உரையாடல்: 5: 1 வைதிகம் அழிந்த இந்து மதம்? -பிரேம்

உரையாடல்: 5 – 1 வைதிகம் அழிந்த இந்து மதம்?

கேள்வி:

அரசுகளின் கருவிகளாக மாற்றப்பட்டிருந்த பவுத்த, சமண, கிறிஸ்தவ மதங்கள் மக்கள் அரசியல், மற்றும் மார்க்சீய சிந்தனைகளின் தாக்கம் பெற்று தற்போது மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த,  அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறு விளக்கம் செய்து கொள்கின்றன என்கிறீர்கள். இந்து மதத்தில் மேற்கண்ட சிந்தனைகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாகக் கூறமுடியுமா? அல்லது அதன் சாதிக் கட்டுமானம் தகர்க்கப்படாதவரை அதனை மக்கள் நலன் சார்ந்ததாக மறு விளக்கத்திற்கு உட்படுத்த இயலாது எனச் சொல்லலாமா ?

பதில் :

பௌத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் மதங்களுக்கிடையில் அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளன. இவை தொல்சமூக மதங்கள் போலக் காலப்படிவுகளாக, சமூகப் பழமை வழக்குகளாக மட்டும் அமையாமல்  புதிய கருத்தியல்கள், புதிய சமூகப் பார்வைகள் கொண்டு கட்டப்பட்டவை. இவற்றின் குருமார்கள், போதகர்கள் மக்களிடையே வாழ்ந்து அவர்களுக்கான புதிய கருத்துக்களை, புதிய நம்பிக்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

மக்கள் அதுவரை தாங்கள் கொண்டிருந்த சமய அமைப்பின்கீழ் தாங்கள் ஒடுக்கப்படுவதாக அறிந்தோ அல்லது அவற்றால் தமக்கு ஈடேற்றம் கிடைக்காது என்று தெளிந்தோ இந்தப் புதிய சமய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள். இவை ஒருவகையில் சமூக, அரசியல் போராட்டங்களாகவே அமைந்திருந்தன. கிறித்துவம், இஸ்லாம் இரண்டும் இன விடுதலை, இனக்குழு ஒன்றிணைப்பு என்னும் வரலாற்றுச் செயல் பாடுகளாகவே தொடக்கம் பெற்றன. யேசு கிறிஸ்துவின் உயிர்த்தியாகம், நபித் தோழர்களின் போராட்டத் தியாகங்கள் மக்களின் கூட்டு நினைவுகளாக, குறியீட்டுச் சடங்குகளாக அம்மதங்களில் படிந்துள்ளன. அதன் குருமார்கள் பின்பு தெய்வங்களாகவோ, தேவதூதர்களாகவோ, புனிதர்களாகவோ மாற்றப்படுவது மானுடவியல் அடிப்படையில் இயல்பான ஒரு நிகழ்வு.

மக்கள் பெருமளவில் ஏற்காமல் மதங்கள் பெரும் அமைப்புகளாக மாறுவதில்லை. இவற்றில் கிறித்துவமும் இஸ்லாத்தும் இறைநம்பிக்கை கொண்ட, இறையியல் விதிகள் கொண்ட மதங்கள், அதே சமயம் தெளிவான அரசியல், பொருளாதார, சமூக, சட்டவியல் கட்டமைப்புகளைக் கொண்டவை. இவற்றில் மக்களுக்கான, சமூக நலனுக்கான உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், விதிமுறைகள் உள்ளன. இவற்றில் உள்ள அறம், ஒழுக்கம், இறையச்சம், சமூக நலம், நீதி பற்றிய கொள்கைகளும் விதிமுறைகளும் மீறப்படும் பொழுது மக்கள் அடக்குமுறைக்கும், ஏமாற்றுதலுக்கும், சுரண்டலுக்கும் உள்ளாவது வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மிக எளிமையான ஒரு கேள்வியின் மூலம் இவற்றை சமய அறவியலாளர்கள் எதிர்க்க இயலும். இதுதான் கிறித்துவின் அறமா ? இதுதான் தேவமைந்தன் நமக்கு அளித்த அன்பு நெறியா? இதுதான் இறைதூதர் சொன்ன அமல் சாலிஹா (நல்நெறியா) ?  இதுதான் இஸ்லாத்தின் நீதியா? என ஏதாவது ஒரு கேள்வியில் தொடங்கிச் சீர்திருத்தம், மறு சீரமைப்பு நோக்கி மக்கள் இயக்கமாக மாறு வதற்கான இடம் இந்த மதங்களுக்குள் உள்ளது. துன்புறும் மக்களுக்கு மீட்சி, எளியோருக்கான நல்வாழ்வு என்ற நீதி யுணர்வுகள் அம்மதங்களின் உள்ளடக்கத்தில் உள்ளவை. அதே சமயம் அரசுகள், அடக்கு முறையாளர்கள் மக்களின் இறை அச்சத்தை மட்டும் பயன்படுத்தித் தம் கொடுங் கோன்மைகளை, சுரண்டல்களை எளிதாக நிகழ்த்திக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டுவித நிகழ்வுகளும் வரலாற்றில் மாறி மாறிப் பதிவாகியுள்ளதை நாம் காண் கிறோம்.

இந்து மதம் என்ற   மதத் தொகுதியின் வரலாறு இவற்றிலிருந்து வேறுபட்டது. வர்ணப் பிரிவுகள், ஆதிக்கப்படிநிலை கொண்ட சாதி அமைப்பு, தீண்டாமை என்னும் வன்கொடுமை, பெரும்பான்மை மரபுகளை இழிவுறுத்தும் பிராமண மேலாதிக்கம் என்பவை இதன் தீராத அநீதிகளாக இருந்து வருகின்றன.  மனித நேய மறுசீரமைப்புகளைத் தடுக்கும் அடிமை உளவியல் இதன் மிக் கடுமையான ஒரு பகுதி. இதற்கெதிரானவை பௌத்த-சமண மரபுகள், இவை முழுமையாக இந்தியச் சமூகங்களை மாற்றியமைக்கும் முன்பு திரிக்கபட்டன, அழிக்கப்பட்டன, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டன.

அண்ணல் அம்பேத்கர் மதங்களை மூன்று வகையாகப் பிரித்து விளக்குகிறார்: தொல்சமூக மதங்கள் (Primitive Religion) சட்டவிதிகளால் அமைந்த மதங்கள் (Religion of law) மெய்யியல் சார்ந்த மதங்கள் (Religion of Philosophy), இவற்றில் தொல்சமூக மதங்கள் வாழ்வியலுடன், இயற்கையுடன் நேரடி உறவுள்ளவை என்பதால் தொல்குடி மக்களுக்கு அது உகந்தது என்கிறார். மெய்யியல் அல்லது அறம் சார்ந்த மதங்கள் மக்கள் விடுதலைக்கானவை, நல் வாழ்வுக் கானவை, பௌத்தம் அவ் வகையில் அறம் சார்ந்த, பகுத்தறிவுக்கு உகந்த, விடுதலைக் கான நெறியாக உள்ளது என்பது அம்பேத்கரின் ஆய்வு முடிவு.

இந்து மதம் அல்லது வைதிகமையச் சமயம் சட்டங்களால் அமைந்த மதம்; பிரிவு படுத்தல், விலக்கி வைத்தல், அடிமைப் படுத்தல், ஒடுக்குதல் இவற்றையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. வர்ணப் பகுப்பு, சாதிப்படிநிலை, தீண்டாமை இவைதான் அது கொண்டுள்ள சமூக விதி அதனால் “இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளத்தால் நிரந்தரமான அடிமைகளாக உள்ளனர்” என்று இந்துச் சமூக உளவியலை  அண்ணல் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

சாதி ஒழிப்பு, இந்து மதத்தின் புதிர்கள், மதமாற்றம் எதற்காக? போன்ற நூல்களில் இந்து மதங்கள் பற்றிய தன் மதிப்பீடுகளை ஆய்வின் அடிப்படையில் அம்பேத்கர் மிகவிரிவாக, மிக வலிமையாக முன்வைத்திருக்கிறார். அம்பேத்கர் இந்து மதம் பற்றி வைத்த விமர்சனங்களுக்கு இன்றுவரை அறிவுப்பூர்வமான ஒரு பதில்கூட முன்வைக்கப்படவில்லை. அம்பேத்கர்  ‘இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’ என்று சொல்ல வந்த காந்தி நடப்பியல் அடிப்படையற்ற தன் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பையே இந்து மதம் பற்றிய தன் கருத்தாக முன்வைத்தார். “வர்ண விதிமுறை தீண்டாமையை ஆதரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு கடவுள் அதிலும் சத்தியம்தான் கடவுள் என்று சொல்வதும், அஹிம்சையை மனித குடும்பத்தின் வாழ்க்கைச் சட்டமாக ஏற்றுக் கொள்வதும் தான் ஹிந்து மதத்தின் சாராம்சம்.”  என்றும் “ஒரு மதத்தை அதன் தீய உதாரணங்களை வைத்து மதிப்பிடக்கூடாது நல்ல உதாரணங்களைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும்” என்றும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து ஹிந்துமத ஆச்சாரியர்கள் மற்றும் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகி அம்பேத்கரின் வாதத்திற்கு மேலும் சான்றுகளை உருவாக்கினார்.

இந்து மதத்தை ஒற்றை அமைப்பாக அணுகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அந்தச் சிக்கல்கள்தான் மக்கள் நலம் சார்ந்ததாகச் அதனைச் சீரமைத்தல், சமூகப் பொதுமை கொண்டதாக அதனை மாற்றுருவாக்கம் செய்தல் என்பதையும் தடுக்கின்றன. தொல்சமூகக் கூறுகள், சட்டவிதிகள், மெய்யியல் சார்ந்த சொல்லாடல்கள், பண்பாட்டு, நிகழ்கலைக் கூறுகள், வலிமையான சடங்குகள் எனப் பல அடுக்குகளை இந்து மதம் தனக்குள் பொதிந்து வைத்துள்ளது. அதன் மையமான பகுதியை அடையாளம் காட்டுவதிலும் சிக்கல் உண்டு. அது ஒரு மதத்திற்கான கட்டமைப்புகள் இல்லாததாகவும் உள்ளது, அதே சமயம் ஒரு போருக்காக மக்களைத் திரட்டக்கூடிய வலைப்பின்னலையும் கொண்டுள்ளது. அதனால் அதன் வன்முறை பரவலாகவும், பதுங்கியிருந்து தாக்கும் தன்மையுடனும் உள்ளது. பழங்குடி மக்கள், தீண்டாமையால் வெளியிருத்தப்பட்ட மக்கள்,வைதிகத்தினால் இழிவு சுமத்தப்பட்ட மக்கள் என வேறுபாட்ட சமூகங்களையும்  அவற்றின் வழிபாடுகள், இறைநம்பிக்கைகள், வழக்காறுகளையும் தன்னுடைய அரசியல் கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதே சமயம் அவற்றைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அடையாளம், உறவுமுறை, தொன்மக் கதைகள் என ஏதாவது ஒரு குறியீட்டு இணைப்பால் சிறுமரபுகளைத் தனது கட்டமைப்பிற்கு உட்படுத்திக் கொள்ளும் தகவமைப்பை இந்து மதம் பெற்றுள்ளது, அதே சமயம் அவற்றை இழிந்த, மாசு பட்ட மரபுகள் என்று அவமதிக்கும் உரிமையையும் எடுத்துக் கொள்கிறது.

இவை எப்படியிருந்த போதும் இன்றைய இந்து மதம் பௌத்தம், சமணம் என்ற முற்கால சீர்திருத்தங்களை அழித்துத் தன்னைப் பலப்படுத்திக் கொண்ட ஒரு மதம். அதே போல காலனிய அரசு, நவீன தேசியம் இரண்டிற்கும் எதிர் நிலையில் தன்மை மறுஉருவாக்கம் செய்து கொண்ட ஒரு மதம். இன்றைய இந்து மதம் எதிர்நவீன ஒன்றிணைப்புடன், மிகப்புதிதாக உருவாக்கிக் கொண்ட ஒற்றை அடையாளத் துடன் கட்டமைக்கபட்ட ஒன்று. 1950-க்குப் பின் உருவான புதிய ஒரு தேசிய அடையாளத்தை மிகப் புராதனமான ஒரு சொல்லாடலுடன் இணைத்து இந்து-இந்தியா என்பது போன்ற ஒரு புனைவை இதனால் கட்டமைக்க முடிகிறது. இந்தக் கட்டமைப்பிற்குள் சைவ, வைணவ, சாக்தேய, குலதெய்வ முரண் மரபுகள் அமைதியான ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டிருப்பது இம்மதம் தன்னைப் புதிய அரசியலாக்கம் செய்துகொண்டதற்கான அடையாளம். சாதி, தீண்டாமை, சமூக ஒடுக்குமுறை பற்றி இந்த அரசியல்மதம் இருண்ட மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனத்தின் உள்ளடங்கிய வன்முறையை மக்கள் அரசியலின்முன் புலப்படுத்தும் பொழுதுதான் இதற்குள் நிகழ் வேண்டிய மாற்றம் என்ன, தலைகீழாக்கங்கள் எவை என்பது பற்றிய உரையாடல் சாத்தியமாகும்.

மனித நேயம் கொண்ட சமய நெறிகள், வைதிகத்தை எதிர்த்த ஆன்மிக இயக்கங்கள், மக்கள் சார்புடைய கிளைச் சமயங்கள், அடக்கு முறைகளுக்கு எதிராக உருவான சில சமயக் குழுக்கள் இந்திய வரலாற்றில் புதியன அல்ல. சாதிப் பிரிவுகளையும் சடங்குக் கேடுகளையும் எதிர்த்த தமிழின் சித்தர் மரபுகள் நமக்குத் தெரியும். வள்ளலார் (சீவகாருண்யம், சமரச சுத்த சன்மார்க்கம்) நாராயணகுரு (ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்) ஜோதிபா புலெ (சர்வஜன சத்திய தர்மம்) என இந்திய ஆன்மிக மரபை நவீன அறத்துடன் இணைத்த செயல்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வைதிகத்தை மறுத்தவர்கள், பிராமணக் கருத்தியலை அடியோடு வெறுத்தவர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் இந்து சமயத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய முதல் தீமை என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.

மதம், சமய வழக்காறு என்ற வகையில் இந்து மதங்கள் இந்திய மக்களிடம் புழக்கத்தில் இருப்பதை நாம் மறுக்கவோ, எதிர்க்கவோ இயலாது. ஆனால் அவை தம்மை மனிதநேயம் கொண்ட, மக்கள் உரிமையை மதிக்கும் மதங்களாக, ஒடுக்கப்பட்ட மக்களும் ஏற்கும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்கான அடிப்படை கோரிக்கைகளைச் சுற்றி வளைக்காமல் அம்பேத்கர் வழியில் நேரடியாக முன் வைக்கலாம்: தீண்டாமை, சதுர் வர்ணம் இரண்டையும் கடைபிடிப்பது தெய்வத்திற்கு எதிரான பாவம் என்று அறிவிக்க வேண்டும், தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தின்  உறுப்பினர்களை இந்தியக் கோயில்கள் அனைத்திலும் இரண்டு அர்ச்சகர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும், சேரி-ஊர் என இரண்டு வாழிடங்கள், இரண்டுக்கும் தனித்தனி இடுகாடுகள் இருப்பதைச் சமய அடிப்படையில் குற்றம் என அறிவிக்க வேண்டும், இந்து சமய மடங்கள், நிறுவனங்களில் தீண்டாமைக்குட்ட ஒருவர், பிற்படுத்தப்பட்ட ஒருவர், மற்ற பிரிவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று ஆச்சாரியர்களை நியமிக்கும் மரபை உருவாக்க வேண்டும், பெண்களுக்கும் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும், சமய நூல்களை கற்க- கற்பிக்க அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

வைதிக இந்து மதத்தை நம்பும் ஒருவரிடம் இந்தக் கோரிக்கைகளைக் கூறினால் அவருடைய பதில் இப்படியான ஒரு எதிர்க் கேள்வியாகவே இருக்கும்.  “இந்து தர்மத்தை அடியோடு குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பதைத் தானே சுற்றி வளைத்து நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள்?” அதற்கும் அப்பால் வைதிகம் மறுத்த இந்து சமயம் ஒன்று உருவாகும் என்றால் அதனை அழிக்க வேறு யாரைவிடவும்  பிராமண சமயமே முன்நின்று போராடும்.

தற்போதுள்ள இந்தச் சிக்கலான நிலையைக் குடிமைச் சமூக, நவீனக் கருத்தியல்கள் வழியாகவே கையாள இயலும். அதற்கான அடிப்படைதான் மதம் நீங்கிய நவீன அரசும், மக்கள் உரிமை அரசியலும். காந்தி, அம்பேத்கர் இருவரும் முற்றிலும் எதிர் எதிர் நிலையிலிருந்து இதனை அணுகியிருந்த போதும் மிக அடிப்படையான மாற்றம் பற்றியே இருவரும் சிந்தித்துள்ளனர். காந்தி ஒரு உணர்ச்சிகரமான தொடக்கம், அம்பேத்கர் அதன் நெடிய நீட்சி, உண்மையான விடுதலை நோக்கிய அறிவும் ஆன்மிகமும் இணைந்த தேடல்.

மறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்-பிரேம்

உரையாடல்: 8 
 மறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்
கேள்வி:
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தன்னிச்சையாக நடைபெறுவதாகத் தோன்றும் அரசியல் நிகழ்வுகள், தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், ஊடகங்களில் முன்னிலைப் படுத்தப் படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்குப் பின்னிருக்கும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் ஆகியவற்றின் மறைமுகமான தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்:
பிரேம்
எல்லோரும் அமெரிக்கரே, பிணங்களைப் புசிக்கும் பேரரசுகள் போன்ற எனது கட்டுரைகளை நினைவு படுத்தியபடி இவை குறித்தான எனது கவனிப்புகளையும் குழப்பங்களையும் பதிவு செய்கிறேன்.
வளரும் நாடுகள், வளர்ந்துவிட்ட நாடுகள் என்ற தொடர்களைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு காலனியச் சுரண்டலால் தம்மை வளர்த்துக் கொண்ட நாடுகள், தம் வாழ்வாதாரங்களுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாடுகள், மற்ற நாடுகளின் இயற்கை, கனிம வளங்களைக் கொள்ளையிடும் நாடுகள், தம் நாட்டின் வளங்களை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியாமல் துயருறும் நாடுகள், உலக அரசியல் பொருளாதாரத்தைத் தம் சுரண்டலுக் கேற்ப திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் அரசுகள், தம் நாட்டின் அரசியல்-பொருளாதாரத்தைத் தம் மக்களின் தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள உரிமையற்ற நாடுகள் எனப் பல தளங்களில் இன்றைய உலக வல்லாதிக்க வலைப்பின்னல் அமைந்துள்ளது.
கடந்த ஐநூறு ஆண்டுகளில் மண்ணைக் கொள்ளையிடும் இந்த அரசியல், இனம், நிலம் என்ற பல தளங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போர்களுக்கு முன் உலகம் முழுதும் தனித்தனியாக நடந்து வந்த போர்கள் வளங்களைக் கைப்பற்றுதல், நிலங்களை அடிமை கொள்ளுதல், அரசுகளை விரிவுபடுத்தல்  என்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டன. காலனிகாலப் போர்கள் உலகின் நிலப்பரப்புகளை நிரந்தரமாகத் தன்வயப்படுத்தும் திட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மொத்த உலகையும் யார் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்ற கொலைகார அரசியலின் விளைவுகளாக அமைந்தன. உலகப் போர்களுக்குப் பின் வல்லாதிக்க அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் போரின் தன்மையை மாற்றி யமைத்தன.  மண்ணின் மக்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் என உலகின் மக்கள் தொகுதிகளின் மீதான உருமறைத்த, உள்பதுங்கிய போர்கள் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய கூட்டமைப்பின் உலகச் சுரண்டல் காலனிய காலத்தில்கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகுதிகளையும், நிலப்பகுதிகளையும் கொள்ளை யிட்டுள்ளன.  அந்த அந்த நாடுகளில் ஒப்பந்த அரசுகளை உருவாக்கித் தம் அதிகாரத்தை தொடர்ந்து உறுதிப் படுத்திக் கொள்வது இன்றைய உலக வல்லாதிக்க அமைப்பின் உத்தியாக உள்ளது. சுதந்திரப் போராட்டம், தேசிய இயக்கங்கள் என்ற வடிவத்தில் எதிர்க்க முடியாத அடக்குமுறை உத்திகள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில் நடந்த ஜனநாயக மாற்றங்களைக் கூட சிவப்புப் பேராபத்து என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பியப் படைகள் அழித்தொழித்த வரலாறு நீண்ட துன்பியலாகப் படிந்துள்ளது. 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்கச் சதித்திட்டம், ரஷ்யச் சதிதிட்டம், சீனாவின் சதித்திட்டம் என்றெல்லாம் மற்ற நாடுகளில் நிகழும் குழப்பங்கள், மோதல்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதும் அதற்கான சான்றுகளைப் பலகாலம் தேடி வெளிப்படுத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று சதித்திட்டங்கள் என்பவை வளர்ச்சித் திட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள் என்ற நற்பெயருடன் வெளிப் படையாக நிறை வேற்றப்படுகின்றன.
எதுவும் மறைக்கப்படுவதோ, மாறுவேடத்தில் வருவதோ இல்லை. 1990 களில்  தொடங்கிய பன்னாட்டு நிதியம் மற்றும் வணிக அமைப்புகளுடனான  இந்திய ஒப்பந்தங்களில் மறைவாகச் சொல்ல எதுவும் இல்லை.  கட்டுப்பாடற்ற சந்தை, உலகமயமாதல், தனியார் மயமாதல் என்ற சதித் திட்டம் வளர்ச்சித் திட்டம் என்ன பெயரில் முன் வைக்கப்பட்டது. இனி தேசிய மயமான தொழில்கள் தொடங்கப்படக்கூடாது என்பதுடன் தற்போதுள்ள பொதுத் துறைகளும்  பங்கு நிறுவனங்களாக மாற்றப் படவேண்டும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள்  பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிடப் படவேண்டும் என்பதானப் பெருங்கேடு கொண்ட கொள்கைத் திட்டங்கள் இந்திய மக்களின் கண் முன்னால்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கான கல்வி,  மருத்துவ வசதி  என்பவை அரசின் கடமைகள் இல்லை என அறிவித்த பெரும் சதித்திட்டங்கள் ரகசியமாக நடக்கவில்லை, இவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய தேவை இன்றைய ஏகாதிபத்திய வலை யமைப்புக்கு இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நேரடி ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்க்க முனையும் மக்கள் இன்று தேசத்துரோக்க்  குற்றம் புரிந்தவர்களாக தண்டிக்கப்படுவார்கள்.
இராக் அழிப்பு, ஆப்கானிஸ்தான் தகர்ப்பு என எதுவும் சதித்திட்டமாக அடையாளம் காணப்படவில்லை, உலக அமைதிக்கான அரசியல் நடவடிக்கைகள் என்று தான் விளக்கப்பட்டன.  இன்றைய ஊடகங்கள், வலை தளங்கள் வழி அனைத்துச் சதித்திட்டங்களும் இன்றைய வானிலை போல உடனுக்குடன் வெளியாகிக் கொண்டுள்ளன. விக்கிலீக் குழு, ஜீலியன் ஆசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடன் நிகழ்வுகள் கூட புதிதாக எதையும் கண்டு சொல்ல வில்லை, உலகக் கண் காணிப்பு, சதித் திட்ட வலைப் பின்னல்கள் என முன்பு சொல்லப் பட்டவைகளுக்குச் சான்றுகளை, அடிக் குறிப்புகளைத் தந்தன அவ்வளவே.
இந்திய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சில பெருநிறுவனங்களும், சில பன்னாட்டு குழுமங்களும் எழுதும் நாடகக் கதையை தேசிய மேடையில் நடத்திக் காட்டும் கலைக் குழுக்களாக உள்ளன என்பதை ஒரு கட்சி மற்ற கட்சிகள் பற்றித் தரும் புள்ளி விபரங்கள் வழி தொடர்ந்து தெளிவாகிக் கொண்டே இருக்கிறது. கர்நாடக மாநில அரசை உருவாக்கியது, பின்பு கலைத்தது எல்லாம் சுரங்க முதலாளிகள் குடும்பம் ஒன்று நடத்திய தேநீர் விருந்து என்பதை ஊடகங்கள் சொல்லிக்காட்டின. இப்பொழுது எதுவும் மறை முகமாக திட்டமிடப் படுவதோ, நிகழ்த்தப் படுவதோ இல்லை. ஆனால் உலக மக்கள், தேசமக்கள், மண்ணின் மக்கள், இயற்கைச் சமநிலை என எல்லாவற்றின் மீதும் கவிழந்துள்ள சதித்திட்டங்கள்  இவை. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் தமிழீழம் என்ற பேராபத்தை எங்களால் அழித்தொழிக்க முடிந்தது என்று சிங்கள அரசின் தலைவர் நன்றி தெரிவித்த பின்னும் தமிழர்கள் அழிக்கப்பட்டதில் இந்திய அரசின் சதி உள்ளதா எனத் துப்பறிய என்ன இருக்கிறது.
உண்மைகள், தகவல்கள், ஆதாரங்கள், ஆவணங்கள், ஊடகத் தொடர்புகள் எல்லாம் பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கின்றன.  ஆனால் மக்கள் அரசியல்தான் செயலற்ற நிலையில் உள்ளது. இந்தத் தகவல் பெருவெள்ளம் ஒருவகையில் மக்கள் அரசியல் உளவியலைச் சிதைக்கக்கூடியது. பொது அச்ச உணர்வைத் திணிக்கக் கூடியது. முகமற்ற சதித்திட்டம் பற்றிய அச்சம் அரசியல் செயலின்மையை மக்களிடம் தேக்குகிறது. இந்தச் செயலின்மை மக்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையிலான வன்முறை யை, இரக்கமின்மையைப் பெருக்குகிறது.  இந்தியாவின் காவி அதிகாரம் இந்த அச்ச அரசியலின் தற்கால உதாரணம். இதற்கான தீர்வு ஒரு முனையில் தொடங்கி மறுமுனையில் முடிவதல்ல… மாற்றுச் சிந்தனைகள், மக்கள் அரசியல் சிக்கலான செயல் திட்டங்களைக் கொண்டவை.
இன்றைய கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், பண்பாட்டு அமைப்புகள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்திற்குள்ளும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் கருத்தியல் மற்றும் கண்காணிப்பு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள்தான் பொருத்தப் பட்டுள்ளன. உலக மயமாதலும், பன்னாட்டு முதலீடுகளும், உயிர்க்கொல்லி தொழிற்சாலைகளும், நகர்மயமாதலும்  இந்தியாவின் முன்னேற்றத்திற்கானவை என்றும் இதனை எதிர்க்கும் மக்கள் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றும் பெருஞ்சொல்லாடலை இவை உருவாக்கி, உறுதிப்படுத்தி, பரப்பும் பணியைச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் அரசியல் இவற்றைக் கடந்து தன்  எதிர்ப்புகளைச் செயல்படுத்தும் போது அதன் விளைவுகள் சற்றுக் கடுமையாகவே இருக்கும். அந்தக் கடுமையை ஆக்கப்பூர்வமாக மாற்றத் தற்பொழுது உள்ள அரசியல் இயக்கங்கள் ஆற்றலற்றவையாக, பயிற்சியற்றவையாக இருப்பது  நடப்பியல் உண்மை.
நாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் மாற்று அரசியல், மக்கள் உரிமைப் போராட்டங்கள், சூழலியல் அரசியல், பெண்ணிய, தலித் அரசியல், அடையாள அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் பன்னாட்டு அரசியல் சக்திகளின் சதி என உள்நாட்டு அதிகார-அரசு நிறுவனங்கள் சொல்லி வருவதையும் கேட்டு வருகிறோம். அதிகாரம் அடக்கு முறைகளுக்கு மட்டுமல்ல மக்கள் போராட்டங்களுக்கும், மாற்று அரசியலுக்கும்கூட பன்னாட்டு வலைப்பின்னல் உண்டு.  இதில் மறைக்க, மறுக்க ஒன்றும் இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு பிரிடிஷ் முடியரசைத் தம் நாட்டிலிருந்து தூக்கி எறிய பிரெஞ்சு அரசும், பிரெஞ்சு அறிவு ஜீவிகளும் ஆயுதம் வழங்கி ஆதரவு தந்தனர்.  பிரஞ்சு முடியரசை எரிக்க பிரிடிஷ் அரசு வெடிமருந்து வழங்கி ஆசிர்வதித்தது. உலக வரைபடத்தை இந்த இரண்டு அரசுகளும் வெட்டித் தமக்குள் பங்கிட்டுக்கொள்ள போரும் ஒப்பந்தமுமாக வரலாற்றை அலைக்கழித்துள்ளனர். ரஷ்யா அரசு தம் நாட்டில் பயன்படாத அணு உலைகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்ட இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்வது நல்லெண்ண ஒத்துழைப்பு, (இனி அமெரிக்க நிறுவனங்களும் தம் நாட்டில் பயன்படுத்த முடியாத அணுஉலை இயந்திரங்களை இந்தியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு பணத்தை வாரியெடுத்தச் செல்ல ஒப்பந்தம் உருவாகியுள்ளது.) ஆனால்  ரஷ்ய செர்னோபில்  பேரழிவால் (1986) பாதிக்கப்பட்ட மக்களில் சிலர்  இயக்கம் அமைத்து இந்தியாவின் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கங்களுக்கு சிறிய உதவிகளைச் செய்தால் அது சதித்திட்டம்… அப்படியெனில் பன்னாட்டு “மக்கள் சதித் திட்டங்கள்” தேவையான அளவுக்குப் பெருகவில்லை என்பதுதான் கவலைக்குரியது…

பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம் -பிரேம்

உரையாடல் : 7  பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம்
கேள்வி:
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
தலித்துக்கள் குறித்த பிரச்சினைகள், ஓட்டரசியல் தளத்திலும் வெகுஜன ஊடகங்களிலும் கவன ஈர்ப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சீரிய இலக்கியத்தளங்களிலும், அறிவார்ந்த தளங்களிலும், தமிழில் எவ்வித உரையாடலும் இல்லாமல் போய்விட்டது ஏன்,  இது பொதுச் சமூகப் பிரச்சினை என்பதிலிருந்து தலித்துக்களின் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதைக் கவனிக்க முடிகிறது. இதன் பின்னணி குறித்து?
பதில்:
பிரேம்
தலித் அரசியலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களும் சிறுகச் சிறுக உருவாகி தனித்த அரசியல் அடையாளமாக, அரசியல் சக்தியாக மாறிய பின் பாராளுமன்ற ஜனநாயகமும், உலகமயமான ஊடகங்களும் அதனை வேறு வழியின்றி, நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக் கொண்டன. இந்த வகை ஏற்பு, கவனம் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக உள்ள ஒரு நாட்டில் போதுமானது என நினைக்கிறீர்களா? 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 131 பேர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எத்தனை பேரை தேசியத் தலைவர்களாக இந்தியச் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது, ஏற்றுக் கொண்டுள்ளது? ஊடகங்களில் தலித் அரசியலுக்கென தினம் ஒருமணிநேரம் ஒதுக்கப்படுவதாக நாம் கணக்குக் காட்ட முடியுமா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல், பொருளாதாரம், சமூகப்பண்பாட்டுச் சிக்கல்கள், தலித் அரசியல் குரல்கள் எந்த அளவுக்கு ஊடக மதிப்பைப் பெற்றுள்ளன என்பதை பற்றிச் சிந்திக்கும் போது பெருங்கோபம்தான் வரும். தமிழகத்தில் தலைவர். தொல்.திருமாவளவன் வழியாக ஒரு கருத்தியல் பரவல் நடந்து கொண்டுள்ளது. ஆனால் தலித் அரசியலை ஏற்றவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தவிர வேறு யாரும் அவரைத் தமிழினத் தலைமை என ஏற்பதில்லை. ஊடகங்களில் உள்ள பரந்த மனப்பான்மை கொண்ட நண்பர்கள் சிலர் சொல்வதுண்டு “சார் உங்க ஆளுபேச்சு ஒரு பத்தி அளவுக்கு சேர்த்தாச்சு, உங்க தலைவர் இதப்பத்தி சொன்ன கருத்த முழுசா சேக்க முடியல”.  இது போலத்தான் நிலை உள்ளது. 1993-97 காலகட்டத்தில் அம்பேத்கர் உருவப் படத்துடன் ஒரு சுவர் எழுத்து எழுதவும், சுவரொட்டி ஒட்டவும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையுடன் செல்ல வேண்டியிருந்தது. அண்ணா என்று பாசமாக என்னை அழைக்கும் இரண்டு இளைஞர்கள் புதுவைப் பகுதியில் சுவர் எழுத்து எழுதும் போது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது. இன்று சில சுவர்களும், சில ஊடகங்களும்  கைவசப்பட்டுள்ள நிலையில் தலித் அரசியலின் உருவமும் குரலும் மறைக்க முடியாத அளவுக்குத் தோற்றம் தருகின்றன. ஆனால் இலக்கியத் தளங்கள், அறிவார்ந்த தளங்கள் என அறிவித்துக் கொள்ளும் பகுதிகளில் தலித் அரசியல், தலித் கருத்தியல், அம்பேத்கர், அயோத்திதாசர் சிந்தனைகள் எந்த இடத்தைப் பெற்றுள்ளன? “அவங்க எல்லா எடத்துலயும், வந்துட்டாங்கையா” என்றும் “நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றாலே தலித்தியம், பெண்ணியம் மட்டும்தான் என்பது போல மாத்திட்டாங்கையா” என்றும் இலக்கியப் பேரறிஞர்கள், சிற்றறிஞர்கள் எல்லாம் நெஞ்சுநோகக் கூறித் துயர்ப்படுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இடைநிலைச் சாதிகளின் அரசியல் தற்போது தீண்டாமை மீட்புப் போராட்டமாக மாறியுள்ளது.
தலித் அரசியல் பெரிய அளவில் உருவாகி இந்திய அரசியலைக் குழப்பி வருவதாகச் சில பேச்சுகளை நாம் கேட்க முடிகிறது. இத்தனைக்கும் அடையாளத்தை உருவாக்கும் அரசியலாக, குறியீட்டு அரசியலாகத்தான் தலித் அரசியல் தற்போதும் இருந்து வருகிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தலித் அரசியலுக்குக் கடுமையான சிக்கல் தொடக் கத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கருத்தியல் அடிப்படையில் ஒன்றிணையாமல் தம்மை ஒடுக்கும், ஒதுக்கும் சாதிகளின் தலைமையிலான கட்சிகளின் அச்சுறுத்துதலுக்குப் பயந்து வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்பதும் ஆதிக்கச் சாதியத் தலைமைகளை தம் தலைமைகளாக ஏற்று அடிமை நிலையைத் தொடர்வதும் அம்பேத்கர் காலத்திலிருந்து இருந்து வரும் ஒரு அவலம். வாழ்வாதாரம் அற்ற கிராம தலித் மக்கள் நில உடைமையாளர்களின் கட்டளைகளை மீற முடியாத நிலையில் தம் துயரங்களை வெளியே சொல்லவும் முடியாமல் வாழும் நிலையும், நகரங்களில் வாழநேர்ந்த தலித் மக்கள் தம் அடையாளத்தைக் காட்டிக் கொண்டால் நேரும் அவமானங்களுக்குப் பயந்துப் பதுங்கி வாழும் அவலமும்,  பெரும் மக்கள் தொகை இருந்தும் வாழிட அமைப்பால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கை முறையும், இந்திய அளவில் ஒருங்கி ணைந்த ஒரு அரசியல் சக்தியாக, ஒரு கூட்டி ணைப்பை உருவாக்க இயலாத உதிரித் தன்மையும் தலித் அரசியலை விளிம்பு நிலை அரசியலாகவே வைத்தி ருக்கின்றன. இந்து மத அடையாளத்தை மறுக்க இயலாத தலித் அடையாளம் தலித் விடுதலை அரசியலை சக்தி அற்றதாக மாற்றி விடுகிறது. இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து கொள்ளத் தயங்காத தலித் தலைமைகள்  தலித் அரசியலின் மூளையை செயலிழக்கச் செய்கிறார்கள்.
பெருந்தேசிய சக்திகள், பன்னாட்டு முதலாளிகள், உலகச் சந்தைகள் தந்துள்ள  அதிகாரத்தின் துணையுடன் தீண்டா மையும், சாதி ஒதுக்குதலும் தற்போது இந்திய அளவில் மறுஉருவாக்கம் பெற்று வருகின்றன. இதற்குப்   பன்னாட்டு அரசியல் தொடங்கி உள்நாட்டு பொருளாதாரம் வரை பல காரணிகள் உள்ளன. தலித் அரசியல் ஒரு துணை அரசியலாக இருப்பது வரை அனுமதிக்கலாம் என்ற திட்டம் கொண்ட அரசியல் கட்சிகள்.  இவர்கள் எல்லாம் நம் முன் உட்கார்ந்து கூட்டணி பேசி நிற்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதே என உள்ளே கொந்தளித்து உதட்டில் முறுவளிக்கும்  தலைவர்கள். நம் வீட்டுப் பெண்களை மயக்கிக் கடத்திச் செல்ல அந்தப் பக்கத்தில் ஒரு இளைஞர் படையே உருவாகிக் கொண்டிருக்கிறது படையுடன் எழுவீர் பாட்டாளி வீரர்காள் என  அழைப்பு விடும் இனமானத் தலைவர்கள். “பிராமண சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைநீட்டி அடித்ததுண்டா, கழுத்தை அறுத்ததுண்டா, கலப்பு மணம் செய்து கலந்து வாழ்ந்த சமூகம்தானே. அந்த இடைநிலைச் சாதிகள்தானே தீண்டாமையை உருவாக்கி நம் இருவரையும் பிரித்தது. சாதித் தமிழர்களை மட்டும் நொருக்கிவிட்டால்  சங்கர மடத்திலும், ஜீயர் மடத்திலும்  நாம் சமபந்தி விருந்துண்டு சந்தோஷமா வாழலாம்” எனப் பன்னாட்டு பஜனை செய்யும் நூலோர்கள். ஈழத்தமிழர்கள் அழிந்தால்தான் இந்தியத் தலித்துகளுக்கு விடுதலை என்பதைச் சொல்லிப் புரியவைக்க தம் ஒவ்வொரு நாளையும் அர்ப்பணிக்கும் முற்போக்கு மேலோர்கள்.  இப்படித்தான் தமிழக அரசியல் உளவியல் பன்முனை போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்தச் சாதி உளவியலுடன்தான் எழுதுகிற பலரும் இயங்கிக் கொண்டுள்ளனர்.
இந்த இக்கட்டான நிலையில் இருநாள் கருத்தரங்கின் இடைவேளையின் போது அரசு பதிவு பெற்ற ஒரு தலித் எழுத்தாளரைப் பேசச் சொல்லி அனுப்பிவிட்டு “இலக்கியம் தன் கடமையைச் செய்யும்” என்று இருந்து விடுவதே அறிவுலகத்தினருக்கு பெரும்பாடாக உள்ள போது எங்கே தலித் இலக்கியம், கருத்தியல் பற்றிப் பேசுவது… அதற்குத்தான் தனியாக தலித் கலைவிழா இருக்கு, தலித் சிறப்பிதழ் இருக்கு, தனிக்குவளையில் அள்ளி தலித் கவிதை பருகித் தமிழ் வளர்க்க வேண்டியதுதான். சாதி அடிப்படையில் இலக்கியமா, இலக்கியத்தில் சாதிக்கு என்ன வேலை என்று புதிய சமூகவியலை தமிழருக்குப் புரியவைக்கும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டுள்ளன. தலித் இலக்கியம் தனி இலக்கியம் அது தலித்துகள் படித்து மண்ணாகப் போகட்டும்,  தமிழ் இலக்கியம் தனித்தன்மை கொண்ட இலக்கியம் அதுதான் பொது இலக்கியம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.  எழுத்துச் சந்தைக்கு இந்தக் பொது இலக்கிய வேடம் பொருத்தமானது. வெள்ளை யானைக்கு இணையாக ஒரு தலித் இலக்கியத்தை தலித்துகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவராவது  படைக்கவில்லையே என்ன காரணம்?  என்பது போன்ற ஒரு சிம்மக் குரலை நான் மதுரையில் கேட்டு நடுங்கி விட்டேன்… இந்த நடுக்கம் இன்னும் சிலகாலம் தொடரக்கூடும்…
தலித் அரசியல் இந்தியச் சமூக- பண்பாட்டு உளவியலின் அடிப்படைகளை மாற்றி யமைக்கும் அரசியல்,  மாறுவேடமணிந்த மனிதக் கொடுமைகளை சமயம், சாத்திரம் என்ற பெயரில் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கும் இந்தியப் பொது நினைவை முற்றிலும் உருமாற்றம் செய்யக்கூடியது. இந்திய அறம், அழகியல், மனித நேயம் என்ற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி புதிய சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது. இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்கப் பொதுச் சமூகம் என்ற சாதியச் சமூகம் இதுவரை தயாராக இல்லை. பொதுச் சமூகத்திலிருந்து புறப்பட்டு வரும் புத்திஜீவிகளும்   தலித் அரசியல் தலித்துக்களின் பிரச்சினை, அது வன்கொடுமை தடுப்புச் சட்டம்,  23 சத இடஒதுக்கீடு என்பதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்ற அளவில்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவீனத்தையே நவீனத்தன்மை என்று கொண்டாடும் படைப்பாளிகள்  வடக்கையும் வதைக்கிறார்கள், தெற்கையும் தேய்க் கிறார்கள்.
தலித் அரசியல் இந்தியச் சமூகத்தின் அடிப்படை அரசியல் என்பதையோ, இந்தியாவின் நவீனத் தேசியத்தின் முதன்மைக் கருத்தியலாளர் அம்பேத்கர் என்பதையோ, தலித் விடுதலை இன்றி இந்தியச் சமூகம் தன்னை மனித அறம் கொண்ட சமூகமாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதையோ இலக்கியம் படைக்கும் பலரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் பரந்து கெடுக இந்த படைப்பாளிகள் கூட்டம் என்று சபிக்கத்தான் தோன்றுகிறது.

உரையாடல்:1:1

கேள்வி:

எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம் என்று கூறியுள்ளதையொட்டி ஒரு கேள்வி. மாற்று அரசியல் என்பது அரசியல் இருந்து வரும் காலம் நெடுகிலும் இருந்து வரும் ஒன்றாகக் கருதுகிறீர்களா, அல்லது நம் காலத்தின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் எழுவதாக நினைக்கிறீர்களா?

பதில்:

அரசு, அரசு வடிவங்கள், அரசியல் என்ற தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும் எப்போதும் இருந்து வருபவர்கள் தனிமனிதர்கள். தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்துதான் அரசு உருவாகிறது என பிளாட்டோ தன் குடியரசில் விளக்குவது இன்றும் சமூக அறிவியலில் மறுக்க இயலாத சமன்பாடு. மனிதர்கள் அரசுகளை, ஆட்சிகளை, அரசர்களை, அரசியல் அமைப்புகளை மாற்றியமைப்பது மிகத்தொன்மையான ஒரு அரசியல் செயல்பாடுதான். ஆனால் தனிமனிதர்கள்-அரசு என்ற உறவமைப்பின் அடிப்படையையே மாற்றியமைத்த அரசியலைத்தான் நாம் நவீன அரசியல் என்கிறோம். நவீன அரசியலில் சுதந்திரம், சமத்துவம், சமநீதி, தன்னடையாளம் என்பவை மிக அடிப்படையான கருதுகோள்கள்.  நவீன அரசியல் தனிமனிதர்களை மையமாக வைத்துக் கட்டப்பட்டது, ஆனால் தனிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது,  தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலில் பங்கை அளித்து அவர்கள்  ஒவ்வொருவரும் அரசியலை செயல்படுத்தும் உரிமையை அளிப்பது, தனிமனிதர்கள் யாருக்கும்  அடிபணிய வேண்டிய தேவையை  இல்லாமலாக்குவது, இது தனிமனிதர்களால் ஆளப்படும் அரசியல் அல்ல பொதுஅறங்களால் ஆளப்படுவது எனப் பலவாறாக விளக்கிச் செல்லமுடியும். ஆனால் இவையெல்லாம் இன்று கருத்தியல் சமன்பாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தியல் சமன்பாடுகளை நடப்பியலாக மாற்றுவதற்கான அரசியலையே நாம் இன்றைக்கான மாற்று அரசியல் என்கிறோம்.

அரசின் வடிவத்தை மாற்றுவது, அரசியலுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவை மாற்றுவது, அதிகாரக் கட்டமைப்பின் மையங்களை அவிழ்த்துப் பரவலாக்குவது  என்பவை மாற்று அரசியலின் தொடக்கமாக உள்ளது. மார்க்சியம் அடையாளப்படுத்திய அரசியல் பொருளாதார விடுதலை, அம்பேத்கர்  முன்வைத்த சமநீதி, சமஉரிமைகள் கொண்ட அறம்சார்ந்த அரசியல், பாலின ஒடுக்குதலை மறுக்கும் பெண்ணிய அரசியல், வேறுபடுதலுக்கான உரிமையை வலியுறுத்தும் அடையாள அரசியல், உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வாழ்வாதார உரிமையை வலியுறுத்தும் சூழலியல் அரசியல்  எனப் பல தளங்களைக் கொண்டதுதான் இன்றைக்கான மாற்று அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் அளவும் வடிவமும் மாறுபடுவது போல அதற்கெதிரான போராட்டங்களும் மாறுபடும். இன்றைய அரசியல், பொருளியல், அதிகார வன்முறைகளுக்கெதிரான மாற்றுகளை முன்வைப்பதுதான் இன்றைய மாற்று அரசியல். இன்றைய அடக்குமுறை அரசியல் பன்முனைப்பட்டதாக, பலவடிவம் கொண்டதாக இருப்பது போலவே இன்றைக்கான மாற்று அரசியலும் பலதளங்களைக் கொண்டதாக உள்ளது.

