உரையாடல் : 3: 1

கேள்வி:

ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தக் கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் என்கிறீர்கள். கலை இலக்கியங்கள் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பு ஏதும் செய்வதில்லையா? இலக்கியங்களை வாசிப்பதும் அவைகளின் வாயிலாக ஒரு சமூகத்தின் உளவியல்புகளை அறிந்து கொள்வதும் அவற்றின் உள்ளார்ந்த அரசியலைப் புரிந்து வெளிப்படுத்துவதும், அறிவுருவாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதிதானே?

 

பதில்:

கலை-இலக்கிய வடிவங்கள், செயல்பாடுகள் என்பவை அறிவுருவாக்கத்தின் ஒரு பகுதிதான், அவையே அறிவாகவும் செயல்படக்கூடியவை. அறிவு-அதிகார உறவில் இந்நிலை இருவகையான விளைவுகளை உருவாக்க இயலும், விடுதலைக்கான அறிவு, அடக்குதலுக்கான அறிவு. ஒருவரின் அறிவு மற்றவர் மீதான அடக்கு முறையாக அமைய இயலும். கலை-இலக்கியச் செயல்பாடுகள் அறிவை மட்டுமல்ல உளவியல்பை, நடத்தையியல்பை வடிவமைக்கவும், உருமாற்றவும் கூடியவை. அதனால் அவை வலிமையான அரசியல் கருவிகளாகவும் செயல்படுகின்றன. அறிவை உருவாக்க கலை-இலக்கியங்களைப் பயன்படுத்த முடியும் என்பதின் மற்றொரு வடிவம்தான் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அறிவு பெறும் உரிமையை மறுக்கவும்  இவை பயன்படுத்தப்படுகின்றன என்பது. அறிவு என்ற செயல்பாடு சமநிலையும், பொது அறமும் கொண்டதாக இருப்பதில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் கலை-இலக்கியங்களும் பொது அறம், சமநிலை கொண்டதாக இயங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள இயலும். அதிகாரக் கட்டமைப்புகளை, அடக்குமுறை நிறுவனங்களை, அழகியல் வன்முறைகளை விளக்கிக் காட்ட, அவற்றின் உள்நோக்கங்களை வெளிப்படுத்த கலை-இலக்கியம் பயன்படும் என்பது நமக்குத் தெரியும். கலை-இலக்கியச் செயல்பாடுகள், அவை பற்றிய வாசிப்புக் கோட்பாடுகள் ஆற்றல் வாய்ந்த போராட்ட வடிவங்கள், சமநிலை குலைக்கும் இடையீடுகளின் வழி இவை புதிய மொழிக் களங்களை கண்டறிந்து தருகின்றன. இந்த வகை அறிவுருவாக்க, அடையாள உருவாக்க இலக்கியங்களில் இருந்து, வாசிப்புகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டியவையாக உள்ளவை  சமநிலை கொண்ட, பேருண்மை பேசும், பொது அழகியல் பேசும் கலை-இலக்கியங்கள். அதனால் இக்கேள்வியில் உள்ள கலை-இலக்கியம்  என்ற தொடரில் உள்ள முரண் இணைவை  உடைத்து, பொது அடையாளத்தை நீக்கிப் புரிந்து கொள்ள வேண்டும்.  அறிவுருவாக்க, அரசியல்  உருவாக்க கலை-இலக்கியங்கள், அவற்றிற்கு எதிரான பேருண்மையின் வன்முறையைச் செயல்படுத்தும்  கலை-இலக்கியங்கள்.  உருவாக்கித்தரப்பட்ட அறிவின், அரசியலின் வன்முறைகளைப் புலப்படுத்தும் கலை-இலக்கியங்கள் அவற்றைக் கொண்டாடிப் புளகிக்கும்  கலை-இலக்கியங்கள்.

உரையாடல்:2:1

கேள்வி:

ஆரம்ப   காலத்தில் உங்களோடு சேர்ந்து செயற்பட்டவர்கள் உங்கள் எழுத்துக்களால் உந்தப்பட்டவர்கள், பிற்காலத்தில் உங்கள் பெயர் மறைப் பிலும் உருத்திரிப்பிலும் ஈடு பட்டதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் நேர்மை யின்றி நடந்து கொண்டதால் ஏற்பட்ட கசப்புணர்வினால் இதனைக் குறிப்பிடு கிறீர்களா? அல்லது உங்கள் தீவிர அரசியல் சிந்தனைகளிலிருந்து விலகிச் சமரசங்களுடன் கூடிய அரசியல் போக்குகளில் அவர்கள் ஈடுபடுவதை விமர்சிக்கிறீர்களா?

பதில்:

எனது எழுத்து மற்றும் கருத்தியல் செயல்பாடுகளை  நம் காலத்திய தமிழ் அறிவுருவாக்கக் களத்தின் சிக்கல்கள், கோட்பாட்டு  உருவாக்கக் கேள்விகளின் ஒரு விளிம்புநிலை அடையாளமாக வைத்து விளக்கும்பொழுது நான் குறிப்பிடநேர்ந்த நிகழ்வுதான்  எனது பெயர் மறைப்பும் உருத்திரிப்பும். இதனைத் தனி மனிதனாகவோ, வெறும் கதைசொல்லியாகவோ இருந்து நான் சொல்ல முயற்சிக்கும் பொழுது பொருளற்ற, தொடர்பற்ற தன்னிரக்க வாசகமாகத்தான் இருக்கும். இன்னொரு வகையில் நான் பெயர் மறைப்பு, உருத்திரிபுகளுக்கு  பலியாகித் தொலைந்து போனவனும் இல்லை. தொடர்ந்து எழுதியும் பேசியும் அழுத்தமான பதிவுகளை, தாக்கங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறேன், புதிய வடிவங்களில் புதிய களங்களில் எனது புனைவுகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறேன்.

அதனைவிட முக்கியமானது, நான் பழகிப் பின் விலகிவந்த பழைய நண்பர்கள் இன்று நேர்மையற்றவர்களாக, கருத்தியல் திரிப்பில் ஈடுபடுபவர்களாக மாறிவிட்டதாக நான் கூறவரவில்லை, அவர்கள் அப்படி ஆகவும் இல்லை.  நான் பலவாறாக மாறியும் திரிந்தும், கடின வாசிப்பின் வழி உருவாகி வந்தது போல அவர்களும் அவர்கள் வகையில் மாறியும் தெளிந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உள்ள அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் உரிமை எனக்கு இல்லை. என் வகையில் அவர்கள் நேர்மையின்றி நடந்து கொண்டார்கள் என்பதை நான் பதிவு செய்வதற்கான உரிமையும் எனக்கு இல்லாமலில்லை.

நான் தெளிவாக இருப்பதாகவோ, தீவிர அரசியல் இதுதான் என்று அறிந்து கொண்டதாகவோ நம்பவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்பவர்களின் நரம்பியல் சிக்கல் எனக்குத் தெரியும் என்பதுதான் தற்போதுள்ள சிக்கல்.  நான் குறிப்பிட விரும்புவது: நான் முன்வைத்த கேள்விகள், விரிவான இடையீடுகள் உருவாக்கிய களங்களில் செயல்பட்ட போதும் சிலர் எனது பங்களிப்பைத் திட்டமிட்டு மறைத்தது பற்றிய அரசியல், எனது கருத்தியல் சமன்பாடுகளைத் திரித்து விளக்கியது பற்றிய முறையீடு.

மீண்டும் நான் நிகழ்வுகளின் வழிதான்  இதனை விளக்க முடியும் நிறப்பிரிகை இதழுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்று அதில் பெயர் பதிவு செய்திருந்த இருவர் மாறி மாறி எழுதியும் பேசியும் வந்த பொழுது எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நிறப்பிரிகை தன்னுடைய கண்டுபிடிப்புதான் என மோதிக் கொண்டது அதைவிட வேடிக்கையாக இருந்தது. நிறப்பிரிகை பற்றிய முதல் திட்டமிடல் கூட்டத்திலிருந்து கடைசி கலந்துரையாடல் வரை அனைத்தையும் உடனிருந்து பார்த்து ரசிப்பது தோழர். பொதிய வெற்பனுக்கு வாடிக்கையாக இருந்தது.  இவை வேடிக்கையாக இருக்கலாம்,  ஆனால்  புதுவைப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேரக் கல்விப்பணிக்கு நான் முயற்சித்த போது தொடர்ந்து அதற்கு இடைஞ்சல் செய்ததும், அதனையும் மீறி நான் அங்கு சில ஆண்டுகள் கற்பித்தபின்  அங்கிருந்து என்னை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து 2002-இல் அதில் வெற்றி பெற்றதும் அவை நடந்த காலத்தில் நிச்சயம் வேடிக்கையானது இல்லை. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்கள் என்னை எழுதவும் பேசவும் இயலாத நிலைக்குத் தள்ள முயற்சித்தார்கள் என்பதைதான். இன்று அவர்கள் என்னவாக இருந்தாலும் சரி நான் அதனைப் பற்றி கவலைப்படவில்லை, எனக்கு அவர்கள் தொடர்ந்து செய்த இடையூறு  மாற்றுச் சிந்தனைகளை அழிப்பதற்கான அறமற்ற, அநீதியான வன்முறை. மாற்று அரசியல், எதிர்க்கலாச்சாரம், கலகச் செயல்பாடுகள் என்று பேசித் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் அவற்றை வாழ்வின் பகுதியாக ஏற்ற என்னைத் தனிமைப் படுத்தவும் தண்டனைக் குள்ளாக்கவும் அச்சுறுத்தவும் அந்த அடையாளங் களையே கருவியாக்கியதுதான் இங்கு கவனத்திற்குரியாகிறது.   இன்று   இரண்டு முன்று  நாவல்களுக்கான நிகழ்வுகளாகப்  பதிந்து கிடக்கின்றன அக்கால நாடகங்கள்.  எழுத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு எழுத்தால்தான் பதில் சொல்ல வேண்டும். இனி கசப்புணர்வு என்ன வேண்டியிருக்கிறது, எழுத்துக் கலைஞனுக்கு எல்லாமே கதைதான்… வெறுப்பைச் சுமந்து கொண்டு நாம் விடுதலையைப் பேச முடியாது, விடுதலையை நேசிப்பவர்களை வெறுப்பால் அழித்து விடவும் முடியாது.

உரையாடல்: 1:2

கேள்வி:

சாதி, குடும்பம், மரபு என்பவற்றின் வன்முறைகளை, கட்சி அரசியலின் வன்மங்களை நினைவு தெரிந்த நாளிலிருந்து அச்சத்துடன் கவனித்து வந்த எனக்கு  மாற்று அரசியல் மிக இயல்பாகப் பொருந்தியது என்கிறீர்கள்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் உள்ளாகும் ஒடுக்குதல் மற்றும் அடையும் வலிகளின் காரணமாக அவர் மாற்று அரசியலின்பால் ஈர்க்கப்படுகிறாரா? அல்லது நீதியின்பால் அக்கரையுள்ள எவரொருவரும், விருப்பு வெறுப்பின்றி, அறிவார்ந்த சிந்தனையில் ஈடுபடும்போது அவர் வந்து சேரும் இடமாக மாற்று அரசியல் களம் இருக்குமா?

பதில்:

ஒடுக்குதல், அடக்குமுறை, அடிமைத்தனம், ஒதுக்குதல், வாழ்வுரிமைகள் மறுக்கப்படுதல், வன்முறைகளுக்குள்ளாதல் எனப் பல வகையான வலிகளைத் தனிமனிதர்களாக, குழுக்களாக, இனங்களாக  மனிதர்கள் அடைகிறார்கள். அதே போல மற்றவர்களுக்கு உருவாக்கவும் செய்கிறார்கள். இவற்றைத் தம் உடலிலும் மனதிலும் அடைபவர்கள் விடுதலைக்கான ஏக்கம் கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் விடுதலைக்கான வழியை, விடுதலைக்கான அறிவைத் தனியாக யாரும் உருவாக்கிக் கொள்ள இயலாது. இது அரசியல், அறம் சார்ந்த தன்னிலை உருவாக்கத்துடன் தொடர்புடையது. நீதியின்பால் அக்கறை கொள்வதும் அவ்வாறான ஒரு தன்னிலை உருவாக்கம்தான். பாதிக்கப்படுகிற ஒருவர் போராட, கலகம் செய்யத் தன் கருத்தியல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதே தொடக்கமாக அமைகிறது. அந்தப் போராட்டம், எதிர்ப்பு மனம், மொழி, மெய் என அனைத்து வழிகளிலும் வெளிப்படுகிறது. இதே போராட்டத்தைத் தன் அறிவு, அற உணர்வு, நீதியுணர்வு வழியாகவும் ஒருவர் தன்வயப்படுத்த முடியும், முதலில் அதற்குத் தேவைப்படுவது  அடையாள நீக்கம், தன்னிலையின் உடைப்பு. இவ்வகையில் அவருக்கு இருவகை முயற்சிகள், பயிற்சிகள் தேவை.

மாற்று அரசியல் களம்  பாதிக்கப்பட்டவர்கள், பிறரின் பாதிப்புகளை உணர்ந்தவர்கள் இருவரின் பங்களிப்புடனும் இயங்கக்கூடியது. ஏனெனில் உலக சமூகங்களில் எத்தனையோ வகையான துயரங்கள், எத்தனையோ வகையான வன்முறைகள், ஒடுக்குதல்கள் நிகழ்ந்தபடியுள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்தும் வாழ்ந்தும்தான் புரிந்து கொள்ள, உணர்ந்துகொள்ள முடியும் என்றால் விடுதலைக் கருத்தியல்களும், மாற்று அரசியலும் செயல்படவே இயலாத நிலைதான் உருவாகும். இனவெறி ஒடுக்குதலை அனுபவித்த ஒருவருக்குத் தீண்டாமை பற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது, ஆனால் தீண்டாமை ஒழிப்பு அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். பெண்ணியத்தை ஒரு ஆணாக இருந்து புரிந்தேற்கத் தேவையானது நேர்மையான  அறிவும், அறவுணர்வும்.

சாதி, குடும்பம், மரபு என்பவற்றிற்குள் இயங்கும்  வன்முறைகளைப் புரிந்து கொண்டதும் தனிமனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வன்முறைகளின் அடர்த்தியைப் புரிந்து கொண்டதும் கவிதை , இலக்கியம் சார்ந்த தேடுதல் வழி நிகழ்ந்தவை. சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம், பெண்ணியம் போன்றவை இதனைச் சற்றே விரிவாக விளக்கிய போது அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் என்னைத் தாக்கியுள்ளன. இந்த அதிர்ச்சி ஒருவரை அதிகார வன்மம் கொண்டவராக மாற்றவும்கூடும். இந்த வன்மத்திலிருந்து விடுபடுவதைத்தான் அடையாள அழிப்பின் அரசியல் என்றும் மாற்று உளவியல் என்றும் நாம் தற்பொழுது கூறிவருகிறோம். அதிகாரம், அடக்குமுறை என்ற உளவியல் அமைப்பு மனிதர்களுக்குள் எவ்வளவு இயல்பாக நுழைய முடிகிறதோ, அதே அளவுக்கு விடுதலை, தன்னுரிமை உணர்வுகளும் பதிய முடியும். தான் மற்றும் பிறர் பற்றிய கருத்தியலில் உருவாக வேண்டிய அடிப்படை மாற்றம்தான் இதன் முன் தேவை.

 மாற்று அரசியல் களம் என்பது நமக்கு முன்னே உள்ள பல  தேர்வுகளில் ஒன்று. நான் இதனை அதிக அலைச்சல் இன்றி, முழு நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதைத்தான் மிக இயல்பாகப் பொருந்தியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கான செயல்முறை என்ன என்பது பற்றிப் பல குழப்பங்கள், சிக்கல்கள் நேர்ந்திருந்தாலும், அவ்வப்பொழுது செயலின்மை என்னை அழுத்திய பொழுதும் மாற்று அரசியலின் தேவையை மறுப்பதற்கான நிலை உருவானதில்லை. எனது குழப்பங்கள் செயலின்மைகள் நான் நம்பும் அரசியலின் தேவையை குறைத்துவிட முடியாது.  இந்த வகை நிலைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் வந்து சேர இயலும்.  இந்த நிலைப்பாட்டை நான் அடைந்தேன் என்பதை விட இதுதான்  எனக்கான அடையாளத்தை வழங்குகிறது.  இந்த உளவியல் உருவாக்கம்  நேர்க்கோட்டுத் தன்மையில் நேரக்கூடியதல்ல. வறுமையின் அழுத்தம், ஒடுக்குதலின் வலி ஒவ்வொருவரையும் வறுமைக்கெதிரான, ஒடுக்குதலுக்கெதிரான போராட்ட அரசியலுக்குத்தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் போராட்ட அரசியலில் இருக்கும் யாருக்கும் வறுமையின் வலியும் ஒடுக்குதலின் அவமானங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மட்டும் நாம் உறுதியாகச் சொல்ல முடியும். இது வாழ்வின் வழியோ, வாசிப்பின் வழியோ, நேசிப்பின் வழியோ, உற்றறிதலின் வழியோ நேரலாம், ஆனால் நேர்ந்தாக வேண்டும்.

உரையாடல்:1:1

கேள்வி:

எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம் என்று கூறியுள்ளதையொட்டி ஒரு கேள்வி. மாற்று அரசியல் என்பது அரசியல் இருந்து வரும் காலம் நெடுகிலும் இருந்து வரும் ஒன்றாகக் கருதுகிறீர்களா, அல்லது நம் காலத்தின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் எழுவதாக நினைக்கிறீர்களா?

பதில்:

அரசு, அரசு வடிவங்கள், அரசியல் என்ற தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும் எப்போதும் இருந்து வருபவர்கள் தனிமனிதர்கள். தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்துதான் அரசு உருவாகிறது என பிளாட்டோ தன் குடியரசில் விளக்குவது இன்றும் சமூக அறிவியலில் மறுக்க இயலாத சமன்பாடு. மனிதர்கள் அரசுகளை, ஆட்சிகளை, அரசர்களை, அரசியல் அமைப்புகளை மாற்றியமைப்பது மிகத்தொன்மையான ஒரு அரசியல் செயல்பாடுதான். ஆனால் தனிமனிதர்கள்-அரசு என்ற உறவமைப்பின் அடிப்படையையே மாற்றியமைத்த அரசியலைத்தான் நாம் நவீன அரசியல் என்கிறோம். நவீன அரசியலில் சுதந்திரம், சமத்துவம், சமநீதி, தன்ன டையாளம் என்பவை மிக அடிப்படையான கருதுகோள்கள்.  நவீன அரசியல் தனி  மனிதர்களை மையமாக வைத்துக் கட்டப்பட்டது, ஆனால் தனி மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது,  தனிமனிதர்கள் ஒவ்வொரு வருக்கும் அரசியலில் பங்கை அளித்து அவர்கள் ஒவ்வொருவரும் அரசியலை செயல்படுத்தும் உரிமையை அளிப்பது, தனிமனிதர்கள் யாருக்கும் அடிபணிய வேண்டிய தேவையை இல்லாமலாக்குவது, இது தனிமனிதர்களால் ஆளப்படும் அரசியல் அல்ல பொதுஅறங்களால் ஆளப்படுவது எனப் பலவாறாக விளக்கிச் செல்லமுடியும். ஆனால் இவையெல்லாம் இன்று கருத்தியல் சமன்பாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தியல் சமன்பாடுகளை நடப்பியலாக மாற்றுவதற்கான அரசியலையே நாம் இன்றைக்கான மாற்று அரசியல் என்கிறோம்.

அரசின் வடிவத்தை மாற்றுவது, அரசியலுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவை மாற்றுவது, அதிகாரக் கட்டமைப்பின் மையங்களை அவிழ்த்துப் பரவலாக்குவது  என்பவை மாற்று அரசியலின் தொடக்கமாக உள்ளது. மார்க்சியம் அடையாளப்படுத்திய அரசியல் பொருளாதார விடுதலை, அம்பேத்கர்  முன்வைத்த சமநீதி, சமஉரிமைகள் கொண்ட அறம்சார்ந்த அரசியல், பாலின ஒடுக்குதலை மறுக்கும் பெண்ணிய அரசியல், வேறுபடுதலுக்கான உரிமையை வலியுறுத்தும் அடையாள அரசியல், உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வாழ்வாதார உரிமையை வலியுறுத்தும் சூழலியல் அரசியல்  எனப் பல தளங்களைக் கொண்டதுதான் இன்றைக்கான மாற்று அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் அளவும் வடிவமும் மாறுபடுவது போல அதற்கெதிரான போராட்டங்களும் மாறுபடும். இன்றைய அரசியல், பொருளியல், அதிகார வன்முறைகளுக்கெதிரான மாற்றுகளை முன்வைப்பதுதான் இன்றைய மாற்று அரசியல். இன்றைய அடக்குமுறை அரசியல் பன்முனைப்பட்டதாக, பலவடிவம் கொண்டதாக இருப்பது போலவே இன்றைக்கான மாற்று அரசியலும் பலதளங்களைக் கொண்டதாக உள்ளது.

நம் காலத்தின் மாற்று அரசியல் காலம் சார்ந்தது மட்டுமல்ல, இடம் சார்ந்தும், களம் சார்ந்தும் பல வடிவங்களைப் பெறும். பொதுச்சாலைகளை தலித் மக்கள்  பயன்படுத்தத் தடையுள்ள ஊர்களில் அதற்கெதிரான போராட்டம்தான் முதல்கட்ட மாற்று அரசியலாக, விடுதலைக்கான அரசியல் செயல்பாடாக இருக்கும். ஊர்கள், சேரிகள் எனத் தனித்தனி வாழிடங்களையும் சேரிச் சுடுகாடு, ஊர்ச் சுடுகாடு எனத் தனித்தனி புதைகாடுகளையும் கொண்ட  ஒரு சமூகம்  பேசும் தமிழ் அரசியல் விடுதலைக்கானது அல்ல என்பதை விளக்கிக்கூற வேண்டியதும் மாற்று அரசியலின் பகுதிதான்.  தம் மண்ணை, ஆற்றை, குன்றுகளைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களுக்கு துணையாக நின்று பேசுவதும்கூட மாற்று அரசியல்தான். உலக மயமான ஆதிக்கங்கள்,  பெருந்தேசிய அடக்குமுறைகள் தொடங்கி தனி மனிதர்களின் நடத்தைகளில் உள்ள மற்றவர் மீதான மனிதஉரிமை மீறல்கைள் வரை நம் காலத்திற்கான  அரசியல் விரிந்து கிடக்கிறது. இவை பற்றிய மாற்றுப் பார்வைகளை அறிவதும் அவற்றை பரவலாக்குவதும்  நம் காலத்திய மாற்று அரசியலின் தொடக்கம்.

அச்சம் தவிர், ஆண்மை அழி -பிரேம்

உரையாடல்: 6    அச்சம் தவிர், ஆண்மை அழி

கேள்வி

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் உங்களது எதிர்வினையைப்  பன்மெய் இதழில் பதிவுசெய்துள்ள நிலையில், பெண்ணியம் தமிழில் செயல்பட்டு வரும் முறை மற்றும் உலகமய /தனியார் மயமாக்கலுக்குப் பின்னான கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணிய சிந்தனைப் போக்குகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து சற்று விவரியுங்கள்.

பதில்

பிரேம்

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது மட்டுமல்ல, அவ்வப்போது எழுவது சர்ச்சை இல்லை  அவமதிப்பு, இழித்துரைப்பு. மாற்று அரசியலில், அறம்சார் அரசியலில் அக்கறை கொண்டவர்கள் தமிழில் பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணெழுத்துகள் தனி அடையாளத்துடன் உருவாகி வளர்வதை வரவேற்று வளர்க்க முயற்சி செய்வார்கள். இலக்கியம், கோட்பாடு என்பதில் அக்கறையுள்ளவர்கள் பெண்ணியம், பெண்ணெழுத்து தமிழில் மிகத் தேவையானது என்பதைப் புரிந்து கொண்டு தம்வாசிப்பைத் தொடர்வார்கள். இவற்றில் எதுவும் இன்றி ஆண்திமிர், ஆண்மைய அதிகாரத்தைக் கலை-இலக்கியம் என்ற வெளிப்பூச்சுக்குள் மறைத்து  வைத்து விற்பனை செய்பவர்கள்தான் “இந்தப் பெண்கள் எழுத வந்து உலகமே கெட்டுப் போச்சு” என்று கூச்சல் எழுப்பிக் கொண்டுள்ளனர். இதற்கான பின்புலத்தை நான் பன்மெய் கட்டுரையில் (ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்) விரிவாக விளக்கியிருக்கிறேன்.

பெண்ணியம் மாற்றுச் சிந்தனை மற்றும் விடுதலை அரசியலின் மிகமிக அடிப்படையான ஒரு பகுதி. மார்க்சியம், மனித உரிமை அரசியல், தலித் அரசியல், சமத்துவ அரசியல் அனைத்தும் பெண்ணியத்தின் அடிப்படைகளை  ஏற்றுத்தான் தம்மைச் செயல்பாடு கொண்ட விடுதலைக் கருத்தியல்களாகத் தகுதிப்படுத்திக் கொள்ளமுடியும். அதே சமயம் பெண்ணியம் தனித்து இயங்குகிற, தனித்துச் செல்கிற ஒரு சிந்தனை முறையோ, உளவியலமைப்போ இல்லை.  பெண்ணியலாளராக இருக்கும் ஒருவர்தான்  அனைத்து வகையான  மாற்று அரசியல், விடுதலைக் கருத்தியல்  தளத்திலும்  சரியான, மெய்யான புரிதலுடன் செயல்பட  முடியும்.

மார்க்சிய, அம்பேத்கரிய கருத்தியல் தளங்கள் பெண்ணியத்திற்கு மறுப்பான தர்க்கத்தையும் பெண்ணிலையை இரண்டாம் நிலையில் வைக்கும் கருத்தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்… பௌத்தம், காந்தியம் போன்ற மனிதநேயச் சிந்தனைகள் பெண்ணியத்தின் பல அடிப்படைக் கேள்விகளுக்கு மௌனம் காப்பதால்தான் தனித்தியங்கும் சக்தியற்ற  நல்லெண்ணக் கருத்துக்களாக மட்டும் மீந்து போயுள்ளன…இந்தியச் சமூகங்களில் சுதந்திர, பகுத்தறிவுச் சிந்தனைகளின் முன்நிபந்தனை ஒடுக்கப்பட்டோர் அரசியல், பெண்ணிய அரசியல் இரண்டையும் ஏற்பதுதான்.

எப்போதோ இருந்த தீண்டாமையைச் சொல்லி தற்போது இடஒதுக்கீடு பெற்று ஏமாற்றுகின்றனர் தலித்துகள் என்று சொல்வதும் பெண்ணியம் பேசும் பெண்கள் சிலர் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி ஊடகங்களின் கவனத்தைக் கவருகின்றனர் என்று சொல்வதும் ஒரே வகை பிற்போக்கு  மூளையமைப்பிலிருந்து உருவாகும்  இருவகை வாசகங்கள்.  தமிழின் இலக்கியப் பொதுப்புத்தி என்பது ஆண்திமிர், ஆண்மைய அறியாமை கொண்டதாகத்தான் இருக்கிறது  என்பது  ஒவ்வொரு நாளும்  நிரூபனமாகிக்கொண்டே  இருக்கிறது.

இதற்கு வேறுசில வடிவங்களும் உண்டு. “பெரியார் சொல்லாத எந்தப் பெண்ணியத்தை இந்தப் பெண்கள் சொல்கிறார்களாம்” என்றோ,  “ஜெயகாந்தன் எழுத்தில் இல்லாத பெண்ணியத்தையா இந்தப் பெண்கள் சொல்லிவிடப் போகிறார்கள்” என்றோ,  “உண்மையான பெண்ணியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்” என்றோ, “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள் பெண்விடுதலை அடங்கிவிடுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ளாத இயக்க மறுப்பியல்தான் இந்தப் பெண்ணியப் பேச்சுக்கள் எல்லாம்”  என்றோ இது பல குரல்களில் ஒலித்தாலும் இவை சொல்ல வருவது ஒன்றுதான்,  “பெண்ணியம் எனத் தனியாக ஏதும் இல்லை, பெண்மொழி, பெண்ணிலை அறிவு என்பதெல்லாம் பிரிவினைவாதம், பெண்ணெழுத்து என எதுவும் தனியாக இருக்க முடியாது.”

இதனை இப்படியே நீட்டிச் சென்றால் இறுதி முடிவுகள் இப்படியாக இருக்கும் “பெண் எனத் தனியாக எதுவும் இருக்க முடியாது. ஆணுக்குள் பெண் அடக்கம், ஆண் அமைப்பவை அனைத்தும் பெண்ணையும் உள்ளடக்கியது. பெண்ணைக் காப்பது ஆணின் கடமை,  ஆணிடம் தன்னை ஒப்படைத்து தனக்கான கடமையைச் செய்து வாழும் பெண்  பாதுகாப்பாக வாழ்வதுடன் எந்த துயரமும் இன்றி வாழலாம். தனக்கென தனி அடையாளம் பெறுவது இயற்கையிலேயே பெண்களுக்கு இயலாத ஒன்று. பெண்கள் தனி அடையாளம், சம உரிமை, சமத்துவம் என்று பேசுவதெல்லாம் மத ஒழுக்கம், குடும்பம், பண்பாடு என்ற அனைத்தையும் அழித்துவிடும். இந்தியச் சமூகம் எப்போதும் பெண்களுக்கு பெருமையளித்து வந்துள்ளது, பெண்ணைத் தெய்வமாக வழிபடும் நாடு நம்முடையது. பெண்கள் இன்று இழிந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் பெண்கள்தான். நம் மரபை விட்டு அவர்கள் வெளியேறும் போது பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிறது. வீடுதான் அவர்களின் இடம்.  அரசியல், சிந்தனைத்துறைகள்,  இலக்கியம் என்பவையெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய பகுதிகள்…”  இதில் ஏதாவதொரு வாக்கியத்தின் வழியாக நீங்கள் இன்றுள்ள ஆண்மைய அமைப்புகளின் மைய நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்துவிடலாம். முற்போக்கு-பிற்போக்கு, மதவாதம்-நவீன சிந்தனைகள், மனிதநேயம்-முதலாளித்துவம்,  அறிவியல்வாதம்- புராணிகவாதம், உழைப்பாளர்கள்- உயர்தொழில் நுட்பத்தினர்  இப்படிப் பல முரண்பட்ட போக்குகள் கொண்ட ஆண்கள் பெண்ணிய அரசியல், பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணிய இயக்கங்கள் என்பவற்றை எதிர்கொள்ளும் போது மட்டும் ஆண்மைய-ஆணாதிக்க நிலைப்பாட்டினை எடுப்பதுடன் ஆண்நிலை பற்றிய கட்டுக்கதைகளை இயற்கையானதென நம்பவும் செய்கின்றனர். இந்த வகையான சமூக-வரலாற்றுச் சூழல் நிலவும் ஒரு சமூகத்தில்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக் கப்பட்ட அடையாளத்துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது.

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றின் முற்பகுதிவரை பெண்விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான உரிமைகள் என உலகப் பெண்ணிய அரசியலின் தாக்கங்கள் தமிழில் இருந்து வந்தன. தேசிய இயக்கம் பெண்களின் பங்கின்றி மேற்செல்ல முடியாது என்ற நிலையில் பெண்கள் தேசிய அரசியலில் உள்ளடக்கப்பட்டனர். பகுத்தறிவு இயக்கம் பெண்களுக்கான விடுதலையை முன்நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். இந்திய மார்க்சிய அரசியல்  பெண்ணியத்தை மறுத்துச் சொல்லுவதற்கு கொள்கையடிப்படையில் எந்த உரிமையும் இல்லை.

இந்திய நவீனச் சிந்தனையாளர் பலரும் வேதகால நாகரிகம்,  பாரதத் தொன்மை, இந்தியப் பண்பாடு பற்றிய குழப்பமான பற்றுள்ளவர்கள்தான்.  ஆனால் பெண்ணிய-பெண்விடுதலை அரசியலின் கேள்விகள் அவர்களைப் பாதித்தன. பெண்ணியச் சிந்தனைகள் தொடக்க நிலையில் இருந்த போதே தமிழின் மகாகவியாகப் பின்னாளில் பெயரிடப்பட்ட சுப்பிரமணிய பாரதி போன்ற சிலரை அது பாதித்திருக்கிறது.   “ஞானவொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு  நல்லழகே!  ஊறுசுவையே! கண்ணம்மா!” என்றும் “வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!” என்றும் பாடிய பாரதிக்கு இருந்தது புனிதப் பெண்மை பற்றிய கருத்தாக்கம்தான் ஆனால் உலக அரசியலைக் கவனத்தில் கொண்ட ஒரு ஊடகவியலாளராக அவர் சொல்வது கவனத்திற்குரியது.

“சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.

சில தினங்களின் முன்பு ஒரு கிராமாந்தரத்து ஸ்திரீ ‘மாதர் நிலை’ என்ற மகுடத்தின் கீழே ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார்.அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீமான் காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்த வ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண் மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனனமெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அது போல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல ‘சாத்திர’ வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண் மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.

இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது தான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை.

ஆனால் ‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்’ என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.”

பாடல்கள் பாடிய ஒரு பாவலன் என்ற நிலையில் இருந்து உலக அரசியல் மாற்றங்களை உணரும் அறிவுத்துறை நோக்கிய நகர்வு பாரதி கால நவீனத்துவத்தின் தொடக்கமாக அமைந்தது.

மிக மிக அவசரம் என்று பாரதி கூறி 100 ஆண்டுகளுக்குப் பிறகு, “நம் நாட்டில் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக்கிடமானது. வேர் தொடங்கி உச்சிக் கிளைவரை முழுவதும் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களின் கேவல நிலைமைக்கு நம்நாட்டு மூடப் பழக்க வழக்கங்களே காரணம் என்று சொல்ல வேண்டும். பெண்கள் திருத்தம் அடைவதைப் பொறுத்தது – நாடு திருந்துவது.” என்ற பாரதிதாசன் பெண்ணியத்தின் முதல் கட்ட கோரிக்கைகள் அனைத்தையும் தன் மொழியில் தயக்கமின்றிக் கொண்டு வந்த பிறகு  “பெண்ணியம் மேலைநாட்டுப் பொருள் அதனைத் தமிழில் பேசுவோர் பண்பாட்டைக் கெடுப்பவர்கள். அவர்களைத் தாக்க வேண்டும்” என்று கூவித் திரிகின்றனர் சில  தமிழ்க் கவிஞர்களும் எழுத்தாளர்களும்.

பெண் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள்,களச்செயலாளர்கள், சிந்தனா வாதிகள், சமூகத்தலைவர்கள் எனப் பெண்கள் தம் வரலாற்றுப் பங்கை எடுத்துக் கொள்ளத் தொடங்கிய போதே தமிழில் எதிர்ப்பு, வெறுப்பு, தாக்குதல்  என்பவை இருந்தன. சிந்திக்கக் கூடிய, தனித்த அடையாளம் கொண்ட, பொது வெளியில் தலைமையேற்க முன் வரும்,  சமூக வெளியில் இயங்க முனையும் பெண்களின் வாழ்க்கைக் கதைகள் வலிகள், ஒதுக்குதல்கள், தனித்த அவலங்கள் கொண்டதாகவே இருந்தது.

இந்தக் காலகட்டத்திலும், இந்திய அரசியல் தொடங்கிய பிறகும் எழுதிய, செயல்பட்ட பெண்கள் பலர் பெண்மை பற்றிய பழங்கருத்தியல்களை, உருவகங்களை உடைக்கவும் புதிய அடையாளத்தை உருவாக்கவும் தம் பங்கை அளித்துள்ளனர். ஆனால் இவையெல்லாம் பெண்ணியத்திற்கான தொடக்கங்களே தவிர பெண்ணியத்தின் தேவைகளை நிறைவேற்றியவை அல்ல.

இதற்கு அடுத்த கட்டமாக  நிகழ்ந்த அடிப்படை மாற்றத் தைத்தான் “தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக்கப்பட்ட அடையாளத் துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறேன். இந்தக் காலகட்டம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள், பெண் உளவியல் என்பது மொழியால், பண்பாட்டு வரலாற்றுக் கதையாடல்களால் கட்டப்படுகிறது, ஆண்  தன்மை என்பது பெண்ணிலைக்கு மறுதலையான எதிர்நிலைக் கட்டமைப்பு என்பது போன்ற பெண்ணியப் புரிதல்கள் தொடங்கி அறிவியல், வரலாறு, மனிதநிலை என்பவை உலகப் பொதுத்தன்மையோ ஒற்றையமைப்போ கொண்ட புனித மெய்மைகள் அல்ல அனைத்தும்  கால-இடத்தன்மை கொண்ட கதையாடல் செயல்பாடுகளே என்ற பின்நவீனத்துவப் புரிதல்கள் வரை தற்போது அறிவமைப்புகளில் பல தலைகீழாக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த தளத்தில் தமிழில் பெண்ணிய உரையாடல் பல புதிய தன்மைகளைக் கொண்டு இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்குத் தனித்தனியான சில பெண்ணியச் சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தம் வாழ்க்கையை அளித்துச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் யார் யார் என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பண்பாட்டு உளவுப்படையினரின், கலை-இலக்கிய பாதுகாப்புப்படையினரின்  தாக்குதலுக்கு அதிகம் உள்ளான பெண்ணிய, பெண்மொழி செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய கணக்கெடுப்பின் வழி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்று பெண்கள்  சிறப்பிதழ்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறுவதும், பெண்கள் தாக்கப்படும் பொழுது ஊடகங்கள் இவர்களில் சிலரிடம் கருத்து கேட்பதும் இவர்கள் பெண்கள் என்பதால் அல்ல செயல்பாட்டாளர்கள், கருத்தியல் போராளிகள் என்பதால்தான். இதனையே பெண்கள் ஊடகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் என்கின்றனர் இந்திய ஞானமரபினர். தமிழின் ஊடக, கருத்தியல் பரப்பில் இவர்களின் இடம் மிகமிகக் குறைவு. தொடர்கதைகள் எழுதி தமிழின் கதைப்பரப்பை பல மடங்கு பெருக்கிய-பெருக்கிவரும் பெண் எழுத்தாளர்களும், தொடர்களில் அழுது தமிழ்ப் பெண்களின் கண்ணீரைப் பெருக்கிவரும் பெண்கலைஞர்களும் பெற்றுள்ள பண்பாட்டு இடத்துடன் ஒப்பிடும் பொழுது பெண்ணிய, பெண்ணரசியல், பெண்ணெழுத்து வழி செயல்பட்டு வருபவர்களின்  இடங்கள் மிகச்சிறிய புள்ளிகளாகவே உள்ளன.

தமிழில் பெண்ணியம்  இன்றும் விளிம்புநிலையில் உள்ள  சிந்தனைப் போக்குதான்.  எல்லா கருத்தியல்களைப் போலவே பெண்ணியத்திலும் வேறுபடும் சிந்தனைப் பள்ளிகள், இயக்கப் போக்குகள் இருப்பது இயல்பானது. சாதி, இன, மொழி அடையாளங்கள் வழி இயங்கும் அரசியல் பரப்பில் பெண்ணியம் தன்னை வேறுபாடுகளுடன் மோதும் பன்மைநிலை அரசியலாக வைத்துக் கொள்ளுவது தவிர்க்க இயலாதது. பெண் எழுத்துக்கள் எல்லாம் பெண்ணிய எழுத்துக்களாக இருப்பதில்லை. ஆனால் பெண்ணியலாளர் ஒருவர் எழுதுவதும் பேசுவதும் அனைத்துப் பெண்களுக்குமானதாக இருக்கிறது, இது தற்காலத் தேவை.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணியச் சிந்தனைப் போக்குகள்  இன்று எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விட கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை விளக்க முயலும் சிந்தனைப் போக்குகள் பெண்ணியத்தை எந்த அளவுக்குப் புரிந்து தம்மை அதற்கேற்ப உருமாற்றிக் கொண்டுள்ளன என்று நாம் பார்க்க வேண்டும்.  அத்துடன் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை நாம் பெண்ணிய நோக்கில் மறுஆய்வு செய்ய வேண்டும்.

தலித் அரசியல், தமிழ் அடையாளம், மொழித் தேசியம் பற்றிய திட்டமிடல்கள் மற்றும் கருத்தாக்க முறைகளின் அடிப்படைகளில் இருந்தே பெண்ணிய கருத்தியல்கள், கேள்விகள் மையஇடத்தில் வைக்கப்பட வேண்டும். இந்துத்துவ அரசியல் முன்வைக்கும் புனிதப்பழமை, புராதன மீட்பு, பண்பாட்டுத் தூய்மைவாதம் என்பவற்றை மொழிவழி முன்வைக்கும் அரசியலாகத் தமிழ் அரசியல் மாறாமல் இருக்க பெண்ணியத்தின் வரலாறு பற்றிய பார்வைகள்தான் வழி காட்டியாக இருக்க முடியும். உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் பற்றிக் கருப்பினப் பெண்ணியம், சூழலியல் பெண்ணியம் கொண்டுள்ள புரிதல்கள் தமிழில் அதிகம் விவாதிக்கப்பட வேண்டும்.  சமநீதி கொண்ட குடிமைச் சமூகத்திற்கான உளவியல், நடத்தையியல் கட்டமைப்புகள் பெண்ணிய அறிவின்வழி மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பொது வெளியில் அதற்கெல்லாம் நேரம்-இடம் வாய்ப்பதில்லை.  “பெண்ணியம் என்றால் மது குடிப்பதும், புகை பிடிப்பதும், மணவிலக்கு பெறுவதும்தான் எனச் சில நாசகார சக்திகள் தமிழ், இந்தியக் கலாச்சாரத்தை கெடுத்துக் கொண்டுள்ளன. இவர்களை வெளியே நடமாடவிடக் கூடாது” என்று வெறிபிடித்து உறுமுகிறவர்கள் நம் பண்பாட்டுக் காவலர்கள். இவர்களுடன் அறிவுப்பூர்வமாகவோ, அறம் சார்ந்தோ பேசிப் பயனில்லை. இவர்கள் தம்முடைய கடவுளர்கள் தொடங்கி கவியரசர்கள் வரை ஒன்றுக்கு மேல் மனைவியர்கள் ஒன்பதுக்கு மேல் காதலிகள் கொண்டு வாழ்ந்ததாகக் கதைசொல்லிக் கொண்டாடிக் கொண்டே  “பெண்மொழி இன்னா ஒடம்பு,  உறுப்புன்னு பேசறதுதானா,  அப்ப நாங்களும் கெட்டவார்த்தயில பேசுவோம்ல” என்று தமிழ்-பாரதப் பண்பாட்டைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் கவிஞரின் கவிதைத் தொகுதியின்  தலைப்பை அவர் பெயரின் பின் இணைத்து எழுதி எழுதித் தம் வன்கொடுமைப் புத்தியை உலகம் முழுக்க பரப்பிக் கொண்ட வலைதள வாசகர்களையும், ஒரு பெண்கவிஞரின் பெயரைத் தம் பன்மொழி ஞானத்தால் மொழிவிளக்கம் கூறி கலகக் காளைகளிடம் கைதட்டல் பெற்றுக் கொள்ளும் ஒலகத்தரம் கொண்ட எழுத்தாளர்களையும் கொண்டதுதான் தமிழின் அ-றி-வு-ல-க-ம்.

