில் எவ்வகையாக மாற்று வரையறை பெறப் போகின்றன?   என்ற கேள்விகள்  நம்மைத் தாக்கத் தொடங்கி விட்ட சூழலில்தான் ‘ஈழம்’ என்ற வரலாற்று துயரமும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

இவை குறித்த கேள்விகள் மற்றும் மறு ஆய்வுகளுக்கு எந்த  அவகாசமும் இன்றி ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த இனப் படுகொலையின் தனிமனித இழப்புகள்    குறித்து எந்த வித  மொழிச் செயலும் மேலும்  ஒரு வன்முறையாக, தாக்குதலாகத்தான் இருக்கும் என்பது நமக்குப் புரியத் தொடங்கும் அதே வேளை, ஒரு இனம் சார்ந்த, மொழி சார்ந்த அடையாள அரசியல் மற்றும் தன்னாட்சி அரசியல் என்ற வகையில்  தொடர்ந்தும் பேசப்பட வேண்டியதாக, மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக, மறுவிளக்கத்திற்கு  உள்ளாக்க வேண்டிய தாகவே உள்ளது.

தமிழ்மொழி, இனம், பண்பாடு என்பனவற்றை அடிப்படையாக வைத்து கட்டப்பட்ட ஒரு அரசியலின் மூலம் வளர்ந்து, விரிவடைந்து துயரங்களை நிகழ்த்திச் சிதைத்து போன ஒரு வரலாற்றுத் தளம் என்ற வகையில் உலக அரசியல் பின்புலத்தில் ‘ஈழப்போர்’ என்பது அணுகப்படுவதற்கும் தமிழக சமூக, அரசியல், பண்பாட்டுத் தளத்தில் “ஈழத்துயரம்” என்பது அணுகப்படுவதற்கும்  அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உண்டு. இது இழப்புகள் பற்றிய அரசியல்,  இனம்-மொழி என்ற கட்டமைப்பு மூலம் பிணைக்கப்பட்ட, இருப்பு மற்றும் அழிப்பு என்பதன் அரசியல். அதனால் உலக அரசியல் வல்லுனர்களும், போர் முகவர்களும், இந்திய உளவுத்துறை அறிஞர்களும், நடுநிலை ஊடகவியலாளர்களும், அமைச்சர்களும் இந்த அழிப்பை, துயரை அணுகுவதுபோல ‘தமிழ்’ என்ற களத்திற்குள்ளிருந்தும் இதனை அணுக முடியாது. ஏனெனில் தன்னிலை உருவாக்கம் என்ற அரசியல் செயல்பாட்டுடன் உறவுடையது இது. தமிழ்த் தன்னிலை, தமிழ்த் தன்னடையாளம் என்பவை உருவாகும் களத்தில் அரசியலுக்கு என்ன இடம் உண்டோ அதே இடம்  ‘ஈழம்’ பற்றிய அறிதல், அணுகுமுறைகளுக்கும் உண்டு.

ஒவ்வொரு சமூகத்திற்கும் இரு முனைப்புப் புள்ளிகள் தேவை. ஒன்று அச்சமூகத்தின் பெருந்திளைப்பு, மற்றது பெருந்துயரம். இவற்றின் கூறுகள் பண்பாடுகளின் ஒவ்வொரு இழையிலும் படிந்தே இருக்கும். இந்த உணர்வுப் புள்ளிகளுடன் தனிமனிதர்கள் பிணைந்தும் விலகியும் தமது உளவியல் அடையாத்தைக் கட்டிக்கொள்ள முடியும். இவை வெவ்வேறு விகிதத்தில் கலந்தும் பிரிந்தும் சமூக உளவியலை உருவாக்கும் தன்மை உடையன.

அவ்வகையான ஒரு சமூக உளவியல் உருவாக்கத்துடன் இனிவரும் காலத்தில் தொடர்ந்தும் இணைந்து இயங்கப்போகும்  நினைவு மற்றும் துயரத் தொகுதியாக வடிவம் கொண்டிருப்பதுதான் ‘ஈழம்’ என்ற கனத்த உருவகம்.  அதே சமயம் இதனை மறதிக்குள் புதைக்க முனையும்  உருவழிப்புச் சொல்லாடல்கள் தமிழ்ச் சூழலில் பெருகும் என்பதும், கடந்த இருபது ஆண்டுகளாக அவ்வகை உருவழிப்பு, நினைவு மறைப்புச் சொல்லாடல்கள் அதிகம் பெருகியுள்ளன என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிவை என்றாலும்  அரசியல் களத்தில், பண்பாட்டு அரசியல் உருவாக்கத்தில் இலக்கிய மாற்றுச் சொல்லாடல்களில் இந்தத் ‘துயர்சார் அரசியல்’ (Politics of Agony)  இடம்பெறவில்லை  என்றால் இனி தமிழ் மொழியில் அரசியல், அடையாள, தன்னிலைக் கட்டுமானச் சொல்லாடல்கள் இல்லாமல் போனதாகவே பொருள்படும். இந்த மறதிக்கெதிரான அரசியலின் ஒரு பகுதியாகவும் ‘துயர்சார் அரசியல்’ குறித்த நினைவுக் குழப்பங்களின் சில பகுதிகளாகவும் இவற்றைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

2. மாறுதல் காலப் பயங்கரங்கள் (Horrors of Transition)

உலக அளவிலான தனித்தனி நிலங்களும் சமூகங்களும் அரசுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, கலக்கப்பட்டு, குழப்பப்பட்டு புதிய வகையான அரசுகள், ஆட்சிப் பரப்புகள் உருவாக்கப்பட்ட காலனிய கால மாறுதல்கள் என்பவை உலக வரலாற்றில் பயங்கரங்கள் நிறைந்த பல புதிய அத்தியாயங்களைத் தோற்றுவித்தன. நில ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, இன மேலாதிக்கம் என்பவற்றின் மூலம் நிலவியல்சார் பண்பாட்டுச் சமூகங்கள் அடிமை நிலைக்குத்  தள்ளப்பட்டன. தமக்கு முற்றிலும் அன்னியமான ஒரு நாடு, இனம், அரசு தம்மீது ஆதிக்கம் செய்தல் என்பதன் புதிர் பல சமூகங்களில் அச்சத்தையும், உள்ளார்ந்த பயங்கரம்சார் உளவியலையும் தோற்றுவித்தன.

இந்தக் காலகட்டத்தின் மாற்றங்கள் அனைத்தும் உலகின் நிலம்சார் சமூகங்களின் மீது அவற்றின் அனுமதி இல்லாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்  பல கட்டமைப்பு மாற்றங்களையும் உண்டாக்கின. நவீன அரசுகளும் நவீன அறிவமைப்புகளும் நவீன மதிப்பீடுகளும்  நவீன நிறுவனங்களும் ஒவ்வொரு சமூகத்தையும் அவற்றின் மயக்க நிலையூடாகவே  ஊடுறுவி அடிப்படைகளைத் திருத்தி அமைத்துவிட்டன.

இந்த மாறுதல்களை உலக ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தியதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களும், கொடூரங்களும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வரலாற்று நினைவுகளாக இருப்பது ஒரு புறம்,  தம்மை ஒடுக்கிய சமூகங்களின் அறிவும், அமைப்புகளும்  தமக்குள் ஊடுருவி இயக்கிக் கொண்டிருப்பதன் முரண் மறுபுறம் என்ற ஒவ்வாமை மற்றும் பொருந்தாமை  அடிமைப்பட்ட நிலங்களின்  ஊனமுற்ற உளவியலாக மாறியிருந்தது.  இந்த மாறுதல்காலப் பயங்கரங்களை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக எதிர் கொண்டு தனதாக்கம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அதில் ஒன்றுதான் நிலங்களுக்குள்ளான உள்மோதல்கள். சுயச்சமூக குற்றச்செயல்கள், தன்னழிவுச் செயல்பாடுகள், சமூகப் பொருத்தமின்மை, தனிமனிதர்களை உள்ளடக்காமை என வெவ்வேறுவித வன்முறை வடிவங்களும் இந்த மாறுதல்காலப் பயங்கரங்களில் அடங்கும். அவ்வகையான மாறுதல் கால பயங்கரங்களின் ஒரு பகுதியாகவே இலங்கை மண்ணில் நிகழ்ந்த ஈழப்போர் என்பதும் அமைந்து விட்டது.  நவீன கால ஓருலக அமைப்பில் தன் அடையாளத்தை முதன்மைப்படுத்தி தனக்கான மொழி, நிலம், நாடு என்பதை வடிவமைத்துக்கொள்ள முயன்ற ஒரு மக்கள் தொகுதியின் துயரமாக  அது இருந்து வந்தது.

தன்னை நவீனப்படுத்திக்கொள்ள உலக சமூகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வெறு  உத்திகளை வெவ்வெறு  செயல்வடிவங்களைக் கைக்கொள்கின்றன, போர் என்பதும் அவற்றில் ஒன்று. புராதனமானதும் அதே சமயம் புதிய உத்திகளை உள்ளடக்கியதுமான இந்தச்செயல் மாறுதல்காலப் பயங்கரங்களில் அதிக  பலம் மிக்கதாகவும், அதிக வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. இதனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இலங்கை மண்ணின் தமிழ்ச் சமூகம் நேரடியாக ஒரு நவீனத் தன்மையை அடைந்து விடுகிறது. மாறுதல் காலப் பயங்கரத்திற்கு உட்படும் ஒரு சமூகம் என்ற நிலையிலிருந்து பயங்கரத்தில் பங்கெடுக்கும் சமூகமாக அது மாற முயற்சிக்கிறது.  இதன் மூலம் உலக அரசியலில் தனது அடையாளத்தை அது வலிந்து உருவாக்கிக் கொள்கிறது.

இலங்கை அரசு சிங்கள மொழி-இன அடையாளத்தை மையப்படுத்தித் தன் நிலத்தை, வரலாற்றை வரையறை செய்வதற்கான அடிப்படைகளை உருவாக்கிய உடனேயே தமிழ்ச் சமூகமும் தனது மொழி-இன அடையாள அரசியலுக்கு அதிக அழுத்தம் தரத் தொடங்கிவிடுகிறது.  இந்த  எதிர்மைகள் இலங்கை அரசியல் மற்றும் சமூக இயக்கத்தில் ஒவ்வொருவரையும் ஆயுதமயப்படுத்தும் செயலின் முதல் கட்டமாக அமைந்து விட்டன. மதம், மொழி, இனம் என வேறுபாட்டு அடையாளங்களின் போர்க்குணம் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களைத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. இது இரண்டு இனங்களுக்குமே மாறுதல் காலப் பயங்கரத்தை நிகழ்த்தும் பாத்திரத்தை ஏற்கும் நிலையை உருவாக்கி  விடுகிறது. சிங்களர் இனம், மொழி,  பௌத்தமதம்  என்பவை அரசால் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்ட நிலையில் ‘தமிழ்’ என்பது  அரசற்ற போர்க்  குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இங்கு சிங்கள அரசும் இராணுவமும் தமிழ் மக்களை உள்ளடக்காமல் அடிமை நிலையில் வைத்து பணிந்து வாழும்  மக்களாக அவர்களை உறுதிப்படுத்தும் செயல்முறைகளைக் கையாண்டதன் மூலம் போராளிகளின் நேரடி எதிர்க்களமாக தம்மை நிறுத்திக் கொண்டன.  மாறுதல்காலப் பயங்கரத்தின்  மிக   அவலமான பகுதி  இது.

இந்நிலையில் தமிழ்நிலம், தமிழ்த்தேசம் என்பவை உயிர் வாழ்க்கையுடன் மட்டுமின்றி மனித அடையாளத்தின் ஒரு பகுதியாக உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இவை அனைத்துமே உருவகச் செயல்பாடுகள் என்றாலும் போர் என்பதை நேரடி உத்தியாக முன்வைத்த ஒரு அரசின் முன் கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற நிகழ்வியல் துயரமாக மாறிவிடுகிறது. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மதிக்கப்படாத நிலையிலும் மீறப்பட்ட நிலையிலும் உருவக நிலைகள் உடைந்து உடல் அழிப்பு நிலையை அடைந்து விட்டது. (1957-இன் பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம், 1965-இன் டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவை அவமதிக்கப்பட்டன.)

1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தமிழர்களை, தமிழ்க் குழுக்களை போர் இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன. இலங்கை அரசு தன்னை தமிழர்களுக்கானதாக வைத்துக்கொள்ள முடியாததுடன் தமிழர் அழிப்புக்கான நிறுவனமாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறது. அரசியல் பேச்சுவார்த்தைகளால், உள்ளடக்கும் அரசியல் ஒப்பந்தங்களால், ஆட்சிப் பகிர்வுகளால் தமிழர்களிடையே அடையாள உறுதியையும், உயிர்வாழும் உரிமையையும் பலப்படுத்தி இருக்க வேண்டிய இலங்கை அரசு ஆயுதங்களையே மையப்படுத்திய பொழுது தமிழர்களின் குழுக்களும் அதே உத்தியைக் கைக்கொள்ள வேண்டியிருந்து.

இந்தப் போர்ச் சூழல் ‘இடைநிலை அரசியல் சொல்லாடல் எதனையும் உருவாக்க முடியாமல் போனதால் போராளிகள் என்போர் தம்மை அரசுக்கு இணையாக எதிர்நிலைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. அர்த்தம் அற்ற, வெற்றடக்கம் கொண்ட, பணிந்து போகும் ஒரு உயிரியாக இருப்பதை விடவும் ஒரு போராளியாக  இருப்பது அர்த்தமுடையதாக, பெருமை தருவதாக, அதிகாரத்தை வழங்கக் கூடியதாக தோற்றம் தரத் தொடங்கியது.

இதற்கு முன்பே உலக அளவில் புரட்சிகள் என்பவை மனித நிலைமாற்றங்களின் களமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆயுதம் தாங்கிய தனிமனிதர்கள் குழுக்களாகவும் படைகளாகவும் மாறும்போது கோட்பாட்டு வலிமை உடைய, அர்த்தம் நிறைந்த மனிதத் தொகுதிகளாக வடிவம் பெறுகின்றனர்.   இது அரசுகளுக்கு இணையான ஒரு தோற்றத்தை தரக்கூடியது. தனிமைப்பட்ட, சிதறுண்ட மனிதர்களுக்குப் பதிலாக ஒன்றிணைந்த, தொகுதியான,  செயலுடைய, மகிமைப்பட்ட உறுப்பினர்களின் உருவாக்கம் இங்கு நிகழ்கிறது.

அரசு ராணுவங்களில் இடம் பெறுவோர் தேசபக்தி, தியாகம், புனிதக் கடமை என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் பெறும் நிலையில் போராளிகளாகத் தம்மை மாற்றிக் கொண்டோர் இலட்சியம், புனித இலக்கு, விடுதலைக்கான  தியாகம் என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் அடைகின்றனர்.  இது தாமே உருவாக்கிக் கொண்ட உயர்வாக்கம்  என்பதைவிட தமக்குப்பின் உள்ள மக்களால் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்ள போராடச் சூழல் அவர்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருகிறது. இந்த அடையாளம் ஒரு வகையில் மீறப்படவோ, மீள இடம்அளிக்கவோ முடியாத நிலையை அடையக் கூடும். இந்தச் சிக்கல்தான் ஈழப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் பின் திரும்பிப்போக முடியாத நிலையை உருவாக்கியது.

மாறுதல் காலப் பயங்கரங்கள் என்பவை ஒவ்வொரு சமூகத்தையும் வெவ்வேறு வகையில் பாதிப்பதுண்டு. அரசு, நிர்வாகம், நீதித்துறை, பொருளாதாரக் கட்டுமானம் என்பவை மாறிவிட அதற்குட்பட்ட மக்களோ வேறு வகை  சமயநம்பிக்கை, பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டவர்களாகவே இருந்தால், இவ்வகை பயங்கரம் வெளித்தெரியாத உள்ளடங்கிய உடைவுகளை ஏற்படுத்தும்.  பிரஞ்சு புரட்சி போல ஒரே அமைப்புக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகள் மோதி உடைத்துக் கொண்டு மாற்று வடிவம் பெற முயற்சிக்கும் போது ஏற்படும் பயங்கரங்கள் வெளிப்படையான நிகழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கும். அந்த அமைப்புக்குள்ளாகச் சில பகுதிகளை உடைத்து நீக்கி மாறுதல்களைச் செய்வதன் மூலம் கோட்பாட்டு அடிப்படைகள் மாறும்.  ‘விஞ்ஞானச் செயல் திட்டங்கள்’ ஒரு சமூகத்தின் மீது கவிழும் போது அவற்றின் மீதான புரிதல் இன்றியே அவற்றிற்கு உட்பட்டு பிறகு அம்மாற்றங்களைத்  நமதாக்கிக் கொள்ள  நேரலாம். இந்தச் சூழலிலும் கூட மாறுதல் காலப் பயங்கரங்கள்  உள்ளார்ந்து நிகழவே செய்யும்.

ஈழப் போராட்டம் என்பது நவீன தேசம், அரசு, நிர்வாகம், ஆட்சி என்ற மாறிய வடிவங்களால் சூழப்பட்ட ஒரு சமூகத்திற்குள் நிகழ்ந்த மாறுதல்கால அமைதியின்மை, சமநிலைக் குலைவு.  அதனை இலங்கை அரசு பொறுப்பற்ற வகையில் கையாண்டதும், வன்முறையால் அதனை புதைத்துவிடலாம்  என்று முடிவு செய்ததும் மாறுதல் கால பயங்கரத்தை போர்க்கால பயங்கரம் நோக்கித் தள்ளியது.  அதே வன்முறை அதனை பயங்கரமானதும் துயர் நிரம்பியதுமான ஒரு முடிவுக்குக் கொண்டு செலுத்தியது.  தற்போது மீண்டும் ஒற்றைத் தேசிய அரசு, பலமான நிர்வாகம், வலிமையான இராணுவம், ஒன்றுப்பட்ட நாடு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடையில் எல்லாவற்றையும் இழந்த மக்கள்    தற்போது ‘உயிர்வாழ்க்கை’        என்பதை மட்டும் பெற்றவர்களாக   அரசின் கருணையின் கீழ்  வாழ வேண்டியவர்களாகி   உள்ளனர்.

இதுவரை கொல்லப்பட்ட  தமிழர்கள், போராளிகள், அரசுப் படையினர் எல்லோரும் இந்த மாறுதல்காலப் பயங்கரத்திற்கு பலியானவர்களாகின்றனர். கொல்லப்பட்டத் தமிழர்கள், போராளிகள் என்ற வகையில் இனி நினைவு கடந்த மறதிக்குள் புதைந்தால் தவிர மீந்திருப்பவர்கள் உயிர்வாழ முடியாது. இந்த நிலைகடந்த வலி, துயரம், இழப்பு, என்பவை ஒரு மரத்துப் போன நிலையை, பேதலித்த கூட்டு மனநிலையை உருவாக்கக்கூடியது.

இந்த மன நிலையின் வெளிப்பாடுகள் இனி தம் கடந்த காலப்போராட்டம் பற்றிய கசப்புணர்வாக வெளிப்படும். போராளிகள் மீதான வெறுப்பாக, தாம் கண்ட கனவின் மீதான அச்சமாக, தம்மைப் பற்றியே ஏதும் சொல்லமுடியாத மௌனமாக, செயலற்ற  ஒப்படைப்பாக  வெவ்வெறு வகைகளில் வெளிப்படும். எல்லா இலட்சியங்களின் அடிப்படையிலும்  எளிய மனித உணர்வுகளே  உள்ளன, இந்த எளிய அடிப்படை  உணர்வுகளே  எல்லா வரலாற்று  நிகழ்வுகளுக்குப் பிறகும் மீந்து நிற்பவை. தற்போது  “மீந்து நிற்கும்” இலங்கைத் தமிழர்களிடம் இருப்பவை அச்சங்கள், எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த  வெற்று மனித   நிலை.  இந்த  ‘வெற்றுமனித’  நிலையைக்    கூட ஒரு அரசு தனக்கு   வெளியில் உள்ள ஒரு மக்கள் தொகுதியின் அரசியலுடன் அடையாளப்படுத்தியே  அணுகும்  என்பதுதான்  இதில் உள்ள அவலம்.

