உரையாடல்:2
மாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும்
கேள்வி
தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் தமிழ் அறிவுலகச் சூழலில் இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல் குறித்து அதுவரை இருந்துவந்த பார்வைகளில் இடையீடு செய்து சில மாற்றுப் பார்வைகளை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர், அதன் பிறகு தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
[ ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்
பிரேம்
மாற்றுப்பார்வைகளை முன் வைத்து வருவதுடன் மாறுதல்கால பயங்கரங்கள் பற்றியும் பேசி வருபவன் என்ற வகையில் நான் எனது மாறுதல் விரும்பும் வாழ்க்கையினூடாகவே இதனை விளக்க முயற்சிக்கிறேன். 2009 ஆண்டு ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு முன் இது போன்றதொரு கேள்விக்கு எளிதாக நான் பதில் கூறியிருப்பேன். இடையீடுகள் செய்ய இயலாத பலமடைந்த ஒரு கருத்தியல் பயங்கரவாதம் உருவாகிப் பரவிவரும் ஒரு காலகட்டத்தில் என்னைப் பற்றிய பேச்சினூடக இதனை விளக்கவும் விளங்கிக்கொள்ளவும் முயற்சிக்கிறேன்.
தொண்ணூறுகளின் தொடக்கம், எழுபதுகள் எண்பதுகளின் கடினமான காலகட்டத்தின் தொடர்ச்சி… உலகின் இருமுனை ஆதிக்கங்களாகவும், போர்மைய அரசுகளாகவும் இருந்த அமெரிக்க-ரஷ்ய வல்லாண்மைகள் உலக அளவிலான மக்கள் தொகுதிகளின் அடிப்படையான, எளிய வாழ்வியல் தேவைகளைக்கூட தம் அடக்குமுறைகளின் வழியாகப் பெருங்கனவுகளாக மாற்றியிருந்தன.
குடிநீர் தேவைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி உயிர்விட வேண்டிய நிலையில் மக்கள் வைக்கப்பட்டிருந்தனர். தம் தாய்மொழியில் கல்வி கற்கவும் கையெழுத்திடவும் உரிமை கேட்ட மக்கள் தற்கொலைப் படையினராக மாறவேண்டிய அளவுக்கு மிகக்கொடூரமாக அரசுகள் நடந்து கொண்டன. மாற்றங்களுக்கான கனவுகள், விடுதலைக்கான ஏக்கங்கள் அதுவரை பெற்றிருந்த தளத்தினை இழந்து சிதறிய நிலையை அடைந்திருந்தன. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் கூட போர் அமைப்புகளாக மாறவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ரஷ்ய-ஸ்டாலினிய வன்கொடுமைகள்தான் புரட்சிகர அமைப்புகளின் அடையாளமாக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின் மார்சிய, விடுதலை அரசியல் என்பதும் அழிவு அரசியலின் வடிவமாகத் திரண்டிருந்தது.
புரட்சி-எதிர்ப்புரட்சி இரண்டுமே ரஷ்ய-அமெரிக்க ஆயுதச் சந்தை நிலவரம் சார்ந்ததாக, போர்ச்சந்தை சதித்திட்டங்களாக மாறியிருந்தபோது மக்கள் அரசியல், மக்கள் அடையாளம், மக்கள் வரலாறு பற்றிய அடிப்படையான கேள்விகள்கூட சிக்கலானதாக மாறியிருந்தன. பொறுப்பான ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் இந்த நிலையை எதிர்கொள்வது, கைக்கொள்வது மட்டும் அல்ல இதன் தொடர்ச்சியாகச் சிந்திப்பதும்கூட மிகக்கடினமான நிலை. ரஷ்யா உடைந்தது ஏன், கம்யூனிசம் தோற்றுப்போனதா எனத் தொடர்விவாதங்களை நடத்தி அமைதி அடைந்துவிடக்கூடிய நிலையில் ஒரு மார்க்சியர் இருக்க முடியாது.
அமெரிக்க வன்கொடுமைகளுக்கு இணையாக ரஷ்ய வன்கொடுமைகள் உலகைச் சிதைத்துக் கொண்டிருந்த போதும், சோவியத் ரஷ்யா பல தேசங்களாகப் பிரிந்து சென்றாலும் அமெரிக்க ஒன்றியம், அய்ரோப்பிய ஒன்றியம் என்பவை வலுவடைந்தபோதும் உலகில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல கட்சி-சித்தாந்தம் எனப் பேசியபடி கொடிவழியாக நடந்து செல்வதற்கு அறியாமை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாற்றம், வளர்ச்சி, புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள், மனித உரிமை, போர்-அமைதி, நவீன வாழ்வு என அனைத்தும் வெள்ளைமைய, அய்ரோப்பியமையத் தன்மை கொண்டவைகளாக இருந்து வருவதைப் புரிந்து கொள்ளாமல் நாம் சென்று கொண்டே இருக்க முடியாது.