நம் காலத்தின் மாற்று அரசியல் காலம் சார்ந்தது மட்டுமல்ல, இடம் சார்ந்தும், களம் சார்ந்தும் பல வடிவங்களைப் பெறும். பொதுச்சாலைகளை தலித் மக்கள்  பயன்படுத்தத் தடையுள்ள ஊர்களில் அதற்கெதிரான போராட்டம்தான் முதல்கட்ட மாற்று அரசியலாக, விடுதலைக்கான அரசியல் செயல்பாடாக இருக்கும். ஊர்கள், சேரிகள் எனத் தனித்தனி வாழிடங்களையும் சேரிச் சுடுகாடு, ஊர்ச் சுடுகாடு எனத் தனித்தனி புதைகாடுகளையும் கொண்ட  ஒரு சமூகம்  பேசும் தமிழ் அரசியல் விடுதலைக்கானது அல்ல என்பதை விளக்கிக்கூற வேண்டியதும் மாற்று அரசியலின் பகுதிதான்.  தம் மண்ணை, ஆற்றை, குன்றுகளைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களுக்கு துணையாக நின்று பேசுவதும்கூட மாற்று அரசியல்தான். உலக மயமான ஆதிக்கங்கள்,  பெருந்தேசிய அடக்குமுறைகள் தொடங்கி தனி மனிதர்களின் நடத்தைகளில் உள்ள மற்றவர் மீதான மனிதஉரிமை மீறல்கைள் வரை நம் காலத்திற்கான  அரசியல் விரிந்து கிடக்கிறது. இவை பற்றிய மாற்றுப் பார்வைகளை அறிவதும் அவற்றை பரவலாக்குவதும்  நம் காலத்திய மாற்று அரசியலின் தொடக்கம்.

உரையாடல்: 4:1

கேள்வி:

நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு ஏதும் இல்லைதான். என்றாலும் தனிமனித சாத்தியப்பாடு என்பதைக் கணக்கில் கொண்டால் ஏதேனும் ஒன்றிரண்டு அறிவுத் துறைகளில்தானே ஆழமாகச் செல்லவும் இயங்கவும் முடியும்?

பதில்:

இந்த கருத்து நவீன அறிவுமரபின் அடிப்படையில் ஏற்கத் தக்க ஒன்றுதான். வேலைப் பிரிவினை பற்றிய அதே கருதுகோளை அறிவுத்துறையிலும் பொருத்திப் பார்க்கலாம். அனைவரும் அனைத்து வகை யான வேலைகளைச் செய்வதற்கும் தொழில் உத்திகளைக் கையாள்வதற்கும் திறன் பெற்றவர்கள்தான்.  ஆனால் தேவை கருதி நாம் ஏதாவது ஒரு  தொழில் பிரிவைக் கற்றுத் திறன் பெறுகிறோம், அதன் வழியாகச்  சமூகத்திற்கு நம் பங்களிப்பை வழங்கி நமக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இது அடிப்படையான உண்மை. இதனைக் கடந்து தொழில் பிரிவுகள் மாற்றமுடியாதவைகளாக,ஏற்றத்தாழ்வுள்ளதாக மாறுவதும், உடல் உழைப்பு, மூளை உழைப்பு, திறன் சார்ந்த உழைப்பு, திறன்சார உழைப்பு எனப் பகுக்கப்பட்டு அதிகார அமைப்புகளாக இறுக்கமடைவது வன்முறையானது. இந்த வன்முறையின் விரிவான வடிவங்களை அறிவுத்துறைகள்,  தொழில்நுட்பம், கலைத் துறைகளில்  நாம் காண்கிறோம்.

இதற்குக் காரணம் அறிவுப் பகிர்வில், பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வும் அதிகாரப் படிநிலைகளும். அறிவு ஒரு முதலீட்டு வைப்பாக, அதிகார உரிமையாக வைக்கப்படுவதால் நேரும் கெடுதி இது.  மருத்துவத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், இது இன்று தனித்த உயர் தொழில் நுட்பமாக உள்ளது. ஆனால் உணவு,  மருந்து, உடல் பேணுதல், நோய் அறிதல், நோய் தீர்த்தல் என்பவை சமூகப் பொது அறிவாக இருக்க வேண்டியவை, இருந்திருக்கின்றன. இன்று உணவு, வாழிடம், உடல் என அனைத்தும் உலகவயப்படுத்தப் பட்ட நிலையில் இனக்குழு, குடிமரபு மருத்துவம், நோய் தீர்வுகள் பயனற்றவையாக, பலன் தர இயலாதவைகளாக மாற்றப்பட்டுள்ளன. குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு என எதுவும் தற்பொழுது குடும்பம், குடிசார்ந்த வழக்கில் இல்லை.  குடிமரபுகளில், இனக்குழுக்களில் கூட மருத்துவம், மாந்திரிகம், சடங்கு என்பவை தனித்திறமைகளாக, மறைபொருள் உத்திகளாக  இருந்திருக்கின்றன. ஆனால் அவை அச்சமூகத்தின் குறியீட்டுப் பொது அறிவாகவும் இருந்தன. அது சமூகப்பொது நலனுக்கான ஒரு ஏற்பாடு. இந்த மறைபொருள் உத்தி பின்பு இறுக்கமடைந்து அரசு உரிமையாக மாறியதைச் சமூக வரலாறுகள் பதிவு செய்துள்ளன. வேட்டையும், போரும் வீரர் குழுக்களை உருவாக்கியதும், குழந்தை வளர்ப்பில் பெண் ஈடுபட குடியைக் காத்தலில்  ஆண் ஈடுபட்டதின் வழி ஆண்வழி அரசியல் உருவாக்கப்பட்டதும் விளக்கப்பட்ட உண்மைகள். கடவுளை அறிதல்கூட அனைவருக்கும் உரியதல்ல என்றன சில ஆன்மிக மரபுகள்,  ஆன்மாவை விளக்க மதங்களும் உடலை விளக்க அறிவியலும் என்ற பிரிவினை ஏற்ற மேற்கத்திய வெள்ளைமைய அறிவு உலகின் பிற அறிவுகள் அனைத்தையும் அறியாமை என்று விளக்கியது நவீனப் பின்புலத்தில்  நிகழ்ந்த வரலாற்று வன்முறை.

இந்தப் பின்னணியில்தான் பின்நவீனத்துவம் அறிவுத்துறைகளில் உள்ள மேலாதிக்கம் பற்றித் தன் விளக்கத்தை அளித்தது.  அதிகாரம், ஆதிக்கம், வெளியேற்றம், விளிம்புநிலைப் படுத்தல், அடையாள அழிப்பு என்பவற்றில் உள்ள அறிவின் அரசியலை, கொடுங் கோன்மையை அது விளக்கியது.

இன்று நாம் செய்ய வேண்டியது: அறிவுத்துறைகளின் சிறப்புரிமைகளை, அறிவதிகார மையக்குவிப்பை கலைத்துவிட வேண்டும். இதன் வழியாகத்தான் அறிவுமுதலீட்டியத்தை நாம் எதிர்க்க முடியும். அறிவை மூலதன ஆற்றலாக மாற்றுவதற்கும், அறிவை விடுதலை அரசியல் செயல்பாடாக  மாற்றுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அனைத்தையும் வெளிப்படையானதாக, விளக்கப்பட்டதாக மாற்றுவதில்தான் உள்ளது.  இன்று அதனைச் செய்ய  தனிமனித சாத்தியப்பாடுகள் பற்றி   நாம் கவலைப்படத் தேவையில்லை. எழுத்து,  சிந்தனை, அறிவுருவாக்கம், கலைத்தொழில் நுட்பம் எதுவும் தனி மனிதர்களின் உற்பத்தியல்ல. தனித்தன்மை, தனித்திறன், படைப்புணர்வு, தனிப்பெரும் அறிவு என்பவை பற்றிய கற்பனைகள் வழிபாட்டு மரபுகளுக்குத்தான் தேவையானவை.

இன்று எழுத்தை குழுவாக, பலர் இணைந்து  உரையாடித் தரவுகள் பெற்றுப் பகிர்ந்து உருவாக்க இயலும், உருவாக்க வேண்டும். ஒருவரே எழுதும் எழுத்தும்கூட பல்வேறு எழுத்துக்களின் கூட்டிணைப்புதானே தவிர தனித்தூய்மை கொண்ட உருவாக்கம் அல்ல. அணுசக்தி ஒரு அழிவு சக்தி என்பதைப் பற்றி ஒருவரோ இருவரோ மட்டும் தனியாக இன்று எழுதிவிட இயலுமா, அது உலகெங்கிலும் உள்ள மாற்று அறவியல் பார்வை கொண்டவர்களின் கூட்டு உருவாக்கம். திரைப்படங்கள், பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று மறுஉருவாக்கங்கள், அரசியல் பகுப்பாய்வுகள் என்பவை பற்றிக் குழுவாக இணைந்து உரையாடி, பகுத்து, தொகுத்து, சரிபார்த்து எழுதுவதற்கான பயிற்சியும் பொறுமையும் நமக்குத் தேவை. இதற்கும் கூடுதல் பயிற்சியும் பழக்கமும் தேவைப்படும், தனிமனித உளச்சிக்கல்கள் தோன்றி முரண்களை மோதல்களை கசப்புகளை உருவாக்கக்கூடும். நான் இதன் கசப்பான பக்கங்களை அறிந்தவன், பலருக்கு கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறேன், என்றாலும் இதுதான் வழி.  தனிமனிதர்கள் வருவார்கள் போவார்கள்,  ஆனால் அறிவு அனைவருக்குமானது, அறிவு அனைவராலும் உருவாக்கப்படுவது.

ஆழம், அடர்த்தி பற்றிய கருதுகோள்களை நாம் மறுத்துவிட வேண்டும். செம்மை, சிறப்பு, நுட்பம் என்பவை திறன் அடிப்படையில் தனிமனிதர்களை வெளியேற்றுவதற்கான தந்திர உத்திகள், எழுத்தில் இது இன்னும் கொடிய விளைவுகளை உருவாக்கும். ஒரு கதையெழுத்துக் கலைஞனாக இருந்தும் இதனைச் சொல்கிறேன், நான் ஒரு கதையை உங்களுக்குச் சொன்னால் எனக்கு நீங்கள் ஒரு கதையைப் பரிசாகத் தாருங்கள், அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. உங்களிடம் தற்பொழுது ஒரு கதை இல்லையென்றால் பரவாயில்லை, வேறு ஒருவரின் கதையை உங்கள் மொழியில் கூறுங்கள், தனிமனித சாத்தியப்பாடுகளை கடக்க இதுதான் வழி.

உரையாடல் : 3: 2

கேள்வி:

அரசியல் நீக்க வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், என்கிற அடிப்படைகளில் செயல்படுவோர்களால் தமிழ் அறிவுலகம் மேலாண்மை செய்யப்படும் நிலையில், நீங்கள் குறிப்பிடும் வைதீக-பிராமண மறுப்பு, விளிம்புநிலைக் கருத்தியல், தலித் அரசியல், பின் நவீனத்துவம், நுண் அரசியல், பாலரசியல், என்கிற மாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள்?  தமிழ்ச் சிந்தனை உலகில் இதற்கான மரபுதான் என்ன?

பதில்:

மாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள்… நிச்சயமாகச் சில பெயர்களைச் சொல்வதன் வழியாக இந்தக் கேள்வியை முற்றுபெறச் செய்யமாட்டேன். என் பெயரைக்கூட இதில் பொருத்திக் காட்ட மாட்டேன்.  மேலாண்மை செய்பவர்களின் அடையாளம்  தெளிவானது, ஒரு மையம் நோக்கியது. ஆனால் மாற்று அரசியல் அப்படியல்ல பன்முகப்பட்டது, பல போக்குகளை, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டது. வைதீக மறுப்பு இன்றி சூழலியல் அரசியலில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளாமல் தலித் அரசியலில் செயல்படுபவர்கள், பாலரசியலை மிகத்தவறாகப் புரிந்து கொண்டு தமிழ் அடையாள அரசியலில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், செவ்வியல் மரபில் பற்று வைத்தபடி தமிழீழத் தனிநாடு உருவாக வேண்டும் என்ற கனவில் வாழ்பவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொண்டு உலகமயமாக்கத்தை ஆக்கபூர்வமானதாகக் காணும் சிந்தனையாளர்கள், தலித் அரசியலால் இந்திய மார்க்சிய அரசியல் சிதைக்கப்பட்டதாக நம்பும் இடதுசாரி சிந்தனையாளர்கள், விளிம்புநிலை அரசியலை ஏற்காத அம்பேத்கரியச் சிந்தனையாளர்கள், பெருந்தேசியத்தை முழுமையாக நம்பும் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள்  எனச் சிக்கலான விகுதிகளைக் கொண்டது இன்றைய மாற்று அரசியல் களம். இவற்றின் பன்முகத் தன்மையைப் புரிந்தேர்க்க வேண்டும் என்று நம்பும் எனக்குப் போர்வழி மாறுதல், ஆயுதமைய அரசியல் விடுதலையைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை ஏற்க முடிவதில்லை, ஆனால் ஒரு மக்கள் திரள்,  ஒரு இனக்குழு அமைப்பு போரமைப்பாக மாறித் தம் விடுதலைக்காக  போராடும் என்றால் அதனை மறுப்பதற்கான மெய்காண் முறையும் என்னிடம் இல்லை. இது சற்றுச் சிக்கலான  நிலைதான், ஒன்றில் விரிவான புரிதலைக் கொண்டுள்ள எனக்கு மற்றொன்றில் தவறான அல்லது குழப்பமான புரிதல் இருப்பதை மறுக்க இயலாது. பௌத்த மெய்யியல்,  வள்ளலார், அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், காந்தி, பாலழிந்த அடையாளம், அரசற்ற அமைப்பாக்கம், புதுவகைப் புனைவெழுத்து பற்றியெல்லாம் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் ஒரேவகை ஈடுபாட்டுடன், மதிப்புடன் பேசுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே எனக்கு வாய்த்திருக்கிறது.  இந்த நிலையைத்தான் நான் பன்மை நவீனத்துவம் என்று அடையாளப்படுத்தி விளக்க முயற்சிக்கிறேன். இதனைத் தனி மனிதர்களின் பெயர்களுடன் அடையாளப்படுத்திக் காண்பதை விடச் செயல்பாடுகள், களம் சார்ந்த சொல்லாடல்கள் வழிதான் அடையாளம் காண வேண்டும். தமிழில் இவை அனைத்தும் பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன என்பதை மட்டும்தான் நாம் இப்பொழுது குறித்துக் கொள்ள வேண்டும்.

உரையாடல் : 3: 1

கேள்வி:

ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தக் கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் என்கிறீர்கள். கலை இலக்கியங்கள் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பு ஏதும் செய்வதில்லையா? இலக்கியங்களை வாசிப்பதும் அவைகளின் வாயிலாக ஒரு சமூகத்தின் உளவியல்புகளை அறிந்து கொள்வதும் அவற்றின் உள்ளார்ந்த அரசியலைப் புரிந்து வெளிப்படுத்துவதும், அறிவுருவாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதிதானே?

 

பதில்:

கலை-இலக்கிய வடிவங்கள், செயல்பாடுகள் என்பவை அறிவுருவாக்கத்தின் ஒரு பகுதிதான், அவையே அறிவாகவும் செயல்படக்கூடியவை. அறிவு-அதிகார உறவில் இந்நிலை இருவகையான விளைவுகளை உருவாக்க இயலும், விடுதலைக்கான அறிவு, அடக்குதலுக்கான அறிவு. ஒருவரின் அறிவு மற்றவர் மீதான அடக்கு முறையாக அமைய இயலும். கலை-இலக்கியச் செயல்பாடுகள் அறிவை மட்டுமல்ல உளவியல்பை, நடத்தையியல்பை வடிவமைக்கவும், உருமாற்றவும் கூடியவை. அதனால் அவை வலிமையான அரசியல் கருவிகளாகவும் செயல்படுகின்றன. அறிவை உருவாக்க கலை-இலக்கியங்களைப் பயன்படுத்த முடியும் என்பதின் மற்றொரு வடிவம்தான் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அறிவு பெறும் உரிமையை மறுக்கவும்  இவை பயன்படுத்தப்படுகின்றன என்பது. அறிவு என்ற செயல்பாடு சமநிலையும், பொது அறமும் கொண்டதாக இருப்பதில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் கலை-இலக்கியங்களும் பொது அறம், சமநிலை கொண்டதாக இயங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள இயலும். அதிகாரக் கட்டமைப்புகளை, அடக்குமுறை நிறுவனங்களை, அழகியல் வன்முறைகளை விளக்கிக் காட்ட, அவற்றின் உள்நோக்கங்களை வெளிப்படுத்த கலை-இலக்கியம் பயன்படும் என்பது நமக்குத் தெரியும். கலை-இலக்கியச் செயல்பாடுகள், அவை பற்றிய வாசிப்புக் கோட்பாடுகள் ஆற்றல் வாய்ந்த போராட்ட வடிவங்கள், சமநிலை குலைக்கும் இடையீடுகளின் வழி இவை புதிய மொழிக் களங்களை கண்டறிந்து தருகின்றன. இந்த வகை அறிவுருவாக்க, அடையாள உருவாக்க இலக்கியங்களில் இருந்து, வாசிப்புகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டியவையாக உள்ளவை  சமநிலை கொண்ட, பேருண்மை பேசும், பொது அழகியல் பேசும் கலை-இலக்கியங்கள். அதனால் இக்கேள்வியில் உள்ள கலை-இலக்கியம்  என்ற தொடரில் உள்ள முரண் இணைவை  உடைத்து, பொது அடையாளத்தை நீக்கிப் புரிந்து கொள்ள வேண்டும்.  அறிவுருவாக்க, அரசியல்  உருவாக்க கலை-இலக்கியங்கள், அவற்றிற்கு எதிரான பேருண்மையின் வன்முறையைச் செயல்படுத்தும்  கலை-இலக்கியங்கள்.  உருவாக்கித்தரப்பட்ட அறிவின், அரசியலின் வன்முறைகளைப் புலப்படுத்தும் கலை-இலக்கியங்கள் அவற்றைக் கொண்டாடிப் புளகிக்கும்  கலை-இலக்கியங்கள்.

உரையாடல்:2:1

கேள்வி:

ஆரம்ப   காலத்தில் உங்களோடு சேர்ந்து செயற்பட்டவர்கள் உங்கள் எழுத்துக்களால் உந்தப்பட்டவர்கள், பிற்காலத்தில் உங்கள் பெயர் மறைப் பிலும் உருத்திரிப்பிலும் ஈடு பட்டதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் நேர்மை யின்றி நடந்து கொண்டதால் ஏற்பட்ட கசப்புணர்வினால் இதனைக் குறிப்பிடு கிறீர்களா? அல்லது உங்கள் தீவிர அரசியல் சிந்தனைகளிலிருந்து விலகிச் சமரசங்களுடன் கூடிய அரசியல் போக்குகளில் அவர்கள் ஈடுபடுவதை விமர்சிக்கிறீர்களா?

பதில்:

எனது எழுத்து மற்றும் கருத்தியல் செயல்பாடுகளை  நம் காலத்திய தமிழ் அறிவுருவாக்கக் களத்தின் சிக்கல்கள், கோட்பாட்டு  உருவாக்கக் கேள்விகளின் ஒரு விளிம்புநிலை அடையாளமாக வைத்து விளக்கும்பொழுது நான் குறிப்பிடநேர்ந்த நிகழ்வுதான்  எனது பெயர் மறைப்பும் உருத்திரிப்பும். இதனைத் தனி மனிதனாகவோ, வெறும் கதைசொல்லியாகவோ இருந்து நான் சொல்ல முயற்சிக்கும் பொழுது பொருளற்ற, தொடர்பற்ற தன்னிரக்க வாசகமாகத்தான் இருக்கும். இன்னொரு வகையில் நான் பெயர் மறைப்பு, உருத்திரிபுகளுக்கு  பலியாகித் தொலைந்து போனவனும் இல்லை. தொடர்ந்து எழுதியும் பேசியும் அழுத்தமான பதிவுகளை, தாக்கங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறேன், புதிய வடிவங்களில் புதிய களங்களில் எனது புனைவுகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறேன்.

அதனைவிட முக்கியமானது, நான் பழகிப் பின் விலகிவந்த பழைய நண்பர்கள் இன்று நேர்மையற்றவர்களாக, கருத்தியல் திரிப்பில் ஈடுபடுபவர்களாக மாறிவிட்டதாக நான் கூறவரவில்லை, அவர்கள் அப்படி ஆகவும் இல்லை.  நான் பலவாறாக மாறியும் திரிந்தும், கடின வாசிப்பின் வழி உருவாகி வந்தது போல அவர்களும் அவர்கள் வகையில் மாறியும் தெளிந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உள்ள அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் உரிமை எனக்கு இல்லை. என் வகையில் அவர்கள் நேர்மையின்றி நடந்து கொண்டார்கள் என்பதை நான் பதிவு செய்வதற்கான உரிமையும் எனக்கு இல்லாமலில்லை.

நான் தெளிவாக இருப்பதாகவோ, தீவிர அரசியல் இதுதான் என்று அறிந்து கொண்டதாகவோ நம்பவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்பவர்களின் நரம்பியல் சிக்கல் எனக்குத் தெரியும் என்பதுதான் தற்போதுள்ள சிக்கல்.  நான் குறிப்பிட விரும்புவது: நான் முன்வைத்த கேள்விகள், விரிவான இடையீடுகள் உருவாக்கிய களங்களில் செயல்பட்ட போதும் சிலர் எனது பங்களிப்பைத் திட்டமிட்டு மறைத்தது பற்றிய அரசியல், எனது கருத்தியல் சமன்பாடுகளைத் திரித்து விளக்கியது பற்றிய முறையீடு.

மீண்டும் நான் நிகழ்வுகளின் வழிதான்  இதனை விளக்க முடியும் நிறப்பிரிகை இதழுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்று அதில் பெயர் பதிவு செய்திருந்த இருவர் மாறி மாறி எழுதியும் பேசியும் வந்த பொழுது எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நிறப்பிரிகை தன்னுடைய கண்டுபிடிப்புதான் என மோதிக் கொண்டது அதைவிட வேடிக்கையாக இருந்தது. நிறப்பிரிகை பற்றிய முதல் திட்டமிடல் கூட்டத்திலிருந்து கடைசி கலந்துரையாடல் வரை அனைத்தையும் உடனிருந்து பார்த்து ரசிப்பது தோழர். பொதிய வெற்பனுக்கு வாடிக்கையாக இருந்தது.  இவை வேடிக்கையாக இருக்கலாம்,  ஆனால்  புதுவைப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேரக் கல்விப்பணிக்கு நான் முயற்சித்த போது தொடர்ந்து அதற்கு இடைஞ்சல் செய்ததும், அதனையும் மீறி நான் அங்கு சில ஆண்டுகள் கற்பித்தபின்  அங்கிருந்து என்னை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து 2002-இல் அதில் வெற்றி பெற்றதும் அவை நடந்த காலத்தில் நிச்சயம் வேடிக்கையானது இல்லை. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்கள் என்னை எழுதவும் பேசவும் இயலாத நிலைக்குத் தள்ள முயற்சித்தார்கள் என்பதைதான். இன்று அவர்கள் என்னவாக இருந்தாலும் சரி நான் அதனைப் பற்றி கவலைப்படவில்லை, எனக்கு அவர்கள் தொடர்ந்து செய்த இடையூறு  மாற்றுச் சிந்தனைகளை அழிப்பதற்கான அறமற்ற, அநீதியான வன்முறை. மாற்று அரசியல், எதிர்க்கலாச்சாரம், கலகச் செயல்பாடுகள் என்று பேசித் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் அவற்றை வாழ்வின் பகுதியாக ஏற்ற என்னைத் தனிமைப் படுத்தவும் தண்டனைக் குள்ளாக்கவும் அச்சுறுத்தவும் அந்த அடையாளங் களையே கருவியாக்கியதுதான் இங்கு கவனத்திற்குரியாகிறது.   இன்று   இரண்டு முன்று  நாவல்களுக்கான நிகழ்வுகளாகப்  பதிந்து கிடக்கின்றன அக்கால நாடகங்கள்.  எழுத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு எழுத்தால்தான் பதில் சொல்ல வேண்டும். இனி கசப்புணர்வு என்ன வேண்டியிருக்கிறது, எழுத்துக் கலைஞனுக்கு எல்லாமே கதைதான்… வெறுப்பைச் சுமந்து கொண்டு நாம் விடுதலையைப் பேச முடியாது, விடுதலையை நேசிப்பவர்களை வெறுப்பால் அழித்து விடவும் முடியாது.