அவர்கள் வெற்று மனித நிலை அடைந்த ‘தமிழர்கள்’ என்ற அடையாத்தையோ, அவர்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் தமக்கெனத் தனிநாடு கேட்ட ஒரு நிலப்பகுதியின் மக்கள் என்பதை அரசும் ராணுவமும் மறக்கப் போவதில்லை. இந்த அடையாளத்துடனேயே அவர்களுக்கான எதிர்காலம் திட்டமிடப்படும். அவர்களின் ஒவ்வொரு அசைவும் மற்றொரு விடுதலைப் போரின் தொடக்கமாக அமைந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடனேயே கவனிப்புக்குள்ளாகும். இந்நிலை  இன்னும் ஒரு வகையான மாறுதல் காலப் பயங்ரகங்களைக் கொண்டதாக இருக்கும்.  அதற்கும் தமிழ்ச் சமூகம் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் இது.

3. துயர் சார் அரசியல் (Politics of Agony)

எல்லா போராளிக் குழுக்களையும் ஈழப்பின்னணியில்  ஒன்றாகப் பார்க்க வேண்டிய நிலையை இப்போது அடைந்திருக்கிறோம். பல்வேறு இயக்கத்தினரும் இதனை ஏற்க மறுக்கலாம். ஆனால் ஒன்றை ஒன்று அழித்து பிறகு மீந்து நின்ற ஒற்றைப் போராளி அமைப்பும் அழிக்கப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியவர்களாகின்றனர். தமிழ் இனவிடுதலை, தமிழர்த் தாயகம் என்ற வகையில் எல்லா இயக்கத்தினரும் ஒற்றை இலட்சியத்திற்காகவே போராடினர். அணுகு முறைகள் வேறுபட்டாலும் எல்லாரும் ஒரே கனவு நோக்கியே தம்மைப் பலியாக்கினர். குழுக்கள், படைகள், முகாம்கள் என்பவை வேறுபட்டாலும் ‘இயக்கும் கருத்தியல்’ ஒன்றாகவே இருந்தது. தற்போது யாரும் இல்லை, தனிமனிதர்களைத் தவிர.  இந்த நிலையில் ‘போராளிகள்’ என்ற வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தவர்கள் எல்லோரும் ஒரு துயர்சார் அரசியலின் குறியீடுகள் ஆகின்றனர். இந்த போராளிப் பாத்திரத்தை அவர்கள் வகித்தபோதுகூட துயர்சார்  அரசியலின் பகுதியாகவே இருந்தனர்.

ஆயுதங்களால் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. “வரலாறு எம்மை விடுதலை செய்யும்” என்று அவர்கள் நம்பியிருந்தனர்.   இந்த ‘விளிம்பு நிற்கும் மனநிலை’அடைவதற்கு அல்லது   ‘இறுதிகட்ட  நிலைப்பாடு’ என்பதை  இவர்கள்  எடுப்பதற்கும் தம்   ‘உயிர்நீப்பு’ என்பதை முன்நிபந்தனையாகக் வைத்த “பகைஅழிப்பு” என்பதை நிர்ப்பந்தமாகக் கொண்ட ‘உயிர்க்கொலை’ அரசியல் உத்தியை இவர்கள் தேர்ந்தெடுப்பதற்கும் பின்னுள்ள அந்த வரலாற்று களம் முழுதும் ‘துயர்சார் அரசியலால்’  நிரம்பிக் கிடக்கிறது.

அறுபதுகளின் தலை முறையைச் சேர்ந்த- வர்களே ஈழப்    போராட்டத்தின் முன்னோடிகள், அறுபது எழுபதுகளில் மாணவர்களாக இருந்தவர்கள்  இவர்கள். அவர்களுக்கு அப்போது தாம் கூடிப்பேசுவது, குழுவாக இணைவது, விவாதிப்பது, அமைப்புக் கட்டுவது எல்லாம் மிக நீண்ட அவலம் நிறைந்த ஒரு கால கட்டத்தைத் தொடங்கி வைக்கப்போகிறது என்றோ, சில இலட்சம் மக்களைக்  கொன்று பல இலட்சம் மக்களை  நிலம் பெயர்ந்து ஓடச்செய்ய  இருக்கிறது என்றோ தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ரஷ்ய, சீன, கியூப, வியட்நாமிய முன் மாதிரிகளும் சிங்கள இளைஞர்களின் மக்கள் விடுதலைப் படையின் எதிர்ப்புச் செயல்களும் அவர்களுக்கு முன்னே நின்றன. மாபெரும் விடுதலைப் போர் ஒன்றைத் தொடங்குவதன்  மூலம் மக்களுக்காக தியாகம் செய்தவர்களாக வேண்டும் என்பது ஒரு உந்து சக்தியாக இருந்தபோதும், இறுதியில் வெற்றியடைவோம் என்ற ஒரு கனவு அவர்களைச் செயல்படவைத்தது. சிறு சிறு வன்முறைகள் மூலம் அரசை அச்சுறுத்தவும், தம் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தொடங்கிய அவர்களுக்கு அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்பது கூட தெரியாமலேயே இருந்தது. இந்திய நிறுவனங்களின் நேரடித் திட்டமிடலும் உதவியும் களப் பொருள்களும் முகாம்களும் கிடைக்கும் வரை எல்லாப் போராளிக் குழுக்களும் ஆதரவற்ற தனிமனிதர்களாகவே தவித்தும் பதுங்கியும் தப்பியும் காலம் கடத்த வேண்டிய நிலையில் இருந்தனர். இவர்களிடம் ஒன்றும் இரண்டுமாக இருந்த கைத்துப்பாக்கிகள் இவர்களுக்குப் பெரிய அளவில் பாதுகாப்பையோ பலத்தையோ வழங்கி விடக்கூடியதல்ல. இந்தச் சூழலிலும் கூட இத்தலைமுறையினர் ஏன் போரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களை இயக்கிய கூட்டு மனநிலையும் தனிமனித உளவியலும் என்ன என்பதை வெளியிலிருந்து புரிந்துகொள்வது கடினமானது.  ஒருவித பாதுகாப்பின்மை,  பொதுக்களத்தின் மீது  நம்பிக்கையின்மை, தடுமாற்றத்துடன் கூடிய அச்சம் என்பவை அவர்களை அலைக்கழித்திருக்கிறது.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் கோபத்தை, வஞ்சத்தை ஏற்படுத்திய அதே சமயம் மாணவர்கள் என்ற வகையில் அவர்களுடைய அடையாளம் பின்னமுற்றதாக அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இந்த அந்நியநிலை கடினமான பாத்திரத்தை ஏற்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றது. இலங்கை தேசிய அமைப்புக்குள் அவர்கள் விளிம்பில் வைக்கப்பட்டிருப்பதான  ஒரு பொது உளவியல் உருவானது.

உலக அளவிலான அரசியல் அழுத்தங்கள் பல்வேறு சமூகங்களில் உள் நொருங்கல்களை ஏற்படுத்தியிருந்தன. ஏகாதிபத்தியங்களின் போருக்குப் பின்னான அரசியல் பொருளாதாரச்  சதித்திட்டங்கள் மூன்றாம் உலக நாடுகளை மூச்சுத்திணற வைத்திருந்தன. தேசிய அரசுகளோ மக்களைப்பற்றிய அக்கறையற்று வலிமையான ஆட்சி, தேசிய இறையாண்மை என்பவற்றை மையப்படுத்தியே தமது திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன.  நவீன அறிவியலின் கருவிகளும் கட்டுமானங்களும் எல்லா சமூகங்களின் உள்கட்டமைப்பிலும் ஊடுறுவிப் புரிந்துகொள்ள முடியாத பக்க விளைவுகளை, நசிவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.

இந்தச் சூழலில் மேற்கின் புதிய தலைமுறையினர்  கருத்துச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம், மாற்று வாழ்க்கைமுறை என்பன பற்றிய பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆசிய நாடுகளின் இளைஞர்கள் அரசியல் வயப்பட்ட மாற்றுகளைத் தேடிக்    கொண்டிருந்தனர். சோஷலிசம், முதலாளித்துவம்  என்ற   எதிர்வு களுக்கிடையே உலக அரசியல் அலைகழிக்கப்பட்டிருந்தது.   உலக மயமான உளவியல் பதற்றமும், நிலம் சார்ந்த  பாதுகாப்பின்மையும்  இணைந்த  துயர்சார் அரசியலின் உளவியல் சிக்கல்களை நாம் இந்த கால   கட்டத்தில் காண முடிகிறது.  அதே சமயம் இலட்சியவாத, முழு விடுதலைச்  சொல்லாடல்களும் புழக்கத்தில் இருக்கின்றன.  போராளிகளாக மாறிய தலைமுறையினரின்  பின்புலம்  இந்த சிக்கல்கள்  ஊடாக உருவானது.  அவர்களைச் சிறைப்படுத்தியும், சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்தி நிலைமைகளைக் கடினப்படுத்திய அரசுகள் மற்றும் நிறுவனங்களின் பின்புலமும் இதே சிக்கல்களுடன் அமைந்திருந்தன.  ஆனால் அரசுகள், அமைப்புகள் என்பவற்றை மறுசீரமைப்பு செய்யவும்,    பலப்படுத்தவும் ஒரு பன்னாட்டு   வலைப்பின்னல்  அறிவுத்துறை, ஆய்வுத்  துறைகள் உதவியுடன் செயல்பட்டதுபோல பாதிக்கப்   பட்ட தலைமுறையினரை,  துயர்சார்  அரசியலில் சிக்கிய  மக்களைக்  காக்க உலக அளவிலான எந்த வலைப்பின்னலும்  உருவாக்கப் படவில்லை.

ஒரு வகையில் ஆயுத உற்பத்தியாளர்களே மக்கள் அரசியலில் விரக்தியடைந்த பிரிவினரையும் துயர்சார் அரசியலில் நசுங்கிய பிரிவினரையும்  இயக்கக் கூடியவர்களாக மாறினர். இந்த முடிவற்ற உள்முரண் பின்னாட்களில் பல நாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேசக் குற்ற வலைப்பின்னல், ஆயுதக் கடத்தல்கள், போதைப் பொருள் சந்தை என்பவை விடுதலைப் படைகளை, மக்கள் போராளிகளை மறைமுகமாக இயக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்தக் குற்றவலைப் பின்னல்கள்  எல்லாமும் சில அரசுகளின் பின்புலம் இன்றி நிகழவில்லை என்பது தற்போது வெளிப்பட்டிருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் கருத்துருவ அணிச்சேர்க்கைகளே இவற்றை இயக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. ஈழப்போராட்டத்தின் களத்தில் இந்தியத் தலையீடும் இவ்வகையில்  மிகத்தவறான பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது தொடங்கி அரசியல் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல்  ராணுவக் கட்டுமானத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது என்பது வரை ஏற்பட்ட திசைக் குழப்பங்கள்  உளவு அமைப்புகளின் திட்டமிட்ட செயலால் நிகழ்ந்தவை. இந்தத் திரிபுகள் மக்கள்சார் சமூகத்தை மிகக்கடுமையான பாதிப்புக்கு உட்படுத்திய போதும் மறுபரிசீலனை, கட்டுமான மாற்றம் என்பதற்கு  இடமளிக்காத  அழிவு விளிம்பை நோக்கிய நகர்வை போர்  அரசியல் நிகழ்த்திக் கொண்டிருந்தது.

இன்று இன்னும் கணக்கிடப்படாத எண்ணிக்கையிலான மக்களைப் பறிகொடுத்து தானும் அழிந்து  வலாற்றுத் துயரமாக மீந்து நிற்பதன் பின்னணியில் ஈழப்போராட்டம் பல்வேறு  துயர்சார் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கி விட்டது.  இறுதிவரை  பேச்சுவார்த்தை,  சமாதானம், இடைக்கால ஒப்பந்தம் என்பதன் சாத்தியப்பாடுகளை சிந்திக்காமலேயே  தற்கொலை  முடிவை எடுக்க அந்த அமைப்பை உந்திய சக்தி, குழு உளவியல் எது என்பது சிக்கலான பல கேள்விகளை எழுப்பக்கூடிய நிலையில் நமக்குக் காட்சியாக நிற்பவை அந்த இறுதி நாட்கள்.

மக்கள் மிகக்குறுகிய அந்த நிலப்பகுதிக்குள் சிக்கி பட்ட வாததைகள், வலிகள், இழப்புகள்.  இழப்பு என்பது மொழியை அழித்து பேதலிக்கச் செய்யும் நிலையை அடைந்த பின் அச்சம், அதிர்ச்சி என்பவை நரம்பு மண்டலத்தின் பாதைகளைத் தாண்டிய பின் மீந்துநின்ற வெற்று உடல் நிலை. இந்த வெற்று நிலைக்குச் சென்று திரும்பிய பின்னான சிதைவு நிலை, ஆழிப்பேரலைக்குப் பின் நேர்ந்த ஒரு உயிர் மிச்சம்.

இவற்றை இனி ஈழத்தமிழ்ச் சமூகம் எப்படி அரசியல் சொல்லாடலில், அடையாளச் சொல்லாடலில் கொண்டு வரப்போகிறது, இந்த நினைவும் மறதியுமான நிலைகள் தமிழ் அரசியல் சொல்லாடலில் எவ்வடிவங்களில் ஊடுருவப்போகின்றன என்பவை வெறும் தகவல் மற்றும்  அறிவுத்துறை சார் கேள்விகளாக இருக்க முடியாது. ‘துயர்   சார் அரசியலை’ கையாளவும்  மாற்றவும் எதிர் கொள்ளவும் மாற்று வழிகளை பன்மையான பார்வைகளுடன் கண்டறிவதற்கான அழுத்தத்தையும் நிர்பந்தத்தையும் ஈழப்போராட்ட    நிகழ்வு  ஏற்படுத்தியிருக்கிறது.

4. தாள முடியாத நிகழ்வியல் (Unbearable Reality)

தமிழ்  ஈழம், தமிழீழத் தாயகம் என்ற   இலக்கை மட்டுமே வைத்து ஒரு போர் அரசியல், நேடிர அரசு நீக்க இயக்கம் தொடங்குதல்  என்பதே இலங்கை தேசப்பின்னணியில் மிகவும் சிக்கலானது. அது ஒரு தீவுக்குள் நிரந்தரப்பகை கொண்ட இரண்டு நாடுகளை அடைத்து விடும் ஏற்பாடாகவே இருக்கும். என்றாலும் தன்னாட்சி உடைய, சமஉரிமை கொண்ட, ஒரு கூட்டாட்சிமுறை நோக்கிய ஏற்பாட்டினை முன்வைத்து அரசியல் தீர்வுகள் பேசப்பட்டிருக்கவேண்டும். இதனை இலங்கை அரசு தொடக்கத்திலிருந்து  செய்யத் தவறியதுடன் பழிவாங்கும் நடவடிக்கையிலும், பலியெடுக்கும்  நடவடிக்கையிலும் இறங்கியது.  இலங்கை சிங்கள மக்களுக்கே, தமிழர்கள் அதன் இரண்டாம் நிலை குடிமக்களே என்றதும் தமிழரின் நிலம் சார் உரிமைகளைப்  பறித்ததும் சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ்ச் சமூகத்தை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது.  திட்டமிட்ட  குடியேற்றங்கள், வெளியேற்றங்களின் மூலம் தமிழர்  பகுதிகளை இனநீக்கம் செய்யும் முயற்சியும் தேசியத் தன்மை கொண்ட நவீன அரசு செய்யக்   கூடாத ஒன்று. இத்துடன் வெகுமக்களின் வெறி உணர்வுகளை சிங்கள மேலாண்மைச் சொல்லாடல்களாலும்,  திட்டமிட்ட  வஞ்சத் தீர்ப்பு நடவடிக்கைகளாலும் தூண்டி இனப்படு கொலைகளை நிகழ்த்திய அரசியல் தலைவர்கள் தமிழர்களை  அச்சுறுத்தி பழி  தீர்ப்பு மற்றும் தற்பாதுகாப்பு என்ற நிலைக்குத் தள்ளினர்.  இந்தப் பின்னணியில் போராளிகளுக்கான வரலாற்று, சமூகவியல் நியாயங்கள் ஏற்பட்டு  விடுகின்றன.

பின்னாட்களில் மக்கள் முழுமையான போர்ச் சூழலில் போராளிகள் குறித்து பல கசப்புணர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் தமது இளைஞர்கள் தமிழரின் வாழ்வுரிமையை, விடுதலையை, புதிய நாட்டினைப் பெற்றுத் தருவார்கள் என்றே முதல் கட்டத்தில் நம்பியிருந்தனர். முழுமையான அளவில் படை மற்றும் யுத்த நிர்மானங்களைக் கொண்டிருந்த நான்கு போராளிக் குழுக்களில் ஏதோ ஒன்றின் மீதோ அல்லது மொத்தமாக எல்லா போராளிக் குழுக்களின் மீதோ மக்கள் நம்பிக்கை வைத்தனர். மற்ற போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகள் படை அழித்தும் கலைத்தும் இல்லாமலாக்கும்  வரை மக்களுக்கு இந்த உள்முரண்பாடு முழுமையாகப் புரியாமலேயே இருந்தது. ஆனால் மக்கள் மற்றும் விடுதலைப் படையினர் என்ற இரு தனித்தனி  பகுதிகள் உருவானதும், போர்ச்சூழல் மக்களின் புரிதல் எல்லையைத் தாண்டிச் சென்றதும் மக்கள் நிலையில் மட்டுமின்றி புறத்தே உள்ள அரசியல் அக்கறை கொண்டோருக்கும் தாளமுடியாத நிகழ்வியலாக  அச்சுறுத்தும் நடப்பியலாக மாறியது.

இரண்டு படைகளுக்கு நடுவே சிக்கிய அச்ச நிலையை மக்கள் அடைந்தபோது போர் முடிவுக்கு வந்தால் போதும் என்ற உணர்வே பொதுஉளவியலாக வெளிப்பட்டது.  இயல்பு வாழ்க்கை என்பது இல்லாத ஒரு இருபத்து ஐந்து ஆண்டுகள், நிரந்தர தாக்குதலின் கீழ் வாழ நேர்ந்துவிட்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பது எண்ணிப் பார்க்கவே நடுக்கத்தை  எற்படுத்தக்கூடிய நிகழ்வியல். இந்த தாளமுடியாத நிகழ்வியலின் கீழ்தான் வலிந்து ஏற்கப்பட்ட கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் ஈழத் தமிழ்ச்சமூகம் வாழநேர்ந்தது. முடிவு என்பது தெளிவற்றது, வழிமுறைகள் மிகவும் பூடகமானது. அரசு பொய்களைப் பரப்பி,        சதிகளைத் திட்டமிட்டுத் தனது வெற்றிக்கு முனைந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் படையினருக்கோ   போராடுதல் என்பதைத் தவிர வேறு திட்டங்கள் இல்லாமல் போய்விட்ட நிலை. தற்கொலைப்படை, இளையோர்படை, பதுங்குகுழி வாழ்க்கை என்பவை வாழ்வியல் பொருண்மைகளைக் குலைத்து உயிர்வாழ்தல் என்பதை ஓயாத ஒரு அச்சுறுத்தல் நிலையில் வைத்திருக்கக் கூடியது. போராளிகளும் சரி, அரசு ராணுவமும் சரி உண்மை நிலைகளைச் சொல்லவோ வெளிப்படையாகவோ இருக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களில் விடுதலைப்புலிகள் இயக்கச் சார்பு கொண்டவர்கள் தினம் நிகழும் மோதல், விடுதலைப் போராளிகள் வெற்றி, ராணுவத்தினரின் இழப்பு என்பவற்றைக் கணக்கிட்டு நாட்களைக் கடத்தும் நோய் நிலைக்கு செல்கின்றனர்.  ஒரு கட்டத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை, போர் நிறுத்த ஒப்பந்தம், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வுகள் என்ற நிலையை அடைந்தபோது அரசின் திட்டம் தெளிவாக இருந்தது. 2002-க்குப் பிறகு போர்நிறுத்த ஒப்பந்தம் தொடங்கி நான்காம் ஈழப்போரின் முடிவுவரை இலங்கை அரசு இறுதி இலக்கைத் தீர்மானித்து விட்டதுடன் அதன் வெற்றியும் பன்னாட்டு ஒத்துழைப்புடன் உறுதி செய்யப்பட்டு விடுகிறது.