எழுபது-எண்பதுகளில் தமிழில் அரசியல் மிகச்சிக்கலான இரண்டு தளங்களை அடைந்திருந்தது. ஒரு தளத்தில் “அரசியல்” அதிகம் பேசப்பட்டு அரசியல் நீக்கம் நிகழ்த்தப்பட்டது. திராவிட, சுயமரியாதை, தமிழ் அரசியல் இடதுசாரி அரசியலின் இடத்தை எடுத்துக்கொண்டது. தேசிய அரசியலின் இறுக்கம் குறைந்து அடையாள அரசியல் முன்வைக்கப்பட்டது, ஆனால் கொள்கை, கோட்பாடு, கருத்தியல் என்பவை பொருளற்றவைகளாக, பேசத்தகாதவைகளாக மாறியிருந்தன. இந்திய அளவில் காந்தி, நேரு, இந்திரா என்ற பெயர்களில் சமூகமும் அரசியலும் வரலாறும் அடக்கப்பட்டது போலத் தமிழில் பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயர்களுக்குள் அனைத்தும் அடக்கப்பட்டிருந்தன. புரட்சித்தலைவர் என்ற ஒற்றைப் பெயரும் அத்தனிமனிதரின் பொன்மனமும் தமிழர்களின் மொத்த வாழ்வையும் வளத்தையும் நிர்ணயிப்பதாக இருக்க முடியும் என்பது மிகப்பெரும் அவலம் மட்டுமல்ல வரலாற்று வன்முறை, அடிமைச் சமூக, அழிவு உளவியல். தமிழ்ச்சமூகம் முழுமையும் தட்டேந்திக்கொண்டு அய்யா, அம்மா என்று அழுதபடி நீண்ட வரிசையில் நிற்பது போன்ற ஒரு நிகழ்வியல் படிமம் உருவாக்கப்பட்டது இந்த காலத்தில்தான். இந்த காலகட்டத்தில் இடதுசாரி, மக்கள் அரசியல் தமிழகத்தின் மறதியாக, மனச்சிதைவுப் புலம்பலாகத்தான் இருந்தது. மக்கள் போராட்டம் சார்ந்த செயல்பாடுகள் ஆயுதம் கொண்டும், கொடும் அடக்குமுறை கொண்டும் அழித்தொழிக்கப்பட்டன, அல்லது குலைக்கப்பட்டன. புரட்சிகர உளவியல் இந்திய அரசியலில் உருவாகி விடாமல் இருப்பதில் அமெரிக்கா-ரஷ்யா இரண்டும் மிகக் கவனமாக இருந்தன. இரண்டு வல்லாண்மை அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களையும் திட்டங்களையும் வழங்கி இந்திய அரசியலைத் தம் விரல் அசைவில் இயக்கும் இயந்திர இணைப்பை உருவாக்கியிருந்தன.
இரண்டாவது தளத்தில் தமிழ் அரசியல் பேச்சுக்கு இடம் அளிக்காத ஆயுதக் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. நான் இதனை மாறுதல் கால பயங்கரங்கள் என்று விளக்க முயற்சித்திருக்கிறேன். 1975 க்குப் பிறகான தமிழ்ச்சமூகம் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது வரலாற்றுத் தடுமாற்றமும் பெருங்குழப்பமும் மிஞ்சுவதுடன் நம் காலத்திய பெருந்துன்பியல் நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் மிஞ்சியிருக்கிறோம் என்பதும் உடனே நம்மைத் தாக்கும். 1977 ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் இலங்கையில் தமிழ்ச் சமூகம் அடைந்த துயரம் தமிழ் நாடு முழுக்க உணரப்பட்டது. 1981 ஜூன் யாழ் நூலக எரிப்பு அரசியல் அறிந்த இளைஞர்களைக் கொந்தளிக்க வைத்தது, 1983 ஜூலை தமிழினப் படுகொலைகள் தமிழர்களின் அரசியல் உணர்வை விடுதலைப் போருக்கான நிதிதரும் திட்டமாக மாற்றியது. அதற்குப் பிறகு தமிழகத்தின் தினசரி அரசியலாக மாறியிருந்த ஈரோஸ், இபிஆர்எல்எஃப், எல்டிடிஇ, டெலொ மற்றும் உருவாகிக் கொண்டிருந்த தமிழ் ஈழம் என்ற ஒரு தனிநாடு அனைத்தும் நம் காலத்திய உளவியல் கூறுகளாக, உணர்வுத் தளங்களாக மாறியிருந்தன. ஆயுதம் ஏந்திய புரட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்த அரசியல் தனிமனிதர்களின் அறைகளில் ஆயுதங்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. தமிழகச் சட்ட மன்றத்தில் தனி ஈழத் தமிழ்நாடு பற்றிய தீர்மானம், இந்தியப் பிரதமர் ஆதரவுடன் தமிழகம் எங்கும் போராளி முகாம்கள். புரட்சிக்கும் போருக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருந்த அரசியல் கருத்தியல் களம் நம் காலத்திய தமிழ் அரசியல் இனி மேடைப் பேச்சுகளால், உரையாடல்களால் மட்டும் தீர்மானிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து மாறிவிட்டது என்பதை கவனத்தில் கொள்ளத் தவறியது. ஆனால் 1987-1991 காலகட்டத் துயரங்கள், இந்திய அமைதி காக்கும் படை தொடங்கி வைத்த அமைதியற்ற காலத்தின் கண்ணீர், இயக்கங்கள் தமக்குள் நிகழ்த்திக் கொண்ட படுகொலைகள், சிந்திப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து தப்பிப்பதற்கான உளவியல் உருவான ஒரு காலகட்டம். விடுதலை இயக்கங்களைப் சமமாகப் பார்த்து வந்த எனக்கு விடுதலைப்புலி அரசியல் துயரமாகத்தான் இருந்தது. தமிழீழம், தமிழ் அரசியல், விடுதலைக் கருத்தியல் என்பவை தற்கொலைகளாலும் கொலைகளாலும் நிரம்பிய நிலையில் என்னிடம் குழப்பம் மட்டும்தான் மீந்திருந்தது. இந்தக் குழப்ப நிலையை தம் அடிப்படைகள் பற்றிய மறுபுரிசீலனைக்கான களமாக தமிழ் அரசியல், கருத்தியல், அறிவுசார் துறைகள் மாற்றிக்கொள்ள முடியும் என்று நான் நினைத்திருந்தேன்.