பெண்ணியமும் பெண்ணிலைச் சிந்தனை முறையும் தமிழில், இந்தியச் சூழலில் போர்த்தன்மை கொண்டதாக மாறவேண்டிய காலம் இது. பெண்ணிய-விளிம்புநிலைச் சிந்தனையாளர், செயல்பாட்டாளர், கவிஞர் எனப் பல தளங்களில் இயங்கி வரும்  மாலதி மைத்ரி-யின் வாழ்வுடன் பங்கு கொண்டவனாக  அவரால் காப்பாற்றி வளர்க்கப்பட்டவனாக கடந்த இருபத்தாறு ஆண்டுகளில் நான் கற்று வருவது இதுதான். ஒவ்வொரு அறிவுத்துறையிலும், சிந்தனை செயல்பாட்டுத் தளத்திலும் பெண்ணியக் கேள்விகள் வலிவுடன் முன் வைக்கப்பட்டு அனைத்துத் தளங்களும் சீராக்கம் செய்யப்பட வேண்டும். பெண்ணிய விடுதலை பொதுவுடைமைச் சமூகத்தில் நிகழவேண்டிய ஏதோ ஒரு புரட்சிகர மாற்றம் இல்லை, ஜனநாயகம், மக்கள் ஆட்சி, குடிமைச் சமூகம், குடும்பம், தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், உரையாடல்கள் என அனைத்திற்குள்ளும் நிகழ வேண்டிய அடிப்படை மாறுதல்…

நான் சில இடங்களில் முன்பே குறிப்பிட்டதை இங்கு மீண்டும் ஒரு முறை குறிப்பிட விரும்புகிறேன், “பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதை நான் ஏற்கவில்லை, ஆமாம் அவர்கள் ஆண்களைவிட உயிரியல், உளவியல் வகையில் உயர்ந்தவர்கள். இன்றுள்ள மனித சமூகம் ஆண்களின் படைப்பல்ல பெண்மை மற்றும் தாய்மையின் படைப்பு, ஆண் உளவியல் பெண்ணாற்றல் மீதான அச்ச வுணர்வின் வழி நிகழும் எதிர்நிலை உருவாக்கம்.  ஆண்கள் தம் அச்சத்தின் அடிமைகள் அதனால், அச்சம் தவிர், ஆண்மை அழி, இணங்கி இரு, ஈடேற முயற்சி செய்… இது பெண்ணியம் இல்லை, என்றாலும் சொல்லுகிறேன். நான் ஒரு நவீன சிந்தனையுள்ள மனித உயிரி என்றால் பெண்ணியம் எனது இரண்டு நுரையீரல்களில் ஒன்றாக இருந்தே ஆகவேண்டும், என் மூளையின்  இடது பகுதியாக அமைந்தே ஆகவேண்டும்…

உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல் -பிரேம்

உரையாடல்: 5   உலக முதலாளியத்தை வளர்த்த உழைக்கும் வர்க்க அரசியல்
கேள்வி:
உலகளாவிய முதலாளித்துவம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரவலானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாறியுள்ள இன்றையச் சூழலில் உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் குறித்த உங்கள் பார்வை என்ன?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்
பிரேம்
முதலாளித்துவம், உலக முதலாளித்துவம் என்று நாம் அடையாளப்படுத்திக் காட்டுவது மாற்றுச் சிந்தனைத் தளத்தில் நிகழ்கிறது. முதலாளித்துவம், முதலீட்டு அதிகாரம், மூலதனம் காக்கும் அரசுகள், ஆதிக்கம் காக்கும் ராணுவங்கள், மனித உரிமை மறுக்கும் அமைப்புகள் என்ற தொடர் வன்முறைகள் இன்று வலுவடைந்துள்ளன என்பதை இப்படி அணுகிப்பார்க்கலாம். முதலீட்டியம், மூலதன ஆதிக்கம் எப்பொழுதாவது முழுமையாக வலுவிழந்திருந்திருக்கிறதா? அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. மக்கள்சார் அரசுகள், மக்கள் அரசியல், மக்கள் நல ஆட்சிமுறைகள் என்பவை நவீன காலகட்டத்தில தனிமனித சுதந்திரம் என்ற கோட்பாட்டு அடிப்படையில் உருவாகி உலக அளவில் மாற்று அமைப்பு பற்றிய கனவுகளை உருவாக்கின.
கொடுங்கோன்மை ஆட்சிகள், வன்கொடுமை அரசுகள், இனப்படுகொலை நிகழ்த்தும் ஆட்சியாளர்களால் நிறைந்திருந்ததுதானே மனித குலங்களின்- இனங்களின் வரலாறு. பேரரசுகளின் தலைநகரங்களில் இருந்து எவ்வளவு விலகியிருக்கிறதோ அந்த அளவுக்கு கொடுமையின்றி வாழலாம் என்ற நிலையில்தான் கிராம-குடிமரபுச் சமூகங்கள் இருந்தன. நவீன அமைப்புகள் நமக்கு வழங்கிய குடிமை உரிமைகள் சார்ந்து சுதந்திரம், சமநீதி, சமத்துவம், சமஉரிமை என்பவை பற்றி நமக்குக் கனவுகள் உருவாயின. சோஷலிசம், பொது உடைமைச் சமூகம் என்பதெல்லாம் அதற்கு அடுத்த கட்ட மனித முயற்சிகள். இன்று உலகச் சமூகங்கள் ஒவ்வொன்றும் ஒரளவு மனித உரிமை சார்ந்த மதிப்பீடுகளுடன் வாழ்வது அந்த வகை முயற்சிகள், அதற்கான போராட்டங்கள், தம் மக்களுக்காக போராளிகள் செய்த ஈகங்கள் உருவாக்கிய அமைப்பில்தான். உலக முதலாளியம் இன்று வலுவானதாக, உயிரியல் பெரும்போர் இயந்திரமாக மாறியிருந்தாலும் இது ஒரு இடைக்கால நிலை என்றே எனக்குத் தோன்றுகிறது.
இப்படிச் சொல்வதன் மூலம் மீண்டும் செம்படை புறப்பட்டு இந்த மனிதக்குலத்தை மீட்டெடுக்கும் என்று அறிக்கையிட அல்ல. அப்படி நடக்க வேண்டிய தேவையும் இல்லை. மொழி, இனம், சாதி, வாழ்வாதாரம், பண்பாடு, அரசியல், உயிர்வாழ்தல், பாலினம், மண்ணுரிமை என ஏதாவது ஒரு தளத்தில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலை பற்றி, நல்வாழ்வு பற்றி, தன்னுரிமை, தன்மதிப்பு பற்றிய கனவைக் காணாமல் இருப்பதில்லை. தம்மீது கவிந்த வறுமை, ஏழ்மை, அடிமைத்தனம் எதனையும் பாசத்துடன் பற்றிக் கொண்டிருப்பது மனித இயல்பல்ல. அப்படியெனில் இன்றைய தேசிய-பன்னாட்டு முதலீட்டு ஆதிக்கங்கள் எப்படி உலக மக்களை சமூகங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது? நீங்கள் பட்டினியில் கிடந்து சாகத்தான் வேண்டும் என்று சொல்லியா? இல்லையே, நாங்கள்தான் உங்களுக்கான நல்வாழ்வை வழங்குவோம், எங்களுக்காக உழையுங்கள், மூலதனத்தை, தேசிய ராணுவத்தை பலப்படுத்துங்கள், நாட்டுக்காக ரத்தம் சிந்தத் தயாராக இருங்கள், நீங்களும் உங்கள் தலைமுறையும் நலமாக வாழலாம் என்று கூறித்தான் தம்மை நியாயப்படுத்திக் கொண்டும் நிலைப்படுத்திக் கொண்டும் உள்ளன.
தென்னமெரிக்க மக்களின் தண்ணீரையும் செந்நீரையும் உறிஞ்சும் ஐக்கிய அமெரிக்க அரசு தன் மக்களுக்கு சொல்வது என்ன? “உலகின் வளம் எல்லாம் உமக்குத்தான் உயிர்களைக் கொல்வது பற்றிக் கவலை வேண்டாம்” என உறுதி அளிக்கிறது. “ஆப்கான் மக்களைக் கொல்லாமல் அமெரிக்கத் தெருக்களில் நம் மக்கள் அமைதியாக நடமாடவோ ஆடல் பாடல்களில் ஈடுபடவோ முடியாது” என்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஆப்ரிக்க மண்ணைக் கொள்ளையிட்டு தன் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்திற்கு அளிப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றன. உலக முதலாளியம், உள்ளூர் முதலாளியம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தன் மக்களுக்கான நல்வாழ்வு, நீடித்த இன்பம் பற்றிய கனவை உருவாக்கித்தருகின்றன.
பாகிஸ்தானுடன் ஆண்டுக்கு இருமுறை போர் நடத்தினால்தான் இந்தியா வல்லரசாகும் என்றும் இந்தியா வல்லரசானால் அரசின் நியாயவிலைக்கடைகள் வீட்டு வாசலுக்கு வந்து உணவுப் பொருள் வழங்கும் என்பது  போன்ற நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒவ்வொன்றாகத் தகரும் பொழுது மக்கள் மாற்று என்ன என்பதை நோக்கித் திரும்பத்தான் செய்வார்கள். மாற்று அரசியலை, மாற்றுப் பொருளாதாரத்தை, மாற்று வாழ்வியலை இயற்கையும் சூழலியல் நசிவும்கூட நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
உலக அளவிலான முதலாளித்துவ, சந்தைப் பொருளாதார அமைப்பு தனக்கான அடிப்படையை மீண்டும் உறுதி செய்துகொள்ளக் காரணமாக அமைந்தது இயந்திரமையம் கொண்ட மனிதக் கட்டமைப்பு. இயந்திரத் துப்பாக்கிகள் தொடங்கி, எண்மின்னியல் நினைவுக் களஞ்சியங்கள் வரை அனைத்தும் மனித உடல்நீக்கம் கொண்ட தொழில் நுட்பங்கள். பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் கலந்து மார்க்சியத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மாற்று அரசியல்-பொருளாதார அமைப்புகள் முன்னேற்றம்-வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் இயந்திரமைய அமைப்புகளையே பெருமளவில் உற்பத்தி செய்தன. இயந்திர மயமாக்கம்- அரசுமைய அதிகாரம்- முதலீட்டு ஆதிக்கம் அனைத்தும் ஒன்றாகக் கலக்கும் இடம் இது. இந்தக் கலப்பு முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இரண்டிற்கும் மிகவசதியான ஒரு உலகை உருவாக்கித் தந்தது. பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கனவுகள், சமத்துவம், சமநீதி என்ற எதிர்பார்ப்புகள் இரண்டையும் நீக்கிவிட்டால் எந்த ஒரு தேசிய சோஷலிச அரசும் உலக முதலாளியத்தின் ராணுவத் தளங்களில் ஒன்றாக மாறிவிடும். இதுதான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. மார்க்சியம், கம்யூனிசம் எல்லாம் அழிந்து மக்கள் மாபெரும் பேரானந்தப் பெருவாழ்வு பெறப்போகும் காலம் இது என வாணவேடிக்கையுடன் தொடங்கப்பட்டதுதான் இந்தச் சுதந்திர மயமாக்கல், தனியார் வசமாக்கல், உலகமயமாக்கல் என்ற விழாக்காலத் தள்ளுபடி அரசியல். இந்த விழாக்காலக் கொண்டாட்டங்கள் உலகின் 10-முதல் 20-சதவிகித மக்கள் தொகுதிகளை மட்டும் மனிதர்களாக மதிப்பவை. இவர்களுடைய களிப்பும் களிப்புக்கான முன் தயாரிப்பும்தான் உலக வாழ்க்கை என்ற உளவியல் கட்டமைப்பு அனைவருக்குமானதாக எப்படி இருக்க முடியும்?
இன்று உள்ள மக்கள் தொகுதிகள் நுகர்தலுக்கான கட்டற்ற உரிமை கொண்டவர்கள் – நுகர்வுக்குத் தம்மை நிபந்தனையற்று ஒப்படைப்பவர்கள் என்ற இரு பெரும் பிரிவாக பிரிந்துள்ளனர். உழைக்கும் வர்க்கம், உடமை வர்க்கம் என்பவை இன்று இடைநிலை இயந்திரங்களாக மாறி இயற்கை வளங்களை முதலீடாக மாற்றிக் கொண்டுள்ளன. மண்ணின் மக்களை வீடற்றவர்களாக்கி சுரங்கங்களைத் தோண்டி கனிமங்களைக் கொள்ளையிடுவது முதல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம், வணிக வளாகங்களுக்கு ஒளிவெள்ளம் என்ற பெயரில் பலநூற்றாண்டு மனித அவலத்திற்குக் காரணமாக அமையவுள்ள அணுவுலைகளை நியாயப்படுத்துவது வரை உலக முதலாளியமும் – உழைக்கும் வர்க்கத்தின் உளவியல் இருண்மையும் ஒன்றிணைந்துள்ளன. இந்த இணைப்பு அதிக காலம் நீடிக்கக்கூடியதல்ல.
நுகர்வு பெருகிய சமூகம், வாழ்வாதரம் அற்ற சமூகம் என இரண்டு பகுதியாக உலகம் பிரிந்து குடை சாயும் நிலையில் உலக முதலாளியம் தன் கணிணிகளையும் ஏவுகணைகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒரு மூட்டை கோதுமையும் நெல்லும் சோளமும் ஒரு விண்களத்தைவிட மதிப்பு வாய்ந்தது என்பதையும், ஒரு கை தூயநீர் ஒரு மூட்டை அச்சடித்த பணத்தைவிட அரிதானது என்பதையும் உலக விஞ்ஞானிகள் உணர வேண்டிய காலம் உருவாகும். மாற்றுச் சிந்தனைகளின் “எதிர்காலம்” குறித்து நான் கவலைப்படவில்லை… மனிதர்கள் மாற்றுச் சிந்தனைகளின் வழியாவே தம்மை மதிப்பு மிக்கவர்களாக வைத்துக் கொள்ளமுடியும்…
இன்றைய ஒப்பீட்டு அளவிலான மனித நீதியும், அறம்சார் நெறிகளும் மாற்றுச் சிந்தனைகள், மாற்றுச்செயல்திட்டங்கள் வழிதான் காப்பாற்றப்படுகின்றன… தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு கூட “ஆமாம் நாங்கள் படுகொலை செய்தோம், இத்தனை லட்சம்…” என்று சொல்லித் தம் இறையாண்மையைத் தொடரவில்லை. “நாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை போராளிகள்தான் தமிழ் மக்களைக் கொன்றார்கள் நாங்கள் மீதமிருந்த மக்களைக் காப்பாற்றினோம்.” என்றுதான் சொல்கிறார்கள். மண்ணின் மக்களைக் கொன்றொழிக்கும் வல்லாதிக்கப் படைகளுக்கு “அமைதி காக்கும் படை” என்று தான் பெயர். நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புவது மாற்றுச் சிந்தனைகள், விடுதலைக் கருத்தியல்கள்தான் இன்றைய மக்கள் உரிமைகளை, மனித அறங்களைக் குறைந்த அளவில் காத்து வருகின்றன, அவை எங்கும் நிறைந்துள்ள உள்ளார்ந்த போராட்டங்கள், மனித விழுமியத்தின் உள்ளாற்றல் இந்த வகையான மனிதவுரிமைப் போராட்ட உணர்வு.
மனிதர்கள் வன்முறை மட்டும் கொண்டவர்கள் என்றால் சமூக அமைப்புகள் உருவாகியிருக்காது. ஒவ்வொரு அமைப்பும் ஒரு அமைதி ஒப்பந்தம், சமூகம் என்பது தனிமனிதர்களுக்கிடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை. இன்று மதங்கள்கூட நவீனத்துவத்தின் மக்கள் மைய நிலைப்பாட்டைக் கைக்கொண்டு தம் சொல்லாடலை, செயல்பாடுகளை மாற்றிக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணமாக இருப்பது மாற்றுச் சிந்தனைகள், மனித உரிமைக் கருத்தியல்கள் தான்.
பௌத்த, சமண, கிறித்தவ சமயங்கள் தம் காலத்தின் மக்கள் அரசியலை முன் வைத்து தம்மை வடிவமைத்துக் கொண்டன. பிறகு அவை ஆட்சியாளர்களின், அரசுகளின் கருவியாக மாற்றம் பெற்றன. இன்று மீண்டும் அவை தம்மை மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த, அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறுவிளக்கம் செய்து கொள்கின்றன. இதற்கான காரணம் மக்கள் அரசியலும், மார்க்சிய இயக்கங்களும்தான்.
கிறித்தவத்தின் இருபெரும் பிரிவுகளான கத்தோலிக்க (போப்பரசுத் திருச்சபை), புரட்டஸ்டன்ட் (மக்கள் திருச்சபை) சமய நிறுவனங்களும் உழைக்கும் மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இறையமைப்புகளாக மீண்டும் மீண்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சியத்தைக் கற்காமலேயே ஒரு கிறித்தவர் எளியோரின் நல்வாழ்வு, ஏழைகளின் முன்னேற்றம், சுரண்டல்களில் இருந்து மக்களை விடுவித்தல் என்பவற்றிற்காகத் தன் வாழ்வைத் தரமுடியும் எனச் சொல்லும் விடுதலை இறையியலும், இயேசுவும் மார்க்சும் மக்களுக்கான இரு விடுதலைத் தூதர்கள் என்று சொல்லும் புரட்சிகரத் திருச்சபையும்  இன்று உலக அரசியலின் ஒரு பகுதியாக விரிவுபட்டுள்ளன. இஸ்லாத்தின் அறவியல் சிந்தனையாளர்கள் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி என்பவை சமய வழியில் உறுதி செய்யப்பட்ட கருத்துக்கள் அதனால் இஸ்லாம் எதிர்கால மக்கள் அரசியலாக மறுஉருவாக்கம் பெறும் என்று அறிவிக்கிறார்கள்.
தற்கால வாழ்வியல் சார்ந்து பன்முகப்பட்ட விடுதலைக் கருத்தியல்கள் தற்போது உருவாகிவருகின்றன. இவை ஒன்றே போல ஒற்றைத் தன்மை கொண்டவைகளாக ஒருங்கிணைந்தவைகளாக இருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. உலக அளவிலான மாற்றுச் சிந்தனைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் போது சற்றே சிக்கலாகத் தோன்றும் நிலைக்களம் இதுதான். இந்த தளத்தில்தான் இலக்கியம், கலைகள், கருத்தியல் ஆய்வுகள், அறிவுத்துறைகள் பெரும் பங்காற்ற இயலும், மாற்றுச் சிந்தனைகள், மாற்று அறங்கள், மாற்று அரசியல் களங்களுக்கிடையில் உரையாடலை, பரிமாற்றங்களை, புரிந்துணர்வுகளை வளர்ப்பதற்கான சொல்லாடல்களை, கதையாடல்களை உருவாக்கித்தர அவற்றால் முடியும்.
மாற்றுச் சிந்தனைகளை அன்றன்று புதுப்பித்துக் கொண்டே இருப்பதும், ஒவ்வொரு தளத்திலும் எடுத்துரைத்துக் கொண்டே இருப்பதும் ஒரு போராட்ட வாழ்முறை. தன் மக்களைக் காக்க உயிரைத் தந்த இனக்குழு போராளிகளுக்கு இருந்த தன்னீகத்தில் ஒரு சிறுபகுதி மாற்றுச் சிந்தனைகள், மாற்று அரசியலை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இருந்துதான் ஆகவேண்டும்… நான் புரட்சிகர போரைப் பற்றிச் சொல்லவில்லை, தன்மதிப்பும், தன் பிள்ளைகள்மீதான பாசமும், அவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளும் கொண்ட ஒரு தாய்க்கும், தந்தைக்கும் இருக்கக்கூடிய, இருக்க வேண்டிய போர்க்குணம் பற்றிச் சொல்கிறேன்.
மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை...அதுதான் இன்றைக்கான அழகியல், கவிதையியல் … அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த்தெடுப்பதும்தான் அறிவுத்தளத்தினர், சிந்தனையாளர்கள், மக்களுக்கான இலக்கியவாதிகள் என்பவர்களின் பணி, வாழ்வு எல்லாம்…

எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல் -பிரேம்

 

உரையாடல்: 4:

எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல்

 

கேள்வி:

மேற்குலகில் தத்துவவாதிகள் (philosophers), அறிவுஜீவிகள் (public intellectuals), படைப்பாளிகள் (writers), இலக்கியவிமர்சகர்கள் (literary critics), திரைப்பட விமர்சகர்கள்  (film critics) என்போர் தனித்தனி வகைமைக்குள் இயங்குபவர்களாகவும் அவர்களுக்கென ஒருமரபும் இருந்துவரும் நிலையில், நமது சூழலில் எழுத்தைக் கைக்கொள்பவர்கள்,  அனைத்திலும் செயற்பட விழைபவர்களாக உள்ளது ஏன்? அது சரியானது தானா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

இதுபோன்ற கருத்து-அறிவு சார்ந்த வேலைப் பிரிவினைகளை அடிப்படையில் நாம் மறுக்க வேண்டும். மேற்கின் உயர்தகுதி தேர்ந்தெடுப்புமுறை, தனிச்சிறப்பு அடையாளம் என்பவை ஒதுக்குதல் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளவை. அனைவருக்குமான அறிவு, அனைத்தைப் பற்றியுமான அறிவு என்பது பொதுமைப்பட்ட நிலையில்  இந்த வகை அறிவுஆதிக்கம், அறிவு அதிகாரம் இயங்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு உயர் தொழில்நுட்பத்  துறையாக மாறியுள்ளது.  இது முதலீட்டு குவித்தல் போலச் சுரண்டலை அடிப்டையாகக் கொண்டது. சமச்சீரற்ற அறிவுப்பரவல் வழி அதிகாரம், அடக்குமுறை, அடிமைத் தன்னடையாள உருவாக்கம் என்பவை வலுவடைகின்றன.  அப்படியென்றால் அனைவரும் அனைத்துத் துறைபற்றியும் பேசவும், எழுதவும் பழகித்தான் ஆகவேண்டும். நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு என்ன இருக்க முடியும். தத்துவம், இலக்கியம், திரைப்படம், கலை, அழகியல், உளவியல், அரசியல் என அனைத்தைப்பற்றியும்,  அனைத்தையும் கலந்து  அனைவரும் எழுதுவதன் மூலம்தான் அறிவுத்துறையின் வன்முறையை, அதன் அரசியல் வன்முறையை நாம் நீக்க முடியும்.

தன்  சமூகத்தின் தேவைக்காக ஒருவரே  பலதுறைகள் பற்றி எழுதுவதற்கும், சந்தையின் தேவைக்காக,  பண்பாட்டு முதலீட்டியத்தின் முகவர்களாக எல்லாவற்றைப்  பற்றியும் ஒரு சிலரே எழுதிக் குவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றித்தான் நீங்கள்  கேட்பதாக நினைக்கிறேன்.

எழுத்து, வாசிப்பு என்பது மற்ற அறிவுத்துறைகள் போலவே பயிற்சியும், உழைப்பும் தேவைப்படும் செயல்பாடு. அதனால் எழுதப் பயிற்சி பெறும் ஒருவர் அரசியல் சார்ந்தவராக இருந்தால் தன் உழைப்பை பயிற்சியைப் பயன்படுத்தி பலதுறைகளைப் பற்றி எழுத வேண்டிய தேவை ஏற்படும். அரசியல் நீக்கம் கொண்ட ஒருவர் அதே பயிற்சியைக் கொண்டு பலதுறைகள் பற்றியும் சந்தைக்கான எழுத்துக்களை உருவாக்குவார். ஒரளவு அறிவும் பயிற்சியும் உள்ளவர்கள் இவர்களின் எழுத்தின் உள்ளீடற்ற தன்மையை உடனே புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய வாசிப்புப் பள்ளியில் பழகிய, பயின்ற அனுபவத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். மார்க்சியக் கல்வி தொடங்கும் இடம் அரசியலாக இருக்கும் பின் பொருளாதாரம், வரலாறு, தத்துவம், அழகியல், இலக்கியம், கவிதையியல் என ஒன்றுதொட்டு ஒன்றாக விரிந்து நாடகம்,  திரைப்படம், களஆய்வுகள், தற்கால வரலாறு என உங்களை பல தளங்களில் இயங்க நிர்ப்பந்திக்கும். அம்பேத்கரை வாசித்துக் கற்பதும் புரிவதும் மானுடவியல், சமய வரலாறு, இந்தியச் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் என பல அறிவுத்துறைகள் சார்ந்த பயிற்சியாக இருப்பதை நாம் அறிவோம்.

ஒரு குலமரபுச் சமூகத்தில் உழைப்பு, கலை, தற்காப்புப் போர் என அனைத்தும் ஒவ்வொருவருக்கும் பழகியிருப்பது போல நம் காலத்திய அறிவுத்துறைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பொழுது நாம் அனைவரும் அவற்றைப் பற்றிச் சிலவற்றை எழுதவும், பேசவும் வேண்டும். நான் ஒரு படைப்பிலக்கியவாதி என்றால் பிறருடைய அறியாமையை என் மூலதனமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை, ஒரு தத்துவவாதி என்றால் புனைவெழுத்தை சிறுமை கொண்டதாகப் பார்க்கத் தேவையில்லை.

தமிழ்ச்சூழலில் எழுத வரும் மிகச் சிலர் இலக்கிய விமர்சனம், திரைப்பட விமர்சனம் என்ற இரு தளங்களில் கூடுதலாக இயங்க முயற்சி செய்வதை நாம் கவனிக்க முடியும். தனக்குப் பிடித்த இலக்கிய வகையை பெருமைப்படுத்தவும், தனக்குப் பிடித்த சில  திரைப்படங்களை புகழவும் இது தேவைப்படுகிறது. தனக்குப் பிடிக்காதவைகளை ஒதுக்கி தான் விரும்பும் ஒரு சிந்தனைப்பள்ளியை நிறுவ இந்த எழுத்துக்கள் அவர்களுக்கு உதவுகின்றன.

திரைப்படங்கள் குறித்து நான் கட்டுரை எழுதிய போது திரைத்துறைக்கு போகும் முயற்சியா எனச் சில  நண்பர்கள் கேட்டார்கள். அமெரிக்க வல்லாதிக்கம் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் அமெரிக்காவுக்குப் போகும் முயற்சிகள் என்றால் இவை திரைத்துறைக்கு போவதற்கான முயற்சிகள்தான் என்றேன். கவிதை, நாடகம், தத்துவம், புனைவுகள், கோட்பாடுகள் எனப் பல கதையாடல் வடிவங்களில் இயங்கும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும்… ஒன்றின் பயிற்சி மற்றதற்கான தொடக்கமாக இருக்கிறது. ஒன்றை தொடங்கும் போது அதற்கான கூடுதல் உழைப்பும் திறனும் தேவைப்படுகிறது. இந்தக் கூடுதல் உழைப்பைத் தருவதற்கான பொறுப்பற்றவர்கள் தமக்குக் கிடைத்த ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு அனைத்தைப் பற்றியும் எழுதுவது நம் காலத்திற்கான அறிவுருவாக்கத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பவர்கள். இதற்கான தளங்களை ஊடகங்கள் சில உருவாக்கித் தருகின்றன.

நம் காலத்திய அறிவு பல தளங்களில் இயங்குவது தவிர்க்க இயலாத நிகழ்வாக மாறிவிட்டபின், அறிவுத்துறைகளை நாம் தனித்தனியாகப் பயில வேண்டியது அவசியம். இந்தத் தனிப்பயிற்சி தரவுகளைத் தேடித் தரவும், அவற்றைப் பகுக்கவும் தொகுக்கவும் உதவக்கூடியது. ஆனால் இவற்றை அரசியல் தளத்தில் பொருத்திக் காட்ட,  சமூக அறிவுருவாக்கத்தில் ஒருங்கிணைக்க, செயல்படும் அழகியலாக உருவாக்க அனைத்தையும் இணைக்கும் பன்மை அறிவு தேவைப்படுகிறது. இதில் நமக்குப் பெரும் சிக்கல் உள்ளது.

தமிழ் இலக்கியத்தைக் காலவரிசைப்படி கற்றுள்ள பலரை நாம் தமிழறிஞர்கள் என்கிறோம், இவர்களுக்குத் தற்கால அரசியல், அழகியல், சமூகவியலில் பயிற்சியோ பழக்கமோ இல்லாததால் பிற்போக்குச் சிந்தனையின் முகவர்களாக செயல்படுவதைத் தன் வாழ்க்கைக் கடனாகக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சியம் அறிந்து பயின்றவர்கள் பலர் கலை-இலக்கியம் பற்றி, சூழலரசியல் பற்றி காலப்பொருத்தமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். திரைப்பட வரலாறு தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் பலர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையோ, தமிழின் குல-குடி மரபுகள் பற்றியோ அடிப்படைகளைக்கூடத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இலக்கியம் பயின்று, எழுதவும் பழகிய சிலர் தமிழில் அரசியல், தத்துவம், நுண்கலைகள், திரைப்படம், ஓவியம், இசை  எனப் பலதுறைகளில் இயங்கும் ஆர்வம் கொள்வது, செயல்படுவது அறுபதுகள் எழுபதுகளில் ஒரு அடையாள உளவியலாக உருவாகியிருந்தது. எழுத்தைப் பழகிய பலர் திரைப்படம் வழியாகத் தம்மை மேலும் வெளிப்படுத்த முடியும் என்றும் அதில் சாதனைகளைச் செய்யமுடியும் என்றும்  நம்பினர். இந்தியத் திரைக்கலைஞர்கள் சிலர் இலக்கியப் பயிற்சி கொண்டிருந்ததும் ரித்விக் கட்டக், சத்யஜித் ரே போன்ற சிலர் தங்கள் மொழியில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய படைப்பாளிகளாகவும் இயங்கி வந்ததும் தமிழில் பல எழுத்தாளர்களுக்கு  முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன்  எழுபதுகளில் சென்னையில் வாழத்தொடங்கிய போது திரைப்படத் துணை இயக்குநராக இருந்தது பற்றியும் அப்போது உலக அளவில் சாதனைகள் புரிய திரைப்படம்  ஒன்றே சிறந்த வழி என்று நம்பியிருந்தது பற்றியும் தனக்கே உரிய தற்கேலியுடன் சொல்லுவார், முடிவில் படம் பிடிக்கக் கற்றுக் கொள்ளாமல் புகைபிடிப்பதைக் கற்றுக் கொண்டது பற்றிச் சொல்லியபடி ஒரு சிகரெட்டைப் பத்தவைப்பார். பாரதிதாசன் படம் பிடிக்கச் சென்ற கதையை பிரபஞ்சன் சொல்லிக் கேட்க வேண்டும்,  படம் படுத்திய பாடு தமிழின் தனி வரலாறாக நீளும். நான் அரும்பு மாணவர் இதழில்  துணையாசிரியராக இருந்தபோது, அப்போது வெளிவந்திருந்த மகாநதி திரைப்படம் தமிழில் தேவையான ஒரு திரைமொழியை கொண்டுள்ளது பற்றி ஒரு கட்டுரை எழுதி பக்கம் கருதி குறைத்து வெளியிட்டேன்.  அதில் நீக்கப்பட்ட பக்கங்களைப் பார்த்த என் எழுத்தாள நண்பர் என்ன இது வேண்டாமா இப்படிக் கொடுங்க நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கேட்டு வாங்கி சில வாக்கியங்களை இணைத்து கணையாழி இதழில் தன் பெயரில் வெளியிட்டார். சில நாட்களில்  வந்த ஒரு அழைப்பினை என்னிடம் கூறி வாழ்க்கையே மாற இனி வாய்ப்பு உண்டு நீங்க வரிங்களா இல்லையா என்று பொறுப்புடன் கடிந்து கொண்டார். நான் எழுதியது அந்த திரைப்படக் கலைஞருக்கு பிடித்திருந்தால் அவர் என்னை வந்துப் பார்த்துப் பேசட்டும், நான் ஏன் அவரைப் போய் பார்க்க வேண்டும் என வேடிக்கையாகவும் வினையாகவும் சொல்லி வைத்தேன்.   “பாருங்க ராஜன் இந்த மனுசன் தானும் பொழைக்க மாட்டாரு கூட இருக்கிறவங்களையும் பொழைக்கவிட மாட்டாரு” என்று வருத்தப்பட்டார் எழுத்தாள நண்பர்.  ‘நீங்க போய் வாங்க உங்க பொழைப்ப நான் கெடுக்க மாட்டேன்’ என்று அவரை அனுப்பி வைத்தேன். இப்படித்தான் இந்த எழுத்து நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.

திரைப்படக்காரர்களிடம் தனக்குத் தெரியாதது உலகில் எதுவும் இல்லை என்று வியப்பை உருவாக்கவே சில எழுத்தாளர்கள் தற்போது  ஆன்மிகம் தொடங்கி அமெரிக்க அரசியல் வரை, தாஸ்தெயெவஸ்கி தொடங்கி தாஜ்மகாலின் அறியப்படாத வரலாறு வரை பலவற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய புத்தகத்தின் பெயர் ஒரு நடிகரின் வாய்ச்சொல்லாக அமைந்து விட்டால் தான் எழுதியதின் பயனை மட்டுமின்றி பிறந்ததின் பயனையும் அடைந்து விட்டதாகப் பெருமையில் நுரைத்துப் பறக்கும் தமிழ் எழுத்தாளர்கள்- படைப்பாளிகள் தற்போது தத்துவ வாதிகளாக,  அறிவு ஜீவிகளாக, இலக்கிய விமர்சகர்களாக,  திரைப்பட விமர்சகர்களாக எல்லா வடிவிலும் இயங்க நினைப்பது எதற்கானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

திரைப்படம் பற்றி இன்று சிலர் எழுதுவதையும் பேசுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அப்படம் பற்றிய சிலரின் எழுத்து தீர்த்துவிடுகிறது. ஆரண்ய காண்டம் (தியாகராஜன் குமாரராஜா,2011) படம் பற்றி உலக சினிமாவில் துறைபோகிய ஒரு எழுத்தாளர் (லத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்குநர்களைத் தன் வாசகராகக் கொண்டிருப்பதாகக்கூட சில பேச்சுகள் உண்டு) தன் வாசக வட்டத்திடம் விரிவாகப் பேசுகிறார். கேட்பவர்களுக்கு உலக சினிமா தெரியவா போகிறது என அவர் நம்புவதற்கு இடம் உண்டு.  இன்று மின்எண்ணியல் வடிவில் அனைத்துப் படங்களும் கிடைக்கும் என்றாலும் அனைவருக்கும் இணையம் ஒத்துழைக்காது இல்லையா.  அவர் சொல்லகிறார் “ஆரண்ய காண்டம் படம் உலக சினிமாவில் எதனைப் போலவும் இல்லை,  இந்தப் படம் வேறு எந்தப் படத்தையும் எனக்கு நினைவுபடுத்தவில்லை என்பதே இதன் சிறப்பு”. உலக சினிமா பற்றி இவருக்கு ஒவ்வொரு இழையும் தெரியும் என்பதை நம்பும் ஒரு பார்வையாளர் இதனைத் தன் கல்வியாக எடுத்துக் கொள்வார் என்பதை நாம் மறுக்க முடியாது. அப்படத்தின் இயக்குநருக்கு நிச்சயம் சிரிப்பு வந்திருக்கும். சிட்டி ஆஃப் காட், அமரோஸ் பெரோஸ், பல்ப் பிக்ஷ்சன் என வரிசையாக சில  படங்களைச் சம அளவில் எடுத்து துண்டு துண்டாக நறுக்கி,  வேகவைத்து, நொதிக்கவைத்து, வடிகட்டி, சென்னைத் தமிழ் மணம்  ஊட்டி தயாரிக்கப்பட்ட பானம் அது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகின் துணைஇயக்குநர்கள், இணைஇயக்குநர்கள், எதிர்கால இயக்குநர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அப்படத்திற்கு ஒளி அமைப்பு செய்த தொழில்நுட்ப உதவியாளர்களிடம் கேட்டால்கூட “படத்தில் மறைந்துள்ள படங்களின்“ பெயர்களைச் சொல்வார்கள். அப்படிப் படம் பார்த்து கதை சொல்வதும் படம் செய்வதும் திரைத்துறையில் விரும்பத் தகாத வினோத நடத்தையும் அல்ல. நான் சொல்ல வருவது உலக சினிமாவை ஓயாமல் சுவாசிக்கும் ஒரு பேரறிஞர் தன் “கலகக் கண்மணி” களுக்கு அடிப்படையிலேயே தவறான தகவல் ஒன்றைத் தருகிறார். இதனை அவருடைய “வலையில்” சிக்கிய ஒவ்வொரு கலையன்பரும் ஒரு நூறு பேருக்குக் கொண்டுசேர்ப்பார்… இப்படித்தான் நம் காலத்திய தமிழ் அறிவு நலிவடைய நேர்கிறது. மாறுபட்ட பார்வைகளைத் தருவது  ஒருவருடைய உரிமை, ஆனால் பார்ப்பதையே மாற்றிக் கூறுவது திட்டமிட்ட மடைமை…   எழுத்தை, அறிவை நேசிக்கும் ஒருவர், தன் சமூகத்தை மதிக்கும் ஒருவர் செய்ய முடியாத செயல் இது.

உரையாடல்: 4 : 1

உரையாடல்: 3 அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்-பிரேம்

 

உரையாடல் : 3

அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்

 

கேள்வி

ஒரு இலக்கியப் பிரதியின் வெகுமதியை, பெறுமதியை பரந்த இலக்கிய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள், தங்கள் நுண்ணறிவுத் திறனால் மதிப்பிட இயலும் என நம்பப்பட்டும், அத்தகைய வாசிப்பனுபவம் உள்ளவர்கள் என அறியப்பட்டவர்கள், உண்மைத் தன்மை, வாசிப்பனுபவம், அகவெழுச்சி,  தரிசனம் போன்ற பூடகமான சொற்களைக் கொண்டு இலக்கியப் பிரதிகளின்  தரப்பட்டியல்களை உருவாக்கிக்  கொண்டு மிருந்த காலத்தில் மொழியியல், அமைப்பியல், தொன்மவியல் அடிப்படைகளில் கலை இலக்கியங்களை அணுகவும், இலக்கியப் பிரதிகளுக்குள் இயங்கும்,  மோதிக்கொள்ளும்  சமூகக் கருதுகோள்களைப்  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் ஆரம்பகட்ட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால்  தற்போது இவற்றிற்கான தடயங்களே  தெரியாத வகையில்  மீண்டும் கலை இலக்கியங்களின்  மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதை எவ்வாறு  விளங்கிக்  கொள்வது?   இதைக் குறித்து உங்கள்  விளக்கம்  என்ன?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

பதில்

பிரேம்

 சமூக வாழ்க்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டது, தனிமனிதர்கள்  அரசியலால் உருவாக்கப்பட்டவர்கள், தனிமனிதர்களுள் அரசியல் ஊடுறுவியுள்ளது, இருமனிதர்களுக்கிடையில் நிகழும் ஊடாட்டம் மட்டுமல்ல தனி ஒரு மனிதருக்குள் நிகழும் உள்ளோட்டங்களும்கூட  அரசியல் தன்மைகொண்டது, அரசியலை நிகழ்த்துவது என்ற கருதுகோள்களை ஏற்றுக்கொண்ட தளத்தில்தான் இந்த கேள்விக்குப் பொருள் உள்ளது. அதற்குப் பிறகே நாம் இலக்கியத்தின் அரசியல், அரசியலை அடிப்படையாகக்  கொண்ட இலக்கியம், இலக்கியத்தின் அரசியல் வடிவம் என்பவை பற்றிப் பேச முடியும்.  இலக்கியத்தை வைத்து இந்தக் கருதுகோள்களை மறைத்து விட வேண்டும், இப்படிப் பட்ட புரிதல்களை இல்லாமலாக்கிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கும் பண்பாட்டு அரசு இயந்திரங்கள் (Cultural State Apparatus) இவ்வகைக் கேள்விகள் உருவாவதற்கான தளங்களையும் அழித்துவிடக் கூடியவை.  அரசியலை அறியவும், இயக்கவும் கட்டுப்படுத்தவும் சிலருக்கு மட்டும் உரிமை உண்டு, சிலர் அதனைச் செய்தால் போதும் மற்றவர்கள் அதற்குக்  கட்டுப்பட்டு அடிமைகளாக இருந்து வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாத விதியாகத் தொடர  வேண்டும் என்றால் அதற்கு ஒரு அமைப்பு செய்யவேண்டியது தனிமனிதர்களின் அரசியல் நீக்கம். தனிமனிதர்களை அரசியல் நீக்கம் செய்யப் பலவித உத்திகள்  உள்ளன. அந்த உத்திகள்- கருவிகள் மதம்-பக்தி, அழகியல், கலைச் செயல்பாடுகள், ஊடகங்கள், இலக்கியம் என்ற வடிவத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றன. மார்க்சிய அணுமுறையின் மறுக்க முடியாத பகுதியிது.

அரசியல் விடுதலைக்குத் தொடக்கம் ஒவ்வொருவரும் அரசியலடைவது.  அரசியலடைவதைத் தடுத்து அரசு வயப்படுத்துவது என்ற செயல்பாடு ஒன்று உண்டு. அதன் வழியாக ஒரு அமைப்பு அரசியல்- எதிர்அரசியல் களங்களைக் கையாள முடியும். இதனை  உளவியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பாகவே நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தன்னை அரசின் குறுகிய வடிவமாக- அதன் செயல்படும் கருவியாக வைத்துக் கொண்டு  மற்ற ஒவ்வொருவரையும் கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது, தீர்ப்பு வழங்குவது, தண்டிப்பது அதற்குத் தன் வலிமை போதாத போது குழுக்களாகச் சேர்ந்து தண்டிப்பது அதற்கும் மீறிய நிலையில் அரசின் பெருந்தண்டனைக் களத்திடம் அந்த மற்றவரைக் கொண்டு ஒப்படைப்பது என்ற வடிவத்தில்  தனி மனிதர்களின் அரசுவயப்படும் உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது இதனை அரசு-அடிமைகள் என்ற உளவியல் இணைப்பு என்று கூறலாம். பாலடையாள நுண் அரசியலில் இது மிகத் தெளிவாக வெளிப்படும், ஆண்மையத்தன்மையும் அரசு மையத்தன்மையும் ஒப்பமைப்புகளாக இயங்கும் தளம் இது.  அரசு- அரசின் உடல் என்னும் ஆண்வடிவக் கட்டமைப்பு போர் இயந்திரத்தின் வழியாக எங்கும் நிறைக்கப்படுகிறது. எங்கும் நிறைக்கப்பட்ட அரசு-அடிமைகள் உறவைப் புரிந்து கொள்வது அரசியலாக்கத்தின் தொடக்கம். “நான் அரசு அல்ல நான் நிகழ்த்துவது அரசியல்” என்ற அரசியலாக்கக் கருத்தமைப்பு அடுத்த கட்டத்தில் விடுதலை, அரசு நீக்கம், அரசுமைய நீக்கம்  என்பதை நோக்கிச் செலுத்தக்கூடியது.  இந்த அரசு மைய நீக்கம் மக்கள் ஆட்சி, ஜனநாயக அரசியல், மனித உரிமைகள், குடிமைச் சமூகம், சமத்துவம் என்பவற்றை நோக்கிச் செலுத்தக்கூடியது. அப்படியெனில்  ‘அரசு-அடிமைகள்’ கட்டமைப்பைத் தொடர அதிகார அமைப்பின் அனைத்து உத்திகளும் பயன்படுத்தப்படும், அரசியலாக்கத்திற்கு எதிரான கருத்தியல் தாக்குதல் அனைத்து தளங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இவற்றில் ஒரு பகுதியான கலை இலக்கிய வடிவங்களை நீங்கள் குறிப்பிட்ட  மொழியியல், அமைப்பியல், தொன்மவியல்  அடிப்படைகளில் அணுகி, இலக்கியப்  பிரதிகளுக்குள்  இயங்கும், மோதிக் கொள்ளும்  சமூகக்  கருதுகோள்களை  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதென்பது வாசிப்பை மட்டுமின்றி வாழ்வையும் அரசியல் மயப்படுத்தும் செயல்பாடு இல்லையா?

இதனை இல்லாமலாக்கக் கையாளப்படும் உத்திகளில் ஒன்றுதான் இலக்கிய வாசிப்பை “வெறும் கருத்துரைப்புகளாக” மாற்றுவது. இதற்கு அதிக வாசிப்போ, அறிவுத்துறை சார்ந்த பயிற்சியோ, கலை-இலக்கியம் பற்றிய ஆய்வுத் திறனோ தேவையில்லை. அந்த அந்த காலத்தின் பொதுப்புத்திவழி உருவான உணர்வுநிலைகளை எடுத்துக்கொண்டு அவற்றைச் சில கூடுதலான உதாரணங்கள், சொல்லணிகள் வழி விளக்கும் திறன், பயிற்சி போதுமானது. பக்தி அனைவருக்கும் இருக்கும், ஆனால் தேவாரம், திருவாசகம் அல்லது நாலாயிரத்திவ்விய பிரபந்தம் கலந்து அதனைச் சொல்லக்கூடிய ஒருவர் அக்காலத்தின் அருள்நெறிச் செல்வர் என்ற இடத்தை அடைகிறார். அவர் மக்களின் முன் தெய்வத் திருவுருவாகத் தோன்றி பக்தி என்ற உணர்வை அக்காலத்திற்குரியதாக உறுதி செய்கிறார்.

நவீன இலக்கியக் களத்தில் இதற்கு சில சிக்கல்கள் முன்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சுப்  பொறியின் வழி அறிவுருவாக்கம் புதிய வடிவத்தை அடைந்தபோது இந்தச் சிக்கலை கையாள சில அறிவுசார் குழுக்கள் உருவாயின. வள்ளலார் நவீன தனிமனிதர்கள் கைக்கொள்ளத்தக்க வகையில் இறைமைக் கோட்பாட்டை உருமாற்ற முனைந்த போது புதிய வடிவிலான கோயில், வழிபாட்டு முறை, ஓளிச்சுடர் உருவம், ஜீவகாருண்யம் எனப்பல புத்துருவாக்கங்களைச் செய்கிறார். பத்திரிகையாளர் பாரதி பக்தியை, இறைமையைத் தேசியம், தேசபக்தி, பாரதமாதா என்ற வடிவில் காணவேண்டியிருந்தது.

இந்த இரு நிலைக்கும் புறம்பாக அயோத்திதாசர், பெரியார், பாரதிதாசன் என்ற சிந்தனையாளர்கள் புதிய மொழியமைப்பை, கதையாடல் முறையை உருவாக்கித் தரவேண்டியிருந்தது. சமய மறுப்பு, நவீனச் சிந்தனைகள், நவீன அரசியல்-சமூகம், சமத்துவம், பகுத்தறிவு என்பவை பற்றிப் பேசவும் விளக்கவும் முயன்ற நம் காலத்தின் சிந்தனையாளர்களுக்கு இதுவரை இருந்தவை அனைத்தையும் மறுக்கவும், புதியனவற்றை நிறுவவும் அதிகம் விளக்கம் தர வேண்டிய கடமை இருந்தது.  இவர்கள் உலக வரலாறு, அரசியல், சட்டம், நீதி,  அறிவியல் தொடங்கி உடன் கால வழக்காறுகள் வரை அனைத்தையும் துணையாகக் கொண்டு புராணங்களை, சாதி-சமயக் கட்டுக்கதைகளை, அடிமை உளவியலைக் கட்டமைக்கும் அனைத்து வகையான சொல்லாடல்களையும் மறுத்தும் எதிர்த்தும் பேச வேண்டியிருந்தது.  சாதி ஒழிப்பு, சமத்துவ சமூகம், சமநீதி, பெண்விடுதலை, இனம்-மொழி  அடையாளம், புதிய சமூக நிறுவனங்கள் என அனைத்தையும் உலகின் மாற்றுச் சிந்தனையாளர்கள் வழி அறிந்து தம் சமூகத்திற்குரியதாக மாற்ற முனைந்த இவர்கள் வெறும் கருத்துரைப்பாக  “நான் உணர்ந்த வகையில் இதனைச் சொல்கிறேன், என் கடன் சொல்லி விட்டுச் செல்வதே”  என இருந்து விடமுடியாது. இந்திய அளவில் அம்பேத்கர் இதே போன்ற பெரும் பாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். பழமையால் கட்டமைக்கப்பட்ட அறிவுதளங்களை உடைத்து நீக்கி புதியவற்றை அமைத்துத் தரும் பெரிய உழைப்பை அவர் மேற்கொண்டார். பெரும் தர்க்க அறிவும், வாசிப்பும் இன்றி வேதங்கள் தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் வரை அனைத்தையும் விமர்சிக்கும் பணியை ஒருவர் செய்யமுடியாது.

மேற்சொன்ன மாற்று அறிவுக்கு மறுப்பைச் சொல்ல வந்தவர்கள் கைக்கொண்ட முறை என்ன? வெறும் உள்ளொளி, தெய்வவாக்கு, மனதறியும் மனதின் மொழி என்ற சொல்லாடல்தானே. “இல்லையென்பாரின் மனதிலும் இருக்கும் ஈசனே, இல்லையென்ற சொல்லையும் இயக்கும் நேசனே”  என்று இமைகளை மூடிச் சொல்லிவிட்டால் போதும், “இல்லையென்று சொல்லிச் சொல்லியே உன் பெயரை இத்தனை முறை சொல்லச் செய்கிற எல்லையில் நாதனே என் போதனே புண்ணியா” என்று பாடிவிட்டால் பகுத்தறிவு மயக்கங்கள் பறந்தோடிப் போகும்.

தமிழ் நவீன இலக்கியத்தில் இப்படியொரு இலகுவான அறிவுமறுக்கும் அறிவு மரபு ஒன்று உருவானது. மார்க்சிய-பெரியாரிய, பகுத்தறிவுச் சிந்தனைகளை சிறு கிண்டல் செய்துவிட்டு கடந்து செல்வது, அல்லது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்பது போல மனதின் உள் இடுக்குகள் பற்றிய ஆய்வைச் செய்து உலகுக்கு உரைப்பது என சில குழுக்கள் இயங்கி வந்தன. இடதுசாரி  சிந்தனைகளை ஒரு வரியில் மறுப்பது அல்லது அறைகுறை அ-மார்க்சிய கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுவது, இதுவே போதுமானது, இவர்கள் மார்க்சியம் கடந்த அறிவுஜீவிகளாக மதிக்கப்படுவதற்கு. மார்க்சியம் பேசியவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிராய்ட், யுங் பிறகு ஆல்பர் காம்யு என ஏதாவது பெயரைச் சொல்லித் தப்பிப்பது. இந்த எழுத்தில் இத்தனை சதவிகிதம் வாழ்க்கையிருக்கிறது, இதில் நம்பகத் தன்மையில்லை என்று ஒருவரி சொல்லிவிட்டு தனக்குப் பிடித்த ஒரு நாவலில் நம்பகத்தன்மை எப்படியெல்லாம் பொங்கிவழிகிறது என  ஒன்பது பக்கம் விளக்கம் தருவது… என நவீன இலக்கியத்தில் எத்தனையோ கருத்துரைப்பு உத்திகள் கையாளப்பட்டு வந்துள்ளன. நமது மார்க்சியத் தோழர்களுக்கு மனம், வலி, குழப்பம் என்று ஏதாவது ஒரு சொல் வந்துவிட்டாலே அது அமெரிக்கச் சதிகாரர்களின் அடுத்த கட்ட தாக்குதல் என்று தோன்றிவிடும். இடதுசாரிகளும் வெறும் கருத்துரைப்பு உத்திகளுடன் நிறுத்தாமல் மேற்கோள்கள், வரலாற்றுத் தரவுகளுடன் கூடுதலான கருத்துரைப்பு உத்தியைக் கையாள வேண்டிய அவலநிலைதான் இருந்தது. இதற்கு நடுவில் பின்அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணிய  விளக்கமுறை, பகுப்புமுறை  உத்திகள் மேலைநாடுகளில் இருந்து கொண்டுவந்து தமிழில் வலிந்து புகுத்தப்பட்டன. இதனைச் சான்றோர்கள் சிலர் இப்படித்தான் சொன்னார்கள், சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அறிவு அல்லது தமிழ் அறிவு பொங்கி வழியும் இவர்களில் பலருக்கு “இந்தியா சேரி, ஊர் என  இரண்டாக இருக்கிறது” என்ற அம்பேத்கரின் கருத்தை மேற்கோள் காட்டினாலே அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்தியா என்பது 1950-க்கு பிறகு உருவான ஒரு நாடுதான் என்று அரசியல் சட்டப்படி சொன்னாலே அங்கம் எரிகிறது.

இந்த நிலையில்தான், தற்பொழுது தமிழில் முன்பு போலவே வெறும் கருத்துரைப்பு உத்திகள் கையாளப்படுவதாக நீங்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறீர்கள்.  ஆனால்  இதனையே மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடும் குழுக்கள் அதிக வலிமையடைந்துள்ளன. எதற்கெடுத்தாலும் அரசியல், கருத்துருவாக்கம், பன்முக வாசிப்பு, பெண்ணியம், இனவரைவியல், விளிம்புநிலை  என்று சொல்லித்திரிந்த கூட்டம்  ஒரு வழியாக ஓய்ந்தது, நம்ம ஆட்சிதான் , ஜெயம் நமக்குத்தாங்… என்ற கொண்டாட்டக் கூச்சல் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.  இது மீண்டும்  நிகழ்ந்ததாகவா நினைக்கிறீர்கள்  இதுதான் தொடர்ந்து  நடந்து வருகிறது. இதற்கு  மாற்றான கருத்தியல், கோட்பாட்டுப் போராட்டமும் இருந்து வந்தது.  இந்த மாற்றுக் கருத்தியல் போராட்டம் தற்போது அதிக விளிம்பு நிலை அடைந்துள்ளது.  பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சிறுமரபுக் கதையாடல்கள் என்றவுடன் தமிழில் மார்க்சியத் தளத்தில் இயங்கியவர்களும் முகம் சுருக்கிய நிலையில் மரபுக்காரர்களுக்கு, மௌனமொழி குழுக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் விளிம்பில் தள்ளிவிட இது நல்ல வாய்ப்பு.