இந்திய அரசு என்பதைவிட மக்கள், ஜனநாயக அமைப்புகளைக் கடந்த போர் நிறுவனத்தின் பகுதியான இந்திய வல்லுனர்கள் குழு  உலக அரசமைப்புகளின்  ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையுடன் இலங்கையில் ஈழப் போராட்டத்தை முழுமையாக இல்லாமலாக்கிவிடும் முடிவினை எடுத்துவிட்டது.  சீன, பாகிஸ்தானிய ஆலோசனைகளும் ஒத்துழைப்புகளும் இலங்கைத் தீவை பன்னாட்டு முதலீடு மற்றும் சந்தைக்கு ஏற்ற ஒரு  நாடாக மாற்றுவதை விரைவு படுத்துகின்றன.  இலங்கை ராணுவத்தின் பதுங்குமுறை பயிற்சி விடுதலைப்படையினரின் அதே வகை உத்தியுடன் புதிய வகை தாக்குதலை முன்னெடுக்கிறது.    ராணுவத்தின் வெற்றி உலக அளவில் உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்றாக மாறுகிறது.

இந்நிலையில் ஒரு அரசு தன் மக்கள் மீது செல்லுத்தக் கூடாத தாக்குதலைச் செய்ததன் மூலம் இலங்கை அரசு பயங்கரவாதத் தன்மை அடைகிறது. விடுதலைப் படையினரோ மக்களைக்காக்க   இயலாத, தமது போர் எல்லைகள் தெரியாத உறைநிலையை அடைகின்றனர். இதற்கு மேல், உலக உளவு மற்றும்  போர் உத்திப் பின்னணியில் விடுதலைப் படையினர் செய்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது.  ‘மக்கள்’ இப்போது உயிர் பிழைப்பது தவிர   வேறு தேவை எதுவும் இல்லாத நிலையில் நிறுத்தப்படுகின்றனர். இலங்கை அரசு தொழில்நுட்ப முறையில் இனி சரணடைதலையோ, போர்நிறுத்த ஏற்பாட்டையோ ஏற்கக்கூடாது என்ற முடிவெடுத்துவிட்ட நிலையில்   அதன் கொலை வெறி மட்டுமே முழு நியாயமாகிறது.

அரசு முழுமையான அழித்தொழிப்பிற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது.  நவீன அரசு, மனித உரிமைகள், தேசிய நியதிகள், மக்கள் சார்பு என்ற எந்த தர்க்கமும் அற்ற முழுமையான அழித்தொழிப்பு மட்டுமே வெற்றியைத் தரும் என்ற நிலையை இலங்கை அரசு எடுத்து விடுகிறது. இந்த அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கொலை வெறிதான் இதுவரையிலான ‘ஈழம்’ பற்றிய அடிப்படைகளை உறுதிசெய்து “இது ஈழம், இது தமிழ் இனம், இவர் தமிழர்”  என்பதைக் காட்டித் தருகிறது.

5. தமிழகத்தின் தன்னிலை மறுப்பு

உலகின் அமைதி நேசர்களும், உலக வல்லாண்மை மேலாளர்களும் தமிழினப் படுகொலையை ஒரு அரசின் இயல்பான நடவடிக்கை என்பது போல முடிவை நோக்கிக் காத்திருந்தனர். இந்தக் கட்டத்தில் தமிழகத்தின் நிலைதான் அவ்வளவு எளிதாக விளக்க முடியாத அவலமான நிசப்தத்தில் மூழ்கி இருக்கிறது. இதனை சிறு கட்சிகளும், சிறு குழுக்களும் தவிர வேறு யாரும் துயரமாகவோ வலியாகவோ முன்வைக்கவில்லை.

இந்த நிலைக்கு முதல் காரணம்: அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெகுசன உளவியல். இரண்டாவது: உள்நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட பொய்கள். ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய, கூறிவரும் எந்த கட்சிக்கும் அதன் அடிப்படைகளை கையாளுவதில் அக்கறை எதுவுமில்லை. விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்ளும் பொதுஉளவியல் ஒன்று 1991-க்கு பிறகு உருவாகி விட்டது. அதனைத் தெரிந்திருந்தும் ஈழ ஆதரவுத் தலைவர்களும் கட்சிகளும் ‘உணர்வு முழக்கங்களை’ நாடக நிகழ்வாக்கி உலக அரசியலில் இருந்து ஈழப் போராட்டத்தையும் போராளிகளையும் அன்னியப்படுத்தி வைத்தனர். இவர்களுக்கும் வரப்போகும் கொடிய முடிவு தெரிந்தே இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளின் உலக அரசியல், சமூக மாற்றங்களைக் கவனித்து வரும் யாரும் விடுதலைப் புலி அமைப்பிடம் இறுதி யுத்தம் என்பதைத் தேர்ந்தெடுக்கும்படி கூறமுடியாது. ஆனால் தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் அதனைக் கூறிவந்தனர். விடுதலைப் படையினருக்கு தவறான, பொய்யான உறுதி மொழிகளைத் தந்து அவர்களின் அழிவை நோக்கித் தள்ளினர்.

இதற்குக் காரணம் தமிழக மக்களிடம், தமிழ்ச் சமூகத்திடம் அடையாள அரசியலோ, மொழி-பண்பாட்டுத் தன்னிலையோ உருவாகாததுதான் என்பதை மேற்பரப்பில் கண்டு கொள்ளலாம். ஆனால் தன்னிலை, சமூக அடையாளக் கட்டுமானம் என்பதைப் பற்றிய குழப்பமான நிலையில் உள்ள தமிழரின் பொதுஉளவியல் எந்த அரசியல் நிலைப்பாட்டையோ, உணர்வு சார்ந்த இன அடையாளத்தையோ ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் இதன் உள்ளடங்கிய நிகழ்வு. துயரம் உணரா நிலையை அடைந்த தமிழகத்து வெகுமக்கள் அரசியல் தனது எதிர்காலம் குறித்தும் கூட இனி ஆக்கம் சார்ந்த எந்த திட்டத்தையும் உருவாக்க முடியாது.

அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்பட வேண்டிய நிலையில் தமிழகக் கூட்டு நினைவும், நினைவிலி நிலையும் உள்ளது. ஈழப்போரின் தாளமுடியா நிகழ்வியலில் சிக்கி குழப்பங்களை அடைவது ஒருதளம். அதை முழுமையான மறதிக்கு உள்ளாக்கியது என்பது தமிழக அரசியலைப் பற்றியும் பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் அறிவுருவாக்க முறை பற்றியும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஈழ விடுதலைப்போரில் மிகப்பெரும் குழப்பங்கள், பயங்கரங்கள், சதிகள் ஏற்பட்டு இருந்தாலும் அதனைத் தமிழக அரசியல் தொடர்ந்து பேசியும் கையாண்டும் வந்திருக்க வேண்டும். போர் நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசியல் நிலைக்கு விடுதலைப் படையினரை கொண்டுவர அழுத்தம் தந்திருக்க வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளின் உலக அரசியல் மாற்றங்களை அவர்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். ஆனால் எதுவும் நிகழவில்லை. அண்டை நாடுகளுடன் போர் என்பதை நியாயப்படுத்தி வரும் இந்திய அரசும், உலகில் போர்களுக்கு திட்டமிட்டுத் தரும் மேற்கு அரசுகளும் ‘புனித உருவம்’ எடுத்து அமைதி, அன்பு, சமாதானம், மனித நேயம் என்று மந்திர உச்சாடனம் செய்தவுடன் தமிழ் நாட்டு மக்களுக்கு ‘ஈழப்போராட்டம்’அநியாயமானதாக, தேவையற்றதாக, வன்முறையானதாக எப்படி தீர்வுக்குட்பட முடியும். தமிழகத்தின் வெகுசன உளவியலில் இந்தப் பகுதி மர்மமாக இருக்கிறது. ஆனால் இதன் அடிப்படையாக அமைவது அச்சம் என்பதும் புரிகிறது.

தமிழகத்தில் ‘தமிழ் ஈழம்’ அரசியலைக் கையாளும் கட்சிகளும், இயக்கங்களும் ஈழத்தின் தமிழினப் படுகொலைக்கு ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆட்சியில் பங்கு பெற்று, தேர்தல் கூட்டணிகள் வைத்து நிர்வாகத்தில் பங்காளிகளாகி இந்திய நடுவண் ஆட்சியாளர்களுடன் ஓயாத உறவு கொண்டாடி வரும் இவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரிந்தும் ‘ஈழ அரசியலை’ மீளா விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டனர். பண்பாட்டு அரசியலை வெறும் கும்பல் எழுச்சியாக மாற்றி செயலற்ற, உள்கட்டுமானம் அற்ற அரசியலை உருவாக்கி வருகின்றனர். இது தமிழகத்தின் எதிர்கால அரசியல் புரிதல்களில், செயல்பாடுகளில் கொடும்விளைவுகளையே உருவாக்கும்.

அடையாள அரசியல் என்பது எதிர்நிலையை முன்வைத்தும் எதிரிகளை முன்வைத்துமே உருவாகும் ஒன்றல்ல. உள்கட்டுமானம், தன்னாக்க செயல்திட்டம், தன்னிலை-பொதுநிலை உருவாக்கம், ஆக்கபூர்வ அழகியல், நிலவியல் சூழலியல் நுண்ணர்வு, அறம்சார் வழிகாட்டு நெறிகள் எனப் பலவும் சேர்ந்து அடையாள அரசியல் உருவாக வேண்டும். ஈழத்தில் நேரடித் தாக்குதல், எதிர்நிலை வரையறை, விளிம்பு நிலைப்படுத்தல் என்பதன் மூலம் தமிழ் அடையாளம் என்பது நசிவுற்ற, தாக்குதலுக்குட்பட்ட, புண்பட்ட, வீழ்ச்சியுற்ற, அச்சுறுத்தப்பட்ட, இனஅழிப்புக்குட்பட்ட அடையாளங்களை அடைந்தது. இது திணிக்கப்பட்டதும், நிர்ப்பந்தமானதுமாக அமைந்து விட்டது. அதன் சிக்கல்களையும், அவலங்களையும் இங்கு தேர்தல் நேரத் தந்திரமாகவும் கும்பல் அரசியலுக்காவும் மட்டும் பயன்படுத்தும் கட்சிகள், இயக்கங்கள் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்த முடியும்.

மாற்று அரசியலும், மக்கள் சார் இயக்கங்களும் இதனைக் கையாளுவதில் மிகுந்த அக்கறையும் பொறுப்பும் கரிசனமும் கொண்டு இயங்கவேண்டும். அல்லாமல் வீர முழக்கங்கள் மீந்திருக்கும் காயப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் மொத்தத்தில் இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் தலைமுறைகளையும் மீண்டும் பின்னப்படுத்தி அவலங்களையே கொண்டுவரும்.

அறம்சார் அரசியலும், மக்கள்சார் கோட்பாடுகளும், விடுதலைக் கருத்தியல்களும் வெற்றியடைவதற்கு வரலாறு முழுமையான உத்திரவாதத்தை வழங்கி விடுவதில்லை. அவை மிக நிதானமான செயல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன.

6. வெளியே இருந்து உணர இயலுமா

தற்போது விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது குறித்தும், கிழங்கிலங்கை 2004 ஆம் ஆண்டு முதல் நேரடி போர்ச் சூழலில் இருந்து வெளியேறியது குறித்தும் எதிர் எதிர் முனைகளில் இருந்து வைக்கப்படும் வாதங்கள் ஒரே வித பகைஉணர்வின் அடிப்படையில் அமைவது மீண்டும் ஒரு துயர நிகழ்வு. விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு, மக்களிடம் இருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும் என்பது மக்களைக் காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மிக அவசியமாகவே இருந்தது. அதே சமயம் விடுதலைப்படையினர் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது படுகொலைத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டது. மரண தண்டனை நீக்கம் என்பதை முன்வைக்கும் மனித உரிமை அரசியலை ஏற்பவர்கள் இதனை முன்வைக்க முடியாது. மக்களை ஒரு இம்மி கூட பொருட்படுத்தாத இலங்கை இராணுவத்தின் செயல்பாடு நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரான படுபாதகத்தன்மை கொண்டது.

கிழக்கிலங்கை போரில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டது அம்மக்களுக்கு பாதுகாப்பினை அளிக்கிறதெனில் அவர்களின் தேர்வு சரியானதாக இருக்கலாம். இன்று இலங்கை நடுவண் அமைச்சகத்தில் பொறுப்பு வகிக்கும் போராளித் தலைவர்கள் தம்மை விடுதலைப் போராளிகள் என்ற அடையாளத்துடன்தான் அந்த உரிமையைக் கோருகின்றனர். இவை சூழல் சார்ந்த நிலை மாற்றங்கள். இந்த நிலை மாற்றங்களுக்கான காலஅவகாசம் வன்னிப் பகுதிக்கு வழங்கப்படவில்லை.

மாவீரர்களாக முன்பு அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இப்போது வெறும் பலியான மனிதர்களாகி விடுகின்றனர். மக்களைக் காக்க அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட போராளிப்படை மக்களைக் காக்கத் தவறியதுடன் மக்களை பலியிடவும் தாக்கவும் கூடியதாக மாறியது.  மக்கள் ஒரு கட்டத்தில் போராளிகளை மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலக அரசியல் வேறுவிதமாக இருந்து போராளிகள் மீண்டும் ஒரு நிலப்பகுதியைக் கைப்பற்றி தன்னாட்சியுடைய ஒரு அமைப்பை ஏற்படுத்த முடிந்திருந்தால் மக்களின் மனநிலை, கூட்டு நினைவு வேறுவகையாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை தாங்கள் இழந்திருந்த வாழ்க்கையும், இறுதிப்போரின் போது இழந்த உயிர்களும் வீணில் முடிந்ததாக எஞ்சியுள்ள மக்கள் உணரும் நிலையில் இனிவரும் காலத்தின் இழப்புணர்வு மிகக் கடுமையானதாக, வெளியே இருந்து யாரும் உணரமுடியாததாக இருக்கும்.

இலங்கையின் தேசிய வரலாறு இந்த முப்பது ஆண்டுகளை உள்நாட்டுப் போர்க்காலமாகவும், பயங்கரவாதத்தால் பாதிப்புற்ற காலமாகவும் பதிவு செய்யும். அந்த வரலாற்றுக்குள் தமிழர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே அடையாளம் பெற வேண்டியிருக்கும். இந்த அடையாளப்படுத்தல் துயர்சார் அரசியலுக்கே வழிவகுக்கும். இதனை இலங்கை தேசிய அரசும், பிற பண்பாட்டு நிறுவனங்களும் தமது மேலாதிக்கத்துக்கு நியாயமளிக்கும் உத்தியாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

7.எஞ்சியிருத்தலின் அவலம்

தங்களின் நேரடித் தேர்வு அற்று நிகழ்த்து விட்ட ஒரு அரசியல், வரலாற்று அவலத்திற்குள் மிஞ்சியிருப்பவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் உணரும் ஒரு மக்கள் குழுவின் நிலை மிகத் துயரமானது. போருக்குப்பின் சிதைவுற்ற ஒரு நாட்டின் மக்களைப் போல மொழியற்று நிற்பது மிகக்கொடூரமானது. தனது மக்களைக் கொன்றொழித்த ஒரு அரசிடமே அடைக்கலமாகி தமது மறுவாழ்விற்கான ஆதாரங்களைப்பெற வேண்டியிருப்பதன் சமூக உளவியல் மிகத் துன்பகரமானது. கடந்த காலத்தைப் பற்றி எதுவும் பேசமுடியாத நிலையில், தமது எதிர்காலத்தையும் தாமே அமைத்துக்கொள்ள முடியாத செயலற்ற நிலையில் நிற்கும் மக்களின் சிந்தனைமுறை, உணர்வுக்குழப்பங்கள் தெளிவாக விளக்கி விடமுடியாத நோய்த்தன்மை கொண்டனவாக இருக்கும்.

நேரடியாக ஊனப்பட்ட மூன்று லட்சம் மக்களும், மறைமுகமாக உளவகையில் ஊனமும் காயமும் உற்ற மற்ற தமிழர்களும் இனி தமக்கான வாழ்முறையை, சமூகத்திட்டங்களை, ஒத்திசைவு உத்திகளை புதிதாகவே கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். இந்த தகர்வுகளின் பின் எஞ்சியிருக்கும் மனநிலையில் இருந்து அம்மக்கள் மீள்வதற்கான நடவடிக்கைகளே உடனடியான தமிழின அடையாள அரசியலை ஏற்கும், உலகம் முழுதும் பரவி வாழும் பிற தமிழர்களின் செயல்திட்டமாக இருக்க முடியும்.

இன்றுள்ள ஈழ மக்கள் தமக்கென தனிநாடும், தன்னாட்சியும் விரும்பினார்கள் என்பது குற்றச்செயலோ கொடூரமான வன்முறையோ இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல உலகின் எந்த இனத்திற்கும் அந்த உரிமை உண்டு. அவர்கள் குற்றத்தீர்ப்புக்கு உட்பட்டு, தண்டிக்கப்படவேண்டியவர்கள் என ஒரு தேசியஅரசு சொல்லுமானல் அது அடிப்படை உரிமைகளை மறுக்கும் வன்முறையே. என்றாலும் தற்போது உள்ள தமிழர்கள் இலங்கை என்ற தேசத்தின் பகுதியாகவே இனியும் வாழவேண்டும், வாழப்போகிறார்கள் என்னும் நிலையில் புதிய மாற்று புரிந்துணர்வுகள் உருவாக வேண்டும்.

நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பதும் மீண்டும் ஈழப்போர் தொடரும் என்பதும் இலங்கை மண்ணில் வாழும் மக்களுக்கு மேலும் துயரங்களையே கொண்டு சேர்க்கும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தனி இயக்கங்களும் மீண்டும் நடைமுறை சாத்தியமற்ற உறுதி மொழிகளைப் பரப்பி தம் பேச்சுக்களத்தை வலிமைப்படுத்த நினைப்பது மக்கள் துயரம் பற்றிய அக்கரையற்ற போக்கு.

அடையாள அரசியல், பண்பாட்டு அரசியல், மொழிசார் தன்னிலைகள் அர்த்தமற்றவை என்றோ தீமையானவை என்றோ இதற்குப் பொருளல்ல. அணுகுமுறைகள் செயல்திட்டங்கள் வேறுவகையில் அமைய வேண்டிய தேவை உள்ளது. தொன்மங்கள் தற்கால சொல்லாடல்களின் பின்புலங்களாக முடியுமே தவிர வழிகாட்டு நெறிகளாக முடியாது. நவீன, பின்நவீன, பொதுக்கள, பன்மை அரசியல் புரிதலுடனும் உலக அரசியல் பொருளாதார, இயற்கைசார் பண்பாட்டு புரிதல்களுடனும் தமிழர்களின் அரசியல் மாற்றுச் சொல்லாடல்களும் செயல் திட்டங்களும் அமைந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல முடியும். இனி அமையப் போகும் ஆக்கப்பூர்வ பண்பாட்டு மாற்றங்களும் அரசியல் செயல் திட்டங்களுமே ஈழத்திற்காக நாம் இழந்த மக்களுக்கு செலுத்தும் துயர் நிறைந்த அஞ்சலியாக அமைய முடியும்.