அரசியல், இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல், உளவியல்பு, தனிமனிதர்கள் என எதனைப் பற்றியும் அதுவரை தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்பட்டவை பொறுப்பற்றவைகளாக, திட்டமிப்பட்ட பிற்போக்குத்தனம் கொண்டவைகளாக இருந்தன. தீண்டாமை, பெண்நிலை ஒடுக்குதல் தொடங்கி சாதி, இனம், மொழி, பண்பாட்டு அடையாளம் சார்ந்த சிதைவுகள், தேசிய இனச் சிக்கல், சூழலியல் கேடு என அத்தனை தீமைகளாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச்சமூகம் இருந்தபோது அறிவுலகம் அவற்றைப் பற்றிய எந்தக் கேள்வியையும் கவனத்தில் கொள்ளாமல் தன் உறக்க நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இனப்படுகொலை, இனத்துக்குள்ளான ஒடுக்குமுறை, பண்பாட்டுப் பழமைவாதம் என உலகில் உள்ள அனைத்துச் சிக்கல்களையும் ஒருசேர எதிர்கொண்ட, அனுபவித்த ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்தபோதும் நம் சிந்தனைத்தளம் இவற்றைப் புரிந்துகொள்வதற்கான ஆற்றல் அற்றதாக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் என்றால் பெரியாரிய, மார்க்சிய முன்முடிவுகளே அனைத்தையும் விளக்கப்போதுமானது என்ற பிடிவாதமான நம்பிக்கை நிலவிவந்தது.
இதற்கு வெளியே உருவாக்கப்பட்ட சில சிந்தனைத் தளங்களைப் பாருங்கள். அந்நியமாதல், எக்சிஸ்டென்சியலிசம், அமைப்பியல்வாதம், குறியியல் என்ற ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் மேற்கில் இற்றுத் தீர்ந்துபோன சிந்தனைப்பள்ளிகளை அன்றுதான் கண்டுபிடித்த அதிசயம் போலப் பேசத் தொடங்கியிருந்தன சில வெளியீடுகள். எஸ்.வி.ராஜதுரை, கார்லோஸ் தமிழவன் என்ற இருவரும் தமக்குக்கிடைத்த ஆங்கில நூல்கள் வழி அடிப்படைகளை நோக்கிச் செல்லாத உரையாடல்களைச் சிறிய அளவில் பரப்பிக்கொண்டிருந்தனர். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட உரையாடல்களின் விரிவாக அவை இருந்தன. நானும் இந்த உரையாடலை ஒரு மாணவனாக இருந்து தொடர்ந்து சென்றிருக்கிறேன், பின்பு அவற்றை அடிப்படையிலிருந்து கேள்விக்குள்ளாக்கியிருக்கிறேன். என்னை அவர்கள் மறுக்கவும், பெயர் மறைக்கும் உத்தியால் வெளியேற்றவும்கூட இது காரணமாக இருந்தது. தமிழவன் பிறகு எனது கருத்துகள், கேள்விகளை ஓரளவு குறிப்பிடத் தொடங்கினார். என்னுடன் நட்பும், மதிப்பும் கொண்டவர் அவர், ஆனால் எனது நுண் அரசியல், எதிர்ப்புச் சொல்லாடல்கள் பற்றி அவருக்கு உடன்பாடு இல்லை. பின்னாட்களில் எஸ்.வி.ராஜதுரை பெரியாரியம் பற்றிய மறுவாசிப்பின் வழியாக தமிழின் தற்கால அரசியலுக்கான சொல்லாடலுக்குத் தன் பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார்.
புரட்சிகர வாழ்க்கை என்றால் பெயர் தெரியாத ஒரு துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு ஆளில்லா இடம் ஒன்றில் உட்கார்ந்து புத்தகம் ஒன்றைப் படிப்பது, குறிப்பேட்டில் கவிதை எழுதுவது என்ற ஒரு சித்திரம் என்னைப் போன்றவர்களுக்குள் பதிவாக்கப்பட்டிருந்ததை இன்று அதிக வருத்தம் இன்றி நினைவுகூர முடிகிறது. ஆனால் இவை கடந்து பல கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்ற உளைச்சல் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
உலகமயமான கண்காணிப்பு அமைப்பின் கொடும் பிடியில் சிக்கிய நம்காலத்தில் மக்கள் அரசியலின் இடம் என்ன, அதில் ஒரு தனிமனிதரின் இடம் என்ன? விடுதலைக்கான ஒற்றைக் கோட்பாடு என எதுவும் இருக்கமுடியாது என்ற நிலையில் தற்கால விடுதலைக் கருத்தியல்களின் பெறுமதி என்ன? போர் இயந்திரங்களின் முன் தனிமனிதர்கள் தம்மை ஒப்படைத்து விட்டு மூச்சுவிடப் பயந்து வாழும் நிலையில் எழுத்து-சிந்தனை-கருத்தியல் என்பவற்றின் இன்றைய செயல்தேவை என்ன? என்பது போன்ற மிக அடிப்படையான கேள்விகளில் இருந்துதான் எனது இடையீடுகளையும் மாற்றுப்பார்வைகளையும் முன் வைத்தேன்.