இதைக் குறித்து எனது விளக்கத்தை இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன்…

கலை-இலக்கியம் என்பது இறைத்தன்மை, புனிதத் தன்மை கொண்டது அவற்றின் வழியே இறைவனை அடையலாம் என்ற புராணிகப் பார்வை, கலை-இலக்கியம் என்பதே இறைச்செயலும் இறைவனின் விளையாடலும் என்ற இறையின்பக்  கோட்பாட்டுப் பார்வை, கலை-இலக்கியம் என்பன இறையுணர்வுக்கு எதிரான ஒழுக்கக்கேடு என்ற சமயத்துறவுப் பார்வை எனப் பல பார்வைகள் பழைமையின் பகுதிகளாக இருந்து வந்தவை. இந்நிலையில் இலக்கியம், கலை, அழகியல் என்பன உலகத்தன்மை அல்லது தேசியத்தன்மை கொண்டவை என்ற நவீனப்பார்வை மேற்கு மையத்தன்மையுடன் நம்மை வந்தடைந்தது. இந்தப் பார்வை இறைநீக்கம் கொண்டதாகவும் மனிதமையத் தன்மை கொண்டதாகவும் தோற்றம் தந்தாலும் படைப்பு என்பதை ஒற்றைத்தன்மை உடையதாக விளக்கிப் படைப்பு மையத்தன்மை ஒன்றை உருவாக்கியிருந்தது, அதன் மூலம் பக்திசார்ந்த ஒரு அழுத்தம் இதற்குள் இன்றும் இருந்து வருகிறது.

படைப்பு-படைப்பாளி என்ற இணைப்பு உலகஒருமை, ஓருலகத் தன்மை கொண்டதாக விளக்கப்படும் பொழுதே சிறுமரபுகள்-குழுமரபுகள், இனமரபுகள், தாய்மண்மரபுகள், பெண்மொழி, கிளைமொழிக் கதையாடல்கள் மறுக்கப்பட்டவைகளாக, ஒதுக்கப் பட்டவைகளாக, மதிப்பற்றவைகளாக மாற்றப்பட்டு விடுகின்றன. இந்த ஒதுக்குதலுக்கு, அடையாள அழிப்புக்கு எதிரான போராட்டமே பன்மைக் கதையாடல், சிறுமரபு, விளிம்புநிலைக் கதையாடல்களுக்கான செயல்பாடுகள். தேசிய இலக்கியம், தேசியக் கவிஞர்கள், உலகமகா இலக்கியப் படைப்புகள், உலக இலக்கிய வரிசை என்ற கொடுவன்முறைகள் இலக்கியப் பார்வை என்ற பெயரில் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுவருகின்றன. இவை முதலீட்டிய, அரசியல் ஏகாதிபத்தியம்  போல பண்பாட்டியல் ஏகாதிபத்திய வன்முறை.

வெள்ளைமையவாதம், இனவெறி, ஆண்பாலினத் திமிர், ஒற்றை மனிதவாதம் போன்ற மனிதப்பன்மை மறுப்புத் திட்டங்கள் இவற்றின் உள்ளடக்கமாக இருக்கின்றன. இந்திய இலக்கியம் என்ற ஒன்று எப்படி வன்முறையான கட்டமைப்போ அப்படியே தமிழிலக்கியம், மலையாள இலக்கியம்  என்பது போன்ற ஒற்றை அடையாடளமும் வன்முறைக் கட்டமைப்புகளே.

தமிழில் இந்த வன்முறைக் கட்டமைப்பைத் தகர்க்க முயற்சி நடந்து அதற்கான கருத்தியல் தளமும் விளக்கப்பட்டுள்ளது. இதன் பன்மை அரசியல், மாற்று அரசியலின் ஆற்றல் என்ன என்பதைப் புரிந்து கொண்ட ஊடகப் பண்பாட்டு பெருநிறுவனங்கள் இதற்கெதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

பேரிலக்கியம், செவ்வியல் படைப்புகள், இலக்கிய ஞானிகள், (இசைஞானிபோல) இலக்கிய ஆளுமைகள் என்பதான மக்கள் மறுப்புக் கதையாடலை மீண்டும் பெரும் முதலீட்டுடன் மறுஉருப்பெருக்கம் செய்யத் தொடங்கின.  ஊடகப் பெருக்கமும், கணினி அச்சுத் தொழில் நுட்பமும் அதற்குத் துணையாக இருந்தது. ஒவ்வொரு வகைக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மூவர் முதலிகள் மரபைத் தொடர்ந்தனர். ஒருவர் ஒரு ஆண்டில் வெளியேற்றும் ஒன்பது நூல்களை ஒரே மேடையில் ஒன்பது பேரை வைத்து பிரதிஷ்டை செய்வது பெருமையாகப் பேசப்படுகிறது.  இலக்கிய கும்பாபிஷேக, குடமுழுக்கு விழாக்களை நடத்திப் புண்ணியம் தேடும் இலக்கிய அறங்காவலர்கள் இப்படித்தான் உருவாகி வந்தனர். நகைக்கடை, துணிக் கடை, வைரநகை விற்பனையாளர்கள் சிலர் மேடையில் தோன்றி “எனக்குத் தெரிந்து இப்படி ஒரு நூலை இதுவரை யாரும் எழுதியதில்லை” என்றோ, இது ஒரு  தமிழ்  சாதனை, தமிழில் என்ன இந்திய அளவில், ஏன் உலக அளவில் இது ஒரு சாதனை” என்றுகூறி திரைப்படத் தொழில் செய்யும் ஒருவரின் கையில் புத்தகத்தை ஒப்படைத்து உலக்கை நாயகர்களை உருவாக்கும் தொடர் முயற்சிகள் நடக்கத்தொடங்கின.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்  என்றோ கல்கி, கண்ணதாசன், பாலகுமாரன், என்றோ எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா என்றோ முப்பெரும்தேவர், மூவேந்தர், மூவர் முதலிகள், மரபுகளை நவீன- பின்நவீனத் தளத்தில் பெருக்கத் தொடங்கினர் பண்பாட்டுச் சந்தை முகவர்கள்.  இது பக்தி மரபின் இன்றைய வடிவம், மூவர் முதலிகளை உருவாக்கி விட்டால் அவர்களுக்கான பக்தர் குழாம் வழி அறிவுக்கேடான கருத்தியல்களை உருவாக்குவது எளிது. ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்த கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் இல்லையா?

ஒரு தனிமனிதரை எழுத்தாளராக உருவாக்க வேண்டும், பிறகு அவரைத் தனிப்பெரும் எழுத்தாளர் என நிருவிக்காட்ட வேண்டும், அவரே நம்காலத்தின் நாயகன், அவருடைய மேதைமை தன்னிகரில்லாதது என மேடைகளில் முழங்க வேண்டும், இவரது எழுத்துக்கள் மட்டுமே நம் காலத்தின் சாதனை எனக் கூச்சலைப் பெருக்க வேண்டும்,  இந்த நூற்றாண்டின் 10 நூல்களின் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை செதுக்கியெடுத்து அதில் தமக்குத் தேவைப்பட்ட ஒருவரின்  5 நூல்களை ஆணியடித்துப் பொருத்திவிட வேண்டும். இப்பொழுது இவரே நம் காலத்தின், நம் சமூகத்தின் அனைத்து இன்ப, துன்பங்களையும் வரையறுக்கும் வல்லமை கொண்டவர். இனி அனைத்தைப் பற்றியும் இவர்களிடம் கருத்துக்கேட்டு பதிவுசெய்து தமிழ்ச்சமூகத்தின் தலைவிதியை, வரலாற்றைத் தொகுக்க வேண்டியதுதான். தமிழ் வழிக்கல்வி தொடங்கி தமிழினப் படுகொலைவரை, பெண்ணெழுத்து எப்படியிருக்க வேண்டும் என்பது முதல் சமண முனிவர்கள் பக்தி அரசியல்போரின் போது கழுவேற்றப்பட்டார்களா இல்லை அவர்களே கழுவில் ஏறி தம்மை மாய்த்துக் கொண்டார்களா என்பது வரை இவர்களின் கருத்துக்களே வரலாறாக அமையும்.

ஜெயகாந்தன் இதற்குத் திடமான ஒரு உதாரணம். இவர் தமிழின் பல கதைசொல்லிகளில் ஒருவர். நவீன சமூகத்தில் மரபான மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல், உளவியல், உறவுசார் சிக்கல்களைக் கண்டும் கேட்டும் புனைவு வடிவில் தந்திருப்பவர்தான், சரி. இவரின் புனைவுகள் சமூக நிகழ்வியலின் ஒரு கட்டப் பதிவு என்பதை இலக்கிய அறிவியல் வகையில் ஏற்க வேண்டும். ஆனால் வரலாறு, தமிழ்ச்சமூகம், தமிழ் அடையாளம், மையத்தேசியம் என்பவைபற்றி இவர் அளித்துள்ள கருத்தமைவுகள் சங்கரமட நவீனத்துவம் மட்டுமே.  இவர் கட்டிய பல கருத்துருவ மாதிரிகள் அறியாமையை அடிப்படையாகக் கொண்டவை,  நவீன உளவியலுக்கு எதிரானவை. உண்மையான இடதுசாரிச் சிந்தனைகள் தமிழிலக்கிய-பண்பாட்டுப் பரப்பில் வலிமையாகப் படிந்துவிடக்கூடாது என்பதற்காக அன்றைய அச்சு ஊடகங்களால் திட்டமிட்டப் பெருக்கப்பட்ட பிம்பமாக மாறிய அவர் அவர்களுக்கான சேவையை அளவுக்கதிமாகவே செய்திருக்கிறார். குருபீடம், ஞானபீடம் என்ற உருவாக்கங்கள் அறிவு இயக்கத்தில் அழிவு சக்திகளாவே செயல்படும் என்பதற்கு இந்த ஜெயஜெய சங்கர. ஹரஹர சங்கர புரட்சிக் கனலே தெளிவான எடுத்துக்காட்டு.  ஒரு இலக்கிய மாணவனாக நான் ஜெயகாந்தனின் ஒவ்வொரு எழுத்தையும் எழுத்தெண்ணிப் படித்தவன். ஒரு பத்து ஆண்டுகள் அவர் புதுவையில் எந்த மேடையில் பேசினாலும் உடல் நலமில்லாத நிலையில்கூட ஓடிச்சென்று ஒரு மூலையில் இருந்து கேட்டு வளர்ந்தவன்.  “சில நேரங்களில் சில மனிதர்கள்” படித்து  ‘ஆங்கிலம்’ கற்ற பலரில் நானும் ஒருவன். இன்றுகூட அவருடைய குறுநாவல்களைப் படித்தபின் நவீன இலக்கியம் பற்றிப் பேசுங்கள் என இலக்கிய மாணவர்களுக்குச் சொல்லுவேன்.  ஆனால் … தன் புனைவுகளில் சில மனித வகைமைகளை மதித்துப் புரிந்து கொள்வதற்கான குரலைப் பதிவு செய்துள்ள ஜெயகாந்தன் போன்ற ஒருவர் தன் கருத்தியல் கதையாடல்களில் அதிகாரமையத்தன்மை கொண்ட, புனிதப்பழமையின் தூதுவராகச் செயல்படுவதன் எந்திரவியலைப் புரிந்து கொண்டால் இலக்கிய பக்தி, அறிவுலக அடைக்கல வாதம் என்பவற்றில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம்.

ஆனால் இந்த விடுதலைப் பார்வை ஊடக-பண்பாட்டு அரசியல் நிறுவனங்களுக்கு அச்சமூட்டக் கூடியதாக இருக்கும். அதனால் ஒரு ஜெயகாந்தன் சோர்ந்து    போய் செயல்பட முடியாத நிலையில் இன்னொரு ஜெயமோகன் உருவாக்கப்படுவார். இவர் ஜெயகாந்தனைவிடப் பலமடங்கு மேதைமை கொண்டவர் என்றும் பார் போற்றும் படிப்பாளர் என்றும் திக்குகள் எட்டும் சிதற ஜெயபேரிகை கொட்டிவிட்டால் கருத்துருவாக்க வேலை மிக எளிதாகிவிடும். இன்று இந்த விஷயத்தில் பேசிக்கொண்டிருக்கும் எவரின் குரலுடனும் சேர்ந்தது அல்ல என் குரல். இது இந்தக் காலகட்டத்தின் முதன்மை படைப்பிலக்கியவாதியின் குரல். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் காலத்தில் மறைந்தபின்னும் எஞ்சும் குரல் இது. என் ஆசான் ஜெயகாந்தன் இதைவிட வெறுப்பு அனலடித்த காலகட்டத்தில் சிங்கம் போல மேடையேறி நின்று முழங்கிய கருத்துக்கள்தான் இவை.”  இந்த தனிப்பெரும் குரல் உருவாக்கம் மாற்றம் மறுக்கும் அரசியல் இயந்திரங்களுக்கு மிகத்தேவையான ஒன்று. கண்ணதாசன் இதைவிட தனிப்பெருங்குரலில் இந்து மதத்திற்கு அர்த்தம் கண்டு கூறியது நமக்குத் தெரியும்.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை, நடக்கவேயில்லை என்பதை சுப்பிரமணிய சுவாமி சொன்னால் நம்பத் தயங்குபவர்கள்கூட ஜெ.மோ தனிப்பெரும் குரலில் ஞானச் செருக்குடன் சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும். பெயர் சொல்ல விரும்பாத தன் நண்பர் ஒருவருடன் நேரில் சென்று பார்த்து, இந்திய ஞானமரபின் அனைத்து மகான்களையும் அணுகி ஐயம்தீர்த்து இவர் சொல்லும்போது தமிழ்ப் பெண்கள் தான் சிங்கள ராணுவத்தினரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர் என்ற உலகுக்குத் தெரியாத உண்மையையை யாரால் மறுக்க முடியும்  பெண்ணெழுத்தை, பெண்ணியத்தை தன் சுட்டுவிரலால்  தூக்கியெறிய  இவர் இருக்கும்வரை பெண்ணியச் சதித்திட்டங்களைப் பற்றி தமிழின் அறிவுலகம் கவலைப்படத் தேவையில்லைதானே? அருந்ததி ராய் போன்ற “அமெரிக்க கைக்கூலிகள்” இந்தியத் தாயின் புனிதத்தைத் குலைக்கவும் எல்லைப்பகுதியில் வன்முறைகளைத் தூண்டவும் செய்யும் தொடர் முயற்சிகளை இவரைத் தவிர வேறு யார் இவ்வளவு சான்றுகளுடன் அம்பலப்படுத்த முடியும்?  இந்தியாவில் வெறுப்பு அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள் இந்து மகாசபையினரோ, ராஷ்டிரிய சுயம்சேவை வீரர்களோ, பாரதிய ஜனதா கட்சி-பஜ்ரங்க தளச் செயல் மறவர்களோ இல்லை பெரியார், அம்பேத்கர் போன்ற ஆயுதம் ஏந்திய ஆன்மிகமற்றத் தலைவர்கள்தான் என்பதை இது போன்ற வரலாற்று ஞானத்துடன் வேறு யார் தமிழ் இளைஞர்களுக்குச் சொல்லித்தர முடியும்? தமிழ்ப் பிராமண அன்பர்கள் தீண்டாமைக்கு உட்பட்டுத் திக்குத் தெரியாமல் தவித்து வரும் பெருங்கொடுமையை இவ்வளவு அறச்சீற்றத்துடன் வெறுப்பு அரசியலின் விஷம் துளிகூட இல்லாமல் உலகுக்கு வேறு யாரால் அறிவிக்க முடியும்…

இப்படித்தான் தொடர்கிறது இந்த இலக்கிய மேதைகள், உலகத்தர எழுத்தாளர்கள் என்ற ஊடக உருவாக்கத்தின் அரசியல்… இதற்கு ஒருவர் மட்டும் போதாது இன்னும் இருவர் அவசியம். அந்தந்த இடத்திற்கேற்ப மூவர், ஐவர் என வரிசைகள் மாறலாம், ஆனால் இந்த ஆளுமை பெருக்கக் கதையாடல் வன்முறையின் வரலாற்றுத் தடம் இதுதான்.

பெருந்தலைவர்கள், வரலாற்று நாயகர், மகாத்மாக்கள் உருவாக்கப்படுவது அரசியல் வன்முறைகளை, வரலாற்று சதிகளை மறைக்க, திரிபுக் கருத்துகளை நியாயப்படுத்தப் பயன்படுவது போல கலை-இலக்கியத்தில் பேரிலக்கிய ஆளுமை பற்றிய கதையாடல் பழமைகளை மீளுருவாக்கம் செய்ய, அரசு-அடிமைகள் உளவியல் கட்டமைப்பைத் தொடரப் பயன்படுவது. தெய்வத்தின் குரலும்   சிங்கத்தின் குரலும் இணைந்து முழங்கும் இவர்கள் மீது வெறுப்பு அனலடிக்கிறதாம், எது இந்த அனல்? அந்த அந்த காலத்தின் அறிவரசியல் மாற்றுக் குரல்களைத்தான் இவர்கள் வெறுப்பு அனல் என்கிறார்கள். இந்த அனல் முறையாகத் தேவையான அளவுக்கு அடிக்காததால்தான் பிற்போக்கு பிணாத்தல்கள் தமிழின் அடையாளமாக மாற்றப்படுகின்றன.

ஆளுமை மையவாதம் அறிவுருவாக்கத்திற்கு, அரசியல் தன்னுருவாக்கத்திற்கு எதிரான அழிவுத்திட்டம்.  இலக்கியம்,  திரைப்படம், ஊடகக்கதையாடல்கள் என அறிவழிப்பு அதிகார மையங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது தொடுத்துள்ள அழகியல்-உளவியல் போர் இது. இந்தப் போர் உயிரியல் ஆயுதங்கள் வழி நடத்தப்படும் உருமறைந்த தாக்குதலாக தொடர்ந்து நிகழ்கிறது… தமிழில் இதனை எதிர்த்து கருத்தியல், அறிவுக்களங்களில் பெரும்போராட்டம் நடக்க வேண்டும். வாசிப்பின் அரசியல், வாசிப்பின் அறிவியல் வழிவாக விரிவடைய வேண்டும்.

மக்கள் அரசியலை மறுக்கும் ஒரு குழுவினரால் உருவாக்கப்படும் உத்திதான் ஒரே மேடையில் ஒரு நூறு நூல்களின் விழா என்ற கேளிக்கைக் கொண்டாட்டம். இந்தப் பெருங்கட்டமைப்புத் தந்திரத்தின் முகவர்களாக  இயங்கும் பல பதிப்பகங்கள்… எல்லா பத்திரிகை நிறுவனங்களும் ஒரு இலக்கிய இதழை, இணைப்பைத் தொடங்கியுள்ளன… இந்து தமிழில் வந்துவிட்டால் இரண்டாவது கருத்து இருக்கமுடியுமா என்ன? இப்படித்தான் நீள்கிறது அரசியல் நீக்கச் சொல்லாடல்.   இன்றைய இளைஞர்களின் அறியாமையின் மீது கட்டப்பட்டுள்ளது ஊடகங்கள் கொண்டாடும் இலக்கிய மகான்களின் குருபீடம்…

சில இளைய வாசகர்கள், சில ஆய்வு மாணவர்கள் ஒரு கலந்துரையாடலின் பொழுது   என்னிடம் கேட்டனர், கலக இலக்கியம், பாலரசியல் பற்றியெல்லாம் நீங்கள் தான் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள், ஆனால் அந்த “ஒரு எழுத்தாளரின்” கலக எழுதுக்களை நீங்கள் படிப்பதில்லை எனக் குறிப்பிடுகிறீர்கள் என்ன காரணம்? நான் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சுவாமி நித்தியானந்தரின் கலக அரசிலை கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை இதற்கு எங்கு நேரம் கிடைக்கப்போகிறது என்று சொன்னேன். எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியன்களும் நாவலை நீங்கள்தான் கலகத்தை முன்வைக்கும் பிரதி என்று முன்னுரை எழுதினீர்கள் அதை இப்போது மறுக்கிறீர்களா? நீங்கள் கலகம் என்று சொல்லும் போது ஏற்பதும், இல்லை என்றால் அதை மறுப்பதும்தான்  வாசகர்களான எங்கள் வேலையா? அவர்கள் கேள்வியில் நியாயம் உண்டு, படித்த பிள்ளைகள் இல்லையா. கலகத்தை முன்வைக்கும் போது முன்வைப்பதாகவும் அதனைப் பின்வைக்கும் போது பின்வைப்பதாகவும் சொல்லத்தான் வேண்டும். அவர் பின்வைத்த கலகம் தினமல… மன்னிக்க தினமலர் பத்திரிகையின் வழி உருவாக்கப்பட்டது. அதனை இப்போது நான் முன்வைக்க வேண்டிய தேவை இல்லைதானே?” என்று சற்றே எரிச்சலுடன் பதில் சொன்னேன். அவர்களிடம் என் முன்னுரையின் கடைசி வாக்கியத்தைப் படியுங்கள் “இந்தப் பிரதியில் கலகம் எந்த அளவுக்குச் சாத்தியப்பட்டுள்ளது என்பது வாசிப்பின் வழி தெரியவரும்” என்பது போல ஒன்றைச் சொல்லியிருப்பேன் என்றும் நினைவு படுத்தினேன்.

ஆனால் அவர்களுக்கு விளக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு. பாலரசியலை எழுதுவது என்றால் பாலியல் குற்றங்களை விதந்தோதுவதும், பெண்ணிலையின் மீதான கருத்தியல் வன் கொடுமையை  கவிதையியல் எனக் கொண்டாடுவதும் இல்லை. மேல்நிலைப்படுத்தப்பட்டதை கீழறக்கம் செய்வது கலகம், அடக்கப்பட்டவர்களை அவமதித்து எழுதுவது வன்முறை. பாலியலின் சிக்கல்களை, அதன் அரசியலை கதைப்படுத்துவது என்றால் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையை அழகியல் என்று நிறுவும் ஒரு எழுத்து  மனித உரிமைக் கெதிரான குற்றம் என்று  உங்களுக்குத் தோன்றவில்லையா?

அப்படியென்றால் அரசியல் பற்றி மட்டும்தான் எழுதவேண்டுமா?  என்ற அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில் இதுதான். அரசியல் மட்டுமே அனைத்துமாக இருக்கும் ஒரு சமூகத்தில் அரசியல் மறுத்து எழுதுங்கள்… அரசியல் அற்ற ஒரு சமூகத்தில் அரசியல் பற்றியே எழுதுங்கள்.  உங்கள் அரசியல்தான் உங்களுக்கான அழகியல், உங்கள் அழகியல்தான் உங்கள் அறம்… உங்கள் அறம்தான் நீங்களும் உங்கள் சமூகமும்…

கலை இலக்கியங்களின் மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதற்கு அல்லது தொடர்வதற்குக் காரணம் தற்போது விளங்கும்தானே. அரசியல் நீக்க  வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், இவைதான் தற்கால அடையாளம் அற்ற சமூகத்தை உருவாக்க  அடிப்படைத் தேவைகள். செவ்வியல் பெருமை பேசியோ, புராதனப் புகழ் பேசியோ நிகழ்த்திக்காட்ட முடியாத அறிவு, அடையாள அழிப்பை அரசியல் நீக்க வாசிப்புகள் வழி நிகழ்த்த முடியும்.

உரையாடல்: 3: 1

உரையாடல்: 3 : 2 

மாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும் – பிரேம்

உரையாடல்:2 
மாறுதல்களைப் புரிந்து கொள்வதும் மாற்றங்களைக் கண்டு அஞ்சுவதும்

கேள்வி

தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் தமிழ் அறிவுலகச் சூழலில் இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல் குறித்து அதுவரை இருந்துவந்த பார்வைகளில் இடையீடு செய்து சில மாற்றுப் பார்வைகளை  முன்வைத்தவர்களில்  நீங்களும் ஒருவர், அதன் பிறகு  தமிழ்ச் சூழலில்  ஏற்பட்டுள்ள  மாற்றங்களை, வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

[ ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

மாற்றுப்பார்வைகளை முன் வைத்து வருவதுடன் மாறுதல்கால பயங்கரங்கள் பற்றியும் பேசி வருபவன் என்ற வகையில் நான் எனது மாறுதல் விரும்பும் வாழ்க்கையினூடாகவே இதனை விளக்க முயற்சிக்கிறேன். 2009 ஆண்டு ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு முன் இது போன்றதொரு கேள்விக்கு எளிதாக நான் பதில் கூறியிருப்பேன். இடையீடுகள் செய்ய இயலாத பலமடைந்த ஒரு கருத்தியல் பயங்கரவாதம்  உருவாகிப் பரவிவரும் ஒரு காலகட்டத்தில் என்னைப் பற்றிய பேச்சினூடக இதனை விளக்கவும் விளங்கிக்கொள்ளவும் முயற்சிக்கிறேன்.

தொண்ணூறுகளின் தொடக்கம், எழுபதுகள் எண்பதுகளின் கடினமான காலகட்டத்தின் தொடர்ச்சி… உலகின் இருமுனை ஆதிக்கங்களாகவும்,  போர்மைய அரசுகளாகவும் இருந்த அமெரிக்க-ரஷ்ய வல்லாண்மைகள் உலக அளவிலான மக்கள் தொகுதிகளின் அடிப்படையான, எளிய வாழ்வியல் தேவைகளைக்கூட தம் அடக்குமுறைகளின் வழியாகப் பெருங்கனவுகளாக மாற்றியிருந்தன.

குடிநீர் தேவைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி உயிர்விட வேண்டிய நிலையில் மக்கள் வைக்கப்பட்டிருந்தனர்.  தம் தாய்மொழியில் கல்வி கற்கவும் கையெழுத்திடவும் உரிமை கேட்ட மக்கள் தற்கொலைப் படையினராக மாறவேண்டிய அளவுக்கு மிகக்கொடூரமாக அரசுகள் நடந்து கொண்டன. மாற்றங்களுக்கான கனவுகள், விடுதலைக்கான ஏக்கங்கள் அதுவரை பெற்றிருந்த தளத்தினை இழந்து சிதறிய நிலையை அடைந்திருந்தன. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் கூட போர் அமைப்புகளாக மாறவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. ரஷ்ய-ஸ்டாலினிய வன்கொடுமைகள்தான் புரட்சிகர அமைப்புகளின் அடையாளமாக இருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பின் மார்சிய, விடுதலை அரசியல் என்பதும் அழிவு அரசியலின் வடிவமாகத் திரண்டிருந்தது.

 புரட்சி-எதிர்ப்புரட்சி இரண்டுமே ரஷ்ய-அமெரிக்க ஆயுதச் சந்தை நிலவரம் சார்ந்ததாக, போர்ச்சந்தை சதித்திட்டங்களாக மாறியிருந்தபோது மக்கள் அரசியல், மக்கள் அடையாளம், மக்கள் வரலாறு பற்றிய அடிப்படையான கேள்விகள்கூட சிக்கலானதாக மாறியிருந்தன. பொறுப்பான ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் இந்த நிலையை எதிர்கொள்வது, கைக்கொள்வது மட்டும் அல்ல இதன் தொடர்ச்சியாகச் சிந்திப்பதும்கூட மிகக்கடினமான நிலை. ரஷ்யா உடைந்தது ஏன், கம்யூனிசம் தோற்றுப்போனதா எனத் தொடர்விவாதங்களை நடத்தி அமைதி அடைந்துவிடக்கூடிய நிலையில் ஒரு மார்க்சியர் இருக்க முடியாது.

அமெரிக்க வன்கொடுமைகளுக்கு இணையாக ரஷ்ய வன்கொடுமைகள் உலகைச் சிதைத்துக் கொண்டிருந்த போதும், சோவியத் ரஷ்யா பல தேசங்களாகப் பிரிந்து சென்றாலும் அமெரிக்க ஒன்றியம், அய்ரோப்பிய ஒன்றியம் என்பவை வலுவடைந்தபோதும் உலகில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல கட்சி-சித்தாந்தம் எனப் பேசியபடி கொடிவழியாக நடந்து செல்வதற்கு அறியாமை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாற்றம், வளர்ச்சி, புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள், மனித உரிமை, போர்-அமைதி, நவீன வாழ்வு என அனைத்தும் வெள்ளைமைய, அய்ரோப்பியமையத் தன்மை கொண்டவைகளாக இருந்து வருவதைப் புரிந்து கொள்ளாமல் நாம் சென்று கொண்டே இருக்க முடியாது.

எழுபது-எண்பதுகளில் தமிழில் அரசியல் மிகச்சிக்கலான இரண்டு தளங்களை அடைந்திருந்தது. ஒரு தளத்தில் “அரசியல்” அதிகம் பேசப்பட்டு அரசியல் நீக்கம் நிகழ்த்தப்பட்டது.   திராவிட, சுயமரியாதை, தமிழ் அரசியல் இடதுசாரி அரசியலின் இடத்தை எடுத்துக்கொண்டது. தேசிய அரசியலின் இறுக்கம் குறைந்து அடையாள அரசியல் முன்வைக்கப்பட்டது,  ஆனால் கொள்கை, கோட்பாடு, கருத்தியல் என்பவை பொருளற்றவைகளாக, பேசத்தகாதவைகளாக மாறியிருந்தன. இந்திய அளவில் காந்தி, நேரு, இந்திரா என்ற பெயர்களில் சமூகமும் அரசியலும் வரலாறும் அடக்கப்பட்டது போலத் தமிழில்  பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி,  எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற பெயர்களுக்குள் அனைத்தும் அடக்கப்பட்டிருந்தன.  புரட்சித்தலைவர் என்ற ஒற்றைப் பெயரும் அத்தனிமனிதரின் பொன்மனமும்  தமிழர்களின் மொத்த வாழ்வையும் வளத்தையும் நிர்ணயிப்பதாக இருக்க முடியும் என்பது மிகப்பெரும் அவலம் மட்டுமல்ல வரலாற்று வன்முறை, அடிமைச் சமூக, அழிவு உளவியல்.  தமிழ்ச்சமூகம் முழுமையும் தட்டேந்திக்கொண்டு அய்யா, அம்மா என்று அழுதபடி நீண்ட வரிசையில்  நிற்பது போன்ற ஒரு நிகழ்வியல் படிமம் உருவாக்கப்பட்டது இந்த காலத்தில்தான். இந்த காலகட்டத்தில் இடதுசாரி, மக்கள் அரசியல் தமிழகத்தின் மறதியாக, மனச்சிதைவுப் புலம்பலாகத்தான் இருந்தது. மக்கள் போராட்டம் சார்ந்த செயல்பாடுகள் ஆயுதம் கொண்டும், கொடும் அடக்குமுறை கொண்டும் அழித்தொழிக்கப்பட்டன, அல்லது குலைக்கப்பட்டன.  புரட்சிகர உளவியல்  இந்திய அரசியலில் உருவாகி விடாமல் இருப்பதில் அமெரிக்கா-ரஷ்யா இரண்டும் மிகக் கவனமாக இருந்தன. இரண்டு வல்லாண்மை அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களையும் திட்டங்களையும் வழங்கி இந்திய அரசியலைத்  தம் விரல் அசைவில் இயக்கும் இயந்திர இணைப்பை உருவாக்கியிருந்தன.

இரண்டாவது தளத்தில் தமிழ் அரசியல் பேச்சுக்கு இடம் அளிக்காத ஆயுதக் கட்டமைப்பாக மாற்றப்பட்டது.  நான் இதனை மாறுதல் கால பயங்கரங்கள் என்று விளக்க முயற்சித்திருக்கிறேன்.  1975 க்குப் பிறகான தமிழ்ச்சமூகம் பற்றி இன்று நினைத்துப் பார்க்கும் பொழுது வரலாற்றுத் தடுமாற்றமும் பெருங்குழப்பமும் மிஞ்சுவதுடன் நம் காலத்திய பெருந்துன்பியல் நிகழ்வுகளுக்கு நடுவில் நாம் மிஞ்சியிருக்கிறோம் என்பதும் உடனே நம்மைத் தாக்கும். 1977 ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் இலங்கையில் தமிழ்ச் சமூகம் அடைந்த துயரம் தமிழ் நாடு முழுக்க உணரப்பட்டது. 1981 ஜூன் யாழ் நூலக எரிப்பு அரசியல் அறிந்த இளைஞர்களைக் கொந்தளிக்க வைத்தது, 1983 ஜூலை தமிழினப் படுகொலைகள் தமிழர்களின் அரசியல் உணர்வை விடுதலைப் போருக்கான நிதிதரும் திட்டமாக மாற்றியது.  அதற்குப் பிறகு தமிழகத்தின் தினசரி அரசியலாக மாறியிருந்த ஈரோஸ், இபிஆர்எல்எஃப், எல்டிடிஇ, டெலொ மற்றும் உருவாகிக் கொண்டிருந்த  தமிழ் ஈழம் என்ற ஒரு தனிநாடு அனைத்தும் நம் காலத்திய உளவியல் கூறுகளாக, உணர்வுத் தளங்களாக மாறியிருந்தன. ஆயுதம் ஏந்திய புரட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்த அரசியல் தனிமனிதர்களின் அறைகளில் ஆயுதங்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. தமிழகச் சட்ட மன்றத்தில் தனி ஈழத் தமிழ்நாடு பற்றிய தீர்மானம், இந்தியப் பிரதமர் ஆதரவுடன் தமிழகம் எங்கும் போராளி முகாம்கள். புரட்சிக்கும் போருக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருந்த அரசியல் கருத்தியல் களம் நம் காலத்திய தமிழ் அரசியல் இனி மேடைப் பேச்சுகளால், உரையாடல்களால் மட்டும் தீர்மானிக்கப்படக்கூடிய நிலையில் இருந்து மாறிவிட்டது என்பதை கவனத்தில் கொள்ளத் தவறியது. ஆனால் 1987-1991 காலகட்டத் துயரங்கள், இந்திய அமைதி காக்கும் படை தொடங்கி வைத்த அமைதியற்ற காலத்தின் கண்ணீர், இயக்கங்கள் தமக்குள் நிகழ்த்திக் கொண்ட படுகொலைகள், சிந்திப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து  தப்பிப்பதற்கான உளவியல் உருவான ஒரு காலகட்டம். விடுதலை  இயக்கங்களைப் சமமாகப் பார்த்து வந்த எனக்கு விடுதலைப்புலி அரசியல் துயரமாகத்தான் இருந்தது. தமிழீழம், தமிழ் அரசியல், விடுதலைக் கருத்தியல் என்பவை தற்கொலைகளாலும் கொலைகளாலும்  நிரம்பிய நிலையில் என்னிடம் குழப்பம் மட்டும்தான் மீந்திருந்தது. இந்தக் குழப்ப நிலையை தம் அடிப்படைகள் பற்றிய மறுபுரிசீலனைக்கான களமாக தமிழ் அரசியல், கருத்தியல், அறிவுசார் துறைகள் மாற்றிக்கொள்ள முடியும் என்று நான் நினைத்திருந்தேன்.

அரசியல், இலக்கியம், வரலாறு, சமூகம், வாழ்வியல், உளவியல்பு, தனிமனிதர்கள் என எதனைப் பற்றியும் அதுவரை தமிழ்ச்சூழலில் விவாதிக்கப்பட்டவை பொறுப்பற்றவைகளாக, திட்டமிப்பட்ட பிற்போக்குத்தனம் கொண்டவைகளாக இருந்தன. தீண்டாமை, பெண்நிலை ஒடுக்குதல் தொடங்கி சாதி, இனம், மொழி, பண்பாட்டு அடையாளம் சார்ந்த சிதைவுகள், தேசிய இனச் சிக்கல், சூழலியல் கேடு என அத்தனை தீமைகளாலும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச்சமூகம் இருந்தபோது அறிவுலகம் அவற்றைப் பற்றிய எந்தக் கேள்வியையும் கவனத்தில் கொள்ளாமல் தன் உறக்க நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இனப்படுகொலை, இனத்துக்குள்ளான  ஒடுக்குமுறை,  பண்பாட்டுப் பழமைவாதம் என உலகில் உள்ள அனைத்துச் சிக்கல்களையும் ஒருசேர எதிர்கொண்ட, அனுபவித்த ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்தபோதும் நம் சிந்தனைத்தளம் இவற்றைப் புரிந்துகொள்வதற்கான ஆற்றல் அற்றதாக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் என்றால் பெரியாரிய, மார்க்சிய முன்முடிவுகளே அனைத்தையும் விளக்கப்போதுமானது என்ற பிடிவாதமான நம்பிக்கை நிலவிவந்தது.

இதற்கு வெளியே உருவாக்கப்பட்ட சில சிந்தனைத் தளங்களைப் பாருங்கள். அந்நியமாதல், எக்சிஸ்டென்சியலிசம், அமைப்பியல்வாதம், குறியியல் என்ற ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் மேற்கில் இற்றுத் தீர்ந்துபோன சிந்தனைப்பள்ளிகளை அன்றுதான் கண்டுபிடித்த அதிசயம் போலப் பேசத் தொடங்கியிருந்தன சில வெளியீடுகள். எஸ்.வி.ராஜதுரை, கார்லோஸ் தமிழவன் என்ற இருவரும் தமக்குக்கிடைத்த ஆங்கில நூல்கள் வழி அடிப்படைகளை நோக்கிச் செல்லாத உரையாடல்களைச் சிறிய அளவில் பரப்பிக்கொண்டிருந்தனர். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட உரையாடல்களின் விரிவாக அவை இருந்தன. நானும் இந்த உரையாடலை ஒரு மாணவனாக இருந்து தொடர்ந்து சென்றிருக்கிறேன், பின்பு அவற்றை அடிப்படையிலிருந்து கேள்விக்குள்ளாக்கியிருக்கிறேன். என்னை அவர்கள் மறுக்கவும், பெயர் மறைக்கும் உத்தியால் வெளியேற்றவும்கூட இது காரணமாக இருந்தது. தமிழவன் பிறகு எனது கருத்துகள், கேள்விகளை ஓரளவு குறிப்பிடத் தொடங்கினார். என்னுடன் நட்பும், மதிப்பும் கொண்டவர் அவர், ஆனால் எனது  நுண் அரசியல், எதிர்ப்புச் சொல்லாடல்கள் பற்றி அவருக்கு உடன்பாடு இல்லை. பின்னாட்களில் எஸ்.வி.ராஜதுரை பெரியாரியம் பற்றிய மறுவாசிப்பின் வழியாக தமிழின் தற்கால அரசியலுக்கான சொல்லாடலுக்குத் தன் பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார்.

புரட்சிகர வாழ்க்கை என்றால் பெயர் தெரியாத ஒரு துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு ஆளில்லா இடம் ஒன்றில் உட்கார்ந்து புத்தகம் ஒன்றைப் படிப்பது, குறிப்பேட்டில் கவிதை எழுதுவது என்ற ஒரு சித்திரம் என்னைப் போன்றவர்களுக்குள் பதிவாக்கப்பட்டிருந்ததை இன்று அதிக வருத்தம் இன்றி நினைவுகூர முடிகிறது. ஆனால் இவை கடந்து பல கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்ற உளைச்சல் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

உலகமயமான கண்காணிப்பு அமைப்பின் கொடும் பிடியில் சிக்கிய நம்காலத்தில் மக்கள் அரசியலின் இடம் என்ன, அதில் ஒரு தனிமனிதரின் இடம் என்ன? விடுதலைக்கான ஒற்றைக் கோட்பாடு என எதுவும் இருக்கமுடியாது என்ற நிலையில் தற்கால விடுதலைக் கருத்தியல்களின் பெறுமதி என்ன? போர் இயந்திரங்களின் முன் தனிமனிதர்கள் தம்மை ஒப்படைத்து விட்டு மூச்சுவிடப் பயந்து வாழும் நிலையில் எழுத்து-சிந்தனை-கருத்தியல் என்பவற்றின் இன்றைய செயல்தேவை என்ன? என்பது போன்ற மிக அடிப்படையான கேள்விகளில் இருந்துதான் எனது இடையீடுகளையும் மாற்றுப்பார்வைகளையும் முன் வைத்தேன்.

 இந்த நிலையில்தான் “கொலை மற்றும் தற்கொலை” என்ற ஒரு அரசியல் உருவகம், ஒரு உளவியல் குறியமைப்பு எனக்குள் உருவாகி எழுத்துக்களில் பொங்கிவழிந்து கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நிறப்பிரிகையில் நான் எழுதிய முதல் கட்டுரையே “புரட்சியை நோக்கி சில உளவியல் பிரச்சினைகள்”.  நீண்ட அந்தக் கட்டுரை இதழின் பக்கங்கள் கருதி தற்போதுள்ள அளவில் சுருக்கப்பட்டது. வில்ஹெம் ரீச், மிஷெல் ஃப்பூகோ என்ற பெயர்களை முன்வைத்து நான் உருவாக்கிய உரையாடல்களின் வழியாக எனது சிந்தனை மையத்தைக் கலைத்துக் கொண்டிருந்த கருத்துக்களையே முன்வைத்துக் கொண்டிருந்தேன்.

குற்றவியல் வழியான  அரசியல் இடையீடு, விளிம்புநிலை எதிர்ப்புச் சொல்லாடல், பெண்ணியக் கலகம், எதிர்க்கலாச்சாரம், நுண்ணரசியல் என நான் மாய்ந்து மாய்ந்து பேசியவற்றை, விளக்கியவற்றைத் தொடக்க நிலையில் கடுங்கோபத்துடன் எதிர்த்தவர்கள் பின்னாட்களில் அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு தமக்கான அடையாளச் செயல்பாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

நிறப்பிரிகை என்ற இதழியல் செயல்பாடு- கருத்தியல்களுக்கான உரையாடல்களம் பற்றி  நான் இதுவரை பேசியதில்லை. எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தும் விவாதித்தும் வரும் நண்பர்களும் தோழர்களும் பலமுறை அது பற்றி எழுதும்படி கேட்டும் அந்த காலகட்டத்தைப் பற்றி நான் அதிகம் பேசுவதைத் தவிர்த்து வந்திருக்கிறேன்.  நிறப்பிரிகை பற்றித் தற்போது பேச ஐந்து பேர் இருக்கிறோம். ரவிக்குமார், அ.மார்க்ஸ், பொ.வேலுச்சாமி, பொதியவெற்பன் மற்றும் நான். ஒவ்வொருவருக்கும் அது பற்றிச் சொல்ல அவர்களை மையமாக வைத்து ஒரு கதையிருக்கும் என்பது புனைகதையாளன் என்ற வகையில் எனக்கும் தெரியும்.

கிரணம்  வெளிவந்திருந்த  காலகட்டம்  ரவிக்குமார் அவர்களுடன் சந்திப்பு, நீண்ட நாள் பழகியது போன்ற மனதுகந்த நட்பு, எனக்கும் அவருக்கும் பிடித்த புரட்சிகர மாற்று அரசியல்,  நேரம் காலம் போவது தெரியாத உரையாடல், எழுதுவதை அலசி, படிப்பதைப் பேசி, பேசுவதற்காகப் படித்து, பலரைக்கூட்டி உரையாடி, உரையாடலையே ஒரு அரசியல் செயல்பாடாக்கி, தமிழில்  மாற்று அரசியலுக்கான களங்களை ஆய்வு செய்து, அதனைக் கருத்தியல் தளங்களாக விரிவாக்கம் செய்ய ஒரு பத்திரிகை வேண்டும் என்று  திட்டமிட்டு, நிறப்பிரிகை என்ற பத்திரிகை மற்றும் கலந்துரையாடல் களத்தை உருவாக்கி, அதில் எழுதுவது முதல் அச்சகத்தில் இருந்து சுமந்து வந்து அஞ்சல் உறையில் இட்டு அனுப்புவது, அடுத்த கலந்துரையாடல்கள திட்டமிடுவது வரை அனைத்தும் அடுத்த வேளை உணவுக்கு உறுதியற்ற ஒரு காலத்தில் நான் செய்தவை. எழுத்தும் படிப்பும் என் வாழ்க்கையும் அரசியலும் என்பது என் உள்ளும் வெளியுமாக படிந்து போன நிலையில் பெயரைப் பற்றிக் கவலைப் படாமல் நான் செய்தவை.  பெயர் பதிவு செய்துகொண்ட பெரியோர்கள் பின்பு என் பெயரை முழுமையாக இல்லாமலாக்க செய்த முயற்சிகள் பற்றி எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் எழுதுக்கலைஞன் என்ற வகையில் நான் அதிகம் கவலைப்பட்டதும் இல்லை, கவலைப்படத் தேவையும் இல்லை.  ஆனால் பெயர் நீக்க அரசியல் பற்றிய கவனம் நமக்குத் தேவை.

பாலரசியல், உடலரசியல், நுண்ணரசியல், பெண்ணிய அரசியல் என்ற தளத்தில் நான் முன் வைத்த கேள்விகள், அவற்றையே பேசிய என் எழுத்துக்கள்தான் அவர்களை பெயரழிப்பு, பெயர்மறைப்பு உத்திகளைக் கைக்கொள்ள வைத்ததாக நான் பின்பு உணர்ந்திருக்கிறேன்.  இன்று தனித்தனியாக அவர்களுக்கும் எனக்கும் அரசியல்- எழுத்து-அடையாளம் என்பவை அமைந்துள்ள நிலையில் தலித் அரசியல்-மாற்று அரசியல் பற்றிப் பல ஒத்த கருத்துக்கள் உள்ளன என்றாலும் நான் வேறுபட்ட இடங்கள் அப்படியே தொடர்கின்றன.

 “புதுச்சேரி கலகச் சிந்தனை” என்ற ஒரு தொடரைப் பலர் வெறுப்புடன் குறிப்பிட்டதைக் கேட்டிருக்கிறேன், பின்னாட்களில் புதுச்சேரி கலகச்சிந்தனைக் குழுவில் தாம் இல்லை என்று மறுத்து பலர் பொதுவெளியில் “உபநயனம்” பெற்றதையும் நான்  பார்த்திருக்கிறேன்.  இங்கு தோழர் அ.மார்க்ஸ் பற்றிக் குறிப்பிட வேண்டும், தொடக்கத்தில் பின்நவீனத்துவம், நுண் அரசியல், பெண்ணிய இடையீடு, புரட்சிகர உளவியல் என்பது பற்றி நான் பேசியவற்றை, எழுதியவற்றை  கடுமையாக மறுத்தவர் அவர். தொடர்ந்து எனது கருத்தியல் இடையீடுகள்மீது அவருக்குக் கோபம் இருந்தது. விவாதங்கள் பல கசப்பாக மாறியுள்ளன. “செயல் அதுவே சிறந்த சொல்” என்ற ஜோஸ் மார்ட்டியின் வாசகத்தை நிறப்பிரிகையில் பதிவு செய்திருந்த நிலையில் “சொல் அதுவே முதல் செயல்” என்றும் “சொல் அதுவும் ஒரு செயல்”, “சொல்லப்படாத செயல்கள் நிகழாதவைகளாகவே எஞ்சும்” என்பது போல நான் சில சந்திப்புகளில், உரையாடல்களில் குறிப்பிடும் போது அவருக்கும் நிறப்பிரிகை சார்ந்த இரண்டொரு நண்பர்களுக்கும் முகம் இறுகிப்போகும். இலக்கியம், கலை, அழகியல் பற்றிய அவர்களின் பயிற்சியின்மை, பழக்கமின்மை காரணமாக என்மீதும் என் புனைவெழுத்துகள் மீதும் கசப்பும் வெறுப்பும் கொள்வதை தவிர்க்கயியலாமல் இருந்தது… நிறப்பிரிகை வட்டம் உடைந்து சில ஆண்டுகள் கழித்து பின்நவீனத்துவம் பற்றிய அறிமுக நூல் ஒன்றை  அ.மார்க்ஸ் வெளியிட்டபோது அந்நிகழ்வில் நான் பேசியிருக்கிறேன்… அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் விரும்பத்தக்கது என்றும் இனி அவர் என்னிடம் அன்பாக இருக்கவியலும் என்றெல்லாம்கூட குறிப்பிட்டிருக்கிறேன்… பிறகு நடந்தவை பற்றி உங்களுக்குத் தெரியும்தானே…

இவற்றைக் கூறுவதற்குக் காரணம்  “பார்த்தா! என்னை எல்லாப் பொருளுக்குள்ளும் அனாதியான வித்து என்று அறி, புத்திமான்களின் புத்தியும் வீரமுடையவர்களின் வீரமும் நானே ஆகின்றேன்.” என்று கீதோபதேசம் செய்வதற்காககோ,  “நானே சத்தியமும் வழியுமாக இருக்கிறேன்” என்று அறிவிப்பதற்காகவோ இல்லை. நான் 1985 தொடங்கி இன்ற வரை தமிழ்ச் சிந்தனையின் அதிக குழப்பமும், சிக்கலும் கொண்ட பகுதிகளில் உழன்றுகொண்டும், உளைந்து கொண்டும் இருக்கிறேன் என்பதை மிகைப்படுத்தல் ஏதும் இன்றி நினைவு படுத்துவதற்காகத்தான்.