ஈழ மக்கள் தமக்கென நாடும், தன்னாட்சியும் அமைத்துக்கொள்ள எதிர்காலம் வழி அமைக்கும்: வேறு வகையில் வேறு செயல் திட்டங்கள் ஊடாக.

 8. அமைதி, போர் நடந்து கொண்டிருக்கிறது

விடுதலை இயக்கங்கள், மக்கள் யுத்தம் என்பவை பற்றிய மறுஆய்வுகள் இப்போது தேவை. ஈழப்போர் தொடங்கியபோது இருந்த புரிதலும் நிலைமையும் இப்போது இல்லை. ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தியவர்களில் பலர் அது தீர்வல்ல என்பதை கண்டு கொண்டனர். விடுதலைப் புலிகளின் அமைப்பு, செயல்முறைகள், உத்திகள் என்பவற்றை இவர்கள் மறுத்தும் விமர்சித்தும் வந்ததற்கு மாறிவிட்ட உலக அரசியல் சூழல்களே பின்புலமாக அமைந்தன. வேறு அமைப்புகளின் நோக்கில் இருந்து ஈழப்போரை மறுத்தவர்கள் புலிகளின் தலைமையை பயங்கரவாதத் தன்மை கொண்டது என்றனர். ஆனால் இவர்கள் எல்லோருடைய தொடக்கமும் வழிமுறையும் இலக்கும் ஒரு கட்டம் வரை ஒன்றாகவே இருந்தன. இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்தபோது எல்லோரும் கனரக ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் அழித்து இந்தியத் திட்டவியலாளர்களின் கட்டளையை, சதிகளை நிறைவேற்ற முனைப்புடன் இருந்தனர். இதில் முந்திக் கொண்டவர்கள், முன்னே நின்றவர்கள், மீந்து வந்தவர்கள் தலைமையை, போரைத் தம்கையில் எடுத்துக்கொண்டனர்.

இப்போது திரும்பிப்பார்க்கும் போது இந்த பயங்கரங்கள் புரியவருவது போல் அப்போது யாருக்கும் புரிய வரவில்லை. பின் திரும்ப முடியாத ஒரு துடைத்தழிப்பு அரசியலில் சிக்கிக் கொண்ட நிலை எல்லோருக்கும் இருந்தது. இந்த துடைத்தழிப்பு அரசியல் (Politics of Annihilations) மக்கள் சார் சமூக மாற்றங்களுக்கோ, விடுதலைக்கோ வழியாக அமையாது என்பதை இந்த இருபத்தோராம் நூற்றாண்டு மிகக் கடுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

அப்படியெனில் அரசுகளின் கொடூரங்களும் வன்முறைகளும் நியாயப்படுத்தப்படக் கூடியவை ஆகிவிடுமா. ஒடுக்குதலுக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகும் மக்கள் போராடாமல் இருந்துவிட முடியுமா? அல்லது இருந்துவிட வேண்டுமா? என்பவை நம்முன் உள்ள அடிப்படைக் கேள்விகள்.

இலங்கை அல்லது அமெரிக்க ராணுவங்கள் ‘பயங்கரவாத’ படைகளாக மாறி மக்களை கொன்றொழிப்பதற்கு அவர்கள் முன் வைக்கும் நியாயங்கள் ஏற்கப்பட வேண்டியவையா. வன்முறை, போர் என்பவை பற்றி அறிவுரை வழங்கி வழிகாட்டுதலைத் தர தற்போது யார் தகுதியுடையவர்களாகிறார்கள்?

வன்முறையை மறுப்பவர்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டால் நிகழ்வியல் உண்மையாக, தாளமுடியா நடப்பியலாக நிகழ்த்தப்படும் நுண் வன்முறைகள் தொடங்கி உலகமயமான போர் வன்முறைகள் வரையிலான கொடூரங்களை அமைதியாக ஏற்பதன் மூலம் அதன் பங்காளர்களாக நாம் ஆகிவிடுகிறோம் இல்லையா?

இவை பலவகையில் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தும் கேள்விகள். என்றாலும் எப்போதும் அரசியல் செயல்பாடுகளுக்கான, விடுதலைக் கோட்பாடுகளுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது, களங்களும் விரிந்து கொண்டே இருக்கிறது.

(அணங்கு ,2009)

பன்மீயக் கட்டமைப்புகளும் மார்க்சியமும் – ந. முத்து மோகன்

இருபதாம் நூற்றாண்டில் சமூக மாற்றம் குறித்த எல்லா கேள்விகளும் குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் வந்து மையம் கொள்வதாகத் தோன்றுகிறது. பன்மீயக் கட்டமைப்புகளை மார்க்சியம் எவ்வாறு எதிர்கொள்ளுகிறது? என்பது அப்பிரச்சினையாகும். பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கு ஐரோப்பியச் சூழல்களில் உருவான மார்க்சியக் கோட்பாடு ஐரோப்பாவிலும், அதைத் தாண்டி, மூன்றாம் உலக நாடுகளிலும் நிறவெறி, ஆணாதிக்கம், சாதி அமைப்பு, பழங்குடிச் சமூகங்கள், தேசிய இன அடையாளங்கள் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும் போது என்ன விதமான நிலைப்பாடுகளை முன்வைக்கிறது? என்று அப்பிரச்சினையை நாம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். எல்லாச் சமூக முரண்பாடுகளையும் பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை நோக்கிச் சுருக்கிக்காட்டுவது நியாயமா? என்பது அப்பிரச்சினையின் ஒரு மறுபக்கக் கேள்வியாகும். ஒவ்வொரு முரண்பாட்டையும் அதனதன் தனித்தன்மைகளுடன் அங்கீகரிக்க வேண்டியது அவசியமல்லவா? என்றும் அப்பிரச்சினை விரிவடையுமாக இருக்கலாம். அமைப்பியல் என்ற ஒரு சிந்தனைப் போக்கு முன்னுக்கு வந்த நாட்களிலிருந்து, மேற்குறித்த பிரச்சினை, பன்மீயக் கட்டமைப்புகளை மார்க்சியம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?  என்ற வடிவத்தைப் பெறுகிறது. இப்பிரச்சினையை இக்கட்டுரையில் பேசி விவாதிக்க முனைவோம்.

 மார்க்சியக் கோட்பாட்டில் அதன் பொருளாதார அளவையியல் வலுவானது என்பதை முதலில் தெரிவித்தாக வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து, மார்க்சின் மூலதனம் நூலின் தருக்கவியல் சாதித்த அரசியல் எழுச்சி சமீப கால வரலாற்றில் மிக முக்கியதாகும். உலக வரலாற்றில் இதற்கு முன் எழுந்த சமூக எழுச்சிகளோடு ஒப்பிடும்போது அது மிக அடிப்படையாக, கோட்பாட்டு வலுவோடு, அடித்தளத்திலிருந்து மக்களைத் திரட்டும் ஒரு பெரும் பணியை அரசியல்த் தளத்திற்குக் கொண்டுவந்தது. பொருளாதாரச் சுரண்டல் என்ற ஓர் அளவையை அது உருவாக்கியிராவிட்டால் இத்தனை உறுதிப்பாட்டோடு, தொடர்ச்சியோடு ஒரு சமூக அரசியல் இயக்கத்தைக் கட்டியமைத்திருக்க முடியுமா? என்பது சந்தேகத்திற்குரியது. எனவே பொருளாதாரக் கட்டமைப்பை ஒற்றைப்படையாக நிராகரிப்பதில் மட்டும் அக்கறை காட்டுவோரை நாம் இங்கு பொருட்படுத்தப் போவதில்லை. எனவே இக்கட்டுரையில் நாம் பேசி விவாதிக்க முனையும் பிரச்சினை, பொருளாதாரத்தை ஏன் நிராகரிக்க வேண்டும்? என்பது குறித்ததல்ல,  மாறாக  மூன்றாம் உலகச் சூழல்களில் நம் முன் வந்து  நிற்கும் பிற கட்டமைப்புகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது?  என்பது குறித்ததேயாகும்.

பன்மீயக் கட்டமைப்புகள் என்ற பிரச்சினை வெவ்வேறு வடிவில் இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே மார்க்சியரின் முன் எழுந்த காலங்களிலேயே அவற்றைப் பொருட்படுத்தி பலவகையான விவாதங்கள் நடந்து வந்துள்ளன என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். மார்க்சியர்கள் அப்பிரச்சினையை எப்போதுமே நிராகரித்து வந்தார்கள், பிற போராளிகள்தாம் அப்பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள் என கற்பனை செய்து கொள்ளுவது சரியாக இருக்காது. பலவகைப்பட்ட சமூக முரண்கள் உள்ளன என்பதை மார்க்சியர்கள் ஏற்றுக் கொண்டுதான் தொழில்பட்டுள்ளனர். பலவகைச் சமூக முரண்களை எதிர்கொண்டாகவேண்டும் என்பதிலும் அவர்கள் பின்னடைய வில்லை. ஆயின் அவர்களில் பலர் அச்சமூக முரண்களை பொருளாதார அளவையினைக் கொண்டே மதிப்பிட்டனர் என்பது உண்மையாக இருக்கலாம். இதே காலக்கட்டத்தில் நிறவெறி, ஆணாதிக்கம், சாதியம், தேசிய இனப் பிரச்சினை ஆகியவற்றைத் தனித்தனியான அமைப்புகளாகக் கையாண்டு சுயநிலையிலான கோட்பாட்டுத் தளங்களை உருவாக்கிய சிந்தனையாளர்களும் உண்டு. அதுபோன்ற சுயநிலைக் கோட்பாடுகள் மார்க்சியரிடமிருந்து அங்கீகாரத்தைக் கோரியபடி அல்லது மார்க்சியருக்கு கோட்பாட்டு அழுத்தங்களை வழங்கியபடி இருந்தன என்பது உண்மை. ஒருசிலர் மார்க்சியத்தை அடியோடு நிராகரித்துச் செல்லவேண்டும் எனும் வேலைத்திட்டத்தை முன்வைத்தனர் என்பது மற்றொரு உண்மை. ஆயின் அவர்களால் வெகுதூரம் செல்லமுடியவில்லை. மேற்கத்திய பூர்ஷ்வா தாராளவாத எல்லைகளுக்குள் அவர்கள் சில ஆதாயங்களை ஈட்டியிருக்கலாம். எனவே மார்க்சியத்திற்கு கோட்பாட்டு அழுத்தங்களை வழங்கிய சிந்தனையாளர்களுக்கும் இயக்கங்களுக்கும் உரிய மரியாதையை வழங்கியே இவ்விவாதத்தை நாம் முன்வைக்கிறோம். தாராளவாதச் சறுக்கல்களுக்குள் சென்று சிக்கிக் கொண்டோரைப் பற்றி இங்கு நாம் அதிகம் கவலைப்படப் போவதில்லை.

ஜியார்ஜ் லுக்காச்சின் முழுமை என்ற கருத்தாக்கம்

இருபதாம் நூற்றாண்டின் முகப்பிலேயே மார்க்சியத்தை அதன் ஹெகலிய வேர்களுக்கு மீட்டுக் கொண்டு செல்லவேண்டும் என்ற வேலைத்திட்டத்தோடு ஜியார்ஜ் லுக்காச் முயன்றார். அவரது முக்கியமான கருத்தாக்கம் முழுமை (Totality) எனப்பட்டது. ஒரு சமூகப் புரட்சி பொருளாதார முரண்பாடுகளால் மட்டும் நிர்ணயமாகிவிடாது, அது மொத்த சமூக அமைப்பையும் தமுவியதாக அமைய வேண்டும் என அவர் கூறினார். சமூகப் புரட்சி பொருளாதார எல்லைகளைத் தாண்டி, வர்க்க உணர்வு, சமூக உணர்வு என்ற எல்லைகளை எட்டும்போதே முழுமை நிலையை அடைகிறது என்பது லுக்காச்சின் நிலைப்பாடு. தொழிலாளர் வர்க்க நலன் என்ற உடனடி, நேர்க்காட்சி (சுயப்பிரயோசன) நிலையைத் தாண்டி சமூகம் முழுவதையும் பற்றிப் பீடிக்க வேண்டும் என்பதாக லுக்காச்சின் வாதம் அமைந்தது.

லுக்காச் இங்கு பொருளாதார நிர்ணயவாதத்தை மிக மென்மையாக விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும். சமூக உணர்வு, சமூகப் பிரக்ஞை (Social Consciousness) என்ற வட்டாரத்தை நோக்கி அவர் நகருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு முக்கியமான அசைவு. பொருளாதார முரண்கள் தாமாகவே சமூக மாற்றத்தை நிர்ணயிக்கும் என்பது ஒரு பொருள்முதல்வாத முடிவாக இருக்கலாம். ஆயின் அது சமூகத்தினுள் தொழில்படும் இயங்கியல் குறித்ததாக இல்லை. அந்த இயங்கியலை மீட்கும்போதே லுக்காச் ஒரு ஹெகலியராகத் தென்படுகிறார். பொருளாதார முரண்பாட்டை சமூகப் பிரக்ஞையாக்குவது ஓர் அரசியல் செயல்பாடு. ஆக பொருளாதாரம், பிரக்ஞை, அரசியல் என்ற மூன்று வட்டாரங்களின் கூட்டுச் செயல்பாட்டை லுக்காச் முழுமை என்ற சொல்லாக்கத்தால் குறிப்பிடுகிறார். சமூகப் பிரக்ஞை என்பதும் அரசியல் என்பதும் பொருளாதாரத்தின் பிரதிபலிப்புகளே என்ற நிலையைத் தாண்டி அவை அவ்வவற்றின் தளத்தில் படைப்புத்தன்மை கொண்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவை ஒன்றிலிருந்து ஒன்றாகவும், சுயமாகவும், பரஸ்பரமாகவும், இணைந்தும் தொழில்படும்போதே ஒரு சமூகப் புரட்சி நிகழமுடியும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். நாம் நினைப்பதுபோல் மார்க்சியம் ஒற்றைப் பிடிவாதமான கோட்பாடு அல்ல என்பதை இங்கு பதிவு செய்யலாம்.

கறுப்பின மார்க்சியர்

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மார்க்சியரோடு பொருதி அதனைச் செழுமைப்படுத்தியோரில் கறுப்பினப் புரட்சியாளர்களைச் சொல்லவேண்டும். பிரான்ஸ் பனோன், சி.எல்.ஆர்.ஜேம்ஸ், இன்னும் பல ஆப்பிரிக்கச் சிந்தனையாளர்கள் இங்கு குறிக்கத்தக்கவர்கள். பொருளாதாரச் சுரண்டல் என்ற அம்சத்தோடு, அதிலிருந்து சுதந்திரமாக, நிறவெறி ஒடுக்குமுறை என்ற அம்சத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர். ஐரோப்பிய மார்க்சியம் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே பகுத்தறிவு மரபின் தொடர்ச்சியாக அமைந்து போனதைச் சுட்டிக்காட்டிய இவர்கள் உணர்ச்சிமயமான நிறவெறிக் காலனியாதிக்கத்தை அது உள்வாங்கவில்லை எனக் குற்றம் சாட்டினர். கருத்துக்களின் முரண்தருக்கவியலில் மார்க்சியம் அக்கறை காட்டுகிறது, எனவே உணர்ச்சிகளின் இயங்கியல் அதன் போதாமையாக இருக்கிறது என்பது அவர்களின் வாதம். உணர்ச்சிகளின் இயங்கியல் பற்றிப் பேசுவதற்கு இருத்தலியம் அவர்களுக்கு உதவியது. வெள்ளை நிறவெறி அமைப்பிலேயே ஐரோப்பிய முதலாளியம் வேர்கொண்டுள்ளது என அவர்கள் வாதிட்டனர். காலனியமும் நிறவெறியும் உலக ஏகாதிபத்தியத்தின் தூண்கள் என்பதனை இவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஆப்பிரிக்காவை முன்நிறுத்தாமல் ஐரோப்பிய வரலாற்றை எழுதமுடியாது என இவர்கள் கூறினர். பொருளாதாரம் என்பதே ஐரோப்பாவின் சொந்த அளவை, பிற அளவைகளை மறைப்பதற்கு அது பொருளாதாரத்தையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் முன்நிறுத்துகிறது என அவர்கள் வாதிட்டனர்.

கறுப்பினப் புரட்சியாளர்களின் வாதங்களில் கொஞ்சமாகவோ அதிகமாகவோ நியாயம் இருந்தது. மார்க்சியரின் பொருளாதாரச் சுரண்டல் என்ற கருத்தாக்கம் எப்போதுமே ஒடுக்குமுறை என்ற விடயத்தைப் புறக்கணித்ததில்லை. மார்க்ஸ் அவரது பொருளாதார ஆய்வுகளுக்கு வந்துசேருவதற்கு வெகுமுன்னதாகவே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராளியாகத்தான் இருந்தார். ஒடுக்குமுறைகளின் காரணிகளைத் தேடிச் சென்றபோதே அவர் பொருளாதார ஆய்வுகளுக்குள் நுழைந்தார். இது லெனின், மாவோ, ஹோசிமின், சேகுவாரா, காஸ்ட்ரோ போன்ற எல்லாப் புரட்சியாளர்களுக்கும் பொருந்தும். விவசாய சங்கங்களிலும் தொழிற்சங்கங்களிலும் வேலை செய்யும் கம்யூனிஸ்டுகளிடம் கேட்டுப்பாருங்கள்-நீங்கள் எப்படி கம்யூனிஸ்ட் ஆனீர்கள் என்று. ஆங்காங்கே வாழ்வியல் தளத்தில் சந்தித்த அடக்குமுறைகளிலிருந்தே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பார்கள். பொருளாதாரக் கல்வி பெற்று, சுரண்டலின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு கட்சிகளுக்குள் வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி, மார்க்ஸ் எங்கேயாவது பொருளாதாரம் எனத் தனியாகப் பேசினாரா? பூர்ஷ்வா பொருளாதார அறிஞர்கள் அப்படிப் பேசியிருக்கலாம். மார்க்ஸ் எப்போதுமே “அரசியல்” பொருளாதாரம் என்றே பேசுவார். பொருளாதாரச் சுரண்டலை அரசியலாக்கிவிடுவது ஆளும் வர்க்கத்தின் தந்திரம். பொருளாதாரச் சுரண்டல் முறைகள் சட்டமாக்கப் படுகின்றன, பொருளாதாரமல்லாத முறைமைகளின் மூலமாக நியதிகளாக்கப்படுகின்றன, அது பொருளாதாரச் சுரண்டல் அல்ல, அது ஒரு புனித நியதி, அது ஓர் அறம், அது ஒரு சமூக நிர்வாக முறை என்றெல்லாம் ஆக்கப்படுவதன் மூலமாகவே ஆளும் வர்க்கம் வெற்றிபெறுகிறது. பொருளாதாரத்திற்கும் அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் கலாச்சார வடிவங்களுக்கும், பொருளாதாரத்திற்கும் அறத்துக்கும் மதத்திற்கும் இடையிலான உறவுகள் மிகச் சிக்கலானவை, தந்திரமானவை. அவை தனித்தனியாக அலைவது கிடையாது. எல்லாவற்றையும் விட அப்பட்டமானது, நேரடியானது, கட்டாயமானது பொருளாதாரச் சுரண்டல் என்பதே மார்க்சியத்தின் அறிவிப்பு. எனவேதான் அதனைப் பொருள்வகைச் (Material) சுரண்டல் என்றார் மார்க்ஸ். அரசியல் அதிகாரம் அல்லது சமய அதிகாரம் நிறுவனப்படும்போது அதுவும் பொருள்வகை உறவமைப்புதான். கருத்துக்கள் பல கோடி மக்களைப் பற்றிப் பிடிக்கும்போது அது பொருட்சக்தியாக மாறுகிறது என்று மார்க்ஸ் சொல்லுவாரே! அரசியலும் மதமும் பொருட்சக்தியாக முடியாது என்று மார்க்ஸ் எங்காவது சொல்லுகிறாரா, என்ன? அணு எப்படி ஒரு சடப்பொருளோ அதுபோலவே அந்த அணுவை உடைக்கும்போது தோன்றும் ஆற்றலும் பொருட்சக்திதான். நிறுவனப்பட்ட அதிகாரம் ஒரு பொருளாற்றல் என்பதை மார்க்சியம் மறுக்காது.