இந்த நிலையில்தான் “கொலை மற்றும் தற்கொலை” என்ற ஒரு அரசியல் உருவகம், ஒரு உளவியல் குறியமைப்பு எனக்குள் உருவாகி எழுத்துக்களில் பொங்கிவழிந்து கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நிறப்பிரிகையில் நான் எழுதிய முதல் கட்டுரையே “புரட்சியை நோக்கி சில உளவியல் பிரச்சினைகள்”. நீண்ட அந்தக் கட்டுரை இதழின் பக்கங்கள் கருதி தற்போதுள்ள அளவில் சுருக்கப்பட்டது. வில்ஹெம் ரீச், மிஷெல் ஃப்பூகோ என்ற பெயர்களை முன்வைத்து நான் உருவாக்கிய உரையாடல்களின் வழியாக எனது சிந்தனை மையத்தைக் கலைத்துக் கொண்டிருந்த கருத்துக்களையே முன்வைத்துக் கொண்டிருந்தேன்.
குற்றவியல் வழியான அரசியல் இடையீடு, விளிம்புநிலை எதிர்ப்புச் சொல்லாடல், பெண்ணியக் கலகம், எதிர்க்கலாச்சாரம், நுண்ணரசியல் என நான் மாய்ந்து மாய்ந்து பேசியவற்றை, விளக்கியவற்றைத் தொடக்க நிலையில் கடுங்கோபத்துடன் எதிர்த்தவர்கள் பின்னாட்களில் அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு தமக்கான அடையாளச் செயல்பாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
நிறப்பிரிகை என்ற இதழியல் செயல்பாடு- கருத்தியல்களுக்கான உரையாடல்களம் பற்றி நான் இதுவரை பேசியதில்லை. எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தும் விவாதித்தும் வரும் நண்பர்களும் தோழர்களும் பலமுறை அது பற்றி எழுதும்படி கேட்டும் அந்த காலகட்டத்தைப் பற்றி நான் அதிகம் பேசுவதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். நிறப்பிரிகை பற்றித் தற்போது பேச ஐந்து பேர் இருக்கிறோம். ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ.வேலுச்சாமி, பொதியவெற்பன் மற்றும் நான். ஒவ்வொருவருக்கும் அது பற்றிச் சொல்ல அவர்களை மையமாக வைத்து ஒரு கதையிருக்கும் என்பது புனைகதையாளன் என்ற வகையில் எனக்கும் தெரியும்.
கிரணம் வெளிவந்திருந்த காலகட்டம் ரவிக்குமார் அவர்களுடன் சந்திப்பு, நீண்ட நாள் பழகியது போன்ற மனதுகந்த நட்பு, எனக்கும் அவருக்கும் பிடித்த புரட்சிகர மாற்று அரசியல், நேரம் காலம் போவது தெரியாத உரையாடல், எழுதுவதை அலசி, படிப்பதைப் பேசி, பேசுவதற்காகப் படித்து, பலரைக்கூட்டி உரையாடி, உரையாடலையே ஒரு அரசியல் செயல்பாடாக்கி, தமிழில் மாற்று அரசியலுக்கான களங்களை ஆய்வு செய்து, அதனைக் கருத்தியல் தளங்களாக விரிவாக்கம் செய்ய ஒரு பத்திரிகை வேண்டும் என்று திட்டமிட்டு, நிறப்பிரிகை என்ற பத்திரிகை மற்றும் கலந்துரையாடல் களத்தை உருவாக்கி, அதில் எழுதுவது முதல் அச்சகத்தில் இருந்து சுமந்து வந்து அஞ்சல் உறையில் இட்டு அனுப்புவது, அடுத்த கலந்துரையாடல்கள திட்டமிடுவது வரை அனைத்தும் அடுத்த வேளை உணவுக்கு உறுதியற்ற ஒரு காலத்தில் நான் செய்தவை. எழுத்தும் படிப்பும் என் வாழ்க்கையும் அரசியலும் என்பது என் உள்ளும் வெளியுமாக படிந்து போன நிலையில் பெயரைப் பற்றிக் கவலைப் படாமல் நான் செய்தவை. பெயர் பதிவு செய்துகொண்ட பெரியோர்கள் பின்பு என் பெயரை முழுமையாக இல்லாமலாக்க செய்த முயற்சிகள் பற்றி எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் எழுதுக்கலைஞன் என்ற வகையில் நான் அதிகம் கவலைப்பட்டதும் இல்லை, கவலைப்படத் தேவையும் இல்லை. ஆனால் பெயர் நீக்க அரசியல் பற்றிய கவனம் நமக்குத் தேவை.
பாலரசியல், உடலரசியல், நுண்ணரசியல், பெண்ணிய அரசியல் என்ற தளத்தில் நான் முன் வைத்த கேள்விகள், அவற்றையே பேசிய என் எழுத்துக்கள்தான் அவர்களை பெயரழிப்பு, பெயர்மறைப்பு உத்திகளைக் கைக்கொள்ள வைத்ததாக நான் பின்பு உணர்ந்திருக்கிறேன். இன்று தனித்தனியாக அவர்களுக்கும் எனக்கும் அரசியல்- எழுத்து-அடையாளம் என்பவை அமைந்துள்ள நிலையில் தலித் அரசியல்-மாற்று அரசியல் பற்றிப் பல ஒத்த கருத்துக்கள் உள்ளன என்றாலும் நான் வேறுபட்ட இடங்கள் அப்படியே தொடர்கின்றன.