உரையாடல்: 1:2

கேள்வி:

சாதி, குடும்பம், மரபு என்பவற்றின் வன்முறைகளை, கட்சி அரசியலின் வன்மங்களை நினைவு தெரிந்த நாளிலிருந்து அச்சத்துடன் கவனித்து வந்த எனக்கு  மாற்று அரசியல் மிக இயல்பாகப் பொருந்தியது என்கிறீர்கள்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் உள்ளாகும் ஒடுக்குதல் மற்றும் அடையும் வலிகளின் காரணமாக அவர் மாற்று அரசியலின்பால் ஈர்க்கப்படுகிறாரா? அல்லது நீதியின்பால் அக்கரையுள்ள எவரொருவரும், விருப்பு வெறுப்பின்றி, அறிவார்ந்த சிந்தனையில் ஈடுபடும்போது அவர் வந்து சேரும் இடமாக மாற்று அரசியல் களம் இருக்குமா?

பதில்:

ஒடுக்குதல், அடக்குமுறை, அடிமைத்தனம், ஒதுக்குதல், வாழ்வுரிமைகள் மறுக்கப்படுதல், வன்முறைகளுக்குள்ளாதல் எனப் பல வகையான வலிகளைத் தனிமனிதர்களாக, குழுக்களாக, இனங்களாக  மனிதர்கள் அடைகிறார்கள். அதே போல மற்றவர்களுக்கு உருவாக்கவும் செய்கிறார்கள். இவற்றைத் தம் உடலிலும் மனதிலும் அடைபவர்கள் விடுதலைக்கான ஏக்கம் கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் விடுதலைக்கான வழியை, விடுதலைக்கான அறிவைத் தனியாக யாரும் உருவாக்கிக் கொள்ள இயலாது. இது அரசியல், அறம் சார்ந்த தன்னிலை உருவாக்கத்துடன் தொடர்புடையது. நீதியின்பால் அக்கறை கொள்வதும் அவ்வாறான ஒரு தன்னிலை உருவாக்கம்தான். பாதிக்கப்படுகிற ஒருவர் போராட, கலகம் செய்யத் தன் கருத்தியல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதே தொடக்கமாக அமைகிறது. அந்தப் போராட்டம், எதிர்ப்பு மனம், மொழி, மெய் என அனைத்து வழிகளிலும் வெளிப்படுகிறது. இதே போராட்டத்தைத் தன் அறிவு, அற உணர்வு, நீதியுணர்வு வழியாகவும் ஒருவர் தன்வயப்படுத்த முடியும், முதலில் அதற்குத் தேவைப்படுவது  அடையாள நீக்கம், தன்னிலையின் உடைப்பு. இவ்வகையில் அவருக்கு இருவகை முயற்சிகள், பயிற்சிகள் தேவை.

மாற்று அரசியல் களம்  பாதிக்கப்பட்டவர்கள், பிறரின் பாதிப்புகளை உணர்ந்தவர்கள் இருவரின் பங்களிப்புடனும் இயங்கக்கூடியது. ஏனெனில் உலக சமூகங்களில் எத்தனையோ வகையான துயரங்கள், எத்தனையோ வகையான வன்முறைகள், ஒடுக்குதல்கள் நிகழ்ந்தபடியுள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்தும் வாழ்ந்தும்தான் புரிந்து கொள்ள, உணர்ந்துகொள்ள முடியும் என்றால் விடுதலைக் கருத்தியல்களும், மாற்று அரசியலும் செயல்படவே இயலாத நிலைதான் உருவாகும். இனவெறி ஒடுக்குதலை அனுபவித்த ஒருவருக்குத் தீண்டாமை பற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது, ஆனால் தீண்டாமை ஒழிப்பு அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். பெண்ணியத்தை ஒரு ஆணாக இருந்து புரிந்தேற்கத் தேவையானது நேர்மையான  அறிவும், அறவுணர்வும்.

சாதி, குடும்பம், மரபு என்பவற்றிற்குள் இயங்கும்  வன்முறைகளைப் புரிந்து கொண்டதும் தனிமனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வன்முறைகளின் அடர்த்தியைப் புரிந்து கொண்டதும் கவிதை , இலக்கியம் சார்ந்த தேடுதல் வழி நிகழ்ந்தவை. சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம், பெண்ணியம் போன்றவை இதனைச் சற்றே விரிவாக விளக்கிய போது அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் என்னைத் தாக்கியுள்ளன. இந்த அதிர்ச்சி ஒருவரை அதிகார வன்மம் கொண்டவராக மாற்றவும்கூடும். இந்த வன்மத்திலிருந்து விடுபடுவதைத்தான் அடையாள அழிப்பின் அரசியல் என்றும் மாற்று உளவியல் என்றும் நாம் தற்பொழுது கூறிவருகிறோம். அதிகாரம், அடக்குமுறை என்ற உளவியல் அமைப்பு மனிதர்களுக்குள் எவ்வளவு இயல்பாக நுழைய முடிகிறதோ, அதே அளவுக்கு விடுதலை, தன்னுரிமை உணர்வுகளும் பதிய முடியும். தான் மற்றும் பிறர் பற்றிய கருத்தியலில் உருவாக வேண்டிய அடிப்படை மாற்றம்தான் இதன் முன் தேவை.

 மாற்று அரசியல் களம் என்பது நமக்கு முன்னே உள்ள பல  தேர்வுகளில் ஒன்று. நான் இதனை அதிக அலைச்சல் இன்றி, முழு நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதைத்தான் மிக இயல்பாகப் பொருந்தியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கான செயல்முறை என்ன என்பது பற்றிப் பல குழப்பங்கள், சிக்கல்கள் நேர்ந்திருந்தாலும், அவ்வப்பொழுது செயலின்மை என்னை அழுத்திய பொழுதும் மாற்று அரசியலின் தேவையை மறுப்பதற்கான நிலை உருவானதில்லை. எனது குழப்பங்கள் செயலின்மைகள் நான் நம்பும் அரசியலின் தேவையை குறைத்துவிட முடியாது.  இந்த வகை நிலைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் வந்து சேர இயலும்.  இந்த நிலைப்பாட்டை நான் அடைந்தேன் என்பதை விட இதுதான்  எனக்கான அடையாளத்தை வழங்குகிறது.  இந்த உளவியல் உருவாக்கம்  நேர்க்கோட்டுத் தன்மையில் நேரக்கூடியதல்ல. வறுமையின் அழுத்தம், ஒடுக்குதலின் வலி ஒவ்வொருவரையும் வறுமைக்கெதிரான, ஒடுக்குதலுக்கெதிரான போராட்ட அரசியலுக்குத்தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் போராட்ட அரசியலில் இருக்கும் யாருக்கும் வறுமையின் வலியும் ஒடுக்குதலின் அவமானங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மட்டும் நாம் உறுதியாகச் சொல்ல முடியும். இது வாழ்வின் வழியோ, வாசிப்பின் வழியோ, நேசிப்பின் வழியோ, உற்றறிதலின் வழியோ நேரலாம், ஆனால் நேர்ந்தாக வேண்டும்.

உரையாடல்:1:1

கேள்வி:

எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம் என்று கூறியுள்ளதையொட்டி ஒரு கேள்வி. மாற்று அரசியல் என்பது அரசியல் இருந்து வரும் காலம் நெடுகிலும் இருந்து வரும் ஒன்றாகக் கருதுகிறீர்களா, அல்லது நம் காலத்தின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் எழுவதாக நினைக்கிறீர்களா?

பதில்:

அரசு, அரசு வடிவங்கள், அரசியல் என்ற தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும் எப்போதும் இருந்து வருபவர்கள் தனிமனிதர்கள். தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்துதான் அரசு உருவாகிறது என பிளாட்டோ தன் குடியரசில் விளக்குவது இன்றும் சமூக அறிவியலில் மறுக்க இயலாத சமன்பாடு. மனிதர்கள் அரசுகளை, ஆட்சிகளை, அரசர்களை, அரசியல் அமைப்புகளை மாற்றியமைப்பது மிகத்தொன்மையான ஒரு அரசியல் செயல்பாடுதான். ஆனால் தனிமனிதர்கள்-அரசு என்ற உறவமைப்பின் அடிப்படையையே மாற்றியமைத்த அரசியலைத்தான் நாம் நவீன அரசியல் என்கிறோம். நவீன அரசியலில் சுதந்திரம், சமத்துவம், சமநீதி, தன்ன டையாளம் என்பவை மிக அடிப்படையான கருதுகோள்கள்.  நவீன அரசியல் தனி  மனிதர்களை மையமாக வைத்துக் கட்டப்பட்டது, ஆனால் தனி மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது,  தனிமனிதர்கள் ஒவ்வொரு வருக்கும் அரசியலில் பங்கை அளித்து அவர்கள் ஒவ்வொருவரும் அரசியலை செயல்படுத்தும் உரிமையை அளிப்பது, தனிமனிதர்கள் யாருக்கும் அடிபணிய வேண்டிய தேவையை இல்லாமலாக்குவது, இது தனிமனிதர்களால் ஆளப்படும் அரசியல் அல்ல பொதுஅறங்களால் ஆளப்படுவது எனப் பலவாறாக விளக்கிச் செல்லமுடியும். ஆனால் இவையெல்லாம் இன்று கருத்தியல் சமன்பாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தியல் சமன்பாடுகளை நடப்பியலாக மாற்றுவதற்கான அரசியலையே நாம் இன்றைக்கான மாற்று அரசியல் என்கிறோம்.

அரசின் வடிவத்தை மாற்றுவது, அரசியலுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவை மாற்றுவது, அதிகாரக் கட்டமைப்பின் மையங்களை அவிழ்த்துப் பரவலாக்குவது  என்பவை மாற்று அரசியலின் தொடக்கமாக உள்ளது. மார்க்சியம் அடையாளப்படுத்திய அரசியல் பொருளாதார விடுதலை, அம்பேத்கர்  முன்வைத்த சமநீதி, சமஉரிமைகள் கொண்ட அறம்சார்ந்த அரசியல், பாலின ஒடுக்குதலை மறுக்கும் பெண்ணிய அரசியல், வேறுபடுதலுக்கான உரிமையை வலியுறுத்தும் அடையாள அரசியல், உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வாழ்வாதார உரிமையை வலியுறுத்தும் சூழலியல் அரசியல்  எனப் பல தளங்களைக் கொண்டதுதான் இன்றைக்கான மாற்று அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் அளவும் வடிவமும் மாறுபடுவது போல அதற்கெதிரான போராட்டங்களும் மாறுபடும். இன்றைய அரசியல், பொருளியல், அதிகார வன்முறைகளுக்கெதிரான மாற்றுகளை முன்வைப்பதுதான் இன்றைய மாற்று அரசியல். இன்றைய அடக்குமுறை அரசியல் பன்முனைப்பட்டதாக, பலவடிவம் கொண்டதாக இருப்பது போலவே இன்றைக்கான மாற்று அரசியலும் பலதளங்களைக் கொண்டதாக உள்ளது.

நம் காலத்தின் மாற்று அரசியல் காலம் சார்ந்தது மட்டுமல்ல, இடம் சார்ந்தும், களம் சார்ந்தும் பல வடிவங்களைப் பெறும். பொதுச்சாலைகளை தலித் மக்கள்  பயன்படுத்தத் தடையுள்ள ஊர்களில் அதற்கெதிரான போராட்டம்தான் முதல்கட்ட மாற்று அரசியலாக, விடுதலைக்கான அரசியல் செயல்பாடாக இருக்கும். ஊர்கள், சேரிகள் எனத் தனித்தனி வாழிடங்களையும் சேரிச் சுடுகாடு, ஊர்ச் சுடுகாடு எனத் தனித்தனி புதைகாடுகளையும் கொண்ட  ஒரு சமூகம்  பேசும் தமிழ் அரசியல் விடுதலைக்கானது அல்ல என்பதை விளக்கிக்கூற வேண்டியதும் மாற்று அரசியலின் பகுதிதான்.  தம் மண்ணை, ஆற்றை, குன்றுகளைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களுக்கு துணையாக நின்று பேசுவதும்கூட மாற்று அரசியல்தான். உலக மயமான ஆதிக்கங்கள்,  பெருந்தேசிய அடக்குமுறைகள் தொடங்கி தனி மனிதர்களின் நடத்தைகளில் உள்ள மற்றவர் மீதான மனிதஉரிமை மீறல்கைள் வரை நம் காலத்திற்கான  அரசியல் விரிந்து கிடக்கிறது. இவை பற்றிய மாற்றுப் பார்வைகளை அறிவதும் அவற்றை பரவலாக்குவதும்  நம் காலத்திய மாற்று அரசியலின் தொடக்கம்.

அச்சம் தவிர், ஆண்மை அழி -பிரேம்

உரையாடல்: 6    அச்சம் தவிர், ஆண்மை அழி

கேள்வி

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் உங்களது எதிர்வினையைப்  பன்மெய் இதழில் பதிவுசெய்துள்ள நிலையில், பெண்ணியம் தமிழில் செயல்பட்டு வரும் முறை மற்றும் உலகமய /தனியார் மயமாக்கலுக்குப் பின்னான கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணிய சிந்தனைப் போக்குகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து சற்று விவரியுங்கள்.

பதில்

பிரேம்

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது மட்டுமல்ல, அவ்வப்போது எழுவது சர்ச்சை இல்லை  அவமதிப்பு, இழித்துரைப்பு. மாற்று அரசியலில், அறம்சார் அரசியலில் அக்கறை கொண்டவர்கள் தமிழில் பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணெழுத்துகள் தனி அடையாளத்துடன் உருவாகி வளர்வதை வரவேற்று வளர்க்க முயற்சி செய்வார்கள். இலக்கியம், கோட்பாடு என்பதில் அக்கறையுள்ளவர்கள் பெண்ணியம், பெண்ணெழுத்து தமிழில் மிகத் தேவையானது என்பதைப் புரிந்து கொண்டு தம்வாசிப்பைத் தொடர்வார்கள். இவற்றில் எதுவும் இன்றி ஆண்திமிர், ஆண்மைய அதிகாரத்தைக் கலை-இலக்கியம் என்ற வெளிப்பூச்சுக்குள் மறைத்து  வைத்து விற்பனை செய்பவர்கள்தான் “இந்தப் பெண்கள் எழுத வந்து உலகமே கெட்டுப் போச்சு” என்று கூச்சல் எழுப்பிக் கொண்டுள்ளனர். இதற்கான பின்புலத்தை நான் பன்மெய் கட்டுரையில் (ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்) விரிவாக விளக்கியிருக்கிறேன்.

பெண்ணியம் மாற்றுச் சிந்தனை மற்றும் விடுதலை அரசியலின் மிகமிக அடிப்படையான ஒரு பகுதி. மார்க்சியம், மனித உரிமை அரசியல், தலித் அரசியல், சமத்துவ அரசியல் அனைத்தும் பெண்ணியத்தின் அடிப்படைகளை  ஏற்றுத்தான் தம்மைச் செயல்பாடு கொண்ட விடுதலைக் கருத்தியல்களாகத் தகுதிப்படுத்திக் கொள்ளமுடியும். அதே சமயம் பெண்ணியம் தனித்து இயங்குகிற, தனித்துச் செல்கிற ஒரு சிந்தனை முறையோ, உளவியலமைப்போ இல்லை.  பெண்ணியலாளராக இருக்கும் ஒருவர்தான்  அனைத்து வகையான  மாற்று அரசியல், விடுதலைக் கருத்தியல்  தளத்திலும்  சரியான, மெய்யான புரிதலுடன் செயல்பட  முடியும்.

மார்க்சிய, அம்பேத்கரிய கருத்தியல் தளங்கள் பெண்ணியத்திற்கு மறுப்பான தர்க்கத்தையும் பெண்ணிலையை இரண்டாம் நிலையில் வைக்கும் கருத்தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்… பௌத்தம், காந்தியம் போன்ற மனிதநேயச் சிந்தனைகள் பெண்ணியத்தின் பல அடிப்படைக் கேள்விகளுக்கு மௌனம் காப்பதால்தான் தனித்தியங்கும் சக்தியற்ற  நல்லெண்ணக் கருத்துக்களாக மட்டும் மீந்து போயுள்ளன…இந்தியச் சமூகங்களில் சுதந்திர, பகுத்தறிவுச் சிந்தனைகளின் முன்நிபந்தனை ஒடுக்கப்பட்டோர் அரசியல், பெண்ணிய அரசியல் இரண்டையும் ஏற்பதுதான்.

எப்போதோ இருந்த தீண்டாமையைச் சொல்லி தற்போது இடஒதுக்கீடு பெற்று ஏமாற்றுகின்றனர் தலித்துகள் என்று சொல்வதும் பெண்ணியம் பேசும் பெண்கள் சிலர் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி ஊடகங்களின் கவனத்தைக் கவருகின்றனர் என்று சொல்வதும் ஒரே வகை பிற்போக்கு  மூளையமைப்பிலிருந்து உருவாகும்  இருவகை வாசகங்கள்.  தமிழின் இலக்கியப் பொதுப்புத்தி என்பது ஆண்திமிர், ஆண்மைய அறியாமை கொண்டதாகத்தான் இருக்கிறது  என்பது  ஒவ்வொரு நாளும்  நிரூபனமாகிக்கொண்டே  இருக்கிறது.

இதற்கு வேறுசில வடிவங்களும் உண்டு. “பெரியார் சொல்லாத எந்தப் பெண்ணியத்தை இந்தப் பெண்கள் சொல்கிறார்களாம்” என்றோ,  “ஜெயகாந்தன் எழுத்தில் இல்லாத பெண்ணியத்தையா இந்தப் பெண்கள் சொல்லிவிடப் போகிறார்கள்” என்றோ,  “உண்மையான பெண்ணியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்” என்றோ, “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள் பெண்விடுதலை அடங்கிவிடுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ளாத இயக்க மறுப்பியல்தான் இந்தப் பெண்ணியப் பேச்சுக்கள் எல்லாம்”  என்றோ இது பல குரல்களில் ஒலித்தாலும் இவை சொல்ல வருவது ஒன்றுதான்,  “பெண்ணியம் எனத் தனியாக ஏதும் இல்லை, பெண்மொழி, பெண்ணிலை அறிவு என்பதெல்லாம் பிரிவினைவாதம், பெண்ணெழுத்து என எதுவும் தனியாக இருக்க முடியாது.”

இதனை இப்படியே நீட்டிச் சென்றால் இறுதி முடிவுகள் இப்படியாக இருக்கும் “பெண் எனத் தனியாக எதுவும் இருக்க முடியாது. ஆணுக்குள் பெண் அடக்கம், ஆண் அமைப்பவை அனைத்தும் பெண்ணையும் உள்ளடக்கியது. பெண்ணைக் காப்பது ஆணின் கடமை,  ஆணிடம் தன்னை ஒப்படைத்து தனக்கான கடமையைச் செய்து வாழும் பெண்  பாதுகாப்பாக வாழ்வதுடன் எந்த துயரமும் இன்றி வாழலாம். தனக்கென தனி அடையாளம் பெறுவது இயற்கையிலேயே பெண்களுக்கு இயலாத ஒன்று. பெண்கள் தனி அடையாளம், சம உரிமை, சமத்துவம் என்று பேசுவதெல்லாம் மத ஒழுக்கம், குடும்பம், பண்பாடு என்ற அனைத்தையும் அழித்துவிடும். இந்தியச் சமூகம் எப்போதும் பெண்களுக்கு பெருமையளித்து வந்துள்ளது, பெண்ணைத் தெய்வமாக வழிபடும் நாடு நம்முடையது. பெண்கள் இன்று இழிந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் பெண்கள்தான். நம் மரபை விட்டு அவர்கள் வெளியேறும் போது பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிறது. வீடுதான் அவர்களின் இடம்.  அரசியல், சிந்தனைத்துறைகள்,  இலக்கியம் என்பவையெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய பகுதிகள்…”  இதில் ஏதாவதொரு வாக்கியத்தின் வழியாக நீங்கள் இன்றுள்ள ஆண்மைய அமைப்புகளின் மைய நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்துவிடலாம். முற்போக்கு-பிற்போக்கு, மதவாதம்-நவீன சிந்தனைகள், மனிதநேயம்-முதலாளித்துவம்,  அறிவியல்வாதம்- புராணிகவாதம், உழைப்பாளர்கள்- உயர்தொழில் நுட்பத்தினர்  இப்படிப் பல முரண்பட்ட போக்குகள் கொண்ட ஆண்கள் பெண்ணிய அரசியல், பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணிய இயக்கங்கள் என்பவற்றை எதிர்கொள்ளும் போது மட்டும் ஆண்மைய-ஆணாதிக்க நிலைப்பாட்டினை எடுப்பதுடன் ஆண்நிலை பற்றிய கட்டுக்கதைகளை இயற்கையானதென நம்பவும் செய்கின்றனர். இந்த வகையான சமூக-வரலாற்றுச் சூழல் நிலவும் ஒரு சமூகத்தில்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக் கப்பட்ட அடையாளத்துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது.

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றின் முற்பகுதிவரை பெண்விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான உரிமைகள் என உலகப் பெண்ணிய அரசியலின் தாக்கங்கள் தமிழில் இருந்து வந்தன. தேசிய இயக்கம் பெண்களின் பங்கின்றி மேற்செல்ல முடியாது என்ற நிலையில் பெண்கள் தேசிய அரசியலில் உள்ளடக்கப்பட்டனர். பகுத்தறிவு இயக்கம் பெண்களுக்கான விடுதலையை முன்நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். இந்திய மார்க்சிய அரசியல்  பெண்ணியத்தை மறுத்துச் சொல்லுவதற்கு கொள்கையடிப்படையில் எந்த உரிமையும் இல்லை.

இந்திய நவீனச் சிந்தனையாளர் பலரும் வேதகால நாகரிகம்,  பாரதத் தொன்மை, இந்தியப் பண்பாடு பற்றிய குழப்பமான பற்றுள்ளவர்கள்தான்.  ஆனால் பெண்ணிய-பெண்விடுதலை அரசியலின் கேள்விகள் அவர்களைப் பாதித்தன. பெண்ணியச் சிந்தனைகள் தொடக்க நிலையில் இருந்த போதே தமிழின் மகாகவியாகப் பின்னாளில் பெயரிடப்பட்ட சுப்பிரமணிய பாரதி போன்ற சிலரை அது பாதித்திருக்கிறது.   “ஞானவொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு  நல்லழகே!  ஊறுசுவையே! கண்ணம்மா!” என்றும் “வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!” என்றும் பாடிய பாரதிக்கு இருந்தது புனிதப் பெண்மை பற்றிய கருத்தாக்கம்தான் ஆனால் உலக அரசியலைக் கவனத்தில் கொண்ட ஒரு ஊடகவியலாளராக அவர் சொல்வது கவனத்திற்குரியது.

“சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.

சில தினங்களின் முன்பு ஒரு கிராமாந்தரத்து ஸ்திரீ ‘மாதர் நிலை’ என்ற மகுடத்தின் கீழே ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார்.அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீமான் காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்த வ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண் மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனனமெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அது போல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல ‘சாத்திர’ வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண் மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.

இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது தான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை.

ஆனால் ‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்’ என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.”

பாடல்கள் பாடிய ஒரு பாவலன் என்ற நிலையில் இருந்து உலக அரசியல் மாற்றங்களை உணரும் அறிவுத்துறை நோக்கிய நகர்வு பாரதி கால நவீனத்துவத்தின் தொடக்கமாக அமைந்தது.

மிக மிக அவசரம் என்று பாரதி கூறி 100 ஆண்டுகளுக்குப் பிறகு, “நம் நாட்டில் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக்கிடமானது. வேர் தொடங்கி உச்சிக் கிளைவரை முழுவதும் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களின் கேவல நிலைமைக்கு நம்நாட்டு மூடப் பழக்க வழக்கங்களே காரணம் என்று சொல்ல வேண்டும். பெண்கள் திருத்தம் அடைவதைப் பொறுத்தது – நாடு திருந்துவது.” என்ற பாரதிதாசன் பெண்ணியத்தின் முதல் கட்ட கோரிக்கைகள் அனைத்தையும் தன் மொழியில் தயக்கமின்றிக் கொண்டு வந்த பிறகு  “பெண்ணியம் மேலைநாட்டுப் பொருள் அதனைத் தமிழில் பேசுவோர் பண்பாட்டைக் கெடுப்பவர்கள். அவர்களைத் தாக்க வேண்டும்” என்று கூவித் திரிகின்றனர் சில  தமிழ்க் கவிஞர்களும் எழுத்தாளர்களும்.

பெண் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள்,களச்செயலாளர்கள், சிந்தனா வாதிகள், சமூகத்தலைவர்கள் எனப் பெண்கள் தம் வரலாற்றுப் பங்கை எடுத்துக் கொள்ளத் தொடங்கிய போதே தமிழில் எதிர்ப்பு, வெறுப்பு, தாக்குதல்  என்பவை இருந்தன. சிந்திக்கக் கூடிய, தனித்த அடையாளம் கொண்ட, பொது வெளியில் தலைமையேற்க முன் வரும்,  சமூக வெளியில் இயங்க முனையும் பெண்களின் வாழ்க்கைக் கதைகள் வலிகள், ஒதுக்குதல்கள், தனித்த அவலங்கள் கொண்டதாகவே இருந்தது.

இந்தக் காலகட்டத்திலும், இந்திய அரசியல் தொடங்கிய பிறகும் எழுதிய, செயல்பட்ட பெண்கள் பலர் பெண்மை பற்றிய பழங்கருத்தியல்களை, உருவகங்களை உடைக்கவும் புதிய அடையாளத்தை உருவாக்கவும் தம் பங்கை அளித்துள்ளனர். ஆனால் இவையெல்லாம் பெண்ணியத்திற்கான தொடக்கங்களே தவிர பெண்ணியத்தின் தேவைகளை நிறைவேற்றியவை அல்ல.

இதற்கு அடுத்த கட்டமாக  நிகழ்ந்த அடிப்படை மாற்றத் தைத்தான் “தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக்கப்பட்ட அடையாளத் துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறேன். இந்தக் காலகட்டம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள், பெண் உளவியல் என்பது மொழியால், பண்பாட்டு வரலாற்றுக் கதையாடல்களால் கட்டப்படுகிறது, ஆண்  தன்மை என்பது பெண்ணிலைக்கு மறுதலையான எதிர்நிலைக் கட்டமைப்பு என்பது போன்ற பெண்ணியப் புரிதல்கள் தொடங்கி அறிவியல், வரலாறு, மனிதநிலை என்பவை உலகப் பொதுத்தன்மையோ ஒற்றையமைப்போ கொண்ட புனித மெய்மைகள் அல்ல அனைத்தும்  கால-இடத்தன்மை கொண்ட கதையாடல் செயல்பாடுகளே என்ற பின்நவீனத்துவப் புரிதல்கள் வரை தற்போது அறிவமைப்புகளில் பல தலைகீழாக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த தளத்தில் தமிழில் பெண்ணிய உரையாடல் பல புதிய தன்மைகளைக் கொண்டு இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்குத் தனித்தனியான சில பெண்ணியச் சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தம் வாழ்க்கையை அளித்துச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் யார் யார் என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பண்பாட்டு உளவுப்படையினரின், கலை-இலக்கிய பாதுகாப்புப்படையினரின்  தாக்குதலுக்கு அதிகம் உள்ளான பெண்ணிய, பெண்மொழி செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய கணக்கெடுப்பின் வழி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்று பெண்கள்  சிறப்பிதழ்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறுவதும், பெண்கள் தாக்கப்படும் பொழுது ஊடகங்கள் இவர்களில் சிலரிடம் கருத்து கேட்பதும் இவர்கள் பெண்கள் என்பதால் அல்ல செயல்பாட்டாளர்கள், கருத்தியல் போராளிகள் என்பதால்தான். இதனையே பெண்கள் ஊடகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் என்கின்றனர் இந்திய ஞானமரபினர். தமிழின் ஊடக, கருத்தியல் பரப்பில் இவர்களின் இடம் மிகமிகக் குறைவு. தொடர்கதைகள் எழுதி தமிழின் கதைப்பரப்பை பல மடங்கு பெருக்கிய-பெருக்கிவரும் பெண் எழுத்தாளர்களும், தொடர்களில் அழுது தமிழ்ப் பெண்களின் கண்ணீரைப் பெருக்கிவரும் பெண்கலைஞர்களும் பெற்றுள்ள பண்பாட்டு இடத்துடன் ஒப்பிடும் பொழுது பெண்ணிய, பெண்ணரசியல், பெண்ணெழுத்து வழி செயல்பட்டு வருபவர்களின்  இடங்கள் மிகச்சிறிய புள்ளிகளாகவே உள்ளன.

தமிழில் பெண்ணியம்  இன்றும் விளிம்புநிலையில் உள்ள  சிந்தனைப் போக்குதான்.  எல்லா கருத்தியல்களைப் போலவே பெண்ணியத்திலும் வேறுபடும் சிந்தனைப் பள்ளிகள், இயக்கப் போக்குகள் இருப்பது இயல்பானது. சாதி, இன, மொழி அடையாளங்கள் வழி இயங்கும் அரசியல் பரப்பில் பெண்ணியம் தன்னை வேறுபாடுகளுடன் மோதும் பன்மைநிலை அரசியலாக வைத்துக் கொள்ளுவது தவிர்க்க இயலாதது. பெண் எழுத்துக்கள் எல்லாம் பெண்ணிய எழுத்துக்களாக இருப்பதில்லை. ஆனால் பெண்ணியலாளர் ஒருவர் எழுதுவதும் பேசுவதும் அனைத்துப் பெண்களுக்குமானதாக இருக்கிறது, இது தற்காலத் தேவை.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணியச் சிந்தனைப் போக்குகள்  இன்று எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விட கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை விளக்க முயலும் சிந்தனைப் போக்குகள் பெண்ணியத்தை எந்த அளவுக்குப் புரிந்து தம்மை அதற்கேற்ப உருமாற்றிக் கொண்டுள்ளன என்று நாம் பார்க்க வேண்டும்.  அத்துடன் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை நாம் பெண்ணிய நோக்கில் மறுஆய்வு செய்ய வேண்டும்.

தலித் அரசியல், தமிழ் அடையாளம், மொழித் தேசியம் பற்றிய திட்டமிடல்கள் மற்றும் கருத்தாக்க முறைகளின் அடிப்படைகளில் இருந்தே பெண்ணிய கருத்தியல்கள், கேள்விகள் மையஇடத்தில் வைக்கப்பட வேண்டும். இந்துத்துவ அரசியல் முன்வைக்கும் புனிதப்பழமை, புராதன மீட்பு, பண்பாட்டுத் தூய்மைவாதம் என்பவற்றை மொழிவழி முன்வைக்கும் அரசியலாகத் தமிழ் அரசியல் மாறாமல் இருக்க பெண்ணியத்தின் வரலாறு பற்றிய பார்வைகள்தான் வழி காட்டியாக இருக்க முடியும். உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் பற்றிக் கருப்பினப் பெண்ணியம், சூழலியல் பெண்ணியம் கொண்டுள்ள புரிதல்கள் தமிழில் அதிகம் விவாதிக்கப்பட வேண்டும்.  சமநீதி கொண்ட குடிமைச் சமூகத்திற்கான உளவியல், நடத்தையியல் கட்டமைப்புகள் பெண்ணிய அறிவின்வழி மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பொது வெளியில் அதற்கெல்லாம் நேரம்-இடம் வாய்ப்பதில்லை.  “பெண்ணியம் என்றால் மது குடிப்பதும், புகை பிடிப்பதும், மணவிலக்கு பெறுவதும்தான் எனச் சில நாசகார சக்திகள் தமிழ், இந்தியக் கலாச்சாரத்தை கெடுத்துக் கொண்டுள்ளன. இவர்களை வெளியே நடமாடவிடக் கூடாது” என்று வெறிபிடித்து உறுமுகிறவர்கள் நம் பண்பாட்டுக் காவலர்கள். இவர்களுடன் அறிவுப்பூர்வமாகவோ, அறம் சார்ந்தோ பேசிப் பயனில்லை. இவர்கள் தம்முடைய கடவுளர்கள் தொடங்கி கவியரசர்கள் வரை ஒன்றுக்கு மேல் மனைவியர்கள் ஒன்பதுக்கு மேல் காதலிகள் கொண்டு வாழ்ந்ததாகக் கதைசொல்லிக் கொண்டாடிக் கொண்டே  “பெண்மொழி இன்னா ஒடம்பு,  உறுப்புன்னு பேசறதுதானா,  அப்ப நாங்களும் கெட்டவார்த்தயில பேசுவோம்ல” என்று தமிழ்-பாரதப் பண்பாட்டைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் கவிஞரின் கவிதைத் தொகுதியின்  தலைப்பை அவர் பெயரின் பின் இணைத்து எழுதி எழுதித் தம் வன்கொடுமைப் புத்தியை உலகம் முழுக்க பரப்பிக் கொண்ட வலைதள வாசகர்களையும், ஒரு பெண்கவிஞரின் பெயரைத் தம் பன்மொழி ஞானத்தால் மொழிவிளக்கம் கூறி கலகக் காளைகளிடம் கைதட்டல் பெற்றுக் கொள்ளும் ஒலகத்தரம் கொண்ட எழுத்தாளர்களையும் கொண்டதுதான் தமிழின் அ-றி-வு-ல-க-ம்.

பெண்ணியமும் பெண்ணிலைச் சிந்தனை முறையும் தமிழில், இந்தியச் சூழலில் போர்த்தன்மை கொண்டதாக மாறவேண்டிய காலம் இது. பெண்ணிய-விளிம்புநிலைச் சிந்தனையாளர், செயல்பாட்டாளர், கவிஞர் எனப் பல தளங்களில் இயங்கி வரும்  மாலதி மைத்ரி-யின் வாழ்வுடன் பங்கு கொண்டவனாக  அவரால் காப்பாற்றி வளர்க்கப்பட்டவனாக கடந்த இருபத்தாறு ஆண்டுகளில் நான் கற்று வருவது இதுதான். ஒவ்வொரு அறிவுத்துறையிலும், சிந்தனை செயல்பாட்டுத் தளத்திலும் பெண்ணியக் கேள்விகள் வலிவுடன் முன் வைக்கப்பட்டு அனைத்துத் தளங்களும் சீராக்கம் செய்யப்பட வேண்டும். பெண்ணிய விடுதலை பொதுவுடைமைச் சமூகத்தில் நிகழவேண்டிய ஏதோ ஒரு புரட்சிகர மாற்றம் இல்லை, ஜனநாயகம், மக்கள் ஆட்சி, குடிமைச் சமூகம், குடும்பம், தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், உரையாடல்கள் என அனைத்திற்குள்ளும் நிகழ வேண்டிய அடிப்படை மாறுதல்…

நான் சில இடங்களில் முன்பே குறிப்பிட்டதை இங்கு மீண்டும் ஒரு முறை குறிப்பிட விரும்புகிறேன், “பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதை நான் ஏற்கவில்லை, ஆமாம் அவர்கள் ஆண்களைவிட உயிரியல், உளவியல் வகையில் உயர்ந்தவர்கள். இன்றுள்ள மனித சமூகம் ஆண்களின் படைப்பல்ல பெண்மை மற்றும் தாய்மையின் படைப்பு, ஆண் உளவியல் பெண்ணாற்றல் மீதான அச்ச வுணர்வின் வழி நிகழும் எதிர்நிலை உருவாக்கம்.  ஆண்கள் தம் அச்சத்தின் அடிமைகள் அதனால், அச்சம் தவிர், ஆண்மை அழி, இணங்கி இரு, ஈடேற முயற்சி செய்… இது பெண்ணியம் இல்லை, என்றாலும் சொல்லுகிறேன். நான் ஒரு நவீன சிந்தனையுள்ள மனித உயிரி என்றால் பெண்ணியம் எனது இரண்டு நுரையீரல்களில் ஒன்றாக இருந்தே ஆகவேண்டும், என் மூளையின்  இடது பகுதியாக அமைந்தே ஆகவேண்டும்…

உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல் -பிரேம்

உரையாடல்: 5   உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல்
கேள்வி:
உலகளாவிய முதலாளித்துவம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவலானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாறியுள்ள இன்றையச் சூழலில் உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் குறித்த உங்கள் பார்வை என்ன?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்
பிரேம்
முதலாளித்துவம், உலக முதலாளித்துவம் என்று நாம் அடையாளப்படுத்திக் காட்டுவது மாற்றுச் சிந்தனைத் தளத்தில் நிகழ்கிறது. முதலாளித்துவம், முதலீட்டு அதிகாரம், மூலதனம் காக்கும் அரசுகள், ஆதிக்கம் காக்கும் ராணுவங்கள், மனித உரிமை மறுக்கும் அமைப்புகள் என்ற தொடர் வன்முறைகள் இன்று வலுவடைந்துள்ளன என்பதை இப்படி அணுகிப்பார்க்கலாம். முதலீட்டியம், மூலதன ஆதிக்கம் எப்பொழுதாவது முழுமையாக வலுவிழந்திருந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. மக்கள்சார் அரசுகள், மக்கள் அரசியல், மக்கள் நல ஆட்சிமுறைகள் என்பவை நவீன காலகட்டத்தில தனிமனித சுதந்திரம் என்ற கோட்பாட்டு அடிப்படையில் உருவாகி உலக அளவில் மாற்று அமைப்பு பற்றிய கனவுகளை உருவாக்கின.
கொடுங்கோன்மை ஆட்சிகள், வன்கொடுமை அரசுகள், இனப்படுகொலை நிகழ்த்தும் ஆட்சியாளர்களால் நிறைந்திருந்ததுதானே மனித குலங்களின்- இனங்களின் வரலாறு. பேரரசுகளின் தலைநகரங்களில் இருந்து எவ்வளவு விலகியிருக்கிறதோ அந்த அளவுக்கு கொடுமையின்றி வாழலாம் என்ற நிலையில்தான் கிராம-குடிமரபுச் சமூகங்கள் இருந்தன. நவீன அமைப்புகள் நமக்கு வழங்கிய குடிமை உரிமைகள் சார்ந்து சுதந்திரம், சமநீதி, சமத்துவம், சமஉரிமை என்பவை பற்றி நமக்குக் கனவுகள் உருவாயின. சோஷலிசம், பொது உடைமைச் சமூகம் என்பதெல்லாம் அதற்கு அடுத்த கட்ட மனித முயற்சிகள். இன்று உலகச் சமூகங்கள் ஒவ்வொன்றும் ஒரளவு மனித உரிமை சார்ந்த மதிப்பீடுகளுடன் வாழ்வது அந்த வகை முயற்சிகள், அதற்கான போராட்டங்கள், தம் மக்களுக்காக போராளிகள் செய்த ஈகங்கள் உருவாக்கிய அமைப்பில்தான். உலக முதலாளியம் இன்று வலுவானதாக, உயிரியல் பெரும்போர் இயந்திரமாக மாறியிருந்தாலும் இது ஒரு இடைக்கால நிலை என்றே எனக்குத் தோன்றுகிறது.
இப்படிச் சொல்வதன் மூலம் மீண்டும் செம்படை புறப்பட்டு இந்த மனிதக்குலத்தை மீட்டெடுக்கும் என்று அறிக்கையிட அல்ல. அப்படி நடக்க வேண்டிய தேவையும் இல்லை. மொழி, இனம், சாதி, வாழ்வாதாரம், பண்பாடு, அரசியல், உயிர்வாழ்தல், பாலினம், மண்ணுரிமை என ஏதாவது ஒரு தளத்தில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலை பற்றி, நல்வாழ்வு பற்றி, தன்னுரிமை, தன்மதிப்பு பற்றிய கனவைக் காணாமல் இருப்பதில்லை. தம்மீது கவிந்த வறுமை, ஏழ்மை, அடிமைத்தனம் எதனையும் பாசத்துடன் பற்றிக் கொண்டிருப்பது மனித இயல்பல்ல. அப்படியெனில் இன்றைய தேசிய-பன்னாட்டு முதலீட்டு ஆதிக்கங்கள் எப்படி உலக மக்களை சமூகங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது? நீங்கள் பட்டினியில் கிடந்து சாகத்தான் வேண்டும் என்று சொல்லியா? இல்லையே, நாங்கள்தான் உங்களுக்கான நல்வாழ்வை வழங்குவோம், எங்களுக்காக உழையுங்கள், மூலதனத்தை, தேசிய ராணுவத்தை பலப்படுத்துங்கள், நாட்டுக்காக ரத்தம் சிந்தத் தயாராக இருங்கள், நீங்களும் உங்கள் தலைமுறையும் நலமாக வாழலாம் என்று கூறித்தான் தம்மை நியாயப்படுத்திக் கொண்டும் நிலைப்படுத்திக் கொண்டும் உள்ளன.
தென்னமெரிக்க மக்களின் தண்ணீரையும் செந்நீரையும் உறிஞ்சும் ஐக்கிய அமெரிக்க அரசு தன் மக்களுக்கு சொல்வது என்ன? “உலகின் வளம் எல்லாம் உமக்குத்தான் உயிர்களைக் கொல்வது பற்றிக் கவலை வேண்டாம்” என உறுதி அளிக்கிறது. “ஆப்கான் மக்களைக் கொல்லாமல் அமெரிக்கத் தெருக்களில் நம் மக்கள் அமைதியாக நடமாடவோ ஆடல் பாடல்களில் ஈடுபடவோ முடியாது” என்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்க மண்ணைக் கொள்ளையிட்டு தன் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்திற்கு அளிப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றன. உலக முதலாளியம், உள்ளூர் முதலாளியம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தன் மக்களுக்கான நல்வாழ்வு, நீடித்த இன்பம் பற்றிய கனவை உருவாக்கித்தருகின்றன.
பாகிஸ்தானுடன் ஆண்டுக்கு இருமுறை போர் நடத்தினால்தான் இந்தியா வல்லரசாகும் என்றும் இந்தியா வல்லரசானால் அரசின் நியாயவிலைக்கடைகள் வீட்டு வாசலுக்கு வந்து உணவுப் பொருள் வழங்கும் என்பது  போன்ற நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒவ்வொன்றாகத் தகரும் பொழுது மக்கள் மாற்று என்ன என்பதை நோக்கித் திரும்பத்தான் செய்வார்கள். மாற்று அரசியலை, மாற்றுப் பொருளாதாரத்தை, மாற்று வாழ்வியலை இயற்கையும் சூழலியல் நசிவும்கூட நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
உலக அளவிலான முதலாளித்துவ, சந்தைப் பொருளாதார அமைப்பு தனக்கான அடிப்படையை மீண்டும் உறுதி செய்துகொள்ளக் காரணமாக அமைந்தது இயந்திரமையம் கொண்ட மனிதக் கட்டமைப்பு. இயந்திரத் துப்பாக்கிகள் தொடங்கி, எண்மின்னியல் நினைவுக் களஞ்சியங்கள் வரை அனைத்தும் மனித உடல்நீக்கம் கொண்ட தொழில் நுட்பங்கள். பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் கலந்து மார்க்சியத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மாற்று அரசியல்-பொருளாதார அமைப்புகள் முன்னேற்றம்-வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் இயந்திரமைய அமைப்புகளையே பெருமளவில் உற்பத்தி செய்தன. இயந்திர மயமாக்கம்- அரசுமைய அதிகாரம்- முதலீட்டு ஆதிக்கம் அனைத்தும் ஒன்றாகக் கலக்கும் இடம் இது. இந்தக் கலப்பு முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இரண்டிற்கும் மிகவசதியான ஒரு உலகை உருவாக்கித் தந்தது. பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் நீக்கிவிட்டால் எந்த ஒரு தேசிய சோஷலிச அரசும் உலக முதலாளியத்தின் ராணுவத் தளங்களில் ஒன்றாக மாறிவிடும். இதுதான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. மார்க்சியம், கம்யூனிசம் எல்லாம் அழிந்து மக்கள் மாபெரும் பேரானந்தப் பெருவாழ்வு பெறப்போகும் காலம் இது என வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டதுதான் இந்தச் சுதந்திர மயமாக்கல், தனியார் வசமாக்கல், உலகமயமாக்கல் என்ற விழாக்காலத் தள்ளுபடி அரசியல். இந்த விழாக்காலக் கொண்டாட்டங்கள் உலகின் 10-முதல் 20-சதவிகித மக்கள் தொகுதிகளை மட்டும் மனிதர்களாக மதிப்பவை. இவர்களுடைய களிப்பும் களிப்புக்கான முன் தயாரிப்பும்தான் உலக வாழ்க்கை என்ற உளவியல் கட்டமைப்பு அனைவருக்குமானதாக எப்படி இருக்க முடியும்?
இன்று உள்ள மக்கள் தொகுதிகள் நுகர்தலுக்கான கட்டற்ற உரிமை கொண்டவர்கள் – நுகர்வுக்குத் தம்மை நிபந்தனையற்று ஒப்படைப்பவர்கள் என்ற இரு பெரும் பிரிவாக பிரிந்துள்ளனர். உழைக்கும் வர்க்கம், உடமை வர்க்கம் என்பவை இன்று இடைநிலை இயந்திரங்களாக மாறி இயற்கை வளங்களை முதலீடாக மாற்றிக் கொண்டுள்ளன. மண்ணின் மக்களை வீடற்றவர்களாக்கி சுரங்கங்களைத் தோண்டி கனிமங்களைக் கொள்ளையிடுவது முதல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம், வணிக வளாகங்களுக்கு ஒளிவெள்ளம் என்ற பெயரில் பலநூற்றாண்டு மனித அவலத்திற்குக் காரணமாக அமையவுள்ள அணுவுலைகளை நியாயப்படுத்துவது வரை உலக முதலாளியமும் – உழைக்கும் வர்க்கத்தின் உளவியல் இருண்மையும் ஒன்றிணைந்துள்ளன. இந்த இணைப்பு அதிக காலம் நீடிக்கக்கூடியதல்ல.
நுகர்வு பெருகிய சமூகம், வாழ்வாதரம் அற்ற சமூகம் என இரண்டு பகுதியாக உலகம் பிரிந்து குடை சாயும் நிலையில் உலக முதலாளியம் தன் கணிணிகளையும் ஏவுகணைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒரு மூட்டை கோதுமையும் நெல்லும் சோளமும் ஒரு விண்களத்தைவிட மதிப்பு வாய்ந்தது என்பதையும், ஒரு கை தூயநீர் ஒரு மூட்டை அச்சடித்த பணத்தைவிட அரிதானது என்பதையும் உலக விஞ்ஞானிகள் உணர வேண்டிய காலம் உருவாகும். மாற்றுச் சிந்தனைகளின் “எதிர்காலம்” குறித்து நான் கவலைப்படவில்லை… மனிதர்கள் மாற்றுச் சிந்தனைகளின் வழியாவே தம்மை மதிப்பு மிக்கவர்களாக வைத்துக் கொள்ளமுடியும்…
இன்றைய ஒப்பீட்டு அளவிலான மனித நீதியும், அறம்சார் நெறிகளும் மாற்றுச் சிந்தனைகள், மாற்றுச்செயல்திட்டங்கள் வழிதான் காப்பாற்றப்படுகின்றன… தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு கூட “ஆமாம் நாங்கள் படுகொலை செய்தோம், இத்தனை லட்சம்…” என்று சொல்லித் தம் இறையாண்மையைத் தொடரவில்லை. “நாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை போராளிகள்தான் தமிழ் மக்களைக் கொன்றார்கள் நாங்கள் மீதமிருந்த மக்களைக் காப்பாற்றினோம்.” என்றுதான் சொல்கிறார்கள். மண்ணின் மக்களைக் கொன்றொழிக்கும் வல்லாதிக்கப் படைகளுக்கு “அமைதி காக்கும் படை” என்று தான் பெயர். நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புவது மாற்றுச் சிந்தனைகள், விடுதலைக் கருத்தியல்கள்தான் இன்றைய மக்கள் உரிமைகளை, மனித அறங்களைக் குறைந்த அளவில் காத்து வருகின்றன, அவை எங்கும் நிறைந்துள்ள உள்ளார்ந்த போராட்டங்கள், மனித விழுமியத்தின் உள்ளாற்றல் இந்த வகையான மனிதவுரிமைப் போராட்ட உணர்வு.
மனிதர்கள் வன்முறை மட்டும் கொண்டவர்கள் என்றால் சமூக அமைப்புகள் உருவாகியிருக்காது. ஒவ்வொரு அமைப்பும் ஒரு அமைதி ஒப்பந்தம், சமூகம் என்பது தனிமனிதர்களுக்கிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை. இன்று மதங்கள்கூட நவீனத்துவத்தின் மக்கள் மைய நிலைப்பாட்டைக் கைக்கொண்டு தம் சொல்லாடலை, செயல்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணமாக இருப்பது மாற்றுச் சிந்தனைகள், மனித உரிமைக் கருத்தியல்கள் தான்.
பௌத்த, சமண, கிறித்தவ சமயங்கள் தம் காலத்தின் மக்கள் அரசியலை முன் வைத்து தம்மை வடிவமைத்துக் கொண்டன. பிறகு அவை ஆட்சியாளர்களின், அரசுகளின் கருவியாக மாற்றம் பெற்றன. இன்று மீண்டும் அவை தம்மை மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த, அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறுவிளக்கம் செய்து கொள்கின்றன. இதற்கான காரணம் மக்கள் அரசியலும், மார்க்சிய இயக்கங்களும்தான்.
கிறித்தவத்தின் இருபெரும் பிரிவுகளான கத்தோலிக்க (போப்பரசுத் திருச்சபை), புரட்டஸ்டன்ட் (மக்கள் திருச்சபை) சமய நிறுவனங்களும் உழைக்கும் மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இறையமைப்புகளாக மீண்டும் மீண்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சியத்தைக் கற்காமலேயே ஒரு கிறித்தவர் எளியோரின் நல்வாழ்வு, ஏழைகளின் முன்னேற்றம், சுரண்டல்களில் இருந்து மக்களை விடுவித்தல் என்பவற்றிற்காகத் தன் வாழ்வைத் தரமுடியும் எனச் சொல்லும் விடுதலை இறையியலும், இயேசுவும் மார்க்சும் மக்களுக்கான இரு விடுதலைத் தூதர்கள் என்று சொல்லும் புரட்சிகரத் திருச்சபையும்  இன்று உலக அரசியலின் ஒரு பகுதியாக விரிவுபட்டுள்ளன. இஸ்லாத்தின் அறவியல் சிந்தனையாளர்கள் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்பவை சமய வழியில் உறுதி செய்யப்பட்ட கருத்துக்கள் அதனால் இஸ்லாம் எதிர்கால மக்கள் அரசியலாக மறுஉருவாக்கம் பெறும் என்று அறிவிக்கிறார்கள்.
தற்கால வாழ்வியல் சார்ந்து பன்முகப்பட்ட விடுதலைக் கருத்தியல்கள் தற்போது உருவாகிவருகின்றன. இவை ஒன்றே போல ஒற்றைத் தன்மை கொண்டவைகளாக ஒருங்கிணைந்தவைகளாக இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் போது சற்றே சிக்கலாகத் தோன்றும் நிலைக்களம் இதுதான். இந்த தளத்தில்தான் இலக்கியம், கலைகள், கருத்தியல் ஆய்வுகள், அறிவுத்துறைகள் பெரும் பங்காற்ற இயலும், மாற்றுச் சிந்தனைகள், மாற்று அறங்கள், மாற்று அரசியல் களங்களுக்கிடையில் உரையாடலை, பரிமாற்றங்களை, புரிந்துணர்வுகளை வளர்ப்பதற்கான சொல்லாடல்களை, கதையாடல்களை உருவாக்கித்தர அவற்றால் முடியும்.
மாற்றுச் சிந்தனைகளை அன்றன்று புதுப்பித்துக் கொண்டே இருப்பதும், ஒவ்வொரு தளத்திலும் எடுத்துரைத்துக் கொண்டே இருப்பதும் ஒரு போராட்ட வாழ்முறை. தன் மக்களைக் காக்க உயிரைத் தந்த இனக்குழு போராளிகளுக்கு இருந்த தன்னீகத்தில் ஒரு சிறுபகுதி மாற்றுச் சிந்தனைகள், மாற்று அரசியலை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இருந்துதான் ஆகவேண்டும்… நான் புரட்சிகர போரைப் பற்றிச் சொல்லவில்லை, தன்மதிப்பும், தன் பிள்ளைகள்மீதான பாசமும், அவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளும் கொண்ட ஒரு தாய்க்கும், தந்தைக்கும் இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய போர்க்குணம் பற்றிச் சொல்கிறேன்.
மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை...அதுதான் இன்றைக்கான அழகியல், கவிதையியல் … அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த்தெடுப்பதும்தான் அறிவுத்தளத்தினர், சிந்தனையாளர்கள், மக்களுக்கான இலக்கியவாதிகள் என்பவர்களின் பணி, வாழ்வு எல்லாம்…

எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல் -பிரேம்

 

உரையாடல்: 4:

எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல்

 

கேள்வி:

மேற்குலகில் தத்துவவாதிகள் (philosophers), அறிவுஜீவிகள் (public intellectuals), படைப்பாளிகள் (writers), இலக்கியவிமர்சகர்கள் (literary critics), திரைப்பட விமர்சகர்கள்  (film critics) என்போர் தனித்தனி வகைமைக்குள் இயங்குபவர்களாகவும் அவர்களுக்கென ஒருமரபும் இருந்துவரும் நிலையில், நமது சூழலில் எழுத்தைக் கைக்கொள்பவர்கள்,  அனைத்திலும் செயற்பட விழைபவர்களாக உள்ளது ஏன்? அது சரியானது தானா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

இதுபோன்ற கருத்து-அறிவு சார்ந்த வேலைப் பிரிவினைகளை அடிப்படையில் நாம் மறுக்க வேண்டும். மேற்கின் உயர்தகுதி தேர்ந்தெடுப்புமுறை, தனிச்சிறப்பு அடையாளம் என்பவை ஒதுக்குதல் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளவை. அனைவருக்குமான அறிவு, அனைத்தைப் பற்றியுமான அறிவு என்பது பொதுமைப்பட்ட நிலையில்  இந்த வகை அறிவுஆதிக்கம், அறிவு அதிகாரம் இயங்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு உயர் தொழில்நுட்பத்  துறையாக மாறியுள்ளது.  இது முதலீட்டு குவித்தல் போலச் சுரண்டலை அடிப்டையாகக் கொண்டது. சமச்சீரற்ற அறிவுப்பரவல் வழி அதிகாரம், அடக்குமுறை, அடிமைத் தன்னடையாள உருவாக்கம் என்பவை வலுவடைகின்றன.  அப்படியென்றால் அனைவரும் அனைத்துத் துறைபற்றியும் பேசவும், எழுதவும் பழகித்தான் ஆகவேண்டும். நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு என்ன இருக்க முடியும். தத்துவம், இலக்கியம், திரைப்படம், கலை, அழகியல், உளவியல், அரசியல் என அனைத்தைப்பற்றியும்,  அனைத்தையும் கலந்து  அனைவரும் எழுதுவதன் மூலம்தான் அறிவுத்துறையின் வன்முறையை, அதன் அரசியல் வன்முறையை நாம் நீக்க முடியும்.

தன்  சமூகத்தின் தேவைக்காக ஒருவரே  பலதுறைகள் பற்றி எழுதுவதற்கும், சந்தையின் தேவைக்காக,  பண்பாட்டு முதலீட்டியத்தின் முகவர்களாக எல்லாவற்றைப்  பற்றியும் ஒரு சிலரே எழுதிக் குவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றித்தான் நீங்கள்  கேட்பதாக நினைக்கிறேன்.

எழுத்து, வாசிப்பு என்பது மற்ற அறிவுத்துறைகள் போலவே பயிற்சியும், உழைப்பும் தேவைப்படும் செயல்பாடு. அதனால் எழுதப் பயிற்சி பெறும் ஒருவர் அரசியல் சார்ந்தவராக இருந்தால் தன் உழைப்பை பயிற்சியைப் பயன்படுத்தி பலதுறைகளைப் பற்றி எழுத வேண்டிய தேவை ஏற்படும். அரசியல் நீக்கம் கொண்ட ஒருவர் அதே பயிற்சியைக் கொண்டு பலதுறைகள் பற்றியும் சந்தைக்கான எழுத்துக்களை உருவாக்குவார். ஒரளவு அறிவும் பயிற்சியும் உள்ளவர்கள் இவர்களின் எழுத்தின் உள்ளீடற்ற தன்மையை உடனே புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய வாசிப்புப் பள்ளியில் பழகிய, பயின்ற அனுபவத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். மார்க்சியக் கல்வி தொடங்கும் இடம் அரசியலாக இருக்கும் பின் பொருளாதாரம், வரலாறு, தத்துவம், அழகியல், இலக்கியம், கவிதையியல் என ஒன்றுதொட்டு ஒன்றாக விரிந்து நாடகம்,  திரைப்படம், களஆய்வுகள், தற்கால வரலாறு என உங்களை பல தளங்களில் இயங்க நிர்ப்பந்திக்கும். அம்பேத்கரை வாசித்துக் கற்பதும் புரிவதும் மானுடவியல், சமய வரலாறு, இந்தியச் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் என பல அறிவுத்துறைகள் சார்ந்த பயிற்சியாக இருப்பதை நாம் அறிவோம்.

ஒரு குலமரபுச் சமூகத்தில் உழைப்பு, கலை, தற்காப்புப் போர் என அனைத்தும் ஒவ்வொருவருக்கும் பழகியிருப்பது போல நம் காலத்திய அறிவுத்துறைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பொழுது நாம் அனைவரும் அவற்றைப் பற்றிச் சிலவற்றை எழுதவும், பேசவும் வேண்டும். நான் ஒரு படைப்பிலக்கியவாதி என்றால் பிறருடைய அறியாமையை என் மூலதனமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை, ஒரு தத்துவவாதி என்றால் புனைவெழுத்தை சிறுமை கொண்டதாகப் பார்க்கத் தேவையில்லை.

தமிழ்ச்சூழலில் எழுத வரும் மிகச் சிலர் இலக்கிய விமர்சனம், திரைப்பட விமர்சனம் என்ற இரு தளங்களில் கூடுதலாக இயங்க முயற்சி செய்வதை நாம் கவனிக்க முடியும். தனக்குப் பிடித்த இலக்கிய வகையை பெருமைப்படுத்தவும், தனக்குப் பிடித்த சில  திரைப்படங்களை புகழவும் இது தேவைப்படுகிறது. தனக்குப் பிடிக்காதவைகளை ஒதுக்கி தான் விரும்பும் ஒரு சிந்தனைப்பள்ளியை நிறுவ இந்த எழுத்துக்கள் அவர்களுக்கு உதவுகின்றன.

திரைப்படங்கள் குறித்து நான் கட்டுரை எழுதிய போது திரைத்துறைக்கு போகும் முயற்சியா எனச் சில  நண்பர்கள் கேட்டார்கள். அமெரிக்க வல்லாதிக்கம் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் அமெரிக்காவுக்குப் போகும் முயற்சிகள் என்றால் இவை திரைத்துறைக்கு போவதற்கான முயற்சிகள்தான் என்றேன். கவிதை, நாடகம், தத்துவம், புனைவுகள், கோட்பாடுகள் எனப் பல கதையாடல் வடிவங்களில் இயங்கும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும்… ஒன்றின் பயிற்சி மற்றதற்கான தொடக்கமாக இருக்கிறது. ஒன்றை தொடங்கும் போது அதற்கான கூடுதல் உழைப்பும் திறனும் தேவைப்படுகிறது. இந்தக் கூடுதல் உழைப்பைத் தருவதற்கான பொறுப்பற்றவர்கள் தமக்குக் கிடைத்த ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு அனைத்தைப் பற்றியும் எழுதுவது நம் காலத்திற்கான அறிவுருவாக்கத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பவர்கள். இதற்கான தளங்களை ஊடகங்கள் சில உருவாக்கித் தருகின்றன.

நம் காலத்திய அறிவு பல தளங்களில் இயங்குவது தவிர்க்க இயலாத நிகழ்வாக மாறிவிட்டபின், அறிவுத்துறைகளை நாம் தனித்தனியாகப் பயில வேண்டியது அவசியம். இந்தத் தனிப்பயிற்சி தரவுகளைத் தேடித் தரவும், அவற்றைப் பகுக்கவும் தொகுக்கவும் உதவக்கூடியது. ஆனால் இவற்றை அரசியல் தளத்தில் பொருத்திக் காட்ட,  சமூக அறிவுருவாக்கத்தில் ஒருங்கிணைக்க, செயல்படும் அழகியலாக உருவாக்க அனைத்தையும் இணைக்கும் பன்மை அறிவு தேவைப்படுகிறது. இதில் நமக்குப் பெரும் சிக்கல் உள்ளது.

தமிழ் இலக்கியத்தைக் காலவரிசைப்படி கற்றுள்ள பலரை நாம் தமிழறிஞர்கள் என்கிறோம், இவர்களுக்குத் தற்கால அரசியல், அழகியல், சமூகவியலில் பயிற்சியோ பழக்கமோ இல்லாததால் பிற்போக்குச் சிந்தனையின் முகவர்களாக செயல்படுவதைத் தன் வாழ்க்கைக் கடனாகக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சியம் அறிந்து பயின்றவர்கள் பலர் கலை-இலக்கியம் பற்றி, சூழலரசியல் பற்றி காலப்பொருத்தமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். திரைப்பட வரலாறு தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் பலர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையோ, தமிழின் குல-குடி மரபுகள் பற்றியோ அடிப்படைகளைக்கூடத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இலக்கியம் பயின்று, எழுதவும் பழகிய சிலர் தமிழில் அரசியல், தத்துவம், நுண்கலைகள், திரைப்படம், ஓவியம், இசை  எனப் பலதுறைகளில் இயங்கும் ஆர்வம் கொள்வது, செயல்படுவது அறுபதுகள் எழுபதுகளில் ஒரு அடையாள உளவியலாக உருவாகியிருந்தது. எழுத்தைப் பழகிய பலர் திரைப்படம் வழியாகத் தம்மை மேலும் வெளிப்படுத்த முடியும் என்றும் அதில் சாதனைகளைச் செய்யமுடியும் என்றும்  நம்பினர். இந்தியத் திரைக்கலைஞர்கள் சிலர் இலக்கியப் பயிற்சி கொண்டிருந்ததும் ரித்விக் கட்டக், சத்யஜித் ரே போன்ற சிலர் தங்கள் மொழியில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய படைப்பாளிகளாகவும் இயங்கி வந்ததும் தமிழில் பல எழுத்தாளர்களுக்கு  முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன்  எழுபதுகளில் சென்னையில் வாழத்தொடங்கிய போது திரைப்படத் துணை இயக்குநராக இருந்தது பற்றியும் அப்போது உலக அளவில் சாதனைகள் புரிய திரைப்படம்  ஒன்றே சிறந்த வழி என்று நம்பியிருந்தது பற்றியும் தனக்கே உரிய தற்கேலியுடன் சொல்லுவார், முடிவில் படம் பிடிக்கக் கற்றுக் கொள்ளாமல் புகைபிடிப்பதைக் கற்றுக் கொண்டது பற்றிச் சொல்லியபடி ஒரு சிகரெட்டைப் பத்தவைப்பார். பாரதிதாசன் படம் பிடிக்கச் சென்ற கதையை பிரபஞ்சன் சொல்லிக் கேட்க வேண்டும்,  படம் படுத்திய பாடு தமிழின் தனி வரலாறாக நீளும். நான் அரும்பு மாணவர் இதழில்  துணையாசிரியராக இருந்தபோது, அப்போது வெளிவந்திருந்த மகாநதி திரைப்படம் தமிழில் தேவையான ஒரு திரைமொழியை கொண்டுள்ளது பற்றி ஒரு கட்டுரை எழுதி பக்கம் கருதி குறைத்து வெளியிட்டேன்.  அதில் நீக்கப்பட்ட பக்கங்களைப் பார்த்த என் எழுத்தாள நண்பர் என்ன இது வேண்டாமா இப்படிக் கொடுங்க நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கேட்டு வாங்கி சில வாக்கியங்களை இணைத்து கணையாழி இதழில் தன் பெயரில் வெளியிட்டார். சில நாட்களில்  வந்த ஒரு அழைப்பினை என்னிடம் கூறி வாழ்க்கையே மாற இனி வாய்ப்பு உண்டு நீங்க வரிங்களா இல்லையா என்று பொறுப்புடன் கடிந்து கொண்டார். நான் எழுதியது அந்த திரைப்படக் கலைஞருக்கு பிடித்திருந்தால் அவர் என்னை வந்துப் பார்த்துப் பேசட்டும், நான் ஏன் அவரைப் போய் பார்க்க வேண்டும் என வேடிக்கையாகவும் வினையாகவும் சொல்லி வைத்தேன்.   “பாருங்க ராஜன் இந்த மனுசன் தானும் பொழைக்க மாட்டாரு கூட இருக்கிறவங்களையும் பொழைக்கவிட மாட்டாரு” என்று வருத்தப்பட்டார் எழுத்தாள நண்பர்.  ‘நீங்க போய் வாங்க உங்க பொழைப்ப நான் கெடுக்க மாட்டேன்’ என்று அவரை அனுப்பி வைத்தேன். இப்படித்தான் இந்த எழுத்து நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.

திரைப்படக்காரர்களிடம் தனக்குத் தெரியாதது உலகில் எதுவும் இல்லை என்று வியப்பை உருவாக்கவே சில எழுத்தாளர்கள் தற்போது  ஆன்மிகம் தொடங்கி அமெரிக்க அரசியல் வரை, தாஸ்தெயெவஸ்கி தொடங்கி தாஜ்மகாலின் அறியப்படாத வரலாறு வரை பலவற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய புத்தகத்தின் பெயர் ஒரு நடிகரின் வாய்ச்சொல்லாக அமைந்து விட்டால் தான் எழுதியதின் பயனை மட்டுமின்றி பிறந்ததின் பயனையும் அடைந்து விட்டதாகப் பெருமையில் நுரைத்துப் பறக்கும் தமிழ் எழுத்தாளர்கள்- படைப்பாளிகள் தற்போது தத்துவ வாதிகளாக,  அறிவு ஜீவிகளாக, இலக்கிய விமர்சகர்களாக,  திரைப்பட விமர்சகர்களாக எல்லா வடிவிலும் இயங்க நினைப்பது எதற்கானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

திரைப்படம் பற்றி இன்று சிலர் எழுதுவதையும் பேசுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அப்படம் பற்றிய சிலரின் எழுத்து தீர்த்துவிடுகிறது. ஆரண்ய காண்டம் (தியாகராஜன் குமாரராஜா,2011) படம் பற்றி உலக சினிமாவில் துறைபோகிய ஒரு எழுத்தாளர் (லத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்குநர்களைத் தன் வாசகராகக் கொண்டிருப்பதாகக்கூட சில பேச்சுகள் உண்டு) தன் வாசக வட்டத்திடம் விரிவாகப் பேசுகிறார். கேட்பவர்களுக்கு உலக சினிமா தெரியவா போகிறது என அவர் நம்புவதற்கு இடம் உண்டு.  இன்று மின்எண்ணியல் வடிவில் அனைத்துப் படங்களும் கிடைக்கும் என்றாலும் அனைவருக்கும் இணையம் ஒத்துழைக்காது இல்லையா.  அவர் சொல்லகிறார் “ஆரண்ய காண்டம் படம் உலக சினிமாவில் எதனைப் போலவும் இல்லை,  இந்தப் படம் வேறு எந்தப் படத்தையும் எனக்கு நினைவுபடுத்தவில்லை என்பதே இதன் சிறப்பு”. உலக சினிமா பற்றி இவருக்கு ஒவ்வொரு இழையும் தெரியும் என்பதை நம்பும் ஒரு பார்வையாளர் இதனைத் தன் கல்வியாக எடுத்துக் கொள்வார் என்பதை நாம் மறுக்க முடியாது. அப்படத்தின் இயக்குநருக்கு நிச்சயம் சிரிப்பு வந்திருக்கும். சிட்டி ஆஃப் காட், அமரோஸ் பெரோஸ், பல்ப் பிக்ஷ்சன் என வரிசையாக சில  படங்களைச் சம அளவில் எடுத்து துண்டு துண்டாக நறுக்கி,  வேகவைத்து, நொதிக்கவைத்து, வடிகட்டி, சென்னைத் தமிழ் மணம்  ஊட்டி தயாரிக்கப்பட்ட பானம் அது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகின் துணைஇயக்குநர்கள், இணைஇயக்குநர்கள், எதிர்கால இயக்குநர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அப்படத்திற்கு ஒளி அமைப்பு செய்த தொழில்நுட்ப உதவியாளர்களிடம் கேட்டால்கூட “படத்தில் மறைந்துள்ள படங்களின்“ பெயர்களைச் சொல்வார்கள். அப்படிப் படம் பார்த்து கதை சொல்வதும் படம் செய்வதும் திரைத்துறையில் விரும்பத் தகாத வினோத நடத்தையும் அல்ல. நான் சொல்ல வருவது உலக சினிமாவை ஓயாமல் சுவாசிக்கும் ஒரு பேரறிஞர் தன் “கலகக் கண்மணி” களுக்கு அடிப்படையிலேயே தவறான தகவல் ஒன்றைத் தருகிறார். இதனை அவருடைய “வலையில்” சிக்கிய ஒவ்வொரு கலையன்பரும் ஒரு நூறு பேருக்குக் கொண்டுசேர்ப்பார்… இப்படித்தான் நம் காலத்திய தமிழ் அறிவு நலிவடைய நேர்கிறது. மாறுபட்ட பார்வைகளைத் தருவது  ஒருவருடைய உரிமை, ஆனால் பார்ப்பதையே மாற்றிக் கூறுவது திட்டமிட்ட மடைமை…   எழுத்தை, அறிவை நேசிக்கும் ஒருவர், தன் சமூகத்தை மதிக்கும் ஒருவர் செய்ய முடியாத செயல் இது.