அந்தோனியோ கிராம்சியும் லூயி அல்த்தூசரும்

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பன்மீய அமைப்புகள் என்ற எதார்த்தத்தை ஏதோ ஒருவகையில் சந்தித்து அதனை எதிர்கொண்டவர்களாக கிராம்சியையும் அல்த்தூசரையும் சொல்ல வேண்டும். கிராம்சி பண்பாட்டு அரசியல், குடிமைச் சமூகம் போன்ற கருத்தாக்கங்களைச் சென்று சேர்ந்தார். அல்த்தூசர் ஒற்றை நிர்ணயம் என்பதை மறுத்து மிகைநிர்ணயம் அல்லது குவி நிர்ணயம் என்ற முடிவுக்குச் சென்றார். பொருளாதாரம் கடைசி கடைசியாக நிர்ணயிக்குமாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு வரலாற்றுச் சந்தர்ப்பத்திலும் பொருளாதாரமே ஆளுமை செய்யும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றார். எது நிர்ணயிக்கிறது? என்பது ஒரு பகுப்பாய்வுக் கேள்வி. குறிப்பிட்ட வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் எது ஆளுமை செய்யும்? என்பது நடைமுறைக் கேள்வி என்று அல்த்தூசர் விளக்கமளித்தார். Determinant, Dominant என்ற இரண்டு கருத்தாக்கங்களை அல்த்தூசர் பயன்படுத்தினார். ரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி போன்றவை அப்படி ஒற்றையாகவெல்லாம் நிர்ணயமாகவில்லை என்றார் அல்த்தூசர்.  எந்தப் புரட்சியுமே அப்படி ஒற்றையாக நிகழாது என்பதுதான் அல்த்தூசரின் நிலைப்பாடு.

அந்தோனியோ கிராம்சியின் Hegemony என்ற கருத்தாக்கம் தமிழில் மேலாண்மை என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அக்கருத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொழிலாளர் வர்க்க மேலாண்மை என்ற பொருளில் ஒலித்தது உண்மைதான். ஆயின் அதனை கிராம்சி பயன்படுத்தியபோது, கிராம்சிக்குப் பிறகு எடுத்தாளப்படும்போது, அதற்கு மேலாண்மை என்ற பொருள் அவ்வளவு சரியானதாக அமைவதில்லை. பலவகைச் சமூக முரண்களை ஒன்றுபடுத்தும் அரசியலை அது முன்வைக்கிறது. ஏதாவது ஒரு வகை சமூக முரணை முந்தியதாகக் காட்டாமல், முரண்களை ஒருங்கிணைக்கும் அரசியலை அது முன்மொழிகிறது. பலவகை முரண்களை ஒருங்கிணைப்பதற்கு ஆதாரமாக ஒரு சமநிலைத்தன்மை (Equivalence) அமையும், அவை ஒரு பொது எதிரியை அடையாளப்படுத்தும் நிலை ஏற்படும், அதனை ஆதாரமாகக் கொண்டு ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என எனஸ்டோ லக்லவ் எனும் அறிஞர் வாதிடுகிறார். இது ஓர் அரசியல் பணி (Return of the Political) என்கிறார் சன்தால் மோஃபே என்ற அறிஞர்.

பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆட்படும் வர்க்கங்கள் கூட “இயல்பான நிலையில்” ஒன்றுபட்டதாக இருக்காது, அப்படி இருப்பதாகக் கருதுவது ஒரு கற்பனை என்கிறார் சன்தால் மோஃபே. துண்டுபட்ட சமூகப் பிரிவினரை, தனித்தனியாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் தனிமனிதர்களை ஒன்றுபடுத்துதல் என்பதே ஓர் அரசியல் வேலைதான் என்கிறார் அவர். சமூகக் குழுக்களோ, தனிமனிதரோ தம்மைத் தனித்தவராகக் கருதிக் கொள்ளுதல் ஒரு நேர்க்காட்சி நிலை. தன்னிச்சையான நிலை. சுயப்பிரயோசன நிலை. இது வழக்கிலுள்ள உடமைச் சமூக அமைப்பால் உருவாக்கப்படும் கருத்தியல் நிலை. இது உடமைச் சமூகம் உருவாக்கித்தரும் ஒரு பொய்யுணர்வு. இதைத் தாண்டிச் சென்று, அவற்றின் ஊடாகச் சென்று சமநிலைப் பண்புகளைக் கண்டறிந்து, எடுத்துரைத்து, ஒன்றிணைப்பது அரசியல். தனித்தனியாக ஒவ்வொரு சமூகப் பிரிவும் தமது உரிமைகள், நலன்கள் அடிப்படையில் தன்னுணர்வு பெறுதல் ஓர் ஆரம்ப நிலை; தன்னுணர்வு பெறுதல் என்ற நிகழ்வுப் போக்கின் முதல் நிலை. இது தேவைதான்; இது தவிர்க்கமுடியாததுதான். ஆயின் இதுவே எல்லாமாக ஆகிவிடாது. தன்னுணர்வையும் சுயப்பிரயோசனத்தையும் பூர்ஷ்வா சனநாயகமே, பூர்ஷ்வா தாராளவாதமே அனுமதிக்கும். அவை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகராமல் தாராளவாத எல்லைகளுக்குள்ளேயே தொழில்படவேண்டும் என்பதே ஆளும்வர்க்கங்களுக்கு ஆதாயமான நிலை. ஆயின் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கு அது போதாது. போதவே போதாது. அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும். தன்னுணர்வையும் சுயப்பிரயோசனத்தையும் விடுதலை அரசியலாகக் கருதுவது அப்படிக் கருதும் சக்திகள் இன்னும் தாராளவாதத்தின் எல்லைகளைத் தாண்டவில்லை என்பதைக் காட்டும்.

பொருள், அமைப்பு எனும் கருத்தாக்கங்களைப் பற்றி

பொருளாதார உறவுகளை மார்க்சியம் பொருள்வகை (Material) உறவுகள் எனக் கண்டறிந்தது.  இது உலகத் தத்துவ வரலாற்றில் ஒரு புதுநிலை. பஞ்சபூதங்களையும் அணுக்களையும் மனித தேகத்தையும் புலனுணர்வுகளையும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் மார்க்சுக்கு முந்திய பொருள்முதல்வாதிகள் “பொருள்”(Matter) என வரையறுத்திருக்கின்றனர். மார்க்ஸ் சமூகவாழ்வினுள் “பொருளை”த் தேடினார். அது அவருக்குக் கிடைத்தது. மனித வாழ்வினுள் “பொருள்” எனப்படுவது உழைப்பு, நடைமுறை, பொருளாதார உறவுகள், வர்க்கப் போராட்டம் என்றெல்லாம் மார்க்ஸ் புதுத்தத்துவம் பேசினார். இதுவே மார்க்சியத்தின் சாதனை.

பொருளாதார உறவுகள் அல்லது உழைப்பு என்பது பஞ்சபூதங்கள் அல்லது அணுக்கள் போன்றவையா? இவை ஒருவகைப்பட்டவையா? பஞ்சபூதங்கள், அணுக்கள், மனித தேகம் போன்றவை பௌதீகத்தன்மை கொண்டவை. பொருளாதார உறவுகளை மார்க்ஸ் “பொருள்” என்ற கருத்தாக்கத்தினுள் கொண்டுவரும் போது எந்த வகையில் அவற்றைப் “பொருள்” எனக் கருதினார்? என்ற கேள்வி முக்கியமானது. எது மனித வாழ்வை மிக அடிப்படையாகத் தீர்மானிக்கிறதோ, அது சமூக அசைவுகளைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவோ அவற்றை மார்க்ஸ் “பொருட்தன்மை” கொண்டவை என்கிறார். அவற்றை மார்க்ஸ் “பொருள் வகைப்பட்டவை” என்கிறார். எனவே வெறும் சடப்பொருட்களை, பௌதீகப் பொருட்களை மார்க்ஸ் மனிட வாழ்வினுள் தேடிக் கொண்டிருக்கவில்லை. புற உலகில் பௌதீக சக்திகள் போல் சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்துபவற்றை அவர் தேடினார். சமூக வாழ்வில் பௌதீக சக்திகள் போல் இறுகிக் கிடக்கும் அத்தகைய பொருள்வகைப்பட்ட உறவுகளை அதேபோல பொருள்வகைப்பட்ட செயல்பாடுகளாலேயே உடைத்து நொறுக்கமுடியும் என்பது மார்க்சின் முடிபு. அதாவது உடமை உறவுகள் சமூகத்தினுள் பொருள்வகை உறவுகள். அவற்றை வர்க்கப்போராட்டங்கள் என்ற பொருள்வகைப்பட்ட செயல்பாடுகளாலேயே உடைக்க முடியும். கருத்தளவிலான ஆசைகளாலோ லட்சியங்களாலோ உபதேசங்களாலோ உடைக்க முடியாது என்பது மார்க்சியம்.

எனவே மார்க்ஸ் பயன்படுத்தும் “பொருள்” என்ற கருத்தாக்கத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அது பௌதீகப் பொருளல்ல. சடப்பொருளல்ல. பௌதீகம் போல், சடப்பொருள் போல் சமூகத்தினுள் தொழில்படும் பொருள்வகைப்பட்ட சமூக உறவுகள், அவற்றை உடைக்க முயலும் சமூகச் செயல்பாடுகள்.

இந்த விடயத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், பன்மீக அமைப்புகளை மார்க்சியம் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் எளிதில் கையாளமுடியும். சமூகப் பரப்பினுள் எவையெல்லாம் பௌதீகத் தன்மையுடன், சடப்பொருள்போல், இறுகிக்கிடந்து மனிதக் கூட்டங்களை அமுக்கி வருகின்றனவோ அவையெல்லாமே பொருள்வகை அமைப்புகள் தாம். அவற்றை அதேபோல பொருள்வகைப் பண்பு கொண்ட செயல்பாடுகள் மூலம் எதிர்கொள்ளவேண்டும் என்பதே மார்க்சியம். பொருளாதார உறவுகள் மட்டுமே நம்மை அமுக்குகின்றன என்பதில்லை. சாதி, ஆணாதிக்கம், நிறவெறி எனப்பல வடிவங்கள் நம்மை அமுக்கி அழிக்குமாக இருக்கலாம். அவை அனைத்துக்கும் எதிராகத் தீவிர விமர்சனச் செயல்பாடுகளைச் செலுத்தவேண்டும் என்பதே மார்க்சியம். பல வேலைகளில் கோட்பாட்டு விவாதங்ககளைவிட இப்பிரச்சினைகளை நடைமுறைரீதியாகக் கையாள வேண்டும் என்பதை மார்க்சியம் மறுக்காது.

ந. முத்து மோகன்

ஊழல் உலைகளும் ஒடுக்க முடியாத போராட்டமும் – மாலதி மைத்ரி

இடிந்தகரை இந்தியாவிற்குச் சொல்லும் செய்தி

MALATHI MAITHRI ARTICLE IMAGE-2இடிந்தகரைக்கு வந்து செல்லும் பேருந்துகள் அரசால் நிறுத்தப்பட்டு இந்த மார்ச்சுடன் ஒருவருடமாகிவிட்டது. இடிந்தகரையிலிருந்து மருத்துவச் சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, தொழில் தொடர்பான வேலைகளுக்காக, பிற அவசரத் தேவைகளுக்காக வேன் பிடித்து வெளியிடங்களுக்குச் செல்பவர்களைத் தமிழக அரசு கைதுசெய்து மிரட்டுவதால் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே சென்று வருவதை முற்றாக நிறுத்திவிட்டனர். பிரசவத்துக்காகக்கூட பெண்களை நகர மருத்துவமனைக்கு அழைத்துப் போக முடியவில்லை. வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் கடத்தப்படலாம், பொய் வழக்கில் கைது செய்யப்படலாம், அரசியல் கட்சிக்களின் கைக்கூலிகளால் தாக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரேஷன்கடைப் பட்டியலைப் பார்த்து உணவுப் பொருட்களை முறையாக வழங்கி மக்களுக்குச் சோறுபோடவேண்டிய திருநெல்வேலி ஆட்சியாளர் ஒரு குடும்பத்துக்கு பத்து வீதம் பொய் வழக்குகளைப் போட்டு வைத்துள்ளார். முன்னணிப் போராட்டக்காரர்கள் மீது 150 வழக்குகளுக்கு மேல் இருக்கிறது. ‘தேசத்துரோக வழக்கு’, ‘தேசத்தின் மீது போர்த்தொடுத்தல்’, ‘ஆட்சியாளரைக் கடத்த முயற்சி’, ‘அதிகாரிகளைத் தாக்குதல்’, ‘பணி செய்யவிடாமல் தடுத்தல்’, ‘பொதுச்சொத்தைச் சேதப்படுத்தல்’, ‘கொலை முயற்சி’ ‘குண்டர் தடைச்சட்டம்’, இப்படியாக இந்தியச் சட்ட புத்தகத்தில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் இந்த மக்கள் மீது போட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் கல்லறையில் புதைக்கபட்டவர்கள் மீதுகூட வழக்குகள் போடப்பட்டுள்ளன. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக்குவதுடன் இறந்தவர்களையும் உயி்ர்ப்பிக்கும் வேலையையும் காவல்துறையினர் செய்கின்றனர். இப்பகுதி மக்கள் கூடங்குளம் அணுவுலைகளை எதிர்ப்பதைக் காரணம்காட்டி பல்முனைக் கண்காணிப்பு வளையத்தையும் அதிதீவிரப் பாதுகாப்பு வளையத்தையும் அணுவுலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உருவாக்கி மத்திய, மாநில அரசுகள் கிராமங்களைச் சிறைப் பிடித்து வைத்துள்ளன. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கால காட்டாட்சி இச்சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து கொண்டுள்ளது.

தடையற்றப் போக்குவரத்தை முடக்கி, சாலைகளில் பல சோதனைச்சாவடிகளை நிறுவி ஆயுதம்தாங்கிய காவல்படைகளை அரசு குவித்து வைத்துள்ளது. இச்சோதனைச் சாவடிகளைகளைத் தாண்டி வியாபாரிகள் உணவுப்பொருட்களை லாரிகளில் கிராமத்திற்கு எடுத்துவர அஞ்சுகின்றனர். உணவுப்பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள் போன்ற தினசரித் தேவைக்கான பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு. குடிநீர் உட்பட எல்லா அடிப்படைத் தேவைக்கான பொருட்களுக்கும் அதிக விலை கொடுக்கவேண்டிய நிர்பந்தம். குழந்தைகள் அதிகக் கட்டணம் கொடுத்து வேன்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். நோயுற்றக் குழந்தைகளும் முதியவர்களும் கர்ப்பிணிகளும்கூட மருத்துவச் பரிசோதனைக்கோ சிகிச்சைப்பெறவோ இடிந்தகரையை விட்டு வெளியேச் செல்வதில்லை. உற்றார் உறவுகள், நண்பர்கள் வீட்டு இன்பதுன்ப நிகழ்ச்சிகளுக்கும்கூட யாரும் போகமுடியாத நிலை. போராட்டம் தொடங்கியதிலிருந்து பள்ளிக்குழந்தைகள் பக்கத்துக் கிராமங்களில் உள்ள தங்கள் தாத்தாப்பாட்டி வீடுகளுக்குக்கூட விடுமுறை, பண்டிகை நாட்கள் எனப் போகமுடியாத சூழல்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இடிந்தகரை போராட்டக் களத்திற்கு வந்ததிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்திக்க முடியவில்லை. பல்வேறு பொய் வழக்குகளைச் சுமந்திருக்கும் இவர்கள் மீது வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறவர்கள், அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என்று பல்வேறு நிரூபிக்க முடியாத அவதூறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. உதயக்குமாரும் அவரது துணைவியார் மீராவும் நடத்தும் பள்ளி அடையாளம் தெரியாத கூலிப்படையால் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தொடர்ந்து அச்சுறுத்தலும் வந்தபடியுள்ளது. அத்துடன் அவர்கள் குடும்பத்தினர் கொலை மிரட்டலுக்கும் தொடர்ந்து உள்ளாகிவருகின்றனர். நோயுற்ற தன் தந்தையை அருகில் இருந்து கவனிக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறார் உதயக்குமார். புஷ்பராயன் நடத்தி வந்த கிராமப்புறக் கல்வி வளர்ச்சிக்கான தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இவரது குடும்பம் தற்போது எந்தவித வருவாயும் அற்ற நிலையில் உள்ளது. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள முடியாத அவல நிலையைச் சந்தித்தார் புஷ்பராயன். தன் குடும்பத்தைப் பார்க்க ஈரோடு சென்ற முகிலன் நக்ஸலைட்டென்ற குற்றச் சாட்டின்கீழ் கடலூர் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். கூடங்குளத்தைச் சோ்ந்த ராஜலிங்கம் மற்றும் தேங்காய் வியாபாரி கணேசன் இருவரையும் காவல்துறையினர் தொடர்ந்து தாக்கி மிரட்டியதால் ஆறுமாதமாக இடிந்தகரையிலேயே தங்கிப் போராட்டத்தை தொடர்கின்றனர். கூடங்குளத்தைச்சோ்ந்த மனநிலை பிறழ்ந்த ஜோசப் என்கிற திருமேனியைக் கைதுசெய்து சிறையில் அடைத்து துன்புறுத்திய கொடுமையும் நிகழ்ந்துள்ளது. விடுதலையான பின் கூடங்குளத்திற்குப் போக அஞ்சி இடிந்தக்கரையிலேயே அடைக்கலமாகிவிட்டான் ஜோசப்.

MALATHI MAITHRI ARTICLE IMAGE-5கடந்த இரண்டு வருடமாக இப்பகுதிக் குழந்தைகளின் கல்வி முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டது. பொதுத்தோ்வு எழுத வேண்டிய அப்பகுதி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தோ்வு எழுதவும் அதற்காக தனிப்பயிற்சி பெறவும் போகமுடியாத துயரத்தில் உள்ளனர். இம்மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவானதால் அரசு இடங்களைப் பெற முடியாமல் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டியிருக்கிறது. இதனால் இம்மாணவர்களின் பெற்றோர் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி கடனாளியாக்கப்பட்டுள்ளனர். பணம் கட்டி படிக்க முடியாத பல மாணவா்கள் மேற்படிப்பைத் தொடர முடியாத அவலமும் நடக்கிறது. வயது வந்த தங்கள் பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் திருமணம் நடத்திவைக்க முடியாத சூழலால் பல குடும்பத்தினர் மன உளச்சலுக்கு உள்ளாகிவருகின்றனர்.

கிராமத்தில் நிலவும் அசாதாரண பதற்றத்தாலும் ஊர் மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலாலும் மெல்கிரெடின் மகன் பனிரென்டாம் வகுப்புத் தேர்வுக்குச் சரியாகப் படிக்க முடியாமல் 900 சொச்ச மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. சிறந்த மாணவனான அவனுக்கு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, தனியார் கல்லூரியில்தான் சேர முடிந்தது. லட்சக் கணக்கில் பணம்கட்ட முடியாமல் இன்று தவித்துக்கொண்டிருக்கிறார் மெல்கிரெட். நீரழிவு நோயாளியான அவரின் பார்வை பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார். அதற்காக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூட நகரத்துக்கு அவர் போக முடியவில்லை. இவர் மீதும் பல பொய்வழக்குகள் உள்ளன.