“புதுச்சேரி கலகச் சிந்தனை” என்ற ஒரு தொடரைப் பலர் வெறுப்புடன் குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன், பின்னாட்களில் புதுச்சேரி கலகச்சிந்தனைக் குழுவில் தாம் இல்லை என்று மறுத்து பலர் பொதுவெளியில் “உபநயனம்” பெற்றதையும் நான் பார்த்திருக்கிறேன். இங்கு தோழர் அ.மார்க்ஸ் பற்றிக் குறிப்பிட வேண்டும், தொடக்கத்தில் பின்நவீனத்துவம், நுண் அரசியல், பெண்ணிய இடையீடு, புரட்சிகர உளவியல் என்பது பற்றி நான் பேசியவற்றை, எழுதியவற்றை கடுமையாக மறுத்தவர் அவர். தொடர்ந்து எனது கருத்தியல் இடையீடுகள்மீது அவருக்குக் கோபம் இருந்தது. விவாதங்கள் பல கசப்பாக மாறியுள்ளன. “செயல் அதுவே சிறந்த சொல்” என்ற ஜோஸ் மார்ட்டியின் வாசகத்தை நிறப்பிரிகையில் பதிவு செய்திருந்த நிலையில் “சொல் அதுவே முதல் செயல்” என்றும் “சொல் அதுவும் ஒரு செயல்”, “சொல்லப்படாத செயல்கள் நிகழாதவைகளாகவே எஞ்சும்” என்பது போல நான் சில சந்திப்புகளில், உரையாடல்களில் குறிப்பிடும் போது அவருக்கும் நிறப்பிரிகை சார்ந்த இரண்டொரு நண்பர்களுக்கும் முகம் இறுகிப்போகும். இலக்கியம், கலை, அழகியல் பற்றிய அவர்களின் பயிற்சியின்மை, பழக்கமின்மை காரணமாக என்மீதும் என் புனைவெழுத்துகள் மீதும் கசப்பும் வெறுப்பும் கொள்வதை தவிர்க்கயியலாமல் இருந்தது… நிறப்பிரிகை வட்டம் உடைந்து சில ஆண்டுகள் கழித்து பின்நவீனத்துவம் பற்றிய அறிமுக நூல் ஒன்றை அ.மார்க்ஸ் வெளியிட்டபோது அந்நிகழ்வில் நான் பேசியிருக்கிறேன்… அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் விரும்பத்தக்கது என்றும் இனி அவர் என்னிடம் அன்பாக இருக்கவியலும் என்றெல்லாம்கூட குறிப்பிட்டிருக்கிறேன்… பிறகு நடந்தவை பற்றி உங்களுக்குத் தெரியும்தானே…
இவற்றைக் கூறுவதற்குக் காரணம் “பார்த்தா! என்னை எல்லாப் பொருளுக்குள்ளும் அனாதியான வித்து என்று அறி, புத்திமான்களின் புத்தியும் வீரமுடையவர்களின் வீரமும் நானே ஆகின்றேன்.” என்று கீதோபதேசம் செய்வதற்காககோ, “நானே சத்தியமும் வழியுமாக இருக்கிறேன்” என்று அறிவிப்பதற்காகவோ இல்லை. நான் 1985 தொடங்கி இன்ற வரை தமிழ்ச் சிந்தனையின் அதிக குழப்பமும், சிக்கலும் கொண்ட பகுதிகளில் உழன்றுகொண்டும், உளைந்து கொண்டும் இருக்கிறேன் என்பதை மிகைப்படுத்தல் ஏதும் இன்றி நினைவு படுத்துவதற்காகத்தான்.
அம்பேத்கரிய, தலித்திய, பெண்ணிய அரசியல் தமிழில் தளம் கொண்ட பிறகுதான் அதிக வலியின்றி, தினவாழ்வு அரசியலில் ஈடுபட என்னால் முடிந்தது. தலித் கூட்டமைப்பு, அம்பேத்கர்-அயோத்திதாசர் படிப்பு வட்டம், தலித் கலைப்பண்பாட்டு பயிற்சி முகாம்கள், மண்ணுரிமைக்கூட்டமைப்பு என்பவைதான் என்னை உடலியல் வகையில் ஒருங்கிணைத்த செயல்பாடுகள். இவை என்னை தற்காலம் சார்ந்தும் எதிர்காலம் சார்ந்தும் இயங்க-இருக்க வைத்த செயல்பாடுகள். அதிக நேரத்தை, ஆற்றலை அவற்றில் நான் செலவிட்டிருக்கிறேன். என் மகள் பிறந்த அன்று, தேதி குறிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு ஒன்றில் நிகழ இருந்த “மண்ணிலிருந்து” என்ற நாடகத்தின் பயிற்சிக்காக 40 இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்பதால் அதனை நிறுத்தாமல் பாதிநாள் கடந்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழலில் நான் இருந்திருக்கிறேன். தலித் போராளி, தமிழினக் காவலன் என்று பட்டம் பெறுவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை… ஒரு சிந்தனையாளனாக, ஒரு எழுத்தாளனாக அரசியல் என்பது எனது எளிய வாழ்க்கையின் எல்லாமுமாக இருந்து வருகிறது என்பதை எனக்கு நானே நினைவூட்டிக்கொள்வதற்காவே.