அம்பேத்கரிய, தலித்திய, பெண்ணிய அரசியல் தமிழில் தளம் கொண்ட பிறகுதான் அதிக வலியின்றி, தினவாழ்வு அரசியலில் ஈடுபட என்னால் முடிந்தது. தலித் கூட்டமைப்பு, அம்பேத்கர்-அயோத்திதாசர் படிப்பு வட்டம், தலித் கலைப்பண்பாட்டு பயிற்சி முகாம்கள், மண்ணுரிமைக்கூட்டமைப்பு என்பவைதான் என்னை உடலியல் வகையில் ஒருங்கிணைத்த செயல்பாடுகள். இவை என்னை தற்காலம் சார்ந்தும் எதிர்காலம் சார்ந்தும் இயங்க-இருக்க வைத்த செயல்பாடுகள். அதிக நேரத்தை, ஆற்றலை அவற்றில் நான் செலவிட்டிருக்கிறேன். என் மகள் பிறந்த அன்று, தேதி குறிக்கப்பட்ட  ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு ஒன்றில் நிகழ இருந்த “மண்ணிலிருந்து” என்ற நாடகத்தின் பயிற்சிக்காக 40 இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்பதால் அதனை நிறுத்தாமல் பாதிநாள் கடந்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழலில் நான் இருந்திருக்கிறேன். தலித் போராளி, தமிழினக் காவலன் என்று பட்டம் பெறுவதற்காக நான் இதனைச் சொல்லவில்லை… ஒரு சிந்தனையாளனாக, ஒரு எழுத்தாளனாக  அரசியல் என்பது எனது எளிய வாழ்க்கையின் எல்லாமுமாக இருந்து வருகிறது என்பதை எனக்கு நானே நினைவூட்டிக்கொள்வதற்காவே.

இந்த வரிகளூடாக உங்களுக்குச் சில நிகழ்வுகள் புரியவந்திருக்கும்… பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என அனைத்தின் வழியாகவும் நான் மாற்று அரசியல்-அறவியல்-அழகியல் என்பதைப் பற்றித்தான் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். நான் இக்கேள்விகளைக் கையாளத்  தொடங்கிய காலகட்டத்தில் புரியவில்லை, குழப்பமானது என்ற பேச்சுகள் இருந்தன… இன்று அப்படியில்லை. விளிம்பு நிலை அரசியல், அதற்கான தர்க்கவியலுடன் சொல்லாடல் வடிவுடன்  தனக்கான  இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இலக்கிய வகைமை என்ற வகையில் பன்மைக் கதையாடல்கள் என்பது பற்றி மிக விரிவாக நான் விவாதங்களில், உரையாடல்களில் விளக்கியிருக்கிறேன். இன்று கதையாடலின் சில வகைமைகள் புழக்கத்தில் வந்துள்ளன. ஆனால் அரசியல் நீக்கம் மிக அதிகமாக நடந்துள்ளது.

இலக்கிய வடிவம், கதைசொல்முறை, புனைவைக் கட்டமைத்தல் என்ற வகையில் கிரணம் எழுத்து அதுவரை தமிழில் இருந்து வந்த தேக்கத்தை உடைத்து பன்மைப்படுத்தியது என்பது உங்களுக்குத் தெரியும். புது எழுத்து என்றும் தொன்மைக்கதையாடல் என்றும் விளிம்புநிலைக்கதையாடல் என்றும் அவை பல வடிவங்களில் வெளிப்பட்டன. அதுவரை ஊர்க்கதை, உறவுக்கதை சொல்லுவது மட்டும்தான்  புரட்சிகர எழுத்து,  சனாதன மறுப்பு எழுத்து என்று பிடிவாதமாக நம்பி வந்த பலர் தம் கதைசொல்லுதல் முறையை மாற்றிக் கொள்ளத் தொடங்கினர்.  சொல்லப்படாதன சொல்லுதல், அச்சம் தவிர்த்த அடையாள வெளிப்பாட்டு முறை, எழுத்துருவாக்கும் எழுத்து முறை, நுண்கதைச் சொல்முறை, தொன்மம் படிந்த வரலாற்றுக் கதையாடல், பாலரசியல் கதையாடல் எனப் பலவற்றை கிரணம் எழுத்துக்குப் பின்னான விவாதங்கள், விதண்டாவாதங்கள், உரையாடல், ஊர்க்கூட்டங்கள் அடையாளம் காட்டி, அறிமுகப்படுத்தி விரிவு படுத்தியுள்ளன. எனது ஒவ்வொரு புனைகதை எழுத்தும் ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கிக் காட்டுவது. அவை பின்பு பலரால் கையாளப்படுவதாக மாறும். கோணங்கி, கௌதம சித்தார்த்தன் என்ற நண்பர்கள் தம் அடிப்படை எழுத்து முறையையே மாற்றிக் கொண்டுள்ளனர். தலித் இலக்கியம், பெண்ணிய எழுத்து, தொன்மக் கவிதையியல் என இன்றைய இலக்கியத் தளங்களில் கிரணம் எழுத்துக்கள் மற்றும் எனது புனைவுக் கட்டமைப்பு வடிவங்கள் ஊடாடி உள்ளன. இதனை நான் மாற்றிலக்கிய வரலாறு, பின்நவீன தமிழ் இலக்கிய வரலாறு பற்றி அறிய, ஆய்வு செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு நினைவூட்ட அசைப்படுகிறேன். “பதிவுகள் இலக்கியச் சந்திப்புகளில்“ ஒவ்வொரு முறையும் நான் முன்வைத்த விவாதங்கள், இடையீடுகள் தமிழில் அதுவரை பேசப்படாதனவற்றை பேசின. பலர் அவற்றால் தாக்கம் பெற்றனர். தமிழவன், நாகார்ச்சுனன் போன்ற நண்பர்கள் அமைப்பியல், பின் அமைப்பியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோதும் இலக்கிய, கவிதை மொழியூடான எனது புத்தாக்க முறை தமிழ் எழுத்தியக்கத்தில் வலிமையான தாக்கத்தை, மாறுதல்களை உருவாக்கியது. கோட்பாடு, அரசியலடைந்த எழுத்து என்பதில் எனது ஒவ்வொரு கட்டுரையும் பலருக்கு பத்தாண்டுகளுக்கான எழுது பொருளை அளித்துள்ளன.  ஆனால் எனது பெயரை, எழுத்தைக் குறிப்பிட்டுத் தம் பேச்சைத் தொடர பலருக்குத் தயக்கம் இருந்தது. பலர் எனது தாக்கமும், பங்களிப்பும் தனது எழுத்தில் இல்லை என்பதை நிருபிப்பதற்காவே என் மீதான ஒரு பகைச்சொல்லாடலை உருவாக்கிக் கொண்டுள்ளனர். என் கட்டுரையின் ஒரே ஒரு கருதுகோளை எடுத்து முழுக் கட்டுரையாகவும், முழு நூலாகவும் விரிவுபடுத்திக் கொண்டவர்கள்கூட ஒரு கருணை அடிப்படையில்கூட எனது பெயரைக் குறிப்பிடாமல் சாதனைகளைப் படைத்துள்ளனர். இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள  முடியாமல் நான் நீண்ட காலம் குழம்பியிருக்கிறேன். பின்பு அதனைத் தோழர்கள் சிலர் சிறுகச்சிறுக விளக்கியுள்ளனர்.

முதல் கட்டத்தில் என்னைப் பெயர் மறைப்பு செய்தவர்கள் அதற்கு முன்பே எழுதி அறிஞர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், வயதிலும் வசதியிலும் என்னைவிடப் பெரியவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள். அவர்கள் என் எழுத்து மற்றும் பேச்சின் வழி தம் அடிப்படைகளை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் போது உள்ளூடான ஒரு கசப்புணர்வை அடைய நேர்ந்திருக்கிறது. இந்தச் சின்னப் பையன் நம் அடிப்படைகளை எப்படி கேள்விக்குள்ளாக்க முடிகிறது என அவர்கள் சீற்றம் அடைந்து, பின் என்னதான் சொல்கிறான் பார்க்கலாம் என உரையாடலைத் தொடர்கின்றனர். புதியவற்றைப் படிக்கவும் அதற்கேற்ப தம் எழுத்து சிந்தனை முறைகளை மாற்றிக் கொள்ளவும் தேவை ஏற்படுகிறது.  ஏற்கனவே எழுத்தின் வழி தம்மை ஓரளவு நிருவிக் கொண்டுள்ள அவர்களுக்கு அந்த மாற்றம் தானாகத் தம் உழைப்பால் உருவானதாக பதிவு செய்து கொள்வது வசதியாக இருப்பதுடன் என் இருப்பு ஒரு தொந்தரவாகவும் மாறுகிறது.  என் பெயரையோ, கட்டுரையையோ  குறிப்பிட்டால் தம் “வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்”  பெருமைக்குப் பங்கம் என்று உணர்ந்து  என்னை தொலைதூரத்திற்கு நகர்த்தி வைக்க முயற்சிக்கிறார்கள். இதுவரை எழுதியதெல்லாம் பழசா இருக்கு… இப்ப என்ன எழுதறது… எப்படி எழுதுறது என்று தெரியல என வருத்தப்பட்ட அன்றைய நண்பர் ரவிக்குமார், நான் சொல்லச் சொல்ல எழுதி சில கட்டுரைகளை வெளியிட்டுத் தன் இரண்டாம் கட்ட எழுத்தைத் தொடங்கிய பின் ஒரு கூட்டத்தில் கேட்டார் “எந்த பிரேம்… அப்படியாரையும் எனக்கு ஞாபகம் இல்லையே…”. நல்லது அவருக்குத் தெரிந்த பிரேமாக நான் அதிககாலம் இருக்க முடியாதுதான்.

அடுத்து நேர்ந்த ஒரு அழித்தொழிப்புக் காலகட்டம் இப்படித் தொடங்கியது. அதுவரை தீவிர இலக்கியம் என்ற பெயரில் இயங்கியும், இயங்காமலும் தம்மைப் பெரும் சிந்தனையாளர்கள் என்று நிறுவிக் கொண்டவர்கள் ஆன்டிகம்யூனிசம், ஆன்மிகம், உள்ளொளி, தரிசனம், வாழ்வின் இருண்ட ஆழம், அறிந்தினின்றும் விடுதலை, அறியாதவர்களே பெருந்தலை எனப் பேசி அரசியல் மறுப்பு செய்தவர்கள். மார்க்சியத்தை, புரட்சிகர உளவியலை படைப்புக்கும் இலக்கியத்தன்மைக்கும் எதிரானவை என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று வரைபடங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அரசியல் மறுப்பே மேல் நோக்கிய பயணம் மற்றதெல்லாம் கீழ் நோக்கிய பயணம் என்று கேளி பேசிக் கொண்டிருந்தனர். அந்த நிலையில் புரட்சிகர உளவியல், நுண் அரசியல், மார்க்சிய உளவியல்புடன் கூடிய மாற்று அடையாடம் என்பதுடன் கவிதையின் நுண்மொழியும் இணைந்த எனது எழுத்தும் செயல்பாடும் அவர்களின் தளத்தைத் தகர்ப்பதாக இருந்தது. பெயர் மறைப்பும் உருத்திரிப்பும் தொடர்கதையானது…

இடதுசாரிகளுக்கு எனது நுண் அரசியலும், பாலரசியலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தின, மொழி அடையாள அரசியல் பற்றாளர்களுக்கு எனது பெண்ணிய மொழி, விளிம்புநிலைக்கருத்தியல், தலித் அரசியல் என்பன சீற்றத்தை உருவாக்கின. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை என்னுடன் பேசிக் களித்த நண்பர்களுக்கு எனது வைதீக-பிராமண மறுப்பு நகக்கண்ணில் ஊசியாகக் குடைந்தன.  பின் நவீனத்துவம் பேசி பிறவியைத் தேற்றலாம் என்று என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர்களை என் களச்செயல்பாட்டு சார்பு நிலையும், அம்பேத்கர்-அயோத்திதாசர் பற்றும் தொற்று நோய் கொண்டவனிடம் இருந்து தப்பிப்பது போல பதுங்கச்  செய்தன. கலக இலக்கியம் என்ற பெயரில் தம் மனைவிகளின் கடிதங்களைக் கூட்டிக் குறைத்துக் கதை எழுதி அவர்களை அவமதிக்க நினைவுடன் என்னிடம் முன்னுரை கேட்டவர்கள் எனது பெண்ணிய வாசிப்பைப் பிற்போக்குத்தனம் என்று பிய்த்து எரிந்தனர்.

என் புனைகதைகளைப் படித்த நட்பார்ந்த களச் செயல்பாட்டாளர்களோ “பிரேம் நாலு முறை படிச்சும் எனக்கே ஒன்றும் விளங்கல, அரசியல் எழுதுறீங்க மக்களுக்குப் போய்ச்சேரணுமில்ல” என்று வருத்தப்பட்டனர். என் புனைகதைகளை வாரம் ஒருமுறை படித்துப் பார்த்து வியப்பு கொள்ளும் பாசத்திற்குரிய சில நண்பர்கள் “இந்த அரசியல், பெண்ணியம், தலித் ஆய்வு எல்லாவற்றையும் மறந்துவிட்டு மாதம் ஒரு கதையை மட்டும் எழுதுங்க பிரேம், கதையா அதெல்லாம் ஒவ்வொன்னும் ஒரு வகைமாதிரி இல்லையா?” என்ற ஆதங்கப்படுகின்றனர். என் சாதியை வைத்து பெருமை கொண்டாட விரும்பும் நண்பர்கள் சிலர் “என்னங்க பிரேம் நீங்க செஞ்சிருக்கிறது எவ்வளவு பெரிய வேல, நீங்க சரின்னு சொல்லுங்க உலக அளவுல உங்களக் கொண்டு போறோம்…” என உணர்ச்சி வசப்படுவதுண்டு.  என் எழுத்தின் அடிப்படையே சுயசாதி மறுப்பு என்பதை புரிந்து கொண்டால் உலக அளவுக்குக் கொண்டு போவதாகச் சொல்லும் அவர்கள் என்னை உலகத்துக்கு வெளியே கொண்டு போவார்களோ என்னவோ!

நான் மிக மதிக்கும் எம் அரசியல் தலைவர் தோழர். தொல். திருமாவளவன் என் நூல்களில் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கும் போது  ஒரு முறை சொன்னார் “நான் எழுதுவதையே தோழர்கள் புரியவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள் தோழர். நீங்கள் எழுதுவதை அவர்கள் எப்போது படித்துப் புரிந்து கொள்வது… நிறைய படித்த பின்தான் இதற்குள் வரமுடியும் இல்லையா… கடினமான உழைப்புதான்…” நான் அவருக்கு ஒரு உறுதிமொழி அளித்திருக்கிறேன் “தலித் அரசியல், சூழலியல் அரசியல் பற்றுள்ள ஒவ்வொருவரும் கட்டினமின்றிப் புரிந்துகொள்ளும் படி நான் சில நூல்களை எழுதுவேன், சில காலம் ஆகும்”.

எவை எப்படியிருந்த போதும் இலக்கியம், எழுத்து என்ற தளத்தில் நான் முன்வைத்த, எழுதி, பேசி வந்த இனவரைவியல் கதையாடல்,  சிறுமரபுக்கதையாடல், தொன்மக் கவிதையியல், சிதைவுறும் சொல்லாடல், பாலினக் கலப்பு மொழி என்பவை இன்று தமிழில் பலரால் கையாளப்படும் எழுத்து முறைகளாக உள்ளன, இது நிகழ்வியல் உண்மை.  இவற்றை மாற்றம், வளர்ச்சி என்ற தளத்தில் பார்க்காமல் இன்றைக்கான அரசியல்-அழகியல் தேவைகளை அவை எந்த வகையில் நிறைவேற்றுகின்றன என்றுதான் பார்க்க வேண்டும்.

எழுத்து கொண்டாட்டமாக அமைய வேண்டும் என்று ஒரு கும்பல் உருவாகி தமிழினப்படுகொலை பற்றி நகைச்சுவை துணுக்குகள் எழுதும் அளவுக்கு வலிமையடைந்துள்ளனர். ஆன்மிகமே இலக்கியம் என்று ஒரு பெருங்கூட்டம் வார வழிபாட்டு மன்றங்களை உருவாக்கி வியாசவியாபாரம் செய்து  பெருமிதமடைந்து கொண்டுள்ளது. அன்பைத் தேடும் நெடும்பயணம்தான்  எனது எழுத்து என அறிவுமறுப்பை பெருமிதமாக அறிவித்துச் செயல்படும் ஒருவரும் அவரது தொண்டர்களும் ஒருபுறம். பன்மை வடிவங்களின் பெருக்கம்தான் இது… பாலகுமாரனின் முன்று முகங்கள் இன்று தமிழ் இலக்கியத்தின் முப்பெரும் தேவர்களாக தனித்தனி அவதாரம் பெற்று மூன்று மடங்களைத் தொடங்கியுள்ளன… விளிம்புநிலைச் சமூகம் ஒன்றின் ஆன்மா நானே என அறிவித்துக் கொண்ட ஒரு எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருது பெறுவதற்காக இனத்துடைத்தழிப்பு அரசியல் அதிகாரத்தை கைகொண்டுள்ள ஒரு கட்சியைக் குறிப்பிட்டு அதுதான் இனி இந்தியாவைக் காக்கமுடியும் என்று  அறிவிக்கிறார். நாங்களே தூய பின்நவீனத்துவாதிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் புலிகளை அழிப்பதற்கான புகழ்மிகு போரில் மாண்ட சிங்கள ராணவத்தினரின் தியாகத்தின் நினைவாகத்தான்   மாவீரர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கலகச் சொல்லாடலைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர்… ஊடகப்பெருக்கம் உடலைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து கொண்டுள்ள நிலையில் இன்று எழுத்து, இலக்கியம்  செய்ய வேண்டியது என்ன…

தற்பொழுது எழுத வரும் ஒருவர் இந்த அழிவரசியல் பெருக்கத்திலிருந்து தன்னை வெளியே வைத்துக் கொள்ள கடினமான பயிற்சி தேவைப்படுகிறது… அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இந்த எழுத்துக்களை, இவை உருவாக்கும் சமூக உளவியலை அரசியல் செறிந்த கதையாடல்களால்தான்  எதிர்க்க முடியும். தற்காலத்தின் உடனடித் தேவை இதுதான்…

உரையாடல்: 2 : 1

படைப்பாளி என்ற முரண் அடையாளம் – பிரேம்

உரையாடல்:1 படைப்பாளி என்ற முரண் அடையாளம்

 

கேள்வி

தமிழ்ச்  சூழலில்  மார்க்ஸிய, பெண்ணிய, தலித்திய, நோக்கில் செயல்படும் அறிவுலவாதிகள் வெகு சிலரில் குறிப்பிடத் தக்கவராகவும், நவீன பின்நவீன, இலக்கியப் படைப்பாளியாகவும் இயங்கி வரும் நீங்கள் உங்களை எவ்வாறு முதன்மையாக அடையாளப்படுத்த  விரும்புகிறீர்கள்?

எழுத்துலகிற்கு வந்த தொடக்க காலத்திலிருந்து உங்கள் அடையாள நோக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கூறுங்கள்.  

[ ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்

பிரேம்

படைப்பாளி என்ற முரண் அடையாளம்:

நவீன, பின்நவீன இலக்கியப் படைப்பாளி எனக் குறிப்பிடுவதற்கு அரைமனதுடன் தான் நான் நன்றி சொல்ல முடியும். ஏனென்றால் அப்படிக் குறிப்பிடுவதன் மூலமே படைப்பாளி எனக் குறிப்பிட்டு அடையாளப் படுத்திக்கொண்டு ஒரு பண்பாட்டு  முதன்மைப் பாத்திரத்தை எடுத்துக்கொள்வதிலிருந்து என்னைத் தடுத்து விடுகிறீர்கள். நல்லது, ஒரு முன் நவீன- எதிர் நவீன படைப்பாளியாக நான் இருந்திருந்தால்  கதைப்பேரரசு, காவியப் பாவலன், கருத்துக் காவலன் என்று ஏதாவது ஒரு மொழிமுடி சூட்டிக் கொண்டு உங்கள் முன் நான் பேசமுடியும்.     எழுதுதல், அதற்காகச் சிந்தித்தல், முன்புள்ள பல்வேறு எழுத்துக்களில் இருந்து அடுத்து ஒரு  எழுத்தை  உருவாக்க முனைதல், முன்புள்ள  எழுத்துக்களுக்குள் அது முழுமையாக மறைந்து போகாமல் இருக்க அதன் வடிவத்தைத்  திருகுதல் என்பது ஒரு தொழில் நுட்ப பாத்திரம்தான் என்பதை நம்பும் ஒரு எழுத்துக்காரன் என்ற வகையில் அச்சியந்திரம் உருவாக்கிய ஒரு படலம் போல நான் உணர்கிறேன்.  நவீன-பின்நவீன படைப்பாளியாக இருக்கிறேன் என்பதை விட நவீன-பின்நவீன நிலையில்  படைப்பாளியாக இருப்பது என்ற முரண் அடையாளத்தைத் தமிழில் நான் நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறேன்.  

இலக்கியவாதி, படைப்பாளி, இலக்கியக் கர்த்தா, கவிஞன் என்னும் அடையாளங்கள் தொன்மையான  அறிதல் முறையால் உருவானவை. அவற்றின் பொருள் இன்று நவீன-பின்நவீன நிலையில் முற்றிலும் வேறு என்று அறிந்து கொண்ட பின் எழுதுதல் என்பதை வாழ்வு, இருப்பு இரண்டுக்குமான செயலடையாளமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட நான் தமிழில் எழுதும் எழுத்துக்கலைஞனாகவே ஒவ்வொருநிலையிலும்  செயல்பட இயலும்.

ஒரு இசைக்கலைஞனாவது பற்றிய கனவு எனது பிள்ளைப் பருவம் முதல் இருந்துவரும் ஒன்று, ஆனால் அது ஒரு கனவு மட்டுமே. இன்றும் கூட எனது கனவுகளில் விதவிதமான, வினோதமான இசைக்கருவிகளை வாசிப்பவனாக, பெரும் இசைக்கோலங்களைப் புனைந்து எழுதுபவனாக நான் உருவம் பெருவதுண்டு. எனது கனவுகள் ஒவ்வொன்றும் இசையுடன் அமைந்த திரைப்படம்போல இருந்து பல நேரங்களில் என்னைக் கூச்சமடைய வைப்பதுண்டு. கனவில் கூட நான் ஒரு போதும் பாடுகிறவானாக உருவமடைந்ததில்லை. இதனைச் சொல்வதற்கான காரணம் எனது அடையாளம் ஒருவகைப்பட்டதில்லை என்பதை விளக்குவதற்காகத்தான். இசையை இழந்து எழுத்துக்கு வந்தவன்தான் நீ என்று பலநேரங்களில் என் காதோரம் ஒருகுரல் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன்.  ஆனால் எனது இயல்பு, எனது பயிற்சி, எனது திறனென அனைத்தும் எழுத்து வடிவாக அமைந்து  விட்டபின் நான் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன், அதற்குக் காரணம் மரபான கூட்டு நினைவிலியும் நினைவும்தான்.

மொழி, எழுத்து, பேச்சு என்பன கவிதைவழியாகச் சமயத் தன்மை கொண்ட போதையூட்டும் தன்மையை அடைகின்றன. கவிதை என்பது குடிமரபு, குலமரபுச் சமூகங்களில் மந்திரம், சடங்கு, வழிபாடு என்பவற்றுடன் உறவுடைய பூசகத்தன்மை வாய்ந்த ஒரு நிகழ்வு. கூட்டுச் சமூகங்கள், நவீனச் சமூகங்களிலும்கூட கவிதைகள் சமய, மத, சடங்குத் தன்மையுடன் இயங்கும். கவிதையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தனிமனிதர் சடங்குத் தன்மையின், கூட்டுப் போதைத்தன்மையின் கவர்ச்சியினூடாக இழுத்துச் செல்லப்படுகிறார். ஒரு குலமரபின் பூசகர், குறிகாரர், மயக்கமூட்டும் நிகழ்த்துக் கலைஞர் போன்ற ஒரு தன்னடையாளத்தை எடுத்துக் கொள்கிறார்.

நவீன அமைப்பின் எந்திரவியல் ஊடுருவிய, கலப்புத் தமிழ் மரபு கொண்ட சமூகம் ஒன்றில் பிறக்க நேர்ந்து, எதிர்காலம் பற்றிய பாதுகாப்பின்மையின் அச்சத்துடன் வளர நேர்ந்த ஒரு சிறுவனாக இருந்த எனக்கும் அந்த நிலைமாற்றத் தன்னடையாளம் விருப்பமுடையதாக இருந்தது. எளிய, ஒதுக்கப்பட்ட ஒரு அடையாளத்திலிருந்து வெளியேறும் முயற்சியில் கவிதை என் முதல் தன்னுருவாக்கச் செயல்பாடாக இருந்தது.

“மறையா அழகே, மறையின் பொருளே குறையா ஒளியே  குறைதீர்த்தீர்த்தருளே”  என்பது போன்ற உருக்கமான பக்திப் பாடல்களை எழுதுவதில் தொடங்கி “நீ ஒரு காவியம் உன் விழிகளோ பாவிகம்” என்பது போன்ற நாடகப்பாடல்கள் வழி நான் உருமாற்றமடைந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே.

கவிதை எல்லாம் கலந்த ஒரு அடையாளச் செயல்பாடு என்ற வகையில்  மிகச் சிறுவயதில் அது என்னை அரசியல் செயல்பாட்டை நோக்கி இழுத்துச் சென்றது. சாதி, குடும்பம், மரபு என்பவற்றின் வன்முறைகளை, கட்சி அரசியலின் வன்மங்களை  நினைவு தெரிந்த நாளிலிருந்து அச்சத்துடன் கவனித்து வந்த எனக்கு  மாற்று அரசியல் மிக இயல்பாகப் பொருந்தியது. இரண்டு வயதிலிருந்து எழுத்துக்கூட்டி வாசிக்கப் பழக்கப்படுத்தப்பட்டவன் நான், வாசித்துக் காட்டுவதை வித்தைபோலச் செய்து காட்டவைத்து “இந்தக் குட்டிச்சாத்தன் இந்த வயசுல என்னமா படிக்குது பாருங்க” என்று புளகிப்பார் என் தாத்தா.  தினத்தந்தியை அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் மத்தியில் உட்கார்ந்து வாசித்துச் சொல்வது, அக்கா, சித்தி, அத்தைமார்களுக்கு சினிமா பாட்டுப் புத்தகம் கதைவசனம் வாசித்துச் சொல்லி செல்லம் பெறுவது, பாலர் பள்ளியில் அக்கா சொல்லித்தரும் வசனங்களைத் தவறின்றி மேடையில் பேசிநடித்து குழந்தைக் கலைஞனாக் ககைதட்டலும் பரிசும் பெற்றதென நினைவாற்றலும் மொழியும் சார்ந்த ஒரு பழகுமுறை எனக்குள் படிந்து போனது. ஊரில் பெரியவர்களுக்காகப் படித்துக்காட்டிய செய்தித்தாள்கள் வழி தெரிந்து  கொள்ள வேண்டியவை, தெரிந்து கொள்ளக் கூடாதவை எனப் பலவற்றை வயதை மீறி நினைவுகள் பதிவு செய்து கொண்டிருந்தன. அண்ணாதுரை மறைவு, பாகிஸ்தானுடன்போர், வியட்நாம் யுத்தம், தந்தை பெரியாரின் நெருப்பு மிதிக்கும் பிரச்சாரம் என ஏதேதோ என் மூளைக்குள் பதிவாகிப் பயமுறுத்திய போதும் வாசிப்புப் பழக்கம் எனக்கு மயக்கமும் லயமும் தருவாதாக மாறியிருந்தது.

தாத்தாவின் மளிகைக்கடையில் ஒவ்வொரு முறை வந்து சேரும் பழைய புத்தகக் கட்டுகளைப் பிரித்து அடுக்கி பிடித்த புத்தகங்களைப் பதுக்கி வைப்பதும்,  அடுத்த கட்டு வந்து சேரும் வெள்ளிக்கிழமைகளுக்காக பெரும் கிளர்ச்சியுடன் காத்திருப்பதும், பின் நானே கடையில் வேலை செய்த அண்ணன்மாருடன் சென்று புத்தகங்களை வாங்கி வருவதும் இன்பம்சார் உளவியலில் விளக்கமுடியாத பகுதிகள். அணில் அண்ணா, அம்புலிமாமாவில் தொடங்கிய படிப்புநோய் கலைக்களைஞ்சியம், சோவியத் நாடு, யுனஸ்கோ கூரியர் என வண்ணமும் எழுத்தும் கலந்த உலகைத் தேடியலைந்தது. கல்கி, அகிலன், ந.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், மர்க்சிம் கார்க்கி என தாவிச் சென்று மாஸ்கோ முன்னேற்றப்பதிப்பகத்தின் வாசலை அடைந்த பொழுது எனக்கு 11-12 வயதுதான். உலக அரசியல் பற்றிப் பேசுவதில் தொடங்கி வாசிப்பு என்னை எழுத்து, விவாதம் என இழுத்துச் சென்றது.

 சக்தி (வாலை) வழிபாடு கைவந்த ஒரு சித்த மருத்துவனாக என்னை உருவாக்கி விடவேண்டும் என்று விரும்பிய என் தாய்வழிப் பாட்டனார் பழக்கிய வாசிப்பும், மனப்பாடமும் தேவாரம், திருவாசகம், அருணகிரிநாதர், வள்ளலார், சித்தர் பாடல்கள், பாரதக்கதைகளைத் தாண்டியபோது அரசியல் உரையாடல்களுக்குள் என்னை மிக இலகுவாக இயங்க வைத்தது. பன்னிரண்டு வயதில் (1977 வாக்கில்) சில மூத்த தமிழ் இனப் பற்றாளர்களுடன்  இணைந்து சுவர் எழுத்து எழுதியதற்காக காவல்துறையைச் சேர்ந்த இருவர் என்னைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில் வைத்து எச்சரித்து மிரட்டிப் “போராளியாக” மாற்றிய நிகழ்வை நண்பர்கள் நடத்திய ஒரு நாடகத்தில் இடைச்செருகலாகச் சேர்த்திருக்கிறேன்.

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் எராளமான பரிசுகளைக் குவித்திருக்கிறேன்.   நெற்றியில் திருநீறும் சந்தனப்பொட்டும் பளிச்சிட மேடையில் மழலைப் பேச்சாளனாக “கடவுள் என்பது பொய் கல்வி அறிவே மெய்”  என்ற தலைப்பில் பேசி முடிவில் “எனது நெற்றியில் உள்ள திருநீறு பெரியவர்கள் கட்டாயத்தால் அணிந்திருப்பது, அதுவும் இன்னும் சில நாட்களுக்கு” என்ற உருக்கமான பின்குறிப்பால் சிலரைக் கண் கலங்க வைத்திருக்கிறேன். சில ஆண்டுகள் மேடைகளில் புரட்சிக் கவிதைகளின் புயலாய் வீசியிருக்கிறேன், இன்றைய இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை அமைப்பாளர் நண்பர் பொதினிவளவன் என்னைத் தன் பாசத்திற்குரிய நண்பனாக பார்க்கத் தொடங்கியது அந்தக் கவிதைகளின் காலத்தில்தான், அவரும் என்னைப் போல அன்று தினம் ஒரு கவிதை எழுதும் பழக்கமுடையவர். என் கவிதைகள் கையெழுத்துப் படியாகவே பலரின் வியப்புணர்வாக படிந்திருந்தது.   இவை எல்லாம் எனது பிள்ளை விளையாட்டுகள் மட்டும் அல்ல அரசியல் உருவாக்கத்திற்கான போராட்டங்கள்.

எனது ஒவ்வொரு நகர்விலும் மாற்றத்திலும் எதிர்ப்பை, ஒதுக்குதலை, வெறுப்பைச் சந்தித்து வெளியேறிக் கொண்டே இருந்திருக்கிறேன். கடவுள்,  சாதி, வர்க்க ஒடுக்குதல், ஆணதிகாரம் என்பவற்றை மறுப்பதும் எதிர்ப்பதும் தின  வாழ்வில் தொடர் தண்டனையை பெற்றுத் தரும் என்பது மாற்று அரசியல், விடுதலை அரசியல் பழகிய அனைவருக்கும் தெரிந்த நடப்பியல் உண்மை. இதனைச் சொல்லும் இன்று இந்த தண்டனைகளை ஏற்று அதுதான் எனது மாற்று இருப்பு என வாழ்வதுதான் எனது அடையாளம்.

இந்த இடத்தில்… நான் சொல்ல வருவது புரியும் என்று நினைக்கிறேன். எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம்.

தமிழின் “எழுத்துலகம்” அல்லது இலக்கியக் களம் என்பதற்குள் வருவது என்றால்… எனது  எழுத்துக்கள் பதிப்பிக்கப்படுவது, அவை சிலரால்  படிக்கப்படுவது, சிலரால் அவை விவாதிக்கப்படுவது, பலரால் தாக்குதலுக்கு உள்ளாவது, ஒரு எழுத்தாளனாக நான் அறியப்படுவது என்ற சில படிநிலைகள் இதில் உண்டு. எனது எழுத்துக்கள் அச்சானது ஒரு திட்டமிடப்பட்ட விபத்து, வேறு சிலரின் திட்டமிடுதலால் நான் எதிர்கொண்ட விபத்து.  நானாக எனது எழுத்துக்களை வெளியிடுவதாக இருந்திருந்தால் சில ஆண்டுகள் கழித்து வேறு ஒரு  நெடும் படைப்பு வழி வெளிவந்திருப்பேன். சிலவற்றை  எழுதுவது சில மாதங்கள் வைத்திருந்து அவற்றை எரித்து விடுவது என்ற ஒரு பழக்கம் எனக்கு இருந்து வந்தது. இதற்கிடையில் சிலர் அவற்றைப் படிப்பதும் உண்டு.

அப்படி ஒரு முறை எனது சில நெடுங்கவிதைகளைப் (எதிர்க்கவிதை) படித்த எனது அன்றைய நண்பர் முனியாண்டி தன் வாழ்வின் புனிதப் பணியாகக் கொண்டு அவற்றை அச்சாக்கும் முயற்சியை மேற்கொண்டார். அவர் அப்போது சிறுபத்திரிகைகள், இலக்கிய பத்திரிகைகள் என்று அறியப்பட்ட வட்டத்தில் தன் வசைக் கடிதங்கள் மூலம் வெறுக்கப்பட்ட ஒருவராக, சிலரால் ஒதுக்கப்பட்ட ஒருவராக இருந்தார். புதுச்சேரியில் பணியிட மாற்றம், நீண்டகால விடுப்பு, அச்சகம் தொடங்கும் முயற்சி இவற்றிற்கிடையில் தமிழ் இலக்கிய உலகின் பழமைவாதத்தை, பிற்போக்குத்தனத்தை எதிர்க்கவும்  பிற்போக்கு-முற்போக்கு இரண்டின் மரபுத்திமிரை ஒடுக்கவும் ஒரு பத்திரிகை வேண்டும், தன்னை ஒதுக்கிய அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் எழுத்துக்களை அதில் வெளியிட வேண்டும் என்றெல்லாம் இரவு பகலாக என்னுடன் இணைந்து திட்டமிட்ட அவர் எனது எழுத்தில் இடம்பெறும் “கிரணம்” என்ற பத்திரிகை ஒன்றின் பெயரையே வைத்து பத்திரிகையைத் தொடங்கினார். அது பத்திரிகை அல்ல பத்திரிகை வடிவில் வந்த எனது நெடுங்கவிதைகள். நான்கு வெளியீடுகள் வந்தன. 1983 முதல் 1986 வரை எழுதப்பட்ட நெடுங்கவிதைகள். 18 வயது முதல் 21 வயது வரை எழுதப்பட்ட எனது நெடுங்கவிதைகளில் நான் எரித்தவை போக மிஞ்சியவற்றில் சில படைப்புகள் அதில் வெளிவந்தன. முன்னாள் நண்பர் முனியாண்டி தன் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று என்று அதனைக் குறிப்பிடுவதாகப் பின் நண்பர் ஆபிதீன் வழி அறிந்தேன். அவர் தவறு செய்வதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பழக்கம் உடையவர். நான் செய்த பெரிய தவறுகளில் ஒன்று எனது எழுத்துக்களை அவரிடம் தந்தது என்று நானும் கூறலாம், தவறுகள் வழிதானே கற்கிறோம். ஆனால் அப்போது நான் அவருக்கு ஒரு கருத்தியல் போராளி. அவரிடம் வாதம், விவாதம் என யார் வந்தாலும் “வாங்கய்யா பிரேம் கிட்ட பேசி நீங்க செயிச்சா நான் உங்களுக்கு அடிமையா இருக்கேன்” எனச் சவால் விட்டுப் பல களங்களைக் கண்டவர் அவர். அதற்காக அவருடைய நூலகத்தை எனக்குத் திறந்து விட்டவர், ஒரு அச்சகம் தொடங்கி தமிழின் எழுத்து மரபையே மாற்றிவிடலாம் என்ற கனவுடன் என் சைக்கிளில் பின்னால் அமர்ந்து ஒரு ஆண்டு முழுக்க அலைந்தவர் அவர், பசிக்கும் பொழுது மாட்டுக்கறியும் இட்லியும் வாங்கித்தந்து இரவு பகல் பாராது பேசச் சொல்லிக் கேட்டவர். அவரிடம் எப்போதும் ஒரு குறிப்பேடு இருக்கும், சுருக்கெழுத்து அறிந்த அவரால் வேகமாகக் குறிப்பெடுக்கவும் முடியும். என் முன்னுரை இல்லாமல் தன் முதல் கதை நூல் வெளிவராது எனச் சொல்லிக் காத்திருந்தவர் இப்படி எத்தனையோ நிகழ்வுகள்… அரசியல் செயல்தேக்கமும் தோழர்களின் மறைவுகளும் என்னைக் குழப்பி அலைக்கழித்த நிலையில்தான் நான் அன்று “பிரேதா” என்ற பெயரில் அறியப்பட்டிருந்தேன். நான் அன்று மார்க்சியப் பற்றுள்ள (பற்று என்பது அனைத்துப் பொருளிலும்)  ஒரு சர்ரியலிச எதிர்க்கவிதையாளன், எதிர்க்கலாச்சாரம், பெண்ணியம் என்பவை எனது உளவியல்புகளாகப் படிந்து போயிருந்தன.

இந்தத் தளத்தில்தான் நான் நுண்ணரசியல், உடல்சார் அரசியல் பற்றிய இடையீடுகளுடன் எனது எழுத்துக்களை, விவாதங்களை முன்வைக்கத் தொடங்கினேன். “கிரணம்” பகுக்கப்பட்டு அது முன்வைத்த அரசியல்-அழகியல் இனி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் “நிறப்பிரிகை” என்ற பெயரை ஒரு பத்திரிகைக்கு அளித்து குழுவாக இணைந்து செயல்படத் தொடங்கினேன். மாற்று அரசியல், விடுதலைக் கருத்தியல்கள் என நான் அடையாளப்படுத்தும் சிந்தனைத் தொகுப்புக்கான முயற்சிகளாகவே அவை இருந்தன. மாற்று அரசியலுக்கான குழுக்களுடன் தொடர்ந்த உரையாடலும், இயக்கம் கட்டுவதற்கான முயற்சிகளும் அவ்வப்பொழுது முடிவதும், தொடருவதுமாக இருந்து வருவது எனது எழுத்துக்களை அறிந்த யாருக்கும் தெரிந்த ஒன்று.

பெண்ணிய, தலித்திய, சூழலியல் அரசியல் என்பவற்றின் கூறுகளைப் புரிந்து ஏற்ற மாற்று அரசியல் தளத்தில் இயங்கக்கூடிய  மார்க்சிய அறிவுக்களத்தை பன்மை நவீனத்துவம் என நான் இன்று அடையாளப்படுத்துகிறேன். இதில் விளிம்பு நிலை அரசியல், இனவிடுதலை அரசியல், அடையாள அரசியல், மனித உரிமை அரசியல், என்பவை செயல் வடிவில் இணைந்துள்ளன. எழுத்து ஒரு நுண்ணரசியல் செயல்பாடாக மட்டுமின்றி அது அறிவுருவாக்க அரசியலாக, அரசியல் மையங்களையும், மையஅறிவுகளைகளையும் உடைக்கும் செயலாக உள்ளது என்ற பின்நவீனத்துவப் புரிதல் உள்ளதால் எனது எழுத்துக்களும், ஆய்வுகளும்  அரசியல் செயல்பாட்டின் பகுதிகள் என நம்புகிறேன்.

இதற்குப் பிறகும் நீங்கள் ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “அரசியல் செறிந்த புனைகதையாளன்” என்ற அடையாளம்தான் எனக்குள் மிக இயல்பாகவும், இலகுவாகவும் பதிவாகியுள்ளது.  

 உரையாடல்:1:1 

உரையாடல்: 1:2

(பொதினிவளவன் பகிர்ந்தது)

உரையாடல் -பிரேம்

 எழுதுபவரின் அரசியல்  

 எழுத்துக்களின் அரசியல்

எழுதப்பட வேண்டிய அரசியல்

 

எழுத்தாளர்  பிரேம் அவர்களுடன் ஒரு தொடர் உரையாடல்

WRITER PREM

 

[கேள்விகள்:  ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

அறிமுகம்                                             

ராஜகாந்தன்

 

தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை மட்டும் நாம்  கணக்கில்  கொண்டாலும் மக்கள்தொகை ஏழு கோடிக்கும் அதிகம். இது உலகிலுள்ள நூற்று எண்பது நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். ஃபிரான்ஸில் வசிக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களை விடவும், இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலேயர்களை விடவும், இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளின் குடிமக்களை விடவும் தமிழர்களின் எண்ணிக்கையானது அதிகம்.

இப்பெருந்திரளான மக்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, வாழ்வியல் இன்ன பிற தளங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை விளக்கவும், அது தொடர்பான உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்தவும் அவற்றில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்துச் சிந்திக்கவும் அவற்றை அறிவுத்தளத்தில் முன்னெடுக்கவும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட  சீரிய, சார்பற்ற கடப்பாடுடைய அறிவுச் செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக இருக்கவேண்டும். ஆனால் நடப்புச் சூழலில் இப்படியான அறிவுத் தளத்தில் செயல்படுபவர்களின் எண்ணிக்கை தமிழில் ஆகக்  குறைந்த அளவே உள்ளதை நாம் அறிவோம். இது அளவு ரீதியான குறைபாடு, அத்துடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பண்பை மிக அதிகமாகப் பாதிக்கும் குறைபாடு.

காலனிய காலத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தபோது  தேசிய  உணர்வு, தேச விடுதலை தொடர்பான கருத்தாக்கங்கள் முன்னிலை வகித்தன. சமூகக்கேடுகள் மற்றும் அவற்றிற்கெதிரான சீர்திருத்தங்கள் குறித்த தீவிர செயல்பாடுகள் அக்காலத்திய சிந்தனையாளர்களின் எண்ணங்களைக் கட்டமைத்தது, அதுவே அவர்களின் செயல்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னான பத்திருபது ஆண்டுகளில் விடுதலை தொடர்பான இலட்சியவாதக் கனவுகள் பொய்த்தப் பின், பொதுவுடைமைக் கருத்தாக்கமும், மொழி, இனம் சார்ந்த தன்னுணர்வுகளும் அக்காலத்தியச் சிந்தனாவாதிகளை ஆக்கிரமித்ததாகக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த களப்போராட்டங்கள் கடுமையான ஒடுக்குதல்களுக்கு உள்ளான பிறகு அச்சிந்தனைகளைத் தொடர்ந்து  முன்னெடுப்பதில் ஒரு சோர்வு ஏற்பட்டிருந்தாலும் முழுமையாக அணைக்க முடியாத நெருப்பு போல சமூகச் செயல்பாடுகளின்  உந்து சக்தியாக, சமூக உணர்வுகளின் சல்லி வேர்களாக இருந்து வருகிறதெனலாம்.

தொண்ணூறுகளில் பொதுவுடமை நாடுகளில் அரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் பொதுவுடைமைச் சிந்தனைகள் வலுவிழந்து, உலக வர்த்தக மயமாக்கம் நிகழத் தொடங்கியது. அதற்குப்பின் உருவான கடுமையான ஏற்றத் தாழ்வுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியால் நுகர்வுக் கலாச்சாரமும், பொருள்குவிப்பு மனோபாவம் மக்களிடையே பெருகியது. அதன் தொடர்ச்சியாக சமூக மதிப்பீடுகளின் பெரும் வீழ்ச்சியும் ஏற்பட்டது. அப்போதிலிருந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் தத்தமது குழு சார்ந்த, சாதி சார்ந்த இருப்பை உறுதி செய்துகொள்ள முனைந்தன. அறிவார்ந்த செயல்பாடுகள் மதிப்பிழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது போன்றதான ஒரு தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அறிவுச்செயல்பாட்டிற்கான சமூக இடம்மற்றும் அறிவுச் செயல்பாட்டின் இருப்பு சார்ந்த  சிக்கலாகவும் தோன்றுகிறது.

பெரும் பொருளாதார, அரசியல், ஊடகச் சக்திகள் தம் நுட்பமான கருத்தாடல்கள் மூலம் வெகுமக்கள் சிந்தனையை மழுங்கடித்து சுரண்டலுக்குத் துணை போகும் சமூக மனவியலை உருவாக்குவதைக் கண்டுணர்ந்து புலப்படுத்தி, மக்களின் சார்பாக நின்று அதிகார செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டிய சிந்தனையாளர்கள் தற்போது ஏதாவதொரு அதிகாரம் சார்ந்த நிறுவனங்களோடு தொடர்புடையவர்களாக மாறியுள்ளதால் இத்தகையச் செயல்பாட்டில் ஒரு உள்ளார்ந்த  முரணியக்கம் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகுஜன ஊடகங்களைக் கடுமையாகச் சாடிவந்த தமிழ்ப் படைப்பாளிகள், அறிவுசார் செயல்பாட்டாளர்கள்  தற்போது அவற்றில் தமக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் தங்களுடைய நிலைப்- பாடுகளையும் பெருமளவுக்குச் சமரசத்துக்கு           உட்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெகு  மக்களை மூளைச்சலவை செய்யும் பெரு  நிறுவனங்களின் செயல்பாடுகளில்  பங்காளர்களாகவும் மாறியுள்ளனர்.   இது அறிவுசார் செயல்பாட்டாளர்களின் அரசியல் நிலைப்பாடு, நம்பகத்தன்மை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாபெரும் வீழ்ச்சியாக உள்ளது.

இப்பெரும் தமிழ்ச் சமூகத்தில் அறிவுக் கூர்மையுடையவர்கள்அறிவுத் தரகர்கள், அறிவுவியாபாரிகள், தொழில் நுட்பவாதிகள், பெரும் கலை யிலக்கிய படைப்பாளிகள், கேளிக்கை யாளர்கள் அனைவரும் ஆளும்வர்க்க நலன் சார்ந்தவர் களாகவே இருப்பார்களெனினும் இதற்கு மாறாக சமரசமற்றவர்  களாக, மக்கள்  சார்புள்ள அறிவுத்திறன் கொண்ட செயல்பாட்டாளர் களாக இயங்கும் சிலருக்கான இடம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது. இது தமிழ்ச் சமூகம் தன் இன்றைய வீழ்ச்சிகளிலிருந்து மீள்வதற்கும், உயிர்ப்புடன் கூடிய அறிவார்ந்த உரையாடல்களை உருவாக்கித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும்  முக்கிய  தேவையாக உள்ளது.