ஓரு தொண்டு நிறுவனத்தில் சமூகப்பணியாளராகப் பணியாற்றிய இனிதா, இடிந்தகரை கிராமத்துக்கான பஞ்சாய்த்து கவுன்சிலரும் ஆவார். ஊரைவிட்டு வேலைக்குப் போகமுடியாததால் வேலை பறிபோய்விட்டது. ஊனமுற்ற கணவரையும் படிக்கும் இரு மகள்களையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறார். கல்லூரியில் படிக்கும் மூத்த மகளுக்கு பணம் கட்ட முடியவில்லை. போராட்டப்பந்தலில் அமர்ந்தபடி பீடி சுருட்டும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார். இவாின் கணவருக்கு நெஞ்சுக்குள் வளர்ந்து வரும் தசைக்கட்டி என்ன வகையானது என்று பாிசோதித்துக் கொள்ளக்கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. இவர் மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன.

MALATHI MAITHRI ARTICLE IMAGE-12012, செப்டம்பர் 10-ஆந்தேதி கூடங்குளம் அணுவுலை முற்றுகைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் சேவியரம்மா, சுந்தரி, செல்வி ஆகியோர் முன்னணி பெண் போராளிகள். இவர்கள் தண்டிக்கப்படும் முறையைப் பார்த்து இனி பெண்கள் உரிமைகளுக்காகப் போராட வீதிக்கு வரக்கூடாது என்ற திட்டத்துடன் காவல்துறையும் நீதித்துறையும் ஆட்சியாளர்களும் பல கொடுமைகளைச் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களுக்கு காவல்துறையினரும் சிறைத்துறையினரும் அளிக்கும் தண்டனைகளையும் அவமானத்தையும் கொடுமைகளையும் பார்த்து இனி பெண்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும், அதிகார வர்க்கம் எண்ணுகிறது. கைது செய்து நீதிபதிமுன் ஆஜர்படுத்தாமல் தனி வீட்டில் அடைத்து வைத்து காவல்துறை இவர்களை அச்சுறுத்தியது. இவர்கள் எங்கு கொண்டுசெல்லப்படனர் என்பதே யாருக்கும் ஒன்றரைநாள் வரை  தெரியவில்லை. கோர்ட்டுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் அவசர அவரசமாக தலைக்கு ஆயிரம் பொய் வழக்குகள் புனையப்பட்டது, பின் பிணைக் கிடைக்காமல் தடுக்கப்பட்டது. சுந்தரியின் மீது ‘ஆட்சியாளரைக் கடத்தல் முயற்சி’ என்ற வழக்கும் சுமத்தப்பட்டது. காவல்நிலையத்தில், சிறைச்சாலையில் ஆடைகள் களையப்பட்டு சோதனை என்ற பெயரில் இவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களை மிக ஆபாசமாகத் திட்டி கேவலப்படுத்தியுள்ளனர். உயிரோடு ஊர் திரும்ப முடியாதென்று கொடூரமான மிரட்டலும் இவர்களுக்குத் தரப்படுள்ளது. திருநெல்வேலி மாவட்டச் சிறைச்சாலையிலிருந்து திருச்சி சிறைச்சாலைக்கு மாற்றி உறவினரும் நண்பர்களும் இவர்களைச் சந்திக்கமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்குக் கோர்ட்டுக்கு வரும்போது சுற்றி வளைத்து வந்த ஆயுதம் தாங்கிய காவல்படை இவர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும்கூட அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை. வெறும் கரங்களை உயர்த்தி கோஷமிட்டு அறவழியில் போராடிய இவர்களைச் சர்வதேசப் பயங்கரவாதிகளைப்போல அரசு துப்பாக்கி முனையில் பெரும் பாதுகாப்பு படையுடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தது. இப்படி மூன்று மாதங்களுக்கு மேலாக இவர்களைக் கொடுமைப்படுத்திய பின் அரசு பிணை வழங்கியது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாத்திமா பாபு ஒருங்கிணைப்பில் நடக்கும் போராட்டம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் போராட்டம் அனைத்திலும் பெண்கள் அதிகமாக மிரட்டப்படுகின்றனர். காவல்துறையினரும் அதிகாரிகளும் தரக்குறைவான இழிவான முறையில் நடந்து பெண்களை அச்சுறுத்த முயல்கிறார்கள். போராட்டக்காரர்கள் மூன்று பேரை அரசு இதுவரை கொன்றிருக்கிறது. சர்வாதிகார அரசும் போலீசும் எப்படிப்பட்ட அடக்குமுறைகளை ஏவினாலும் எமது பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பின்வாங்கப் போவதில்லை.

கூடங்குளம் அணுவுலைகளை மூடக்கோரி அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பும் துன்பமும் இருந்தாலும் இந்தியச் சரித்திரத்தில் மக்கள் உரிமைப் போராட்டத்திற்குப் புதிய பாதையை அமைத்துத்தந்த இவர்களின் தியாகமும் வீரமும் மனிதவுரிமைவாதிகளாலும் ஜனநாயகத் தன்மைகொண்ட பொதுமக்களாலும் போற்றப்படுகிறது.

MALATHI MAITHRI ARTICLE IMAGE-4மனிதகுலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தான அணுவுலைகள் வேண்டாமென்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் போராடி வந்திருக்கின்றனர். அணுசக்தித்துறையை இதுவரை யாரும் கேள்வி கேட்கமுடியாது, அதன் நிர்வாகத்தின் முறைகேடுகளைப்பற்றியும் அணுவுலைகளின் செயல்பாட்டைப்பற்றியும் வெளிப்படையாக பேசமுடியாது என்ற இரும்புச்சுவரை இப்போராட்டம் தகர்த்தெரிந்துள்ளது. அணுசக்திக் கொள்கை பற்றியும் அதன் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் இந்தியாவிற்கும் உலகிற்கும் புலப்படுத்தியது இம்மக்களின் அளப்பரிய சாதனை. பொது மக்கள் மத்தியில் அணுக் கதீர்வீச்சின் ஆபத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கியது இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றி.

தைவான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் நிறுவப்படும் அணுவுலைகளுக்கு கருவிகளையும் உதிரிப்பாகங்களையும் வழங்கிய ‘ஜியோ போல்ட்ஸ்க்’ நிறுவனம் தரமற்ற பொருட்களை வாங்கித் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலும் அதில் நடைப்பெற்ற ஊழல் குற்றசாட்டின் கீழும் அதன் நிர்வாகி ‘சொ்கை ஷுடொவ்’ ரஷ்ய அரசால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜியோ போல்ட்ஸ்க் நிறுவனத்திடமிருந்துதான் கூடங்குளம் அணுவுலைக்குக் கருவிகளும், உபகரணங்களும், உதிரிப்பாகங்களும் வாங்கப்பட்டுள்ளன. இதனால் கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பு 100 சதவீதம் கேள்விக்குறியாகியுள்ளது. கூடங்குளம் அணுவுலைகளில் கடந்த செப்டம்பரில் யுரோனியம் நிரப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அணுவுலைகளில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களின்போது 2 வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகவும் அவை சரிசெய்யப்பட்டு விட்டன என்றும் ஜனவரி 1-ஆம் தேதி மத்திய இணையமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். பிப்ரவரி மாதத்தில் கூடங்குளம் அணுவுலை இயக்குனர் சுந்தர் ரஷ்யாவிலிருந்து சில மாற்று உபகரணங்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு பழுதுப்பட்ட உபகரணங்கள் மாற்றபட்டன என்றார். ஏப்ரல் மத்தியில் அணுசக்தி ஓழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மேலும் 4 வால்வுகள் பழுதாகியுள்ளன என்கிறார். 2013 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து அணுவுலைப் பணியாளர்களுக்கு நேர்ந்த விபத்துகள் பற்றியும் மரணங்கள் பற்றியும் கூடங்குளம் அணுவுலையில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற கருவிகளைப் பற்றியும் பல செய்திகளை அணுசக்தித் துறையைச் சார்ந்தவர்களே வெளியிடத் தொடங்கியுள்ளனர். (வெளிமாநில அணுவுலைப் பணியாளர்கள் 5 போ் மூன்று மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்). மேலும் முன்னாள் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய அணுசத்தித் துறையில் நடைபெற்ற ஊழலைகள் பற்றியும் கூடங்குளம் அணுவுலைக்கு வாங்கப்பட்ட தரங்குறைந்த பொருட்கள் குறித்தும் விசாரணைசெய்து வௌ்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றும் அதுவரை அணுவுலையின் செயல்பாடுகளை முடக்கிவைக்கவேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். மக்களின் உயிர்வாழ்க்கை மீது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விளையாட வேண்டாமென்றும் அவர் எச்சரிக்கிறார். ஊழல் நோய் புரையோடிப்போன இந்தியாவின் ஆளும் அதிகார வர்க்கம் அடக்குமுறையை ஏவியும் பொய்த்தகவல்களை அளித்தும் அணுவுலைகளை இயக்கிவிடலாமெனச் சதி செய்கிறது. சர்வாதிகாரிகளின் வெற்றி காலம்முழுவதும் நிலைப்பதில்லை, மக்களின் நீதி வெல்லும் என்பதை இடிந்தகரை போராட்டம் நிரூபிக்கும்.

– மாலதி மைத்ரி

ஃபிரான்ட்ஸ் ஃபனான் – அந்நியமாதல் நீக்கம் – மு.பு.டெரன்ஸ் சாமுவேல்

வருத்தம்/வேதனை/வலி/அடக்குமுறை என்ற நிலைப்பட்fanonடு, ஒரு மனிதனோ/குழுவோ தனது அடையாளத்தைக் கட்டமைக்கும்போது, அது தனது வருத்தம்/வேதனை/வலி/ அடக்குமுறைக்கான காரணங்களைப் ‘பிறர்’ மீது மட்டும் குவித்துத் தன்னை பலிகடாவாக மட்டுமே நோக்குகிறது. பலிகடாவாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும்போது தனக்குள் சுய விமர்சனம் செய்ய வேண்டியது ஏதும் இல்லை; தான் ஒடுக்கப்படுதலுக்கான முழுக் காரணமும் ‘பிறரிலேயே’ அடங்கியுள்ளதாகத் தன்னை அர்த்தப் படுத்திக் கொள்கிறது. எனவே ‘பிறர்’ மீதான விமர்சனப்பூர்வமான பார்வைமூலமாகவே தனது விடுதலை சாத்தியமாகும் என்ற நிலைப்பாட்டை அடைகிறது. மறுபுறம், இவ்வித விடுதலை வேட்கை கொண்ட ஒடுக்கப்பட்ட மனிதனும் குழுவும், தனது விடுதலையைப் ‘பிறர்’ சார்ந்தே வரையறை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் காலனிய இனவாதச் சூழலில், ‘பிறரைச்’ சார்ந்து கட்டமைக்கப்பட்ட விடுதலை வேட்கை, ‘பிறரைப்’ பின் தொடர்ந்து அவர்களின் ‘உயர்வான’ கூறுகளை உட்படுத்திக் கொள்வதன்மூலமே சாத்தியமாகும் என்ற ஒரு பிரக்ஞையையும் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இது பெரும்பாலும் காலனியச் சூழலில், அது அளித்த அறிவை உட்கொண்டு வளர்ந்த – தன்னைத் தனது இனத்தோடும் பிறரோடும் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாத வகையில் அந்நியப்பட்டுப் போன – மத்திய தர வர்க்கத்தின் பிரச்சனை என்ற போதிலும், இதையே ஃபிரான்ட்ஸ் ஃபனான் தனது ஆய்வுக்கான துவக்கப் புள்ளியாகத் தனது கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற புத்தகத்தில் கொள்கிறார்.

கருப்புத் தோலும் வெள்ளை முகமுடிகளும் புத்தகத்தின் அடிப்படையான வாதம் இருவகைப் பட்டimagesCA1A54Z4தாகக் உள்ளது. ஒன்று, காலனிய இனவாதத்தின் புனைவுகளைத் தன் உடம்பின் மீது தானே ஏற்றிக் கொள்ளும் வகையில் பேசா மௌனம் சாதித்து, அதன் கூறுகளைக் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ தன்னில் உள்ளாக்கிக் கொண்ட ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனும் மனுஷியும் குழுவும், தன்மீது கொள்ளும் சுயவிமர்சனத்தின் மூலம் தனது விடுதலையை திடப்படுத்துவது. இரண்டாவது, தன்மீது புனைவுக் கருத்தாக்கங்களை உருவாக்கிய பிறரின் மீது கொள்ளும் விமர்சனம் மூலம், ஒடுக்கப்படுதலுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்து அதன்மூலம் மனிதநேய மனிதச் சமூகத்தைக் கட்டமைக்க விளைவது. இந்த இரு வகை நிலைப்பாட்டில் அமைந்த விமர்சனப்பூர்வ அணுகுமுறையை, ஃபனான் தனது கல்விப்புலப் பின்னணியிலான உளவியலை அடிப்படையாகக் கொண்டு ஆய்கிறார். இந்த ஆய்வில் அவருக்கு மார்க்ஸும், ஹெகலும், சார்த்தரும், நீட்சேயும், எய்மே சீசர், செங்கோர் போன்ற கருப்பின படைப்பாளிகளும், பிற ஆய்வாளர்களும் உளவியலாளர்களும் துணை புரிகின்றனர்.

அந்நியமாதல் என்ற நிகழ்வு பல விதங்களில் விளக்கப்படுகிறது. ஃபனான் அந்நியமாதலை இருவேறு நிலைகளில் புரிந்து கொள்கிறார். ஒன்று, கருப்பினத் தொழிலாளியின் அந்நியமாதல்; இது சுரண்டல் அமைப்பின் மூலம் தன்னை உயர்வான நாகரீகத்தின் பிரதிநிதியாகக் கருதிக் கொண்ட ஒரு இனம் மற்றொரு இனத்தை பலிகடாவாக ஆக்குவதால் நிகழ்வது. இந்த அந்நியமாதலை மீற ஒரே ஒரு வழிதான் உண்டு: அது போராட்டம் மூலமே சாத்தியமாகும். தனது வாழ்வை சுரண்டல், பசி, வறுமைக்கு எதிரான போராட்டமாகக் கொள்வதன் மூலமே இந்தவித அந்நியமாதலை எதிர்கொள்ள முடியும். இவர்களுக்கு கருப்பினப் பழமை குறித்த கண்டுபிடிப்பு முக்கியமானது அல்ல; அவர்கள் கருப்பர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் இந்த உணர்வு அவர்களுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

இரண்டாவது அறிவுப்பூர்வத் தன்மை கொண்ட அந்நியமாதல். “அறிவுப்பூர்வமான அந்நியமாதல் மத்திய தரச் சமூகத்தின் ஒரு படைப்பு. முன்குறித்த வடிவங்களில் தன்னை இறுக்கிக் கொண்டு, எல்லாவித பரிணாமங்கள், ஆதாயங்கள், முன்னேற்றம், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வெறுத்து ஒதுக்கிய ஒரு சமூகத்தையே நான் மத்திய தர சமூகம் என்கிறேன். வாழ்க்கையில் சுவையின்றி, கருத்துகளையும் மனிதர்களையும் சீரழிந்தவர்களாகக் கொண்டு, (தன்னைச் சுற்றிய) காற்றையும் மாசுபடுத்திக் கொண்டு வாழும் மூடிய சமூகத்தையே நான் மத்திய தரச் சமூகம் என்கிறேன். இந்த சாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மனிதனை ஒருவிதத்தில் புரட்சிகரமானவனாக நான் நினைக்கிறேன்.” இது வேறு யாருமல்ல நான்தான். இந்தவித சுயபுரிதலுடனேயே இந்த கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற நூல் ஃபனானால் எழுதப்பட்டது. இந்த அடிப்படையில், இந்த நூலை எழுதியதற்கான காரணங்களாக ஃபனான் தெரிவிக்கும் விஷயங்களை முதலில் காணலாம்.

 ஃபனானின் எழுத்திற்கான அடிப்படை

 எழுதுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்படுத்திய காரணங்களாகச் சில விஷயங்களை ஒவ்வொரு எழுத்தாளனும் தெரிவிப்பது உண்டு. தனது முன்னுரையில், கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற நூலை எழுதியதற்கான காரணங்களாக சில விஷயங்களை ஃபனான் தெரிவிக்கிறார். “மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே இந்த நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும்… ஆனால் அப்போது இந்த உண்மைகள் எனக்குள் தீயாக இருந்தன. இப்போது என்னை எரித்து விடாமல் அவைகளை நான் சொல்ல முடியும்… அவைகள் தயாள மனபாவத்தை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.” என்ன உண்மைகள் அவை? ஒரு புதிய மனிதநேயத்தை நோக்கிய உண்மைகள்… இந்த உண்மைகளை அடைவதற்காக அவர் எழுப்பும் அடிப்படையான கேள்வி, “மனிதன் என்ன விரும்புகிறான்? கருப்பு மனிதன் என்ன விரும்புகிறான்?” ஆனால் கருப்பினத்தவன் மனிதனாக அங்கீகரிக்கப்படவே இல்லையே? இந்த எதிர்மறையான எதார்த்தத்தில் இருந்தே அவரது புரிதல் தொடங்குகிறது.

“அங்கே ஒரு உயிர்த் தன்மையற்ற பகுதி இருக்கிறது; ஓர் அசாதாரணமான மலட்டுத்தன்மை கொண்ட, வறண்ட பகுதி; ஒரு வெளிப்படையான தெளிவான பாதாளத் தன்மை; இங்கிருந்துதான் ஒரு திடமான மேலெழுதல் பிறக்க முடியும்.” எந்தப் பாதாளம்? “கருப்பு என்பதுவே கருப்பின மனிதன்” என்ற உயிர்த் தன்மையற்ற, பாதாளம். பீடிப்புக் கோளாறுகளின் தொடர்ச்சியின் பலனாக உருவான இந்தச் சாராம்சத்தில் வேர்கொண்ட அவன் அதிலிருந்து பிரித்தெடுக்கப் படவேண்டும். “நிறமுள்ள மனிதனை அவனில் இருந்து விடுவிக்க வேண்டும்”, இதுவே இந்த நூலில் ஃபனான் மேற்கொள்ளும் அடிப்படையான முயற்சி. இந்த முயற்சிக்காக, அவர் கொள்ளும் கருத்தியல் அடிப்படை, “கருப்பின மனிதனைப் புகழ்ந்து பேசும் ஒருவன், அவனை வெறுப்பவனைப் போல ஒரு நோயாளியே”. ஆக, கருப்பின மனிதனை அந்நியமற்றவனாக மாற்றும் முயற்சியில், அவர் வெள்ளயருக்கும் கருப்பினத்தவர்க்குமான இடைப்பட்ட பகுதியில் இருந்து பேசுகிறார். இரைந்து கத்தவில்லை; ஏனெனில், வெகுநாட்களுக்கு முன்னதாகவே இரைந்து கத்துதல் அவரது வாழ்வில் இருந்து அகன்று போய்விட்டது என்றும் கூறுகிறார்.

முந்தைய பத்தியில், ஃபனான் எழுப்பிய அடைப்படையான கேள்விகளைக் கொண்டு, அவர் எதிர்மறையான எதார்த்தத்தில் இருந்து தனது புரிதலைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டோம். அவர் குறிப்பிடும் இந்த எதிர்மறை எதார்த்தம் என்ன? “கருப்பின மனிதன் வெள்ளையனாக விரும்புகிறான். மனித நிலையை அடைய வெள்ளை மனிதன் (கருப்பினத்தவரை) அடிமையாக்குகிறான்”. இந்த இரட்டைச் சுயமோகத்தின் திசைகளையும், நோக்கங்களையும் அறிந்து, இந்த விடுபட முடியாத சுழற்சியை நீக்குவது இப்புத்தகத்தில் அவரது முயற்சியாக அமைகிறது.