இந்த வரிகளூடாக உங்களுக்குச் சில நிகழ்வுகள் புரியவந்திருக்கும்… பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என அனைத்தின் வழியாகவும் நான் மாற்று அரசியல்-அறவியல்-அழகியல் என்பதைப் பற்றித்தான் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். நான் இக்கேள்விகளைக் கையாளத் தொடங்கிய காலகட்டத்தில் புரியவில்லை, குழப்பமானது என்ற பேச்சுகள் இருந்தன… இன்று அப்படியில்லை. விளிம்பு நிலை அரசியல், அதற்கான தர்க்கவியலுடன் சொல்லாடல் வடிவுடன் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.
இலக்கிய வகைமை என்ற வகையில் பன்மைக் கதையாடல்கள் என்பது பற்றி மிக விரிவாக நான் விவாதங்களில், உரையாடல்களில் விளக்கியிருக்கிறேன். இன்று கதையாடலின் சில வகைமைகள் புழக்கத்தில் வந்துள்ளன. ஆனால் அரசியல் நீக்கம் மிக அதிகமாக நடந்துள்ளது.
இலக்கிய வடிவம், கதைசொல்முறை, புனைவைக் கட்டமைத்தல் என்ற வகையில் கிரணம் எழுத்து அதுவரை தமிழில் இருந்து வந்த தேக்கத்தை உடைத்து பன்மைப்படுத்தியது என்பது உங்களுக்குத் தெரியும். புது எழுத்து என்றும் தொன்மைக்கதையாடல் என்றும் விளிம்புநிலைக்கதையாடல் என்றும் அவை பல வடிவங்களில் வெளிப்பட்டன. அதுவரை ஊர்க்கதை, உறவுக்கதை சொல்லுவது மட்டும்தான் புரட்சிகர எழுத்து, சனாதன மறுப்பு எழுத்து என்று பிடிவாதமாக நம்பி வந்த பலர் தம் கதைசொல்லுதல் முறையை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். சொல்லப்படாதன சொல்லுதல், அச்சம் தவிர்த்த அடையாள வெளிப்பாட்டு முறை, எழுத்துருவாக்கும் எழுத்து முறை, நுண்கதைச் சொல்முறை, தொன்மம் படிந்த வரலாற்றுக் கதையாடல், பாலரசியல் கதையாடல் எனப் பலவற்றை கிரணம் எழுத்துக்குப் பின்னான விவாதங்கள், விதண்டாவாதங்கள், உரையாடல், ஊர்க்கூட்டங்கள் அடையாளம் காட்டி, அறிமுகப்படுத்தி விரிவு படுத்தியுள்ளன. எனது ஒவ்வொரு புனைகதை எழுத்தும் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கிக் காட்டுவது. அவை பின்பு பலரால் கையாளப்படுவதாக மாறும். கோணங்கி, கௌதம சித்தார்த்தன் என்ற நண்பர்கள் தம் அடிப்படை எழுத்து முறையையே மாற்றிக் கொண்டுள்ளனர். தலித் இலக்கியம், பெண்ணிய எழுத்து, தொன்மக் கவிதையியல் என இன்றைய இலக்கியத் தளங்களில் கிரணம் எழுத்துக்கள் மற்றும் எனது புனைவுக் கட்டமைப்பு வடிவங்கள் ஊடாடி உள்ளன. இதனை நான் மாற்றிலக்கிய வரலாறு, பின்நவீன தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அறிய, ஆய்வு செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு நினைவூட்ட அசைப்படுகிறேன். “பதிவுகள் இலக்கியச் சந்திப்புகளில்“ ஒவ்வொரு முறையும் நான் முன்வைத்த விவாதங்கள், இடையீடுகள் தமிழில் அதுவரை பேசப்படாதனவற்றை பேசின. பலர் அவற்றால் தாக்கம் பெற்றனர். தமிழவன், நாகார்ச்சுனன் போன்ற நண்பர்கள் அமைப்பியல், பின் அமைப்பியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோதும் இலக்கிய, கவிதை மொழியூடான எனது புத்தாக்க முறை தமிழ் எழுத்தியக்கத்தில் வலிமையான தாக்கத்தை, மாறுதல்களை உருவாக்கியது. கோட்பாடு, அரசியலடைந்த எழுத்து என்பதில் எனது ஒவ்வொரு கட்டுரையும் பலருக்கு பத்தாண்டுகளுக்கான எழுது பொருளை அளித்துள்ளன. ஆனால் எனது பெயரை, எழுத்தைக் குறிப்பிட்டுத் தம் பேச்சைத் தொடர பலருக்குத் தயக்கம் இருந்தது. பலர் எனது தாக்கமும், பங்களிப்பும் தனது எழுத்தில் இல்லை என்பதை நிருபிப்பதற்காவே என் மீதான ஒரு பகைச்சொல்லாடலை உருவாக்கிக் கொண்டுள்ளனர். என் கட்டுரையின் ஒரே ஒரு கருதுகோளை எடுத்து முழுக் கட்டுரையாகவும், முழு நூலாகவும் விரிவுபடுத்திக் கொண்டவர்கள்கூட ஒரு கருணை அடிப்படையில்கூட எனது பெயரைக் குறிப்பிடாமல் சாதனைகளைப் படைத்துள்ளனர். இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் நான் நீண்ட காலம் குழம்பியிருக்கிறேன். பின்பு அதனைத் தோழர்கள் சிலர் சிறுகச்சிறுக விளக்கியுள்ளனர்.