இன்று உருவாகியுள்ள கருத்தியல் சிக்கல்கள், ஊடக வன்முறைகள் பற்றி அரசியல் பின்புலத்தில் விளக்கம் பெற நாம் மாற்று அரசியல் இயக்கச் செயல்பாட்டாளர்கள் சிலரை அணுகலாம். அவர்கள் களச்செயல்பாடு சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சில விளக்கங்களைத் தருவார்கள். ஆனால் இன்று தமிழ்ச் சமூகத்தை அதிகம் பாதிக்கும் திரைப்படம், இலக்கியம், கலைகள், ஊடகவியல் சார்ந்தும்  கோட்பாடுகள் சார்ந்தும் விளக்க இயலாதவர்களாக உள்ளனர், இது வருத்தத்திற்குரிய நிலைஆனால் கோட்பாடுகளின் தேவை பற்றி, தமக்கு ஏற்பட்டுள்ள கருத்தியல் சிக்கல்கள் பற்றி இவர்கள் வெளிப்படையாக விவாதிக்காத வரை இன்றைய தேக்க நிலையை நாம் கடக்க இயலாது.

இலக்கியம், கலைகள், திரைப்படங்கள் பற்றி  எழுதித் தம்மை ஆளுமைகள் என நிருவிக்கொண்ட பலர் மக்கள் அரசியல், மக்கள் வரலாறு பற்றித் திட்டமிட்ட திரிபுகளைப் பரப்பி வருகின்றனர். இவர்களிடமிருந்து நாம் தமிழ்ச் சமூகத்தின் இன்றைக்கான அரசியல், கருத்தியல் சிக்கல்கள் பற்றித் தெரிந்து கொள்ள  முயற்சிப்பது பயனற்றது.   

படைப்பிலக்கியம் செய்யும் இலக்கியவாதிகளில் பலர் இலக்கியப் புனிதம் பேசுவதன் மூலம் எழுத்து அதிகாரத்தை நிறுவி பண்பாட்டு பெருமுதலாளித்துவத்தை பலப்படுத்துபவர்களாக  செயல்படுகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள அரசியல் இயக்கச்  செயல்பாடுகளில் தம்மை உறவுபடுத்திக் கொண்டவர்கள் கலை– இலக்கியம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லையென மறுப்பதன் மூலம் சமூக அறிவியலின் அடிப்படைகளை  மறைத்து  விடுகின்றர்.

இந்நிலையில் மக்களுக்கான சிந்தனைகளை, மாற்றுக் கருத்தியல்களைத் தமிழில் பேசும் குழுக்கள் தமக்குள் உரையாடல் இல்லாமல் தனித்தனியாகத் தம் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மார்க்சியம், தலித்தியம், அம்பேத்கரியம், பெரியாரியம், பெண்ணியம் பற்றி பேசுகிற பலர் ஒன்றை மற்றதிலிருந்து முரண்பட்டதாக விளக்கி வருவதால், அல்லது ஏதாவதொரு கருத்தியலை எல்லாவற்றுக்கும் தீர்வாக முன்வைப்பதால் புதிதாக அறிவுத் தளத்தில் இயங்க முன்வரும் தலைமுறையினர் தவறான குழப்பங்களுக்கு உள்ளாவதுடன் விரைவில் அரசியல் அற்ற எழுத்தாளார்களின், ஊடகம் வழிபடும்  பக்தர்களாக மாறிவிடுகின்றனர்.

இதிலிருந்து மாறுபட்டு நவீனத்துவம், பின்நவீனத்துவம் பற்றிய மிகவிரிவான உரையாடல்களை முன் வைப்பதுடன் தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல், அடையாள  அரசியல் சார்ந்த கருத்தியல்களின் தேவைகளை வலியுறுத்தி  மார்க்சியம்,  அம்பேத்கரியம், பெரியாரியம், காந்தியம் அனைத்திலும் உள்ள மக்கள் சார்ந்த மாற்றுச் சிந்தனைகளை அடையாளம் கண்டு இனியான மாற்றுக் கருத்தியல்களை நாம் உருவாக்க வேண்டும் என விளக்கி வரும் எழுத்தாளராக, சிந்தனையாளராக இயங்கி வரும் பிரேம் கடந்த முப்பதாண்டுகளில் உருவாக்கியுள்ள உரையாடல்கள், பிரச்சினைப்பாடுகள்   முக்கியத்துவம் பெறுகின்றன.

படைப்பாளியின் இடம் தனித்த இடம் இல்லை அது அரசியலின் ஒரு பகுதி, படைப்பாளி என்ற அடையாளத்தின் வழி அதிக சமூகத் தன்மை அடைகிறேன் என்றும் எழுத்தை நான் உருவாக்குகிறேன் என்பதை விட எழுத்து என்னை உருவாக்கித் தருகிறது என்றும் அறிவித்து இயங்கிவரும் பிரேம் அறிவார்ந்த, அரசியல் செறிந்த தளங்களில் தீவிரமாக செயல்பட்டுவரும் படைப்பாளி. அரசியல் இயக்கம், புனைவெழுத்து இரண்டிலும்  பன்மைத் தன்மை, மாறும் கட்டமைப்பு பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இலக்கியம், அரசியல், கருத்தியல் என எந்த ஒரு தளத்திலும் மையவாதமும் பிம்ப உருவாக்கமும் வன்முறையென்று தொடர்ந்து விளக்கிவிளிம்புநிலைகளின் அரசியலை உரையாடலாக முன் வைத்துவரும் அவருடன் ஒரு உரையாடலை முன்வைக்கிறோம்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் கடந்து தமிழில் பன்மை நவீனத்துவம் உருவாக வேண்டும் என்று எழுதி வரும் அவர் முன்வைக்கும் சமூக-தனிமனித அரசியல், அழகியல், அறவியல் பற்றிய பதில்கள் உங்கள் பங்களிப்புடனும் இடையீடுகளுடனும் உரையாடலாக, விவாதமாக விரிவடைய உள்ளது.  

(உரையாடலில் கருத்து பதிவு செய்யவும், கேள்விகளை அனுப்பவும் மின்னஞ்சல்: panmeyithazh@gmail.com)   

ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்-பிரேம்

ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்  – பிரேம்

பெண்ணியம், பெண் அடையாளம், பெண்மொழி, பெண்ணெழுத்து, பெண்ணரசியல், பெண்ணிலை அறிவு என்பவை பற்றிய நெடிய உரையாடல்களும் கோட்பாட்டு மோதல்களும் கருத்தியல் போராட்டங்களும் உலக அளவில் நிகழ்ந்து அடுத்த கட்ட நிலையை அடைந்துள்ளன. புதுப்பிக்கப்பட்ட அறிவுருவாக்கம், தத்துவம், பகுப்பாய்வு முறைகள், பொருளுரைப்பு முறைகள் அனைத்திலும் தற்போது பெண்ணிய மறுபார்வைகள் மறுக்க முடியாத   பகுதிகளாக மாறியுள்ளன.

 அரசியல், பொருளியல், சமூகவியல், உளவியல் என அனைத்து வகையான மனிதவியல் புலங்களும் தற்போது பெண்ணிய-பெண்ணிலைக் கேள்விகளை மறுத்தோ மறந்தோ இயங்குவதில்லை, இயங்க அனுமதிக்கப்படுவதில்லை. கலை-இலக்கிய கோட்பாட்டுத் துறைகளும்கூட பெண்ணிய-பெண்ணிலைக் கேள்விகளால் “சிதைவாக்கம்” செய்யப்பட்டு ஆண்மைய-ஆண்முதல்வாத கொடுங்கோன்மைக்கு எதிரான சொல்லாடல் செயல்பாடுகளாக மாற்றமடைந்துவிட்டன.  தன்னைத்தானே மையப்படுத்திக் கொண்டு, தன்னால் உருவாக்கப்பட்ட “பொருள் சுமக்கும் உயிர்ப் பொருளாகவும்” தனது வரையறைக்கும் விளக்கத்திற்கும் உட்பட்ட தன்னிலை அற்ற புனைவு உடலாகவும்    பெண்மை-பெண்ணிலை என்பதை வைத்திருந்த ஆணாதிக்க, ஆண்மைய அறிவுப் புலங்கள் அனைத்தும் தற்பொழுது தகர்க்கப்பட்டு விட்டன.

 விடுதலைக் கருத்தியல்களின் ஆற்றல் மிக்க தொடக்கமாக அமைந்த மார்க்ஸியமும் அதன் விரிவாக அமைந்த பிற கருத்தமைவுச் செயல்திட்டங்களும் பெண்ணியக் கேள்விகள் மற்றும் “மறுப்பாய்வுகள்” வழியாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட பின்பே தற்காலத் தன்மை கொண்டதாக மாற முடிந்தது.

பாலினப் பார்வையும், பாலரசியல் நோக்கும் அற்ற பாலினச் சமத்துவத்தை ஏற்காத எந்த ஒரு கருத்தியல் – கோட்பாட்டு அணுகு முறையும், அறிவாய்வு முறையும் தற்காலத் தன்மை அற்ற பழமை வழிபாட்டு நோயாக மட்டுமே எஞ்சியிருக்கும். வர்க்க விடுதலை, இன விடுதலை, சாதி ஒழிப்பு,  ஏகாதிபத்திய எதிர்ப்பு என அனைத்து வகையான விடுதலைக் கருத்தியலுக்குள்ளும் பெண்ணியத்தின் கோட்பாட்டு, பகுப்பாய்வு முறைகள் செறிவான வழிகாட்டு நெறிகளாக உள்வயப்படவில்லை யெனில் அவையும் ஆண் மேலாதிக்க பெருங்கதையாடல்களாவே இருக்கும் என்ற புரிதல் உருவாகி விட்டது. சூழலியல்,  அதிகார மையங்களின் தகர்ப்பு, அடையாள அரசியல், உடல் அரசியல் என்பவற்றில் பன்மைத் தன்மை கொண்ட பெண்ணிய இயங்கியலே முன்னகர்த்தும் சக்தியாக அமைந்துள்ளது.

பெண்கள் மீதான வன்முறைகள், பெண்மை மீதான கருத்தியல்-பண்பாட்டு அடக்கு முறைகள், பெண்மை பற்றிய பகுத்தறிவற்ற கீழிறக்கம் என்பவை இந்தப் பெருந்தகர்ப்பு பற்றியும், மறு கட்டமைப்பு பற்றியுமான அறிவின்மையால் தொடர்கிற அறிவுமறுப்புக் கொடுங்கோன்மைகளே தவிர வேறில்லை. இந்தக் கொடுங்கோன்மைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான நெடிய போராட்டத்தைக் கருத்தியல் தளத்திலும் சமூக-அரசியல் தளத்திலும் தொடர்ந்து முன்னெடுப்பதே பெண்ணியச் செயல்பாடுகளாகவும், பெண்ணிய இயக்கங்களாகவும் இருந்து வருகின்றன.

மொழிச் செயல்பாடுகளிலும், குறியீட்டுச் செயல்பாடுகளிலும் உள்ளீடான தலைகீழாக்கத்தையும், உடைப்பையும் உருவாக்குவது பெண்ணிய அரசியலின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. அதனைக் கலை, இலக்கிய, ஊடக மொழிகள் வழியாக  நிகழ்த்த பெண்கள் தம் இருப்பை, தமக்கான இடப்பகிர்வை அவற்றில் பெற்றாக வேண்டும். ஆணாதிக்க மொழி, ஆண்மையக் குறியமைவு போல வரலாற்றால் உறுதி செய்யப்பட்ட வன்முறைகளை வழிமொழிந்து தமக்கான கருத்தியலைப் பெண்கள் உருவாக்கிக் கொள்ள முடியாது. ஒவ்வொன்றையும் எதிர்த்தாக வேண்டும், ஒவ்வொன்றையும் மறுபார்வைக்கு உள்ளாக்க வேண்டும், ஒவ்வொன்றையும் உடைத்து மறுகட்டமைப்பு செய்தாக வேண்டும், ஒவ்வொன்றையும் சிதைவாக்கம் செய்து புதிய பொருளுருவாக்கத்தை நிகழ்த்தவேண்டும், ஒவ்வொன்றின் மையத்தையும் பிளந்து புனைவுகளை வெளிக் கொணரவேண்டும், தம் மீது சுமத்தப்பட்ட வரையறைகளை உடைத்து நொறுக்கவேண்டும், தம் அனுமதியின்றி தம்முள் நிறைக்கப்பட்ட அடையாளங்களை வெளியேற்ற வேண்டும், இன்னும் பல தளங்களில் பெண்கள் தாம் இந்த உலகில் இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்துவதற்கே வன்மையான ஊடுறுவலைச் செய்தாக வேண்டும். ஒருவகையில் ஆண்வயமான மனிதக் கட்டமைப்புகள் அனைத்தையும் தலை கீழாக்கம் செய்யும் சிக்கலான, கடினமான போராட்ட  வாழ்நிலை இது.

ஆண் நிலை அழிப்பும், ஆண்மையத் தகர்ப்பும் இந்தச் செயல்பாடுகளூடாக நிகழவே செய்யும். ஆண்மையம் அற்ற ஆணாதிக்கமற்ற ஆண் தன்னிலையைக் கட்டமைப்பதன் வழியாகவே ஆண் நிலை என்பது தன்னை அறிவு வழி அமைந்த சமூகத் தன்னிலையாக உருவாக்கிக் கொள்ள இயலும்.  இந்தக் கட்டுமானத் தலை கீழாக்கம் பற்றிய அறிவைப் பெறாதவர்கள் இன்றைக்கான நவீன அரசியல், மனித உரிமைச் செயல்பாடுகள், ஜனநாயக மதிப்பீடுகள் பற்றிப் பேசுவதற்குரிய தகுதியைப் பெறமுடியாது. நவீன தேசம், நவீன அரசு, நவீனப் பொருளியல், தொழில் நுட்பம், ஊடகப் பொறியியல் என்பவை உருவாக்கித் தந்த  வசதிகளை, மனித உரிமைப் பாதுகாப்புகளைப் பெற்றுக் கொண்டு அவற்றின்வழி கிடைக்கும் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்த  போதும் இவர்கள் மரபான அதிகாரக் கருத்தியல்,  சமத்துவம் மறுக்கும் மதஅதிகார உளவியல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

 நவீன அரசியலமைப்பு அடிப்படையில் அமைந்த எந்த ஒரு அரசியல் செயலும் பெண்ணிய உரிமைகளை மறுத்து இயங்க முடியாது என்பது உலகமயமான மனித உரிமை- குடியுரிமை அரசியலால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நெறிகள், குடிமைச் சட்டங்கள், பொருளாதார, சமூகத் திட்டமிடுதல்கள் என அனைத்தும் பெண்ணிய-பெண்ணிலை நிபந்தனைகளை நிறைவு செய்யாமல் இனிச் செயல்பட முடியாது.  சட்டம்,  நீதி, அரசியல் மதிப்பீடுகள், வழிகாட்டு நெறிகள்  அனைத்திலும் பெண்ணிய-பெண்ணிலைக் கருத்தியல், அறிதல் முறைகள் தமது நெடிய போராட்டங்களின் வழியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.

பத்தாண்டுகள் முன்புவரை ஒரு அலுவலகக் கட்டிட வரைபடத்தில் பெண்களுக்கான வேலையிடம், ஓய்விடம், சுகாதாரப் பகுதி என்பவை இடம் பெறுவதில்லை. தற்போது பெண்களுக்கான முறையான புழங்கும் வெளியில்லாமல் எந்தக் கட்டிட அமைப்பும் இருக்க முடியாது. அப்படி அமைந்தால் அது சட்ட விதிப்படி அனுமதி பெறத் தகுதியற்றது.  உலகமயமாக்கலின் பின் உள்ள திட்டமிடல்களில் பெண்ணிலை இதுபோன்ற “பருண்மை  இடங்களைப்” பெறுவதற்கே பெரும் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பொது வெளிகளில் கருப்பின மக்கள் தமக்கான இடத்தைப் பெற நிகழ்த்தியதை விடக்  கடினமானதும், தமது சம வாழ்வுரிமைகளுக்காக  இந்திய ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றும் நிகழ்த்தி வரும் போராட்டத்தை விடச் சிக்கலானதுமான போராட்டம் இது.

தற்போதுள்ள உலகமயமான நவீன தேசங்களின் அரசியலில் பெண்ணிய-பெண்ணிலைக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் பெண்ணிய அரசியலை நீக்கி வைத்து அவை இயங்கமுடியாத நிலையை பெண்ணியப் போராட்டங்களே உருவாக்கின.

மதங்கள், பண்பாட்டு மரபுகள், வழக்காற்று முறைகள், குடும்ப விதிமுறைகள் என்பவை இந்தச் சமஉரிமை அரசியல் நெறிகளை ஏற்க முடியாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றின் தொடர் வன்முறைகள் பெண்களை மேலும் மேலும் அடிமைப்படுத்த, அழுத்தி நசுக்க  புதிய புதிய தந்திர வடிவங்களை எடுத்து வருகின்றன.  பெண்ணிய-பெண்ணிலைக்   கோட்பாடுகளும், சொல்லாடல் செயல்பாடுகளும், பெண்ணிய இயக்கங்களும் இவற்றைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவதால் பெண்ணியம் என்ற அடையாளத்தையே முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற கொடுவெறியைப் பாலின அதிகார அமைப்புகள் தமக்குள் நிறைத்து வைத்துக்கொண்டுள்ளன.

ஆணாதிக்க உளவியல் கொண்ட தனிமனிதர்களும், ஆண்மையக் கருத்தியல் கொண்ட கலாச்சார, குடிமை மரபுகளும் நவீன அமைப்பின் உள்ளிருந்தபடி மிகுந்த வன்மம் கொண்டு பழிதீர்க்கும் செயல் திட்டங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. குடிமைச் சமூகத்தில், மரபுத் தளங்களில் ஆண்மைய- ஆணாதிக்க வன்கருத்துக்கள் தம் அதிகாரத்தைத் காப்பாற்றிக் கொள்ள அறிவு மறுப்பு உத்திகளைத் தொடர்ந்து கையாளுகின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், பொதுப் பேச்சுக்கள் என அனைத்திலும் இந்த ஆண்மைய அறிவு மறுப்பு தொடர்ந்து செயல் படுத்தப்படுகிறது. பக்தி, சமயம், சடங்குகள், புராதனப் புனிதவாதம் என்பவற்றை நுண்வடிவிலும், உருப் பெருகிய வடிவிலும் பரப்பியபடி பெண்ணிலை -பெண்ணுடல் மீதான தன் வன்கொடுமைகளை நிகழ்த்திவருகின்றன ஆணாதிக்க அமைப்புகள்.

தற்போது நிகழ்த்தப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பெண்ணுரிமைப் போராட்டத்திற்கு எதிரான, பெண்கள் பெறமுயலும் தன்னடையாளத்திற்கு எதிரான ஆணாதிக்க உளவியலின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.

வீடுகள், வேலையிடங்கள், பொதுஇடங்கள், நிறுவனங்கள், மதவழிபாட்டுத் தளங்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகத் தொழிற்கூடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்களின் உடல் மீதும் தன்மதிப்பு மீதுமான வன்கொடுமை எந்த நொடியிலும் நிகழலாம் என்ற நிலை பெண்களை அச்சுறுத்தியபடி உள்ளது. தீண்டாமைக்கு எதிரான எதிர்ப்பும் போராட்டமும் நிலைகொள்ளும் இடங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமைகள், உடல் சிதைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கும் பிற பொதுவெளிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உடல், உளநிலை வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரேவகை ஆண் உளவியல்தான், அடங்க மறுக்கும்,  தன்னடையாளம் கோரும் பகுதியினர்  மீது தாக்குதல் தொடுக்கும் வன்மம். மற்றொரு தளத்தில் உடல் மீதான வன்முறையைவிட உளவியல் வகையில், குறியீட்டு நிலையில், மொழி வடிவில், காட்சி பிம்ப வடிவில் நிகழ்த்தப்படும் வன்முறைகளின் அளவும்,  விகிதமும் மிக மிக அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகப் பெண்கள் தினத்தன்று பெருநகரங்களில்  சில ஆண்கள் கூட்டம் பெண்களை வலிந்து தீண்டியும், உடலை அவமதித்தும், இழிவான சைகைகளைச் செய்தும் தம் வெறிச்செயலில் பெருமை கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.  டெல்லியில் வேறு எந்த நாளைவிடவும் உலகப்பெண்கள் தினத்தன்று பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகள், குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகமாகப் பதிவாகிறது, பதிவாகாத குற்றங்கள், வன்கொடுமைகள் இதைவிட அதிகமாக இருக்கும்.  எண் பலகையில் வண்ணத்தைப் பூசி மறைத்த இருசக்கர வாகனங்களில் வந்து வன்முறையை நிகழ்த்திவிட்டு மறைந்த ஒரு கூட்டத்தை நான் நேரில் கண்டு செயலற்று நின்றிருக்கிறேன். மாணவிகள் பலர் பெண்கள் தினத்தன்று தம் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் பற்றிச் சொல்லிக் குமுறியதைக் கேட்டிருக்கிறேன். பெண் விடுதலை, பாலினச் சமத்துவம் பற்றிய வெறுப்பு, வன்மம் இந்த இளைஞர்களை வெறிகொண்டவர்களாக மாற்றுகிறது. டெல்லியில் ஒரு மாணவி வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த துயர நிகழ்ச்சிக்குப் பின் நடந்த சில கண்டன ஊர்வலங்களிலேயே பெண்கள் மீதான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பெண்கள் இனிப் பொது வெளியில் புழங்காமல் இருப்பதும், ஆண்களுக்கான இடங்களில் தட்டுப்படாமல் பதுங்கி வாழ்வதும்தான் தப்பிப்பதற்கான வழி என்ற மனநிலை உருவாக்கப்படுப்படுகிறது. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம், திருத்தப்பட்ட பாலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்  போன்ற பெண்ணுரிமைச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின் ஆண்களின் வன்மம் அதிகமாகியுள்ளது எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆணாதிக்க உளநோய் கொண்டவர்கள் பெண்கள் மீதான தம் வன்முறைகளையும், சித்திரவதை முறைகளையும் புதிய வடிவங்களில் நிகழ்த்தத் தொடங்கியுள்ளனர்.

இதே வகையான ஆண்நோய் வன்கொடுமைகள் கலை, இலக்கியம், அரசியல், சமூக இயக்கங்கள், அறிவுத் துறைகள் என்ற கருத்தியல் புலங்களில் செயல்படும் பெண்கள்மீது மதிப்பிடுதல் என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆண்நோய் வன் கொடுமைகள் குறியீட்டுச் சடங்குகளாக, உளவியல் தாக்குதல்களாக, மொழி வன்முறைகளாக, ஒழுக்கவியல் அச்சுறுத்தல்களாக வெளிப்படுகின்றன. தாம் நிகழ்த்தும் வன்முறையை “அறச்சீற்றம்”  என்று சொல்லும் அளவுக்கு ஆண்மைய உளநோயால் பீடிக்கப்பட்டவர்கள் தம்மைப் பண்பாட்டுக் காவலர்களாகவும், மரபின் போதகர்களாகவும்  கற்பிதம் செய்து கொள்கின்றனர்.

மற்றொரு தளத்தில் அறிவுத்துறைகள், கோட்பாட்டு உரையாடல்கள், கருத்தியல் ஆய்வு முறைகள், கலை-இலக்கிய பகுப்பாய்வுகள் என்பவை தற்போது பெண்ணியத்தை, பெண்ணிலை அறிவுருவாக்கத்தை மறுத்து இயங்காத  நிலை உருவாகி உள்ளது. இதுவரை தன்னை மையமாகவும் முதன்மையாகவும்  வைத்து, தனக்குத்தானே அளித்துக் கொண்ட இறைமை நிலையில் திளைத்துக் கொண்டிருந்த ஆண்மைய அழகியல், ஆணாதிக்க கலை இலக்கியக் கோட்பாடுகள் அனைத்தும் இன்று நொறுக்கப்பட்டு விட்டன.

இன்று   ஆண்மையச் சொல்லாடலோ, ஆணாதிக்க மொழிபோ தன்னை உறுதிப்படுத்தி, தன்னை நியாயப்படுத்திப் பேசவேண்டும் என்றால் ஒரு நூற்றாண்டு அறிவுப் போராட்டங்கள் பற்றிய அறியாமையில் அழுந்தியவைகளாக இருக்க வேண்டும். அல்லது, அந்த அறியாமையை வெட்கம் கெட்டுக் கொண்டாடிக் கொள்ளும் மனத்திரிபு கொண்டவைகளாக இருக்க வேண்டும். பேரிலக்கியங்கள், செவ்வியல் படைப்புகள், காலம் கடந்து நிற்கும் காவியங்கள் என்ற பொய்க் கதைகளை, ஆணாதிக்கக் கட்டுக் கதைகளை பெண்ணிய வாசிப்புகள் உடைத்து நொறுக்கி புதிய கதைக் கலைப்புகளை, மொழிச் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளன.

இதுவரை ஆண்மைய அறிவைக் கொண்டாடி மகிழ்ந்து, தன்னுறுதியில் திளைத்த கலை, இலக்கியம் சார்ந்த தனிமனிதர்கள் இந்த நிலைத்தகர்ப்பு விளைவுக்கு எதிராகத் தம்மை அணிதிரட்டிக் கொள்ள பெண்ணியத்தை எதிர்த்தல், பெண்ணிலைப் பார்வைகளை இழித்துரைத்தல், பெண்ணிலைக் கருத்தியல்களை திரித்துக் குழப்புதல் போன்ற செயல் உத்திகளைக் கையாள்வார்கள். இதற்கு அவர்கள் இலக்கியச் செம்மைவாதம், உயர் கலைத்தன்மை போன்ற காலம் கடந்த கருத்தாக்கங்களைத் துணையாகக் கொண்டு தம்மை அறிவுத்துறை சார்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். இவர்கள் பேசும் தத்துவம், அழகியல், பொதுஅறம், கலை-இலக்கியக் கோட்பாடுகள், ஒழுக்கவியல் அனைத்துக்குள்ளும் ஆண்மைய, அதிகாரப் புனிதவாத வன்முறை உறைந்து கிடக்கிறது.

தமிழில் இந்த அதிகாரப் புனிதவாதமும், மாறுதல் மறுக்கும் ஆண்மையவாதமும் பெருமைக்குரிய அடையாளங்களாக இருந்துவருகின்றன. இந்திய மொழிகள் பலவற்றின் கலை-இலக்கிய, அறிவியக்கப் புலங்களில் வெட்கப்படத் தக்கவையாக மாறிவிட்ட  ஆண்மைய, ஆணாதிக்கப் பேச்சுக்கள் தமிழில் இலக்கியம், அழகியல், சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ற அடையாளம் கொண்ட பல ஆண்களால் பெருமையுடன் முன் வைக்கப்படுகின்றன. ஒழுக்கவியல், பண்பாட்டுப் புனிதம் என்ற  பெயரில் ஆண்நோய் புலம்பல்களும்  பெண்ணிலை மீது ஏவப்படும் மொழி வன்முறைகளும் தமிழில் மிகுந்த மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றன. இந்த அறிவழிப்புத் தன்மை கொண்ட ஆண்மைய- ஆணாதிக்க கருத்தியல் செயல்களுக்கு எதிரான செயல்பாடுகள், சொல்லாடல்கள் தமிழில் விளிம்பு நிலையில்தான் உள்ளன.

பெண்ணாக இருந்து எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், எதைப் பேசவேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை வரையறை செய்து தருவதற்கான அதிகாரம் தமக்கு இருப்பதாக நம்பும் ஆண்மையவாதக் கும்பல் கலைஞர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், தமிழின் வரலாற்று நாயகர்கள் எனப் பெருங்கதையாடல் உருவங்களாகத் தம்மை நிறுவிக்கொண்டு செய்கிற வன்முறைகளை இலக்கிய தவம் என்று துதிபாடும் பெருங்கூட்டம் ஒன்று தமிழில் இருக்கிறது.

உண்மையான பெண்ணியம் என்றால் என்ன? எது சரியான பெண்ணியம்? பெண்ணியம் பீரிடாமல் எப்படி எழுதுவது?  என்று பெண்ணியச் செயல் பாட்டாளர்களுக்கு ஞானோபதேசம் செய்து உய்விக்க இந்த ஆண்மையவாதக் கூட்டத்திலிருந்து குருமார்கள் தோன்றியபடி இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணியத்திற்கும், பெண்ணிலைச் சொல்லாடல் செயல்பாடுகளுக்கும் எதிரான போராளிகளாக மாறித் தலைமையேற்றுச் செல்ல முன்வரும் போது, இந்த வீர மரபை தமிழின் ஒரு பெருங் கூட்டம் பெருமையுடன் திமிர் பொங்க முன்னெடுத்துச் செல்லக் காத்துக் கிடக்கிறது.

பெண்ணிலை மீதான பலவகையான வன்கொடுமைச் செயல்பாடுகளின் ஒரு குறியீட்டு வடிவமாக, ஒரு அடையாளத் தாக்குதலாக, மொழி வன்முறையாக அமைந்திருப்பதுதான் ஆண் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் எழுத்தாளர்கள் அல்லது பெண் கவிஞர்கள் பற்றித் தெரிவித்து, ஆய்வறிவோ அரசியல் புரிதலோ அற்ற ஆண்நோய்க் கும்பலின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள சில கருத்துக்கள்.

இவற்றைக் கருத்துக்கள் என்பதைவிட பெண்ணாக இருந்து, பெண்ணிலை அடையாளத்துடன் கலை-இலக்கியத் தளத்தில் செயல்பட்டு வரும் பெண்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள இழித்துரைக்கும் சைகைமொழி என்றுதான் கொள்ள வேண்டும்.

இவற்றை மேம்போக்காகப் பார்த்தால் பெண்ணெழுத்தின் இலக்கியத்தன்மை பற்றி மதிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள ஒரு மாற்றுக் கருத்து போலத் தோற்றம் தரக்கூடும். பெண்கள் சிறப்பாக எழுதவேண்டும் என்றும், அதிகம் கற்று அறிவுத் தெளிவு பெற்று நீடூழி வாழ வேண்டும் என்றும் அக்கறை கொண்ட பெருமகனார் ஒருவரின் ஆதங்கம் போன்று தோன்றலாம். ஜெயமோகன் தன் வசையை-இழிவுறுத்தும் சைகையை நியாயப்படுத்த மேலும் மேலும் பயன்படுத்தும் மகா வாக்கியங்கள் அவரை பண்பாட்டு பிதாமகனாகப் போற்றவேண்டும் என்ற பெரும் மயக்கத்தைக்கூட தோற்றுவிக்கலாம்.  ஆனால் இதன் குறியியல், அரசியல் பொருளாக்கம் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது, தற்கால அறிவுப் புலத்திற்கு, நவீன அரசியல், பொதுக்கள நெறிகளுக்கு முற்றிலும் எதிரான தற்புனித வன்முறை நிறைந்தது.

இதனைப் பொதுக்களத்தில் பதிவு செய்து, ஆண்மைய, ஆண்நோய்க் கருத்தியலை மறுஉருவாக்கம் செய்ய ஜெயமோகனுக்கு “எழுதும் ஒருவர்” என்ற அடையாளம் பயன்பட்டிருக்கிறது. பல ஆயிரம் பக்கங்கள் எழுதி வாசகர்களுக்கு அளித்திருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிடும் ஒருவர் தன் எழுத்தைப் பெண் அரசியலுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கும் முறை நவீன-பின்நவீன அறிவுமுறைக்கு ஏற்றதா அல்லது பெண்ணியத்திற்குப் பிறகான நவீன இலக்கியப் புலத்திற்கு உகந்ததா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு முன் அது தற்கால குடிமை நெறிகள், அறிவுத்துறை மதிப்பீடுகளுக்கு ஏற்றதா?  பெண்களுக்கு எதிரான பலவகையான வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களின் நியதிகளுக்கு உட்பட்டதா?  உடன் பணிபுரியும், உடன்வாழும், உடன் பயணம் செய்யும் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை பற்றிய நடத்தை விதிகளையாவது ஜெயமோகன் மற்றும் அவரின் திருத்தொண்டர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை நீக்குப்போக்கு இன்றி பேசியாகவேண்டும்.

ஆனந்த விகடன் வார இதழில் (4-6-2014) கேள்வி பதில் பகுதியில் ஆண் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  அளித்த “இளம் படைப்பாளிகள்”  பட்டியலில் இருந்து தொடங்குகிறது இந்தப் பிரச்சினை. நாஞ்சில்நாடன் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள ஒரு ஆண் எழுத்தாளர் என்ற வகையில் அந்த ஊடகம்  தனது  பக்கங்களில் சிலவற்றை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறது. அவர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை மீறி அவருடைய நாவல் ஒன்று திரைப்படமாகக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியிருக்கிறார் எனச் சில கனரக ஊடகத் தகுதிகளும் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டே அவருக்கு அந்தப் பக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”  என்ற எளிமையான கேள்விக்கு அவர் முன்பின் யோசித்து, பின்விளைவுகள் பற்றிய ஒரு தெளிவுடன் தன் தேர்வில் இருந்து ஒரு பெயர்ப் பட்டியலை அளிக்கிறார். “இளையவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்” என்ற நேர்மையான ஒரு குறிப்பையும் தந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாளர் என்றால் என்ன பொருள்? யாருக்கு என்ன நம்பிக்கையைத் தர வேண்டும்? நம்பத்தகாத, நம்பிக்கை தராத எழுத்தாளர்கள் யார்? நாஞ்சில்நாடனுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களா அல்லது கேள்வி கேட்ட வாசகருக்கு (பெண் பெயரில் இக்கேள்வி அமைந்திருப்பதாக ஆவணம் சொல்கிறது) நம்பிக்கை தரக்கூடியவர்களா?  எனப் பல “சட்டச் சிக்கல்கள்” இதில் இருந்தாலும் பதில் ஒன்றுதான், சில எழுத்தாளர்களின் பெயர்கள். அவர்கள் தமிழில் எழுதக்கூடியவர்களாக இருக்கவேண்டும், சில நூல்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

இது போன்ற பெயர்ப்பட்டியல்கள் சிறுபத்திரிகைகளில் அவ்வப்பொழுது வெளியாவது வழக்கமானதுதான். பங்காளிகள், தாய்மாமன்கள், மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் எனத் திருமண அழைப்பிதழ்களில் இடம்பெறுவது போன்று ஆசாபாசங்களுக்கும், சாதிசனம், பரம்பரை வழக்கம் எனச் சிலவகை விதிகளுக்கும் உட்பட்டதாக ஒரு பெயர்ப்பட்டியல் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. பெயர் விடுபட்டுப் போனவர்கள் உரிய சான்றுகளுடன் வந்து கடைசித் தேதிக்குள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி சிறுபத்திரிகைகளில் சில சமயம் அளிக்கப்படும். அந்தப்பட்டியல்கள் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதில்லை. தமிழக அரசு உருவாக்கியுள்ள தன்னாட்சி மண்டலங்களான “தாஜ்மாக்” கடைகளின் உட்பகுதிகளில் ஆன்றோர் பெருமக்கள் கூடி அந்த தாவாக்களை தீர்த்துக் கொள்வது வழக்கம். சில அலைபேசி அழைப்புகளில் அதற்கான உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படலாம். இதெல்லாம் சிறுபத்திரிகை ஆண்மரபு சார்ந்தவை.

ஆனால் ஆனந்த விகடன் பத்திரிகையில் அஞ்சல்தலை அளவிலான படத்துடன் பெயர் இடம் பெறுவது,  நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாளர் என்ற அடைமொழியுடன் இடம் பெறுவது  விளையாட்டான விஷயம் இல்லைதான். எழுதுபவர்களைவிட அவர்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். அதன் தொடர்ச்சியான ஒரு எளிய மகிழ்ச்சியைத்தான் பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர்களும் அடைந்திருப்பார்கள். இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிச்சயம் தமது அடுத்த தொகுதியை வெளியிடும் போது நாஞ்சில் நாடனுக்கு அனுப்பி “அவர் நாண நன்நயம்” செய்துவிட சூளுரை செய்து கொண்டிருக்கக்கூடும்.  இதுவரை நடந்தவை பிள்ளை விளையாட்டுக்களாக இருக்கலாம். ஆனால் ஜெயமோகன் தன் ஆண்மரபு “ஆய்வின்” வழி நிகழ்த்திய பாலின வன்தாக்குதல் எழுதுபவர்களை வெட்கப்படுத்தி வேதனையுறவைத்துவிட்டது.

”இது ஒரு இலக்கியக் கருத்துரைப்புதானே, பாலின வன்தாக்குதலாக எப்படி இருக்கமுடியும்” என்ற கேள்வி ஒரு சிலருக்கு எழக்கூடும். “இலக்கியமே இல்லாத தமிழை உய்விக்க தன் வாழ்க்கையைத் தந்துவிட்டு “பல ஆயிரம் பக்கங்களை” அளித்துள்ள ஒரு எழுத்தாளர் இந்தப் “பெண்களை” அவமதித்தால் என்ன குடியா முழுகிப்போகும்?  இதற்காக ஜெயமோகனைக் கண்டித்து “இந்தப் பெண்கள்” அறிக்கை வெளியிட்டால் அவரது அத்வைத மனம் புண்பட்டு அடுத்த நாவல் வெளிவருவது தடைபடாதா?” எனக் கதைபக்தி கொண்ட கடுந்தொண்டர்கள் தர்மாவேசம் கொள்ளக்கூடும். ஆனால் நவீன இலக்கியம் உணர்ந்த எவருக்கும் அவருடைய வாசகங்கள் எவ்வளவு வன்மம் நிறைந்தவை, எந்த அளவு பாலின ஒதுக்குதல் கொண்டவை என்பது புரியவரும்.

நாஞ்சில்நாடன் அளித்த இளம் படைப்பாளிகள் பட்டியலைப் பற்றிக் குறிப்பிடும் ஜெயமோகன் “அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள்” நடப்பதாக தகவல் தருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் சில:

“தமிழில் எழுத வந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது”. “அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய” முடியும். “சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே.” “பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன்  தன் ரசனையின் அல்லது ஆய்வின்  அடிப்படையில் முன் வைக்கும் ஒரு தேர்வு. அதற்கான காரணங்களை அவன்  சொல்லலாம். சொல்லாமலும் விடலாம்”… “இப்பட்டியல் முக்கியமானதாக ஆவது  நாஞ்சில்நாடன்  என்ற ஆளுமையால் தான்.”… “நாஞ்சில் நாடனின் இப்பட்டியலில் எல்லா வகை படைப்பாளிகளும் இடம் பெற்றுள்ளனர். ஒரு குறிப்பிட்ட நோக்கு மேலோங்கிவிடக் கூடாது என அவர் கவனம் எடுத்திருப்பது  தெரிகிறது. ஆனால் எனக்கு இலக்கியத்தில் பந்திப்பாய் விரிப்பதில் நம்பிக்கை இல்லை. அது ஒரு வகையில் தரமான படைப்பாளிகளை  அவமதிப்பது என நினைக்கிறேன். நான் மிகச் சிறிய பட்டியலையே எப்போதும் போடுவேன்”…. என்றெல்லாம் சொல்லிச் செல்லும் அவர் தான் எதனைச்  சொல்ல அந்தப் பத்தியை எழுதினாரோ அந்தப் பகுதிக்கு வருகிறார்:

“பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக் கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம்  எதிர்பார்க்கிறேன். ”

“ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.”

“இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’  என்று ஜகா வாங்கிவிடுவார்கள்.”

நாஞ்சில்நாடன் அளித்த பட்டியலில் 28 பெயர்கள் உள்ளன, 27 பெயர்கள் படத்துடன் உள்ளன. அதில் 17 ஆண் படைப்பாளர்கள், 11 பெண் படைப்பாளர்கள். (சுகிர்தராணி, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி, தமிழ்நதி, ச.விசயலட்சுமி, மீனா, அ.வெண்ணிலா, சந்திரா, தி.பரமேசுவரி, சக்திஜோதி) “ஆண்படைப்பாளிகள் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்” எனத் தெளிவாக, உறுதியாகக் கூறும் ஜெயமோகன் “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.” என அடிப்படை இல்லாத தகவலுடன் அவமதிப்புத் தாக்குதல் தொடுக்கிறார். இப்படி ஒரு தாக்குதலை இலக்கிய ஆய்வு, அல்லது ரசனை என்று எந்த குருமரபு இவருக்குச் சொல்லித்தந்தது.

ஜெயமோகன் தனது தாக்குதலை பொத்தம் பொதுவாக பெண் படைப்பாளிகள் மீது தொடுக்கவில்லை என்று காட்ட “பெண்களில் உமா மகேஸ்வரி என் நோக்கில் முதன்மையான படைப்பாளி. அதன்பின் சந்திரா. விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டு பேரைச் சொல்ல முடியும்.  ஆழியாள், பகீமா ஜகான், அனார் போல.” என்று மேலும் ஒரு பட்டியலை முன் வைக்கிறார்.  “பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன்  தன் ரசனையின் அல்லது ஆய்வின்  அடிப்படையில் முன் வைக்கும் ஒரு தேர்வு.” என்று சொல்லிவிட்டு “பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.” என்று பெரும் “தத்துவக்” கேள்வியைக் கேட்கிறார்.

பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள் என்ற ஆண் திமிர் கொண்ட அடைமொழிக்கு தமிழ்-இந்தியப் பின்புலத்தில் என்னவெல்லாம் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம்   என வலியுறுத்தும் இந்தச் சைகைமொழி மிக இழிவான ஒரு தாக்குதல்.

இந்தப்பட்டியலில் இருப்பவர்கள் மீது பெயர் குறிப்பிட்டு செய்யப்படும் வக்கிரமான ஏச்சு. எழுதும் பெண்கள் எழுத்தைத் தவிர பல வகை உத்திகளைச் செய்துதான் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இழிவான பொய் பெண் படைப்பாளர்களின் குடும்பங்கள், பணியிடங்களில் என்ன வகை செய்தியைக் கொண்டு சேர்க்கும் என்பதும், அது பெண் படைப்பாளர்களின் எழுத்துக்கான வெளியை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதும் தெரியாத அறிவீனம் எப்படி இலக்கியம் பற்றிய கருத்துரை வழங்கும் உரிமையை எடுத்துக் கொள்ளமுடியும்.

இந்தப் பட்டியலில் உள்ள பெண்-ஆண் படைப்பாளர்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை, தொகுதிகளை அளித்தவர்கள்தான், தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருப்பவர்கள்.     “தான் சொல்லும்படி” எழுதவில்லை என்பதால் எழுத்து சாராத பலவகை  “உத்திகளைக்” கையாண்டுதான் பெண் படைப்பாளர்கள் ஊடகங்களில் இடம் பிடித்திருக்க முடியும் என்று  சொல்வதும், அதனைத் தன் வாசகர்களுக்கு ஒரு வக்கிர வதந்தியாகக் கொண்டு செல்வதும் ஊடகங்களால் உருப்பெருக்கப்பட்டு ஊடகங்களின் ஒப்பந்தக்காரராகச் செயல்பட்டு வரும் ஜெயமோகனுக்கு இலக்கியத் தவமாக எப்படித் தோன்றுகிறது.

இந்தப் பெண் படைப்பாளர்கள் உண்மையான “ஊடகப் பிம்பங்களாக” உருவாகி இருந்தால் அவர்களைப் “பெயர் சொல்லி” அவமதிக்க, ஆபாசச் சைகை செய்ய இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது.  இவரே சொல்கிறார் “நாஞ்சில்நாடன் அவரது பட்டியலில் அதிகமாக அறியப்படாதவர்கள் என்ற விதியையும் அளவு கோலாகக் கொண்டாரோ என்றும் படுகிறது”. அதிகம் அறியப்படாதவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், எழுதும் பெண்கள் என்ற கீழ்நிலை நோக்குதான் இவர்களைப் பெயர் சொல்லி அவமதிக்கும் அளவுக்கு ஜெயமோகனுக்கு தவவலிமையைத் தந்திருக்கிறது.

இந்தக் கொடுமைக்கிடையில் “விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டு பேரைச் சொல்லமுடியும்.” என்ற இலக்கிய நேர்மை செறிந்த அறிவிப்பு வேறு. இதன் மூலம் விடுபட்டவர்கள் உண்மையான உயர்ந்த பெண் படைப்பாளிகள் அவர்கள்தான் “சொல்லும்படி” எழுதக்கூடியவர்கள் என்ற குறிப்பைத் தருகிறார் ஜெயமோகன். அப்படியென்றால் “தமிழில் கிருத்திகாவுக்குப்பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப் படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப் பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டு காலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதை கணக்கிடட்டும்.” என்று முப்பதாண்டுகளாக எழுதப்பட்ட பெண்ணெழுத்துக்களை இவரால் மறுத்தொதுக்க முடிகிறது. இனவரைவியல், சிறுமரபு எழுத்துக்களைத் தந்துள்ள பாமா, சிவகாமி, சு.தமிழ்ச்செல்வி என்ற படைப்பாளர்கள் கடந்த இருபதாண்டு கால அளவில் தமிழில் குறிப்பிடத் தகுந்த பங்காற்றியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு வழியாக பாமா, சிவகாமி, சல்மா ஆகியோரின் நாவல்கள் இந்திய இலக்கிய மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. “பெண்களை எழுத வேண்டாமென்று சொல்லவில்லை. நேர்மாறாக ‘எழுதுங்கள், தயவுசெய்து எழுதுங்கள்!’ என்றுதான் சொல்கிறேன். ‘மகத்தான ஆக்கங்களுடன் எழுந்து வாருங்கள்!’ என்கிறேன்.” என்று  வெற்று அறிக்கை வெளியிடும் முன் இவர்களுடைய எழுத்துக்களைப் படித்துவிட்டு பேசியிருக்க வேண்டும். சு.தமிழ்ச்செல்வி எழுதிய இனவரைவியல் கதைகளான  மாணிக்கம் (2002), அளம் (2002),  கீதாரி (2003), கற்றாழை (2005), ஆறுகாட்டுத்துறை (2006) போன்ற  நாவல்கள்  தற்கால இலக்கிய மாணவர்களுக்கு ஜெயமோகன் எழுத்துக்களை விட மதிப்பு மிக்கவையாக இருக்க முடியும். ஜெயமோகன் ஒருவகைக் கதையைச் சொல்கிறார் சு.தமிழ்ச்செல்வி  வேறுவகைக்  கதையைச் சொல்கிறார்.  இலக்கியம் வகைமைகளைக் கொண்டது, அனைத்து வகையான வெளிப்பாடுகளுக்கும் களம் அமைப்பது. “மகத்தான ஆக்கங்கள்” என்ற மதிப்பீடுகள் கருத்தியல் வன்முறைகள்.  அனைவருக்கும் பொதுவான இலக்கியம் என்பதெல்லாம் ஏமாற்றுக் கூச்சல்கள், அவரவர்  தேர்ந்து கொண்ட அரசியல் கருத்தமைவே அழகியலுக்கும், இலக்கிய அமைப்பு முறைக்கும் அலகுகளாக அமைகின்றன. வாசிப்பும், எழுத்தும் அரசியல் தன்னுருவாக்கத்தின் உத்திகள்.  தமிழ் போன்ற ஒரு பல்குடிச் சமூகத்தில் எழுத்தின் வகைமைக்கு சாத்தியங்கள் அதிகம்.

“ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக(த்) தங்களை முன் வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.”  பெண்களாகத்  தங்களை முன் வைப்பது என்பதற்கு “இந்திய தரிசன”  மரபில்  என்ன     அர்த்தம்?  ஆண்மையம் உடைத்த பெண்ணாக, தன்னுரிமை கொண்ட பெண்ணாக  ஒருவர் தன்னை முன் வைப்பது என்பதே படைப்பூக்கம் கொண்ட ஒரு செயல்தான். பெண்ணாக இருந்து பேசுதல் என்பதே ஆண் மேலாதிக்க அமைப்பில் ஒரு கலகம்தான். அது அன்றி பெண்ணாகத் தங்களை முன் வைப்பதால் எங்கு இடம் கிடைக்கிறது? என்ன இடம் கிடைக்கிறது? எழுதினால் எழுதுபவர் என்ற பெயரைத் தவிர வேறு என்ன கிடைத்துவிடப் போகிறது? ஆண்கள் எழுதியும் பெண்கள் எழுதாமலும் என்ன இடத்தைப் பெறுகிறார்கள்?  அதிகாரம் கொண்ட ஒரு ஆணாக இருந்து எழுதுதல் வரலாற்றுக் கடமையாகவும்,  தன்னுரிமை கொண்ட ஒரு பெண்ணாக இருந்து எழுதுதல் அந்த வரலாற்றை உடைப்பதாகவும் பொருள்படும் ஒரு சமூகத்தில் பெண்ணெழுத்தின் இடம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய புரிதலின்றித் தன் வன்மத்தை மட்டுமே வெளிப்படுத்தி யிருக்கிறார் ஜெயமோகன்.