உரையாடல்: 4 : 1

உரையாடல்: 3 அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்-பிரேம்

 

உரையாடல் : 3

அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்

 

கேள்வி

ஒரு இலக்கியப் பிரதியின் வெகுமதியை, பெறுமதியை பரந்த இலக்கிய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள், தங்கள் நுண்ணறிவுத் திறனால் மதிப்பிட இயலும் என நம்பப்பட்டும், அத்தகைய வாசிப்பனுபவம் உள்ளவர்கள் என அறியப்பட்டவர்கள், உண்மைத் தன்மை, வாசிப்பனுபவம், அகவெழுச்சி,  தரிசனம் போன்ற பூடகமான சொற்களைக் கொண்டு இலக்கியப் பிரதிகளின்  தரப்பட்டியல்களை உருவாக்கிக்  கொண்டு மிருந்த காலத்தில் மொழியியல், அமைப்பியல், தொன்மவியல் அடிப்படைகளில் கலை இலக்கியங்களை அணுகவும், இலக்கியப் பிரதிகளுக்குள் இயங்கும்,  மோதிக்கொள்ளும்  சமூகக் கருதுகோள்களைப்  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் ஆரம்பகட்ட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால்  தற்போது இவற்றிற்கான தடயங்களே  தெரியாத வகையில்  மீண்டும் கலை இலக்கியங்களின்  மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதை எவ்வாறு  விளங்கிக்  கொள்வது?   இதைக் குறித்து உங்கள்  விளக்கம்  என்ன?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

பதில்

பிரேம்

 சமூக வாழ்க்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டது, தனிமனிதர்கள்  அரசியலால் உருவாக்கப்பட்டவர்கள், தனிமனிதர்களுள் அரசியல் ஊடுறுவியுள்ளது, இருமனிதர்களுக்கிடையில் நிகழும் ஊடாட்டம் மட்டுமல்ல தனி ஒரு மனிதருக்குள் நிகழும் உள்ளோட்டங்களும்கூட  அரசியல் தன்மைகொண்டது, அரசியலை நிகழ்த்துவது என்ற கருதுகோள்களை ஏற்றுக்கொண்ட தளத்தில்தான் இந்த கேள்விக்குப் பொருள் உள்ளது. அதற்குப் பிறகே நாம் இலக்கியத்தின் அரசியல், அரசியலை அடிப்படையாகக்  கொண்ட இலக்கியம், இலக்கியத்தின் அரசியல் வடிவம் என்பவை பற்றிப் பேச முடியும்.  இலக்கியத்தை வைத்து இந்தக் கருதுகோள்களை மறைத்து விட வேண்டும், இப்படிப் பட்ட புரிதல்களை இல்லாமலாக்கிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கும் பண்பாட்டு அரசு இயந்திரங்கள் (Cultural State Apparatus) இவ்வகைக் கேள்விகள் உருவாவதற்கான தளங்களையும் அழித்துவிடக் கூடியவை.  அரசியலை அறியவும், இயக்கவும் கட்டுப்படுத்தவும் சிலருக்கு மட்டும் உரிமை உண்டு, சிலர் அதனைச் செய்தால் போதும் மற்றவர்கள் அதற்குக்  கட்டுப்பட்டு அடிமைகளாக இருந்து வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாத விதியாகத் தொடர  வேண்டும் என்றால் அதற்கு ஒரு அமைப்பு செய்யவேண்டியது தனிமனிதர்களின் அரசியல் நீக்கம். தனிமனிதர்களை அரசியல் நீக்கம் செய்யப் பலவித உத்திகள்  உள்ளன. அந்த உத்திகள்- கருவிகள் மதம்-பக்தி, அழகியல், கலைச் செயல்பாடுகள், ஊடகங்கள், இலக்கியம் என்ற வடிவத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றன. மார்க்சிய அணுமுறையின் மறுக்க முடியாத பகுதியிது.

அரசியல் விடுதலைக்குத் தொடக்கம் ஒவ்வொருவரும் அரசியலடைவது.  அரசியலடைவதைத் தடுத்து அரசு வயப்படுத்துவது என்ற செயல்பாடு ஒன்று உண்டு. அதன் வழியாக ஒரு அமைப்பு அரசியல்- எதிர்அரசியல் களங்களைக் கையாள முடியும். இதனை  உளவியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பாகவே நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தன்னை அரசின் குறுகிய வடிவமாக- அதன் செயல்படும் கருவியாக வைத்துக் கொண்டு  மற்ற ஒவ்வொருவரையும் கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது, தீர்ப்பு வழங்குவது, தண்டிப்பது அதற்குத் தன் வலிமை போதாத போது குழுக்களாகச் சேர்ந்து தண்டிப்பது அதற்கும் மீறிய நிலையில் அரசின் பெருந்தண்டனைக் களத்திடம் அந்த மற்றவரைக் கொண்டு ஒப்படைப்பது என்ற வடிவத்தில்  தனி மனிதர்களின் அரசுவயப்படும் உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது இதனை அரசு-அடிமைகள் என்ற உளவியல் இணைப்பு என்று கூறலாம். பாலடையாள நுண் அரசியலில் இது மிகத் தெளிவாக வெளிப்படும், ஆண்மையத்தன்மையும் அரசு மையத்தன்மையும் ஒப்பமைப்புகளாக இயங்கும் தளம் இது.  அரசு- அரசின் உடல் என்னும் ஆண்வடிவக் கட்டமைப்பு போர் இயந்திரத்தின் வழியாக எங்கும் நிறைக்கப்படுகிறது. எங்கும் நிறைக்கப்பட்ட அரசு-அடிமைகள் உறவைப் புரிந்து கொள்வது அரசியலாக்கத்தின் தொடக்கம். “நான் அரசு அல்ல நான் நிகழ்த்துவது அரசியல்” என்ற அரசியலாக்கக் கருத்தமைப்பு அடுத்த கட்டத்தில் விடுதலை, அரசு நீக்கம், அரசுமைய நீக்கம்  என்பதை நோக்கிச் செலுத்தக்கூடியது.  இந்த அரசு மைய நீக்கம் மக்கள் ஆட்சி, ஜனநாயக அரசியல், மனித உரிமைகள், குடிமைச் சமூகம், சமத்துவம் என்பவற்றை நோக்கிச் செலுத்தக்கூடியது. அப்படியெனில்  ‘அரசு-அடிமைகள்’ கட்டமைப்பைத் தொடர அதிகார அமைப்பின் அனைத்து உத்திகளும் பயன்படுத்தப்படும், அரசியலாக்கத்திற்கு எதிரான கருத்தியல் தாக்குதல் அனைத்து தளங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இவற்றில் ஒரு பகுதியான கலை இலக்கிய வடிவங்களை நீங்கள் குறிப்பிட்ட  மொழியியல், அமைப்பியல், தொன்மவியல்  அடிப்படைகளில் அணுகி, இலக்கியப்  பிரதிகளுக்குள்  இயங்கும், மோதிக் கொள்ளும்  சமூகக்  கருதுகோள்களை  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதென்பது வாசிப்பை மட்டுமின்றி வாழ்வையும் அரசியல் மயப்படுத்தும் செயல்பாடு இல்லையா?

இதனை இல்லாமலாக்கக் கையாளப்படும் உத்திகளில் ஒன்றுதான் இலக்கிய வாசிப்பை “வெறும் கருத்துரைப்புகளாக” மாற்றுவது. இதற்கு அதிக வாசிப்போ, அறிவுத்துறை சார்ந்த பயிற்சியோ, கலை-இலக்கியம் பற்றிய ஆய்வுத் திறனோ தேவையில்லை. அந்த அந்த காலத்தின் பொதுப்புத்திவழி உருவான உணர்வுநிலைகளை எடுத்துக்கொண்டு அவற்றைச் சில கூடுதலான உதாரணங்கள், சொல்லணிகள் வழி விளக்கும் திறன், பயிற்சி போதுமானது. பக்தி அனைவருக்கும் இருக்கும், ஆனால் தேவாரம், திருவாசகம் அல்லது நாலாயிரத்திவ்விய பிரபந்தம் கலந்து அதனைச் சொல்லக்கூடிய ஒருவர் அக்காலத்தின் அருள்நெறிச் செல்வர் என்ற இடத்தை அடைகிறார். அவர் மக்களின் முன் தெய்வத் திருவுருவாகத் தோன்றி பக்தி என்ற உணர்வை அக்காலத்திற்குரியதாக உறுதி செய்கிறார்.

நவீன இலக்கியக் களத்தில் இதற்கு சில சிக்கல்கள் முன்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சுப்  பொறியின் வழி அறிவுருவாக்கம் புதிய வடிவத்தை அடைந்தபோது இந்தச் சிக்கலை கையாள சில அறிவுசார் குழுக்கள் உருவாயின. வள்ளலார் நவீன தனிமனிதர்கள் கைக்கொள்ளத்தக்க வகையில் இறைமைக் கோட்பாட்டை உருமாற்ற முனைந்த போது புதிய வடிவிலான கோயில், வழிபாட்டு முறை, ஓளிச்சுடர் உருவம், ஜீவகாருண்யம் எனப்பல புத்துருவாக்கங்களைச் செய்கிறார். பத்திரிகையாளர் பாரதி பக்தியை, இறைமையைத் தேசியம், தேசபக்தி, பாரதமாதா என்ற வடிவில் காணவேண்டியிருந்தது.

இந்த இரு நிலைக்கும் புறம்பாக அயோத்திதாசர், பெரியார், பாரதிதாசன் என்ற சிந்தனையாளர்கள் புதிய மொழியமைப்பை, கதையாடல் முறையை உருவாக்கித் தரவேண்டியிருந்தது. சமய மறுப்பு, நவீனச் சிந்தனைகள், நவீன அரசியல்-சமூகம், சமத்துவம், பகுத்தறிவு என்பவை பற்றிப் பேசவும் விளக்கவும் முயன்ற நம் காலத்தின் சிந்தனையாளர்களுக்கு இதுவரை இருந்தவை அனைத்தையும் மறுக்கவும், புதியனவற்றை நிறுவவும் அதிகம் விளக்கம் தர வேண்டிய கடமை இருந்தது.  இவர்கள் உலக வரலாறு, அரசியல், சட்டம், நீதி,  அறிவியல் தொடங்கி உடன் கால வழக்காறுகள் வரை அனைத்தையும் துணையாகக் கொண்டு புராணங்களை, சாதி-சமயக் கட்டுக்கதைகளை, அடிமை உளவியலைக் கட்டமைக்கும் அனைத்து வகையான சொல்லாடல்களையும் மறுத்தும் எதிர்த்தும் பேச வேண்டியிருந்தது.  சாதி ஒழிப்பு, சமத்துவ சமூகம், சமநீதி, பெண்விடுதலை, இனம்-மொழி  அடையாளம், புதிய சமூக நிறுவனங்கள் என அனைத்தையும் உலகின் மாற்றுச் சிந்தனையாளர்கள் வழி அறிந்து தம் சமூகத்திற்குரியதாக மாற்ற முனைந்த இவர்கள் வெறும் கருத்துரைப்பாக  “நான் உணர்ந்த வகையில் இதனைச் சொல்கிறேன், என் கடன் சொல்லி விட்டுச் செல்வதே”  என இருந்து விடமுடியாது. இந்திய அளவில் அம்பேத்கர் இதே போன்ற பெரும் பாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். பழமையால் கட்டமைக்கப்பட்ட அறிவுதளங்களை உடைத்து நீக்கி புதியவற்றை அமைத்துத் தரும் பெரிய உழைப்பை அவர் மேற்கொண்டார். பெரும் தர்க்க அறிவும், வாசிப்பும் இன்றி வேதங்கள் தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் வரை அனைத்தையும் விமர்சிக்கும் பணியை ஒருவர் செய்யமுடியாது.

மேற்சொன்ன மாற்று அறிவுக்கு மறுப்பைச் சொல்ல வந்தவர்கள் கைக்கொண்ட முறை என்ன? வெறும் உள்ளொளி, தெய்வவாக்கு, மனதறியும் மனதின் மொழி என்ற சொல்லாடல்தானே. “இல்லையென்பாரின் மனதிலும் இருக்கும் ஈசனே, இல்லையென்ற சொல்லையும் இயக்கும் நேசனே”  என்று இமைகளை மூடிச் சொல்லிவிட்டால் போதும், “இல்லையென்று சொல்லிச் சொல்லியே உன் பெயரை இத்தனை முறை சொல்லச் செய்கிற எல்லையில் நாதனே என் போதனே புண்ணியா” என்று பாடிவிட்டால் பகுத்தறிவு மயக்கங்கள் பறந்தோடிப் போகும்.

தமிழ் நவீன இலக்கியத்தில் இப்படியொரு இலகுவான அறிவுமறுக்கும் அறிவு மரபு ஒன்று உருவானது. மார்க்சிய-பெரியாரிய, பகுத்தறிவுச் சிந்தனைகளை சிறு கிண்டல் செய்துவிட்டு கடந்து செல்வது, அல்லது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்பது போல மனதின் உள் இடுக்குகள் பற்றிய ஆய்வைச் செய்து உலகுக்கு உரைப்பது என சில குழுக்கள் இயங்கி வந்தன. இடதுசாரி  சிந்தனைகளை ஒரு வரியில் மறுப்பது அல்லது அறைகுறை அ-மார்க்சிய கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுவது, இதுவே போதுமானது, இவர்கள் மார்க்சியம் கடந்த அறிவுஜீவிகளாக மதிக்கப்படுவதற்கு. மார்க்சியம் பேசியவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிராய்ட், யுங் பிறகு ஆல்பர் காம்யு என ஏதாவது பெயரைச் சொல்லித் தப்பிப்பது. இந்த எழுத்தில் இத்தனை சதவிகிதம் வாழ்க்கையிருக்கிறது, இதில் நம்பகத் தன்மையில்லை என்று ஒருவரி சொல்லிவிட்டு தனக்குப் பிடித்த ஒரு நாவலில் நம்பகத்தன்மை எப்படியெல்லாம் பொங்கிவழிகிறது என  ஒன்பது பக்கம் விளக்கம் தருவது… என நவீன இலக்கியத்தில் எத்தனையோ கருத்துரைப்பு உத்திகள் கையாளப்பட்டு வந்துள்ளன. நமது மார்க்சியத் தோழர்களுக்கு மனம், வலி, குழப்பம் என்று ஏதாவது ஒரு சொல் வந்துவிட்டாலே அது அமெரிக்கச் சதிகாரர்களின் அடுத்த கட்ட தாக்குதல் என்று தோன்றிவிடும். இடதுசாரிகளும் வெறும் கருத்துரைப்பு உத்திகளுடன் நிறுத்தாமல் மேற்கோள்கள், வரலாற்றுத் தரவுகளுடன் கூடுதலான கருத்துரைப்பு உத்தியைக் கையாள வேண்டிய அவலநிலைதான் இருந்தது. இதற்கு நடுவில் பின்அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணிய  விளக்கமுறை, பகுப்புமுறை  உத்திகள் மேலைநாடுகளில் இருந்து கொண்டுவந்து தமிழில் வலிந்து புகுத்தப்பட்டன. இதனைச் சான்றோர்கள் சிலர் இப்படித்தான் சொன்னார்கள், சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அறிவு அல்லது தமிழ் அறிவு பொங்கி வழியும் இவர்களில் பலருக்கு “இந்தியா சேரி, ஊர் என  இரண்டாக இருக்கிறது” என்ற அம்பேத்கரின் கருத்தை மேற்கோள் காட்டினாலே அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்தியா என்பது 1950-க்கு பிறகு உருவான ஒரு நாடுதான் என்று அரசியல் சட்டப்படி சொன்னாலே அங்கம் எரிகிறது.

இந்த நிலையில்தான், தற்பொழுது தமிழில் முன்பு போலவே வெறும் கருத்துரைப்பு உத்திகள் கையாளப்படுவதாக நீங்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறீர்கள்.  ஆனால்  இதனையே மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடும் குழுக்கள் அதிக வலிமையடைந்துள்ளன. எதற்கெடுத்தாலும் அரசியல், கருத்துருவாக்கம், பன்முக வாசிப்பு, பெண்ணியம், இனவரைவியல், விளிம்புநிலை  என்று சொல்லித்திரிந்த கூட்டம்  ஒரு வழியாக ஓய்ந்தது, நம்ம ஆட்சிதான் , ஜெயம் நமக்குத்தாங்… என்ற கொண்டாட்டக் கூச்சல் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.  இது மீண்டும்  நிகழ்ந்ததாகவா நினைக்கிறீர்கள்  இதுதான் தொடர்ந்து  நடந்து வருகிறது. இதற்கு  மாற்றான கருத்தியல், கோட்பாட்டுப் போராட்டமும் இருந்து வந்தது.  இந்த மாற்றுக் கருத்தியல் போராட்டம் தற்போது அதிக விளிம்பு நிலை அடைந்துள்ளது.  பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சிறுமரபுக் கதையாடல்கள் என்றவுடன் தமிழில் மார்க்சியத் தளத்தில் இயங்கியவர்களும் முகம் சுருக்கிய நிலையில் மரபுக்காரர்களுக்கு, மௌனமொழி குழுக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் விளிம்பில் தள்ளிவிட இது நல்ல வாய்ப்பு.

இதைக் குறித்து எனது விளக்கத்தை இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன்…

கலை-இலக்கியம் என்பது இறைத்தன்மை, புனிதத் தன்மை கொண்டது அவற்றின் வழியே இறைவனை அடையலாம் என்ற புராணிகப் பார்வை, கலை-இலக்கியம் என்பதே இறைச்செயலும் இறைவனின் விளையாடலும் என்ற இறையின்பக்  கோட்பாட்டுப் பார்வை, கலை-இலக்கியம் என்பன இறையுணர்வுக்கு எதிரான ஒழுக்கக்கேடு என்ற சமயத்துறவுப் பார்வை எனப் பல பார்வைகள் பழைமையின் பகுதிகளாக இருந்து வந்தவை. இந்நிலையில் இலக்கியம், கலை, அழகியல் என்பன உலகத்தன்மை அல்லது தேசியத்தன்மை கொண்டவை என்ற நவீனப்பார்வை மேற்கு மையத்தன்மையுடன் நம்மை வந்தடைந்தது. இந்தப் பார்வை இறைநீக்கம் கொண்டதாகவும் மனிதமையத் தன்மை கொண்டதாகவும் தோற்றம் தந்தாலும் படைப்பு என்பதை ஒற்றைத்தன்மை உடையதாக விளக்கிப் படைப்பு மையத்தன்மை ஒன்றை உருவாக்கியிருந்தது, அதன் மூலம் பக்திசார்ந்த ஒரு அழுத்தம் இதற்குள் இன்றும் இருந்து வருகிறது.

படைப்பு-படைப்பாளி என்ற இணைப்பு உலகஒருமை, ஓருலகத் தன்மை கொண்டதாக விளக்கப்படும் பொழுதே சிறுமரபுகள்-குழுமரபுகள், இனமரபுகள், தாய்மண்மரபுகள், பெண்மொழி, கிளைமொழிக் கதையாடல்கள் மறுக்கப்பட்டவைகளாக, ஒதுக்கப் பட்டவைகளாக, மதிப்பற்றவைகளாக மாற்றப்பட்டு விடுகின்றன. இந்த ஒதுக்குதலுக்கு, அடையாள அழிப்புக்கு எதிரான போராட்டமே பன்மைக் கதையாடல், சிறுமரபு, விளிம்புநிலைக் கதையாடல்களுக்கான செயல்பாடுகள். தேசிய இலக்கியம், தேசியக் கவிஞர்கள், உலகமகா இலக்கியப் படைப்புகள், உலக இலக்கிய வரிசை என்ற கொடுவன்முறைகள் இலக்கியப் பார்வை என்ற பெயரில் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுவருகின்றன. இவை முதலீட்டிய, அரசியல் ஏகாதிபத்தியம்  போல பண்பாட்டியல் ஏகாதிபத்திய வன்முறை.

வெள்ளைமையவாதம், இனவெறி, ஆண்பாலினத் திமிர், ஒற்றை மனிதவாதம் போன்ற மனிதப்பன்மை மறுப்புத் திட்டங்கள் இவற்றின் உள்ளடக்கமாக இருக்கின்றன. இந்திய இலக்கியம் என்ற ஒன்று எப்படி வன்முறையான கட்டமைப்போ அப்படியே தமிழிலக்கியம், மலையாள இலக்கியம்  என்பது போன்ற ஒற்றை அடையாடளமும் வன்முறைக் கட்டமைப்புகளே.

தமிழில் இந்த வன்முறைக் கட்டமைப்பைத் தகர்க்க முயற்சி நடந்து அதற்கான கருத்தியல் தளமும் விளக்கப்பட்டுள்ளது. இதன் பன்மை அரசியல், மாற்று அரசியலின் ஆற்றல் என்ன என்பதைப் புரிந்து கொண்ட ஊடகப் பண்பாட்டு பெருநிறுவனங்கள் இதற்கெதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

பேரிலக்கியம், செவ்வியல் படைப்புகள், இலக்கிய ஞானிகள், (இசைஞானிபோல) இலக்கிய ஆளுமைகள் என்பதான மக்கள் மறுப்புக் கதையாடலை மீண்டும் பெரும் முதலீட்டுடன் மறுஉருப்பெருக்கம் செய்யத் தொடங்கின.  ஊடகப் பெருக்கமும், கணினி அச்சுத் தொழில் நுட்பமும் அதற்குத் துணையாக இருந்தது. ஒவ்வொரு வகைக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மூவர் முதலிகள் மரபைத் தொடர்ந்தனர். ஒருவர் ஒரு ஆண்டில் வெளியேற்றும் ஒன்பது நூல்களை ஒரே மேடையில் ஒன்பது பேரை வைத்து பிரதிஷ்டை செய்வது பெருமையாகப் பேசப்படுகிறது.  இலக்கிய கும்பாபிஷேக, குடமுழுக்கு விழாக்களை நடத்திப் புண்ணியம் தேடும் இலக்கிய அறங்காவலர்கள் இப்படித்தான் உருவாகி வந்தனர். நகைக்கடை, துணிக் கடை, வைரநகை விற்பனையாளர்கள் சிலர் மேடையில் தோன்றி “எனக்குத் தெரிந்து இப்படி ஒரு நூலை இதுவரை யாரும் எழுதியதில்லை” என்றோ, இது ஒரு  தமிழ்  சாதனை, தமிழில் என்ன இந்திய அளவில், ஏன் உலக அளவில் இது ஒரு சாதனை” என்றுகூறி திரைப்படத் தொழில் செய்யும் ஒருவரின் கையில் புத்தகத்தை ஒப்படைத்து உலக்கை நாயகர்களை உருவாக்கும் தொடர் முயற்சிகள் நடக்கத்தொடங்கின.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்  என்றோ கல்கி, கண்ணதாசன், பாலகுமாரன், என்றோ எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா என்றோ முப்பெரும்தேவர், மூவேந்தர், மூவர் முதலிகள், மரபுகளை நவீன- பின்நவீனத் தளத்தில் பெருக்கத் தொடங்கினர் பண்பாட்டுச் சந்தை முகவர்கள்.  இது பக்தி மரபின் இன்றைய வடிவம், மூவர் முதலிகளை உருவாக்கி விட்டால் அவர்களுக்கான பக்தர் குழாம் வழி அறிவுக்கேடான கருத்தியல்களை உருவாக்குவது எளிது. ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்த கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் இல்லையா?