முதல் கட்டத்தில் என்னைப் பெயர் மறைப்பு செய்தவர்கள் அதற்கு முன்பே எழுதி அறிஞர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், வயதிலும் வசதியிலும் என்னைவிடப் பெரியவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள். அவர்கள் என் எழுத்து மற்றும் பேச்சின் வழி தம் அடிப்படைகளை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் போது உள்ளூடான ஒரு கசப்புணர்வை அடைய நேர்ந்திருக்கிறது. இந்தச் சின்னப் பையன் நம் அடிப்படைகளை எப்படி கேள்விக்குள்ளாக்க முடிகிறது என அவர்கள் சீற்றம் அடைந்து, பின் என்னதான் சொல்கிறான் பார்க்கலாம் என உரையாடலைத் தொடர்கின்றனர். புதியவற்றைப் படிக்கவும் அதற்கேற்ப தம் எழுத்து சிந்தனை முறைகளை மாற்றிக் கொள்ளவும் தேவை ஏற்படுகிறது. ஏற்கனவே எழுத்தின் வழி தம்மை ஓரளவு நிருவிக் கொண்டுள்ள அவர்களுக்கு அந்த மாற்றம் தானாகத் தம் உழைப்பால் உருவானதாக பதிவு செய்து கொள்வது வசதியாக இருப்பதுடன் என் இருப்பு ஒரு தொந்தரவாகவும் மாறுகிறது. என் பெயரையோ, கட்டுரையையோ குறிப்பிட்டால் தம் “வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்” பெருமைக்குப் பங்கம் என்று உணர்ந்து என்னை தொலைதூரத்திற்கு நகர்த்தி வைக்க முயற்சிக்கிறார்கள். இதுவரை எழுதியதெல்லாம் பழசா இருக்கு… இப்ப என்ன எழுதறது… எப்படி எழுதுறது என்று தெரியல என வருத்தப்பட்ட அன்றைய நண்பர் ரவிக்குமார், நான் சொல்லச் சொல்ல எழுதி சில கட்டுரைகளை வெளியிட்டுத் தன் இரண்டாம் கட்ட எழுத்தைத் தொடங்கிய பின் ஒரு கூட்டத்தில் கேட்டார் “எந்த பிரேம்… அப்படியாரையும் எனக்கு ஞாபகம் இல்லையே…”. நல்லது அவருக்குத் தெரிந்த பிரேமாக நான் அதிககாலம் இருக்க முடியாதுதான்.
அடுத்து நேர்ந்த ஒரு அழித்தொழிப்புக் காலகட்டம் இப்படித் தொடங்கியது. அதுவரை தீவிர இலக்கியம் என்ற பெயரில் இயங்கியும், இயங்காமலும் தம்மைப் பெரும் சிந்தனையாளர்கள் என்று நிறுவிக் கொண்டவர்கள் ஆன்டிகம்யூனிசம், ஆன்மிகம், உள்ளொளி, தரிசனம், வாழ்வின் இருண்ட ஆழம், அறிந்தினின்றும் விடுதலை, அறியாதவர்களே பெருந்தலை எனப் பேசி அரசியல் மறுப்பு செய்தவர்கள். மார்க்சியத்தை, புரட்சிகர உளவியலை படைப்புக்கும் இலக்கியத்தன்மைக்கும் எதிரானவை என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று வரைபடங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அரசியல் மறுப்பே மேல் நோக்கிய பயணம் மற்றதெல்லாம் கீழ் நோக்கிய பயணம் என்று கேளி பேசிக் கொண்டிருந்தனர். அந்த நிலையில் புரட்சிகர உளவியல், நுண் அரசியல், மார்க்சிய உளவியல்புடன் கூடிய மாற்று அடையாடம் என்பதுடன் கவிதையின் நுண்மொழியும் இணைந்த எனது எழுத்தும் செயல்பாடும் அவர்களின் தளத்தைத் தகர்ப்பதாக இருந்தது. பெயர் மறைப்பும் உருத்திரிப்பும் தொடர்கதையானது…
இடதுசாரிகளுக்கு எனது நுண் அரசியலும், பாலரசியலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தின, மொழி அடையாள அரசியல் பற்றாளர்களுக்கு எனது பெண்ணிய மொழி, விளிம்புநிலைக்கருத்தியல், தலித் அரசியல் என்பன சீற்றத்தை உருவாக்கின. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை என்னுடன் பேசிக் களித்த நண்பர்களுக்கு எனது வைதீக-பிராமண மறுப்பு நகக்கண்ணில் ஊசியாகக் குடைந்தன. பின் நவீனத்துவம் பேசி பிறவியைத் தேற்றலாம் என்று என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர்களை என் களச்செயல்பாட்டு சார்பு நிலையும், அம்பேத்கர்-அயோத்திதாசர் பற்றும் தொற்று நோய் கொண்டவனிடம் இருந்து தப்பிப்பது போல பதுங்கச் செய்தன. கலக இலக்கியம் என்ற பெயரில் தம் மனைவிகளின் கடிதங்களைக் கூட்டிக் குறைத்துக் கதை எழுதி அவர்களை அவமதிக்க நினைவுடன் என்னிடம் முன்னுரை கேட்டவர்கள் எனது பெண்ணிய வாசிப்பைப் பிற்போக்குத்தனம் என்று பிய்த்து எரிந்தனர்.