இந்த விடுபட முடியாத சுழற்சி நீக்கம் அல்லது கருப்பின மனிதனை அந்நியமற்றவனாக மாற்றும் முயற்சியில் சமூக மற்றும் பொருளாதார எதார்த்தங்கள் குறித்த புரிதல் அவசியமானவை. ஒரு கருப்பின மனிதருக்கு தாழ்வு மனோபாவம் இருக்குமானால், அது முதலாவது பொருளாதார ரீதியானது; இரண்டாவது, அந்த தாழ்வு மனப்பான்மையை உள்ளாக்கிக் கொள்ளுவது அல்லது அதனை தோல்மேல் பொதித்துக் கொள்வது சம்பந்தப் பட்டது. அது தனிமனிதப் பிரச்சனை அல்ல; சமூகம் உற்பத்தி செய்த பிரச்சனை. ஆக, இந்த இரு தளங்களிலும் ஒரு கருப்பின மனிதன் தன் போரை நடத்த வேண்டும். ஒன்றின் வெற்றி மற்றதை மாற்றும் என்ற பெருந்தவறு கூடாது என்கிறார். பொருளாதார ரீதியான வர்க்கம் என்ற பிரச்சனையும், சமூக ரீதியான அடையாளம் என்ற பிரச்சனையும் ஒரு விதத்தில் சார்புடையவை எனினும் தனித்துவமானவையும் கூட; அவற்றில் ஒன்றை நோக்கிய போராட்டம் மற்றதை சரிசெய்து விடாது; இருமுனைப் போராட்டமாகவே அமைய வேண்டும் என்பது ஃபனானின் நிலைப்பாடு. இந்த இருமுனைப் போராட்டத்தில், இரண்டாம் விஷயத்தை மட்டும் இந்த புத்தகத்தின் ஆய்வு எல்லையாகக் கொள்கிறார். அதாவது, அந்நியமாதலின் சமூக உளவியலை விவரிப்பதுவே இந்தப் புத்தகத்தின் ஆய்வுப் பொருளாகிறது. இந்த ஆய்வுப்பொருளுக்குள், சமூகநோயின் காரணிகளை கண்டறிவதும், அதற்கான முன்னெச்சரிக்கைகளும் உண்டு. அந்நியமாதலை ஆய்ந்து அறிவது என்பது அந்நியமாதல் நீக்கம் நோக்கியது. இந்த அந்நியமாதல் நீக்கம் என்பது, ஃபனானைப் பொறுத்த மட்டில் ஒடுக்கப்பட்ட சமூக மனிதனின் புரட்சிகரச் செயல்பாடுகளில் ஒன்று என்பதையும் நாம் மனதில் அழுத்தமாகக் கொள்ள வேண்டியது அவசியம்.

சரி, இந்த அந்நியமாதல் நீக்கம் பற்றிப் பேச வேண்டியதற்கான சமூகச் சூழல் என்ன, ஃபனானுக்கு இருந்த நெருக்கடி என்ன, என்பதையும் நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

ஃபிரான்ட்ஸ் ஃபனான் 20 ஜூலை,1925ல் மார்ட்டினிக் என்ற பிரெஞ்சுக் காலனியின் தலைநகரான ஃபோர்ட்-தெ-ஃபிரான்ஸில் பிறந்தவர். மார்ட்டினிக் தீவு கரீபியன் கடலில் அமைந்த மேற்கிந்தியத் தீவுக்கூட்டங்களில் ஒரு தீவு. கரீபியன் கடலில் அமைந்த தீவுகள் அனைத்தும் ஆண்டிலிஸ் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன. க்யூபா, ஜமைக்கா, ஹைதி, டொமொனிக் குடியரசுகள், ப்யூர்ட்டோ ரிகா ஆகிய தீவுகள் அடங்கிய பகுதி பெரிய ஆண்டிலிஸ் என்றும், வெனிசுலாவுக்குச் சற்று வடக்கே அமைந்த சிறிய தீவுகளான ஆன்டிகுவா, மார்ட்டினிக், பர்படாஸ் உள்ளிட்ட பகுதிகள் சிறிய ஆண்டிலிஸ் என்றும் அழைக்கப்பட்டன.

அவரது மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஃபிரெஞ்சுக் காலனியான ஆண்டிலிஸுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள். இங்கிருந்த கருப்பின மக்கள் காலனிய இனவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், இவர்களின் சூழல் ஆப்பிரிக்கக் காலனிகளைவிடச் சற்று வேறுபட்டது. தேச விடுதலையை அதிகமாக விரும்பாத ஆனால் காலனியத்தை உட்செறித்து வளர முயன்ற ஒரு கருப்பின முதலாளியம் (குட்டி முதலாளியம்) ஒன்று ஏற்கனவே ஆண்டிலிஸில் உருவாகி இருந்தது. ஃபனானின் குடும்பம் இத்தகையது. ஃபனான் இளவயதில் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றினார். அப்போது இனவாதத்தை நேரில் உணர்ந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் கூறுகின்றனர். பின்பு அவர் மனநோயியல் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும்போது அதிகமான நோயாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். மனநோயியல் மருத்துவப் பட்டப் படிப்பினை நிறைவு செய்வதற்காக அவர் எழுதிய கருப்பர்களின் அந்நியமாதல் நீக்கம் குறித்த கட்டுரை என்ற முனைவர் பட்ட ஆய்வு நிராகரிக்கப்பட்டது. இந்த ஆய்வே பின்னாளில், அதாவது 1952-ல் கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது. இந்த ஆய்வில் காலனியத்துக்கு உட்பட்ட கருப்பின மக்களின் உளவியலையும், காலனியத்தை உட்புகுத்தும் வெள்ளையரின் உளவியலையும் ஆய்வுப்பொருளாகக் கொள்கிறார். இதில் இன்னும் குறிப்பிடும்படியான விஷயம் என்னவெனில், காலனியம் பேசிய புனைவான ‘உயர்வு/வளர்ச்சி’ என்னும் போதை/மோகத்துக்கு ஆட்பட்ட கருப்பின மக்கள், வெள்ளையினத்தை அண்ணாந்து பார்த்து அவர்களது மதிப்பீடுகளைத் தங்களின் தோல்மேல் பொதிக்க ஆசைப்பட்டனர்; அவற்றை உள்ளாக்கிக் கொண்டு தங்களின் கருப்பு உடம்பை வெளுத்து வெளிறச் செய்து வெள்ளையாக்க முயன்றனர். ஆனால் அப்படி வெள்ளையின மதிப்பீடுகளை தங்களின் உடம்பின் உள்ளாக்கிக் கொள்ள முயன்ற கருப்பின மனிதர்கள், தன் இனத்தோடும், வெள்ளையின மனிதர்களோடும் ஒட்டுறவு காணமுடியாமல் அந்நியமானவர்கள் ஆனார்கள். இதைச் சமூக உளவியல், உளவியல் பகுப்பாய்வு, தனிமனித உளவியல், இருத்தலியத் தத்துவம் ஆகியவற்றின் துணைகொண்டு நன்கு ஆய்ந்த ஃபனான் அதற்கான மாற்றாக அந்நியமாதல் நீக்கத்தின் அடிப்படையிலான ஒரு புது மனிதத்தைக் கட்டமைக்க விழைகிறார். இந்த முயற்சியே கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற புத்தகத்தின் அடிநாதம்.

அந்நியமாதல் நீக்கம்

ஃபனானைப் பற்றி எழுதிய ஆய்வாளர்கள் பலரும் அவர் கருப்பின மக்களின் அந்நியமாதலைப் பற்றிப் பேசியதாகவே எழுதுகின்றனர். இந்தக் குறைவுபடுத்தல் பெரும்பாலும் மார்க்சியக் கோட்பாடான அந்நியமாதலை அடிப்படையைக் கொண்டு ஃபனானது கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது நிகழுவதாகத் தோன்றுகிறது. காரணம், ஃபனான் அந்நியமாதலைப் பற்றி மட்டும் பேசவில்லை; அந்நியமாதல் நீக்கம் பற்றிப் பேசினார். இதில் மார்க்சிய இயங்கியல் அடிப்படையிலான அந்நியமாதல் குறித்த புரிந்துணர்வும், இருத்தலிய அடிப்படையிலான அந்நியமாதல் நீக்கம் என்ற புரட்சிகரச் செயல்பாடும் இணைகின்றன. கருப்பின மக்களுக்கு (வேண்டுமானால் கருப்பின நடுத்தர வர்க்கம் என்று மட்டும் கொள்ளுங்கள்) அந்நியமாதல் குறித்த அறிவு மட்டும் போதாது; அது குறித்த வாழ்வியல் அனுபவங்களின் அடைப்படையிலான புரிதலும், அதை நீக்குவதற்கான புரட்சிகரச் செயல்பாடும் அவசியமாகிறது. அந்நியமாதலை கல்விப்புல பின்னணியில் ஒரு நிகழ்வாக மட்டும் ஃபனான் விளக்கவில்லை; அந்நியமாதல் நீக்கம் என்னும் ஒரு லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த அந்நியமாதல் என்னும் நிகழ்வைப் படித்து அறிகிறார். அவர் அந்நியமாதல் என்னும் நிகழ்வைப் படித்து அறிதல் என்பது அந்நியமாதல் நீக்கம் என்ற புரட்சிகரச் செயல்பாட்டோடு தொடர்புடையது. இந்தவித தனிமனித மற்றும் சமூக உளவியல் சார்ந்த புரட்சிகரச் செயல்பாடு, அவர் கனவு கண்ட புதிய மனிதத்துடன் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஃபனானைப் பொறுத்தமட்டில், அந்நியமாதல் நீக்கம் என்பது சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றங்களின் ஊடாக நிகழும் உப/உடன் விளைவு மட்டும் அல்ல; அது இனவாதத்தை உடம்புக்குள்ளாக்கிக் கொண்ட தனிமனித, சமூக உளவியலுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் தனித்துவமான போராட்டம்.

அந்நியமாதல் நீக்கம் என்ற புரட்சிகரச் செயல்பாட்டின் அடிப்படையில் அந்நியமாதல் என்ற நிகழ்வைப் புரிந்துணரும் போது, அதை மொழி, பால், சார்புத்தன்மை, வாழ்வியல் அனுபவங்கள், மனநிலைத் திரிபு, அங்கீகாரம் என்ற பிரச்சனைப்பாடுகளின் வழியாக ஆராய்கிறார். இந்த பிரச்சனைகளின் வழியாக கருப்பின மக்களின் தனிமனித மற்றும் சமூக உளவியலை அவர் ஆராயும்போது, அவரது ஆய்வின் முடிவுகள் துணுக்குகளாகவும் சிதறல்களாகவுமே வெளிப்படுகின்றன. இவரது எடுத்துரைப்பு உளவியல் அடிப்படையில் அமைந்தாலும், இவரது ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவச் சோதனைமுறை அடிப்படையில் அமைந்தாலும், அதில் ஒரு முறையியல் இல்லை என்றும் அவரே கூறுகிறார்.

மற்றொரு புறம், ஃபனான் அந்நியமாதலை ஐரோப்பிய வெள்ளையினத்தின் ஒரு கூறாகவும் புரிந்து கொள்கிறார். வெள்ளையின உலகநோக்கே அந்நியமாதல் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பது அவரது வாதம். ஐரோப்பிய அறிவியல் அணுகுமுறை, வரலாற்றியல், வாழ்வியல் அணுகுமுறை அனைத்தும் கருப்பின வாழ்வியல் அணுகுமுறையில் இருந்து வேறுபடும் இடம் இது. ஒரு கருப்பினத்தவர்க்கு உடம்பும் மனமும் வேறுபட்டதல்ல; உலகமும் அவர்களும் வேறு அல்ல; உலகமும் கருப்பின மனிதர்களும் பதிலீடு செய்து கொள்ளப்பட முடியும்; இது கருப்பின மந்திரம்; இது கருப்பின ரகசியம்; இந்த ரகசியம் பிரிக்க முடியாத அனைத்தின் அடிநாதம்; இந்த ரகசியத்தையும், இந்த நாதஒலியையும் வெள்ளையினம் அறிந்து கொள்ள முடியாது. வெள்ளையின அறிவு, அல்லது அறிவொளிக்கால பகுத்தறிவு இந்த நாதம் அற்றது, பொருளையும் தன்னையும் அல்லது அகத்தையும் புறத்தையும் பிரித்து நோக்கி அறிவது என்ற புரிதலுக்கு வருகிறார். ஆக, அந்நியமாதல் என்ற நிகழ்வை ஐரோப்பிய அறிவு உற்பத்தியின் ஒரு முக்கியமான அடிப்படைக்கூறாகவும் அவர் விளக்குகிறார் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் சற்று விரிவாகக் கூறுவோமானால், ஐரோப்பிய அறிவொளிக்கால புரிந்துணர்வின் அடிப்படை அகம்/புறம் என்ற இருமை வழியாக நிகழ்வது; புறத்தை எந்தவிதமான அகவயப் புரிந்துணர்வின் தடயங்கள் இல்லாமல் விளக்க முயல்வது; அதுவே ‘நடுநிலையான’, அறிவியல்பூர்வமான அறிவு/உண்மை என்றும் மார்தட்டிக் கொள்ளும் இயல்புடையது. ஆனால் இவ்விதமான அறிவு சாத்தியமில்லை என்பதையும் உண்மையின் பன்முகத் தன்மையையும் நீட்சே தொடங்கி பல தத்துவவாதிகளும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும் நமக்கு உரக்க அறிவித்து விட்டதை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

வாழ்வியலும் அந்நியமாதல் நீக்கமும்

காலனியச் சூழலில் வெள்ளையின மனிதரைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு கருப்பின மனிதரும் கருப்பாக இருக்க வேண்டிய சூழல் நிர்ப்பந்தம் உண்டு. இன்னும் குறிப்பாக, ஒரு கருப்பின மனிதர் தனது வாழ்வியலைத் தனது சொந்த பண்பாடு சார்ந்து உணர முடிவதில்லை; ஏனெனில் காலனியத்துக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் சொந்தப் பண்பாடு, காலனிய நாகரிகத்துடன் முரண்பட்டதாகவே கொள்ளப்படுகிறது. காலனிய நாகரிகத்துக்கு உட்படுத்தப்பட்ட மக்களிடம் தங்களது வாழ்வியல் குறித்த ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்றப்படுகிறது. நிறமுள்ள மனிதர்கள் தங்களது உடல்ரீதியான முறைமைகளை வளர்த்தெடுப்பதற்கான சிக்கல்களை தொடர்ந்து சந்திக்கின்றனர். ஏனெனில் காலனிய நாகரீக உலகும், சொந்த மக்களின் உடம்பும் அதன் கூறுகளும் முரண்பட்டுக் கிடக்கின்றன. உடம்பு குறித்த பிரக்ஞை தங்களின் சொந்த உடலையே புறந்தள்ளும் வகையிலான ஒரு வெறுப்புச் செயல்பாடாகவே தொடர்கிறது. நிறமுள்ள மனிதர்களின் சொந்த உடம்புக்கும், காலனிய நாகரீக உலகுக்குமான இயங்கியல் ஓர் எதிர்மறை இயங்கியலாக உருவெடுக்கிறது; அதனால் உடம்பு குறித்த அசூயை/வெறுப்பு காலனிய மக்களிடம் ஏற்படுத்தப்படுகிறது. வெள்ளையின நாகரீகத்தில் ஊறிப்போன ஒரு மனிதனுக்கு கருப்பு மனிதன் நாகரீகமற்றவனாக/ வெறுக்கப்படத் தக்கவனாக மாறிப்போய் விடுகிறான்; கருப்பு மனிதனின் உடம்பு ‘நாகரீக வெள்ளையின’ மனிதனை அச்சுறுத்துவதாக அமைகிறது.

இந்தவிதச் சூழலில், தன் சொந்த உடம்பு குறித்த அந்நியமாதலை நீக்கம் செய்வது எப்படி? தனது கருப்பு உடம்பை வெளுத்து வெளிறச்செய்து ‘வெண்மையாக்குவதன்’ மூலம் தனது அந்ந்¢யமாதலை நீக்க முடியுமா? இல்லை. ஃபனான் கூறுவது என்ன?

“எனது பிறப்போடு வந்த மனப்பாங்கிலிருந்து நான் வெளியேறுவது எனக்கு இயலாததால், என்னைக் கருப்பு மனிதன் என்று அழுத்தம் திருத்தமாக உறுதிப்படுத்த ஆரம்பித்தேன். பிறர் என்னை அங்கீகரிக்கத் தயங்குவதால் ஒரே ஒரு தீர்வு தான் உண்டு: அது என்னை அறியச் செய்வது”. அடிமைப்படுத்தப் பட்ட எனது மூதாதையருடன் என்னை அங்கீகரிப்பது; என்னை அடிமைகளின் பேரனாக ஒத்துக் கொள்வது… இவ்வாறு என்னை அறியச் செய்வது என்பது எனது தேர்வு அல்ல; எனது அடையாளம் வெளியில் இருந்து என்மேல் பொதிக்கப்படுகிறது. நான் வெளியில் இருந்து ஏற்கனவே அநாகரீகமானவனாக, முரட்டாட்டக்காரனாக, அறிவிலியாக வரையறுக்கப்பட்டு விட்டேன். ஒரு முழு இனமும் என்னை இவ்வாறு வரையறுத்ததில் நியாயமான காரணங்கள் ஏதும் இல்லை. மேற்கத்திய “நாகரீகமாக்கும் கானல் மனிதத்துக்கு” நான் அடிமையாக்கப் பட்டேன். இந்தவித “நாகரீகக் கானலில்” இருந்து வெளியேறினேன். இவ்வித “நாகரீகக் கானல் மனிதத்தில்” இருந்து வெளியேறியபோது, நான் மனிதத் தன்மை பெற்றேன்; ஒடுக்கப்பட்டவர்கள் அனைவருடனும் நான் சேர்ந்து விட்டேன்.

மனிதமாக்குவதாகக் கூறிக்கொண்ட மேற்கத்திய அறிவொளிக்கால அறிவுக்கு மாற்றாக, செங்கோரை அடியொற்றி கருப்பின நாதம் என்ற ‘பகுத்தறிவற்ற’ கருப்பினப் பண்பாட்டை மீட்டெடுக்க ஃபனான் முனைகிறார். அதில் தனது இருப்பை உறுதிப்படுத்த முயலுகிறார். தனது ஆதிமூலத்தை அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார். கருப்பினப் பண்பாட்டின் நுண்ணிய வளங்களையும், நுண் உணர்வுகளையும் வெள்ளையின நாகரீகம் கண்டுகொள்வதில்லை என்றும் அறிவிக்கிறார். இந்தப் புதிய கருப்பின ரகசியத்தைக் கண்டுபிடித்ததால், இந்த எதிர்வினையால் வெள்ளை மனிதன் உலுக்கப்படுவான்; தனது உலகம் உறுதிப்படும் என்றும் நம்புகிறார். தனது கருப்பினப் பண்பாடு நாகரீக வளர்ச்சிப் படிநிலையில் மிகப் பழமையானதோ அல்லது முதிர்ச்சி அற்றதோ அல்ல; தங்கத்தையும் வெள்ளியையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கையாண்ட இனம் என்ற ஒரு மீள் கண்டுபிடிப்பையும் நிகழ்த்துகிறார். “நான் வெள்ளை மனிதனை அவனது இடத்தில் மீண்டும் அமர்த்தி விட்டேன்… நான் வென்று விட்டேன். நான் கொண்டாட்ட மன நிலைக்கு உள்ளானேன்” என்றும் அறிவிக்கிறார்.