இந்தப் பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளிகளைப் பெண் படைப்பாளிகளுடன் எதிர் முரண்படுத்தி, விலக்கி அடையாளப்படுத்தி பெருமை  செய்வதாக நினைத்து அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வந்து  சேர்த்திருக்கிறார் ஜெயமோகன்.  பெண் படைப்பாளர்களை இழிவுபடுத்தி, வதந்திகளால் அவமானப்படுத்தி தங்களை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளர்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு  ஆண் திமிரும், ஆண்மையவாத அறிவீனமும் கொண்டவர்களாக அவர்களும் இருப்பார்களேயானால் “பரந்தும் கெடட்டும் இந்தத் தமிழ் படைபாளர்கள்” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஜெயமோகன் தொடுத்த அவமதிப்புத் தாக்குதலை எதிர்த்துப் பெண் படைப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் குரல் கொடுக்கத் தொடங்கிய பின் ஜெயமோகனிடம் இருந்து வெளிப்பட்ட வாசகங்கள், வாக்கியங்கள் அவருடைய ஆண்மையவாத, ஆண் முதன்மைவாத அறியாமையை மேலும் மேலும் புலப்படுத்துவதாகவும், தன் வாசகர்களைத் திட்டமிட்டுக் குழப்புவதாகவுமே உள்ளன.

“ஒருவர் தான் கொண்டிருக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்கே விசுவாசமாக இருக்க வேண்டும். அவ்வடிப்படையிலேயே என் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வருகிறேன்.” என்று தன் வாசகர்களுக்குச் சொல்லும் ஜெயமோகன் பெண்ணிய-பெண்ணிலை எழுத்தை எழுதும் பெண்கள் தாங்கள் கொண்டுள்ள இலக்கிய மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக இருக்க முடியும் என்பதையும் அது முற்றிலும் வேறுபட்ட கூறுகளால் அமைத்திருக்க முடியும் என்பதையும் முழுமையாக மறைத்து விடுகிறார். “இலக்கியம் என்னும் அமைப்பு மீதான பெரும் ஈடுபாடு, அர்ப்பணம்… நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள்… அதை(க்) காலம் மதிப்பிடட்டும்…” என்றெல்லாம் மறைமொழிச் சொல்லாடலை முன்வைத்து தன் வாசகர்களிடம் தற்காலம் பற்றிய நினைவழிப்பை உருவாக்குகிறார். காலத்தின் மதிப்பீட்டுக்குத் தன்னை ஒப்படைக்கும் ஜெயமோகன் பெண் படைப்பாளர்களையும் காலத்தின் மதிப்பீட்டுக்கு விட்டு விட்டு ஜனநாயகப் பண்பாடு அறிந்த ஒருவராகத் தன்னை  வைத்துக் கொண்டிருக்கலாம்தானே?

தான் முன்பு வைத்த அதே வசையையும் அவமதிப்பின் வன்முறையையும் மீண்டும் அழுத்தமாக முன்வைக்கும் ஜெயமோகனின் குரல் இது “பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் கருத்தும் இத்தகையதே. அது புதியதும் அல்ல. அவர்கள் அடைந்துள்ள ஊடக முக்கியத்துவம் மிகச் செயற்கையானது. வெறும் ஊடக உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இன்று ஊடகங்கள் அதிகமாக பெண்களை முன்னிறுத்த விழைகிறார்கள். காரணம் ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அவர்களை(க்) காண விழைகிறார்கள். ஆகவே பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்கள்.”  (இதனை வாசிக்கும்  தொடக்க கட்ட இலக்கிய, பண்பாட்டியல் மாணவர் ஒருவருக்குக்கூட எத்தனை அபத்தமான, அடிப்படையற்ற கருத்து இது என்பது புரிந்துவிடும்.)

பெண் எழுத்தாளர்கள் என்று ஆரம்பித்து இந்த ஆண் எழுத்தாளர் தொலைக்காட்சித் திரை நோக்கி தன் வாக்கியத்தை இழுத்துச் செல்வதை கவனிக்க வேண்டும். ஊடகங்களால் உருவாகி ஊடகங்களால் தன்னை உருப்பெருக்கிக் கொண்ட ஒரு ஆண் எழுத்தாளர் அதில் இயற்கையான முறை, செயற்கையான முறை ஏதோ உள்ளதாக ஒரு கண்டுபிடிப்பை முன் வைக்கிறார்.

பெண் எழுத்தாளர்களை ஊடகத்தை அதிகம் பார்க்கும் பெண்கள் காண விழைகிறார்களாம்.  ஊடகங்கள் பெண்களை அதிகமாக முன்னிறுத்த விழைகிறார்களாம். பெண்களை ஊடகங்கள் முன்னிறுத்தும் முறைக்கெதிரான பெண்ணியப் போராட்டம் இந்திய அளவில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. பெண்களைக் காட்சிப் பொருளாக, நுகர்வுப் பண்டமாக, மூளைச் செயல்பாடற்ற இயந்திரங்களாக, ஆண்விதிகளை பேராசையுடன் பின்பற்றும் அடிமைகளாக காட்சிப்படுத்துவதற்கு எதிரான பெண்ணியக் குரல்கள் எழுத்தாகிக் கொண்டுள்ளன. ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள்  பெண் எழுத்தாளர்களைக் காண விழைகிறார்களா?  என்ன உளறல் இது!  பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்களா? விளம்பரப் பொருள்களாக விளம்பர இயந்திரங்களாக மாற்றப்படுகிறார்களா? என்ன சொல்கிறோம் என்பது தெரியாமல் எதையெதையோ எழுதிவிட்டு “நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள்…” என்ற ஆன்மிக அடக்கம் காட்டுகிறார் ஜெயமோகன்.  அவருடைய செய்கைக்கு அவரிடம் இருந்தே ஒரு வாசகத்தை அடையாளமாகக் காட்டலாம் “வழக்கம்போல. எந்த ஒருவிஷயத்திலும்  ‘ஈடுபாடு, அர்ப்பணம், அந்தரங்கம்  என்ற  நிலைபாட்டை எடுத்துவிட்டு அதீத எம்பிக்குதித்தல்களை நிகழ்த்துவதுதான் நம்முடைய மரபாக மாறிவிட்டிருக்கிறது. புரிந்துகொள்ளும் முயற்சியோ அதற்கான கூரோ (கூறோ) பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை.”

“பெண்களில் சிலர் மிதமிஞ்சிய கூச்சல்கள், அரசியல் கோஷங்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களில் தங்களை(ப்) பெண்களாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என புகழப்படுகிறார்கள், அனைத்து வகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள். ஆனால் எதுவுமே எழுதுவதில்லை.” என்று சொல்லும் ஜெயமோகன் எங்கிருந்து இந்தத் தகவலை, தரவைப் பெற்றார் என்பதை அவரது வாசகர்களுக்குச் சொல்லியாக வேண்டும்.  பெண்களாகத் தங்களை முன் வைப்பதும், கூச்சல்களால், அரசியல் கோஷங்களால் கவனத்தைப் பெறுவதும் பெண்ணியப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதற்கு தயங்க வேண்டிய தேவை பெண்ணியலாளர்களுக்கு இல்லை. இவர்களைத் தமிழில் யார் புகழ்கிறார்கள்? பெண்ணியலாளர்களை அச்சுறுத்துவது, மிரட்டல் விடுவது, தனிப்பட்ட வாழ்க்கையில் குற்றமுனைப்புடன் ஊடுறுவி வலிகளை ஏற்படுத்துவது எனப் பெண்ணியத் தன்னிலை கொண்டவர்கள் மேலான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தபடியுள்ளன.

 தமிழில் பெண்ணிய, பெண்ணரசியல் தளத்தில் செயல்படும் பெண்கள் மிகக்குறைவு என்பதை நாம் அறிவோம். இதனை மீறிச் செயல்படும் பெண்களைப் பற்றித்தான் ஜெயமோகன் இந்த அறிவார்த்த அடிப்படையற்ற வசையை வைக்கிறார் “அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் எனப் புகழப்படுகிறார்கள், அனைத்து வகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள்.” உண்மையில் பெண்ணெழுத்தும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்ச் சமூகத்தில் பெற வேண்டிய விகிதத்தில் கவனத்தைப் பெறுவது இல்லை. திரைத்துறையினர், ஊடக பூதங்கள் தவிர இங்குப் பொது நினைவில் யாரும் இருப்பதில்லை என்பதை திரைப்படப்புகழ் ஜெயமோகன் அறிய வேண்டும். “ஆனால் எதுவுமே எழுதுவதில்லை” எனப் பெண் படைப்பாளிகளைப் பற்றி இவர் குறிப்பிடுவது வலிந்து புகுத்தப்படும் பொய்யல்லவா? கதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொகுதிகள் எனத் தொடர்ந்து பெண் படைப்பாளிகள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

“இவர்கள் எழுத வந்தபோது ‘எழுதட்டும் பார்ப்போம்’ என்ற எண்ணம் இருந்தது சூழலில். நானும் அதைத்தான் சொன்னேன். இன்று இவர்களெல்லாம் சமூக ஆளுமைகளாக ஆகி சிம்மாசனங்களை அடைந்துவிட்டார்கள்.”

எழுதட்டும் பார்ப்போம் என்று விட்டார்களாம் இவர்கள். யார் இவர்கள்?  இருந்து பார்த்து தீர்ப்புச் சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? சமூக ஆளுமைகளாகப் பெண்கள் மாறினால் மதிப்பளித்து இடம் கொடுங்கள்.  உங்களுக்கு மட்டுமே சிம்மாசனம் என்று எந்த வரலாறும் எழுதப்படவில்லை. “பொதுவாக எழுதச் சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை. இந்தப் பெண்கள் கவிதை என்றபேரில் பத்துப்பதினைந்து வரிகளை மேலோட்டமாக எழுதி மடித்து மடித்து பிரசுரிக்கிறார்கள். அவை வெறும் சக்கையாக உள்ளன. வெற்றுப்புலம்பல்கள், அதிர்ச்சி மதிப்புக்கான தடாலடி வரிகள், சில்லறைப் பெண்ணிய கோஷங்கள்.”  என்று கூறும் ஜெயமோகன் கவனிக்க வேண்டும்.

பக்திப் பாடல்கள் தொடங்கி பாரதியின் “நல்லதோர் வீணை செய்தே நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ” வரை புலம்பல்கள்தான், “கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் காதலித்து வேதனையில வாடவேண்டும்” என்ற ஆண்தமிழ் அழுகைகள் பண்பாட்டுத் தொன்மங்களாகி உள்ள ஒரு சமூகத்தில் பெண்கள் புலம்பினால் “வெற்றுப் புலம்பல்” ஆண்கள் புலம்பினால் காவியத்துயரம்.

அதிர்ச்சி மதிப்பு, தடாலடி வரிகள் இவையெல்லாம் ஆண்களின் எழுத்துக்களில் அதிகம் உள்ளவைதான். அது என்ன சில்லரை பெண்ணிய கோஷங்கள்? பெண்ணியம் என்றாலே சில்லரைத் தனம் என்று சொல்லும் ஒரு கூட்டத்தின் சில்லரைத் தனமான மதிப்பீடு இது. அறிவின்மையைக் கொண்டாடி, சாமியார்களை, ஆசிரம அதிபர்களைத் தொழுதுகொண்டு கிடக்கும் ஒரு சமூகத்திற்கு பெண்ணிய கோஷங்கள், தலித்திய கோஷங்கள், சமத்துவ அரசியலுக்கான கோஷங்கள் இன்னும் அதிகம் தேவையானவையே. அவை உங்களுக்குத் தொந்தரவாக இருந்தால் எங்களுக்கானவை இல்லை என ஒதுங்கிப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். “சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை” என்பதை   ஜெயமோகன் கொண்டாடும் எல்லா ஆண் கவிஞர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.

“இத்தனை பெண்கள் எழுதுகிறீர்களே தமிழில் உங்களால் ஏன் ஒரு நல்ல படைப்பை உருவாக்க முடியவில்லை என்ற வினாவை ஓரு விமர்சகனாக நான் எழுப்புகிறேன்.” ஜெயமோகன் நவீன பொருளில் விமர்சகர் அல்லர். அவர் கருத்துக்கூறுபவர்,  காலத்தின் பின்தங்கிப்போன தன் நம்பிக்கைகளின் அடிப்படையில் கருத்துக் கூறிக் கொண்டிருப்பவர். அவருடைய வாசகர்களின் அறியாமை, தேடுதலின்மை போன்றவையே அவரது முதலீடு. அதிக பக்கங்களில் தான் சொல்ல நினைப்பவைகளை திரும்பத் திரும்ப அவர் சொல்லும் போது  அறிவியக்கங்கள் பற்றிய அக்கரையற்ற சிலர் வியந்து விதிர் விதித்து தண்டனிட்டு நீங்கள் ஒரு சிந்தனையாளர், விமர்சகர் என்கிறார்கள். அவரும் அதனை நம்பி  அண்டசராசரங்களை அளவிட்டு விடை சொல்லுகிறார். நல்ல படைப்பு என்பது என்ன? அனைவருக்குமான பொதுவான படைப்பு என ஏதும் உள்ளதா என்பதைப் பற்றியெல்லாம் தமிழில் நிறைய பேசப்பட்டுள்ளது. இனியும் பேசலாம். அதற்கு முன் ஜெயமோகன் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான், அவர் சொல்பவை அவருடைய கருத்து மட்டுமே.

ஏன் ஒரு நல்ல படைப்பை அவரால் வாசிக்க முடியவில்லை என்று  கேட்டால் அவருக்கு கோபம் வரலாம். மராத்தியில் எழுதப்படும் ஒடுக்கப்பட்டோர் கதையும், ஆப்பிரிக்க மொழிகளில் எழுதப்படும்  பெண்வழிக் கதைகளும் தற்போது உலக இலக்கியங்கள். அதே தளத்தில்தான் அராபிய ஆண்வழிக் கதைகளும் வாசிக்கப்படுகின்றன. மகாஸ்வேதா தேவியின் மக்கள் போராட்டம் பற்றிய கதைகள் பின்காலனிய, அடித்தள மக்கள் வரலாற்று வாசிப்பில்  மதிப்பு பெறுகின்றன. இதில் நல்ல படைப்பு, குள்ள படைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் அரசியல்தான் உங்கள் அழகியல், அதிலிருந்து உருவாவது உங்கள் அறம். அர்ப்பணம், அந்தரங்கம், தவம் என்ற பூச்சாண்டிகளுக்குப் பயந்து எழுத்தைக் கைவிடும் அளவுக்கோ ஊடகங்களை உதறிவிடும் அளவுக்கோ இன்றைய பெண்ணியம் அறிந்த பெண்கள் இல்லை என்பதுதான் ஜெயமோகன் மற்றும் அவரது பக்தர் குழாமுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த ஆண்மையவாதக் கூட்டத்திற்குப் பெண்ணாக இருந்து எழுதுபவர்கள், செயல்பாட்டாளர்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் எவராக இருந்தாலும் “இந்தப் பெண்கள்தான்”.  ஆண்களின் கூட்டுப் புனைவால் உருவாக்கப்பட்ட ஆணாக இருத்தலின்  மூலம் மட்டுமே வரலாறு, மரபு, வழக்காறு என்ற அடையாளங்களுடன் அதிகாரத்தை, அடக்குதலுக்கான உரிமையை, மேலாதிக்கத் தன்னடையாளத்தைப் பெற்றுக் கொண்ட இவர்களுக்கு மொழி, இலக்கியம், பண்பாடு, ஊடகம் அனைத்தும் ஆண்களின் களம். அதில் பெண்கள் ஒரு சிறு அளவில் இடம்பெற வேண்டுமானாலும் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும், சோதனைகளைத் தாங்கி மேலெழ வேண்டும்,  இலக்கியத்தை ஒரு தவமாக மேற்கொள்ள வேண்டும், பிறகு இவர்களின் ஆசியையும் அனுமதியையும் பெற்று இலக்கிய முக்தியடைய வேண்டும்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் என்ற குழுவினர் இணைந்து வெளியிட்ட “ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக் கூட்டறிக்கை”  ஒன்று பெண்ணியம் இணையத்தளத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிக்கைக்கு பதில் அளிப்பதாக மீண்டும் ஜெயமோகன் செய்திருந்த பதிவின் தலைப்பு  “பெண்களின் அறிக்கை”. மீண்டும் ஜெயமோகன் வசையையே தொடர்கிறார் “பெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான  கருத்துக்களுக்கு(ப்) பதிலாக(ப்) பெண் எழுத்தாளர்கள் என(ச்) சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்து பேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம்.” இந்த  வாசகம் முழுமையான வன்முறைத் தாக்குதல், இலக்கிய நடத்தை விதிகளுக்கு மாறான வக்கிரம் என்பது கூடப் புரியாத நிலையில் ஜெயமோகன் இருப்பதை நினைத்து வருத்தப்படுவதா, இல்லை இவர்கள்தான் தமிழின் இலக்கிய ஆளுமைகள் என்றால் நாசமாய் போகட்டும் தமிழும் இலக்கியமும் என்று ஆத்திரப்படுவதா என்று புரியவில்லை. ஏனெனில் ஜெயமோகன் “இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசை நடவடிக்கை மூலம்” நிகழ்வதில்லை என்று சொல்லிவிட்டு அதனையே மிகக்காத்திரமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இலக்கியம் “அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது” என அபத்த நாடக வசனம் எழுதிவிட்டு அவர் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவரது இணையப் பக்கங்களில் வெளிவந்த பல வாசகங்களைக் குறிப்பிட்டே அந்த அறிக்கை கண்டித்திருக்கிறது. ஆனால் ஜெயமோகன்  “சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி ஓர் அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல் சார்ந்த அபத்தமான அக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.” அந்த அறிக்கையில் உள்ள அபத்தமான அக்கப்போர்கள் எல்லாம் அவருடைய பக்கங்களில் இருந்து திரட்டப்பட்டவைகள் தான்.  சமகால இலக்கியம் சார்ந்த அரசியல் பற்றிய ஓர் அடிப்படைப்  புரிதல்கூட இல்லாமல் இவர் செய்துள்ள வசைக்கு எதிர்வினை இப்படித்தான் இருக்க முடியும்.

 “எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு எதிர்வினையையும் அறிவுத்தளத்தில்தான் நிகழ்த்த வேண்டும்.” என்று கூறும் ஜெயமோகன் அறிவுப்பூர்வமாக அருளியிருக்கும் வாக்கு இது “இந்தப்பெண் படைப்பாளிகள் எதையாவது வாசிக்கிறார்களா? எதையாவது தெரிந்துகொள்கிறார்களா? எந்த இலக்கியப் படைப்பைப் பற்றியாவது எழுதியிருக்கிறார்களா? அதைத்தான் கேட்கிறேன். ஒரு விமர்சகனாக. மிக மரியாதையான சொற்களில், எந்தத் தனிப்பட்ட எழுத்தாளர் பெயரையும் சுட்டாமல் அதை முன்வைக்கிறேன்.” எவ்வளவு பெரிய பொய் இது. பட்டியலில் உள்ள பெண் படைப்பாளிகள் பெயரைக் குறிப்பிட்டு வசையும் வன்முறையும் தொடுத்த இவர் மிக மரியாதையான சொற்களில் தன் கருத்தை முன்வைக்கிறாராம் “பட்டியலில் உள்ள ……. பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனவர்கள்.” பெயர் குறிப்பிடாமல் அதோ அவர்கள் எனக் கைகாட்டிச் சொல்லிவிட்டதால் இவர் எழுதுவது தவத்தின் பயனாக மாறிவிடுகிறது.

இதற்கு நடுவில் அவருடைய வாசகர் திருக்கூட்டம் பெண் படைப்பாளர்கள், பெண்ணியலாளர்கள் பற்றிய அழுகிய, ஆபாச வாக்கியங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை அவர் கொண்டாட்டத்துடன் கண்டு களித்துக்கொண்டிருக்கிறார். தன் வாசகர்களின் வெறிநோய்க்கு இவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஜெயமோகன் இலக்கிய மதிப்பீடு என்ற பெயரில் அரசியல் சார்ந்த, இடதுசாரி எழுத்துக்கள் மீது வைக்கும் கருத்துக்கள் பல்கிப் பெருகியுள்ள தற்கால இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றிய அறியாமையின்  வெளிப்பாடுகள். தமிழின் பெண் படைப்பாளிகள் மீது வைக்கும் வசைகளும்  வன்முறை சைகைகளும் தற்காலப் பெண்ணிய அரசியலுக்குப் பின் நேர்ந்த ஆண்வெறி நோயின் வெளிப்பாடுகள்.

தற்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் கருத்தியல் சார்ந்து, அரசியல் சார்ந்து இயங்குவதற்கான பொறுப்பினை ஏற்று இதுபோன்ற அடிப்படை தகர்ந்த இலக்கிய, கோட்பாட்டு புலம்பல் குழுக்களின் தர்க்கமின்மையை, அறியாமையை, அறிவுத் திரிபை ஒவ்வொரு கட்டத்திலும் புலப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.  தன்னுரிமை கொண்ட பெண்ணாக இருத்தலையே போராட்டமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு சமூகத்தில் ஆணாக இருத்தலின் நெடிய வரலாற்று வன்முறையை அறிக்கையிட்டாக வேண்டும்.  ஆணழிந்த களத்தின் இலக்கியத்தை, அரசியலை, அழகியலைக் கொண்டாடப் பயிலவேண்டும்.

லீனா மணிமேகலை ஆண்டையின் ஆதிக்கசாதித் திமிரும் அடிமைப்பட்டவர்கள் பற்றிய நக்கலும்- மாலதி மைத்ரி

லீனா மணிமேகலை ஆண்டையின்

ஆதிக்கசாதி திமிரும் அடிமைப்பட்டவர்கள் பற்றிய நக்கலும்

 

மாலதி மைத்ரி

 

வல்லினம்.காமில் வெளிவந்த என்னுடைய கேள்வி-பதில் தொடரில் நான் தெரிவித்திருந்த ஒரு கருத்துக்கு  லீனா மணிமேலையின் எதிர்வினை அடுத்து வந்த இதழில் வெளியிடப்பட்டது. அதற்கான மறுப்பை நான் எழுத இருந்த நேரத்தில் வல்லினம்.காம் வெளிவராத நிலை ஏற்பட்டது. அதனால் எனது எதிர்வினை  இங்கு பதிவு செய்யப்படுகிறது.

வல்லினம் இதழில் வெளிவந்த கேள்வியும் பதிலும்.

கேள்வி

சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்

லீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்ப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களைக் கட்டவிழிப்பு செய்தது போல் முதலாளித்துவ புனித மூலவர்களையும் கட்டவிழ்ப்பு செய்திருக்க வேண்டும். டாடா போன்ற பரமாத்மாக்களையும் கோடம்பாக்கத்து கடவுள்களையும் கட்டவிழிப்பு செய்யாமல் இருப்பது இவரின் படைப்பு அறம்.

இதற்கு எதிர்வினையாக லீனா மணிமேகலை பதிவு செய்திருந்த பகுதி

மாலதி மைத்ரி எனது கவிதைகளைக் குறித்து திருவாய் மலர்ந்தருளியுள்ளதில் மிக்க மகிழ்ச்சி லீனா மணிமேகலை கையெழுத்திட்டால் கூடங்குளம் பிரச்சினை குறித்தான படைப்பாளர்களின் அறிக்கையில் கையெழுத்திட மாட்டேன், லீனா மணிமேகலையின் கவிதைகளைச் சேர்த்தால் எனது கவிதைகளை மலையாளத் தொகுப்பிற்கு தரமாட்டேன், லீனா மணிமேகலை பங்கு கொண்டால் ஆவணப்படத்திற்கு பேட்டி தரமாட்டேன், லீனா மணிமேகலை கவிதை வாசித்தால் நான் கவியரங்கத்திற்கு வர மாட்டேன் என்பது போன்ற அடாவடி அல்லது குழாயடி அரசியலில் இருந்து கொஞ்சம் நெகிழ்ந்து கருத்து சொல்லியிருப்பதில் ஆச்சர்யமே ! ஆனால் எனது கவிதைகள் எவை குறித்து பேசவில்லை என மாலதி கண்டுபிடிக்கிறாரோ அவைகளின் மீது அக்கறை கொண்ட கவிதைச் செயலை மாலதி மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் பெரும்பகுதியை கட்டவிழ்க்கும்போது மாலதி போன்றவர்கள் கட்டவிழ்க்க எதையாவது விட்டுவைக்க வேண்டும்தானே என்றும் கூட பரிந்துரைக்க மாட்டேன், ஏனெனில் அல்லி அரசாணைகளில் எனக்கு சுவாரஸ்யம் இருப்பதில்லை.

மேலும் எனக்கு கட்டவிழ்ப்புகளைப் பற்றிய அறிவுரைகளைக் கூறுவதற்குமுன், எனது படைப்பு அறத்தை பதம் பார்ப்பதற்கு முன் மாலதி மைத்ரி தனது கண்ணாடி கூண்டை சுற்றிப் பார்த்துக் கொள்வது நல்லது. மாலதி மைத்ரி பணி புரிந்த என்.ஜி ஓக்களின் விவரப்பட்டியல் தெரிந்தது தான். என்.ஜி. ஓக்கள் தரும் பணத்திலும் காந்தி தான் சிரிக்கிறார், டாட்டாவின் என்.ஜி.ஓ தரும் பணத்திலும் காந்திதான் சிரிக்கிறார். அவர் காந்தி மட்டும் எப்படி புனிதமாகிறார் என்று விளக்கினால் நல்லது.

“காலச்சுவடு எனது கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறது. நான் காலச்சுவடு மூலமாகவே அறிய வருகிறேன். இத்தொகுப்பை இந்த இலக்கிய நிறுவனமே வெளியிடுவதில் மகிழ்கிறேன்” என்பதாக சங்கராபரணியின் முன்னுரையில் மாலதி மைத்ரி குறிப்பிடுகிறார். மாலதி பேசும் பெண்ணுரிமை, தலித் அரசியல், ஈழத்தமிழர் பிரச்சினை, முஸ்லிம் பிரச்சினை எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் தினமலர், ஸ்ரீராம் சிட்ஸ் ஸ்பான்ஸர் கண்ணனின் மூலம் அறிய வருபவர் மாலதி மைத்ரி என்றாலும் நான் அவரை நிராகரிக்கப் போவதில்லை. ஏனெனில் எனக்குத் தீண்டாமையில் உடன்பாடில்லை.

கோடம்பாக்கத்தில் நான் வேலைசெய்யாமல் விட்டு பல வருடங்களாகின்றன. ஆனால் நமது சக தோழிகள் குட்டி ரேவதி, பிரேமா ரேவதி, பிரியா தம்பி, சந்திரா போன்றவர்கள் இப்போதும் கோடம்பாக்கத்தில்தான் இருக்கிறார்கள். அதற்காக அதை வைத்தா அவர்களை மதிப்பிடுவது. நான் கோடம்பாக்கத்து கடவுள்களை நிந்திப்பதால்தான் இதுவரை பன்னிரெண்டு சிறியதும் பெரியதுமாக மாற்றுத் திரைப்படங்களை செய்திருக்கிறேன். டாட்டா மட்டுமல்ல சன் டிவி, ஜீ டிவி என்று எல்லா முதலாளிகளிடமும் வேலை பார்த்திருக்கிறேன். அது யாரிடமும் பிச்சை கேட்காமல், திருடாமல் பொருளாதார ரீதியாக என் சொந்தக்காலில் நிற்பதற்கான என் பாடுகள். அதைக் கேள்வி கேட்க மூலதனம் எழுதிய கார்ல் மார்க்சுக்கே உரிமையில்லை, ஏனெனில் நான் பெறுவது கூலி, உபரியல்ல.

 

இதற்கான எனது பதிவு

மாலதி மைத்ரி

 

“உங்களையெல்லாம் நாங்கள் பேசவே விட்டதில்லை, நீயெல்லாம் பேச வந்துட்டியா” என்று கோபப்படும் ஆண்டையம்மா என்னைப்பற்றி பேச உனக்கென்ன தகுதி தராதரமிருக்கு என்கிறார். தீண்டாமைக்குட்பட்டவர்களை  தீமூட்டி எரித்த ஆண்டைகள் இப்போது தீண்டாமையைப் பற்றி பேசுகிறார்கள். தீண்டாமை கொடுமைகள் காலங்காலமாக நாங்கள் அனுபவித்து வருபவை. இன்னும் என் ஊரில் செம்படத்தி பவுணு பேத்திதான் நான். முதலில் தீண்டாமை வெறியை உங்கள் சாதி சனத்திடமிருந்து ஒழித்து விட்டு வாங்க, பிறகு தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் யார் என்பது பற்றிப் பேசலாம்.

பல்லாயிரக்கணக்கான ஆதிவாசிகளை அவர்களின் வாழிடத்திலிருந்து துரத்தி வீதிகளில் பிச்சையெடுக்க வைத்த டாட்டாவை, பலநூறு ஆதிவாசி மக்களைக் கொன்று காடுகளை, மலைகளை அழித்த டாட்டாவை ஆதிவாசிகளுக்கு வாழ்வளிக்கும் தெய்வமாக ஒரு ஆதிவாசிப் பெண்ணின் வாயாலே புகழவைக்கும் துணிச்சல் பணவெறி பிடித்த ஆதிக்கச்சாதி திமிருக்கு மட்டுமே கைவந்தக் கலை.

தயாமணி பர்லா இந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் தன்னைப் பற்றிய படம் எடுக்க அனுமதித்திருக்க மாட்டார். துணிவிருந்தால் நீங்கள் எடுத்த டாட்டா விளம்பரத்தை தயாமணி பர்லாவுக்கு போட்டுக் காட்டுங்கள் லீனா மணிமேகலை. டாட்டாவிடம் ஆதிவாசிப் பெண் செய்வது கூலிவேலை. டாட்டாவின் கைகூலியாகி நீங்கள் செய்தது அடியாள் வேலை. உழைப்புக் கூலிக்கும் கைகூலிக்குமான அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள யாருக்கும் சிரமமிருக்காது. மார்க்ஸை பாலியல் குற்றவாளியாக்கி உங்கள் கவிதை வரிகளில் தூக்கிலிட்டப்பின் அவருக்கு உங்களிடம் கேட்க என்ன மிச்சமிருக்கிறது. கார்ல் மார்க்ஸோடு தினமும் களத்தில் இறங்கி போராடிய தோழமையின் அடிப்படையிலா நீங்கள் அவரை விமர்சித்தது. திரைப்பட முதலாளிகளின் முகவராக இருந்தபடி இதனைச் செய்ததின் மூலம் அவர்கள் மத்தியில் நீங்கள் பெரும் கலகக்காரராக அறியப்படலாம், அரிய விருதுகளும் உங்களுக்கு வழங்கப்படலாம். கோடம்பாக்கத்தில் தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும் அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க மறத்து பிரச்சினைக்கு உள்ளான நீங்களும் எப்படி ஒன்றாக முடியும் என்று இன்னொரு ஆவணப்படம் எடுத்து எங்களுக்கு விளக்குங்கள்.

நான் களப்பணி செய்ததும் அரசியல் செயல்பாட்டில் இணைந்ததும் பன்னாட்டு நிதிஉதவி நிறுவனங்களில் தொடங்கியதல்ல. அது எனது வாழ்க்கை முறை. எனது செயல்பாடுகளின் ஒரு நிலையில் எனது மக்களுக்கான பணிக்கென நிதி பெறும் நிறுவனங்கள் எனக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டனர். மற்ற சிலரைப்போல எனது எழுத்தையும் பெயரையும் அடகு வைப்பதாக இருந்தால் நானே தனியாக நிதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதனைத் தவிர்த்து என் மக்களின் பெயரால் பெறப்பட்ட பணம் அவர்களுக்குச் முறையாகச் சென்று சேர வேண்டும் என்பதால் நான் அதில் ஒரு பணியாளராக இருந்திருக்கிறேன். இதைப் போல பல்லாயிரக் கணக்கான பெண்கள் தமிழகம் முழுக்க பணிசெய்து தம் வாழ்வை நடத்துகின்றனர். இவர்களை உங்களைப் போன்ற முகவர்கள் என்றோ துணைமுதலாளிகள் என்றோ நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் பெறும் பணத்தில் உள்ள காந்தி வேறு, டாடா தரும் பணத்தில் உள்ள காந்தி வேறு என்பது உழைப்பவர்களுக்குத் தெரியும்.

 2005-இல் எனது நேரடிக் களப்பணியின் தொடர்ச்சியாக நண்பர்களுடன் “விளிம்புநிலை மக்கள் குரல்” அமைப்பைத் தொடங்கி கடற்கரை கிராமங்களில் சுனாமி நிவாரண கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரை மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டளிக்கவும் அவர்களுக்கான நிவாரணம் முறையாக சென்று சேரவும் என்.ஜி.ஓ நிறுவனங்களுடன் ஐந்து ஆண்டுகள் நேரம் காலம் பாராமல், என் உடல்நிலையும் கருதாமல் உழைத்தேன். சுனாமியில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாகக் கணக்கிட்டு இழப்பீடு பெற்றுத் தரும் வேலையில் ஈடுபட்டோம். மீனவர்களைக் கடற்கரையிலிருந்து வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்தினோம். புதுச்சேரி கடற்கரையில் பன்னாட்டு துறைமுகம் வராமல் தடுத்தோம். அரசின் நிவாரணப் பட்டியலில் விடுபட்ட பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுத் தந்தோம். மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான மீனவர் நலவாரியம் எங்கள் தொடர் முயற்சியின் விளைவாக தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இதன் பலன் குறைவேயானாலும் மீனவர்களுக்கு சில நலஉதவிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. மீனவர் மற்றும் தலித் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை ஓரளவு குறைக்க முடிந்தது. இதற்காக நான் பெற்றது அன்றன்றைக்கான செலவுக்கான கூலி. என்.ஜி. ஓ-விடம் நான் பார்த்தது கூலிவேலை. கார்ப்ரேட்களின்  அடியாளாகவோ, குட்டி முதலாளியாகவோ மாறிவிடக்கூடாது என்ற கொள்கையில் எப்போதும் உறுதியாகவே இருக்கிறேன். அதனால் தான் நான் எடுத்துக் கொண்ட பணி முடிந்ததும் அதனை விட்டு வெளியேறினேன். சுனாமி நிவாரணப்பணியின் போது பல பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பல லட்சங்கள் கொடுக்க முன்வந்தும் நான் தொண்டு நிறுவனம் என எதனையும் தொடங்க உறுதியாக மறுத்துவிட்டேன். குழந்தை உரிமைகளும் நீங்களும் அமைப்பும் உதவி செய்வதாகக் கூறி தொண்டு நிறுவனம் தொடங்க கேட்டுக் கொண்டபோதும், அணங்கு இதழை நடத்துவதற்கான நிதியை மற்றொரு தொண்டு நிறுவனம் அளிக்க முன்வந்தபோதும் நான் சுதந்திரமான அரசியல் வேலை செய்பவள்,   என் கொள்கைகளுக்கு மாறானவற்றை வழி மொழியாத எழுத்துக்காரி என்று சொல்லி  மறுத்திருக்கிறேன். நான் சிரமப்பட்ட நேரத்தில் இரு இதழ்களுக்கு நண்பர்கள் சிறுதொகை அளித்து உதவினார்கள். இவை அனைத்துக்கும் என் வங்கிக் கணக்கு இன்றும் ஆதாராமாக உள்ளது.

சிற்பி பாலசுப்பிரமணியன் அறக்கட்டளை வழங்கும் சிறந்த கவிஞருக்கான விருதை (2011) எனக்கு வழங்குவதாக அறிவித்த கவிஞர் இரா. மீனாட்சி, சிற்பி பிறந்தநாள் விழாவில் வந்து பெற்றுக்கொள்ளும்படியும் முறையான அழைப்பு வரும் என்றும் தெரிவித்தார். மூன்று லட்சம் தமிழர்களை ஈழத்தில் பலிகொடுத்த துயரம் கரையும்முன் ஒரு படைப்பாளி தனக்குத்தானே பிறந்தநாள் விழா எடுத்துக்கொள்ள முடியுமா? தமிழினப் பேரழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழன் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா? என்று வினவி அவ்விருதை நிராகரித்தேன். பிறகு அவ்விருது லீனா மணிமேகலைக்கு அளிக்கப்பட்டதாக அறிந்தேன். பத்தாயிரம் விருது தொகை என்பது எனக்குப் பெரிய தொகைதான் என் ஒருமாத கூலி. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்ட செலவுக்கு அந்த தொகை உதவியாக இருந்திருக்கும். 1989-இலிருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வருகிறேன். பெரும்பாலும் என் வருமானத்திலும் கடன் வாங்கியும்தான் போராட்டச் செலவுகளைச் செய்து வருகிறேன். மிக நெருக்கடியான நேரங்களில் நண்பர்கள் உதவியிருக்கிறார்கள். போராட்டக்களத்தில் இருக்கும் என் புகைப்படங்களை போட்டு எப்போதும் என்னை நான் விளம்பரப்படுத்திக்கொண்டது கிடையாது. போராட்டச் செய்திகளையும் புகைப்படங்களையும் சேகரித்துவைக்கும் வழக்கம்கூடக் கிடையாது. வேறு யாராவது அவற்றை அனுப்பும்போது நான் புதிதாக பார்க்க நேர்ந்திருக்கிறது. மனித உரிமைகளுக்காகப் போராடும் ஆயிரமாயிரம் பெண்களுடன் சேர்ந்து ஒலிக்கும் ஒரு குரல் என்னுடையது அவ்வளவே.

இந்தியாவின் மாபெரும் பெண்ணியப் போராளியான உங்களை டாட்டா கண்டுபிடித்து அழைத்து “டாட்டா எங்களை எங்கள் சொந்தக் காலில் நிக்க வைத்தது” என்று ஆதிவாசி பெண்களைச் சொல்ல வைத்தது போல, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியாக வேஷங்கட்டும் உங்களை இந்திய அணுசக்தி துறை கண்டுபிடித்து “மத்திய மாநில அரசுகளின் நிவாரண உதவிகள் பெற்று நாங்கள் ஆட்டோ ஓட்டுறோம் புல்டோசர் ஓட்டுறோம், அணுவுலை நல்லது, அணுவுலையால்தான் நாங்க மூணுவேளை சாப்பிடறோம், அணுவுலையால்தான் என் குழந்தைகள் பள்ளிக்கூடம் போறாங்க, அணுவுலை எங்கள் வாழ்வின் விடிவெள்ளின்னு” நாளை மீனவப்பெண்களை பேச வைப்பீங்க. இந்திய அணுசக்தித் துறைக்கு ஏன் கைகூலி வேலைப்பாத்தீங்கன்னு கேள்வி கேட்டால், எல்லா நோட்டுலயும் காந்திதான் சிரிக்கிறார், நான் திருடல, பொய் சொல்லல்ல, எனது பணம் உபரியில்ல, கூலிதான்னு நக்கலாக உங்களிடம் இருந்து பதில் வரும். அதனைக் கேட்டுக் கொண்டு சும்மா இல்லாமல் மறுப்பு சொன்னால் “அல்லி அரசாணைகளில் எனக்குச் சுவாரஸ்யம் இருப்பதில்லை” எனப் பெண்ணியம் பெருகிய பதில் வரும்.

டெல்லியில் பிப்ரவரி 2009-இல்  ஈழத்தில் தமிழினப் படுகொலைகளை நிறுத்தக்கோரி படைப்பாளிகள் இணைந்து நடத்திய போராட்டத்தை உங்கள் சொந்த வியாபாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டு லாபமடைந்தீர்கள். டெல்லியில் வந்திருந்த அனைவரும் போராட்ட முனைப்பிலும் திட்டமிடலிலும் இருக்க நீங்கள் பெரும்பாலான நேரங்களில் நெட்டும் கையுமா இருந்தீர்கள். தோழர் பொன். சந்திரனை இரவோடிரவாக ஆங்கிலத்தில் அறிக்கை தயாரிக்கச் சொல்லி வறுத்தெடுத்தீர்கள்.  இந்த அறிக்கையெல்லாம் யாருக்கு எங்கே அனுப்பி வைக்கப்பட்டது என்று வந்திருந்த யாருக்கும் தெரியாது. ஜெரால்டும் நரனும் போராட்டத்தைப் புகைப்படம் எடுத்துத் தந்தார்கள். ஊடகங்களுக்குத் தர இந்தப் புகைப்படங்கள் போதுமானது. உங்கள் வியாபாரத்துக்கு வீடியோ படங்கள் தேவைப்பட்டது. வலைப்பக்கத்துக்கு போராட்ட வீடியோ காட்சிகள் தேவை என்று நச்சரிக்க, டெல்லி தொலைக்காட்சி நிருபர்கள் உதவியால் ஒரு வீடியோ எடுப்பவரை நியமித்து வீடியோ காட்சிகளை வாங்கி அனுப்பினேன். செங்கடல் பார்த்த பிறகுதான் தெரிந்தது, படைப்பாளிகளை உங்கள் வியாபாரத்திற்கு தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஷோபாசக்தி ஒருமுறை புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நீங்கள் வாங்கிய பணத்தைத் திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாகச் சொன்னார், புதுவை இளவேனிலும் இதே செய்தியைச் சொன்னார். இது தொடர்பாக இணையத்திலும் செய்திகள் வந்தன. இதுபற்றி நான் உங்களிடம் கேட்கவில்லை. உங்கள் வியாபாரத்திற்காக நீங்கள் வாங்கிய கடன் பிரச்சினையாக இருக்குமென்று விட்டுவிட்டேன். ஈழத்தமிழர் தோழமை குரல் நடத்திய போராட்டத்திற்கான செலவுக்கு மேல் அதிக நிதி திரட்டியதாக உங்கள் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. என்னிடம் இது பற்றி நீங்கள் வருத்தமுடன் தொலைபேசியில் சொன்னபொழுது நான் உங்களிடம் ஈழத்தமிழர் தோழமைக்குரல் வலைப்பக்கத்தில் போராட்டத்தின் வரவு செலவு கணக்கை சுகிர்தராணியிடமிருந்து வாங்கி வெளியிடுங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றேன். நீங்கள் இதுவரை வெளியிடவில்லை, நான் இப்போது வெளியிடுகிறேன். சுகிர்தராணியிடமிருக்கும் கணக்கின் ஆதாரங்களை தேவைப்படுபவர்கள் சரிப்பார்த்துக் கொள்ளலாம்.

ACCOUNT

காலச்சுவடு கண்ணனுக்கும் உங்களுக்கும் இடையேயான போட்டி இரு பதிப்பக முதலாளிகளுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை. நாளை நீங்களும் கண்ணனும் இணைந்து செயல்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆதிக்கச்சாதி பின்னணி, கட்சி, அதிகார மட்ட பலத்துடன் பதிப்பகம், திரைப்பட நிறுவனம் நடத்திய முதலாளியம்மா நீங்கள்.  ஆண்ட ஆதிக்கச்சாதி பரம்பரையான உங்களுக்கு உலகில் ஆயிரம் தளங்கள் திறந்து கிடக்கிறது. ஆயிரமாயிரமாண்டுகளாக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சார்ந்த என் போன்றவர்கள் பதிப்பகங்களை பத்திரிக்கைகளைப் பயன்படுத்திதான் ஆக வேண்டும். என் பெரும்பாலான கவிதைகளை வெளியிட்டது காலச்சுவடுதான் என்று நன்றி சொல்வதில் எந்த கொள்கை முரண்பாடுமில்லை. உங்களைப் போன்று அரசியல் கட்சிக்காரர்களுக்கும் குழு கோஷ்டி பங்காளிகளுக்கும் நன்றி சொல்லி கவிதைத் தொகுப்பு வெளியிடவில்லை. நன்றி பட்டியலில் உளவுத்துறை, காவல்துறை கண்காணிப்பாளர் பெயர்மட்டும் தான் குறைகிறது. கவிதை தொகுப்பில் கூட உங்களுக்கு இருக்கும் அரசியல் அதிகார பலத்தை பறைச்சாற்றிக் கொள்வதில் எவ்வளவு பெருமிதம். உங்களைப் போன்றவர்களால் அழிக்கப்பட்ட எங்கள் வரலாற்றை எழுத இப்போதுதான் துணிந்திருக்கிறோம். அதில் வாய்ப்புக் கொடுக்கும் ஊடகங்களில் சில பக்கங்களைப் பயன்படுத்தி நாங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்கிறோம். மனிதவுரிமை போராளி வேடம்கட்டி வரும் வியாபாரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. காலச்சுவடு ஒரு பதிப்பகம் என்ற அளவில் எனது எழுத்துக்களை வெளியிட்டது. காலச்சுவடுக்கு எது பிடிக்கும் எனப் பார்த்து நான் எழுதவில்லை. காலச்சுவடு கண்ணன் தன்னை போராளி என்று சொல்லிக்கொள்வதில்லை, தன்னை ஒரு பதிப்பாளர், நல்ல வியாபாரி என்றுதான் சொல்லிக்கொள்கிறார். வெளிப்படையான வியாபாரிகளைவிட போராளி வேடம் போடும் வியாபாரிகள் ஆபத்தானவர்கள் என்ற தெளிவோடுதான் எங்களைப் போன்றவர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் நடக்கும் மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் பேச உலகில் ஒரு சந்தை உருவாகியுள்ளது. இத்தளத்தில் உண்மையிலேயே ஆனந்த் பட்வர்தன் போன்ற சில ஆவணப்பட இயக்குநர்கள் நேர்மையாக செயல்படுகிறார்கள். இத்தளத்தை வியாபாரச் சந்தையாக பார்த்து படமெடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் படமெடுத்து சம்பாதிக்கும் வியாபார முதலாளி நீங்கள். படமெடுப்பது என் தொழில் நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்பீர்கள். நீங்கள் படமெடுத்து சம்பாதித்ததில் படத்தில் வாழ்ந்த மக்களுக்கு இதுவரை ஏதாவது மதிப்பு ஊதியம் கொடுத்ததுண்டா? நீங்கள் இழவு வீட்டிலும் காசு பார்க்கும் கைதேர்ந்த முதலாளி. அதனால் தான் எங்கள் துயரத்தைக் கொச்சைப்படுத்தி படம் எடுத்து காசு பார்க்கிறீர்கள். நானும் சிலகாலம் நீங்கள் மனிதவுரிமைகளில் அக்கறை உள்ளவர் என்று நம்பினேன். உங்கள் சுயரூபம் தெரிந்தபிறகு உங்களுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டேன்.

புதுச்சேரி கிருஷ்ணவேணி அம்மாவை வைத்து படமெடுத்து எவ்வளவு சம்பாதித்தீர்கள்? எத்தனை விருது வெகுமதி வாங்கினீர்கள்? கிருஷ்ணவேணிக்கு ஏதாவது சிறு உதவித் தொகை கொடுத்ததுண்டா? ஒரு சி.டி கூட தரவில்லை என்று என்னிடமும் பேட்டி எடுக்க வந்த சத்தியம் தொலைக்காட்சி நிருபர் அமுதாவிடமும் அந்த அம்மா குறைப்பட்டுக்கொண்டார். தென்னிந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் மகேஷ் உதவியில் ராமேஸ்வரம் போய் தங்கி, படமெடுத்து மீனவர்களின் ரத்தத்தைக் காட்டி உலகம் முழுவதும் காசு பார்த்தீர்கள். ராமேஸ்வர மீனவர்களுக்கு செங்கடலை இன்றுவரை ஏன் போட்டுக் காட்டவில்லை? குறைந்தபட்சம் மகேஷையாவது சென்னை திரையிடலுக்கு அழைத்தீர்களா? டி.எஸ்.எஸ். மணி மூலம் செய்தியறிந்து திரையிடலுக்கு வந்திருந்தார். “கலெக்டர் ஆபிசுக்கு பாடியை கொண்டு போறமாதிரி திரும்பி வரும்போது செக்கோடு வரணும்” என்று மீனவனை பலிக்கொடுத்த மனைவி சொல்வதாகக் காட்சிவைத்து மீனவப் பெண்களை அவமானப்படுத்தியது லீனா மணிமேகலையின் ஆதிக்கச்சாதித் திமிர். இழப்பீட்டுத் தொகை கோட்டையிலிருந்து வர எவ்வளவு காலமாகுமென தனுஷ்கோடி மணலில் விளையாடும் கைக்குழந்தைக்கு கூடத் தெரியும். சிங்களவன் இனவெறி மீனவனை நேரடியாக கொல்கிறது. லீனாவின் ஆதிக்கச்சாதி நான் லீனியர் கேமிரா மீனவரின் வாழ்வியல் அறத்தை அவமானப்படுத்தி செங்கடலில் மீண்டும் ஒருமுறை கொல்கிறது.