என் புனைகதைகளைப் படித்த நட்பார்ந்த களச் செயல்பாட்டாளர்களோ “பிரேம் நாலு முறை படிச்சும் எனக்கே ஒன்றும் விளங்கல, அரசியல் எழுதுறீங்க மக்களுக்குப் போய்ச்சேரணுமில்ல” என்று வருத்தப்பட்டனர். என் புனைகதைகளை வாரம் ஒருமுறை படித்துப் பார்த்து வியப்பு கொள்ளும் பாசத்திற்குரிய சில நண்பர்கள் “இந்த அரசியல், பெண்ணியம், தலித் ஆய்வு எல்லாவற்றையும் மறந்துவிட்டு மாதம் ஒரு கதையை மட்டும் எழுதுங்க பிரேம், கதையா அதெல்லாம் ஒவ்வொன்னும் ஒரு வகைமாதிரி இல்லையா?” என்ற ஆதங்கப்படுகின்றனர். என் சாதியை வைத்து பெருமை கொண்டாட விரும்பும் நண்பர்கள் சிலர் “என்னங்க பிரேம் நீங்க செஞ்சிருக்கிறது எவ்வளவு பெரிய வேல, நீங்க சரின்னு சொல்லுங்க உலக அளவுல உங்களக் கொண்டு போறோம்…” என உணர்ச்சி வசப்படுவதுண்டு. என் எழுத்தின் அடிப்படையே சுயசாதி மறுப்பு என்பதை புரிந்து கொண்டால் உலக அளவுக்குக் கொண்டு போவதாகச் சொல்லும் அவர்கள் என்னை உலகத்துக்கு வெளியே கொண்டு போவார்களோ என்னவோ!
நான் மிக மதிக்கும் எம் அரசியல் தலைவர் தோழர். தொல். திருமாவளவன் என் நூல்களில் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு முறை சொன்னார் “நான் எழுதுவதையே தோழர்கள் புரியவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் தோழர். நீங்கள் எழுதுவதை அவர்கள் எப்போது படித்துப் புரிந்து கொள்வது… நிறைய படித்த பின்தான் இதற்குள் வரமுடியும் இல்லையா… கடினமான உழைப்புதான்…” நான் அவருக்கு ஒரு உறுதிமொழி அளித்திருக்கிறேன் “தலித் அரசியல், சூழலியல் அரசியல் பற்றுள்ள ஒவ்வொருவரும் கட்டினமின்றிப் புரிந்துகொள்ளும் படி நான் சில நூல்களை எழுதுவேன், சில காலம் ஆகும்”.
எவை எப்படியிருந்த போதும் இலக்கியம், எழுத்து என்ற தளத்தில் நான் முன்வைத்த, எழுதி, பேசி வந்த இனவரைவியல் கதையாடல், சிறுமரபுக்கதையாடல், தொன்மக் கவிதையியல், சிதைவுறும் சொல்லாடல், பாலினக் கலப்பு மொழி என்பவை இன்று தமிழில் பலரால் கையாளப்படும் எழுத்து முறைகளாக உள்ளன, இது நிகழ்வியல் உண்மை. இவற்றை மாற்றம், வளர்ச்சி என்ற தளத்தில் பார்க்காமல் இன்றைக்கான அரசியல்-அழகியல் தேவைகளை அவை எந்த வகையில் நிறைவேற்றுகின்றன என்றுதான் பார்க்க வேண்டும்.
எழுத்து கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்று ஒரு கும்பல் உருவாகி தமிழினப்படுகொலை பற்றி நகைச்சுவை துணுக்குகள் எழுதும் அளவுக்கு வலிமையடைந்துள்ளனர். ஆன்மிகமே இலக்கியம் என்று ஒரு பெருங்கூட்டம் வார வழிபாட்டு மன்றங்களை உருவாக்கி வியாசவியாபாரம் செய்து பெருமிதமடைந்து கொண்டுள்ளது. அன்பைத் தேடும் நெடும்பயணம்தான் எனது எழுத்து என அறிவுமறுப்பை பெருமிதமாக அறிவித்துச் செயல்படும் ஒருவரும் அவரது தொண்டர்களும் ஒருபுறம். பன்மை வடிவங்களின் பெருக்கம்தான் இது… பாலகுமாரனின் முன்று முகங்கள் இன்று தமிழ் இலக்கியத்தின் முப்பெரும் தேவர்களாக தனித்தனி அவதாரம் பெற்று மூன்று மடங்களைத் தொடங்கியுள்ளன… விளிம்புநிலைச் சமூகம் ஒன்றின் ஆன்மா நானே என அறிவித்துக் கொண்ட ஒரு எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருது பெறுவதற்காக இனத்துடைத்தழிப்பு அரசியல் அதிகாரத்தை கைகொண்டுள்ள ஒரு கட்சியைக் குறிப்பிட்டு அதுதான் இனி இந்தியாவைக் காக்கமுடியும் என்று அறிவிக்கிறார். நாங்களே தூய பின்நவீனத்துவாதிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் புலிகளை அழிப்பதற்கான புகழ்மிகு போரில் மாண்ட சிங்கள ராணவத்தினரின் தியாகத்தின் நினைவாகத்தான் மாவீரர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கலகச் சொல்லாடலைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர்… ஊடகப்பெருக்கம் உடலைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து கொண்டுள்ள நிலையில் இன்று எழுத்து, இலக்கியம் செய்ய வேண்டியது என்ன…
தற்பொழுது எழுத வரும் ஒருவர் இந்த அழிவரசியல் பெருக்கத்திலிருந்து தன்னை வெளியே வைத்துக் கொள்ள கடினமான பயிற்சி தேவைப்படுகிறது… அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இந்த எழுத்துக்களை, இவை உருவாக்கும் சமூக உளவியலை அரசியல் செறிந்த கதையாடல்களால்தான் எதிர்க்க முடியும். தற்காலத்தின் உடனடித் தேவை இதுதான்…
உரையாடல்: 2 : 1