இந்தக் கொண்டாட்டம் எங்களுக்கு விடுதலையைத் தருமா என்ற கேள்வியை எழுப்பும் ஃபனான், முடிவில் “முழுக் கருப்பின மனிதனாக நான் ஆக விரும்பினேன், அது எப்போதும் இயலவில்லை. வெள்ளை மனிதனாகவும் ஆக விரும்பினேன், அது ஒரு கேலிக்கூத்து. கருத்துகளின் தளத்திலும் அறிவுப்பூர்வச் செயல்பாட்டாலும் எனது கருப்புத்தன்மையை மீட்க முயற்சிக்கும்போது, அது என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது. எனது முயற்சி இயங்கியலின் ஒரு பகுதியே என்பதற்கான ஆதாரம் எனக்கு அளிக்கப்பட்டது” என சார்த்தரை மேற்கோள் காட்டிக் கூறுகிறார். அதாவது, மனிதநேயச் சமூக அமைப்பைக் கட்டமைப்பதில், ஒடுக்கப்பட்டவர்களின் பண்பாட்டு வடிவங்களை மீட்டெடுப்பதும், அதனை அறுதிப்படுத்துவதும் வரலாற்று இயங்கியலில் ஒரு பகுதியே; ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையில் பண்பாட்டு மீட்டுருவாக்கமும், மீட்கப்பட்ட பண்பாட்டு வடிவங்களின் கொண்டாட்டமும், அந்த விடுதலை இயக்கத்தின் இயங்கியலில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையே; அவை விடுதலையைப் பெற்றுத் தரப் போவதில்லை, விடுதலைப் போராட்ட இயங்கியலின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தன்னையும், தன் இனத்தையும் புரட்சிகரமான அந்நியமாதல் நீக்கம் செய்து, விடுதலைக்கான வேரூன்றலில்/அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் தன் இனத்தையும் திடப்படுத்துவதற்காகப் பயன்படும் ஓர் ஆயுதமே அது என்பது ஃபனானின் புரிதல்.

அங்கீகாரமும் அந்நியமாதல் நீக்கமும்

ஆண்டிலிஸின் சொந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஆண்டிலியன் பிறரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆசை கொண்டவன்; அவனது வாழ்வியல் ஒருங்கமைவு பிறன் வழியாகத் தான் நிகழுகிறது… பிறர் கண்களில் என் புகழைக் காண விரும்புகிறேன்; துரதிர்ஷ்டவசமாக, அந்தக் கண்கள் நான் விரும்பாத பிரதிபலிப்பை எனக்குக் காட்டும்போது, அந்தக் கண்ணாடியே குறைபாடு உடையது எனக் காண்கிறேன்… புறப்பொருளுக்கு முன்னதாக நான் நிர்வாணமாக முயற்சிக்கவில்லை. தனிமனிதத்துவம், சுதந்திரம் என்ற போர்வையில் அந்த புறப்பொருள் மறுக்கப்படுகிறது. அந்தப் புறப்பொருள் ஒரு கருவி… இதை வழங்குவதற்காகவே ‘பிறன்’ வாழ்க்கை மேடைக்கு வருகிறான். நான்தான் கதாநாயகன்… நான்தான் கவனக்குவியலின் மையம். தனது மதிப்புக்கான (புனைவுக்கான) விருப்பத்தின் மூலம் பிறர் என்னை சஞ்சலப்படுத்த முயலுவார்களானால், அவனை விசாரிக்காமல் எளிதாகத் தள்ளிவிடுகிறேன்… புறப்பொருளின் தாக்கத்தை நான் அனுபவிக்க விரும்பவில்லை… நான் நார்சிஸ்ஸஸ்; பிறருடைய கண்களில் நான் காணவிரும்புவது என்னவெனில் என்னைக் குஷிபடுத்தும் பிரதிபலிப்பு… ஆண்டிலியன் செய்வது ஒவ்வொன்றும் ‘பிறருக்காகவே’ செய்யப் படுகின்றன. மக்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் ‘பிறர்’ என்பவரே ஒருவனின் செயல்பாட்டின் முடிவான இலக்கு என்பதால் அல்ல… இன்னும் அடிப்படையில், ஒருவனது சுய மதிப்பீட்டுக்கான தேடலில் ‘பிறரே’ அவரை மதிப்பிடுபவர் என்பதால்.”

27 வயதான ஃபனான், சுயஅடையாளக் கட்டமைப்பைக் குடைந்து அந்நியமாதல் நீக்கம் என்ற பரந்த சனநாயக அமைப்பை நோக்கி விரியும் இடம் இது. ஒப்பீட்டு அடிப்படையிலான சுயஅடையாளக் கட்டமைப்பு பிறர் மீதான அதிகாரக் கட்டமைப்பை நோக்கியது எனத் துணிந்து சொல்லும் இடம் இது. சுயம் தன்னை சலனத் தன்மை கொண்டதாக உணராமல், தன்னை இறுக்கிக் கொண்டு, அந்த இறுக்கத்தை பிறர் மீது திணிக்க முயலும் நுண்ணதிகாரத்தை/ஆதிக்க மனோபாவத்தை அவர் எடுத்துரைக்கும் இடம் இது. கருப்பின நடுத்தர வர்க்கத்தின், இயங்கியல் சலனத் தன்மையற்ற அடையாளக் கட்டமைப்பில் தானே அந்நியப்பட்டுப் போவதை விவரிக்கும் இடம் இது. இந்தவித அந்நியமாதலுக்கு சமூகக் கட்டமைப்பே, அதாவது காலனிய இனவாதப் புனைவுகளே, காரணம் என்றும் ஃபனான் குறிப்பிடுவார். வரலாற்று ரீதியாக ஏற்படுத்தப்பட்ட தாழ்வு மனப்பான்மைக்கு எதிராக எதிர்வினையாற்றும் ஒரு கருப்பின மனிதன், வெள்ளையின மதிப்பீடுகளை உடம்புக்குள் உள்ளாக்கிக் கொண்ட ஓர் அடிமை மனோபாவத்தினன் வெள்ளையின மனிதனின் அற மதிப்பீடுகளை உள்ளாக்கிக் கொண்டு, தன்னைப் ‘பனியிலும் வெண்மையானவனாக’ (மொழியின் குறியீட்டு ரீதியாக) உருவகித்துக் கொண்டவன் தன் சமூகக் கட்டமைப்பை, இனவாதப் புனைவுகளை கட்டுடைக்காமல் உள்வாங்கிக் கொண்டு, அதே சமூகக் கட்டமைப்பு வழங்கிய அற மதிப்பீடுகளால், அந்த இனவாதப் புனைவுகளுக்கு எதிராக ‘உயர்வு மனப்பான்மையுடன்’ எதிர்வினை ஆற்றுபவன் ஆகிறான். தன்னை வெள்ளையனாக வெளுத்து வெளிறச் செய்து, தனது ‘கருப்பைச்’ சலவை செய்வதன் மூலமே தன்னை பிறருக்கு நிரூபிக்க நினைக்கிறான். இந்தவிதமான இருத்தலிய ஆதங்கம், ஐரோப்பியக் காலனிய இனவாதம் (சாதீயமும்) கருப்பின உடம்பு மீது ஏற்றிய மதிப்பீடுகளின் விளைவால் உருவான அந்நியமாதலின் விளைவு. இந்த விளைவுக்கு எதிரான எதிர்வினையைப் பெரும்பாலும் ஆண்டிலியன் தனது சொந்த மக்களிடம்/தனக்குக் கீழான கருப்பர்களிடம் மட்டுமே நிகழ்த்துகிறான்; வெள்ளையின மனிதனோடு இந்த ஒப்பீட்டு ரீதியான எதிர்வினையைப் புரிவதில்லை என்கிறார். அங்கீகாரத்தை எதிர்நோக்கிய ஓர் ஆண்டிலியன் தனது சுய அங்கீகாரத்தை வெள்ளையின மதிப்பீடுகளின் வழியாகத் தனது சொந்த மக்களிடம்/பிறரிடம் நிறுவ முயல்கிறான். தன் மீது பொதிக்கப்பட்ட வெள்ளையின மதிப்பீடுகளில் இருந்து வெளிக்கிளம்பும் முயற்சியில்/ஆதங்கத்தில், தனது சொந்த மக்களையும்/தனக்குக் கீழாகப் பாவித்துக் கொண்ட கருப்பின மக்களையும், தன்னை நிரூபிப்பதற்கான மனிதத் தன்மையற்ற கருவியாக மாற்றிக் கொள்கிறான்.

இந்தியச் சூழலில் இந்தச் செயல்பாட்டை ஐரோப்பியர், பிராமணர்,பிராமணரல்லாத சாதி இந்துக்கள், தலித்துகள் என்ற வரிசையில் புரிந்து கொள்ள முடியும். பிராமணரின் நவீனகால அடையாளக் கட்டமைப்பு, அவர்கள் முன்குறித்த ஐரோப்பிய மதிப்பீடுகளை உட்கொண்டு, அந்த மதிப்பீடுகளுக்கு எதிரான எதிர்வினையாக அவர்களுக்குக் கீழாக வரலாற்று ரீதியாகப் புனையப்பட்ட சாதிகளின்மீது தங்களின் ஆதிக்கத்தை நிறுவ முயன்றதும், அந்தவித அந்நியப்படுத்தப் பட்டமைக்கு எதிர்வினையாக பிராமணரல்லாத சாதி இந்துக்களின் அடையாளக் கட்டமைப்பு அவர்களுக்கு முந்திய இரு வகையினரின் மதிப்பீடுகளை உட்கொண்டு, தனக்குக் கீழாகப் பாவித்துக் கொண்ட தலித்துகளிடம் தங்களின் ஆதிக்க அங்கீகாரத்தை நிறுவ முயன்றதையும் நாம் அவதானிக்க முடியும்.

இந்த விதத்தில் மார்ட்டினிக்கின் கருப்பின மனிதன் ஒரு சிலுவையில் அறையப்பட்ட மனிதன். “அவனை உருவாக்கிய அந்தச் சூழல் (அவனால் உருவாக்கப் பட்டதல்ல) அவனைத் தீவிரமாக உட்கொண்டு சிதைத்து விட்டது; அவன் தனது ரத்தத்தாலும், தனது சாரத்தாலும் அந்தப் பண்பாட்டுச் சூழலை ஊட்டி வளர்க்கிறான்… நான் அவனிடம் சொல்லுவேன், “இந்தச் சூழல், இந்தச் சமூகம் உனது மாயைக்குக் காரணம் என்று.” இதைச் சொல்லி முடித்தபின், மற்ற (செயல்பாடுகள்) தானாகவே பின்தொடரும்; அது என்னவென்று நமக்குத் தெரியும். உலகத்தின் முடிவு” என்ற விடுதலை குறித்த கனவுலக நம்பிக்கையைத் தெரிவிப்பதாக ஃபனானின் இந்தக் கூற்றுகள் அமைகின்றன. எந்தவிதமான செயல்பாடுகள் பின்தொடரும் அல்லது பின்தொடர வேண்டும் என்று ஃபனான் எதிர்பார்த்தார்? அங்கீகாரத்தை எதிர்நோக்கிய ஆண்டிலிய கருப்பின மனிதர்களின் ஆதங்கமான அந்நியமாதல் நீக்கம், இந்தவிதமான புரிந்துணர்வுக்குப் பின் எவ்விதத்தில் சாத்தியமாகும்? உலகத்தின் முடிவு என்னும் கனவுதேசம் எப்படி சாத்தியமாகும்?

இதற்கு ஃபனான் ஹெகலியத் தத்துவத்தை எடுத்துக் கொள்கிறார். பிற மனிதரின் அங்கீகாரத்திற்காக, தனது இருத்தலைப் பிற மனிதனின் மீது செலுத்தும் அளவுக்குத்தான் ஒரு மனிதன் மனிதனாகிறான். அவன் பிறரால் சரியாக அங்கீகரிக்கப்படும் வரை, அவனது செயல்பாடுகள் அந்தக் குறிப்பிட்ட பிறரை நோக்கியதாகவே அமையும். அந்தப் பிறரிலேயே அவனது வாழ்வின் மொத்த அர்த்தமும் சுருக்கப் பட்டிருக்கிறது. அதாவது, அங்கீகாரம் என்பது ஓர் இயங்கியல் ரீதியான உறவின் அடிப்படையில் அமைவது. இந்த இயங்கியல் உறவை நான் மூடும்போது, அல்லது இந்த இருதிசை இயக்கத்தை நடைபெறவிடாமல் தடுக்கும்போது, நான் பிறனை அவனுக்குள் அடைத்து விடுகிறேன். அவனது ‘தனக்கான-உயிர்மையை’ நான் இழக்கச் செய்கிறேன். இந்தத் தொடர் சுழற்சியில் இருந்து மீள்தல் என்பது என்னை பிறரிடம் உரையாடச் செய்வதன் மூலமே சாத்தியப்படும். அதேபோல பிறரும் இதேவிதமான உரையாடலுக்கான திறப்பை நிகழ்த்த வேண்டும்.

இந்த உரையாடல் தடுக்கப்படும்போது, அங்கீகாரத்தை எதிர்நோக்கிய சுய பிரக்ஞை ஆசையாக மாறிவிடுகிறது. இந்தவித ஆசை வந்ததும் நான் என்னைக் கருத்தில் கொள்ளும்படியாகக் கேட்கிறேன். இந்த ஆசையே ஒடுக்கப்பட்ட மக்களின் சுய மதிப்பை நோக்கிய பயணத்துக்கான முதல்படி. இதன்முலம் சுய பிரக்ஞை தனது வாழ்வின் ஆபத்தை அங்கீகரிக்கிறது. “வாழ்க்கையைப் பணயம் வைத்தே விடுதலை அடையப் படுகிறது… வாழ்க்கையைப் பணயம் வைக்காத ஒரு தனிமனிதனும் மனிதனாக அங்கீகரிக்கப் படுகிறான் ஆனால் அவன் சுதந்திரமான சுயபிரக்ஞையாக இந்த அங்கீகாரத்தின் உண்மையை அடையவில்லை” என்ற ஹெகலியப் புரிதலை இங்கு ஃபனான் முன்வைக்கிறார். இந்தவித இடர்ப்பாடு/ வாழ்க்கைப் பணயம் வழியாகவே அகவய உறுதிப்பாடு, புறவய எதார்த்தம் ஆகிறது. அதாவது, அங்கீகாரம் என்பது மோதல்கள், போராட்டங்களை உள்ளடக்கியது என்பதாகிறது. என்னை அங்கீகரிக்கத் தயங்குபவன் என்னை எதிர்க்கிறான். ஒரு மூர்க்கத்தனமான போராட்டத்தில் நான் சாவின் வலிப்புகளையும், கண்ணுக்குத் தெரியாத கலைதல்களோடு சாத்தியமாகாதவற்றின் சாத்தியப்பாட்டையும் ஒத்துக் கொள்கிறேன். ஆக வாழ்க்கையைப் பணயம் வைத்த அங்கீகாரத்திற்கான போராட்டம் என்பது அந்நியமாதல் நீக்கத்தை நோக்கிய புரட்சிகரச் செயல்பாடு ஆகிறது. இந்தப் புரட்சிகர செயல்பாட்டின் மூலம் வாழ்விற்கும், அன்பிற்கும், பெருந்தன்மைக்கும் ‘ஆம்’ சொல்லுகின்ற மனிதர்களையும், சக மனிதனை வெறுத்தொதுக்கி ஏளனம் செய்தல், தரம் தாழ்த்துதல், சுரண்டுதல், விடுதலையைப் படுகொலை செய்தல் போன்றவற்றிற்கு ‘இல்லை’ என்று சொல்லுகின்ற மனிதர்களையும் உருவாக்க விழைகிறார் ஃபனான்.

– மு.பு.டெரன்ஸ் சாமுவேல்

பன்மெய்

பன்மெய்

பல்வேறு போக்குகளும் நோக்குகளும் எதிர் கொண்டு உரையாடும் பன்முகப்பட்ட குரல்களின் வெளி.

உண்மைகள் பலவாக உள்ளன என்பதைச் சொல்வது மட்டுமல்ல, உண்மைக்கு உள்ள பன்முகத் தன்மையையும் உண்மைகள் உருவாக்கப்படுவதன் பன்மையான வழிமுறைகளையும் உரையாடலுக்கு உட்படுத்துவது.

அறிவின்  பல்வேறு சாத்தியங்களை முடக்கித் தனக்கானதாகக் கையகப்படுத்திக் கொண்டுள்ள ஆதிக்கத் தன்மை கொண்ட பால், நிறம், இனம், வர்க்கம், தேசியம், சர்வதேசியம், பிராந்தியம், சாதி, மதம் என்பனவற்றிலிருந்து அறிவையும் சிந்தனையையும் விடுவிப்பதற்கான பன்முகப்பட்ட உரையாடல்களை உருவாக்குவதற்கான  தளம்.

தனது அறிவை மட்டும் மையப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் மற்றவற்றின் மீது வன்முறையை செலுத்துவதன் வரலாற்றை நினைவு கொண்டபடி ஒவ்வொரு அறிவும் தன்னை விளக்குவதற்கான தேவையை அடையாளம் காணும் மொழிவெளி.

விடுதலை நோக்கிய முனைப்பும் விடுதலைக்கான மொழியும் சாத்தியப்படும் தளம்தான் மாற்று அறிவு என ஏற்றுக் கொண்டவர்களுக்கிடையிலான உரையாடலாகவே  இவை  அமையும்.

முரண்களுக்கு இடையில் உள்ள போராட்டத்தை ஏற்றுக் கொள்வதுடன் வேறுபாடுகளுக்கு  இடையில் உரையாடல்களும், இணக்கமும்,  இணையான பரிமாற்றமும் அமையும் என்பது பன்மை நவீனத்துவத்தின் பொதுப் புரிதலாக அமைவதால் மாறுபட்ட  கேள்விகளுடன்  நம்  காலத்திற்கான அரசியலை அணுக நாம்  தயங்கத்  தேவையில்லை.

தலித் அரசியல், பெண்ணிய அரசியல், சிறுபான்மை அரசியல், பன்மை அடையாள அரசியல், சூழலியல் அரசியல் என்பவற்றை ஏற்ற விடுதலைக் கருத்தியலின் தேவையைத் தொடர்ந்து  பேச பன்மெய் தேவைப்படுகிறது.

அடக்குமுறைக்கு எத்தனை வடிவங்கள் உள்ளனவோ அதைப் போல விடுதலைக்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன, விடுதலைக்கான அறிவும் மொழியும் வேறுபட்ட வடிவங்களை, இயக்க முறைகளைக் கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்கும் போது ‘பன்மெய்’ அரசியலின் தளங்கள் வரிவடைகின்றன.

உலக முதலாளியம், போர்வெறி அறிவியல், புவிச்சூழல் அழிக்கும் நுகர்வுப் பொருளாதாரம், இன, மொழி, மத தன்னாட்சி உரிமைகளை மறுக்கும் உலக வல்லாண்மை, அச்சுறுத்தும் ஆயதமைய அரசியல் என நம் காலத்தின் பெருங்கேடுகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி அவற்றை எதிர்த்து உயிர்வாழ்வுச் சூழலுக்கான அரசியல் சொல்லாடல்களை,  செயல்பாடுகளை உருவாக்க வேண்டியது விடுதலைக்கான அறிவுசார் செயல்பாட்டின் தேவை.

அத்தேவையை ஏற்கும் விடுதலைக் கருத்தியல்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட பார்வைகளை, விளக்கமுறைகளை, தீர்வுகளைக் கொண்டிருந்தாலும் தமக்குள் உரையாடலை, ஒப்பீட்டு அறிதலை அனுமதித்து வளர்த்துக் கொள்வதன் வழியாகவே இனித் தம்மை நியாயப்படுத்திக் கொள்ள முடியும்.

இவை  நீண்ட  காலத் திட்டங்களையும் நீடித்த அரசியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது என்பதை ஏற்றுக்  கொள்வதன் வழியாக பன்மெய் தனது எளிய பக்கங்களை அதற்கு வழங்குகிறது.

விடுதலைக் கருத்தியல்களை ஏற்கும் அனைவரும் உரையாடலைத் தொடங்கவும், தொடரவும், இடையீடு செய்யவும், சரிபாரக்கவும், திருத்தங்கள் வழங்கவும் என இதன் பக்கங்கள் திறந்துள்ளன.

பன்மெய் சொல்லாடல்கள், செயல்பாடுகள் மற்றும் மாற்று அறிவுருவாக்கங்களுக்கான தளம். மாறுபடுதலுக்கான உரிமையை தொடர்ந்து  வலியுறுத்தும்  மற்றொரு  களம்.