இப்படியான இன்னும் பல காரணங்கள் உள்ளபோது உங்களுடன் இணைந்து நான் பணியாற்ற மறுப்பதற்கு நீங்கள் வைத்துள்ள பெயர் “அடாவடி அல்லது குழாயடி அரசியல்”. வாழ்நாள் முழுக்க அரசியல் செயல்பாடும் எழுத்துமாக இருக்க எந்தவித வலியையும் வறுமையையும் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துக்கொண்ட என்னைப் பற்றி உங்களுக்கு என் சாதியும் எங்கள் தெருவும் மட்டும்தான் நினைவிருக்கிறது. குழாயடியும், அடாவடியும் இல்லாமல் வெளிநாட்டுக்காரர்களுக்கு படம் காட்டிக் கொண்டிருப்பது மட்டும்தான் உங்களுடைய புரட்சிகர செயல்பாடு என்பது புரிந்திருப்பதால்தான் நான் மட்டுமல்ல உங்களால் அவமானத்துக்குள்ளான படைப்பாளிகளும் கூட திருவாய்மலர்ந்து உண்மைகளை அருளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்-பிரேம்

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்

பிரேம்

திரைப்படத்தை முன்வைத்து நம் காலத்திய அரசியல் உளவியல்புகள் பற்றிச் சில கருத்துரைகள்

1.

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பில் தீராநதி மாத இதழில் தொடராக வெளிவந்தவை. ஒரு பொருள் பற்றியோ அல்லது பல்வேறு பொருள் சார்ந்தோ சில எழுத்தாளர்கள் எழுதுவதை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவது அந்த இதழில் உள்ள நடைமுறை. முன்பு 2007-இல் தீராநதியில்  ‘இருண்மைகள்  இடைவெளிகள்  மௌனங்கள்’ என்ற  தலைப்பில் தொடராகச் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கவிஞர் கடற்கரை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பின்நவீனத்துவ அரசியல் சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. தமிழில் அதுவரை முழுமையாக விவாதிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் பற்றிய தொடக்க கட்ட உரையாடலாக அமைந்த அக்கட்டுரைகளைத் திட்டமிட்டபடி தொடர இயலாத சூழல் ஏற்பட்டது.

மீண்டும்  2011, செப்டம்பர் மாத தீராநதி இதழுக்கு  எழுதிய ஒரு கட்டுரை இத்தொடருக்கான தொடக்கமாக அமைந்தது. திரைப்படத்தை முன் வைத்து நம் காலத்திய  சமூக-அரசியல் உளவியல் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொடர் அமையும் என நான் தெரிவித்திருந்தேன். திரைப்படங்களை முன்வைத்து நம் காலத்திற்கான சில கோட்பாட்டுச் சிக்கல்களைப் பேச இந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது.

தமிழில் திரைப்படங்கள் பற்றிய கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள், வாசிப்புகள் இல்லை.  திரைப்பட வரலாறு, திரைப்படத் தொழில்நுட்பம் பற்றிய அறிமுக நூல்கள் சில மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. தமிழில் திரைப்படம் பற்றிய எழுத்துக்கள் என்பன  கதைசொல்வது அல்லது ஆவணப் படுத்துவது என்ற வகையில் அமைந்துள்ளன. இவை அடிப்படை வாசிப்புக்கு உரியவை.  அதற்கு மாறாக ஒரு மரபும் உண்டு ‘உலக சினிமாவைத் தமிழர்களின் குருதியில் கலந்துவிட வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் திரைப்பட விழாக்களில்  பார்த்த அல்லது பார்க்காத  படங்களைப்  பற்றிக் கதைச் சுருக்கக் கையேடுகளை வைத்து எழுதி அப்படங்களைப் பார்க்க வாய்ப்பில்லாதவர்களை அசர வைத்துவிடுவது. ஒளிஒலிப்பேழைகள் குறுமின்தட்டுகள், இணையத்தளங்கள்  என விரிவடைந்த திரைப்பட நுகர்வு இந்த வகையான கதைக்கட்டும் முறைகளை கேலிக்குரியனவாக மாற்றியிருக்கின்றன. ஆனாலும் தமிழின் முதல் பேசும்படத்தில் பயன்பட்ட ஒலிவாங்கி, முதல் திரையரங்கத்தில் இருந்த திரைப்படுத்தும் கருவி, முதல் நடிகர் அணிந்திருந்த மோதிரம் என்பன பற்றியெல்லாம்  ‘மேலைநாட்டு’ அறிஞர்களின் வழிநின்று அரிதான ஆய்வுகள் தொடர்ந்து நடந்தபடியுள்ளன. உலகத் திரைப்படக்காரா்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி உள்ளுர் திரைப்படக்காரர்களை வியக்கவைக்க இலக்கிய மொத்த விற்பனைக்காரர்கள் எழுதும் ஆன்மிக எழுத்துக்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.  இவற்றிலிருந்து விலகிய கருத்தியல் செயல்பாடாக இக்கட்டுரைகள் அமையும் என்பதால்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பை அளித்தேன்.

 நான்கு குறிப்புகளை  மனதில் கொண்டு ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பு  உருவாக்கப்பட்டது.  தமிழ்த் திரைப்படங்களின் பொதுவான தன்மையாக  உள்ள வரலாற்றிலிருந்து, பண்பாட்டியல் மெய்மைகளிலிருந்து, அறிவுரு வாக்கத்திலிருந்து விலகுதல் என்பதில் உள்ள முதல் விலகுதல். கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட மிகச்சில படங்கள் தமிழ்த்திரையின் தேய்வழக்கு, ஒற்றைக் கதையாடல் முறை, மறுசுழற்சிக் காட்சித்தன்மை என்பதிலிருந்து விலகிச் சில சமூக உளவியல் கூறுகளையும்  பண்பாட்டுத் தடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் துன்பியல் களங்களையும் பதிவு செய்ய முயற்சிப்பதில் உள்ள இரண்டாவது விலகுதல்.  திரைப்படம் பற்றிய அறிவைத் தருவதாகக் கூறிக்கொண்டு சில இலக்கிய முகவர்கள் தமிழில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆய்வு முறையற்ற வழிபாட்டு மன்றங்களின் மயக்கமூட்டும் திரைகளை விலக்குதல் என்பது மூன்றாவது விலகுதல். தமிழின் கோட்பாடுகள் குறித்த சொல்லாடல்களை மறைத்துள்ள பொதுச்சொல்லாடல் திரைகளை விலக்கும் முயற்சி நான்காவது விலகுதல். திட்டம் பெரியது, ஆனால் களமோ சிறியது. ஒவ்வொரு கட்டுரை வெளிவந்த பின்னும் நண்பர்கள் சொன்ன கருத்து ‘தமிழில் முற்றிலும் புதிய அணுகுமுறை என்பதால் இன்னும் கூடுதல் விளக்கம் தேவை’. பொதுக்கருத்து கொண்ட திரைப்பட வாசிப்புக்கு ‘விளங்காத திரையாக’ இக்கட்டுரைகள் தோற்றம்தர பல காரணங்கள்  இருந்தன. முதல் காரணம் திரைப்படம் குறித்த பேச்சு அல்ல இது, திரை அரசியல் பற்றிய உரையாடல், அரசியல் உளவியல் பற்றிய மறு ஆய்வு.  கடவுள் பற்றிய ஆய்வுக்கும் ஒரு பக்திப் பாடலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு இது. தமிழின் நவீன கதைசொல்லிகள் சிலர் திட்டமிட்டு  உருவாக்கி வைத்துள்ள ஞானஒளியின்  பெருக்கத்தில் இக்கட்டுரைகள் இருட்டைத் தேக்கி வைத்துக் கொண்டவையாக தோற்றம் தருவது இயல்பானது. ஆனால் பின்காலனிய, பின்நவீனத்துவ ஆர்வமும் வாசிப்பும் உள்ள பல நண்பர்கள் இக்கட்டுரைகளை முன்வைத்து உரையாடல்களைத் தொடர்ந்தனர்.

2.

தமிழில் சில ஊடகங்கள், பதிப்பகங்கள் இணைந்து சில எழுத்தாளா்களைத் தோ்ந்தெடுத்து அறிவாளிகள், ஆய்வுத்திறன் கொண்டவா்கள், பெரும் படைப்பாளிகள் என்ற உருத் தோற்றத்தைத் திட்டமிட்டு பரப்பிக் கருத்தியல் பங்குச்சந்தை ஒன்றை உருவாக்கி உள்ளன. இந்த ஊடக ஒலிபரப்பிகள் உலக சினிமா முதல் உள்ளுர் ஆன்மீகம் வரை அனைத்தைப் பற்றியும் முன் தயாரிப்பு செய்யப்பட்ட கருத்துகளை மிகப்புதிய சிந்தனை முறைபோல ஓசையெழுப்பிக் கொண்டே இருக்கின்றனா். அறிவுமறுக்கும் பொதுக்கருத்தை உருவாக்க முனைகிற ஊடக-இலக்கிய உற்பத்திக் கூடங்களுக்கு இவா்கள் பலமடங்கு லாபத்தைப் பெருக்கித் தருவார்கள்.   உலகச் சந்தையும், பன்னாட்டு முதலீடுகளும் அனைத்துவகை அறிவையும் தன்வசமாக்குதல், பின் செயலிழக்க வைத்தல் என்பதற்கென தனித்துறையை உருவாக்கியுள்ளன. மார்க்ஸியம் தொடங்கி பெண்ணியம், தலித்தியம், உலக சினிமா, உலக இலக்கியங்கள் எது பற்றியும் புதிய கருத்துக்களை’ பரப்புவதற்கான மொத்த விற்பனையாளர்களையும் சில்லரை விற்பனையாளர்களையும் இவர்கள் உருவாக்குகிறார்கள். ஊடகங்கள் இவர்களை தொடர்ந்து உருப்பெருக்கிக் கொண்டே இருக்கும். தமிழின் அறிவுத்துறையில் இந்த ஊடக உருப்பெருக்கம் நம்மைப் பல வகையில் பாதித்தபடி உள்ளது. இந்த ஊடக உருவங்கள் தொடர்ந்து சொல்லும் எதுவும் தமிழக வரலாற்றில் அழியா இடம் பெற்றதாகிவிடும். அறிவுமறுக்கும் பெருங்கதையாடல் ஊடகங்கள் என்ன சொல்கின்றனவோ அவற்றையே நவீன சிந்தனை, நான்லீனியர் எழுத்து, இந்திய ஞான மரபு, புனித தேசியம் என ஏதாவது ஒரு வெள்ளித் தாளில் பொதிந்து விற்பனைக்கு வைக்க இவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ உருவாக்கித் தந்த எதிர் அறிவு மரபு இது.

தமிழில் எதை எழுதினாலும் படிக்கச் சிலர் இருப்பார்கள், அவற்றைச் சரிபார்க்கவோ ஒப்பிட்டுக் கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற கெடுநம்பிக்கையே இவர்களை இயக்கும் சக்தி. “எங்களுக்கு இரண்டு கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள், உங்கள் மாற்றுச் சிந்தனைகளை ஏற்க இருநூறு பேர்தான் இருக்கிறார்கள், அதனால் நாங்களே உலகை ஆளும் தகுதி கொண்டவர்கள்” என்ற இறுமாப்பை தமிழ் சினிமாக்காரா்களிடம் பார்க்க முடியும். தமிழ்த் திரையும் புதிய கதைக்காரா்களும் இணையும் தளம் இது. அறிவுத் திரிபுகளுக்கான சதித்திட்டங்கள் இந்தத் தளத்தில் செயல்வேகம் பெறுகின்றன. மாற்றுச் சிந்தனைகள், மாறுபட்ட அணுகுமுறைகள், விடுதலைக் கருத்தியல் சார்ந்து சிந்திக்கவும் எழுதவும் தொடங்கும் ஒருவா் இந்தப் பல்நோக்கு அங்காடிகளின் படிக்கட்டுகளில் இடறிவிழாமல் இருக்க பயிற்சியும் முனைப்பும் தேவைப்படுகிறது. கருத்தியல் சந்தைப் பொருளாதாரமும் பண்பாட்டியல் மூலதனத் திட்டங்களும் தொடுக்கும் தாக்குதலை எதிர்கொண்டு மீளுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இக்கட்டுரைகள். இவை ‘தீராநதி’ இதழில் தொடராக வெளிவருவதற்கான முரண்சூழலை உருவாக்கித் தந்ததும்கூட உலகமயமான சந்தைப் பொருளாதாரம், பன்னாட்டு  பொதுக்களம் போன்ற சிக்கலான  நிலைகள்தான்.

3.

அரசியல், தத்துவம், கலை, இலக்கியம் என்பவற்றைக் கற்பது முன்திட்டமிடப்படாத பெரும் அலைச்சல் கொண்ட ஒரு தேடுதலாக எனக்கு இருந்துள்ளது. ஒரு இலக்கியப் படைப்பாளியாக மட்டும் இருக்க விருப்பம் கொண்டிருந்த எனக்குக் கல்விப்புலங்கள் அனைத்தும் அறிவு ஒடுக்கும் தன்மை கொண்டவை படைப்பாற்றலை அழிப்பவை என்ற எண்ணம் உண்டு. ஆனால் எனது அரசியல் ஈடுபாடுகள் அறிவுப்புலங்கள் பலவற்றை ஊன்றிக் கற்க வேண்டிய தேவையை உருவாக்கின. ஆங்கிலக் கல்வி இல்லாத எனக்கு அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்க வேண்டிய நிலையை உருவாக்கி, பின் ஆங்கிலத்தில் கற்பிக்கவும் மொழிபெயர்க்கவும் உரியவனாக்கியிருப்பது காலத்தின் முரண்நகைதான்.  நாடகம், திரைப்படம் என்ற இரு துறைகளை நான் இந்த பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒரு பயிற்சி முறையுடன் ஒரு  மாணவனாக இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டேன். எங்கிருந்து தொடங்கி எந்தெந்தச் சிந்தனைப் பள்ளிகள் ஊடாக இத்துறைகளைக் கற்பது என்பதும் எந்தெந்த நூல்களை, கோட்பாட்டுப் புலங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இத்துறைகளில் விரிவாகப் பட்டியலிடப்பட்டிருப்பது எனக்குப் பயனுடையதாக இருந்தது.

உலக அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகப் பிரதிகளும் உலக அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களும் ஒரு நேர்க்கோட்டு முறையில் காலவரிசைப்படுத்தப்பட்டு கற்பதற்கேற்ப நமக்குக் கிடைக்கின்றன. செவ்வியல் சார்ந்தும் மாற்று மரபுகள் சார்ந்தும் இந்த அறிவுத்துறைகள் பலவகையான பார்வைகளை, அணுகுமுறைகளைத் தம் இயல்களாக இணைத்துக் கொண்டுள்ளன.  இதன் காரணமாக நாடகம், திரைப்படம் என்ற இரு துறைகளைப் பற்றி எழுதுவதானது தொடர் உரையாடல் ஒன்றில் நம்மை இணைத்துக் கொள்ளும் செயலாக இருக்கும். ஒரு தொழில்நுட்பப் பயிற்சியின் பின்புலத்துடன் இந்த உரையாடலில் யாரும் பங்கெடுத்துக் கொள்ள இயலும். ஆனால் இவற்றை அரசியல்படுத்தவும் கோட்பாட்டு வகையில் இடப்படுத்தவும் முயற்சிக்கும்போது திரைப்படம், நாடகம் மட்டுமின்றி நிகழ்கலை வடிவங்கள் பற்றிய ஆய்வறிவுகள் அனைத்தும் பன்மையான அறிவுப்புலங்களுடன் உறவுடைய கலப்பான அணுமுறைகளைக் கொண்டவை என்பது நமக்குப் புரியவரும். திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்தப் பன்புலத் தன்மை கூடுதலாகத் தேவைப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் திரைப்பட வாசிப்பை பின்நவீனத்துவம் கோட்பாட்டு உரையாடல்களின் பகுதியாக ஏற்றுக் கொள்கிறது. பேச்சு தொடங்கி, பெரும்  கட்டுமானங்கள்,    நகர அமைப்புகள் வரை அனைத்தையும் குறியியல்   செயலாகவும்,   கதையாடல் களமாகவும்    (Narrative Domain)  அடையாளப்படுத்துகிறது பின் நவீனத்துவ  பொருளுரைப்பு முறை. பிரதிகளை, கதையாடலை, வாழ்வை,வரலாற்றை வாசிப்பது, உடலை மனதை பொருள்படுத்துவது என அனைத்தையும் இடையீட்டுப் பிரதிச் செயல்பாடுகளாக    (Intertextual function)   விளக்கும் பின்நவீனத்துவ அணுகுமுறை  வாசிப்புச் செயல்பாட்டை அரசியல் செயல்பாட்டின் பகுதியாக விரிவுபடுத்தி அதனை வாழ்வுச் செயல்பாடுகளில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது. இந்தக் கட்டுரைகள் குறியியல், பின்நவீன வாசிப்பு முறைகளைக் கொண்டிருந்தாலும் பன்மை நவீனத்துவம் என்ற அணுகுமுறையை நோக்கி  நகர்கின்றவை.

திரைப்படம் கதை சொல்வதோ, தோற்ற மெய்மைகளை தொகுத்துத் தருவதோ, மாய வினோதக் காட்சிகளை உருவாக்கிக் காட்டுவதோ மட்டும் அல்ல. அது பொருளுரைத்து, கோட்பாட்டாக்கம் செய்யும் ஒரு எடுத்துரைப்பு, பலவிதமான அறிவுருவாக்க முறைகளில் ஒன்று என்பதைப் புரிந்து கொண்ட தளத்தில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன. அத்துடன் “ஒரு திரைப்படம் அதனளவில் தன்னை விளக்கிக் கொள்வதில்லை அதற்கு முன்னும் பின்னும் அமையும் மொழி ஊடான, குறியமைவுகள் வழியான பொருளுரைப்புகளால்தான் அது தன்னை விளக்கிக் கொள்கிறது”. “திரைப்படத்தை பொருளுடையதாக்குவது திரைப்படம் பற்றிய பேச்சுருவாக்கம்தான்”  என்ற ரொலான் பார்த், ஷீல் தெலஸ் வழிவந்த கருதுகோள் இக்கட்டுரைகளின் அடிப்படைகளில் ஒன்று.

தமிழில் உலகத் திரைப்படங்கள் பற்றி எழுதுவது என்றால் அப்படங்களைப் பார்க்காத, பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கதையைச் சொல்வது அல்லது யார் அவற்றைப் பார்க்கப் போகிறார்கள் என்ற தெம்புடன் கதைவிடுவது என்று ஒரு பொதுவழக்கு உருவாகியுள்ளது. இதனைத் தவிர்த்து தமிழ்-இந்தியச் சூழல் சார்ந்த படங்களை மட்டும் வாசிக்கவென இக்கட்டுரைகளை அமைத்துக் கொண்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக ஓடியலைந்து பார்த்த பல இயக்குநர்களின் திரைப்படங்கள் முழுத்தொகுப்புகளாக இன்று பார்க்கக் கிடைப்பதால்  அவை பற்றிய மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட நிலையில் இக்கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். உலகத் திரைப்படம் என ஒன்றும் இல்லை என்பதைத்தான் இந்த இயக்குநர்கள் எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். அவா்கள் தம் மொழியில், தம் சமூகம் பற்றி, தம் அரசியல் சார்ந்து தம் திரைப்படங்களைப் புனைந்திருக்கிறார்கள். அது அவர்கள் திரைப்படம், அதில் நாம் இல்லை.  நம் திரைப்படம் வேறு. அது என்னவாக உள்ளது? அது என்னவாக இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும்? எனப்பல கேள்விகளுடன் இந்தக் கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கினேன். தமிழில் பேசும் ஒரு திரைப்படம் என்பதால் அது தமிழ்ச் சமூகங்கள் அனைத்திற்குமான திரைப்படமாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்ற எளிய உண்மை இக்கட்டுரைகள் வழியாகப் புரியவந்தது. அதே போல தமிழில் எழுதப்பட்டுள்ளதால் இக்கட்டுரைகள் தமிழில் வாசிக்கப் பயின்ற அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. இதனை எழுதுவது வாசிப்பது இரண்டுமே இருவகை இணக்கமுள்ள அரசியல் செயல்பாடுகள்.

4.

இக்கட்டுரைகளை எழுதுவதற்கு முன் நான் பதிவு செய்திருந்த ஒரு குறிப்பை இங்கு தருவது வாசிப்பிற்கான ஒரு முன்புலமாக அமையக்கூடும்.

குறியீட்டுச் செயல்பாடும் திரைப்படமும்:

திரையில் தோன்றி நினைவில் படியும் உருவங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள  முயற்சிக்கும் போது நாம் உடல் பற்றிய  குறியீட்டுச் செயல்பாடுகளில் ஒன்றைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். மனிதவுடல் மட்டுமல்ல எந்த ஒரு பருப்பொருளும் வேறு எந்த ஒன்றுக்கும் குறியீட்டுப் பதிலியாக இருப்பதில்லை. ஆனால் குறியீட்டுத் தன்மை கொள்ளாத ஒன்றை மனித அறிதலும் அனுபவமும் தமது உலகில் அனுமதிப்பதில்லை. அறிவும் அனுபவமும் முதலில் அனைத்தையும் குறியீடாகப் பொருள்கொள்வதிலும் பொருள்படுத்துவதிலும் தொடங்கிப் பின் அனைத்து வகைக் குறியீடுகளும் தம்மைத் தாம் குறிப்பு செய்து அதனூடான பொருள் மாறுபாட்டு நாடகங்களை நிகழ்த்திச் செல்கின்றன. அவை  வேறுவகைப் பொருளை, அா்த்தங்களைக் கண்டு சொல்கின்றனவோ அா்த்தங்களைக் கொண்டுவந்து தருகின்றனவோ அல்ல என்பதை உணர்த்தி முற்றுப்பெறுகின்றன.

இதனை பௌத்தம் நிப்பாண (நிர்வாண) என்றும் சூன்யா என்று சொல்ல முயற்சித்தது. பின்நவீனத்துவம் இதனை முடிவற்ற குறியீட்டுச் செயல்பாடு என்று விளக்கிக் காட்டியது. பன்மை நவீனத்துவத்தின் வழி இதனை குறியீட்டுப் பொருள் பற்றிய குறியீட்டுப் பெருக்கம் எனவும், குறியீடு கடந்த குறியீடுகளின் பெருக்கம் எனவும் சொல்லலாம். வாழ்தல் என்பதைக் குறியீடுகளுடனான ஓயாத விளையாட்டு என்று சொன்னால் சாதல் என்பது குறியீட்டாக்கத்தின் முடிவு என்று கொள்ள முடியும். ஆனால் குறிகளும் குறியீட்டுத் தொகுதிகளும் ஒரு தனிமனிதரின் பிறப்புக்கு முன்பே இங்கு இருந்து அவரைச் சூழ்ந்து கொள்வதுடன் அவருக்குப் பின்னும் இங்கு இருந்து அவர் இருந்ததைப் பற்றியும் அவர் இல்லாமல் போனதைப் பற்றியும் வேறொரு காலத்தில் சொல்லிக்கொண்டிருப்பவையாக இருக்கின்றன.

நம் உடல் எதனையும் குறிப்பிட்டுக் காட்டவோ, வேறொன்றைக் குறிப்புணர்த்தவோ, வேறொன்றின் நிழலாகவோ, மற்றதின் பதிலியாகவோ இங்கு இருந்துகொண்டில்லை என்பதை  உணர்ந்து கொள்ளும்பொழுது ஏற்படும் ஒரு அச்சமூட்டும் வெறுமையைக் கடக்கவும் கையாளவும் நம்மை பழக்கித் தருபவை பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, கலை-இலக்கியம் என்ற கட்டுமானங்கள். ஒரு வகையில் நம் வாழ்தலைப்பற்றிய, இருத்தலைப்பற்றிய பொருள்படுத்துதல், பொருள்கூறுதல் என்பதைவிட நாம் இல்லாமல்போகும் நிலைபற்றிய அச்சத்தைக் கையாள, தன்வயமாக்கிக்கொள்ள நம்மைப் பழக்கித் தருபவையே மனித குறியமைப்புச் செயல்பாடுகள்.

சமயங்கள் ஒவ்வொன்றும் இதனைக் கையாளும் வழிமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும் கடவுள் மற்றும் மற்றொரு உலகம் என்ற உருவக நிலைகளால் இந்த இன்மை உணர்வை உருமாற்றித் தருகின்றன. இறைமையுடன் இணைதல் தொடங்கி இறையுலகில் ஒரு உருவமாய்க் கலந்துவிடுதல் மற்றும் இறையின் நெருக்கத்தில் இணைபிரியாமல் இருத்தல் வரை வெவ்வேறு உருவகத் தன்மைகள் சமயம் சார்ந்த உளவியலாக அமைந்துவிடுகின்றன. இவை ஒருவகையில் மனித உளவியலில் எதிர்காலம் சார்ந்த இன்மை பற்றிய மனஅழுத்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது நாம் இல்லாமல் போகும் ஒரு காலம் பற்றிய உளவியல்  அழுத்தம். இந்த ‘இன்மை நிலையின் தொடர் இருப்பு’ (perpetual presence of postulated absence) என்பது மொழியிலக்கணத்தின் வழி முழுமையாக விளக்க முடியாத ஒரு திருகல் நிலை, அதே சமயம் மொழிவழி அமைந்த காலம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுநிலை.

‘இறைவனும் இல்லை இறந்தவர் பிறவார் அறனோ டென்னை?’ (மணிமேகலை) என்ற மறுத்துரைக்கும் லோகாயதக் கேள்வியும் ‘நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே’ (திருவாசகம்) என்ற முழுமையான ஒப்படைப்பும் வரலாற்றில் இணையாக அமைந்த புரிதல்கள். இவை இரண்டிற்குமே  அடிப்படையாக அமைந்த குறியீட்டு நிலையான இருத்தல் பற்றிய கேள்விகளும் அழுத்தங்களுமே முடிவு காணமுடியாத மனிதப் புனைவுகளின் பெருக்கத்திற்குக் காரணமாக அமைகின்றவை.

இந்தக் குறியீட்டு நிலையிலான இருத்தலை மரணத்திற்கும் இன்மைநிலைக்கும் அப்பால் வைத்துக் கையாள்பவை சமயச் சொல்லாடல்கள். இதே குறியீட்டுநிலை இருத்தலை வாழ்வுடனும், உடலாய் இருத்தல் என்பதுடன் இணைத்து உளவியல் தளத்தில் கையாள்பவை கலையும் இலக்கியமும். சமயம், சடங்கு சார்ந்து அமைந்த இலக்கியங்கள்கூட மனித உடல்-வாழ்வு நாடகத்தன்மையின் வழியாகவே தம்மை வடிவமைத்துக் கொள்கின்றன. விரகபக்தி, நாயகி-நாயக பாவம் போன்று வடிங்களின் வழி அமைந்த புலன் தன்மையையும், காவிய புராணிகக் கதைவழி அமைந்த நெடும் கதைக்கூறல்களும் உடலையே தொடா்ந்து குறியீட்டாக்கம் செய்கின்றன.

உடல்சார் இருத்தலும் உடல்சார் வாழ்தலும் பற்றிய அனைத்துக் கேள்விகளையும் அரசியல் மற்றும் வரலாற்றின் தளத்தில் வைத்துப் பேசும் போதும் நாம் தவிர்க்க முடியாமல் குறியீட்டுநிலை இருத்தலைப் பற்றியே பேசுகிறோம். இதனை இன்னொரு வகையில் விளக்கும்போது நம் உடல்சார் இருத்தலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் நமது குறியீட்டு நிலைக்கும் உள்ளது. உடல்சார் இருப்பு எப்போது தனிமனித நிலை கடந்து சமூகம், இனம் என்ற குழுநிலை அடைகிறதோ அப்போதே அது குறியீட்டு நிலையை பெற்றுக்கொள்கிறது. இதனை உருவாக்கித்தரும், இதன் உருவாக்கக் கூறுகளை அடையாளம் காட்டித்தரும் இயந்திரமாகச் செயல்படுகின்றவையே அவ்வக்கால கலைவடிவங்கள்.

‘உடல் என்பது எதன் குறியீடு’ என்ற கேள்வியைச் சற்றே  ஒத்திவைத்துவிட்டு உடல் என்பதை எத்தனை வகைக் குறியீட்டுச் செயல்களாகப் பெருக்கலாம் என்றும் உடல்நிலை கடந்த எத்தனை வகை குறியீட்டு நிலைகளை நாம் நிகழ்த்திப் பார்க்கலாம் என்றும் சொல்லித்தருபவை கலை-இலக்கியச் செயல்பாடுகள். இந்தக் குறியீட்டு நிலை பற்றிய உணா்தலோ, அறிதலோ, பிரக்ஞையோ இல்லாத கலை-இலக்கிச்செயல்பாடுகள் எந்த ஒரு சமூகத்திற்கும் அடையாளம் சார்ந்த பெரும் சிதைவுகளையும் இன இருப்பு சார்ந்த கொடுங்கேடுகளையும் கொண்டுவந்து சேர்க்கின்றன.

தன் சமூகத்திற்கான பொதுஅறம் எது, தன்னை இயக்கும் அழகியல் எது, தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கான உளவியல் கட்டமைப்பு எது என்பதை அறியமுடியாத தன்மை கொண்ட சமூக மனிதர்கள் உருவாகக் குறியீட்டு நிலை அழிந்த பொது உளவியல் காரணமாகிறது. இதனைத் தமிழ்த்திரை எவ்வாறு உருவாக்கி வருகிறது, இதற்கான காட்சிநிலை உத்திகளை அது எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பதைப் பற்றியும் சில திரைப்படங்கள் இந்தக் குறியீட்டுநிலைச் சிக்கலை எவ்வாறு கையாண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது.

( திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் நூல் காட்சிப்பிழை வெளியீடு, 2014)

தமிழகத்தில் சாதியின் இயங்கியல் – மு.பு.டெரன்ஸ் சாமுவேல்

தமிழகத்தில் சாதியின் இயங்கியல்[1]

 – மு.பு.டெரன்ஸ் சாமுவேல்

ஒவ்வொரு காலச் சூழலிலும் சாதி என்ற புனைவுக் கருத்து அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்ற விதத்தில் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் சற்றுத் தீவிரமாகவே உணர முடிகிறது. மாறும் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ற விதமாக சாதியம் தன்னை சடங்கு, சட்டம், புனைவுகள், பண்பாட்டுக் கூறுகள், சமூக-அரசியல்-பொருளாதாரம் போன்ற அனைத்து நிலைகளிலும் தன்னை மறுவரையறை செய்து தன்னைத் தொடர்ந்து தக்கவைத்தும், கறார்படுத்தியும் வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான நேரங்களில் ஒரு சாதி தனது மீதான தீட்டு முத்திரையை ஏற்க மறுக்கும் அதே வேளையில், பிற சாதிகளை தீண்டத்தகாதவை என அறுதியிட்டுக் கூறத் தயாராக இருப்பதை வரலாறு நெடுகிலும் நாம் காண முடியும்[2]. ஆக, சாதி என்பது ஒரு சமூகத்தின் அதிகார உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு கருத்தியலாக தொடர்ந்து பொருள்கொள்ளப்பட்டும், மறுபொருள்கோடல் செய்யப்பட்டும் வருவதை அவதானிக்க முடிகிறது. ஃபூக்கோவின் அதிகாரம் என்ற சொல்லாடலை முன்வைத்துச் சொல்லுவோமானால், ஒரு குழுவின் மேலாதிக்கம் அல்லது எதிர்ப்பு/போராட்டம் என்னும் அதிகாரச் செயல்பாட்டிற்கான இயங்கியல் தளமாக சாதி செயல்பட்டு வருவதையும் நாம் உணர முடிகிறது. இவ்வகைப் போரட்டங்கள் பெரும்பாலான நேரங்களில் புரட்சிகளுக்கு வித்திடுவதில்லை; பெரும்பாலும் அவை மேலதிகார ஒழுங்கினால் மெதுவாகக் கிரகிக்கப் படுகின்றன அல்லது கடைசியாக விளிம்பு நிலைப் படுத்தப் படுகின்றன என ராஜ் சேகர் பாசு குறிப்பிடுகிறார் (RSB 2011: liv).

மேலும், சாதி என்பது பொருளாதார மற்றும் அரசியல் போட்டிக்கான அடித்தளமாகச் செயல்படுகிறது; தெளிவான எடுத்துரைப்பற்ற விருப்பக் குழுக்கள் (interest groups) இல்லாத சூழலில் அது ஜனநாயகத்திற்கான ஒருவித மேம்படுத்தப்பட்ட உள்கட்டுமானமாக, ஜனநாயகத்தை ஜனநாயகப் படுத்துவதாகவும் அமைகிறது என்று செலிக் ஹாரிசன் கூறுகிறார் (RSB 2011: xx). இந்தவிதப் புரிதல் நவீன காலத்திற்குச் சற்றுப் பொருத்தமாக அமைந்தாலும், முன்-நவீன கால விவசாயச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் மாறுபட்ட புரிதலும் அவசியமானதாகத் தோன்றுகிறது. நவீன காலத்திற்கும் முன்-நவீன காலத்திற்குமான நீட்சி முற்றிலும் தொடர்பற்றது[3] என்று கூற முடியாதபோது, முன்-நவீன மற்றும் நவீன காலங்களுக்கு இடையேயான சாதியின் இயங்கியல் தொடர்பைப் புரிவதும் அவசியமானதாகிறது.

விவசாயச் சமூகத்தில் சாதியின் இயங்கியல் குறித்து தர்ம குமார் கூறும்போது, விவசாயத் தொழிலாளியின் சமூக மற்றும் பொருளாதாரச் சேதாரங்களை உறுதி செய்வதோடு மட்டுமின்றி, அவர்களுக்குப் பொருளாதார ரீதியான சில உரிமைகளையும், மற்றும் பிறவற்றில் சமூக மற்றும் சடங்காச்சார ரீதியான உரிமைகளையும் சாதி வழங்குகிறது. ஆனால் அவ்வித உரிமைகள் எவ்வித சாரமும் அற்றவை என்கிறார் (DK 1992: 32).ஆக, முன்-நவீன காலத்தில், நிலம், பொருளாதாரம், பண்பாடு, சடங்குத்தன்மை ஆகிய தளங்களின் ஒன்றிணைப்புடன் சாதிச்செயல்பட்டு வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்தியச் சூழலில் விவசாய அடிமை முறை என்பதை ஐரோப்பிய அனுபவங்களைக் கொண்டு புரிந்துணர முடியாது, ஏனெனில் இங்கு அது சாதியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது என அவர் மேலும் கூறுவார் (DK 1992: 34).    இந்தச் சாதி அமைப்பிற்கான கருத்தியல் ஆதாரமாக ‘ஹிந்துப்’ புனித நூல்கள் அமைகின்றன என்றாலும், ‘ஹிந்துச்’ சமூகத்தின் மூலைக்கல்லாக சாதி அமைகிறது என்றாலும், நடைமுறையில் அதன் செயல்பாட்டுத் தளத்தில் நாம் வேறுபாடுகளை உணர முடியும்.

நவீன காலத்தில் சாதியின் இயங்கியல் குறித்தும், தேசியவாத காலச் சூழலில் சாதியின் இயங்கியல் மற்றும் அரசியல்குறித்தும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் உண்டு எனினும், இக்கட்டுரையில் முன்-நவீன காலம் மற்றும் நவீன காலம் இவற்றின் தொடர்ச்சியாக, 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் சாதி எவ்வாறு உருமாறி/தகவமைத்து இயக்கம் பெற்று வந்துள்ளது; அந்த இயங்கியலில் தீண்டாமையும் தீண்டத்தகாதோரும் எவ்வாறு வரையறுக்கப் பட்டனர் என்பது குறித்து ராஜ் சேகர் பாசுவின் எழுத்துக்களை முன்வைத்தும், பிற சமூகவியல், சமூக-வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் எழுத்துகளை முன்வைத்தும் இக்கட்டுரையில் புரிந்துணர முயற்சிக்கலாம்.

நிலம், உழைப்பு, சாதி

       வரலாற்றியலாளர்கள் நிலப்பரப்பை முன்வைத்து சாதியின் இயங்கியலில் உள்ள மாற்றங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.குறிப்பாக, ஈர நிலப்பகுதி மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் நிலவிய சாதியத்தை அவர்கள் வேறுபடுத்திக் காட்டுகின்றனர். வேறுபட்ட சுற்றுச்சூழல்-பண்பாட்டுப் பகுதிகளில் – அதாவது பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, தாமிரபரணி ஆற்றுப் பாசனப் பகுதிகளான ஒருபுறமும், இப்பகுதிகளுக்கு இடைப்பட்ட பரந்த சமவெளி மற்றும் வறண்ட நிலப்பகுதிகள் மறுபுறமுமாக – உழைப்பு ஒருங்கமைப்பு, சமூக படிநிலை, பண்பாட்டு மதிப்புகள் மாறுபட்டு நிலவியதை அவதானிக்க முடிகிறது.

பரந்த காடு மற்றும் மேட்டுப் பகுதிகளில், பாசனத்திற்கான நீர்வசதி மிகக் குறைவே ஆனதால், எந்த ஒரு தனி சாதியும்/சாதித் தொகுப்பும் நிலம் மற்றும் உழைப்பு ஒழுங்கமைப்பு மீதான தனது முழுக்கட்டுப்பாட்டைக் கொள்ள முடியவில்லை. அதனால், கறாரான சமூக படிநிலை அமைப்பும் சாத்தியப்படவில்லை.இந்தப் பகுதிகளில் சிதறி வாழ்ந்த பிராமணர்களின் வர்ணக் கருத்தியலும் சில குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்துவதாயிற்று. வறண்ட நிலப்பகுதிகளின் பண்பாடு மற்றும் மதத்திற்கும், வேத மற்றும் பிராமணிய கடவுளர்களுக்கும் மதிப்புகளுக்குமான தொடர்பு மிகச் சொற்பமே என அலாய்சியஸ் கூறுகிறார் (GA 1998: 27).

ஆனால், முக்கியமான சுற்றுச் சூழல் காரணியான பாசனத்திற்கான நீரின் இருப்பு தேவையான அளவுக்கு இருந்ததால், பல்லவ-சோழ காலம் தொட்டே, ஆற்றுப்பாசனப் பகுதிகள் ஒப்பீட்டளவில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகவும், அதிகமாக சாகுபடிக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் இருந்து வந்துள்ளன; இதற்கு இடைபட்ட காடுகள் மற்றும் மேட்டுப் பகுதிகள் மக்கள் நெருக்கம் குறைந்தவையாகவும், குறைந்த அளவில் ஆங்காங்கே பயிரிடப் பட்டவையாகவும் இருந்தன. பிரம்மதேயங்கள், பெரியநாடுகள் என்று வெகுஜன ரீதியில் அழைக்கப்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில், பிராமண-வெள்ளாள சமூகங்களின் அதிகார வரம்புக்குள் சாதிச் சமூகங்கள் உருவாயின. இந்த ஈரநிலப் பகுதிகளில், அதிகாரக் கட்டமைப்புக்கான அடிப்படைகளாக சாதி/பிறப்பும் இருந்தன (RSB 2011: 26 – 8).

இந்தப் பகுதிகளில் மிராசிதார்[4] எனப்படும் காணியாட்சிக்காரர்களின் வசத்தில் ஒட்டுமொத்த நில உடைமையும் இருந்தது.திருச்சிராப்பள்ளியில் பிராமணர்கள் மிராசிதார்களாக இருப்பதாக தனது 1819ம் ஆண்டைய அறிக்கையில் திருச்சிராப்பள்ளி ஆட்சியர் குறிப்பிடுகிறார் (RSB 2011: 12).அவர்களின் நிலத்தைப் பயிரிடும் பணி பள்ளர்கள் மற்றும் பரக்குடிகளிடம்[5] இருந்தது.வட்டார வழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப நில மற்றும் வருவாய் மேலாண்மை இருப்பினும், நிலத்தைப் பயிரிடும் பணி பண்ணை முறை, வரம் முறை, ஒத்தி முறை ஆகிய மூன்று முறைகளில் மேற்கொள்ளப் பட்டது. தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி பகுதிகளில் நடைமுறையில் இருந்த பண்ணை முறையில், தினக்கூலி அடிப்படையில் பண்ணையாள்களின் உதவியுடன் மிராசிதார்கள் நிலத்தை பயிரிட்டனர்.நில உடைமையாளர்கள் பண்ணையாள்களை மேற்பார்வையிடும் பணியை மட்டும் செய்தனர்.களத்துச் சேற்றில் கைவைக்காமலிருப்பது என்பது உயர்தகுதியின் அடையாளமாக மாறியது.ஆக, உழைப்பு என்பது பாசன விவசாயத்தின் பண்பாட்டுப் பொருளாதாரத்தில் இழிநிலை அடைந்தது.இந்தஇழிநிலை கோவில்கள், விளைநிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைகள் போன்ற பொதுத் தளங்களிலும் பிரதிபலித்தது. இவ்வகை சடங்காச்சார தீட்டு ஒருபுறம் நில உடைமையாளர்கள் கள வேலைகளில் இருந்து தப்பிப்பதற்கும், மறுபுறம் விவசாயக் கூலிகளின் சமூகப் பொருளாதார இயக்கத்தை தடை செய்வதாகவும் மாறியது என டேவிட் லுட்டன் குறிப்பிடுகிறார்[6] (DL 1989: 91). 1819ல் வருவாய் வாரியத்துக்கு அளித்த அறிக்கையில் திருச்சிராப்பள்ளி ஆட்சியாளர், சி.எம்.லுஷிங்டன் என்பவர் பிராமண மிராசிதார்கள் குறித்து இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.இதையொத்த 1819-ம் ஆண்டைய மற்றொரு அறிக்கையில், தஞ்சாவூரின் ஆட்சியாளரான ஜெ. ஹெப்பர்ன் என்பவர், “பிராமணர்கள் தங்களின் சாதியைக் கருத்திற்கொண்டு, அடிமைகளை (பள்ளர், பறையர் என்ற இரு சாதிகளைச் சேர்ந்தவர்கள்) தங்களின் பெயரில் நேரடியாகப் பெறுவதில்லை, ஆனால் தங்களின் சில சூத்திர சார்பாளர்களின் பெயரைக் கொண்டு பெறுகின்றனர் எனத் தெரிவிக்கிறார் (RSB 2011: 11, 12).இங்கு ஒரு மூன்றடுக்கு சாதிய உருவாக்கத்தை அவதானிக்க முடிகிறது.ஆக ஈரவிளைநிலப் பகுதிகளில், பொருள்வகையிலும், சடங்காச்சார ரீதியிலும் மிகப் பிளவுபட்ட ஒரு சமூக படிநிலை அமைப்பு உருவாகியது. பேக்கர் இது குறித்துக் கூறும்போது, “நில உடைமையில் இருந்து உயர்சாதியினரால் அப்புறப்படுத்தப்பட்ட வட்டாரவாசிகளும், குடிபெயர்ந்தவர்களும், பாதுகாப்பான உணவு விநியோகம் உத்திரவாதப் படுத்தப்பட்ட வளமையான நிலங்கள் உள்ள ஆற்றுப்படுகைகளில் வாழத் தொடர்ந்து ஈர்க்கப்பட்டனர் (இதற்கு மாற்றுவழி சமவெளிகளின் கொடிய காலநிலையில் ஒரு சுதந்திரமான இருத்தலை எதிர்கொள்ளுதல்). பிராமணர்களும் வெள்ளாளர்களும் இவ்வாறு பயிரிடும் வேலையை பிறர்க்கு ஒப்படைத்துவிட்டு தங்களை அதிகமான பண்பாட்டு தொடர்பினைகளுக்கு ஈடுபடுத்திக் கொண்டனர். மேலும் அவர்கள் நிலத்தை உடைமையாகக் கொண்டவர்களுக்கும் அதில் வேலை பார்த்தவர்களுக்கும் இடையேயான பெருத்த சமூக மற்றும் பண்பாட்டு வேறுபாடுகளை அழுத்திப் பிடிக்க முற்பட்டனர்” என்பார் (CJB 1984: 29).

இந்தவித கொத்தடிமைத்தனத்திற்கு மக்களில் ஒரு பகுதியினர் உள்ளாதற்கான காரணங்களாக போர்களில் தோல்வி, மலை சார்ந்து வாழ்ந்த மக்கள்கூட்டம் நிலப்பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தமை (DL 1989: 91), கடன் ஒப்பந்தங்கள், முன்பணம் பெறுதல், விதை மற்றும் விவசாயக் கருவிகளுக்காக மிராசுதர்களை சார்ந்திருத்தல், காலநிலை பொய்த்தல், எழுத்தறிவின்மை (RSB 2011: xxvii, xxxi, xlvi,49-50, 67, 78) போன்ற பல காரணங்களை வரலாற்றியலாளர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் புலையர் விவசாயத் தொழிலாளர்களைக் குறித்துப் பேசும்போது, தங்களது வாழ்வாதாரத்துக்காக அவர்கள் பிராமண நில உடைமையாளர்களைச் சார்ந்து இருந்தது, அவர்களை கொத்தடிமைத் தனத்துக்குத் தள்ளியது என்பார் (RSB 2011: xxxi). 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கொங்குநாடு பகுதியில் உழைக்கும் மக்களிடம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தை ஆய்ந்த குன்னெல் செடெர்லாஃப், வளர்ச்சிக்கும் கொத்தடிமைத்தனத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக குறிப்பிடுகிறார் (RSB 2011: xxx)[7].

ஆனால், விஜயநகர-நாயக்கர் ஆட்சியில் தொடர்ந்து நடந்த போர்கள் பல்தொழில் விருத்திக்கு வித்திட்டன.உடல் வலிமை, உழைப்புத் திறன் மற்றும் திடம் போன்ற மதிப்புகள் போற்றப் பட்டன.பிரம்மதேயங்களும் பெரியநாடுகளும் போரிடும் குழுக்களால் எதிர்க்கப்பட்டன.அதனால், ஆற்றுப்படுக்கைப் பகுதிகளின் மேலாதிக்கக் குழுக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக சமவெளிப் பகுதி மக்களை சார்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. மேலும் போர்க்குழுத் தலைவர்களும்அவர்களது அரசாட்சி முறையும், நிலத்தைக் கையகம் கொண்ட மேற்சாதியினரைச் சாராமல், கைவினைத் தொழிலாளர்கள்,வணிகர்கள் மற்றும் உழைக்கும் ‘அடித்தளச்’ சாதிகளைச் சார்ந்திருந்தனர். இது அரசியல் பொருளாதாரத் தளத்தோடு நின்றுவிடாமல், பண்பாடு மற்றும் வெகுசனசமய நம்பிக்கைகளையும் பாதித்தது என்றும் பர்ட்டன் ஸ்டெயின் குறிப்பிடுகிறார்[8](RSB 2011: 28 – 33).விஜயநகர ஆட்சியில் ஏற்பட்ட பல்தொழில் விரிவாக்கம் ஐரோப்பியக் கம்பெனிகளின் நடவடிக்கைகளால் உலகமய வணிகம் மற்றும் வியாபாரத்தோடு ஒருங்கிணைக்கப் பட்டன[9]. 18ம் நூற்றாண்டில் நல்ல அறுவடைக் காலங்களில் மாத சராசரி சம்பளம் 200 பவுண்டுகளாக இருந்தன; இது 19ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் 120 பவுண்டுகளாக மட்டுமே இருந்தது என்று டேவிட் வாஷ்புருக் மதிப்பிடுகிறார். தொடர்ந்து அவர் கூறும் போது, பண்டைய காலத்தின் சமூக ஒழுங்கின் மிக அடித்தளத்தில் இருந்த குழுக்களுக்கு, இந்தக் காலகட்டம் அரிய வாய்ப்புகளை அளித்தது என்பார் (DW 1993: 69 – 79). இந்தத் தொழில் பெருக்கத்தின் ஒட்டுமொத்தப் பலனின் வெளிப்பாடாக ஒருவித சமத்துவக் கருத்தியல் அமைப்பு உருவானது என்பார் பாசு (RSB 2011: 32).இதற்கு அடுத்த நிலையில், 1780 – 1820 வரையான இங்கிலாந்தின் தொழிற்புரட்சி இந்தியாவில் நெசவு மற்றும் கைத்தொழில்களை நசித்தது.இதையொட்டி இத்தொழில்களில் ஈடுபட்டிருந்த ‘தீண்டத்தகாத’ மக்கள் வறுமைப்பட்டனர்.