ஒரு தனிமனிதரை எழுத்தாளராக உருவாக்க வேண்டும், பிறகு அவரைத் தனிப்பெரும் எழுத்தாளர் என நிருவிக்காட்ட வேண்டும், அவரே நம்காலத்தின் நாயகன், அவருடைய மேதைமை தன்னிகரில்லாதது என மேடைகளில் முழங்க வேண்டும், இவரது எழுத்துக்கள் மட்டுமே நம் காலத்தின் சாதனை எனக் கூச்சலைப் பெருக்க வேண்டும்,  இந்த நூற்றாண்டின் 10 நூல்களின் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை செதுக்கியெடுத்து அதில் தமக்குத் தேவைப்பட்ட ஒருவரின்  5 நூல்களை ஆணியடித்துப் பொருத்திவிட வேண்டும். இப்பொழுது இவரே நம் காலத்தின், நம் சமூகத்தின் அனைத்து இன்ப, துன்பங்களையும் வரையறுக்கும் வல்லமை கொண்டவர். இனி அனைத்தைப் பற்றியும் இவர்களிடம் கருத்துக்கேட்டு பதிவுசெய்து தமிழ்ச்சமூகத்தின் தலைவிதியை, வரலாற்றைத் தொகுக்க வேண்டியதுதான். தமிழ் வழிக்கல்வி தொடங்கி தமிழினப் படுகொலைவரை, பெண்ணெழுத்து எப்படியிருக்க வேண்டும் என்பது முதல் சமண முனிவர்கள் பக்தி அரசியல்போரின் போது கழுவேற்றப்பட்டார்களா இல்லை அவர்களே கழுவில் ஏறி தம்மை மாய்த்துக் கொண்டார்களா என்பது வரை இவர்களின் கருத்துக்களே வரலாறாக அமையும்.

ஜெயகாந்தன் இதற்குத் திடமான ஒரு உதாரணம். இவர் தமிழின் பல கதைசொல்லிகளில் ஒருவர். நவீன சமூகத்தில் மரபான மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல், உளவியல், உறவுசார் சிக்கல்களைக் கண்டும் கேட்டும் புனைவு வடிவில் தந்திருப்பவர்தான், சரி. இவரின் புனைவுகள் சமூக நிகழ்வியலின் ஒரு கட்டப் பதிவு என்பதை இலக்கிய அறிவியல் வகையில் ஏற்க வேண்டும். ஆனால் வரலாறு, தமிழ்ச்சமூகம், தமிழ் அடையாளம், மையத்தேசியம் என்பவைபற்றி இவர் அளித்துள்ள கருத்தமைவுகள் சங்கரமட நவீனத்துவம் மட்டுமே.  இவர் கட்டிய பல கருத்துருவ மாதிரிகள் அறியாமையை அடிப்படையாகக் கொண்டவை,  நவீன உளவியலுக்கு எதிரானவை. உண்மையான இடதுசாரிச் சிந்தனைகள் தமிழிலக்கிய-பண்பாட்டுப் பரப்பில் வலிமையாகப் படிந்துவிடக்கூடாது என்பதற்காக அன்றைய அச்சு ஊடகங்களால் திட்டமிட்டப் பெருக்கப்பட்ட பிம்பமாக மாறிய அவர் அவர்களுக்கான சேவையை அளவுக்கதிமாகவே செய்திருக்கிறார். குருபீடம், ஞானபீடம் என்ற உருவாக்கங்கள் அறிவு இயக்கத்தில் அழிவு சக்திகளாவே செயல்படும் என்பதற்கு இந்த ஜெயஜெய சங்கர. ஹரஹர சங்கர புரட்சிக் கனலே தெளிவான எடுத்துக்காட்டு.  ஒரு இலக்கிய மாணவனாக நான் ஜெயகாந்தனின் ஒவ்வொரு எழுத்தையும் எழுத்தெண்ணிப் படித்தவன். ஒரு பத்து ஆண்டுகள் அவர் புதுவையில் எந்த மேடையில் பேசினாலும் உடல் நலமில்லாத நிலையில்கூட ஓடிச்சென்று ஒரு மூலையில் இருந்து கேட்டு வளர்ந்தவன்.  “சில நேரங்களில் சில மனிதர்கள்” படித்து  ‘ஆங்கிலம்’ கற்ற பலரில் நானும் ஒருவன். இன்றுகூட அவருடைய குறுநாவல்களைப் படித்தபின் நவீன இலக்கியம் பற்றிப் பேசுங்கள் என இலக்கிய மாணவர்களுக்குச் சொல்லுவேன்.  ஆனால் … தன் புனைவுகளில் சில மனித வகைமைகளை மதித்துப் புரிந்து கொள்வதற்கான குரலைப் பதிவு செய்துள்ள ஜெயகாந்தன் போன்ற ஒருவர் தன் கருத்தியல் கதையாடல்களில் அதிகாரமையத்தன்மை கொண்ட, புனிதப்பழமையின் தூதுவராகச் செயல்படுவதன் எந்திரவியலைப் புரிந்து கொண்டால் இலக்கிய பக்தி, அறிவுலக அடைக்கல வாதம் என்பவற்றில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம்.

ஆனால் இந்த விடுதலைப் பார்வை ஊடக-பண்பாட்டு அரசியல் நிறுவனங்களுக்கு அச்சமூட்டக் கூடியதாக இருக்கும். அதனால் ஒரு ஜெயகாந்தன் சோர்ந்து    போய் செயல்பட முடியாத நிலையில் இன்னொரு ஜெயமோகன் உருவாக்கப்படுவார். இவர் ஜெயகாந்தனைவிடப் பலமடங்கு மேதைமை கொண்டவர் என்றும் பார் போற்றும் படிப்பாளர் என்றும் திக்குகள் எட்டும் சிதற ஜெயபேரிகை கொட்டிவிட்டால் கருத்துருவாக்க வேலை மிக எளிதாகிவிடும். இன்று இந்த விஷயத்தில் பேசிக்கொண்டிருக்கும் எவரின் குரலுடனும் சேர்ந்தது அல்ல என் குரல். இது இந்தக் காலகட்டத்தின் முதன்மை படைப்பிலக்கியவாதியின் குரல். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் காலத்தில் மறைந்தபின்னும் எஞ்சும் குரல் இது. என் ஆசான் ஜெயகாந்தன் இதைவிட வெறுப்பு அனலடித்த காலகட்டத்தில் சிங்கம் போல மேடையேறி நின்று முழங்கிய கருத்துக்கள்தான் இவை.”  இந்த தனிப்பெரும் குரல் உருவாக்கம் மாற்றம் மறுக்கும் அரசியல் இயந்திரங்களுக்கு மிகத்தேவையான ஒன்று. கண்ணதாசன் இதைவிட தனிப்பெருங்குரலில் இந்து மதத்திற்கு அர்த்தம் கண்டு கூறியது நமக்குத் தெரியும்.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை, நடக்கவேயில்லை என்பதை சுப்பிரமணிய சுவாமி சொன்னால் நம்பத் தயங்குபவர்கள்கூட ஜெ.மோ தனிப்பெரும் குரலில் ஞானச் செருக்குடன் சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும். பெயர் சொல்ல விரும்பாத தன் நண்பர் ஒருவருடன் நேரில் சென்று பார்த்து, இந்திய ஞானமரபின் அனைத்து மகான்களையும் அணுகி ஐயம்தீர்த்து இவர் சொல்லும்போது தமிழ்ப் பெண்கள் தான் சிங்கள ராணுவத்தினரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர் என்ற உலகுக்குத் தெரியாத உண்மையையை யாரால் மறுக்க முடியும்  பெண்ணெழுத்தை, பெண்ணியத்தை தன் சுட்டுவிரலால்  தூக்கியெறிய  இவர் இருக்கும்வரை பெண்ணியச் சதித்திட்டங்களைப் பற்றி தமிழின் அறிவுலகம் கவலைப்படத் தேவையில்லைதானே? அருந்ததி ராய் போன்ற “அமெரிக்க கைக்கூலிகள்” இந்தியத் தாயின் புனிதத்தைத் குலைக்கவும் எல்லைப்பகுதியில் வன்முறைகளைத் தூண்டவும் செய்யும் தொடர் முயற்சிகளை இவரைத் தவிர வேறு யார் இவ்வளவு சான்றுகளுடன் அம்பலப்படுத்த முடியும்?  இந்தியாவில் வெறுப்பு அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள் இந்து மகாசபையினரோ, ராஷ்டிரிய சுயம்சேவை வீரர்களோ, பாரதிய ஜனதா கட்சி-பஜ்ரங்க தளச் செயல் மறவர்களோ இல்லை பெரியார், அம்பேத்கர் போன்ற ஆயுதம் ஏந்திய ஆன்மிகமற்றத் தலைவர்கள்தான் என்பதை இது போன்ற வரலாற்று ஞானத்துடன் வேறு யார் தமிழ் இளைஞர்களுக்குச் சொல்லித்தர முடியும்? தமிழ்ப் பிராமண அன்பர்கள் தீண்டாமைக்கு உட்பட்டுத் திக்குத் தெரியாமல் தவித்து வரும் பெருங்கொடுமையை இவ்வளவு அறச்சீற்றத்துடன் வெறுப்பு அரசியலின் விஷம் துளிகூட இல்லாமல் உலகுக்கு வேறு யாரால் அறிவிக்க முடியும்…

இப்படித்தான் தொடர்கிறது இந்த இலக்கிய மேதைகள், உலகத்தர எழுத்தாளர்கள் என்ற ஊடக உருவாக்கத்தின் அரசியல்… இதற்கு ஒருவர் மட்டும் போதாது இன்னும் இருவர் அவசியம். அந்தந்த இடத்திற்கேற்ப மூவர், ஐவர் என வரிசைகள் மாறலாம், ஆனால் இந்த ஆளுமை பெருக்கக் கதையாடல் வன்முறையின் வரலாற்றுத் தடம் இதுதான்.

பெருந்தலைவர்கள், வரலாற்று நாயகர், மகாத்மாக்கள் உருவாக்கப்படுவது அரசியல் வன்முறைகளை, வரலாற்று சதிகளை மறைக்க, திரிபுக் கருத்துகளை நியாயப்படுத்தப் பயன்படுவது போல கலை-இலக்கியத்தில் பேரிலக்கிய ஆளுமை பற்றிய கதையாடல் பழமைகளை மீளுருவாக்கம் செய்ய, அரசு-அடிமைகள் உளவியல் கட்டமைப்பைத் தொடரப் பயன்படுவது. தெய்வத்தின் குரலும்   சிங்கத்தின் குரலும் இணைந்து முழங்கும் இவர்கள் மீது வெறுப்பு அனலடிக்கிறதாம், எது இந்த அனல்? அந்த அந்த காலத்தின் அறிவரசியல் மாற்றுக் குரல்களைத்தான் இவர்கள் வெறுப்பு அனல் என்கிறார்கள். இந்த அனல் முறையாகத் தேவையான அளவுக்கு அடிக்காததால்தான் பிற்போக்கு பிணாத்தல்கள் தமிழின் அடையாளமாக மாற்றப்படுகின்றன.

ஆளுமை மையவாதம் அறிவுருவாக்கத்திற்கு, அரசியல் தன்னுருவாக்கத்திற்கு எதிரான அழிவுத்திட்டம்.  இலக்கியம்,  திரைப்படம், ஊடகக்கதையாடல்கள் என அறிவழிப்பு அதிகார மையங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது தொடுத்துள்ள அழகியல்-உளவியல் போர் இது. இந்தப் போர் உயிரியல் ஆயுதங்கள் வழி நடத்தப்படும் உருமறைந்த தாக்குதலாக தொடர்ந்து நிகழ்கிறது… தமிழில் இதனை எதிர்த்து கருத்தியல், அறிவுக்களங்களில் பெரும்போராட்டம் நடக்க வேண்டும். வாசிப்பின் அரசியல், வாசிப்பின் அறிவியல் வழிவாக விரிவடைய வேண்டும்.

மக்கள் அரசியலை மறுக்கும் ஒரு குழுவினரால் உருவாக்கப்படும் உத்திதான் ஒரே மேடையில் ஒரு நூறு நூல்களின் விழா என்ற கேளிக்கைக் கொண்டாட்டம். இந்தப் பெருங்கட்டமைப்புத் தந்திரத்தின் முகவர்களாக  இயங்கும் பல பதிப்பகங்கள்… எல்லா பத்திரிகை நிறுவனங்களும் ஒரு இலக்கிய இதழை, இணைப்பைத் தொடங்கியுள்ளன… இந்து தமிழில் வந்துவிட்டால் இரண்டாவது கருத்து இருக்கமுடியுமா என்ன? இப்படித்தான் நீள்கிறது அரசியல் நீக்கச் சொல்லாடல்.   இன்றைய இளைஞர்களின் அறியாமையின் மீது கட்டப்பட்டுள்ளது ஊடகங்கள் கொண்டாடும் இலக்கிய மகான்களின் குருபீடம்…

சில இளைய வாசகர்கள், சில ஆய்வு மாணவர்கள் ஒரு கலந்துரையாடலின் பொழுது   என்னிடம் கேட்டனர், கலக இலக்கியம், பாலரசியல் பற்றியெல்லாம் நீங்கள் தான் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள், ஆனால் அந்த “ஒரு எழுத்தாளரின்” கலக எழுதுக்களை நீங்கள் படிப்பதில்லை எனக் குறிப்பிடுகிறீர்கள் என்ன காரணம்? நான் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சுவாமி நித்தியானந்தரின் கலக அரசிலை கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை இதற்கு எங்கு நேரம் கிடைக்கப்போகிறது என்று சொன்னேன். எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியன்களும் நாவலை நீங்கள்தான் கலகத்தை முன்வைக்கும் பிரதி என்று முன்னுரை எழுதினீர்கள் அதை இப்போது மறுக்கிறீர்களா? நீங்கள் கலகம் என்று சொல்லும் போது ஏற்பதும், இல்லை என்றால் அதை மறுப்பதும்தான்  வாசகர்களான எங்கள் வேலையா? அவர்கள் கேள்வியில் நியாயம் உண்டு, படித்த பிள்ளைகள் இல்லையா. கலகத்தை முன்வைக்கும் போது முன்வைப்பதாகவும் அதனைப் பின்வைக்கும் போது பின்வைப்பதாகவும் சொல்லத்தான் வேண்டும். அவர் பின்வைத்த கலகம் தினமல… மன்னிக்க தினமலர் பத்திரிகையின் வழி உருவாக்கப்பட்டது. அதனை இப்போது நான் முன்வைக்க வேண்டிய தேவை இல்லைதானே?” என்று சற்றே எரிச்சலுடன் பதில் சொன்னேன். அவர்களிடம் என் முன்னுரையின் கடைசி வாக்கியத்தைப் படியுங்கள் “இந்தப் பிரதியில் கலகம் எந்த அளவுக்குச் சாத்தியப்பட்டுள்ளது என்பது வாசிப்பின் வழி தெரியவரும்” என்பது போல ஒன்றைச் சொல்லியிருப்பேன் என்றும் நினைவு படுத்தினேன்.

ஆனால் அவர்களுக்கு விளக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு. பாலரசியலை எழுதுவது என்றால் பாலியல் குற்றங்களை விதந்தோதுவதும், பெண்ணிலையின் மீதான கருத்தியல் வன் கொடுமையை  கவிதையியல் எனக் கொண்டாடுவதும் இல்லை. மேல்நிலைப்படுத்தப்பட்டதை கீழறக்கம் செய்வது கலகம், அடக்கப்பட்டவர்களை அவமதித்து எழுதுவது வன்முறை. பாலியலின் சிக்கல்களை, அதன் அரசியலை கதைப்படுத்துவது என்றால் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையை அழகியல் என்று நிறுவும் ஒரு எழுத்து  மனித உரிமைக் கெதிரான குற்றம் என்று  உங்களுக்குத் தோன்றவில்லையா?

அப்படியென்றால் அரசியல் பற்றி மட்டும்தான் எழுதவேண்டுமா?  என்ற அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில் இதுதான். அரசியல் மட்டுமே அனைத்துமாக இருக்கும் ஒரு சமூகத்தில் அரசியல் மறுத்து எழுதுங்கள்… அரசியல் அற்ற ஒரு சமூகத்தில் அரசியல் பற்றியே எழுதுங்கள்.  உங்கள் அரசியல்தான் உங்களுக்கான அழகியல், உங்கள் அழகியல்தான் உங்கள் அறம்… உங்கள் அறம்தான் நீங்களும் உங்கள் சமூகமும்…

கலை இலக்கியங்களின் மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதற்கு அல்லது தொடர்வதற்குக் காரணம் தற்போது விளங்கும்தானே. அரசியல் நீக்க  வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், இவைதான் தற்கால அடையாளம் அற்ற சமூகத்தை உருவாக்க  அடிப்படைத் தேவைகள். செவ்வியல் பெருமை பேசியோ, புராதனப் புகழ் பேசியோ நிகழ்த்திக்காட்ட முடியாத அறிவு, அடையாள அழிப்பை அரசியல் நீக்க வாசிப்புகள் வழி நிகழ்த்த முடியும்.

உரையாடல்: 3: 1

உரையாடல்: 3 : 2 

பன்மெய்களும் பன்மைகளும் பேசப்பட

பன்மெய்களும் பன்மைகளும் பேசப்பட

பன்மெய் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்டு அறியும் படிநிலை அமைப்பைக் காப்பதற்கான பத்திரிகை அல்ல. பல்வேறு போக்குகளும் நோக்குகளும் பாய்ந்தும் வெட்டியும் செல்லும் பன்முகப்பட்ட குரல்களின் உரையாடல் வெளி.

உண்மைகள் பலவாக உள்ளன என்பதைச் சொல்வது மட்டுமல்ல, உண்மைக்கு உள்ள பன்முகத்தன்மையையும் உண்மைகள் உருவாக்கப்படுவதன் பன்மையான வழிமுறைகளையும் உரையாடலுக்கு உட்படுத்துவது  இதன் நோக்கம்.

அறிவின் பல்வேறு சாத்தியங்களை முடக்கி தனக்கானதாகக் கையகப்படுத்திக் கொண்டுள்ள ஆதிக்கத் தன்மை கொண்ட பால், நிறம், இனம், வர்க்கம், தேசியம், சர்வதேசியம், பிராந்தியம், சாதி, மதம் என்பனவற்றிலிருந்து அறிவையும் சிந்தனையையும் விடுவிப்பதற்கான பன்முகப்பட்ட உரையாடல்களை உருவாக்குவதற்கான மற்றொரு தளமே பன்மெய்.

தனது அறிவை மட்டும் மையப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் மற்றவற்றின் மீது வன்முறையை செலுத்துவதன் வரலாற்றை நினைவு கொண்டபடி ஒவ்வொரு அறிவும் தன்னை விளக்குவதற்கான தேவையை அடையாளம் காண இந்த மொழிவெளியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலை நோக்கிய முனைப்பும் விடுதலைக்   கான மொழியும் சாத்தியப்படும் தளம்தான் மாற்று அறிவு என  ஏற்றுக் கொண்டவர்களுக்கிடையிலான உரையாடலாகவே இவை அமையும் என்பதை நாம் மறைக்கத் தேவையில்லை. முரண்களுக்கு இடையில் உள்ள போராட்டத்தை ஏற்றுக்கொள்வதுடன் வேறுபாடுகளுக்கு இடையில் உரையாடல்களும், இணக்கமும், இணையான பரிமாற்றமும் அமையும் என்பது பன்மை நவீனத்துவத்தின் பொதுப்புரிதலாக அமைவதால் மாறுபட்ட கேள்விகளுடன் நம் காலத்திற்கான அரசியலை அணுக நாம் தயங்கத் தேவையில்லை.

தலித் அரசியல், பெண்ணிய அரசியல், சிறுபான்மை அரசியல், பன்மை அடையாள அரசியல், சூழலியல் அரசியல் என்பவற்றை ஏற்ற விடுதலைக் கருத்தியலின் தேவையைத் தொடர்ந்து நாம் பேச இருக்கிறோம்.

அடக்குமுறைக்கு எத்தனை வடிவங்கள் உள்ளனவோ அதைப்போல விடுதலைக்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன, விடுதலைக்கான அறிவும் மொழியும் வேறுபட்ட வடிவங்களை, இயக்க முறைகளைக் கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்கும் போது ‘பன்மெய்’ அரசியலின் தளங்கள் விரிவடைகின்றன.

உலக முதலாளியம், போர்வெறி அறிவியல், புவிச்சூழல் அழிக்கும் நுகர்வுப் பொருளாதாரம், இன, மொழி, மத தன்னாட்சி உரிமைகளை மறுக்கும் உலக வல்லாண்மை, அச்சுறுத்தும் ஆயதமைய அரசியல் என நம் காலத்தின் பெருங்கேடுகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி அவற்றை எதிர்த்து உயிர்வாழ்ச் சூழலுக்கான அரசியல் சொல்லாடல்களை, செயல்பாடுகளை உருவாக்க வேண்டியது விடுதலைக்கான அறிவுசார்  செயல் பாட்டின் தேவையாக உள்ளது.

அத் தேவையை ஏற்ற விடுதலைக் கருத்தியல்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட பார்வைகளை, விளக்க முறைகளை, தீர்வுகளைக் கொண்டிருந்தாலும் தமக்குள் உரையாடலை, ஒப்பீட்டு அறிதலை அனுமதித்து வளர்த்துக் கொள்வதன் வழியாகவே இனி தம்மை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். இவை நீண்ட காலத் திட்டங்களையும் நீடித்த அரசியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது என்பதை ஏற்றுக் கொள்வதன் வழியாகப் பன்மெய் தனது எளிய பக்கங்களை அதற்கு வழங்க இருக்கிறது.

விடுதலைக் கருத்தியல்களை ஏற்கும் அனைவரும் உரையாடலைத் தொடங்கவும், தொடரவும், இடையீடு செய்யவும், சரி பார்க்கவும், திருத்தங்கள்  வழங்கவும் என இதன் பக்கங்கள் திறக்கப்படு கின்றன. பன்மெய் சொல்லாடல்கள், செயல்பாடுகள் மற்றும் மாற்று அறிவுருவாக்கங்  களுக்கானது நமது தளம். மாறுபடுதலுக்கான உரிமையை தொடர்ந்து  வலியுறுத்தும் மற்றொரு களம்.