1805-ல் அரசியல் கலகங்கள் முடிவுக்கு வந்தபின் இந்தியா குறித்த பிரிட்டிஷாரின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.விவசாயத்திற்குள் தனிநபர் மூலதனத்தைப் பெருக்க விரும்பியது. எனவே மைசூர்ப் படையெடுப்புக்கு முன், சிறப்புச்சலுகைகள் கொண்டிருந்த மக்கள்குழுக்களின் அதிகாரத்தையும், நிலைப்பாட்டையும் கம்பெனி ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தியது.கம்பெனி அலுவலர்கள் மிராசிதார் அமைப்பை ஒட்டிய அமைப்புடைய ரையாத்வாரி முறையை அமல்படுத்தினர்.இதையொட்டி கம்பெனிக்கும் மிராசிதார்களுக்கும் இடையிலான உரையாடல் துவங்கியது.இதையொட்டி, கீழ்நிலைச் சாதிகளைச் சார்ந்த மக்கள் வெவ்வேறு வகையான விவசாயக் கொத்தடிமைத் தனத்துக்குள் நுழைந்தனர்.இந்த நிகழ்வை ‘விவசாயிகளாக்குதல்’ என அலாய்சியஸ் விளக்குகிறார். தொடர்ந்து கூறும்போது, இந்த ‘விவசாயிகளாக்குதல்’ என்ற நிகழ்வை பிராமணிய பண்பாட்டு மதிப்புகளுடன் கூடிய படிநிலைப்படுத்தப்பட்ட பள்ளத்தாக்கு விவசாய சமூக அமைப்பை அதிகாரப்பூர்வமாக்கிய சூழலுடன் சேர்த்துப் புரிய வேண்டும் என்றும் கூறுகிறார் (GA 1998: 38).

முதலில் காணியாட்சிக்காரர்களுக்குச் சாதகமாகவே வருவாய் வாரியம் செயல்பட்டது.1850-களில் முன்றோவின் கொள்கை தனிநபர் சொத்து உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. சொத்து உடைமைக்கான சமூகக் கட்டுப்பாடுகள் தனிச் சொத்து உடைமை கோருவதில் பல்வேறு குழுக்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்தின. கிராமப்புறத்தின் ஆதிக்கக் குழுக்கள் தீண்டத்தகாதவர் எனச் சொல்லப்பட்ட மக்களின் பொருளாதாரச் சார்புநிலை மற்றும் சடங்காச்சாரமான கடைநிலைத் தகுதி இவற்றைக் கொண்டு நிலத்தைத் தங்கள் வசத்தில் கொண்டனர். மறுபுறத்தில், விவசாய முறைமையின் சிக்கல்களை கணக்கிற்கொண்டு, சொந்த மக்களின் சமூக அமைப்பு குறித்த அறிவை வளர்க்க விரும்பினர்.இந்தத் திட்டத்தின் ஊடாக சொந்தச் சமூகத்தினுள் செயல்படும் கீழ்நிலையாக்கம் மற்றும் மேல்நிலையாக்கம் போன்ற கருத்துகள் முன்னிடம் பெற்றன. இதனோடு இணைந்த நிகழ்வாக, சொந்த மக்களின் சமூக அமைப்பு குறித்த அறிவுக்காக பிரிட்டிஷாரின் பிராமணர்கள் மீதான அதிகப்படியான சார்பு, வர்ணம்/சாதி குறித்த பிராமணிய கருத்துகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஆற்றுப் பாசனப் பகுதிகளில் இந்தவித பிராமணியம் சார்ந்த கறாரான கீழ்நிலையாக்கம்/ மேல்நிலையாக்கம் குறித்த கருத்துகள் வறண்ட நிலப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டது (RSB 2011: 51 – 2).

நிலம் சார்ந்த சாதிய உருவாக்கத்தில், பிரிட்டிஷாரின் ஆட்சியில் நிகழ்ந்த தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், கிராமநத்தம் நிலங்கள், இனாம் நிலங்களின் பகிர்வையும் குறிப்பிட்டாக வேண்டும். புறம்போக்கு நிலங்களின் மீதான மிராசிகளின் உரிமை கோரல் பல இடங்களில், குறிப்பாக தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், எதிர்க்கப்பட்டன. 1839-ல் புறம்போக்கு நிலங்களை விற்க மிராசிகளுக்கு உரிமை இல்லை என்றும், தரிசு நிலங்களில் பயிரிடுவதற்கு பாயக்காரிகள் அல்லது பரக்குடிகள் சிறந்த கட்டணம் கொடுத்தாலும், காணியாட்சிக் காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இத்தகு முடிவுகளையும் மீறி பாயக்காரிகள் தரிசு நிலங்களை பயிரிடுவதற்க்கு உகந்ததாகப் பயன்படுத்தினர்.தரிசு நிலங்களை விளைநிலமாக்குவதால் குத்தகைதாரர்களும் அடிமைகளும் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆவதை உணர்ந்த மிராசிதார்கள், அவர்களுக்கு தரிசுப் புறம்போக்கு நிலங்களை பகிர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கீழ்நிலைப் படுத்தப்பட்ட சாதி மக்கள் தரிசு நிலத்தை பெற்றுப் பயிரிடுவதற்கு எந்தவித சட்டப்பூர்வத் தடையும் இல்லை எனப் பிரிட்டிஷ் அலுவலர்கள் தெரிவித்தாலும், 1890-களில் செங்கல்பட்டு ஆட்சியர் அளித்த அறிக்கையில் பிற வகுப்பினரைப்போல பறையர்கள் தரிசு நிலத்தைப் பெற முடியவில்லை என்று தெரிவிக்கிறார். மேலும் மிராசிதாரர்களிடம் மட்டுமல்லாமல், உள்குடிகள் என்று அழைக்கப்பட்ட மிராசிதார்-அல்லாத பட்டாதாரர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது என்பதும் குறிப்பிடத் தக்கது.இந்த நிலை மாகாணம் முழுவதும் காணப்பட்டது.1870 மற்றும் 1880-களில் தரிசு நிலத்தைப் பெற விண்ணப்பிக்கும்போது இந்த இரு ஆதிக்கப் பிரிவினரும், முந்தைய விவசாய அடிமைசாதிகளை காலிசெய்து விடுவதாக மிரட்டியும் வந்தனர். இவ்வாறு தொடர்ந்து பறையர்களை நிலத்தில் இருந்து அந்நியப்படுத்தியதன் மூலம் அவர்கள் நிலச்சுவான்தார்களின் கீழ் ஒருவித கொத்தடிமைத் தனத்திற்குள்ளாகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் (RSB 2011: 41 – 2, 58, 66).

1870-ல் கிராமநத்தம் நிலங்களை பட்டதார்-அல்லாதார்க்கான வீட்டுமனை உபயோகத்திற்காகப் பயன்படுத்துவது குறித்து வருவாய் வாரியம் மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்துக் கோரியது. ஆட்சியர்களிடம் இருந்து மாறுபட்ட கருத்துகள் வந்ததால், அரசாங்கம் கிராமவாசிகள் மற்றும் பட்டாதார்களின் விருப்பங்களைப் பாதுகாக்கும் விதத்தில் ஒரு பாதுகாப்பான முறையைக் கையாள முயன்றது. அதாவது, மிராசிக் கிராமங்களில் மிராசிதார்கள் மட்டுமே கிராமநத்தம் மற்றும் தரிசு நிலங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டவர்கள் என்றும் கிராமநத்தம் நிலங்கள் பகிர்வு என்பது மரபு மற்றும் வட்டார வழக்கங்களை ஒட்டியே நடைபெற வேண்டும் என்றும் கருத்து கொண்டது. பறையர்களை பண்டைய காலம் தொட்டே தாங்கள் கொத்தடிமைகளாகக் கொண்டுள்ளதாகவும், அவர்கள் வசிக்கும் சேரிநத்தம் மீது தங்களுக்கே முழு உரிமையும் உண்டு என்றும் என்றும் தெரிவித்தனர். வருவாய் வாரியமும், 1840-களில் நடைமுறைப் படுத்தப்பட்ட அடிமை முறை ஒழிப்புச் சட்டங்கள் மூலம் பறையர்கள் பண்ணைக் கூலிகளாகக் கருதப் படமுடியாது என்று தெரிவித்தது.இந்நிலையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட அடிமை முறை ஒழிப்புச் சட்டங்கள் விவசாயத் தொழிலாளர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது என்று கூறவும் வாய்ப்பு உண்டு (RSB 2011: 55 – 7).

நற்செய்தி/நற்செய்திப் பணியாளர்கள், கல்வி, அந்தஸ்து, சாதி

       கிறித்தவ நற்செய்திப் பணி என்பது இடைக்காலம் தொட்டே, குறிப்பாக 16-ம் நூற்றாண்டில் இருந்தே இந்தியாவில் நடைபெற்று வந்தது என்றாலும், நவீன காலத்தில், குறிப்பாக 19-ம் நூற்றாண்டில், ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் சாதியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது. இந்த விழிப்புணர்வுக்கு ஐரோப்பிய நற்செய்திப் பணியாளர்களே காரணம் என்று முழுவதுமாகக் கூறமுடியாது; பொருளாதார நிலைமாற்றங்கள், ஓர்மைக்குள்ளாகி வந்த நிர்வாக அமைப்பு, அறிவொளிக்கால சிந்தனைத் தாக்கம், சமூக அமைப்பில் மாறுபாடுகள், தொழில் வளர்ச்சியின் அடிப்படையில் நடைபெற்ற இடப்பெயர்ச்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் போன்றவற்றுக்கு இடையில் ஐரோப்பிய நற்செய்திப் பணியாளர்களின் இடையீடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பகுதியில் நற்செய்திப்பணி மற்றும் பணியாளர்கள், மிகக் குறிப்பாக சீர்திருத்த சபை சார்ந்த நற்செய்திப்பணியும் பணியாளர்களும் எந்தவித சமூக அசைவை உருவாக்கின/ர் என்பது குறித்து காணலாம்.

       19-ம் நூற்றாண்டின் முற்பகுதி தொடங்கி, நற்செய்திப் பணியாளர்கள் எழுதிய நூல் மற்றும் குறிப்புகளில், அடிமைமுறை என்பது ஹிந்து மதத்தின் சாதிய முறையோடு பொருந்தி அதிகப்படியான மக்களின் சுரண்டலுக்கு காரணமாக இருக்கிறது; இதுவே அம்மக்களை தீண்டத்தகாதவர்கள் என்ற புனைவின் அடிப்படையில் இழிவுபடுத்துகிறது; இழிநிலைக்கு உள்ளாக்குகிறது என்ற மதிப்பீட்டை வைக்கின்றனர்[10]. இந்த மதிப்பீட்டிற்குப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட விதமான சமூகச் செயல்திட்டம் இருந்தது எனினும், நற்செய்திப் பணியாளர்களின் மதச் செயல்பாடே மேலோங்கி இருந்தது என்பதை தெளிவாக உணரமுடிகிறது. கிறித்தவ அறமும் ஒழுக்கமும் ‘தீண்டத்தகாதோரின்’ மனவொழுக்கத்தை மாற்றியமைக்க வல்லது; கிறித்தவ மயமாதலே அவர்களின் சமூகநிலையை உயர்த்தமுடியும் என்ற மதவாத அடிப்படையிலேயே நற்செய்திப் பணியாளர்களின் புரிதல் அமைந்திருந்தது (RSB 2011: 86 – 7, 90).இன்னும் சரியாகச் சொல்வோமானால், நற்செய்திப் பணியாளர்களின் சமூக சேவை என்பது மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது; அது ஒரு மதச் செயல்திட்டத்தின்/செயல்பாட்டின் ஒரு பகுதியே தவிர, அவர்களின் புரிதல் சமூக-அரசியல் மாற்றத்தினை மட்டுமே அடிப்படையாய்க் கொண்ட ஒரு செயல்திட்டம்/வேலைத்திட்டம் அல்ல.

மறுபுறம், நற்செய்திப் பணியாளர்களின் சாதியம் குறித்த இத்தகைய புரிதல்களும் எழுத்துகளும், சாதியை/வர்ண முறையை புகழ்ந்து பேசிய ஒருகூட்ட ஐரோப்பிய அறிவுஜீவிகளுக்கு எதிர்-உரையாடலாக அமைந்தது; சாதியத்தின் கொடிய முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர உதவியது. சாதியம், அது சார்ந்த அடிமைமுறை குறித்த நற்செய்திப் பணியாளர்களின் தொடர்ந்த இடையீடுகளுக்குப் பின், சில சட்டங்களை இயற்றுவது குறித்து கம்பெனி நிர்வாகம் யோசிக்க முன்வந்தது; அதன் தொடர்ச்சியாக, 1843-ல் அடிமைமுறை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் ஊடாகக் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், அரசு மற்றும் நில உடைமையாளர்களுக்கும்நற்செய்திப் பணியாளர்களுக்கும் இடையில் சாதி குறித்த புரிந்துணர்வில் ஏற்பட்ட மோதல் போக்குகள் ஆகும். தஞ்சாவூரை மையமாகக் கொண்ட நற்செய்திப் பணியாளர்கள் இந்தியச் சமூக மற்றும் மதம் சார்ந்த பழக்கவழக்கங்களில் இடையீடு நிகழ்த்த வேண்டும் என்று குரலெழுப்பியபோது, அவர்களைப் பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் இந்த விஷயங்களைக் கையாளுமாறு கம்பெனி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. சார்நிலை அரசு அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான மனோபாவங்கள், நற்செய்தியளர்களை இயங்கவிடாமல் தடுத்தது.‘தீண்டத்தகாத’ சமூகங்களை நில உடைமையாளர்கள் சார்நிலைப்படுத்தும் செயல், கொத்தடிமைத்தனத்தை ஒத்தது என்ற நற்செய்திப் பணியாளர்களின் கருத்துகளை அரசு ஏற்க மறுத்தது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நில உடைமையாக்கம் செய்து தரப்பட வேண்டும் என்ற நற்செய்திப் பணியாளர்களின் கோரிக்கைகளை, இச்செயல்பாடு நிதிநெருக்கடிக்கு வித்திடும்; எனவே கல்வியின் மூலம் பறையர்கள் மிகுந்த பலன் அடைவார்கள்என்று கூறி அரசு நிராகரித்தது (RSB 2011: 103 – 5, 108 – 9).

       ஆனாலும், நற்செய்திப் பணியாளர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் ‘தீண்டத்தகாதவர்’ என்று எண்ணப்பட்ட பறையர், பள்ளர், நாடார் சாதி மக்களிடையே அதிக நம்பிக்கையை 19-ம் நூற்றாண்டில் கொடுத்தது. இதனால் திருச்சபையின் வளர்ச்சி ஒருபுறம் பெருகியது மட்டுமல்லாமல் திருநெல்வேலி மற்றும் தென் திருவாங்கூர் பகுதிகளில் சுவிஷேசபுரம், கடாட்சபுரம், நல்லூர் போன்ற கிறித்தவக் குடியிருப்புகள் உருவாயின. சாதி இந்துக்களின் எதிர்ப்பை முறியடிக்க, மதம் மாறியவர்களுக்கென விவசாயக் குடியிருப்பை கிறித்தவ மிஷனெரி சங்கம் திருச்சிராப்பள்ளியில் உருவாக்கியது; செங்கல்பட்டின் பல பகுதிகளில் அந்திரேயாபுரம், மேல்ரோசாபுரம் போன்ற கிறித்தவக் குடியிருப்புகளை ஸ்காட்டிஷ் நற்செய்திப் பணியாளர்கள் உருவாக்கினர். குறிப்பாக, 72 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேல்ரோசாபுரம் குடியிருப்பில், வாழை மரத்திலிருந்து நார் தயாரித்து கயிறு திரிக்கும் தொழில்நுட்பம், நெசவு, சாயமிடுதல், விவசாய முறைகள் போன்றவை ஆண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன.இது போன்ற நற்செய்திப் பணியாளர்களின் செயல்பாடுகள் மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருவித விடுதலை உணர்வையும் நம்பிக்கையையும் கொடுத்தன. மறுபுறம், ‘தீண்டத்தகாத’ சாதிகளில் இருந்து ஒரு பெரிய அளவில் கிறித்தவத்துக்குள் மதமாற்ற நிகழ்வுகள் நடைபெற்றதால், நற்செய்திப் பணியாளர்களும் சாதிக்கு எதிரான ஒரு தீவிரத்தைக் கையாண்டனர்.மேலும் பெரும்பான்மையான நற்செய்திப் பணியாளர்கள் கைவினைஞர் மற்றும் சிறு வணிகர் குடும்பச் சூழலில் இருந்து வந்ததால், அவர்கள் கறாரான மரபு சார்ந்த சமூகப் படிநிலைமீது ஒருவித வெறுப்புணர்வு கொண்டிருந்தனர்[11]; அதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகச் சூழல் மேம்பட அவர்களால் தீவிர ஒத்துழைப்பு கொடுத்தனர். (RSB 2011: 91, 93, 94, 102, 106).

கேரளாவிலும், பிற இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே கிறித்தவம் பரவிய விதம் ஒரு செயல்பாடற்ற நிகழ்வு அல்ல என்று கூறும்சனல் மோகன், மதம் மாறியவர்களிடம் காலம், இடம், சுயம், உடல் குறித்த பார்வையில் ஒரு மாற்றத்தை மதமாற்ற நிகழ்வு ஏற்படுத்தியது என்கிறார்.நற்செய்திப் பணியாளர்களின் தாக்கத்திலும் கட்டுப்பாட்டிலும், வெவ்வேறு நடைமுறைகளைக் கையாண்டு தங்களது சமூக-சுயத்தை மறுவறையறை செய்து கொள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் விருப்பம் காட்டினர் என்கிறார். குறிப்பாக, அவர்களது அன்றாட ஜெபங்கள், பள்ளி மற்றும் திருச்சபைக்குச் சென்று வருதல், நற்செய்திப் பணியாளர்களின் குழுவோடு இணைந்திருத்தல் போன்ற விஷயங்கள், குறைந்த பட்சமாக மதமாற்றத்தின்துவக்க காலங்களில், பெரும்பாலும் சாதி படியமைப்பின்வழி இயக்கம் பெறவில்லை; ஒரு விதத்தில் அவர்களின் காலம், இடம், சுயம், உடல் போன்ற தகைமைகளை மறுவரையறை செய்து கொள்ள உதவின. ஆனாலும் அவர்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அந்தந்தப் பகுதியின் நில உடைமையாளரைச் சார்ந்தே அமைந்ததால், அவர்களின் சமூக-பொருளாதார அந்தஸ்தை பெருமளவில் பாதிக்கவில்லை. நாளடைவில், திருச்சபைக்குள்ளும் சாதிப் பிரிவினைகள் வளர, கிறித்தவத்துக்குள் மதம் மாறிய மக்கள் ஒருவித இரட்டைத் தன்மையோடு வாழ வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர் – அதாவது, சாதிய சடங்கு சம்பிராதயங்களை மீறாத கிறித்தவர்களாகவும், முந்தைய மதத்திற்குள் ஊடுருவி நின்ற பலவித படிநிலைகளை ஒத்துக்கொண்ட ‘கிறித்தவ முகம்’ உடையவர்களாகவும் வாழத் தலைப்பட்டனர். இது ஒருவிதத்தில் ஓர் இருதலைக்கொள்ளி நிலையே[12]. மறுநிலையில், நற்செய்திப் பணியாளர்கள் சொந்த பண்பாட்டுக் கூறுகளை ‘மூடப்பழக்கங்கள்’ என வரையறை செய்ததன் மூலம், மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருவித பண்பாட்டு அந்நியமாதலும் உருவானது[13].

இந்த இடத்தில், திருச்சபைக்குள் சாதி குறித்த நிலைப்பாடு என்னவாயிருந்தது என்ற கேள்வியையும் கேட்டுப் பார்க்க்கலாம்.1830-களில், நற்செய்திப் பணியாளர்களின் பத்திரிக்கைகளான ‘த ஃபிரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘கல்கத்தா கிறிஸ்டியன் அப்சர்வர்’ போன்றவை இந்துச் சாதியமைப்பின் ஒடுக்குதலுக்குள் உழன்று வரும் பறையர்களின் சமூக அந்தஸ்து உயர அரசின் உதவியும் ஆதரவும் தேவை என்றும், தென் இந்தியாவில் நிலவும் அடிமை முறை குறித்து ஒரு தெளிந்த பார்வை அரசுக்கு வேடும் என்றும் எழுதி வந்தன. இந்தவித உரையாடல்கள் தென் இந்திய நற்செய்திப் பணியாளர்களிடம் ஒருவித அறிவார்ந்த பரிமாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக தஞ்சாவூரை மையமாகக் கொண்டு செயல்பட்ட நற்செய்திப் பணியாளர்கள், பிராமணியக் கருத்துருவான சாதி தகர்க்கப்பட வேண்டும் என்று சொல்லிய அதே வேளையில், புதிதாக மதம் மாறியவர்களின் சாதிய நடைமுறைகள் கனிவுடன் அணுகப்பட வேண்டும் என்றும் நினைத்தனர். மறு முனையில், கிறித்தவர்களில் ஓர் எதிர்க்கருத்தினர் (சாதிக் கிறித்தவர்கள்?), ஒழுங்கு மற்றும் தகுதி குறித்த ஐரோப்பியக் கோட்பாடுகளுக்கும் சாதி அடிப்படையிலான இந்திய படிமுறை அமைப்புக்கும் இயல்பின் அடிப்படையில் வித்தியாசம் உண்டு என்றும் சாதி என்பது அதன் பல்வேறு பரிமாணங்களில் ஒரு குடிமை சார்ந்த விஷயமே அன்றி மதம் சம்பந்தப்பட்டது அல்ல என்றும் வாதிட்டனர்[14].

1840-களில் மெட்ராஸின் திருச்சபை அதிகாரிகளுக்கு சாதி என்பது ஒரு புரிய முடியாத விஷயமாகவே இருந்தது.1848ல் மெட்ராஸ் பேராயரும் அவரது சகாக்களும் சாதியக் கொடுமைகளைக் கடிந்து விமர்சித்து ஒரு அறிக்கையைத் தயாரித்தனர். சாதியும் அதன் நடைமுறைகளும் கிறித்துவத்தின் ‘உயர்ந்த’ இலக்குகளுக்கும் குறிக்கோள்களுக்கும் எதிரிடையானவை என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சீர்திருத்த நற்செய்திப் பணியாளர்களும் பிரச்சாரம் செய்தனர். 1850-களில் நடந்த மெட்ராஸ் நற்செய்திப் பணியாளர்கள் மாநாட்டில் நற்செய்திப் பரப்புதலுக்கு சாதி பெரும் தடையாக இருப்பதாகவும், நற்செய்திப் பணியாளர்களில் முன்னோடிகளான சீகன்பால்கு, சுவார்ட்ஸ் போன்றோர் புறசமய பழக்கங்களை கிறித்தவ மதத்திற்குள் அனுமதித்து விட்டதாலேயே தென் இந்திய திருச்சபைகள் ஹிந்து மதத்தின் தீமைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டுவிட்டன என்றும் கருத்து தெரிவித்தனர். பல்வேறு நற்செய்திப்பணி இயக்கங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் சாதிக்கெதிராக கையெழுத்து இட்டு தயாரிக்கப்பட்ட இந்த மாநாட்டின் தீர்மானம் பரந்த வரவேற்பைப் பெற்றதாகவும் சொல்லப் படுகிறது. இந்த முயற்சி சாதிக்கெதிரான பல சபைகளால் ஒத்துக்கொள்ளப்பட்ட கொள்கையை உருவாக்குவதற்கான முதன்முயற்சியாகவும் கொள்ளப் படுகிறது (RSB 2011: 87 – 90). நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, திருச்சபைகளின் சாதி குறித்த இவ்விதமான புரிதல்களும் நடவடிக்கைகளும் மதமாற்றம் என்பதை அடிப்படையாய்க் கொண்டே நிகழ்ந்துள்ளன; அவற்றின் ஊடாக சாதி குறித்த எதிர்வினைகளும் நிகழ்ந்துள்ளனவே தவிர, ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினை அடிப்படையாய்க் கொண்டு நிகழவில்லை; சமூக மாற்றம் என்பது மதமாற்றத்தின்மூலம் மட்டுமே சாத்தியம் என்ற குறைவுபட்ட புரிதலோடே நிகழ்ந்துள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்துக்குள் அதிகளவில் பெயர்ந்ததமை, அதையொட்டி அவர்களுக்குள் ஏற்பட்ட விடுதலை உணர்வுகள் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டோம். இவற்றோடு நற்செய்திப் பணியாளர்களின் சாதியம் குறித்த மேற்கண்ட புரிதல்களும் இணைந்து, பல விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் சமூகச் சூழலில் உருவாக்கின. நற்செய்திப் பணியாளர்கள் சமூகப் பொது நீரோட்டத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட பறையர்கள் மற்றும் நாடார்களோடு நற்செய்திப் பணியாளர்களின் ஈடுபாடு, தமிழ்ச் சமூகத்தில் நிலவிய அந்தஸ்து மற்றும் மதிப்பு குறித்த மதிப்பீடுகளை அசைத்தது; அதனால் தீவிர மோதல்கள் உருவாயின எனலாம். குறிப்பாக, நற்செய்திப் பணியாளர்கள் ‘தீண்டத்தகாத’ மக்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் ஈடுபாட்டில், நாடார்கள் இந்துச் சாதிய முறைக்குள் ஒரு குறிப்பிட்ட மதிப்பைப் பெற்று உயர முடிந்தது. 1830-களில் நடந்த தோள்சீலைப் போராட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

1820-களில் இருந்தே பெண் நற்செய்திப் பணியாளர்களின் தாக்கத்தில், ‘தீண்டத்தகாத சாதிகளின்’ பெண்கள் சமூகத் தீட்டுகளை எதிர்க்கத் தொடங்கினர் என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக ஊனங்களை எதிர்த்தது மட்டுமன்றி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமான வேலைகளை ‘மேற்சாதிகளுக்கு’ செய்ய மறுத்தனர்.1830-களில் பல நற்செய்திப் பணி இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கென பிரத்யேகமான பள்ளிகளை தமிழகமெங்கும் ஆரம்பித்தன[15].பெண்களுக்கான பள்ளிகள், உறைவிடப் பள்ளிகளும் இதில் அடங்கும். லண்டன் நற்செய்திப்பணியாளர் சங்கம் போன்ற இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களை பணக்கார நில உடைமையாளர்கள் மற்றும் மிராசிதார்களின் மேலாதிக்கத்தில் இருந்து விடுவித்ததோடு அல்லாமல் அவர்களுக்கென தொழிற்பயிற்சி பள்ளிகளையும் ஆரம்பித்தன. மேலும், 1876-77ல் ஏற்பட்ட பஞ்சம், கல்வித்துறையில் நற்செய்திப் பணியாளர்களின் ஈடுபாட்டை இன்னும் அதிகரித்தது[16].பஞ்சத்தை ஒட்டி, தொட்டிகள், பறையர்கள், சாணார்கள், குறவர்கள் போன்ற ‘தீண்டத்தகாத’ மக்களுக்காக நடைபெற்ற நற்செய்திப்பணி இயக்கங்களின் நிவாரணப் பணிகள் அந்த இயக்கங்களின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க வைத்தன; இதனால் இந்தச் சாதிகளைச் சேர்ந்த மக்கள் உபதேசியார்களாகவும் பணியமர்த்தப் பட்டனர் (RSB 2011: 91 – 2, 95 – 101). இந்தவித சமூக அசைவுகள் சாதி ஹிந்து நில உடைமையாளர்களின் எதிர்வினைக்கு உள்ளாயின. ஒருபுறம், கிறித்தவத்தைத் தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களும், மறுபுறம் நற்செய்திப் பணியாளர்களும், கிறித்தவப் பரவலும் நில உடைமையாளர்களின் எதிர்வினையால் பாதிப்புக்கு உள்ளாயினர்.

நில உடைமையாளர்கள் நற்செய்திப் பணியாளர்கள் குறித்த பொய்யான வதந்திகளைப் பரப்பி, அவர்களுக்கும் ‘தீண்டத்தகாதவர்களுக்குமான’ உரையாடலை/இயங்கியலைத் தடுத்தனர்; சாதியம் குறித்த மக்கள் இயக்கங்களைத் தொடங்க விடாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது அன்றாடப் பிழைப்புக்காக தங்களைச் சார்ந்திருக்கும்படி செய்தனர். தமிழ் நாட்டின் வெவ்வேறு இடங்களில், ‘நாங்கள் கிறித்தவத்தைத் தழுவ மாட்டோம்’ என ஒப்பந்தம் செய்து தருமாறு பறையர்களை மிராசிதாரர்கள் வற்புறுத்தினர்; அதன்மூலம் தங்களது பொருளாதார மேலாதிக்கத்தைக் கட்டிக்காக்க முடியும் என்று மிராசிதாரர்கள் நம்பினர். இவ்வித எதிர்வினைகள் இளநிலை மற்றும் ஞாயிறு பள்ளிகளில் பறையர் மாணவர்களின் வருகைப்பதிவை மிகவும் பாதித்தது; அவர்களை பள்ளிக்கு வரவிடாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஹிந்து நில உடைமையாளர்களை சார்ந்திருக்கும்படி செய்தது. மறுபுறம், நற்செய்தி இயக்கங்கள் உருவாக்கிய குடியிருப்புகளில் வாழ்ந்த மதம் மாறிய பறையர்கள் தொடர்ந்து மிராசிதாரர்களால் அச்சுறுத்தப்பட்டு வந்தனர்; இழிவுபடுத்தப் பட்டனர்; சில பகுதிகளில் அவர்களின் விவசாய நிலங்களுக்கான நீர் இணைப்பைத் துண்டித்தனர்; பிற வேலை வாய்ப்புகளை அடைவதைத் தடுத்தனர் (RSB 2011: 101 – 6).

முடிவாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.பொருளாதார மேம்பாட்டினால் சாதியை ஒழிக்க முடியும் என்ற ஒரு மேம்போக்கான கருத்து நிலவுகிறது.இக்கருத்து எவ்வளவு உண்மைத் தன்மை கொண்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.ஆனால், வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது இதற்கு மாறான ஒரு நிதர்சனத்தையே நாம் அவதானிக்க முடிகிறது. சாதி என்னும் புனைவுக் கருத்தியல், நாம் ஏற்கனவே குறிப்பிட்டாற்போல, மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்றாற்போல தன்னைத் தகவமைத்துக் கொண்டு புதிய பரிணாமங்களை/அவதாரங்களை எடுத்து தொடர்ந்து நிலைக்கிறது. இந்தத் தகவமைப்பில் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு, நிலப்பகுதி, மொழி, நிறம், பால், இனம், தொழில், பழமை-புதுமை, சடங்கு போன்ற பொருள்-வகைக் கூறுகள் ஒன்றையொன்று மேற்பொதிந்து புனைவுகளைக் கறாராக்குகின்றன.இந்த பொருள்-வகைக் கூறுகளின் இணைவில்/ஊடாட்டத்தில் சாதிய அடையாளங்களும் படிநிலை அதிகாரங்களும் பலப்படுகின்றன. இப்படியிருக்க, பொருளாதார(economical) நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பொருள்-வகை உறவுகளில்(material relations) மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் சாதியத்தை/அடையாளப் புனைவுகளை அணுகுவது ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்குமா என்ற தொடர் விவாதங்களும், சர்ச்சைகளும், சந்தேகங்களும், மறுப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.  மேலே கண்ட விவாதங்களினூடே, நமது அறிவிற்குப் புலப்படும் ஒரு நிலைப்பாடு ஃபனான் கூறியதைப் போல அடையாளப் புனைவுகளும், சமூக-அரசியல்-பொருளாதாரக் காரணிகளும் ஒருசேரத் தொடர்ந்து-சுணக்கமின்றி தாக்க/தகர்க்கப் பட்டாலேயே ஒரு சமத்துவச் சமூக அமைப்பு சாத்தியம் என்ற நிலைப்பாட்டுக்கே நம்மை இட்டுச் செல்கிறது[17].

மேற்கோள்கள்

  1. Raj Sekar Basu, Nandanar’s Children – The Paraiyans’ Tryst with Destiny, Tamil Nadu 1850-1956, Sage Publications India Pvt Ltd., New Delhi, 2011.
  2. Dharma Kumar, Land and Caste in South India: Agricultural Labour in Madras Presidency During the Nineteenth Century, New Delhi, 1992.
  3. G. Aloysius, Religion as Emancipatory Identity: A Buddhist Movement among the Tamils under Colonialism, Oxford University Press, New Delhi, 1998.
  4. David Washbrook, Land and Labour in Late Eighteenth Century South India: The Golden Age of Pariah, in Peter Robb (Ed.), Dalit Movements and the Meaning of Labour in India, Delhi, 1993.
  5. David Ludden, Peasant History in South India, Delhi, 1989.
  6. C. J. Baker, An Indian Rural Economy, 1880 – 1955: The Tamilnad Countryside, Delhi, 1984.
  7. Abbe J.A. Dubois, Hindu Manners, Customs and Ceremonies, Rupa & Co., New Delhi, 2011.


[1]குமரி மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘பேராசிரியர் நா.வானமாமலை கலை இலக்கிய 35-வது முகாமில்’, இந்தக் கட்டுரையின் முதல் பகுதி படிக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டது. இரண்டாம் பகுதியான ‘நற்செய்தி/நற்செய்திப் பணியாளர்கள், கல்வி, அந்தஸ்து, சாதி’, முகாமில் வாசிக்கப்ப்பட்ட பகுதியுடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு இப்பொழுது இங்கு பதிப்பில் வெளி வருகிறது. இந்தக் கட்டுரையின் அச்சுப்பதிப்பு ‘திணை’ இதழில் வெளிவருகிறது.

[2]இராமநாதபுரம் மாவட்டத்தின் வாழ்கிற மாணிக்கம் என்ற கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட இராபர்ட் திலீஜ் என்பவர், ‘தீண்டத்தகாதவர்கள்’ எனப்படுவோர் பிற தாழ்ந்த சாதிகளின் மீது ‘தீண்டாமையைக்’ கடைபிடித்தாலும், அவர்கள் தங்களது தாழ்ந்த நிலையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற முடிவுக்கு வர முடியாது என்று வாதிடுகிறார். (Robert Diliege, The World of ‘Untouchables’: Paraiyars of Tamilnadu, as quoted in Raj Sekar Basu, Nandanar’s Children – The Paraiyans’ Tryst with Destiny, Tamil Nadu 1850-1956, Sage Publications India Pvt Ltd., New Delhi, 2011, p. xlv)

[3]நவீனமும் முன்-நவீனமும் ஒன்றையொன்று மேல்தழுவியே இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இயங்கத் துவங்கியதை நாம் காண முடியும். உதாரணமாக, 16ம் நூற்றாண்ண்டை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இடைக்காலம் என்று சொல்லும்போதும், அந்த நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகை, அதையொட்டி சமூக-அரசியல்-பொருளாதார-பண்பாட்டுத் தளங்களில் நடைபெற ஆரம்பித்த மாறுதல்களை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

[4]மிராசி என்பது பெர்சிய வார்த்தை.அதன் பொருள் உடைமையாக்குதல் என்பதாகும்.இவ்வ்வார்த்தை முகலாயப் படையெடுப்புக்குப் பின் இங்கு புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.இதற்கு இணையாகப் புழங்கிய வட்டார வழக்கு ‘காணி ஆட்சி’ என்பதாகும்.இது சமூகக்குழு அடிப்படையில் அமைந்த விவசாய ஒழுங்கமைப்பு; எனவே தனிநபர் அடிமை அமைப்பில் இருந்து வேறுபட்டது. காணி ஆட்சி என்பது பயிரிடப்படும் நிலத்தின் மீதான உரிமையை மட்டும் குறிப்பதல்ல, ஆனாலக்கிராமத்தின் மொத்த நிலப்பரப்பில் உள்ள தரிசி நிலங்கள், சாலைகள், வீட்டுமனைகள், மேய்விடங்கள் ஆகியவற்றின் மீதான உரிமையையும் குறிக்கும். நிலத்தின் மீது ஒரு சமூகக்குழு உடைமை பாவிப்பதால், காலனிய காலத்தில் நிலவரி அக்குழுவால் இணைந்தே செலுத்தப்பட்டது (மேலும் பார்க்க RSB 2011: xxv-vi, 1, 3, 47, 65-6).

[5]கேத்லீன் கஃப் சுமார் 3 மற்றும் 4-ம் நூற்றாண்டுகளில் இருந்தே பறையர் என்று அழைக்கப்பட்டவர்கள் கிராமத்தின் நிலப்பரப்பு வரம்புக்கு வெளியே வாழ்வதற்காக நிர்பந்திக்கப் பட்டனர்/தள்ளப்பட்டனர் என்று கூறுகிறார். இவ்வாறு கிராமத்துக்குப் புறம்பிலுள்ள வாழிடங்கள் பரச்சேரிகள் என்றும் அங்கு வாழும் மக்கள் பரக்குடிகள் என்றும் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 18-ம், 19-ம் நூற்றாண்டுக் கால கட்டங்களில், இவ்வாறு கிராமத்துக்கு வெளியே வாழ்ந்த பரக்குடிகள் ‘புற விவசாயக்கூலிகள்/குத்தகைதாரர்கள்’ என்றும், உள்குடி என்போர் ‘அக விவசாயக்கூலிகள்/குத்தகைதாரர்கள்’ என்றும் பாவிக்கப் பட்டுள்ளனர். பரக்குடிகள் என்பவை பிராமண வாழிடங்களான ‘அக்ரஹாரங்களிலும்’, பிராமணரல்லாத வெள்ளாளர், கம்மவர், பள்ளிகள் போன்ற சாதிகளின் வாழிடங்களான ‘மணவாடுகளிலும்’ இருந்துள்ளன என்று டேவிட் லுட்டன், அருண் பந்தொபாத்யாயா போன்ற வரலாற்றாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரிட்டிஷாரின் பதிவேடுகளிலும் ஆவணங்களிலும், பஞ்சமர், பறையர், தீண்டத்தகாதோர் போன்ற சொற்கள் ஒரெ பொருண்மை கொண்டவையாகப் பாவிக்கப் பட்டுள்ளன.பிரிட்டிஷ் நிர்வாகம் பள்ளி, பள்ளர், பறையர் போன்ற சொற்களை ஒட்டுமொத்த விவசயக் கூலிகளுக்குமான இனச்சொல்லாகப் (generic term) பயன்படுத்தியுள்ளதையும் நாம் காண முடிகிறது.பல சாதிக்குழுக்கள் அந்தந்தப் பகுதியின் சாதியமைப்புக்கு ஏற்ப இந்த இனச்சொல்லின் மூலம் குறிக்கப் பட்டுள்ளனர். இன்னும் குறிப்பாகச் சொல்வோமானால், பள்ளர், பறையர், சாணார், சக்கிலியர் போன்ற சாதிகள் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ற சாதியமைப்புப்படி ‘தீண்டத்தகாதோர்’ என்று அழைக்கப் பட்டுள்ளனர். 1850-களில் பஞ்சமர், கீழ் வகுப்பினர், தீண்டத்தகாதோர் போன்ற சொற்களுக்குப் பதிலாக ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர்’ என்ற சொல்லாடலும் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன. (RSB 2011: 4, 37, 48 – 9, 59, 166 – 7)

[6]இதையொத்த முறை தென் குஜராத்திலும் நிலவியதாக ஜன் ப்ரெமன் குறிப்பிடுவார். மேலும் விவரங்களுக்கு Jan Breman, Patronage and Exploitation: Changing Agrarian Relations in South Gujarat, New Delhi, 1979 பார்க்க.

[7] மேலும் பார்க்க Gunnel Cederlof, Bonds Lost: Subordination, Conflict and Mobilisation in Rural South India, c. 1900 – 1970, New Delhi, 1997.

[8] சோழர் காலத்தில் பிராமணிய-வெள்ளாள இணைவில் உருவான இடங்கை, வலங்கை பாகுபாடுகளின் வீழ்ச்சி மற்றும் சிவ வழிபாடு தேய்ந்து அம்மன் வழிபாடு அதிகரிப்பு ஆகிய விஷயங்களை இதற்கு எடுத்துக் காட்டாக பர்ட்டன் ஸ்டெய்ன் குறிப்பிடுவார்.

[9]உலகமயமாதலை ஒட்டி, அது அளித்த வாய்ப்புகளையும் வசதிகளையும் வைத்து சாதிகளும், இனங்களும் தங்களையும் பிறரையும் மறுவரையறை எவ்வாறு செய்து கொண்டன என்பது மற்றுமொரு ஆய்வுக்குரிய பொருள். பார்க்க: (Eds.) Balmurli Natrajan, Paul Greenough, Against Stigma – Studies in Caste, Race and Justice Since Durban, Orient Blackswan, Hyderabad, 2009.

[10] மேலும் பார்க்க, Abbe J.A. Dubois, Hindu Manners, Customs and Ceremonies, Rupa & Co., New Delhi, 2011, pp. 48 – 109.

[11]ஆதிக் கிறித்தவர்களிலும் பலர் கைவினைஞர் மற்றும் சிறு வணிகப் பின்புலம் உடையவர்களே.இவர்கள் கிறித்துவத்தை எவ்வாறு நோக்கினர்; அதனால் ஆதிக் கிறித்தவம் எவ்வித வளர்ச்சி அடைந்தது என்பது குறித்து மேக்ஸ் வேபர் சில குறிப்புகளை அளித்துள்ளார். பார்க்க, Max Weber, (Tr.) Ephraim Fischoff, The Sociolgy of Religion, Methuen & Co. Ltd., London, 1965, pp. lvii, 95 – 100.

[12]மேலும் பார்க்க, Sanal Mohan, “Narrativizing Oppression and Suffering: Theorizing Slavery”, South Asia Research, Vol. 26, No. 1, 2006, as quoted in Raj Sekhar Basu, Op. Cit., pp. xxxviii – ix.

[13]கருப்பினச் சூழலில் இவ்வித பண்பாட்டு அந்நியமாதலைக் காலனியமும், வெள்ளையினமும் எவ்விதம் கருப்பின உடம்புகளில் விதைத்தன என்பது குறித்து டபிள்யூ.ஈ.பி.துபோ மற்றும் ஃபிரான்ட்ஸ் ஃபனானின் கருத்துகளும் இங்கு ஒப்புநோக்கத் தக்கவை.

[14]இவ்விதமான புரிதல்கள் இன்றும் சில சமூகவியலாளர்களிடம் இருப்பில் உள்ளன. குறிப்பாக சாதி மற்றும் இனம் குறித்த இணை-போக்குகள் குறித்துப் பேசும்போது தீபங்கர் குப்தாவின் கருத்துகள் இந்த வகையிலேயே அமைவதைக் காணமுடிகிறது; இத்தகைய கருத்து நிலைக்கு எதிர்வினையாக பாலமுரளி நட்ராஜனின் கருத்துகளையும் காண்க: http://www.india-seminar.com/2007/572/572_comment.htm. மேலும் பார்க்க, (Eds.) Balmurli Natrajan, Paul Greenough, Against Stigma – Studies in Caste, Race and Justice Since Durban, Orient Blackswan, Hyderabad, 2009.

[15]ஸ்காட்லாந்து திருச்சபையைச் சார்ந்த நற்செய்தி பணியாளரான மறைதிரு. ஆண்டர்சன் என்பவர் ‘கீழ்ச்சாதி’ மக்களின் குழந்தைகளுக்கும், பிராமணர் அல்லாதோரின் குழந்தைகளுக்கும் மெட்ராஸ், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் 1830-களில் பள்ளிகளை தொடங்கிய அதே வேளையில், 1837ல் ஆங்கிலவழிக் கல்விமுறையில் அமைந்த ஒரு பள்ளியை ‘உயர்சாதி’ இந்து மாணவர்களுக்காக மெட்ராஸில் ஆரம்பித்தார்; இதுவே இன்றைய மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரியாக வளர்ந்தது. மறுபுறம், நற்செய்தி பரப்புதலுக்கான சங்கம் மற்றும் லண்டன் நற்செய்திப் பணியாளர் சங்கம் போன்றவை ஆரம்பித்த கிராமப்புற பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. தாய்மொழிவழிக் கல்வி பயிற்றுவிக்கப்பட்ட பள்ளிகள் பெரும்பாலும் உபதேசியார்கள் பணிக்கு கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களை பயிற்றுவிக்கும் களங்களாக இருந்தன. இவ்வித இரட்டை மொழிவழிக் கல்வி முறையில், ஆங்கிலவழிக்கல்வி முறையை சாதி ஹிந்துக்களுக்கும், தாய்மொழிவழிக் கல்விமுறையை பிராமணரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கிய நற்செய்தியாளர்களின் கல்விப்பணி ஆய்வுக்குரிய விஷயமாகிறது. இவ்வித இரட்டை முறைகள் உண்மையில் சாதிய வேறுபாட்டை மேலும் இறுக்குவதற்கு உதவினவா என்பது குறித்த ஆய்வு தேவை. சமத்துவமின்மையை ஒழிக்க மேற்கொள்ளப்படுகின்ற இரட்டைத்தன்மை கொண்ட சில ‘முற்போக்கான முயற்சிகள்’ எவ்வாறு சமூகப் படிநிலையை மேலும் கறாராக்குகின்றன என்பது குறித்து ராஜஸ்தானில் மதிய உணவு முறையை ஆராய்ந்த அறிஞர்களின் கருத்துகள் இங்கு பொருத்திப் பார்க்கப்பட முடியும். பார்க்க, Manisha Garg and Kalyan Sankar Mandal, “Mid-Day Meal for the Poor, Privatised Education for the Non-Poor”, Economic & Political Weekly, Vol. XLVII, No. 30, July 27, 2013, pp. 155 – 163. மறுபுறம், இவ்வித இரட்டைப் பள்ளிகள் – அதாவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மற்றும் சாதி ஹிந்துக்களுக்கான பிரத்யேகப் பள்ளிகள், இவ்விரு குழுக்களிடையேயான சமூக உரையாடலை/ஊடாட்டத்தை எவ்வாறு தடை செய்தது; அதன்வழியாக ‘அறிவுஜீவிப்’ பள்ளிகள் மற்றும் ‘அடித்தளப்’ பள்ளிகள் போன்ற மனப்பிரம்மைகள் பள்ளிகளைக் குறித்து ஏற்பட இவை உதவினவா என்பது குறித்தும் ஆய்வு அவசியம்.

[16]பஞ்சம், தொற்றுநோய் பரவல் போன்ற பேரிடர்களுக்கும் மதமாற்றங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்த இருவேறு விதமான கருத்துகள் வரலாற்றாளர்களிடம் உண்டு; பெரிய அளவிலான சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் நிகழும் காலச் சூழலில், ‘தீண்டத்தகாத’ வர்க்க மக்களிடையே ஒரு குறிப்பிட்ட உளவியல், ஆன்மீக, பொருள்வகையான உந்துதல்கள் எழுந்தன என்று டங்கன் ஃபாரஸ்டர் போன்றோர் கூறுவார்கள். ஆனால், இந்திய கிறித்தவ அறிஞர்கள் இதை மறுப்பதுண்டு.இது குறித்து மேலும் பார்க்க, Raj Sekhar Basu, Op. Cit., pp. 98 – 9.

[17]இக்கட்டுரையின் அடுத்த பகுதியில், 19-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த உள்நாட்டு இடப்பெயர்ச்சிகளும், அயலகக் குடிபெயர்வுகளும் இயங்கியல் ரீதியில் சாதி என்னும் புனைவுடன் எவ்வாறு வினைபுரிந்தன; 19-ம் நூற்றாண்டு அளித்த நவீனக் கல்வி, அரசியல்முறை போன்றவை 20-ம் நூற்றாண்டில் எவ்வாறு சாதி அடையாளம் சார்ந்த நிறுவன அரசியலுக்கு வித்திட்டது என்பதைக் காணலாம்.